காந்தி முருகன்
சிறுகதை வரிசை எண்
# 146
சொல்லென்ற பறவை
என்னை அறைக்குள் தாழிட்டுக் கொண்டு அரை நாள் கடந்து விட்டதாக உணர்கிறேன். நான்கு சுவற்றுக்குள் என்னைக் கிடத்தி வெளியுலகைத் தரிசித்து வெகுநேரம் ஆகிவிட்டது. சன்னலியோரம் அத்துமீறி நுழைந்து சுடர்விட்டுக் கொண்டிருந்த சூரிய ஒளிக் கூட மங்கத் தொடங்கி இருளும் சூழ்ந்து கால வேகத்தின் செயல்பாட்டை எனக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது.
அறைக்கதவின் ஓரமாய் சுவரில் சாய்ந்தவளாய் அமர்ந்திருந்திருக்கிறேன். வெகுநேரமாய் இரு கால்களையும் மடக்கியமர்ந்ததில்தொடைப் பகுதியின் சதை இறுக்கிக் கொண்டு தளர்வை எதிர்கொள்ளவில்லை. கால்களை விரித்து நீட்டவும் முடியாமல் கொஞ்சம் தடுமாறிப் போனேன். இந்த வலியானது அடிவயிற்று வரை இழுத்திருந்தது. பாதத்தின் ஓரமாய்க் கதவின் கீழுடுக்கு. வரவேற்பறையில் அப்பா விளக்கைத் தட்டி விட்டார் போலும். ஒளி இருளைத் துரத்தி விட தயாராகிக் கொண்டிருந்தது. நடுகாட்டிலிருந்தது உணர்வைத் தழுவியிருந்த வீட்டில் சின்னச் சின்ன சலசலப்புகள் கேட்கத் துவங்கின.
“ குடுக்கிறீயா னே…நான்தான் மொதல்ல எடுத்தேன். நான்தான் டிவி தொறந்தேன்..குடுத்துடுனே… “
சின்னவளின் பிடிவாதம் அறைக்குள்ளும் தெளிவாகவே கேட்டது. ரிமொட் கொண்ரோலுக்கான சண்டை. வழக்கம் போலவே அப்பா குறுக்கிட்டுத் தீர்த்து விட்டார் என நினைக்கிறேன். கார்டூன் சத்தம் காதில் விழத்தான் செய்தது. மனம் சற்று விலகியிருந்தது.
அன்றைய கனத்த மழை பொழுதில் இடியுடன் கூடி பெய்து ஓய்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஊரே அமைதியைத் தழுயிருந்த நேரத்தில் கண்ணாடி உடைப்படும் சத்தம் அந்த தெருவையே நிலைக்குத்தச் செய்தது. மழைக்காக வீட்டில் ஒதுங்கியவர்களும் கூட வாசற்கதவைத் திறந்து தடுப்புச் சுவரில் எக்கி ஓசை வந்த திசையைப் பார்த்து நின்றனர். நான் மட்டும் கண்ணீர் மல்க வீட்டின் கதவோரம் நின்றிருந்தேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மூத்தவள் கண்களைக் கசக்கியவாறு அறைக் கதவினோரம் வந்து நின்றாள்.
“ படிக்கிறாளாம், தினம் தினம் எதையாவது ஒன்னு தூக்கி வைச்சுக்கிட்டு உட்கார்ந்திட வேண்டியது…கேட்டா படிக்கிறாளாம்… எழுத போறாளாம். படிக்க வேண்டிய காலத்துல கோட்ட விட்டுட்டு இப்ப புள்ள பெத்ததுக்கு அப்புறம் கிழிக்கிறாளாம்.… “
நான் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த கண்ணாடி மேசை சுக்குநூறாய் உடைந்து போனது. வாசிப்புக்காக ஒரு கப் காப்பி மேசையை நிரப்பியிருந்தது. கருந்துவளை நாவலின் மூன்றாவது அத்தியாயத்தில் மூழ்கிக் கிடந்தேன்.
கணவரின் கடுங்கோபத்தில் என்னால் நகர்ந்திடயியலவில்லை. கோபத்தின் உச்சியிலிருந்தவர் சட்டையை மாட்டிக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வெளியே கிளம்பிப் போனார். தரையெங்கும் சிதறிய காப்பி கருந்துவளை நாவலை ஈரமாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மறுகணம் விரைந்து நடந்து நாவலை எடுத்ததில் என் பாதங்களைச் சிதறிய கண்ணாடித் துண்டுகள் பதம் பார்த்திருந்தன.
நானாக விருப்பப்பட்ட ஒன்றை அடைய மனம் அவரிடத்தில் நின்ற போது தடைகள் பல அடுக்கடுக்காக உருமாறின. ஆனாலும், எனக்குள் உணர்வாகிவிட்ட வாசிப்பை எந்த சூழலிலும் என்னை விட்டு அகலவில்லை.
வாசிக்கத் துவங்கியபோது எதை வாசிப்பதென்பதில் தெளிவில்லாமல் இருந்தேன். நாசி லெமாக் மடித்த நாளிதழை, சுவரொட்டியை, ஒருவரது வாட்சப் பதிவை, ஒருவரது கருத்தை, கண்ணுக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்தேன். இது வாசிப்பல்ல என்பதை உணர்த்தும் நாளும் மிக விரைவில் அமைந்தது. எதார்த்தமாக ஏற்பட்ட அவளின் சந்திப்பு. தொடர்வண்டி பயணத்தில் அவள் ஏந்தியிருந்த அந்த நூல்.
தீவிரதத்தின்பால் என் எழுத்து பரவலாகப் பேசப்பட்ட நிலையில் என் மீது திணிக்கப்பட்ட வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் என்னை அவ்வப்போது தட்டுத்தடுமாற வைத்தது.
“அம்மா, உங்களப் பத்தி பேஸ்புக்குல ஏதோ வந்துருக்காம். குமரேசன் சொன்னான். அவங்க அப்பா அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தாராம்…“
மூத்தவன் சொன்ன அந்தக் கணம் மனம் அடுத்தக் கட்ட செயலில் இறங்க தடுமாறி நின்றது. 14 வயது சிறுவன் அவன். தாயைப் பற்றிப் பகிரப்பட்ட தகவல்களைச் சரியென சீர்த்தூக்கிப் பார்க்க வல்லமை பெற்றிருப்பானோ? என் மனத்தில் புழுக்கள் நிறைந்த குட்டையில் நின்றிருப்பதுப் போலவே கால்கள் ஒன்றையொன்றைப் பின்ன ஆரம்பித்தன.
அவனது முகத்தில் ஈயாடவில்லை. என் பதிலுக்காக காத்திருந்தன போல. அவனது பார்வையில் வேண்டுகோள் ஒன்று ஒளிந்து கொண்டு வெளிவர மறுப்பதாக உணர்ந்தேன். அவனது தந்தையின் படத்தை வெகுநேரமாகப் பார்த்தான்.
“அப்பாவோட மால காய்ஞ்சி கிடக்குது. அத மாத்த உங்களுக்கு நேரமில்லையா?”
சற்றும் எதிர்பாராத இந்தக் கேள்வி என் கையில் இருந்த பேனா அதன் இறுக்கத்திலிருந்து சற்று விலகியது. எழுந்து நேராக அவனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். காற்றில் பறந்த என் எழுத்து படிமம் ஒன்று அவன் கால்களில் மிதிப்பட்டதை அவன் கண்டும் காணவில்லை. அவனது பிம்பத்திலிருந்து வெளிக்கொணர நான் அனுபவித்த மனநிலை கொடூரமானது. என்னைப் பற்றிய விமர்சனங்கள் பொய்யென உணர்த்த அவனிடத்தில் கெஞ்சி நிற்கவில்லை. எழுத்து சம்பந்தப்பட்ட என் நடவடிக்கைகள், என் முயற்சிகள் யாவும் அவனது பார்வையிலே நிகழ்த்தினேன்.
நடுசாமத்தில் ஒரு நாள் என் அறையின் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு
“ மொதல்ல கொஞ்சம் ஓய்வெடுங்க…நாளைக்கு கூட எழுதலாம்…”
கனிவான அவனது பேச்சு என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச்சென்றது. எப்போதும் என்னிடத்தில் தோள்களைத் தட்டி விட்டுச் செல்வான். மௌனமும் எப்போதும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். அவனது நடவடிக்கை எனக்குப் புரியாத புதிராகவே கடந்து கொண்டிருந்தது.
தூசியாக முகத்தில் படர்ந்திருந்த அவமானங்களையெல்லாம் தட்டிவிட்டுச் செல்லும் நிலையில் என் முதல் நூல் வெளியீடு பெரும் சுமையாகிப் போனது. தபால்காரன் கொடுத்து விட்டுப் போன வீட்டுக் கடனுக்காக நோட்டீஸ் மேசையில் காற்றில் தள்ளாடிக் கொண்டிருந்தது.
“அம்மா, நாம வேற வீட்டை வாங்கலாம்…”
கடைக்குட்டிக்கு எட்டு வயதாகிறது. அவனது இந்த வார்த்தை நூல் வெளியீட்டுக்கான பணியை மட்டுமே முன்னிறுத்தியது. குறுகிய காலத்தில் அடைந்த வளர்ச்சியானது எனக்குள் நான் விதைத்துக் கொண்ட அயராத உழைப்பே காரணமாயிருந்தது. எழுத்து யாருக்கானது? நான்காம் படிவத்தைக் கூட தாண்டாத எனக்கு அது வாழ்க்கையானது.
புயல் வீசி சென்ற வாழ்க்கைப் பாதையில் மெல்ல மெல்ல எழுத்து வசந்தமானது. என்னையே எனக்கு அடையாளப்படுத்திய என் எழுத்துக்கு உயிர்போடு இருந்தேன். விமர்சனங்கள் என்னை ஆக்கிரமிக்க விடவில்லை. அழுது புலம்பும் மனநிலையிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டே இருந்தேன்.
“ விமர்சனத்தால் அந்த எழுத்தாளர் காணாமல் போய்டாங்கலாம்…பார்த்து…உனக்கும் எதாவது நடக்கப் போகுது…உன் மேல பொறாமை அதிகமாகிக்கிட்டே போகுது…”
ஒவ்வொரு முறையும் என்னை எச்சரிக்கும் சக எழுத்துலக தோழி ஆசிரியை மீனாவின் பேச்சை நான் ஒரு போதும் உள்வாங்கிக் கொள்வதில்லை. விமர்சனங்கள் என்னை ஒரு போதும் அழித்து விடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், இன்று நானும் மற்றப் பெண்கள் போலத்தான் என்பதை எனக்கு நானே உணர்த்திக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாள் பரிசு என வாட்சப்பில் வந்த செய்தியில் உருக்குலைந்து நிற்கிறேன். நானா இது?...என்னையே நான் கிள்ளிப் பார்க்கிறேன். நான்தான்,முடங்கிக் கிடக்கிறேன். ஒரு கணம் பகிரப்பட்டிருந்த அரைகுறை ஆடையுடன்,அரைநிர்வாணமாக உருவகப்படுத்தப்பட்டிருந்த பெண் நான்தான் என நம்பும் நிலைக்கே ஆளாக்கப்பட்டிருந்தேன். எழுத்தாளராக வேண்டாம் என எப்போதும் தடைவிதித்து கொண்டிருந்த கணவனின் முகம் கண்முன் வந்து ஏளமாகச் சிரித்தது. பெண்ணிய எழுத்தாளரென அங்கீகரிக்கப்பட்ட பெண் படைப்பாளி மரணித்து விட்டாளா என என்னை இருட்றைக்குள் தள்ளிக் கொண்டேன். நகர முடியவில்லை. சிந்திக்க முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் என் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையே தெரிகிறது. கண்கள் முடமாகிக் கிடக்கின்றன. பெண் படைப்பாளியாக நான் உருமாற்றம் கண்டதில் என் முயற்சிகளே,என் பிடிவாதங்களே காரணம். “ இந்தப் பிரபஞ்சம் பிடிவாதம் கொண்ட இதயத்திடம் காதல் வயப்படும் “ என்பதில் உறுதியாக நின்று ஜெயித்தவள் நான். என்னை அந்த வாட்சப் செய்தி எப்படி முடக்கியது? முகநூலெங்கும் பரவிக்கிடந்த அந்தப் படம் என்னை நடுநடுங்க வைத்தது.
அறையின் கதவு இருகரங்களால் வேகமாகத் தட்டப்பட்டதில் சிந்தனை தடுமாற்றம் நேர்நிலையானது. ஏதோ ஒரு உருவம் நின்றுக் கொண்டிருப்பதை கதவின் கீழ் தெரிந்தது. அந்த உருவம் பேசவில்லை. ஆனால், வேகமாக இன்னும் கதவைத் தட்டியது. அந்த ஓசை என் மனத்திற்குச் சவாலானது. நிற்காத அந்த ஓசை என்னை எழுந்திருக்கச் செய்தது. கதவைத் திறந்தபோது மூத்தவன் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான். என் கண்கள் அவனைப் பார்க்கத் தடுமாறி மூடிக் கொண்டன. என் கைகளைப் பற்றினான். வேர்த்திருந்த என் உடல் குளிரால் நடுங்கியது. என்னைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான். அம்மாவும் அப்பாவும் என்னைப்பின் தொடர்ந்தனர்.
வாசலில் ஒரு ஆணியும் ,சுத்தியலும், ஒரு பதாகையும் இருந்தது. என் கையை விட்டு சுத்தியலை எடுத்தான் மூத்தவன். மனம் பதறியது. பதாகையை சுவரில் ஆணியடித்து மாட்டி விட்டு என் தோளில் கை வைத்து தாடையைத் தடுவி வீட்டினுள் நுழைந்தான். பதாகையை நோக்கினேன். உள்ளே நுழைந்த அவனது கால்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ அந்தரங்கம் விற்பனைக்கல்ல…”
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்