Priya Venkatesan
சிறுகதை வரிசை எண்
# 150
குளியலறையில் மயிர் மழிப்பான்கள் இரண்டு இருந்தன. அதில் ஒன்று, 'முகத்திலுள்ள முடிகளை' மட்டும் மழிப்பதற்கானது.
நேரம் கருதி, இரண்டில் எதை எடுப்பதென அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ரூம் மேட் தருமி கதவைத் தட்டினான்..
"டேய்... சிவா, சிறுகதைப்போட்டி அறிவிப்பு வந்திருக்குடா... பொன்முடிப்பும் உண்டாம்.."
அடுத்தப் போட்டியில் நிச்சயமாகப் பரிசு பெற்றுத் தருவதாக, தருமியிடம் ஏற்கெனவே சத்தியம் செய்திருந்த டுபாக்கூர் எழுத்தாளன் சிவா, அந்தச் சத்தியசோதனை இவ்வளவு சீக்கிரம் வந்து கதவைத்தட்டுமெனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
ஒரு போட்டியிலாவது பரிசு பெற்றுத் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவனை, தருமியும் விடுவதாக இல்லை.
சிவாவை எழுத்தாளன் என நம்பும் ஒரே ஜீவன், இந்தத் தருமி மட்டும்தான். எப்படியாவது இன்று ஒரு கதையை எழுதிக்கொடுத்து, அவனிடம் தன் மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். அதுமட்டுமின்றி, சோத்துக்கே உடுக்கையடித்துக் கொண்டிருப்பதால், இந்தப் பொன்முடிப்பை அவிழ்த்துதான் தீபாவளி கொண்டாடுவதாகவும் உத்தேசம்.
இனியும் தாமதிக்கக் கூடாதெனத் தன் சடைமுடியை முடிந்துகொண்டு, தாடியை மழித்தபடி கதைக்கான கருவை யோசித்தான், சிவா.
சாதிதானே ட்ரெண்டிங் இப்போ. எனவே, ரத்தமும் சதையுமாக ஒரு கலவரக் கதையைச் சிந்தித்தபடி, கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போய், வெறிகொண்டு மழித்தபோது.., தன் சாதிப்பெருமைக்காக வளர்த்த மீசையில் பாதி, ரத்தமும் சதையுமாக வந்து விழுந்தது.
ஆயுதமேந்தி அடக்குமுறையுடன் ஆதிக்கம் செலுத்தி வந்த போதெல்லாம் தக்காளி சட்னியை மட்டுமே பார்த்தவன், முதல்முறையாக, "ஆ.. ரத்தம்..!" எனக் கத்தினான்..
ரணகளத்திலுமொரு குதூகலமாக.., இன்னொரு மழிப்பானைத் தேர்ந்தெடுக்காததையெண்ணி அவன் மனம் சற்றே ஆறுதலடைந்தது.
மிகச்சரியாகப் பாதி மீசையை அறுத்த நாரியாக பாத்ரூமிலிருந்து, ஆண் பாதி - பெண் மீதியுமான முகத்துடன் எட்டிப்பார்த்த சிவாவைக் கண்ட தருமி, தலையிலடித்துக்கொண்டான், "இன்னமும் நீ குளிச்சு முடிக்கலையா.. சீக்கிரம் வாடா.."
"ரொம்ப வலிக்குதுடா.. இன்னிக்கு கதையை எழுதி, பரிசு வாங்கிடலாம்னு பார்த்தா.., அதுக்குள்ள இப்படியாகிடுச்சே.. எனக்கு மட்டும் இன்னும் ஒருநாள் டைம் கெடச்சா.. அற்புதமா எழுதிக் கிழிச்சிடுவேன் டா.." என்று சால்ஜாப்பு சொன்னான், சிவா.
"மச்சீ.. கவலைப்படாதே! நீ கேட்ட மாதிரியே, நெடுந்தொலைவிலிருக்கும் நம் சிவசக்தி நகர், கைலாசா.. உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் குடுத்திருக்காங்க..."
'கண்டிஷன்ஸ் அப்ளைடு' வார்த்தைகளைப் போல் மைக்ரோ சைஸில் இருந்த அந்த அறிவிப்பை சிவாதான் கவனிக்கவில்லையே தவிர, அவன் வண்டவாளத்தைத் தண்டவாளமேற்றிடும் முனைப்புடனேயே திரியும் தருமி அதைக் கூர்ந்துக் கவனித்திருந்தான்.
இனியும் தவிர்க்க முடியாது. எழுதியே ஆகவேண்டிய கட்டாயத்தில், எவ்வளவு யோசித்தும் கதைக்கரு தோன்றவில்லை. அதெப்படித் தோன்றும், சட்டியில் இருந்தால்தானே..?!
கட்டுக்கதைகளுக்குப் பெயர் போன கணேஷிடம் எழுதித் தரச் சொல்லிக் கேட்கலாமென்றால், அவன் எங்கோ கிடைத்த ஊசிப்போனக் கொழுக்கட்டைகளைத் தின்று வயிற்றுக்கோளாறானதில், தொப்பையைக் குறைக்கும் வைத்தியம் தேடி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான். போதாக்குறைக்கு எங்கோ வம்பிழுத்ததில், யாரோ நாலு சாத்து சாத்தி கிணற்றில் வீசியெறிந்துள்ளனர். பலத்த காயம். அவனை இப்போதைக்குப் பிடிக்கமுடியாது.
கதை எழுதவியலாத் தன் இயலாமையை எண்ணி, தலைக்குணிந்து அழுதுகொண்டிருந்ததில் கண்ணீர்ப் பெருகி, தலைக்குமேல் கங்கையாய் ஓடிக்கொண்டிருந்தது..
இந்தப் போட்டியில் வென்றால், தருமி தனக்கும் சோமபானம் வாங்கித் தருவதாய்ச் சொல்லியிருந்தான். அந்த எண்ணம் வேறு வந்துபோகவே, பிற்பகல் கடந்ததும் கை கால்கள் நடுங்கி ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கின.
எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடப்பதை உணர்ந்த சிவா, தனக்கென இருக்கும் ஒரேயொரு ரசிகனான தருமியிடமும் அவமானப்படக் கூடாதென முடிவெடுத்து மாற்றுவழிகளை யோசிக்கத் தொடங்கினான்.
அப்போதுதான், குடும்ப அட்டை, தன் குடுமியில் இருப்பது நினைவுக்கு வந்தது.
"டேய்.. இப்பத்தான்டா அந்தப் போட்டியறிவிப்புத் தண்டோராவை ரீவைண்ட் பண்ணிக் கேட்டேன்.., பொற்கிழியோட அளவு ரொம்ப சின்னதாம்.. அதெல்லாம் வேலைக்காவாது.., உனக்கு ட்ரீட் தானே வேணும்.., என்னோட வா, வேற வழியிருக்கு".
தருமியையும் உடன் அழைத்துச்சென்று ரேஷன் கடை வரிசையில் நின்ற சிவா, தனது ஸ்மார்ட் கார்டை காண்பித்து, கைரேகை வைத்தவுடன், மெயின் அயிட்டத்துக்கான பணத்தோடு, பக்கத்துணை உணவுகளும் இலவசமாகக் கிடைத்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சோமபான அங்காடிக்குள் 'ப்ளொக்' எனக் குடுவை மூடிகள் திறக்கப்பட்டதில்.., "ஹேப்பீ தீவாளி" எனும் ஆரவாரக்கூச்சலுக்கிடையே மத்தாப்பூவாய் நுரை பொங்கி வழிந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்