லக்ஷ்மி சதீஷ்குமார்
சிறுகதை வரிசை எண்
# 149
சோறு !
----------
காலை மணி எட்டு. அலாரம் அடிக்க மெல்ல விழித்தான் மயில். காலையில எட்டு மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைக்கிற ஒரே ஆள் நீ தாண்டா. இது கதிர். 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு பட்டணம் வந்தவர்கள்.
டேய் நீ ரெடியா. அப்போ நீ முதல போய் ஆர்டர் எடுடா. நான் 9 மணிக்கு வரேன். இதே வேலைய இருக்கே. இரவு தூங்கும் போது ஃபோன் பாக்காத சொன்ன கேக்குறியா. இப்போ நான் முதல போனாலும் திட்டு விழும். சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்லி விட்டு கிளம்பினான் கதிர்.
காலையில மொத ஆர்டர் சரியா போய் சேர்த்து விடு கதிர் என்று மெல்லிசை மாதிரி மென்மையாகவே கூறினாள் மித்ரா. மயில் வரல. ஓனர் வருவதற்கு முன் வந்திடுவான். இந்த டெலிவரி வேலை பிடிக்கல முதல வேற வேலை தேடணும் என்று முணுமுணுத்துக்கொண்டே தன் இரு சக்கர வாகனத்தில் பறக்க முயன்றான்.
கொளுத்தும் வெயில். எத்தனை வேகமாக ஸ்டார்ட் செய்தானோ அத்தனை மெதுவாக செல்ல வேண்டி இருந்தது. டிராபிக் சுற்றிலும் வாகனம் நெரிசல். எப்படியோ முதல் டெலிவரி முடிந்து கடைக்கு திரும்பி வந்தான்.
மயில் வந்தானா மித்ரா ?
இல்ல..
டேய் உனக்கு என்ன கொழுப்பா ? இன்னும் ரூம் ல என்ன பண்ற ? கிளம்பி வாடா கத்தினான் கதிர் ஃபோன் போட்டு.
உடம்புக்கு முடியல டா. குமட்டுது, வயிறு வலிக்குது. மயக்கமா வருது டா. நீ வாடா இங்கே ஆஸ்பத்திரி கொண்டு போ.
டேய் சண்முகம் அண்ணா லீவு நம்ம லைன் ல, நீ இன்னும் வரல. நா மட்டும் இருக்கேன். பக்கத்துல மெடிக்கல்ல மாத்திரை வாங்கிப்போட்டு வாடா வேலைக்கு. நைட் என்னடா சாப்பிட்ட ? கடைல ஆர்டர் வந்து கேன்சல் ஆகிட்டுது. அதான் சாப்பிட்டேன்.
எத்தனை தடவை சொல்றேன். நாம டெலிவரி வேலைக்கு தான் சேர்ந்து இருக்கோம். வீட்டுக்கு வந்து சாப்பிடு என்று. ஒரு சொல்லும் கேக்காதே.
உனக்கு பிடிக்கல அதுக்கு நான் என்ன பண்ண. நல்லா தான் இருந்தது. அரை நாளுக்கு லீவு சொல்லு. நா வந்திடுறேன் என்றான் மயில்.
ஃபோன் பேசி வைத்தவன் அடுத்த ஆர்டர் வரவே கிளம்பினான். பொழுதுக்கும் சாப்பாடு ஆர்டர் வருதே. அப்படி என்ன தான் ஆர்டர் செய்றாங்க என்று பார்த்தான். பழைய சோறும் கருவாடும் ஆர்டர் வந்திருந்தது. பழைய சோறு வெளியில் வாங்கி சாப்பிடுற அளவுக்கு மக்க சோம்பேறி ஆகிட்டு வர்றாங்க ல நினைத்துக் கொண்டவன் இந்த சோம்பேறிக இல்ல என்றால் நமக்கு வேலை இருக்காதே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
தொடர் ஆர்டர் டிபன், பழைய சோறு, சாப்பாடு, பிரியாணி என மதியம் ஆனது. கடைக்கு வந்து அவன் கொண்டு வந்த தயிர்சோறு சாப்பிட அமர்ந்தான். அம்மா போட்டு கொடுத்த மாங்கா ஊறுகாய். அத்தனை சுவை என்று உச் கொட்டி ருசித்தான்.
இங்கே நமக்கு சாப்பாடு உண்டு தானே, எதுக்கு நீ சமைத்து கொண்டு வர்ற. இங்கேயே சாப்பிடலாமே என்று மித்ரா கேட்டாள். எப்போதாவது வெளிய சாப்பிடலாம். தினம் பிடிக்கல மித்ரா. இதோ நேற்று மயில் கடைல சாப்பிட்டு உடம்புக்கு முடியல சொல்றான்.
தினம் ஒரு வகை சோறு கொண்டு வர்ற. சுவையாகவும் இருக்கு. உங்க மனைவி லக்கி என்று சிரித்தாள் மித்ரா.
ஹாஹா.. சிறிது விட்டு திரும்புகையில் மயில் வந்தான். மீண்டும் ஆர்டர் ஆர்டர் இப்படியாக இருவருக்கும் அன்றைய பொழுது கழிய இரவு வேலை முடிந்து அறைக்கு செல்ல உடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான் கதிர்.
சாப்பிடல கதிர் என்று கேட்டான் மயில். இல்ல உப்புமா சாப்பிடணும் போல இருக்கு. அறைக்கு போறேன்.
உனக்கும் சமைக்கவா ?
வேண்டாம் இன்று நம்ம வாடிக்கையாளர் ஒருத்தவங்க அவங்க ஹோட்டலில் பிரியாணி கொடுக்குறாங்க டெலிவரி செய்யும் எல்லாருக்கும். நான் அங்கே போறேன். நீ வரல. நம்ம வாடிக்கையாளர் ஹோட்டல் தானே. வந்து சாப்பிட்டால் என்ன ?
இல்லடா நான் அறைக்கு போறேன். பிறவு நேரம் ஆகி போகும் தூங்க.
வீட்டுக்கு போன கதிர் உப்புமா செய்து சாப்பிட்டு விட்டு உறங்கியும் விட்டான். மயில் இரவு தாமதமாக வந்து உறங்கி இருந்தான். விடியலில் கதிர் விழிக்க முக்காடு போட்டு உறங்கி இருந்தான் மயில். சீக்கிரம் வாடா என்று கூறி விட்டு எப்போதும் போல கடைக்கு கிளம்பி போனான் கதிர்.
போனதும் ஆர்டர் ரெடியாக இருந்தது. முதலாளியும் வந்திருந்தார். மயில் வரவில்லையே இவர் நம்மிடம் ஏதும் கேட்பாரோ என்று யோசித்தவாறே ஆர்டர் பில்லை எடுத்துக்கொள்ள உள்ளே நுழைந்தான்.
கதிரிடம் எங்கே உன் ஸ்நேகிதான் என்றார் முதலாளி. இப்போ வந்திடுவான் சார்.
அவனுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே.
இல்லையே. ஏன் சார்.
நேத்து உடம்புக்கு சரியில்லை என்றானே அதான் கேட்டேன் என்றார்.
சரி நீ ஆர்டர் எடுத்து கிளம்பு.
சரிங்க சார் என்ற கதிர், முதலாளியின் முகம் பார்க்க ஏதோ போல இருப்பதாக உணர்ந்தான். வேலை ஆட்கள் மீது இத்தனை அக்கறை கொண்டு விசாரிக்கும் அளவுக்கு இனிமையானவரா நம்ம முதலாளி என்று நினைத்துக்கொண்டே, ஆர்டர் எடுக்க போன போது மித்ராவிடம்
முதலாளி அக்கறையா மயிலை விசாரித்தார். ஆனால் அவர் முகம் ஒரு மாதிரி இருக்கு, கடையில் ஏதேனும் குழப்பமா ? என்று கேட்டான்.
என்ன கதிர் உனக்கு ஒன்றும் தெரியாதா ? நம்ம வாடிக்கையாளர் கடையில் நேற்று பிரியாணி சாப்பிட்ட ஒரு டெலிவரி ஆளு இறந்திட்டாரு. ஆறு பேருக்கு உடல் நலம் இல்லை. மருத்துவமனையில் இருக்காங்க. இறந்தவருக்கு இரண்டு பிள்ளைங்க. பாவம். இனி அந்த அம்மா பொழப்பு எப்படியோ ?
மீதமான இறைச்சியில் செய்து இருந்ததா தகவல். கடைக்கு சீல் வைத்து விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டே ஆர்டரை டேபிள் மீது வைத்தாள் மித்ரா.
மித்ராவின் பேச்சில் அதிர்ந்த கதிர் திரும்பி பார்க்க முதலாளி இல்லை அங்கு. உடனே மித்ராவிடம் திரும்ப பில்லை கொடுத்து விட்டு
மித்ரா, இந்த ஆர்டர் சண்முகம் அண்ணாவுக்கு கொடு. நான் இப்போ வந்திடுறேன். முதலாளி வந்தால் கொஞ்சம் சமாளி என்று சொல்லி விட்டு அறைக்கு விரைந்தான்.
வேலைக்கு வரும் போது சீக்கிரம் வர சொன்ன போது பதில் ஏதும் சொல்லாமல் படுத்து இருந்த மயிலுக்கு என்ன ஆகி இருக்குமோ என்ற பயமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது கதிருக்கு. கடையும் அவர்கள் தங்கி இருக்கும் அறையும் பக்கத்தில் என்பதால் இரண்டு நிமிடத்தில் அறை இருக்கும் கட்டிடம் சென்றடைந்தான்.
பைக்யை விட்டு வேகமாக இறங்கி தட்டுத் தடுமாறி மாடிப் படியில் ஏறி இரண்டாம் தளத்தில் இருக்கும் அறைக்கதவைத் தட்ட முற்படும் போது மயில் கதவைத் திறக்க சரியாக இருந்தது.
ஓடி வந்த வேகம், பயம் , பதற்றம் மூச்சு வாங்கி நடுக்கத்தோடு நின்றான்.
டேய் டெலிவரி இல்ல. எதுக்கு இப்போ இங்கே வந்த ? நேற்று அழைத்தும் வரல. என்ன ஆச்சு ? எதுக்கு இப்படி விழிக்கிற? கதிர் ! கத்தினான் மயில்.
கதிருக்கு எதுவும் காதில் விழவில்லை. மாறாக உனக்கு ஒன்னும் இல்லையே மயிலு, மயிலு உடம்பு நல்லா இருக்கு தானே பதற்றமாக கதிர் கேட்க,
நான் நல்லா இருக்கேன். என்னடா ஆச்சு உனக்கு ? எதுக்கு பேய்’ அடித்த மாதிரி இருக்கே ?
கொஞ்சம் தண்ணி கொண்டு வாடா. மூச்சு வாங்குது.
இந்த தண்ணி. குடி. மூச்சு விடு. இப்போ சொல்லு. என்ன ஆச்சு ?
நீ இரவுக்கு என்ன சாப்பிட ? கதிர் வினவினான்.
அட, பைத்தியக்கரா இதைக் கேட்க அறைக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வந்தியா ?. நான் என்னமோ ஏதோ என்று பயந்திட்டேன். நீ எப்போதும் சொல்லுவ அவசியம் இல்லாம வெளிய சாப்பிடாதே என்று. என்னவோ அது நினைப்பு வந்தது. காலையில வேற உடம்புக்கு சுகம் இல்ல. அதனால அந்த வாடிக்கையாளர் கடைக்கு நா போகல.
கடற்கரையிலே கொஞ்ச நேரம் இருந்திட்டு அறைக்கு வந்திட்டேன். அங்கே இருக்கும் போது உப்புக்கடலை சாப்பிட்டேன். அப்போ பெரிசா பசி இல்ல. ஆனா வீட்டுக்கு வந்ததும் பசி வயித்தை கிள்ள நீ காலைக்கு தண்ணி ஊத்தி எடுத்து வைத்து இருந்த தண்ணி சோறு தான் சாப்பிட்டேன். அதோடு அம்மா செய்த ஊறுகாய். வகை வகையா சாப்பிட நெனைப்பேன். ஆனா நேத்து அந்த சோறு அத்தனை ருசியா இருந்தது.
நீ சாப்பிட்டு மீதம் இருந்த நீராகாரம் இப்போ தான் கலக்கி குடித்தேன். நேத்தைக்கு ஏப்பம் வரமா என்னயென்னவோ ஆச்சு. இரவும் இப்பவும் சாப்பிட்டவுடன் ஏப்பம் வந்தது. வயிறு குளிர்ச்சியாக இருக்கு.
கத சொல்லி கிடக்கேன் நா. சரி நீ எதுக்கு இங்கே வந்த அரக்க பறக்க ? அதைச் சொல்லு. மித்ரா சொன்ன விஷயத்தைக் கொஞ்சம் தயக்கத்தோடு கதிர் சொன்னான் மயிலிடம்.
நா செத்து கடப்பேன் என்று நினைச்சிட்டியா ? என்ன செய்யா காலம் அப்படி ஆகி கிடக்கு.
இப்போ கொஞ்ச வருடமா பலரும் அரிசி சோறு வெறும் கார்போஹைட்ரெட் என்று சொல்லி விட்டு வித விதமாக மசாலா சேர்த்து செய்யும் உணவுகள் தான் அதிகம் சாப்பிடுறாங்க. ஆனால் இப்பவும் ஊர்ல மூணு வேளையும் சோறு சாப்புட்டு உசுரு கொடுத்து உழைக்கிறவங்க இருக்காங்க.
தொண்ட வரைக்கும் தானே டா இந்த சுவை எல்லாம். கீழே இறங்கினா. வயித்துப்பசிக்கு எதாவது சாப்பிட வேணும். சிறு குடலை, பெருங்குடல் சாப்பிடாத மாதிரி பாத்துக்கணும். அவ்வளவுதானே. அப்படித் தானே நம்ம வாழ்க்கை இருக்கு இன்னுமும் என்றான் மயில்.
ஆமாம் டா நேத்து காலைக்கே பழையசோறும் கருவாடும் ஆர்டர் வந்திருந்தது. கொடுத்து விட்டு வந்து மித்ராவிடம் கேட்டேன். இதும் கூட ஹோட்டலில் சமைக்கிறாங்களா என்று.
ஊர வைத்த சோறில் ப்ரோபயாடிக் இருக்கு. புரோபயாடிக்குகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன, அவை செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன.
அதனால் சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தும் போன்ற தினம் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் குழந்தைப்பேறுக்கு காத்திருக்கும் பெண்களுக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்வதா சொன்னாங்க.
ம்ம்...
சிறு தானியம் கூட நல்லது தான். ஆனா முன்ன மாதிரி இல்லை. விலை ஏறி கிடக்கு. மேலும் எல்லா உணவு பொருள்களும் ஆர்கானிக் என்று சொல்லி விலைக் கூட்டி விக்கிறாங்க. நகரத்துல எல்லாம் விக்கும். ஆனா இந்த நகரத்துலேயும் நம்மள மாதிரி சின்ன ஆளுங்க இருக்க தானே செய்றாங்க என்றான் மயில்.
நம்ம தாத்தா பாட்டி காலத்துல ராகி கம்பு எல்லாம் சோறாக்கி சாப்பிடுவாங்களாம். ஆத்தா சொல்லிச்சு. கார்டுக்கு அரிசி வாங்கி சாப்பிடற மக்க இன்னும் இருக்காங்க. அவிக வயத்துக்கு தான் சாப்பிடுறாங்க. எப்போதாச்சும் திருவிழா பண்டிகை என்றால் நல்ல சோறு கிடைக்கும்.
ம்ம் பாவம் அந்த ஆளு.
வேண்டும் என்றே உணவில் விஷம் வைத்த காலம் இருந்தது. ஆனால் இப்போ உணவே விஷமாகவும் மாறுது.
என்னடா செய்ய ? உணவே மருந்து என்ற காலமும் இருந்தது. அப்படிப்பட்ட உணவுகளும், சமைப்பவர்களும் கூட இன்னும் இருக்காங்க. நாம தான் விழிப்புணர்வா இருக்க வேண்டும்.
வண்ணம் பூசிய உணவுகள், எண்ணெயில் பொரிக்கும் மற்றும் பொறிக்காத உணவுகள், பேக்கரி உணவுகள் என்று இன்னும் பல எத்தனை உணவு வகைகள் வந்தாலும் சோறு சோறு தான். வாடா கடைக்கு போவோம் என்று சொல்லிக்கொண்டே கிளம்பினார்கள் மயிலும் கதிரும்.......
ஆமாம். உண்மைத்தானே... எக்காலத்துக்கும் சோறு சோறுதான் !!!
பா. லக்ஷ்மி சதீஷ்குமார்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்