logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

சேலம் சுபா

சிறுகதை வரிசை எண் # 144


தலைப்பு - அமுதாவின் நியாயங்கள் பால் கொதித்துக் கொண்டிருந்தது ..அதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் வெறிக்க எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. தான் செய்தது சரியா? குற்ற உணர்வில் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. குக்கூ குக்கூ..கடிகாரத்தில் இருந்து வந்த குருவிகளின் அழகிய சப்தம் அமுதாவை நினைவுக்கு திருப்பியது. பாலை மேல் ஆடை நீக்கி டம்ளர்களில் அளவாக ஊற்றி இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு மேலே கமகமத்த டிகாசனைக் கலந்து ஆற்றி டபராவோடு எடுத்து முன்னறைக்கு வந்தாள். “எத்தனை தடவை சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறாள். நீங்கள் என்னடான்னா என்கிட்ட 'வள்'ளுன்னு விழறீங்க..அதான் கொஞ்சம் ஜாஸ்தியாவே அவ கிட்ட சத்தம் போட்டுட்டேன் அவளும் பேசாம போயிட்டா..ஆனாலும் எனக்கு மனசே ஆறமாட்டேங்குது ” பேசிக்கொண்டே தேக்கு டீபாயின் மீது டபராவை வைத்துக் கொண்டே பாஸ்கரைப் பார்த்தாள். பேப்பரில் தலையை நுழைத்து மும்முரமாக மேய்ந்து கொண்டிருந்தவனைப் பார்த்ததும் வந்த எரிச்சலில் நேரே அவன் முன்னே போய் பேப்பரை பிடுங்கினாள்.. “என்னை என்ன பைத்தியம் நெனச்சிங்களா? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்..சம்பந்தமே இல்லாத மாதிரி பேப்பர்ல தலைய நட்டுக்கிட்டு இருக்கீங்க ?.. காப்பி ஆறிடப் போகுது.. எடுத்துக் குடிச்சுட்டு உங்க வேலயப் பாருங்க,, " ஆதங்கமும் இயலாமையும் வார்த்தைகளில் வழிந்தது. “விடேன்...அவதான் இனிமே இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா இல்ல. அப்புறம் ஏன் புலம்பிட்டே இருக்க ?.. காபி சூப்பரா இருக்கு.. " இந்தப் பாராட்டுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.. மனதுக்குள் சிறு புள்ளியாய் மகிழ்ச்சி நொடியில் தோன்றி மறைய மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தாள். “ சொல்ல மாட்டீங்க அவளை விரட்டுறதுக்குள்ள நான் பட்ட பாடு அப்பப்பா ..உங்க கிட்டயும் திட்டு , அவகிட்டேயும் மூஞ்சைக் கொடுத்து சொல்ல முடியல.. எனக்கு எப்படா இந்த பிரச்சனை தீரும்னு இருந்தது இப்பவாவது முடிவு வந்துச்சே.. ஆனா .பாவம் அவ எங்க போனாளோ?” சிறு ஆதங்கத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஒரு வாரத்துக்கு முன் கையில் ஒரு குழந்தை நண்டும் சிண்டுமாக இரண்டு பெரிய குழந்தைகளுடன் ஒருநாள் அவள் வீட்டு காம்பவுண்ட் அருகே பரிதாபமாக நின்று கொண்டிருந்தாள். ஏனோ அவளைப் பார்த்ததுமே மனதில் இரக்கம் பிறந்தது அமுதாவுக்கு. சில நேரங்களில் நம்மையே அறியாமல் சிலரிடம் வசப்படும் மனசு. அதற்கு காரணம் அந்தக் குழந்தைகளாகவும் இருக்கலாம் . "ஏம்மா இங்க வா.." வெளியில போன ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கொண்ட மாதிரி வலியமாய் அவளை கூப்பிட்டாள். உடனே இதற்காகவே காத்திருந்தவள் போல் கண்களில் எதிர்பார்ப்புடன் அவள் ஓட்டமாக ஓடி அருகே வந்தாள். பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அசுத்தமாக இல்லாமல் நேர்த்தியாகத்தான் இருந்தாள் அவள். "யாரு நீ? குழந்தைகளோட இங்க என்ன பண்றே?.. " இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது என்று மனசு எச்சரித்தாலும் துறுதுறுவென இருந்த குழந்தைகளின் சேட்டை அதை சட்டை செய்ய மறுத்தது. கண்களில் மிதந்த கண்ணீரை அடக்கிய படி “அம்மா எம் பேரு செல்லி. என் புருஷன் இங்க நில்லு எடம் பார்த்துட்டு வரேன்னுட்டு போனாரு . இன்னும் வரல..... வீடு வாசல் இல்லாத நாடோடி கூட்டம்மா நாங்க...அவர் வர வரைக்கும் உங்க காம்பவுண்டுக்குள்ளயே தங்க தயவுசெய்து இடம் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும் அவர் வந்ததும் போயிடறோம்மா..” கெஞ்சிய அவள் முகமும் அந்தக் குழந்தைகளின் நிலையும் அமுதாவுக்குள் என்னமோ செய்தது. ஏற்கனவே மழலை பாக்கியம் இல்லாமல் கோவில் குளம், மருத்துவம் என அலைந்து வேதனை பட்டுக்கொண்டிருந்த அமுதாவுக்கு திடீரென அவள் மேல் பாசத்தை பொங்க வைத்தது. . யோசிக்கவே இல்லை..பாஸ்கரிடம் சொல்ல வேண்டும் என்ற நினைவு கூட வரவில்லை...”சரி சரி வா வந்து அந்த அறையில் தங்கிக் கொள்..” என்றாள். செடி கொடிகள் மரங்கள் சூழ இருந்த தோட்டத்தை சரி செய்ய வரும் பணியாளர்கள் தங்கி ஓய்வெடுக்க வீட்டுக்கு வெளிப்புறத்தில் காம்பவுண்ட் ஒட்டி கட்டியிருந்த சிறு அறை அது. முகத்தில் கோடி பிரகாசம் தெரிய “ ரொம்ப நன்றி மா நீங்க நல்லா இருக்கோணும்..” என்று கூறியபடி உள்ளே வந்தாள் செல்லி. அலுவலகத்தில் இருந்த பாஸ்கரிடம் செல்போனில் விஷயத்தை சொன்னாள். சாயந்திரம் திரும்பி வந்த பாஸ்கர் அந்தக் குடும்பத்தை பார்த்தபடியே வீட்டுக்குள் வந்தான். இரண்டு நாள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது . அந்த குழந்தைகளின் குறும்புத்தனங்களும் சப்தங்களும் எல்லை மீற ஆரம்பித்தது. அமுதா எப்போதும் அமைதியை விரும்புபவள். அது மட்டுமின்றி தனிமையில் இருந்தே பழகி விட்டதால் அவளால் இந்த சப்தங்களை தாள முடியவில்லை . அமுதா கோபத்தை அடக்கி பார்த்தாள். பாஸ்ருக்கும் எரிச்சல்தான்..இருந்தாலும் ஆசை மனைவியை மீற முடியவில்லை. செல்லியை அழைத்து நச்சரிக்க ஆரம்பித்தாள். “என்ன இன்னுமா உன் வீட்டுக்காரர் வரல பொய் சொல்றியா என்ன..?’ “ ஐயோ அம்மா என்னன்னு தெரியலம்மா..போன் செஞ்சாலும் கட் ஆகுது .. இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க அவர் வந்ததும் நான் போயிடுறேன்..” கையில் இருந்த பழைய நோக்கியா போனைக் காண்பித்தாள்...செல்லியின் பரிதாபமான குரலும், கவலை தோய்ந்த பீதி முகமும் அமுதாவை பணிய வைத்தது. ஒரு வாரம் ஓடிப் போயிற்று. மீந்து போகும் பலகாரங்களுடன் தேவையான உணவையும் அவர்களுக்கு தந்தாள் அமுதா. அந்தக் குழந்தைகளை பட்டினி போட்டு சாப்பிட முடியவில்லை அமுதாவால். செல்லியும் சும்மாயிராமல் அவளுக்கு தெரிந்த தோட்ட வேலைகளை செய்தாள். குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கும் மனப்பான்மை இப்போது கூடியிருந்தது அமுதாவுக்கும் பாஸ்ருக்கும். . அன்று தான் அந்த சம்பவம் நடந்தது அவளின் மூத்த வாண்டு வீட்டின் உள்ளே நுழைந்து ஷோகேஸில் இருந்த விலைமதிப்பு மிக்க மீரா பொம்மையைப் போட்டு உடைத்து விட்டது. கல்லூரித் தோழி பரிசளித்த மீராவை உயிராக நினைத்திருந்த பாஸ்கரின் கோபம் மீண்டும் அவர்கள் மீது தலைகாட்டியது. “நீதானே அவர்களை இங்க தங்க வெச்சே?” என அமுதாவிடம் எகிற தனக்கும் பாஸ்ருக்கும் இடையே இருந்த காதலில் சிறு நெருடலாக எப்போதும் கண்ணில் படும் அந்த தோழியின் மீரா பொம்மை உடைந்ததில் இனம்புரியாத நிம்மதி நொடியில் தோன்றி மறைந்தது அமுதாவுக்குள். ஆனாலும் பாஸ்கரின் பொம்மைப் பற்று கண்ட அமுதாவின் இயலாமை சினமாக மாறி செல்லியின் மீது திரும்பி விட்டது. அதே வேகத்துடன் அவளை கூப்பிட்டாள். விஷயம் தெரிந்து பதட்டத்துடன் வந்து பிள்ளையைப் பிடித்து கண்டித்த செல்லியிடம் “இந்தப் பாருமா இனிமே என்னால பொறுத்துக்க முடியாது உடனே இடத்தை காலி பண்ணு..” என்றாள். அவளின் கண்கள் கெஞ்சியது இந்த முறை அமுதாவிடம் பலிக்கவில்லை மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு கலங்கிய விழிகளுடன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு நன்றி சொல்லியபடி வெளியேறினாள் செல்லி. என்ன இது? திடீரென வானிலை இப்படி மாறிவிட்டது..பாஸ்கருடன் பேசிவிட்டு அவன் குடித்த காபி டம்ளரை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றாள் அமுதா. "என்னங்க இன்னிக்கு என்ன லஞ்சுக்கு வேணும்...? " செல்லியை வெளியே அனுப்பி விட்ட வருத்தத்திலும் மீரா பொம்மை தந்த ஆற்றாமையிலும் இருந்த மனைவியின் மனநிலையை மாற்ற நினைத்த பாஸ்கர் " அமுதா மறந்துட்டியா? இன்னிக்கு நாம வெளியே போய் சாப்பிட்டுட்டு வரலாம் னு சொன்னேனில்ல..? ".. "என்னங்க செம மழை வரும்னு சொல்றாங்க.. கம்முனு வீட்டிலேயே சூடா பஜ்ஜி போட்டு சாப்பிடலாம்.. இதோ பாருங்க மழை தூறத் துவங்கிடுச்சு.." பெருத்த இடியுடன் மழை பெய்து கொண்டு இருந்தது..சமையல் முடித்து ஊரிலிருந்த அம்மா, மாமியாரிடம் செல்லி குறித்தான விஷயங்களை சொல்லி மனதைத் தேற்றி நேரத்தைக் கடத்தியவள் நான்கு முட்டைகளை அவித்து போண்டாக்களும் வாழைக்காயை சீவி பஜ்ஜிகளையும் போட்டு தட்டத்தில் சுடச்சுட எடுத்து வந்தாள். செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருடன் தானும் பார்க்க அமர்ந்தாள். மழையினால் வெள்ளம் என்றும் ஏழை மக்கள் படும் அவதிகளையும் தெளிவாக படம் பிடித்து காண்பித்துக் கொண்டிருந்தனர் செய்தியாளர்கள். பஜ்ஜியை சுவைத்தாலும் கவனம் முழுவதும் அமுதாவுக்கு செய்திகளில் தான் இருந்தது. குடிசை ஒன்றில் தண்ணீரில் கழுத்தளவு மூழ்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை. மீட்புக் குழுவினர் அழகாக அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய காட்சி பிரேக்கிங் நியூசாக திரும்பத் திரும்பத் திரையில்.. பார்த்துக் கொண்டிருந்த அமுதாவுக்கு “சடார்” என்று செல்லியின் கைக்குழந்தை தான் ஞாபகம் வந்தது. மனதில் பரபரப்பும் இரக்கமும் ஒன்றாக ஏறி பாரமாக “அய்யோ இவ்வளவு மழையில் அவளை வெளியே அனுப்பிவிட்டேனே குழந்தைகளை வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறாளோ என்னமோ தெரியலையே” பதற ஆரம்பித்தாள். பாஸ்கர் மௌனமாக அவளையே பார்த்தான். அமுதாவின் பலம் பலவீனம் இரண்டுமே அவளின் இரக்க குணம் தான் . வேறு யாரும் இப்படி வெளியாட்களை உள்ளே சேர்க்கவும் மாட்டார்கள்.. இப்படி புலம்பவும் மாட்டார்கள்.. பித்துப் பிடித்தவள் போல் வேகமாக ஓடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள் அமுதா. வீட்டு வெளியே உள்ள மரத்தின் அடியில் இருக்கும் போர்வைகளைக் கொண்டு குழந்தைகளை மூடியவாறு கைக்குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள் செல்லி. பார்த்த அமுதாவின் விழிகளில் மழையின் ஈரம். இரண்டு குடைகளை எடுத்துக் கொண்டு. வேகமாக வெளியே வந்தாள்.. அவளைக் கண்டதும் செல்லி அவசரமாக எழுந்தாள். பார்த்து குழந்தை நனையறா பாரு என்று சொல்லி குழந்தையை வாங்கி தன் முந்தானையால் போர்த்தி " செல்லி மழை விட்டதும் இங்கிருந்து போயிடு அதுக்குள்ள உன் புருஷனும் வரானான்னு பார்க்கலாம் உள்ள வந்து தங்கிக்கவா” என்ற படி அவள் கையில் ஒரு குடையைத் தந்தாள் அமுதா . செல்லி ஆச்சரியமாக பார்த்தாள். அமுதா கையில் குழந்தையுடன் அவர்களை பத்திரமாக கெஸ்ட் ஹவுஸ் அறையில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்து பஜ்ஜிகளை எடுத்துச் சென்று அவளிடம் தந்துவிட்டு மனதில் நிம்மதியுடன் வீட்டினுள் நுழைந்தாள். இதையெல்லாம் பார்த்த பாஸ்கர் உன்னைப் பற்றித் தெரியுமே என்கிற ரீதியில் ஒரு மாதிரியாக அமுதாவைப் பார்த்து சிரித்தான். “என்ன அவகிட்ட காலையில அந்த கோபம் காட்டின இப்ப நீயே அவளைக் கூட்டிட்டு வர..” “அது வேற இது வேறங்க உங்களுக்கு புரியாது” பதில் சொல்லியவாறே தலை நிமிர்ந்தாள் அமுதா தாய்மை குணம் கொண்ட மனுஷியாக.. எழுதியவர் சேலம் சுபா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.