logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

மகிவனி (S.Mahendravarman )

சிறுகதை வரிசை எண் # 153


ஆல் கத்திரி வெய்யில் எனப்படும் அக்கினி நட்சத்திர வெய்யில் முடிவடைந்த ஓரிரு நாட்களில் , தென்மேற்கு பருவமழை தொடங்கலாயிற்று. மழையானது பூவாளியில் நீரிறைப்பது போல அளவளவாகப் பெய்யத் துவங்கியிருந்தது.வெய்யிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இருந்திருந்தாலும், வெளிச்சத்தை விழுங்கி இருண்மை போர்த்தி உடனே பெய்த மழையின் குளிர்மை சட்டென ஒருவித பயத்தை உருவாக்கியது. பகலில் பதுங்கும் பயம், இருளில் முகம் காட்டுவது போல இல்லாமல் பகலிலேயே இருள் போர்த்தி இருந்தது பயத்தை மேலும் அதிகமாக்கியது. நேரங்காலம் இன்றி பெய்யும் மழையால் எரிச்சலாக இருந்தது. தினப் பணிகள் பாதிப்படைந்தது. ஊருக்குள் சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெளியே செல்வோரும் வருவோரும் சடவுடனே வந்து போய்க்கொண்டு இருந்தனர். மதிய உணவு இடைவெளியில் நானும் ஒரு வேலைக்காக வீடு வந்தேன். வெளிக்கதவைத் திறந்து உள்ளே வருகையில் முழுதும் நனைந்து நின்ற முற்றத்து வேம்பிலிருந்து பறந்த ஒரு பறவையால் மரம் சிலிர்த்தடங்கியது. வண்டியை நிறுத்திவிட்டு சாவியை பேண்ட் பாக்கெட்டில் சொருகிவிட்டு கதவிலிருக்கும் பூட்டினைத் திறக்க எத்தனிக்கையில் , மாடியிலிருந்து ஒரு உருவம் என்னையே பார்ப்பது போல ஒரு பிரம்மை தோன்றியது. சட்டெனத் தலை தூக்கிப் பார்க்கையில் மறைந்துவிட்டது. எதையும் யோசிக்காமல் விடுவிடுவென மாடிப் படியில் ஏறிச் சென்று பார்க்கையில் யாரும் இல்லை.எல்லா இடமும் நன்றாகத் துழாவிவிட்டு ஏமாற்றத்துடன் வீட்டினுள் சென்று யோசித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வெள்ளைச் சேலை அணிந்த உருவம் என்பது மட்டும் மனக்கண்ணில் பதிந்திருந்தது.”பேயோ, பெசாசோ தெரிலயே”.. என எண்ணியபடியே சாப்பிட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன். தினமும் மாலை வீடு திரும்பியதும் அம்மாவையும் அப்பாவையும் சந்தித்துச் சில மணிநேரம் பேசிக்கொண்டு இருப்பேன். இன்று நடந்த சம்பவத்தைச் சொன்னால் அவர்கள் பயந்து கொள்வார்கள் என எண்ணிக் கொண்டு பேச்சுப் போக்கில் அவர்களிடம் இதைச் சொல்லிவிடக் கூடாது என முன் தயாரிப்போடுதான் சென்றேன். “எத்தன வெய்யிலுனாலும் தாங்கிக்கலாம்.. ஆனா ஒரு மழ வந்த போதும் நசநசன்னு ஆகிருது, சல்லு மழ… என மழையைச் சபித்தபடி இருந்தாள் அம்மா. அவனவ மழ வல்லியேன்டு கெடக்கான் நீ என்னமோ ஒத்த மழைக்குச் சலிச்சுக்கெற, இனி வருசமுச்சூடும் மழதா..இந்த வருசமாச்சும் நல்ல மழ வந்து பஞ்சம் இல்லாம இருக்கட்டும்னு வேண்டிக்க என்றார் அப்பா. ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? இருவரின் உரையாடலுக்கு இடையே உள் நுழைந்தேன். வாடா சின்னு நீ சாப்டியா நாங்க சாப்டோம். மழலகீது நனஞ்சிட்டயா? என்றாள் அம்மா. இல்லம்மா பத்திரமா வந்துட்டேன். நீங்க ரெண்டுபேரும் எங்காச்சும் வெளீல கிளீல போகனும்னா மழ விட்டதும் போங்க என்றேன். அவர்கள் சரி என்று சொல்லவில்லை.பேச்சினிடையே அம்மா காப்பியை நீட்டினார். அதை வாங்கி குடித்துக் கொண்டு இருக்கையில், அம்மா, அப்பாவிடம் “அதா சின்னா வந்துட்டான்ல அவன்ட சொல்லிடலாம் என அப்பாவிடம் எதையோ பூடகமாகக் கூற.. அப்பாவும் அதற்கு நீயே சொல்லு நீதான பார்த்த எனச் சொன்னார். அவர்களிருவரின் பேச்சும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. அதொன்னுமில்லடா நாங்க சொல்றோம் நீ பயந்துக்காத, என என்னை எச்சரித்தவாறு , உங்ககொம்மா, மாடிக்கு நேத்து தொவைச்ச துணிமணியெல்லாம் மழல நனையுதேன்னு எடுக்கப் போயிருக்கா. அங்கபோனா, வெள்ளச் சீல கட்டுன ஒரு உருவம் அம்மாவப் பாத்து அம்மிணின்னு கூப்ட்டுச்சாம், அவ பயந்தடிச்சு ஓடி வந்து எங்கிட்ட சொன்னா, நானும் போயிப் பாத்த யாரையும் காணோம், அதுதா, பயப்படுறமாரி வேற ஒன்ணுமில்ல என்றார். அப்பாவின் எச்சரிக்கையை மீறி எனக்கு நிஜமாகவே பயம் பரவத் துவங்கியது. நாம் பார்த்த அதே உருவம்தான் அம்மாவைப் பார்த்து அழைத்தும் இருக்கிறது. இனியும் மறைத்துப் பயனில்லை என்ற முடிவில் நான் பார்த்த்தையும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் இருவரும் நான் சொன்னதுக்கு ஆச்சர்யப்படவில்லை. அப்பா எதையும் யோசிக்காமல் சட்டென அது நம்ம அமிச்சியாத்தாவாத்தான் இருக்கும் என உறுதியிட்டுச் சொன்னார். அட ஆமா அப்பா சொல்றதும் சரிதாண்டா சின்னு அமிச்சியேதா.. அவதா அம்மிணி அம்மிணிண்டு கெடப்பா.. அவதா கண்ணுக்கு எரச்சிருக்கிறா. அவர்களின் முடிவு எனக்கு பெரிதாய் ஆச்சர்யத்தைக் கூட்டவில்லை. அம்மிச்சி வேறு யருமில்ல எனது ஆத்தாவின் அம்மா. எனது அம்மாவுக்கு ஆத்தா. ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் புது வீடு கட்டுவதற்கு முடிவு செய்திருந்தோம். கையிருப்பு மற்றும் கடன் வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னர் ஜோசியரைப் பார்த்து நேரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவு செய்திருந்தோம். அதன்படி அம்மாவும் அப்பாவும் ஜோசியரைப் பார்த்ததில் நேரங்காலம் நன்றாக இருப்பதாகவும், எந்த முயற்சியும் கைகூடும் எனவும் கூறியிருக்கிறார். கடவுளின் அனுகிரகத்தோடு, முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் தடையின்றி செயலைச் செய்ய உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியிருக்கிறார். அதோடு நாங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு பெண் தெய்வம் காவல் காப்பதாகவும், எவ்விதமான கண் த்ரிஷ்டி, காத்துக் கருப்பும் அண்டவிடாது எனவும் கூறியிருந்திருக்கிறார். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் அது அம்மிச்சியேதான் என்றபடி அம்மா கன்ணீர் மல்க , அம்மிச்சியை வணங்கினார். அப்பா, அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியவாறே இந்த வருச ஆடி நோம்பிக்கு அம்மிச்சியாத்தாளுக்கு சிறப்பா படப்பு போட்டு கும்பிட்டரலாம் என்றார். காரமடை அரங்கநாதர் மாசிமக கோவில் தேரோட்டம் முடிவடைந்து அடுத்த ஓரிரு நாட்களில் கோடைக் காலம் துவங்கிவிடும். அதெல்லாம் ஒரு காலம் என்பதுபோலத்தான், வெய்யக்காலம் துவங்கிவிட்டால் மட்டற்ற மகிழ்வும் துவங்கிவிடும். நீண்ட விடுமுறையில் வீட்டிற்கு உறவுகள் வந்து தங்குவர், ஊர்மக்களை ஒருங்கிணைக்கும் பண்டிகைகளான சித்திரை நோம்பி, மாரியம்மன் நோம்பி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இவைகளைக் கொண்டிருப்பது மற்ற காலங்களுக்கு இல்லாத ஒரு வசதி வெய்யில் காலத்திற்கு உண்டு. பள்ளிக்கூட நண்பர்களை நீண்ட நாள் பார்க்காமல் இருப்போமே என்ற வருத்தத்தை இல்லாமற் செய்வதும் இவ்வெய்யில் காலம்தான். நினைவு தெரிய ஆரம்பித்த காலத்தைவிட நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இதே போன்றதொரு வெய்யில் காலத்தில்தான் அம்மிச்சி எனக்கு நெருக்கமானாள். எங்கள் வீடு இருந்த இடம் முன்பு சோளக்காடாய் இருந்ததாம். இன்றுபோல் புற்றீசலாய் வீடுகள் இருக்காது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த்தான் இருக்கும். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றபின் தனியாய் நான் இருக்கமுடியாது என்பதால், எங்கள் வீட்டிற்கு வந்து அம்மிச்சி என்னை தாத்தா வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். அம்மிச்சிக்கு ஒரே மகள் என் ஆத்தா, ஆத்தாவுக்கு ஒரே மகள் என் அம்மா. அம்மிச்சிக்கு நான் கொள்ளுப் பெயரன். அம்மிச்சி தனது மகள் வீட்டில்தான் இருந்தாள். அம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அனைவரும் ஆண்கள். அம்மா மட்டும் பெண். தாத்தா ஒரு டீசல் மெக்கானிக். அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிடுவார். அதனால் அம்மிச்சி, தனது மகளின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வந்தவள், அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் இங்கேயே நிரந்தரமாய் தங்கிவிட்டாளாம்.. தாத்தாவின் வருமானம் குழந்தைகளை பராமரிக்கத் தோதாய் இல்லாததால், அம்மிச்சிதான் கிடைத்த கூலி வேலைகளுக்குச் சென்று வந்து கை கொடுத்து இருக்கிறாள். தனது சிறுவாட்டு காசுகளை சேர்த்து கறவை மாடொன்று வாங்கி குழந்தைகளுக்கு வயிரு வளர்த்து வந்தாளாம். அம்மா சொல்ல இவைகளைக் கேட்டிருக்கிறேன். கறவை மாடுகளோடு, ஆடுகளும் , கோழிகளும் வளர்த்திருக்கிறாள். அம்மா அடிக்கடி “அம்மிச்சியோட ஊச்சிம, பரந்தமனசு யாருக்கும் வராதுடா” என்பாள். அதில் ஒரு பெரும்மரம் தனது கிளைகளைப் பரப்பி தன் கீழிருக்கும் அனைத்து உயிர்களையும் காத்து நின்ற அர்த்தம் பொதிந்திருக்கும். ஒருமுறை வரலாறு காணாத பெருமழையின் காரணமாய் ஊருக்குள் வெள்ளம் வர , தாத்தாவின் வீடும் அதற்குத் தப்பவில்லையாம். கனத்த இடி மின்னல், பேரிரைச்சலுடனான காற்றோடு விடிய விடிய மழை கொட்டிக் கொண்டிருக்க , மின்னலுக்கு பயந்து நின்ற தாத்தாவைப் பொருட்படுத்தாது, கோணிப்பையை தலைக்கு போட்டுக்கொண்டு மண்வெட்டியால் வரப்பு வெட்டித் தடுப்பு உருவாக்கி தண்ணியைத் தடுத்திருக்கிறாள். மழை வெட்டாப்புத் தரும்வரை ஆடு,மாடு கோழிகளுடன் இருந்து காத்திருக்கிறாள். அவ்வளவுக்கும் அம்மிச்சி ஆஜானுபாகுவான பெண்ணல்ல, மிக இலகுவானவள்தான். ஆனால் அவளின் தைரியத்திற்கு முன் மலை தோற்கும். விடுமுறை நட்களில் என்னை அழைத்துச் செல்ல நேரத்திலயே வந்துவிடுவாள். அன்று காலை உணவு எங்கள் வீட்டில்தான். அம்மாவின் கைப்பக்குவம் அம்மிச்சிக்கு மிகப்பிடித்தம்.அம்மா தட்டு நிறைய போட்டுத் தரும் சாப்பாட்டை லயித்துச் சாப்பிடுவாள். கம்மங்களி, ராகிக் களி, சோளக்களி சாப்பிட்டுப் பழகிய வாய்க்கு அரிசிச் சோற்று ருசி புதுசுதான் என்றாலும் அம்மாவின் அன்புக்கும் சேர்த்து மகிழ்வுடன் உண்பாள். நான் வளர்ந்து பெரியவன் ஆனபின் அம்மாவுக்கு பதிலாக நான்தான் அம்மிச்சிக்கு சாப்பாடு போட்டுத் தருவேன். அம்மாவிடம் காட்டும் வாஞ்சையை என்னிடமும் காட்டி இருக்கிறாள். எள்ளளவும் முகச்சுழிப்பைக் காட்டமாட்டாள். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தருணத்தில் அம்மிச்சிக்கு உடல் தளர்வு ஏற்படத் துவங்கி இருந்தது. மாடு மனைகளைப் பாதுகாக்க இயலவில்லை. அவற்றை ஒவ்வொன்றாக விற்றுவிட தாத்தா முடிவு செய்திருந்தார். மாமன்மார்களும் வேலைகளுக்குச் சென்றுவிடுவதால் அவர்களாலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவன்களை விற்பதில் அம்மிச்சிக்கும் தாத்தாவுக்கும் முட்டிக் கொள்ளத் துவங்கியது. அம்மிச்சிக்கும், தாத்தாவுக்கும் இடையில் கிடந்து சடைந்து போனாள் ஆத்தா. “ஊர்ல யார் யாருக்கோ நோவு வந்து சாகுரானுக ,இதுக்கு ஒரு சாவு வந்து தொலையமாட்டிங்குது” என்று தாத்தா அம்மிச்சியை பார்த்து உதிர்த்த கடுஞ்சொல் அவளின் வைராக்கியத்தைச் சீண்டியது. யாரிடமும் எதும் சொல்லாமல் ஒரு நாள் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டாள். மாமன்மார்கள் ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம், நானும் மாமன் பசங்களும் ஒருபக்கமும் என நாலாபுரமும் தேடி அலைந்து எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக பக்கத்து ஊரில் இருந்த சர்ச்சில் படுத்துக் கிடந்திருக்கிறாள். தகவல் கிடைத்து விரைந்து சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தோம். அன்றிலிருந்து அம்மிச்சிக்கு என்று தனி அறையொன்று ஒதுக்கப்பட்டு கவனித்து வந்தோம். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் சுணங்கிப் படுக்க மாட்டாள். வயது மூப்பு ஒன்றே அவளை நோகடித்தது. சிறு வயதில் எனக்கு எதாச்சும் உடம்புக்கு முடியவில்லை என்றாள் பதைபதைத்து போவாள். “சாமி, டே கண்ணு மேலுக்குச் சொகமில்லையா? என வாஞ்சையாக உடல் தொடுவாள், உடல் கொதிப்பைக் கண்டு “சேசப்பா எந்தங்கத்த காப்பாத்து ராஜா”.. என மனமுருகி ஜெபம் செய்வாள். இரண்டு மூன்று நாள் அடிக்கடி வந்து என்னை கவனித்துக் கொள்வாள். அச்சமயங்களில் பள்ளிப் புத்தகத்தில் படித்த தேவதைகளின் உருவம் பூண்டு நிற்பாள். ஒருமுறை பெரிய மாமாவுக்கும் ,அப்பாக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால், இரு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை நின்றுபோனது. நான் சிறுவயது பையன். விளையாடச் சென்றிருந்த போது மாமாவின் மகள் என்னை விட மூத்தவர் , அத்தை பையன் என்ற பிரியத்தில் இனிப்பு ஒன்றை வழங்க, நானும் எந்தவித மறுப்பும் இன்றி சாப்பிட்டுவிட்டு வந்து வீட்டிலும் சொல்லிவிட்டேன். கடுங்கோபம் கொண்ட அப்பா, என்னை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டார். ஏன் எதற்கு என்ற புரிதலற்ற வயது, அழுது அரற்றியபடி நின்றுகொண்டே இருந்தேன். அப்பாவுக்கு மனம் இரங்கவில்லை. அம்மாவால் அப்பாவை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. இந்த விசயம் கேள்விபட்டு வந்த அம்மிச்சியால் என் தோரணையைக் காணச் சகியாது என்னை அள்ளி அணைத்துக் கொண்டு அழத்துவங்கினாள். அப்பாவிடம் எனக்காக தர்க்கம் செய்தாள். பெரிவங்க சண்டைய உங்களோடவே வெச்சுக்கங்க ,கொழந்த என்ன பண்ணான்..அவன நானே வளத்திக்கறேன் என்றபடி அவளுடனே அழைத்துச் சென்றுவிட்டாள். மூன்று நான்கு தினங்களுக்குப் பின்னர்தான் அப்பா அம்மா இருவரும் வந்து அம்மிச்சியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னை அழைத்துச் சென்றனர். மாமன்மார்கள் அனைவரின் வீட்டிலும் பசங்களும், பொண்ணுகளும் இருக்கும்பொழுது அம்மிச்சி என்னிடம் மட்டும் அதிகபட்ச அன்பைக் காட்டினாள். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாய் இருந்தது.அம்மிச்சியிடம் ஒரு நாள் கேட்டும் விட்டேன். “அதையேண்டா கண்ணு இப்ப கேக்கர… என்றாள் அம்மிச்சி. “எம்மேல நீ உசுரா இருக்கிரது எனக்கே நல்லா தெரிது அம்மிச்சி” அதா கேட்டேன் என்றேன். சாமி எந்தங்கம் என்றவாரு நெட்டி முறித்து முத்தம் தந்தவள், ஆரம்பித்தாள். அம்மிச்சியின் பூர்வீகம் எல்லாம் எஸ்டேட்டில்தான். நீலகிரியில் இருக்கும் தட்டப்பள்ளம் தேயிலை தோட்டத்தில் பணியாளர்களாக இருந்துள்ளனர். அம்மிச்சிக்கு உடன்பிறந்தார் யாருமில்லை.சிறிய வயதிலேயே திருமணம் செய்து அனுப்பிவிட்டனராம்.புகுந்த வீடு மட்டுமே கதி என்ற நிலையில் ஒரு மகள் அதன்பின் ஒரு மகன் .மகள் பிறந்து நெடு நாட்களுக்குப் பின்னர் மகன் பிறந்ததால் அவன் மேல் அலாதி பாசம் அம்மிச்சிக்கு. அம்மிச்சி போலவே மகனும் சிவப்பு நிறமாம். பால் வெள்ளையோடு , அன்பையும் சேர்த்து பாலன்பு எனப் பெயர் வைத்துள்ளனர். நாளும் பொழுதும் வளரத் துவங்கிய குழந்தை, நடக்கத் துவங்கியதும் மிகவும் துரு துருவென இருந்துள்ளான். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரேனும் உடனிருக்க வேண்டும் இல்லையென்றால் அவனைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில் திருமணம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். பரபரப்பான சூழலில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெற்றிலைக்குப் போட வைத்திருந்த சுண்ணாம்பை தின்பண்டம் என எண்ணி தன் வாயில் போட, அதன் காரம் தாங்காமல் அழுதுள்ளான். கொஞ்சத்தை விழுங்கியும் விட்டானாம். என்ன ஏதென்று விசாரித்து மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாம். திடீரென நடந்துவிட்ட இந்த துக்கச் சம்பவத்தால் அம்மிச்சியும் அவரது கணவரும் பித்துப் பிடித்த நிலைக்குச் சென்றுவிட்டனராம். ஆத்தா அப்பொழுது சின்ன பிள்ளை என்பதால் அவ்வளவு விவரம் தெரியவில்லை. இருந்தும் தம்பி எங்கே எங்கே என்று கேட்டு அழுதிருக்கிறாள். அம்மிச்சியிடம் பதில் இல்லாததால் அவளும் கூட சேர்ந்து அழுதிருக்கிறாள். நாட்கள் சென்றாலும் மகனை இழந்த துயரின் சுவடு மறையவே இல்லை. கொஞ்ச காலத்தில் அம்மிச்சியின் கணவரும் இறந்துவிட, பொண்ணுகேட்டு வந்த தாத்தாவுக்கே ஆத்தாவைக் கட்டிக்கொடுத்துவிட்டு அவர்களுடனே தானும் வந்துவிட்டாராம். அவ்வளவையும் பேசிமுடித்துவிட்டு , எனது தலைமுடியைக் கோதிவிட்டாள். நெடுநாளாய் தனது மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல ஆசுவாசம் காட்டினாள். இதற்கு முன் இதைப்பற்றி யாரேனும் கேட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் அம்மிச்சியின் பாரத்தை இறக்கிவைத்த திருப்தி இருந்தது. சில வருடங்கள் கழித்து க்றிஸ்மஸ் தினத்திற்கு முன்னம் அம்மிச்சியின் உடல்நிலை கவலைக்கு இடமானது. தகவல் கேட்டு பதினொன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஓடோடி வந்தேன். அதற்குள் அம்மிச்சி கண்மூடிவிட்டாள். ஊரே கூடிவிட்டது. மிக மூத்த வயது கிழவி. வாழ்ந்து செத்தாள் என்பதைவிட எல்லாரையும் வாழவைத்துவிட்டுச் செத்திருந்தாள். பத்து பேரன் பேத்திகளோடு, இருபது கொள்ளுப் பேத்தி, பேரன்களும் நெய்தீபம் ஏந்த , மேள தாளங்கள், வெடிகள் கொழுத்தியும் கொண்டாட்ட நிலையில்தான் அம்மிச்சியை அடக்கம் செய்தோம். குழிமேட்டில் வாய்க்கரிசி இட்டு முடித்ததும், கடைசியா பாக்குரவங்க பாத்துக்கங்க என்றதும், அம்மிச்சியின் முகத்தில், சிறு வயதில் இறந்துபோன தனது அன்பு மகனிடம் சென்றுவிட்ட நிம்மதி தெரிந்தது. சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் துவங்கிவிட்டனர். அம்மிச்சியின் வருசாந்தரத்திற்குக் கூட மாமன் வகையினர் யாரும் வரவே இல்லை. நாம் செத்தபின்னர் இன்ன இன்னார் வருவார்கள் மாட்டார்கள் எனக் கணக்குப் போட்டு யாரையும் அம்மிச்சி காப்பாத்தவில்லை. ஒரு ஓடையிலிருந்து , ஆறாகி, நதியாகி கடலில் கலந்துதான் போனாள். நாங்கள் வருடந்தவறாமல் ஆடி நோம்பிக்கும் , அவளின் வருசாந்தரத்திற்கும் வணங்கி வந்தோம். அவள் எங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்தவாறு , அம்மிச்சியை சிலாகித்துப் பேசிக்கொள்வோம். அந்நேரங்களில் அம்மா அழுதுவிடுவாள். காலம் செல்லச் செல்ல நாங்களும் அம்மிச்சியை நினைப்பது குறைந்து போனது. இந்த நிலையில்தான் அம்மாவுக்கும், எனக்கும் காட்சி அளித்திருக்கிறாள். எல்லாம் நன்மைக்கே என்றபடி ஒரு நல்ல நாளில் வீடு கட்டும் பணியைத் துவக்கினோம். மேல் மாடி என்பதால் கட்டிடத்தைச் சீக்கிரமாகக் கட்டி முடித்துவிடலாம் என்றார் எஞ்சினீயர். அதற்காக தரை தளத்தின் மேல் பகுதியைச் சுத்தம் செய்யது துவங்கினர் வேலையாட்கள். வேலை துவங்கிய சிறிது நேரத்தில் வேலையாள் ஒருவர் எங்களை அழைத்தார். என்னவென்று சென்று பார்த்தபோது எந்த இடத்தில் நின்று எனக்கும் அம்மாவுக்கும் அம்மிச்சி காட்சி தந்தாளோ அந்த இடத்தில் ஆலமரம் ஒன்று துளிர்த்திருந்தது. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… மகிவனி 99425 19727. .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.