ஜஹ்பர் மதினா பேகம்
சிறுகதை வரிசை எண்
# 152
ஆம்பள டாக்டர்
+++++++++++++++++++++++.
வடகாட்டுப் பக்கம் கரி மூட்டத்துக்கு விறகு வெட்டிப் போட்டுருக்காங்களாம்.
வாங்க புள்ளைகளா போய் அடுப்பெரிக்க விறகு தட்டிட்டு வந்துருவோம்.
"சாரா மாமி தலைமையில் ,சிக்கந்தரம்மா, சுலைஹா, மைம்பொண்ணு , சௌதா, ஆறு பேர்களும், விறகு தட்ட நீண்ட கம்பு, விறகு முள்ளை சுமந்து வர சும்மாடு சகிதம், மத்தியான கஞ்சி குடித்த கையுடன் கிளம்பி விட்டனர்.
அம்பாரமாய் குவிந்து கிடந்த து இரண்டு மூன்று இடங்களில் முள் குவியல்கள்.
நல்ல வேட்டைதான். ஆசையுடன் ஓடிப்போய் , கவட்டை கம்பு கொண்டு ,பெரிய தடிமனான முள்களை இழுத்து ,கம்பால் கொச கொசவென ஒட்டிக் கொண்டிருக்கும் முள்களை தரித்து வழு வழுவென முள் இல்லாமல் ஆனவுடன் நுனி முள்ளை லாகவமாய் கம்பால் தட்டி நொறுக்கிப் போட்டு
விட்டு ஒரு பக்கமாய் குவிக்க ஆரம்பித்தனர்.
பொழுது சாய ஆரம்பிச்சுறுச்சு. போதும் இப்ப கிளம்பினாத்தான் மஹ்ரிபுக்கு வாங்கு( பாங்கு) சொல்றதுக்குள்ள வீடு போய்ச் சேர முடியும். அவசரப்படுத்தினார் சாராம்மா.
தாங்கள் சேகரித்த முள் விறகு கட்டுக்களை அழகாய் ஒன்று போல் அடுக்கி விட்டு, ஒருவருக்கொருவர் தூக்கி விட்ட பின்னர் சாராம்மாதான் பாக்கி.
" விறகுக் கட்டை நட்டுக் குத்தலாய் நிறுத்தி வைத்து விட்டு முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு தம் கட்டி விறகுக் கட்டின் நடுவில் துணி சும்மாட்டை வைத்து ஒரே மூச்சில்
தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
நாளைக்கு எந்தக் காட்டில் வேலைக்குப் போறது, கஞ்சிப் பாடு, கெழடு கெட்டைகளை பற்றி இப்படி பேசிக் கொண்டே நடையைக் கட்டினர்."
" நகரா சத்த த்தை அடுத்து ,மைக்கில் மோதினாரின் கணீர் குரல். " அபுல் காசிம் மகள் " சக்கீனா" மாலை ஐந்தரை மணியளவில் மௌத்தாகி விட்டாள்."
பள்ளிவாசல் அறிவுப்பு ஆறு பேரையும் நிலை குலைய வைத்து விட்டது.
" அல்லாவே! பச்சையும் பாலகனுமாய் நாலு புள்ளக்காரியாச்சேமா. வந்த நோயு சரியாகலயே.! பச்சப் பாலகனுக தாய்க்கு என்ன செய்யப் போகுதோ! பரிதவிப்புடன் ஓட்டம் நடையுமாக எட்டி நடையைப் போட்டு விறகுக் கட்டை வீட்டில் போட்டு விட்டு ஒரே ஓட்டமாய் மௌத் வீடு போய்ச் சேர்ந்தனர்."
அழுகையும் ஒப்பாரியுமாய் ரணகளப்பட்டுக்கொண்டிருந்த து வீடு.
ஏழு வயது மூத்தவன், ஐந்து, மூன்று வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள். எட்டு மாத பால்குடி பிள்ளை ஒன்று. பேரன் பேத்திகளை கண் கொண்டு காணச் சகிக்க முடியாமல் அழவும் தெம்பற்றுப் போய் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தாள் தாய் ருக்கய்யா. அவளைச் சுற்றிலும் திருமண வயதைத் தாண்டிய மூன்று குமர்கள். அக்காவையும் அக்கா பிள்ளைகளையும் பார்த்து அலறித் துடித்தனர். பெற்ற தகப்பனும், கட்டிய கணவனும் செய்வதறியாது விக்கித்துப் போய் வாசலில் போய் உட்கார்ந்து விட்டனர். ஆட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டனர்.
பக்கத்து வீட்டு கனியம்மா பானை நிறைய கருப்பட்டி தட்டிப் போட்ட கடுங்காப்பியை, மகன் துணையுடன் , மௌத்துக்குக்கு வந்தவர்களுக்கு ஊற்றிக் கொடுத்தாள்.
மறுநாள் காலை பத்து மணிக்கெல்லாம் மய்யத்தை அடக்கம் பண்ணி முடித்து விட்டனர். பெரிய குழந்தைகள் மூவருக்குமே அம்மா இல்லாத கவலை தெரியும் வயதில்லையாதலால் மண்ணில் போய் விளையாடிக் கொண்டிருந்தனர். கைக் குழந்தை சித்தீக் வயிற்றுக்குப் பத்தாமல் ஒரேயடியாக கரைந்து கொண்டிருந்த து.
"குருதாலிச் சோறையும் பருப்பாணத்தையும் ஆக்கிக் கொண்டு வந்து வீட்டாள்களை சாப்பிட வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்".
பெண்கள் அங்கங்கே உட்கார்ந்து குசு குசுவென சக்கினாவின் கணவனை நோக்கி பேசிக் கொண்டேயிருந்தனர்.".
அந்தப் புள்ளக்கு காச நோய்னு கண்டு பிடிச்சு, ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில சேத்து வைத்தியம் பார்த்து நல்லா கொணமாகிட்டு வந்த புள்ளய பக்குவமா பாக்கலமா. ஆறுமாசப்பாட்டுக்கு புருஷன் பெஞ்சாதி சேரக் கூடாதுனு கடுமையா சொல்லி விட்டிருக்காங்க.
இந்த நாசமத்துப் போறவன் அடங்காம அந்தப் புள்ளய இப்படி சாகடுச்சுட்டானே,
ஆத்தாமையில் அழுது புலம்பினர்.
" பொண்டாட்டி செத்துட்டா ஆம்பள புது மாப்புளதானே.? இரண்டாவது மகளை கட்டிக் கொடுங்க. நீங்க கட்டிக் கொடுக்கலைனா உங்க பேரன் பேத்திக அனாதையாகிடுவாங்க. பேசிப் பேசி பெத்தவங்கள வளச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் சரினாவ."
தாயை நினைத்து அழுதழுது சரியாய் இரண்டே மாத த்தில் உயிரை விட்டு விட்டது கைக்குழந்தை சித்தீக்.
மறு மாசமே சரினா கர்ப்பமானாள்.
மசக்கையும் வாந்தியுமாய் படாத பாடு பட்டாள்.அத்துடன் மூன்று சின்னக் குழந்தைகளையும் பராமரித்து கணவனின் தீராத தேவைகளையும் நிறைவேற்றி , கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ,துணி துவைத்து வீடு பெருக்கி மெழுகி துரும்பாய் இளைத்தாள். கஞ்சி வயிற்றில் தங்கவில்லை.
மாதங்கள் கடந்து நிறை மாத கர்ப்பிணியானாள் சரினா.நல்லபடியாய் பிள்ளையை பெற்றெடுக்கனுமே என நிதமும் அல்லாவிடம் தவக்கத்து வைத்து வேண்டினாள் அம்மா.
பக்கத்து வீட்டு பிரியக்கார கனியக்கா, தன் வீட்டில் வைத்த சூடை மீன் குழம்பையும் , காட்டிலிருந்த பறித்து வந்து அரைத்த கொத்த மல்லித் துவயலையும் கொண்டு வந்து கொடுத்தாள் சரினாவுக்கு. அவளின் சோர்ந்து கிடந்த முகத்தைப் பார்த்து பரிதாப ப் பட்டாள்.
நாக்குக்கு கொஞ்சம் சுணப்பாயிருக்கும் சாப்பிடு சரினா என வாஞ்சையுடன் அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.
நல்ல சூடாய் வென்னி வச்சு நெதம் ராத்திரி இடுப்புல ஊத்துங்க க்கா என்றாள் சரினாவின் அம்மாவிடம்.
ஒன்பது மாதம் முடிந்தவுடன் வலி வந்து விட்டது சரினாவுக்கு. வழக்கமாய் புள்ளைப்பேறு பார்க்கும் பிச்சமாச்சா மகள் வீட்டுக்கு அருப்புக்கோட்டைக்கு போய்ட்டார். அவசரத்துக்கு " பேறுகாலம் பார்க்கும் பூச்செண்டை கூட்டி வந்து காட்டினார்கள். சீரகத்தை வறுத்து கொதிக்க வைத்து தண்ணியக் குடுத்தாங்க. அடுத்தடுத்து வலி வந்த தே தவிர பிள்ளை வெளிவந்த பாட்டைக் காணோம். வலியாய் துடித்து துடித்து துவண்டு விட்டாள் சரினா.
பத்து மைல் தூரத்தில் ஒரே ஒரு ஆண் மருத்துவர்தான் அப்போது. மருத்துவர் முத்து வேல். இரண்டு நாள் வலியிலும் புள்ள அசையவேயில்ல. டாக்டரிடம் கொண்டு போனாத்தான் உசுரக் காப்பாத்த முடியும்.
பூச்செண்டு கறாரா சொல்லிட்டாள்.
சரினாவின் புருசனோ ,அதெல்லாம் ஆம்பள டாக்ட்டருட்ட எம் பொண்டாட்டிய காட்ட விட மாட்டேன் என பிடிவாதமா இருக்கான். அக்கம் பக்கத்தினர் எத்தனையோ இதம் பதமா சொல்லிப் பார்த்தனர். அவன் அடங்குவதாய் இல்லை . ஆம்பள டாக்ட்டருட்ட அவளைக் காட்டினா அவள அத்து விட்டிருவேன் என மிரட்டினான்..
ஏண்டா இந்தப் புள்ளயவும் சாகடிச்சுரலாம்னு நெனைக்கிறயா?
கோபத்துடனும் கத்திப் பார்த்தனர். ஊகூம்.
எல்லோரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தனர். ஒரு பக்கம் வண்டியை ரெடி பண்ணச் சொல்லி ஜாடை காட்டி விட்டனர். அவனை வீட்டீற்குள் அழைத்துச் சென்று பேசிக் கொண்டே உள்ளே வைத்து டக்கென வெளியில் வந்து கதவை பூட்டி விட்டார் அசனாரப்பா..
" அரைமணி நேர மாட்டு வண்டி பயணத்தில் மருத்துவமனை வந்தடைந்தனர். இன்னும் பத்து நிமிடம் தாமதமாய் வந்திருந்தாலும் கூட ரெண்டு உசுறையும் காப்பாத்த முடிஞ்சுறுக்காது எனச் சொல்லியபடியே தாயையும் பிள்ளையையும் வேறாக்கினார் மருத்துவர் முத்துவேல்.
கொழுக் மொழுக்கென மூன்றரைக் கிலோ எடையில் ஆரோக்கியமாய் கிந்த தன் மகனை ஆசையுடன் தடவிக் கொடுத்தாள் தாய் சரினா. பட்ட வேதனை பஞ்சாய் பறந்து விட்டது.
சரி சரி வாங்கப்பா. இவன் அப்பனை கதவத் திறந்து வெளிய விடுவோம். அவனும் மகனை பாக்கட்டும்.
நக்கல் சிரிப்புடன் வண்டியிலே ஏறினார் அசனாரப்பா.
முற்றும்.
எழுதியவர்.: ஜஹ்பர் மதினா பேகம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்