logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

KALAYARASSY G

சிறுகதை வரிசை எண் # 147


அடையாளம் சிறுகதை (ஞா.கலையரசி) நான் அப்போது தான் இளங்கலை இஞ்சீனியரிங் முடித்திருந்தேன். என் கனவு கம்பெனியில் இஞ்சீனியராக சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் படித்து முடித்தவுடன் வீட்டில் திருமண வரன் பார்க்க ஆரம்பித்ததில் எனக்குப் பயங்கர ஏமாற்றம். “அப்பா! எனக்கு இப்ப தான் 21 ஆவுது. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? நான் வேலைக்குப் போய் இரண்டு வருஷம் சம்பாதிச்சிட்டு அப்புறமாக் கல்யாணம் பண்ணிக்கிறேன். என் கல்யாணத்துக்கு ஆவுற செலவை நானே சம்பாதிச்சி உங்களுக்குக் கொடுக்கிறேன். தயவு செஞ்சு இப்ப எனக்குக் கல்யாணம் வேணாம்பா” அப்பாவிடம் கெஞ்சினேன். “நானும் ரெண்டு வருஷம் கழிச்சி உனக்கு வரன் பார்க்கலாம்னு தான் மா நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா இது எதிர்பாராம தானா வந்த நல்ல சம்பந்தம். மாப்பிள்ளை வீடு நமக்குத் தூரத்துச் சொந்தம். ஒரே பையன். நிறைய சொத்திருக்கு. விசாரிச்ச வரைக்கும் மாப்பிள்ளை நல்ல பையன்னு எல்லாரும் சொல்றாங்க. வெளியில வரன் தேடினா, அதை விசாரிக்கிறது கஷ்டம் மா” என்றார் அப்பா. “அம்மா! நீங்களாவது அப்பா கிட்ட சொல்லுங்களேன். நான் ரெண்டு வருஷம் ஜாலியா இருந்திட்டு அப்புறமா பண்ணிக்கிறேன் மா. உடனே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதுக்கு என்னை எதுக்கு இஞ்சீனியரிங் படிக்க வைச்சீங்க?” “படிச்ச படிப்பு எப்பவும் வீண் போகாது யாழினி. நீ கல்யாணம் முடிஞ்ச பிறகு அவங்க சம்மதம் வாங்கிட்டு வேலைக்குப் போ. அப்பா சொல்ற மாதிரி இது தானா நம்மளைத் தேடி வந்திருக்கிற சம்பந்தம். இதை வேணாம்னு சொல்லிட்டு அப்புறம் நாமளா தேடிப்போனா நல்லதா அமையுமோ அமையாதோன்னு பயமாயிருக்கு” என்றார் அம்மா. “என்னை ஏமாத்தப் பார்க்கிறீங்க. அவங்க வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லித் திருமணம் செய்றாங்க. அப்புறம் என்னை எப்படி வேலைக்கு அனுப்புவாங்க?” “நீ இப்ப சம்பாதிச்சி என்ன பண்ணப் போறே? மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறாரு. நீ ராணியாட்டம் வீட்டுல இருந்துக்கிட்டுக் குழந்தைகளைப் பெத்து நல்லா வளர்த்துக்கிட்டு ஓய்வா இரு. வேலைக்குப் போய்க் காலையிலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் நீ ஏன் உழைச்சிக் கஷ்டப்படணும்?” இது அப்பா. “அப்பா! உங்களுக்கு புரியல. நான் வேலைக்குப் போகணும்னு சொல்றது பணத்துக்காக மட்டுமில்ல. அது எனக்கு ஒரு மரியாதையைக் கொடுக்கும்; தன்னம்பிக்கையைக் கொடுக்கும். என் செலவுக்கு நான் யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்ல. என் சொந்தக் காலுல நிக்குற தைரியம் வேற எதிலேயும் கிடைக்காது.” “இந்தப் பொண்ணுங்களை இதுக்குத் தான் அதுகமாப் படிக்க வைக்கக் கூடாதுன்னு சொல்றது. நாலு எழுத்து படிச்சவுடனே நமக்கே புத்தி சொல்ல ஆரம்பிச்சிடுதுங்க.” “யாழினி! அப்பா உன் நல்லதுக்குத் தான் சொல்றாங்க. சம்பந்திக்கு உடம்பு சரியில்லேன்னு தான் அவங்க வேலைக்குப் போகாத பொண்ணா தேடுறாங்க. உனக்கும் தான் இன்னும் வேலை கிடைக்கலியே. அவங்களும் உனக்கு அம்மா தான். அவங்களைப் பார்த்துக்கிட்டு ஓய்வா வீட்டுல இரு. அவங்க எவ்ளோ காலம் இருக்கப் போறாங்க? அதுக்கப்புறம் நீ ஆசைப்பட்டபடி வேலைக்குப் போகலாம்.” “ஐயோ அம்மா! எத்தினி தடவை சொன்னாலும் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது. நான் ஏதோ ஒரு கம்பெனியில வேலைக்குப் போகணும்னு நினைச்சிருந்தா கல்லூரி காம்பஸுக்கு வந்த கம்பெனி ஏதாவது ஒன்னுல சேர்ந்திருக்கலாம். ஆனா நான் என் டிரீம் கம்பெனியில வேலையில சேரணும்னு காத்திருக்கேன்.” “என்னவோ நீயாச்சு உங்கப்பாவாச்சு! என்னை விட்டுடுங்க. ரெண்டு பேருக்கு இடையில நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.” அப்பாவுக்கு எப்பவுமே அவர் பிடிச்ச முயலுக்கு மூனு கால் தான். நான் சொன்ன எதுவும் அவர் காதில் ஏறவேயில்லை. மாப்பிள்ளை நவீனைப் பார்த்தவுடன் அப்பாவுக்குப் பிடித்துப் போயிற்று. சிகரெட், குடின்னு ஒரு கெட்ட பழக்கம் இல்லையாம். இந்தக் காலத்துல எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனைப் பார்க்கிறதே கஷ்டமாம். என் காதுபட அம்மாவிடம் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார். நவீனும் அவர் குடும்பத்தினரும் என்னிடம் அன்பாகப் பழகியதால் நானும் வேறுவழியின்றிக் கோபத்தைக் காட்டாமல் சகஜமாக இருக்க முயன்றேன். திருமணம் முடிந்து தேன்நிலவு, விருந்து எனச் சில மாதங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அதற்குப் பிறகு நவீன் வீட்டாரின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தது. படித்து முடிக்கும் வரை நான் அடுப்படி பக்கமே போனதில்லை. அம்மா தான் சமையல். புகுந்த வீட்டில் முழுக்க முழுக்க அடுப்படி என் பொறுப்பில் வந்தது. எனக்குப் பயத்தில் மூச்சு முட்டியது. யாருக்கும் தெரியாமல் குளியலறையில் போய் அழுதேன். அப்புறம் சமையல் காணொளிகள் பார்த்தும், அம்மாவிடம் போன் செய்து கேட்டும் சமையல் கொஞ்சங் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் செய்த சமையல் சில சமயங்களில் வாயில் வைக்க முடியாமல் சொதப்பலாக முடிந்தது. “கையாலாகாதவ; சமையல், வீட்டு வேலைன்னு ஒரு மண்ணும் தெரியல” என்று மாமியார் பகிரங்கமாகவே என்னைத் திட்டத் துவங்கினார். எதிர்த்துப் பேச எனக்குப் பயமாக இருந்தது. அம்மாவிடம் போன் செய்து அழுதேன். “விடு; சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. பெரியவங்களை எதிர்த்துப் பேசக் கூடாது; அவங்க கோபத்துல ஏதாவது சொன்னாலும், வாயைத் திறக்காதே” என்றார் அம்மா. முதல் முறை நான் எதிர்த்துப் பேசாமல் இருந்ததால், மாமியார்க்குத் தைரியம் அதிகமானது. எதற்கெடுத்தாலும் ‘கையாலாகாதவள்!’ என்று வசைபாடிக் கொண்டிருந்தார். தினமும் இரவு கணவரிடம் சொல்லி அழுதேன். “அம்மா சமையல் தெரியலேன்னு தானே சொல்றாங்க. கத்துக்கோ. வீட்டுல வெட்டியா இருக்கிறதுக்கு, அது கூட சரியாச் செய்யலேன்னா எப்படி? அவங்களுக்குக் கோபம் வரத் தானே செய்யும்?” “வீட்டுல வெட்டியா இருக்கேனா? காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் எவ்ளோ வேலை செய்றேன்?” “இதெல்லாம் ஒரு வேலையா? எங்க ஆபிசுக்கு வந்து பாரு. என் கூட வேலை செய்ற பெண்கள் எல்லாரும் வீட்டு வேலையும் பார்த்துக்கிட்டு சம்பாதிச்சும் கொடுக்கிறாங்க” என்றார். “நான் என்ன வேலைக்குப் போக மாட்டேன்னா சொன்னேன்? நான் வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லித் தானே நீங்க கல்யாணம் பண்ணுனீங்க?” “திறமை இருந்திருந்தா படிச்சு முடிச்சவுடனே கல்லூரி கேம்பஸுல உனக்கு வேலை கிடைச்சிருக்காதா? என்னமோ நாங்க சொன்னதால தான் நீ வேலைக்குப் போகலேங்கிற மாதிரி பேசுற?” “ஏற்கெனவே என் ட்ரீம் கம்பெனி பத்தியெல்லாம் உங்க கிட்ட விவரமா சொல்லியிருக்கேன். என்னமோ ஒன்னுமே தெரியாத மாதிரி கேம்பஸ் வேலை பத்திப் புதுசா பேசறீங்க. வேலைக்குப் போலாம்னு இப்ப சொல்லுங்க. ஒரு மாசத்துல ஏதாவது ஒரு வேலை வாங்கிக் காட்டறேன்.” “அப்படியா? முதல்ல வேலை வாங்கிக் காட்டு. அதுக்கப்புறம் பேசலாம்; இப்ப சும்மா வள வளன்னு பேசாம போய் முடிக்க வேண்டிய வேலையைப் பாரு” என்றார் கணவர். எனக்கு வேலை கிடைக்காது என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை அவருக்கு. கோபத்தில் என் மண்டை விண் விண்ணென்று தெறித்தது. “யாழினி! கோபத்தைக் குறை. நிதானமாக யோசி. உன் திறமையை நிரூபித்துக் காட்டு. உனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொள்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வீட்டுக்கு வந்திருந்த அன்றைய ஆங்கில நாளிதழை எடுத்துப் பிரித்தேன். வங்கியில் கிளார்க் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. இப்போதைக்கு ஏதோ ஒரு வேலை. அதற்குப் பிறகு பிடித்த வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன். எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டுத் தேர்வு நாளன்று ஆட்டோவில் போய் வந்தேன். கணவருக்கு நான் தேர்வு எழுதிய விபரம் தெரியும் என்றாலும் அதைச் சட்டையே செய்யவில்லை. தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு வந்த போது விஷயம் மாமியார்க்குத் தெரிந்தது. வீட்டில் ஒரே களேபரம். வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று சண்டை. “உங்க பிள்ளை தான் விண்ணப்பிக்கச் சொன்னார்; அவரைக் கேளுங்க” என்றேன். “நவீன்! இவ சொல்றது உண்மையாடா?” “அம்மா கவலைப்படாதீங்க. இவளுக்கெல்லாம் எங்க வேலை கிடைக்கப் போகுது? பத்து பேரு வேணும்னா, அவன் 100 பேரைக் கூப்பிடுவான். அநேகமா கூப்பிட்டிருக்கிற அந்த லிஸ்டுல இவ கடைசி ஆளா இருப்பா!” இருவரும் சத்தம் போட்டுச் சிரித்தனர். எனக்கு ஆத்திரத்தில் உடம்பெல்லாம் பற்றியெரிந்தது. ஒரு மாதத்தில் நேர்முகத்தேர்வு முடிந்து முடிவு வெளியானது. எனக்கு உள்ளூர் வங்கிக் கிளையிலேயே வேலை கிடைத்தது. மாமியார் அன்றும் குதி குதியென்று குதித்தார். என் அப்பாவுக்கு ஃபோன் செய்து கத்தினார். “நாங்க பொண்ணு பார்க்கும் போதே வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லித் தானே கல்யாணம் பண்ணினோம்” என்றார். “நான் என்னங்க பண்றது? உங்க பிள்ளை தானே போடச் சொன்னாராம்!” அப்பா தைரியமாகச் சமாளித்தார். நவீனின் அலுவலக நண்பர்கள், “வீட்டு வேலைக்கு, சமையலுக்கு ஆள் போட்டுக்கலாம்; உள்ளூரிலேயே வேலை கிடைச்சிருக்கு; நல்ல வாய்ப்பை விட்டுடாதே” என்று சொல்லி அவரைக் குழப்பியிருந்தனர். “நான் காலையில சீக்கிரம் எழுந்திரிச்சி சமையல் வேலையை முடிச்சிட்டுப் போறேன்” என்று அவ்வப்போது அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். எப்படியாவது எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனம் பரபரத்தது. ஒரு வழியாக அவர் சம்மதம் வாங்கி அன்று வேலையில் சேர்ந்தேன். என்னுடன் வேலையில் சேர்ந்தவர்கள் சம்பளம், பிற வசதிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. எனக்கான சுயமரியாதையை மீட்டெடுத்த தருணத்தை நான் உள்ளுக்குள் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அந்த வீட்டு மூலையிலிருந்த அடுப்படியிலிருந்து வெளியே வந்து சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் பரவசம்! சோதனையாக நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து மாமியாருக்கு உடம்பில் ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டது. நடக்க முடியவில்லை. வீட்டிலேயே பிசியோதெரபி கொடுத்தார்கள். நல்ல வேளை! நான் தப்பித்தேன்! என்று மகிழ்ந்தேன். ஆனால் என் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. “அம்மாவைக் கவனித்துக் கொள்ள ஆள் போட வேண்டும்” என்றார் மாமனார். “ஆமாம். போடணும்” என்றேன் நான், பட்டுக் கொள்ளாமல். “எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் நாம பார்த்துக்கிற மாதிரி அவங்க பார்த்துக்க மாட்டாங்க” என்றார். “அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றேன் நான் விட்டேற்றியாக. என் பதிலை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்ன சொன்னாலும் மறு வார்த்தை பேசாமலும், உணர்ச்சிகளை வெளியே காட்டாமலும் உள்ளுக்குள்ளேயே குமைந்து நின்ற யாழினியா இது? நானே நானா? யாரோ தானா? எல்லாம் என் வேலை கொடுக்கும் தைரியம் தான். “நர்சு போட்டுப் பாத்துக்கலாம்னு விசாரிச்சேன். நீ இப்ப வாங்குற சம்பளத்தைக் கேட்கிறாங்க. அந்தச் சம்பளம் கொடுத்தாலும் சரியா பார்த்துக்குவாங்களான்னு தெரியாது” என்று முழுங்கினார் மாமனார். நான் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன். “ஏங்க அவ கிட்ட போயி கெஞ்சிக்கிட்டு. நீ வேலைக்குப் போக வேணாம். வீட்டுல இருந்து அம்மாவைக் கவனிச்சிக்கோன்னு சொல்ல ஏன் வாய் வர மாட்டேங்குது உங்களுக்கு?” என்று அறையில் மாமியார் தம் கணவரிடம் கடிந்து சொன்னது காதில் விழுந்தது. எனக்கு உள்ளூர உதறல் எடுத்தது. அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் என் தோழிகள் கேட்டனர். “யாழினி! என்னாச்சு? ஏன் காலையிலேர்ந்து முகம் ஒரு மாதிரியிருக்கு?” என்ன பிரச்சினை?” தோழி நிரஞ்சனா கேட்டாள். நான் காலையில் மாமனார் சொன்னதைச் சொன்னேன். “அவங்க சொன்னாங்கன்னு கேட்டுக்கிட்டு முட்டாள் மாதிரி வேலையை ராஜினாமா பண்ணிடாதே. அதுக்கப்புறம் உன் வாழ்க்கை நரகமாயிடும்” என்றனர் எல்லாரும் ஒரே குரலில். ‘நவீன் போகக்கூடாதென்று சொன்னால் என்ன செய்வது?’ என்ற யோசனை அடிமனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. அவர் அம்மா பிள்ளை. அம்மா என்ன சொன்னாலும் அப்படியே கேட்பார். என் மனதுக்குள் ஒரே போராட்டம். அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பதிலைத் தேடி அல்லும் பகமும் மனம் அலைபாய்ந்தது. அவர் வேறு எதற்காகவாவது கூப்பிட்டால் கூட, இதைக் கேட்கத் தான் கூப்பிடுகிறார் என்று நெஞ்சு படபடத்தது. நல்ல வேளையாக ஒரு நர்ஸ் வேலைக்கு வந்தார். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் மாமியார் படுத்திய பாட்டில் ஒரே மாதத்தில் “வேலையும் வேணாம்; உங்க சம்பளமும் வேணாம்; ஆளை விடுங்கடா சாமி!” என்று அவர் ஓடியே போய்விட்டார். என்னை வேலையை விட்டு நிறுத்துவதற்காக மாமியார் நர்சைப் பாடாய்ப் படுத்தித் துரத்திவிட்டாரோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வழியாக நான் வருமென்று பயந்த நாள் அன்று வந்தே விட்டது. நவீன் ரொம்ப நல்ல பிள்ளை போல அசடு வழிந்தார். என்னைக் கூப்பிட்டு அருகில் உட்கார வைத்து வேலையைப் பற்றியெல்லாம் அன்பொழுக விசாரித்தார். “யாழினி! நீ வேலையில சேர்ந்தப்புறம் ரொம்பவே இளைச்சுட்டே. சரியாச் சாப்பிடுறியா? இல்லியா? கறுத்தும் போயிட்டே! முன்னெல்லாம் நான் வீட்டுக்கு வர்ற சமயம் உற்சாகமா வரவேற்பே. இப்ப வாடி வதங்கி ரொம்ப சோர்வா வீட்டுக்கு வர்றே! ரொம்ப வேலை வாங்குறானுங்களா? இப்படி உடம்பை வருத்திக்கிட்டு அவனுங்க கொடுக்கிற சொற்ப சம்பளத்துக்குப் போய் நீ மாடா உழைக்கணுமான்னு அடிக்கடி தோணுது…” நவீனின் திடீர்ப் பாசம் அணை கடந்த வெள்ளமாகப் பெருகி என்னை மூச்சடைக்க வைத்தது. நான் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பழைய யாழினியாக இருந்திருந்தால் அவர் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயிருப்பேன். இப்போது நான் உலகம் புரிந்த யாழினி! நான் அவரது இறுதி கேள்விக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக என்னைப் புகழோ புகழ் என்று புகழ்ந்த பிறகு, பூனைக்குட்டி மெல்ல வெளியே வந்தது. “யாழினி! நல்லா யோசிச்சிப் பாரு. உனக்கு வெறும் இருபதாயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்குது. அதுக்குக் காலையிலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் வேலையைப் புழிஞ்சி எடுக்கிறான். நான் வாங்குற சம்பளமே நம்ம குடும்பத்துக்குப் போதும். அம்மாவுக்கும் நர்ஸ் சரியா அமையல. அப்பாவுக்கும் வயசாயிடுச்சி. அவரால நாள் முழுக்க அம்மாவைப் பார்க்க முடியல. நர்சுக்கு எவ்ளோ தான் சம்பளம் கொடுத்தாலும் அவங்க நாம பார்த்துக்கிற மாதிரி அம்மாவைப் பாத்துக்க மாட்டாங்க அதனால…..” “அதனால….?” “நீ வேலையை விட்டுடு. அது கஷ்டம் தான். ஆனா அம்மா இன்னும் எவ்ளோ நாளைக்கு இருப்பாங்கன்னு தெரியாது. அவங்க இருக்கற வரைக்கும் நல்லபடியா பார்த்துக்கணும். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எந்த வேலைக்கு வேணும்னாலும் போலாம்...” “உங்க அம்மாவை நல்லாப் பார்த்துக்கணும்னா நீங்க உங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டுப் பாருங்க. அல்லது லீவை போட்டுட்டுப் பாருங்க. நான் எதுக்கு வேலையை விடணும்?” “என்னது? நான் வேலையை விடறதா? என் சம்பளம் இல்லேன்னா குடும்பம் எப்படி நடத்துறது? நீ வாங்குற சொற்ப சம்பளத்தை வைச்சி என்ன பண்றது?” “அதைப் பத்தி எனக்குக் கவலையில்ல. கையால ஆகாதவ ஆகாதவள்னு உங்கம்மா மூச்சுக்கு முந்நூறு வாட்டி, என்னைக் கரிச்சிக் கொட்டுனாங்க. அதைக் கேட்டு ரோஷம் வந்து தான், இந்த வேலைக்குப் போனேன். இந்தக் கையால ஆகாதவளால, கை கால் விழுந்த உங்கம்மாவைக் கண்டிப்பாப் பார்க்க முடியாது. என் வேலையை எந்தக் காரணம் முன்னிட்டும் நான் ராஜினாமா பண்ண மாட்டேன்.” “உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொல்றேன். புருஷன் வீட்டுல என்ன சொன்னாலும் வாயே திறக்கக் கூடாதுன்னு, அன்னிக்கு உங்கம்மா என் முன்னாடிச் சொல்லித்தானே அனுப்பினாங்க?” “அவங்க சொன்னாங்க தான். இல்லேன்னு சொல்லை. ஏன்னா எனக்கு அன்னிக்குச் சுய சம்பாத்தியம் இல்லை. ஏதாவது சண்டை வந்து அம்மா வீட்டுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு நான் நின்னுடப் போறேன்னு அவங்களுக்குப் பயம். வயசான காலத்துல அப்பாவுக்கு அதிகப்படியா கஷ்டம் கொடுத்துடுவேன்னு பயம்.” ‘ஓஹோ! அவ்வளவு தூரம் வந்துட்டியா? என்னை எதிர்த்துப் பேச என்ன ஒரு தைரியம்! நான் சொல்றதைக் கேட்கலேன்னா, இந்த வீட்டுல இனிமே நீ இருக்க முடியாது.” “அப்படியா? ரொம்ப நல்லது. இப்படிச் சொன்னவுடனே உங்க கால்ல விழுந்து என்னை மன்னிச்சிடுங்க. தயவு செஞ்சி என்னை ஏத்துக்கோங்கன்னு கெஞ்சுவேன்னு பார்த்தீங்களா? இந்த ஊர்ல எத்தினியோ பெண்கள் ஹாஸ்டல் இருக்கு. அங்க போறேன். அப்பாடா! அதை நினைச்சாலே சுகமா இருக்கு! இனிமே சீக்கிரம் எழுந்திரிச்சி காலைக்கு, மதியத்துக்குச் சமைச்சு வைச்சிட்டுப் போகணுங்கிற கஷ்டம் இல்ல. பொறுமையாத் தூங்கி எழுந்திரிச்சிக் குளிச்சிட்டு ராணி மாதிரி போனா, சாப்பாட்டு மேசையில டிபன் ரெடியா இருக்கும். ஃபிளாஸ்க்குல காபி சுடச்சுட இருக்கும். கேரியர்ல மதியச் சாப்பாடு இருக்கும். அதை விட வேற என்ன வேணும் எனக்கு? வீட்டு வேலையும் செஞ்சிட்டு உங்க கிட்ட திட்டு வாங்கிக்கிட்டு இருக்கணுங்கிற கஷ்டம் இனிமே இருக்காது. விடுதலை! விடுதலை! விடுதலை!” “சம்பாதிக்கிறோங்கிற திமிர் உனக்கு!” சொல்லும் போதே நவீன் குரலில் உக்கிரம் குறைந்து உடைந்திருந்தது. சொன்னது போல் உண்மையாகவே போய்விடுவாளோ என்ற பயம் கண்ணில் தெரிந்தது. கணவன் என்கிற அதிகாரம் இனிச் செல்லுபடியாகாது என்ற பயம்….!” “ஆமாம். திமிர் தான். என் சொந்தக் கால்ல நிக்கிற திமிர்! என் செலவுக்கு உங்க கையை எதிர்பார்த்துக் கிடந்தப்ப அடிமை மாதிரி என்னை நடத்துனீங்க. காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் மாங்கு மாங்குன்னு வீட்டு வேலை அத்தனையும் செஞ்சேன். மனசாட்சியே இல்லாம வீட்டுல வெட்டியாத் தானே இருக்கேன்னு கேட்டீங்க. இனிமே வீட்டுல வெட்டியா இல்லாம சமையல் வேலையையும், உங்கம்மா வேலையையும் சேர்த்து நீங்களே செய்ங்க. எனக்குச் சுய கெளரவத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த வேலையை என்னிக்கும் நான் விட மாட்டேன். அதனால என்ன விளைவு ஏற்பட்டாலும், அதைச் சந்திக்க நான் தயாராயிருக்கேன்” என்றேன் தீர்மானமாக. வாழ்வில் முதல் முறையாக என்னை நினைத்து, எனக்குப் பெருமையாக இருந்தது!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.