கயப்பாக்கம் இரா.இரமேசு
சிறுகதை வரிசை எண்
# 143
கள்ளப்பா
1 அன்ன நாடையாளின் அறிமுகம்
அடர்ந்த தென்னந் தோப்பு. எங்கு முடிகிறது எனத் தெரியாத நீண்ட மலை. அதனருகில்,ஒற்றையடிப்பாதை. வெகு தூரத்தில் வானத்தோடு முட்டிமோதும் மேகக்கூட்டம். ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர்.ஓடிவரும் மழை நீரை தேக்கிவைக்கும் அழகிய ஏரி.வெள்ளைக் கோடுகள் கிழித்தாற்போல் நீண்ட ஏரிக்கரை.எங்கும் பசுமை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளி. மாடு பூட்டி, களப்பை கட்டி, சேடை ஓட்டும் மனிதத் தலைகள். சேற்று வயலில் மண்புழுவை கொத்தித் தின்னும் வெள்ளை நாரைகள்.மதகு வழியே ஓடும் ஏரி நீர். துள்ளிக் குதிக்கும் கெத்திலி மீன்கள்.ஆரவாரமின்றி அமைதி தழும்பும் இயற்கை சூழலோடு கண்ணுக்கு காட்சியளித்தது, கரும்பு சோலை தட்டால் வேய்ந்த குடிசைகள்.விளை நிலத்தின் வரப்புகள் ஒவ்வொன்றும் பெருத்து இருக்கும். சோலைவனமான மலையடிவார குடிசையில் ஆடு, மாடு, கோழிக் குஞ்சுகள் கூவிக் குலாவின.
இதைத்தான் தினமும் காலையும் மாலையும் கண்ணுக்குள் உள்வாங்கி, மனதுக்குள் தேக்கி வைத்து. காலடியால் தடம் பதித்து, நடந்து பழகினான் ரவி.
பழகிப் போனது ஒற்றையடிப் பாதை. மாலை நேரங்களில் புத்தகத்தோடு நடப்பது பிடிக்கும்.ஏரிக்கரையின் மதகின் அருகில் உட்கார்ந்து படிக்க விருப்பம். ஒவ்வொரு நாளும் சூரியன் மறையுமுன் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
ரவிக்கு நேரம் போவதே தெரியாது.
அன்று, ரவிக்கு முன்னால் கோவணத்தோடு, துண்டை தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு, கழனி முழுவதும் நிரம்பிய தண்ணீரில், இளநாற்றை அதன் அடித் தண்டு உடையாமல் இருகைகளால் சீராய்ப் பறிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது எண்ணம் எங்கும் சிதையவில்லை. அவனது கவனம் எதை நோக்கியும் அலையவில்லை. ஒட்டுமொத்த உடலும் உள்ளமும், செயலும் மண்ணில் இருந்து இளநாற்றை பறிப்பதிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.
சீரான வேகத்தில் இருகைகள் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன்,புத்தகத்தை மூடினான். கண்களை அவர் மீது அப்படியே பதிய வைத்தான். அவரின் செயல் ஆச்சரியத்தையும்,மகிழ்ச்சியையும் உருவாக்கியது. மெல்ல எழுந்தான். நாற்றங்கால் நோக்கி நடந்தான். அவரது கவனம் கரையில் நின்று இருக்கும் ரவியை யாரென்று பார்ப்பதில் இல்லை. நிலத்தில் வேரூன்றியிருக்கும் நாற்றை பறிப்பதிலேயே இருந்தது.
இரை தேடி முடித்த பறவைகள் வரிசையாய் கூடுகள் அடைய பறந்தன. மெல்ல சூரியன் மேற்கு திசையில் மறைந்தது. சில்லென காற்று அவன் கண்ணம் தொட்டு ஓடியது. கார்த்திகை மாதம். மழையும் தூரலும், சாரலும் மாறிமாறி மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. எங்கும் பசுமை. வரப்புகளில் இருந்து கழனி காடுகள் வரை வீடுகளிலிருந்து ஏரிகள் வரை,தண்ணீர் தேங்கியிருந்தது.
ரவி பார்த்து நடக்க வேண்டிய அவசியமில்லை. தட்டுத்தடுமாறி விழுந்துவிட்டாலும் காயப்படுத்தும் அளவுக்கு இந்த பூமி மோசமானதும் இல்லை. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சூழலை கண்ணுக்குள் உள்வாங்கி நடந்து கடந்த்தன்.
புத்தகம் அவன் தோழன். இயற்கைக் காட்சி தோழி. இரண்டும் நல்ல நண்பர்கள். பார்த்து ரசித்து ஏரிக்கரையின் ஒற்றையடிப் பாதையில் நடக்க,. அப்பொழுது ”கள்ளப்பா” என்று ஒரு பெண் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது. யாரை கூப்பிடுகிறாள், எங்கிருந்து கூப்பிடுகிறாள், எந்த திசையிலிருந்து வருகிறது என்று தெரிந்து கொள்ள சற்று திரும்பினான்.
திரும்பிப் பார்த்தபோது . அந்த குரல் ஒரு அழகிய தேவதையின் குரல். நாற்றங்காலில் நாற்று பரித்துக்கொண்டிருந்த கோவணம் கட்டிய மனிதனின் பெயர்தான் கள்ளப்பா. அவரைத்தான் கூப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டு. அங்கேயே நின்று விட்டான். இன்னொரு முறை உரக்கக் கூவி அழைத்தாள். திரும்பிப்பார்த்தார். பேசவில்லை.
வேகமாக அவரது இரு கைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு கையை மட்டும் தூக்கி அசைத்தார் ”போ போ”என்பதுபோல். அதை புரிந்து கொண்டவள் “நான் போறேன், நீங்க சீக்கிரமா வாங்க. பொழுது போகுது. மீதிய நாளைக்கு பார்த்துக்கலாம்.” என்று பதில் சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் திரும்பி நடக்கும் அழகே அழகு. விவரிக்க வார்த்தை இல்லை. அவளின் முகம் சரியாகத் தெரியவில்லை. அவள் தொலைவில் நின்று அழைத்தாள். குரல் அருமையானது. அவள் வீட்டை நோக்கி நடந்தாள். அவளின் நடை அன்னத்தின் நடையை விட அழகானது.
அவள் கைகள் வரப்பு ஓரங்களில் விளைந்திருந்த நெற்க்கதிர்களை உரசிக்கொண்டு சென்றன. ஊடுபயிராக வேகமாய் வளர்ந்து காராமணியில் கை வைத்து கிள்ளிக் கொண்டு நடந்தாள். அவள் மகிழ்ச்சியாக இருந்தாள் என்பதை அவள் உடல்மொழி காட்டியது.
மனதுக்குள் ஆசை கூடியது.அவளின் இனிமையான குரலுடைய முகத்தை அருகிலிருந்து பார்க்க முடியவில்லையே என்று ரவிக்கு.
அவள் உரத்து சத்தமிட்டு சொல்லிய வார்த்தை, வயலில் வேலை செய்துகொண்டிருந்த அவருக்கு மட்டும் பொருந்தவில்லை. தனக்கும் பொருந்தியதாக நினைத்துக்கொண்டான். சூரியன் மேற்கே மறைய, தனது பயணத்தை முடித்து வந்த வழியே நடக்க, இருந்தும் அவனுக்குள் ஆசை வளர்ந்தது.
வீடு வந்து சேர்ந்தான்.
அன்று தூக்கம் இல்லை. புரண்டு படுத்தான். வயல் வெளியில் கேட்ட ”கள்ளப்பா” என்ற வார்த்தை காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அந்த நடை, துள்ளி குதித்து ஓடும் அவளின் உடல்மொழி, முகம் தெரியாத உருவம், எப்படி இருக்கும் என்ற ஆசை, ஏன் அதை பார்க்க வேண்டும்? ஏன் அவளோடு பேச வேண்டும்? அவள் யாரோ? நான் யாரோ? ஏன் மனது நம்மை இப்படி வாட்டி வதைக்கிறது? இரவு முழுவதும் என்ன அலைகளுக்கும் அவனுக்குள் போராட்டம் தொடர்ந்தது. படுத்தவுடன் தூங்கிவிடும் ரவி, அன்று எழுந்து எழுந்து உட்கார்ந்து, படுத்து படுத்து பார்க்கிறான் தூக்கமில்லை.
அன்றைய இரவு நீண்ட இரவாகவே இருந்தது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்தான் இருட்டாகவே இருந்தது. விடியலுக்காக மனம் ஏங்கியது. கடிகாரத்தில் மணி இரவு ஒன்றை காட்டியது. .படித்து முடித்த பழைய கதைப் புத்தகத்தை மூடிவைத்து . புதியதாய் ”அம்முச்சி என்ற அழகு தேவதை” யை கையில் எடுத்து புரட்ட.,
வண்ண வண்ண காட்சி அவன் என்னம் போலவே, எழுத்தில் வரைந்த ஓவியமாய் விரிந்துகொண்டே இருந்தது. மெல்ல அவள் திரும்புவதுபோல், கதையின் காவிய நாயகி எழுத்தாளனின் போக்கோடு பயணிக்க, அவன் மனம் தான் பார்த்த காட்சிகளோடு,அவளின் நினைவுகளோடு ஒப்பிட்டது. அவனையுறியாமல் புத்தகம் ஒரு பக்கத்தில், அவன் ஒரு பக்கத்தில் எப்படி பொழுது விடிந்தது என்பது தெரியாமலே போனது. காலை சூரிய ஒளி சொல்லிக்கொள்ளாமல் வேகவேகமாக மேலெழுந்து வந்தது.
2 அவளின் முகம் பார்த்து ஓவியனானேன்.
அவசர அவசரமாய் எழுந்ததும், காலை ஏழு மணி. இன்னும் முப்பது வினாடிக்குள் பேருந்தைப் பிடிக்க வேண்டும், இன்னும் குளிக்கவில்லை. அம்மா கத்தி சத்தம்போட்டாள். துரிதமாக செய்து முடித்து, உடையை சீராக அணிந்து,புத்தகத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் வேகமாய் ”அம்மா போயிட்டு வரேன்” என்று புறப்பட்டான் ரவி.
பேருந்து நிழற்குடையருகில் நின்றான். தான் ஒரு கல்லூரி மாணவன் என்பது அங்கு வந்து நிற்கும் போதுதான் தெரிந்துகொண்டான். கல்லூரி பேருந்து வந்து நின்றது.வழக்கத்திற்குமாறாக அவன் நினைவுகள் வேறெங்கோ திரிந்துகொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. உடலை மட்டும் பேருந்து கல்லூரிக்கு எடுத்துச் சென்றது.
”நானும் ஒரு சராசரி மாணவன் தான்.” ஒரு கல்லூரி மாணவன் எப்படி இருப்பான், அவனுக்குள் என்னென்ன உணர்வுகள் தோன்றும், அவனுக்குள் என்ன ஆசைகள் தோன்றும், அவையெல்லாம் அவனுக்குள்ளும் இருந்தது.
மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். காலம் கடந்துதான் இந்த ஆசை அவனுக்குள் உருவாகியிருக்கிறது. அவனோடு படிக்கும் சக தோழிகளுடன் சரியாகவே பழக்கம் உண்டு. அப்போதெல்லாம் கூட இது மாதிரியான ஆசைகள் தோன்றியதில்லை. ”ஏரிக்கரையில், ஒரு வார்த்தையில், முகம் தெரியாத அந்த உடல்மொழியில், எப்படி நான் கவர்ந்திழுக்கப்பட்டேன்,” மனதுக்குள் புலம்பினான் இந்த மாற்றம் அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
ஒற்றை நோட்டுப் புத்தகத்தை ஆல்காட்டி விரலின் மையப்பகுதியில் வைத்துக்கொண்டு, சுற்றிக் கொண்டே கல்லூரி பேருந்திலிருந்து இறங்க . வாசப்படியில் சக நண்பர்கள் அவனை வரவேற்றார்கள். நேற்றைய ஆரவாரம் இன்று குறைவாகத்தான் இருந்தது.
”என்னடா ஒரு மாதிரியா இருக்க” என்று கேட்க, பதில் சொல்லத் தெரியவில்லை. இப்பொழுது சொல்லவும் முடியாது. உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு சொல்லையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால், அதில் தோல்வி அடைந்துவிட்டால் பெருத்த அவமானம். ஒன்னுமில்லடா “என்று சொல்லிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தான்.
வழக்கம்போல் பேராசிரியர்களின் வார்த்தை ஜாலங்கள், அறிவுரைகள், நண்பர்களின் அரட்டைகள், கேலிக் கூத்துகள், சக தோழிகளின் உரையாடல்கள், கிண்டலோடும் கேலிப் பேச்சுகளோடும் முடிந்தது அன்றைய நாள். மாலை மூன்று மணிக்கு பேருந்தில் ஏறினான். பேருந்து மெதுவாக சென்றுது.மனம் வேகமாக பயணித்தது. வீடு போய் சேர்ந்தவுடன், உடனே ஒற்றையடிப் பாதையில், மலை அடிவாரத்தில், கலங்கள் பகுதியில் உட்காரவேண்டும் என்று அவன் மனம் வேக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
அதிக எதிர்பார்ப்பில் மனம். நடையில் வேகம். சீராய் சீவிய தலைமுடி. கவர்ந்திழுக்கும் ஆடை. இன்று அவனுக்குள் மாற்றம் தெரிய, புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஒற்றையடிப்பாதையில் நடக்க ஆரம்பித்தான். இயல்பாய் இயற்கையை ரசித்துப் பழகியவன், இன்று இயற்கையை உதாசீனப்படுத்தும் சுயநலவாதியாக மாறி விட்டான்.
வானம், பறவை, வளர்ந்து நிற்கும் நெல் பயிர், பச்சை பசேலென்று செடி கொடிகள், மேற்கே மறையும் சூரியன், இவையனைத்தும் மறந்து போனான். அவன் நினைவுகளில் ஏரிக்கரை, ஏரிக்கரையின் மதகு மட்டுமே கண்ணுக்கும் எண்ணத்திற்கும் தெரிந்தது. வேகவேகமாக நடந்து மதகின் அருகில் உட்கார்ந்தான்.
புத்தகம் கையில் இருக்கிறது. படிக்க மனம் இல்லை. அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருதான். அதிக நீர் நிறைந்த கழனி. முடிக்கப்படாத வேலை. கள்ளப்பா நாற்றை இரு கைகளாலும் ஒரே சீரான வேகத்தில் எந்த கவனச்சிதறல் இல்லாமல் பறித்துக் கொண்டிருந்தார். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. சூரியன் மெல்ல மறையத் தொடங்கியது. பறவைகள் கூடுகளை நோக்கி பறக்கத் தொடங்கின. வயல்வெளி பூச்சிகள் தனது சத்தத்தை அதிகரிக்கத் தொடங்கின. மனித நடமாட்டம் குறைந்தது. இருள் வெளிச்சத்தை கவ்வியது.
அவன் எதிர்பார்த்த அந்த குரல், மீண்டும் கேட்க ஏங்கி தவித்த அந்தக் குரல், இன்று எப்படியாவது பார்த்துவிடலாம் என்ற அந்த உடல் மொழிக்கு சொந்தக்காரி இன்று வரவில்லை. பெருத்த ஏமாற்றம். இப்பொழுது வெளியில் மட்டும் இருட்டு. உள்ளுக்குள் ஏமாற்றத்தின் இருட்டு அதிகம் சூழ்ந்துகொண்டது.
ஏதோ ஒரு வலி. அந்த வலியைத் தாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். நேற்று எதிர்பார்ப்போடு தூக்கத்தை இழந்தவன், இன்று ஏமாற்றத்திற்காக மற்றொருநாள் தூக்கத்தையும் இழக்கப்போகிறான். மனசு மாறுபட்ட கோணத்தில் பயணிக்கத் தொடங்கியது.
இடத்தை விட்டு எழுந்து, வலியோடு நடக்க.
சனிக்கிழமை கல்லூரிக்கு செல்லவில்லை. காலதாமதமாக எழுந்தான். என்ன செய்ய வேண்டும் என்று அவ்னுக்குப் புரியவில்லை. அவ்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மனமும் அவனுக்கில்லை. எல்லாமே அதனதன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடப்பதுபோல் தோன்றியது.
வழக்கமாக மாலை நேரங்களில் புத்தகத்தோடு புறப்படுபவன், வழக்கத்துக்கு மாறாக மதியம் ஒற்றையடிப் பாதையில் புத்தகமில்லாமல புறப்பட்டான். ஆங்காங்கே தென்படும் மனிதத் தலைகள், மனித பேச்சுக்கள், ஆடுமாடு மேய்ப்போரின் கூச்சல், அது ஒரு மழைக்காலம், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீர் மனதுக்குள் குளிர்ச்சியைத் தந்தது, அவனுக்கு அந்தக் குளிர்ச்சி நேற்று அடைந்த ஏமாற்றத்தினால் சுடுவதுபோல் இருந்தது. முதல் முறையாய் அவனது பாதை மாற்றியது.
மலையடியோரம், ஒத்தையடிப்பாதை . அவள் வீட்டி அருகில் நடந்தான். பெரியதாய் வசதிகள் இல்லை. வயக்காடும், ஆட்டுப்புழுக்கை நாற்றமும், மாட்டுச் சாணத்தின் சகதியும், கோழிக் குஞ்சுகளின் கீச்சுக் குரலும், சிதைந்த குப்பையும், பிஞ்சிய கூடையும், கழுவாத பாத்திரங்களும்,அழுக்குப் படிந்த ஆடையும் அந்த இடத்தின் அடையாளங்கள்.
ஒவ்வொரு வீடும் இப்படித்தான் இருந்தது. இந்த வாழ்வியல் முறை அவர்களுக்கு பழக்கப்பட்டது. மண்ணை நம்பி வாழ்பவர்கள். மண்ணிலேயே காலத்தை கழிப்பவர்கள். பொழுதுபோக்கு இவர்களுக்கு கிடையாது. உழைப்பு. உழைத்துக் கொண்டே இருப்பதுதான் அவர்களது வாழ்வியல் முறை என்பதை அவர்கள் வாழ்க்கையிலிருந்து புரிந்து கொண்டான்.
அவளை கண்கள் தேடின..மெதுவாக நடந்தான். அப்போதுதான் ”நான் போயிட்டு வரேன்” என்று ஒரு குரல், அதே குரல் இரண்டு நாட்களுக்கு முன்னால் வயக்காட்டில் கேட்ட ”கள்ளப்பா பொழுது போகுது சீக்கிரமா வீட்டுக்கு வா” என்ற குரலோடு ஒத்த குரல்.
உருவம் எங்கே? தெரியவில்லை. எங்க இருக்கிறாள்? அவளின் உருவத்தை கண்டு பிடிப்பதற்காக தேவையில்லாமல் அந்த வீட்டின் அருகில் நின்றான். குரல்தான் கேட்டது. உருவம் தென்படவில்லை ”சரிமா சீக்கிரம் போயிட்டு வா, கள்ளப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போகனும். சீக்கிரம் வந்துரு” என்று சொன்னவளின் குரலும், எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.
தேவையில்லாமல் அங்கே நிற்பது தவறு என தோன்றியதால், கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இப்போது குறிக்கோள் இல்லாமல் ஒரு பயணம். இலக்கு இல்லாமல் ஒரு பயணம். நோக்கமில்லாமல் ஒரு பயணம். வெற்றி இல்லாமல் ஒரு பயணம். அதுவும் இந்த மதிய நேரத்தில் எங்கே முடிப்பது என்று தெரியாமல் ரவி பயணித்துக் கொண்டிருந்தான்.
பயணத்தின் திசையில் மாற்றம். காலம் மாறியது. இடம் மட்டுமே ஒன்று. கொஞ்சம் வெயில். வழக்கமாக உட்காரும் அந்த ஏரிக்கரையில் மதகின் அருகில் உட்கார்ந்தான். நீர் நிறைந்த நாற்றங்காலில் நாற்றுகள் எல்லாம் பறிக்கப்பட்டு வேலையும் முடிந்துவிட்டது.
ஒடிந்து விழுந்த இள நாற்றுகள் மட்டுமே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. ஆதரவற்ற நாற்றங்காள் அவன் கண்ணுக்கு தென்பட்டது. அதை ஒட்டிய வயல்வெளியில் தண்ணீர் விழும் சத்தம் இனிமையாகத்தான் இருந்தது. ரசிப்பதற்கு மனதில்லை. அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வழக்கமான காட்சிதான். மனம் வெறுமையில் தவித்தது. சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான்.
அதே குரல் இப்பொழுது சற்று சத்தமாக ஒலித்தது. ”கள்ளப்பா எங்க இருக்க”? ”கள்ளப்பா” அங்குமிங்கும் சத்தமாக கத்தினால். இங்கும் அங்குமாக அலைந்து பார்த்தாள். எங்கும் இல்லை. அந்த வரப்புகளில் அன்று நடந்த நடை இன்று அவளிடம் இல்லை. அவளின் உடல்மொழியில் பதட்டம் இருந்தது. ஏதோ ஒன்றை இழந்துவிட்டு துடிப்பது,அவளின் நடையும் அவளுடைய பரபரப்பும் காட்டியது.
வரப்புகளில் மலர்ந்து சாய்ந்த நெற்கதிர்களை கில்லி கொண்டு நடந்த அந்த நடையில், தன் பாவாடையை இடது கையால் தூக்கி பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.
ஏரிக்கரையில் மதகின் அருகில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து ” இந்தப் பக்கம் எங்க கள்ளப்பா வந்தாரா”? என்று கேட்டாள். சற்று நிமிர்ந்து பார்த்தேன். அவ்னிடத்தில் பேச்சில்லை. அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுகின்ற மனநிலையில் ரவி இல்லை. ஒட்டுமொத்த நினைவுகளும் அவனுக்குள் அப்படியே நின்று போனதாக, ஒரு அமைதி.
கருத்த முகம். அறியாமையின் அமைவிடம். நல்ல உயரம். சிவீ முடிக்காத தலை மயிரை அள்ளி எடுத்து கொண்டையிட்ட அழகு. பாவாடைக்கு கச்சிதமான மேலாடை. சின்னதாய் இரு புருவத்துக்கிடையே சிகப்பு நிறத்தில் ஒரு பொட்டு. அவளை ரவி பதட்டத்தோடு தான் பார்த்தான். மீண்டும் அதே கேள்வியை அவனிடம் கேட்டாள் ”இங்கே எங்க கள்ளப்பா வந்தாரா”?என்று.
”கழனியிலே நாத்து பறிச்சிட்டு இருந்தாரு, அவர பார்த்தீங்களா என்றாள்?”
“இல்லையே”, யாருமே இங்கு வரலையே”.ன்னு ரவி சொல்ல.
”இங்கதான் வேலை செய்திட்டு இருந்தாரு. எங்கேயும் இல்லை” என்றாள். சொல்லிவிட்டு அவள் வேறு திசையில் நடக்க ஆரம்பித்தாள். இப்போது அவனுக்கு அங்கு உட்கார பிடிக்கவில்லை. அங்கிருந்து எழுந்தான். புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அவ்னும் வேறொரு வரப்பில் நடக்க ஆரம்பித்தான்,
வேறு எங்கேயாவது அவர் இருக்கிறாரா என்று பார்க்க சற்று தூரம் நடந்து சென்றான் ரவி. திடீரென ஒரு அழுகுரல் சத்தம்”கள்ளப்பா” பதறினாள். துடித்தாள். பாவாடையை ஒரு கையால் எடுத்து இடுப்பில் சொருகினாள். வேகவேகமா மதகின் கீழே இறங்கினாள்.
ரவி ஓடிப் பார்த்தான். கால்வாயிலிருந்து அழுதுகொண்டே கள்ளப்பாவை கரைக்கு இழுத்துவந்து உட்கார வைத்தாள். அவரால் உட்கார முடியவில்லை. கைகால்கள் எல்லாம் விரைத்திருந்தது. ரவியும் அவசர அவசரமாக கீழே இறங்க. அவள் தன்னுடைய இரு முட்டிக்கு மத்தியில் அவருடைய தலையை சாய்த்து வைத்தாள்.
ரவி அவரின் ஒரு கையைப் பிடித்து தேய்க்க ஆரம்பித்தான். அவ்வளவுதான் ”அழாதீங்க” என்றான் ”கொஞ்சம் இருங்க” என்று சொல்லிவிட்டு அவரை ”நீங்க தலையில பிடிங்க, நான் கால பிடிச்சுக்கிறன்”ன்னு சொல்லிவிட்டு,
அவளின் முகம் பார்த்து ”கொஞ்ச தூரம் மேலே தூக்கிகிட்டு போயிடலாம்” என்று சொன்னான். இருவரும் அவரைத் தூக்கிக் கொண்டு கவனமாக கரைக்கு மேலே சென்றனர்.
அதற்குள் வீட்டிலிருந்த எல்லம்மாவின் அம்மாவும் ஓடி வந்துவிட்டாள். ”என்ன ஆச்சி, சொன்னா கேட்கமாட்டார் இந்த மனுஷன். குடிக்காதே குடிக்காதேன்னு சொன்னா கேக்ககுறதில்ல. கொஞ்சம் அசந்தா போதும், வேலைக்கு வரேன்னு சொல்லிட்டு எங்கேயாவது குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறது ”அவள் புலம்ப ஆரம்பித்தாள்.
”ஒன்னுமில்ல பயப்படாதீங்க” ஆறுதல் கூறினான் ரவி.
கை கால்களை நன்றாக தேய்த்து விட்டு. முகம், உடல் எல்லாவற்றையும் துடைத்து விட்டு. ரவி மடியின் மீது அவர் தலையை சாய வைத்து, அவன் வைத்திருந்த புத்தகத்தால் விசிறி விட்டான். இருவரும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன சொல்வதென்று புரியாமல் கண் கலங்கினார்கள்.
”கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, தாகமாக இருக்கும். தண்ணி குடிச்சாருன்னா கண்விழிப்பாரு” என ரவி சொல்ல.
அவள் வேகவேகமாக மதகுக்கு கீழே தண்ணீர் எடுத்துவர இறங்கினாள். இருகை குவித்து தண்ணீர் அள்ளிக் கொண்டு மேலே வந்தாள். கையின் விரல்களின் ஓட்டை வழியே தண்ணீர் வழிந்தோடியது. மிச்ச தண்ணீரை கள்ளப்பாவின் வாயில் திணித்தாள். மெல்ல அவர் வாய் அசைத்தார். கன்னத்தில் தட்டினான். கண்விழித்தார். இப்பொழுது அவர்களுக்கு நிம்மதி வந்தது.
”உடனே எழுந்து நடக்க முடியாதுங்க. நீங்க போங்க, நான் தோல்ல தூக்கிட்டு வரேன்.” என்றான் ரவி.
”கணமா இருப்பாருப்பா ,உன்னால ஒண்டியா முடியாது, நானும் ஒத்தாச பண்றேன்னு” வயாசான பெண்மணி சொல்ல
இருவரும் ஒரு பக்கமாக புரட்டி, எழுப்பி நிற்க வைத்து. கள்ளப்பாவை லாவகமாக தோளில் சுமந்து கொண்டு மெல்ல நடந்தான் . அவர்களிருவரும் பின்பக்கமாக பிடித்துக்கொண்டு பின்தொடர்ந்து வந்தார்கள்.
குடிசைக்கு வந்து கயிற்று கட்டிலில் படுக்க வைத்தான்..
” நீ இல்லன்னா அங்கிருந்து இவர கொண்டு வந்திருக்க முடியாதுப்பா “என்றாள்
”இதுல என்னங்க இருக்கு. இது சின்ன ஒத்தாச”
“இதகூட யாருப்பா செய்வாங்க “ என்றவள், ”எல்லம்மா, தம்பிக்கும் தண்ணி கொண்டுவந்து கொடு ‘ என்றாள்.
“எல்லம்மாள் “ ன்னு அவ அம்மா கூப்பிட்டதும்,மெல்ல ரவி திரும்பி பார்க்க,
அவள் அவசர அவசரமாய் உள்ளே நுழைந்தாள்.
ரவியின் பார்வையில் பெயரை தெரிந்துகொண்ட மகிழ்ச்சியே இருந்தது.
உள்ளிருந்து வெளியே, ஒரு குவளையில் தண்ணீரோடு அவன் முகம் பார்த்து நீட்டினாள்.” இந்தாங்க” அவளிடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
அவள் முகம் பார்த்து, அவளின் அழகை கண்ணுக்குள் வாங்கி மனதுக்குள் செலுத்தும் நேரம் இதுயில்லை என உணர்ந்து, அந்தப் பொட்டு, அவளின் புருவம், அந்த கொண்டை, அவள் இருக்கும் இந்த நிலையில் அவள் ஒட்டு மொத்த அழகையும் ரசிப்பதற்கு ரவியின் மனது இடம் தரவில்லை. தலையை கீழே குனிந்து வாங்கிக்கொண்டு, அண்ணாந்து குடித்துவிட்டு, பாத்திரத்தை கீழே வைத்தான்.
”கவனமா பார்த்துக்குங்க, பிறகு வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
எல்லம்மாவின் அம்மா ”இதே மாதிரிதான் அடிக்கடி காணாமல் போய்விடுவார், பேச மாட்டார், நம்ம என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். தினமும் குடிகிக்றாறு, மனசுல உள்ளது என்னென்னு சொல்லிட்டா கூட காயத்துக்கு மருந்து போடலாம். என்ன காயமுன்னு தெரியலையே, எங்களால மருந்து கொடுக்க முடியல.” புலம்பித் தள்ளிய அந்த அம்மாவின் வார்த்தையிலிருந்து அவருக்குள் ஏதோ ஒரு மறக்க முடியாத சோகம் உள்ளுக்குள் வாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டான் ரவி.
”போயிட்டு வரேங்க” ன்னு, சற்று திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் ஒரு கலை. அந்த கலையான முகத்தில் மெல்லிய சிரிப்பு. இப்போது அவனது மனதுக்குள் கவலை மறந்து, பாரம் குறைந்தது, அழுத்தம் நீங்கியது போல் இருந்தது. கையில் புத்தகத்தை எடுத்து, வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்து சுருட்டிக்கொண்டு ஒத்தையடிப் பாதையில் கம்பீரமாய் நடந்தான் ரவி.
வீடு போய்ச் சேரவும், பொழுது சாயும், புகைச்சல் மூட்டத்தின் நடுவே சமைத்துக்கொண்டிருந்தாள் அம்மா.
ரவியின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போலவே இருந்தது. ஒன்றும் புரியவில்லை. வீட்டிலிருந்து தெருவுக்கும். தெருவிலிருந்து உள்ளேயும். உள்ளிருந்து தோட்டத்துக்குப் சென்றான். தோட்டத்திலிருந்து எங்கு செல்வதென தெரியாமல் நின்றான். எங்கு சென்றாலும் மனது அவனுக்கு கட்டுப்பட மறுத்தது.
முதல் நாள் அவளின் முகம் பார்க்க முடியவில்லையே என்று தூக்கம் இழந்தவன். இரண்டாம் நாள் அவளைப் பார்க்க முடியவில்லையே என்று அத்தனையும் இழந்தான். இன்று ஒட்டுமொத்த முகத்தையும் பார்த்த அழகில், இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்று அவன் மனது கேள்வியால் துளைத்தெடுது கண்விழித்தே இறவை கழித்தான்.
படுக்கும் இடத்தின் பக்கத்தில், நோட்டுப் புத்தகத்தோடு பேனாவையும் வைத்துக் கொண்டான். அவனுடைய கற்பனைக் குதிரை சிறகடித்து வேகமாக ஓடத்தொடங்கியது. எதையெதையோ எழுதினான். மனம் போன போக்கில் கிறுக்கினான். அவள் புருவத்தையும், இரு புருவத்துக்கு மத்தியில் உள்ள சின்னச் சிகப்பு பொட்டையும், அவள் இடது கையால் சீரற்ற ஆடையை சீர்படுத்த, வாரியெடுத்து இடுப்புக்குள் சொருகுவதை கவிதையாக்கி, அல்லி முடித்த கூந்தலை அழகான ஓவியம் ஆக்கினான். எல்லாவற்றையும் ஒரு அழகான நோட்டுப் புத்தகத்தில் பாதுகாத்து வைத்தான்.
3 கள்ளப்பா’ன்னா ?
மறுநாள்
வேலை நிமித்தமாக பக்கத்திலுள்ள ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக தயார்படுத்திக் கொண்டு, பேருந்து ஏறும் இடத்திற்கு வந்து நின்றான் ரவி, ஒரே ஒரு பேருந்துதான். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் வரும். அவனும் காத்திருக்க. பேருந்து வந்தது. ஏறுவதற்கு முன்னால், பத்து பதினைந்து பேர் வரிசையாக பெண்களும் ஆண்களும் கைநிறைய மூட்டை முடிச்சுகளோடு இறங்கினார்கள்.ரவியும் அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து. கடைசியாக வண்டியில் ஏறுவதற்கு முன்னால்,
பெரியவர் கேட்டார். ”தம்பி இங்கே கள்ளப்பா வீடு எங்க இருக்கு’? என்றார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்து கொண்டுதான் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டு.
”இந்தப் பக்கமா போங்க. கழனிகாடு தெரியும். ஒத்தையடிப் பாதை வரும். ஒத்தையடி பாதையிலே போங்க, ஏரிக்கரை வரும். ஏரிக்கரைக்கு முன்னாடிதான் கள்ளப்பா வீடு” என்றான்
”சரிப்பா தம்பி ”என்று சொல்லிவிட்டு, பெரியவரை பின்தொடர்ந்து அத்தனைபேரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். வண்டி ஏறினான். புறப்பட்டது.
மனதில் கேள்வி அவனுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. ”அவரை ஏன் எல்லாருமே கள்ளப்பான்னு கூப்பிடுறாங்க ? கள்ளப்பான்னா என்ன? இதுவரையும் இதுமாதிரி பேரை கூப்பிட்டு கேட்டதில்லையே. என்று ரவி மந்துக்குள்ளே கேட்டுக்கொண்டேன். யார்கிட்டயாவது இது பத்தி கேட்டு தெரிஞ்சுக்கனுமுன்னு மனசு சொல்லியது. பேருந்து வேகமாக முன்னோக்கி நகர்ந்து. அவன் மனம் அவளை பற்றிய சிந்தனையிலும், கள்ளப்பாவின் உடல் நலத்தைப் பற்றியும், அவருக்கு ஏன் இப்படிப்பட்ட பெயர் வந்தது,என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவளாக இருந்தது.
ஒற்றையடிப் பாதையே வந்தவர்கள் கள்ளப்பாவின் வீட்டில் நுழைந்தார்கள். ஓரளவுக்கு எழுந்து உட்காரும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது. உறவுகளை எல்லாம் பார்த்தவுடன், அவர் உற்சாகம் அடைந்தார். கையெழுத்து கூப்பிட்டு சைகையால் உட்காருங்கள் என்று சொன்னார்.
வந்தவர்கள் எல்லோரும் அவருடைய உடல்நிலை பற்றி விசாரிக்கத் தொடங்கினர். மூட்டை முடிச்சுகளோடு வந்த பெரியவர்கள் பையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து தட்டில் வைத்தார்கள். கூட்டத்தில் இருந்த பெரியவர் தட்டில் உள்ள எல்லாப் பழங்களையும் வெற்றிலைப்பாக்குடன் கள்ளப்பாவிடம் கொடுத்தார்.
”பொண்ணுகேக்க வந்திருக்கோம். உங்களுக்கு சம்மதம்னா எங்களுக்கும் சம்மதம். நீங்க தேதிய சொன்னீங்கன்னா சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாம்”. என்றார்.
முத்தம்மாள் தண்ணீர் கொடுத்தாள். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தவர்கள், கொஞ்ச நேரம் கழித்து ”எல்லம்மாவ வரச்சொல்லுங்கள்” என்றார்.
எல்லம்மாவுக்கு இது புதியது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் முன்னால் நிற்க சொல்லும்போது அவளாள் நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாதுதான். வந்திருந்த அனைவரும் உள்ளிருந்து வெளியே வந்த எல்லம்மாவை பார்த்ததும்
”மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா, கலையா எங்க ஊரு மாரியம்மன் சிலை மாதிரி அழகா இருக்கா.” என்று ஒருத்தி சொன்னவுடன்,
அவள் முகத்தில் சின்னதாய் வெட்கம், மெல்லிய நூலிழை போன்ற ஒரு சிரிப்புடன் அவள் உள்ளே சென்றாள்.
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் எதுவும் பேச முடியாது. முத்தம்மாள் மட்டுமே பதில் சொன்னாள். ”அவரால பேச முடியாது. நான் எடுக்கிற முடிவுதான், நீங்க எந்த தேதியில வச்சாலும், அந்த தேதியில நாம முடிச்சிடலாம்.” என்று உறுதிமொழி கொடுத்தால் முத்தம்மாள்.
”அப்ப நாங்க கெளம்புரம்” என்று எல்லோரும் சம்பிரதாயத்திற்கு தண்ணீரோடு, உடனடியாக தயார் செய்து வைத்திருந்த பாலை குடித்துவிட்டு புறப்பட்டார்கள். புறப்படும்போது எல்லோர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி,
ரவி வேலை முடிந்தது. திரும்பி விட்டான். பேருந்திலிருந்து கீழே இறங்கியதும், அவன் பார்த்த அதே கூட்டம் ஊருக்கே புறப்பட தயாரானது. வந்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவன் முகத்திலும் ஒரு ஆனந்தம் இருந்தது. அப்போதுதான் புரிந்து அவன் கொண்டேன். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை. அவனுக்குள் இருந்த பாரம் ஒட்டுமொத்தமாய் நீங்கியது.
புதியதாய் கவலை தொற்றிக்கொண்டது. அவளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவளுக்கு அருகில் ,அவளுக்கு எதிரில் ஒருவரை ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில், பார்வையில் மட்டுமே மிதமான சூட்டோடு இருக்க வேண்டும் என்று அவன் மனது சொல்லியது.
ரவி வீட்டை நோக்கி நடந்தான். மாலை நான்கு மணி. வழக்கமான நடை பயண நேரம். கை கால் கழுவி, தலை வாரி. நெற்றியில் சிறியதாக சந்தனத்தால் பொட்டு வைத்து. சரியான ஆடை உடுத்தி. மற்ற நாட்களை விட மனம், உடை, நடை ,எண்ணம், சிந்தனை அத்தனையும் வேறு படுத்திக் கொண்டு. அதே புத்தகம். ஒற்றையடிப்பாதை. ஏரிக்கரை மதகு. அங்கு போய் அமர்ந்து கொண்டான். இப்போது அவள் வருவாளா என்று ஏக்கத்தோடு பார்த்தான்.
காரணமே இல்லாமல் எப்படி அவள் இங்கு வருவாள் என்ற கேள்வியும் அவனுக்குள் இருந்தது. அவளின் கள்ளப்பா உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும்போது, நடவுக்காக நாற்றங்கால் தயாராக இருக்கும்போது, மாலை நேரத்தில் அவளுக்கு இங்கு என்ன வேலை என்று நினைத்துக் கொண்டான்.
அத்தனையும் பொய்யானது. ஏதோ ஒரு காரணத்தை தானாகவே உருவாக்கிக் கொண்டு, சின்ன வரப்பில் கருத்த முக அழகி, அன்ன நடையில் நடந்து வந்தாள். அவன் பார்த்தும் பார்க்காமல் இருந்தான். அவ்னுக்கு நேர் எதிரில்,
கரகரத்த குரலில், என்னை பார் என்று சொல்வது போல்,இருமினாள். மெல்ல தலை தூக்கி பார்த்தான். அதே நேரத்தில் அவளும் அவனை நேர்பட பார்த்தாள்.
”கள்ளப்பா எப்படி இருக்காரு” என்று கேட்க.
”நல்லா இருக்கார்”என்றாள்.
“அவரு ஏன் பேசமாட்டிங்கிறாரு” ந்னு ரவி கேட்க்க
”எனக்கு எதும் தெரியாது. எங்க அம்மாவுக்குதான் தெரியும். ”ன்னு சட்டென பதில் சொல்ல
”எனக்கு ஒரே ஒரு சந்தேகம், அவர ஏன் கள்ளப்பான்னு கூப்பிடறாங்க” என்றான்
”நான்தான் சொன்னேன்ல, எனக்கு எதுவும் தெரியாது. எங்க அம்மாதான் கூப்பிட சொன்னாங்க. அதனால, அவரை சின்ன வயசுல இருந்து கள்ளப்பான்னுதான் கூப்பிடுவேன். என்னன்னு எங்க அப்பாவுக்கும், எங்க அம்மாவுக்கும் தான் தெரியும்,” என்றாள்.
”நேத்து உங்க வீட்டுக்கு நிறைய சொந்தக்காரங்க வந்தாங்க. என்னை வழி கேட்டாங்க. நாந்தான் வழிகாட்டினேன்” என்று முகமலர்ச்சியோடு சொன்னான்.
”ஆமாம், வந்தாங்க”.
”என்ன சொன்னாங்க?”.
”எனக்கு எதுவும் தெரியாது. எங்க அம்மாவுக்குதான் தெரியும்.” என்று மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை, அவள் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதிலை சொன்னாள்.
சட்டென்று கீழே இறங்கினான். சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. அவளும் அதே இடத்தில் அங்கேயே நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல அவளை நோக்கி நடந்தான். அவள் எதிர் பார்த்திருக்கமாட்டாள் இப்படியெல்லாம் நடக்குமென்று,
ரவி பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த ஒரு சாமந்திப்பூவை கையில் எடுத்து ”இந்தா, இத தலையில வைச்சுக்கோ ,உனக்கு அழகா இருக்கும்.” என்றான். அவள் எதுவும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டாள்.
”மஞ்சள் சாமந்திப் பூ, கருத்த உன் முடிக்கு ரொம்ப அழகா இருக்கும்”. என்றான்.
அவளின் கலையான முகம் வெட்கத்தால் மலர்ந்தது.
மௌனம் முகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலிலும் பரவத்தொடங்கியது.
அவள் செயலிழந்தாள்.
ரவி சிந்தனையை இழந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மௌனம் நீடித்தது. பேச்சில்லை.
சட்டென்று கையில் வைத்திருந்த மஞ்சள் சாமந்திப் பூவைத் தலையில் வைத்துக்கொண்டு, வேகமாக நடந்தாள்.
ரவியின் மனதுக்குள் ஆயிரம் தும்பிகள் ஒருசேர பறந்தன.
மெல்ல சூரியன் மேற்கே மறைந்தது.
இருள் வெளிச்சத்தை மறைத்தது.
மனதுக்குள் பலநூறு சூரியன் வெளிச்சம் பாய்ச்சுவதுபோல் இருந்தது. பொழுது சாயும் நேரத்தில், ஒற்றையடிப்பாதையில் இடதுகையின் ஆள்காட்டி விரலின் நுனியில் புத்தகத்தை வைத்து சுழட்டிக்கொண்டே நடந்தான் ரவி.
4 காலமும், எல்லம்மாவும்.
கல்லூரி வாழ்க்கையின் கடைசி வருடம். இதற்குப் பிறகும் மேற்படிப்புக்காக நம்மை அனுமதிக்க மாட்டார்கள். நல்ல வேலையைத் தேட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை தேட முயற்சித்தான் ரவி.
“ டேய் நேத்து எங்கேயோ வெளிய போய் இருந்தியே என்ன ஆச்சு”? என்றாள் அம்மா.
“ பார்க்கலாம்னு சொன்னாங்க”
”எப்பன்னு கேட்டியா”?
நீ முடிப்பா, முடிச்சிட்டு உடனே வந்து பாருன்னு சொன்னாங்க.” என அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு, கல்லூரிக்கு புறப்பட்டான்.
காலம் வேகமாக ஓடியது.
ரவியின் கடைசி பருவத்தேர்வு முடிந்தது.
பருவத்தேர்வு முடிந்த அடுத்த நிமிடமே, தீவிரமாக வேலை தேட ஆரம்பித்தான்.
வீணாக காலத்தை கழிக் விரும்பவில்லை.அதே நேரத்தில் இங்கே இல்லாமல் வேறு எங்கோ ஓர் இடத்தில் இருந்து கொண்டு அவளை மறந்திருக்கவும் அவனால் முடியாது. ஒரே குழப்பத்தில் ரவியின் மனது.
குளிராய் மார்கழி, விழாவில் தை, அதிக உடல் உழைப்பில் மாசி,விளைந்ததை காசாக்கிய பங்குனி, இப்படி மாதங்கள் கழிந்தன.
ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக அவள் வீட்டுக்கருகில் சென்ற ரவியை. ”வாப்பா தம்பி, உட்காரு. நீங்க மட்டும் அந்த நேரத்தில் இல்லன்னா, அவர காப்பாத்திருக்க முடியாது. யார் செய்த புண்ணியமோ,” என்று அவளின் அன்பை வார்த்தையாக கொட்டிதீர்த்தாள் முத்தம்மாள்.
இதுதான் சரியான தருணம் என அவனுக்குள் இருக்கும் சந்தேகத்தை கேள்வியாக கேட்டுவிடலாம் என நினைத்து. கேட்பதற்கும் முன்னால், அமைதியாக இருந்தான்.
”எங்க கள்ளப்பா என்றான்.
“இப்பதான்பா நடக்க ஆரம்பிச்சிருக்காரு. கழனி பக்கமா போய் இருக்காரு.” என்று சொன்னவளிடம்,
சிரித்தமுகத்தோடு ”அவரை ஏன் கள்ளப்பான்னு கூப்பிடறீங்க? “ ன்னு ரவி கேட்டவுடன்,
முத்தம்மாள் அமைதியானாள். முகம் மாறியது. கண்கள் குளமானது. பேச்சு தடுமாறியது. இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்து கண்ணீரைத் துடைத்து ரவியோடு பேச ஆரம்பித்தாள்.
”நான் அவரோட ஒண்ணுவிட்ட தாய் மாமன் பொண்ணு. எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். எங்க அப்பாமேல அவருக்கு ரொம்ப உசுரு. எங்க அப்பாவுக்கும் கள்ளப்பாவுக்குதான் என்னை கொடுக்கணும்னு ஆசை. ஆனா எங்க அம்மா முடிவ மாத்திட்டாங்க. அவங்க சொந்தத் தம்பிக்கு என்னை கட்டி வச்சாங்க. தினக்கூலி. குடிகாரன். எல்லம்மா வைத்துல ஒன்பது மாசம் இருக்கும் போது, நிறைய குடி குடிச்சு, தொண்டவத்தி இறந்துகிடந்தான், ஒரே பொண்ணோட வாழ்க்கை இப்படி போச்சேன்னு மனசு ஒடிஞ்சு போயிட்டாங்க. அடுத்த அஞ்சு வருஷத்துல, அவங்க ரெண்டுபேருமே போய் சேர்ந்துட்டாங்க. அக்கம்-பக்கம் ஆதரவில்லாம, சொந்த பந்தம் உறவு இல்லாம, ஒத்தையா என் மகளுடன் நான் இருந்த நேரத்தில, எங்களைப் பாதுகாத்து, வாழ்க்க கொடுத்தது இந்த மனுஷன்தான். என்னையும் என் மகளையும் அவர் சொந்த வீட்டுக்கு கூட்டிவந்து,வாழ்க்க கொடுத்தாரு. வந்த இடத்தில வரவங்க போறவங்க எல்லாம் இது யாரு, யாருன்னு கேட்பாங்க, அவரால பதில் சொல்ல முடியாது”
முத்தம்மாள் சொல்ல சொல்ல…
ரவி அமைதியாக உட்கார்ந்திருக்க
”ஒரு கட்டத்த மீறி என் மகளுக்கு நான்தான் சொல்லிக்கொடுத்தேன்” கண்ணீரோடு பேசிக்கொண்டிருக்கும்போது எல்லம்மாள் வந்ததைப் பார்த்த முத்தம்மாள் புடவையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அமைதியானாள்.
எல்லம்மாள் படபடப்பாக இருந்தாள். என்னை பார்த்தவுடன் அவளுக்குள் படபடப்பு குறைந்தது. பொறுமையாக அம்மாவிடம் சொன்னாள்
”அம்மா கள்ளப்பா அதே இடத்தில உட்கார்ந்து இருக்கிறார். ஆனா குடிக்கல. அவரால் நடக்க முடியல.
” வாங்க போயிட்டுவரலாம்” என்று ரவியும் கிளம்பினான்.
”வேண்டாம் தம்பி, நீங்க போங்க, அவரை நாங்க அழைச்சிட்டு வரோம்” என்று சொல்லிவிட்டு, அவளும், அவள் அம்மாவும் கள்ளப்பா இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள்.
பொழுது சாய்ந்தது. ரவி பழைய மனிதனாக இல்லை. புதிய மனிதனாக அவதாரம் எடுத்தான். அவனுக்குள் அச்சமும் பயமும் குழப்பமும் எதுவுமில்லை. ஒவ்வொன்றையும் சரியாக புரிந்து அழகாய் ஒவ்வொரு நிலையிலும் அடுத்த படி எடுத்து வைக்கின்ற தெளிவான சிந்தனை அவனுக்குள் இருந்தது. அவர்கள் ரவியை நம்புகிறார்கள். ரவி அங்கு பழகுவதற்கு சரியான சூழ்நிலை இருக்கிறது. இனி நாம் எல்லையை மீறக்கூடாது என முடிவெடுத்து நம்பிக்கையோடு அங்கிருந்து புறப்பட்டு அவன் வீடு வந்து சேர்ந்தான்.
காலம் ஓடியது
ரவியின் கைக்கு ஒரு கடிதம் கிடைத்தது
படித்து முடித்த வெற்றியடைந்த பிறகு, வெட்டியாக இருப்பதைவிட ,கிடைத்த வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மூட்டை கட்டிக்கொண்டு சென்னை பக்கம் சென்றான். அவளையும் மனதிற்குள் சுமந்துகொண்டு.
அங்கு இருக்கின்ற சூழலுக்குத் தகுந்தார்போல் எல்லாவற்றையும் அனுசரித்து வாழப் பழகிக் கொண்டான். வேலை செய்யும் இடத்தில் தங்க இடமும்,சாப்பாடும் கிடைக்க, எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு. நாட்கள் போனதே தெரியவில்லை. தொடர்ச்சியான வேலையில் கடித போக்குவரத்து மட்டுமே அவனுக்கும் வீட்டிற்கும் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை மணியார்டர் செய்துவிடுவான். நல்ல நாட்களில் இங்கு வருவதற்கு விருப்பம் இல்லாமல் போனது. ஏன் இந்த மனமாற்றம் ? தெரியவில்லை. ஆனால் அவனுக்குள் நம்பிக்கை இருந்தது. அவள் காத்துக் கொண்டிருப்பாள் என்று.
ஒரு நாள்.
அவனுக்குள் இருந்த ஏக்கம், தவிப்பு, அவளைப் பற்றிய சிந்தனை, அவள் முகம் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அதிகமானதால், திடீரென புறப்பட்டான். இங்கிருந்து வேலை பார்த்த ஆறு வருடங்களாக அவனுக்கும் அவன் கிராமத்திற்கும் இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது .ஆறு வருடத்தில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதெல்லாம் ரவிக்கு தெரியாது. எதிர்பார்ப்போடு வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவு தூக்கம் இல்லை. ஏனென்றால் மறுநாள் அந்த ஒற்றையடிப்பாதை, மலையடிவாரம், ஏரிக்கரை வயல்வெளி இவற்றையெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும். அதோடு அவளையும் பார்க்க வேண்டும் என்றும் மனசு துடித்தது.
கொஞ்சம் முன்னதாகவே வீட்டிலிருந்து ஒற்றையடிப் பாதையில் ஏரிக் கரையை நோக்கி நடந்தான். எல்லாமே மாறி இருந்தது, பசுமையான மலை வசந்தகாலத்திற்கு பிறகு இலை உதிர்ந்து மொட்டையாய் காட்சியளித்தது. அறுவடைக்குத் தயாரான நிலையில் நிலங்கள். ஒரு சில இடங்களில் மூன்றாம் போகம் பயிர் வேலை மும்முரமாக நடைபெற்றது. ஆள் நடமாட்டம் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மனித நடமாட்டம். பார்த்து ரசித்துக் கொண்டே வந்தான். மலை அடிவாரத்தில்,எல்லம்மாளின் வீட்டில் ஆரவாரமும், சத்தமும் எதுவுமில்லை. மாடுகள் இல்லை. ஆடு மாடுகளின் சாணத்தின் நாற்றமும் இல்லை. பொருட்கள் சிதறிக் கேட்பாரற்றுக் கிடந்தது. கள்ளப்பா இல்லை.கள்ளப்பாவின் கட்டில் இல்லை. கள்ளப்பா இருக்கிறாரா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் பயிர் செய்த கழனிகாடெல்லாம் கரம்பாக கிடந்தது. முத்தம்மாள் மட்டும் இடுப்பில் கூடையை சுமந்து கொண்டு ரவிக்கு முன்னால் நடந்து வந்தாள்.
”என்னம்மா எப்படி இருக்கீங்க” என்று ரவி கேட்க.
”ஏதோ இருக்கேன் பா” என்று சலிப்பாக சொல்லிவிட்டு, கடக்க முயன்றாள்,”
”கள்ளப்பா எப்படி இருக்காரு” என்று கேட்டவுடன், சட்டென நின்று ரவி பக்கம் திரும்பியவள், ”அவர் இறந்து ஆறு மாசம் ஆகுதுப்பா “ என்று சோகமாகச் சொன்னாள்.
அவளுக்குள் இருந்த பாரங்களையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டினாள். ”இந்த ஆறு வருடத்துல எவ்வளவோ நடந்திடுச்சு. எல்லம்மா வாழ்க்கப்பட்டு போன இடத்துல நிலச்சு வாழல. கள்ளப்பா அதே கவலையில கண்ண மூடுனது,இப்படி சொல்லிகிட்டே போகலாம்” என்று பேசிக்கொண்டே போனாள்.
எல்லம்மாவும் பாவம், என்ன மாதிரியே அவளுக்கும் நிம்மதி இல்ல. வாக்கப்பட்டவன் குடிகாரன். மனசுல பாரம் அதிகமா இருக்கு.
“நீ எப்படிப்பா இருக்க? என்று ரவியை கேட்டு விட்டு ”சரிப்பா சீக்கிரமாக வீடு போய்ச் சேரு” என்று சொல்லி கூடையை இடுப்பில் சுமந்து கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
நிலைகுலைந்து போனான். அவனால் நடக்க முடியவில்லை. மனதுக்குள் பாரம் அதிகரித்தது . கையில் உள்ள புத்தகத்தை ஆல்காட்டி விரலில் வைத்துக் கொண்டு சுற்றுகின்ற ஆற்றலும் குறைந்து போனது. நம்பிக்கை வீணானது. வேதனையை வருத்தத்தை யாரிடம் சொல்வது? ஏன் இப்படி நடந்தது? என்னை அவனே கேள்வி கேட்டுக்கொண்டான்.
”அவள் இல்லாத வாழ்க்கை. அவள் முகம் பார்க்காத வாழ்க்கை. அவளோடு பேசாத வாழ்க்கை. நான் வழும் வாழ்க்கையும் இலக்கு இல்லாதது” என்று அவனொக்குள்ளேயே பேச ஆரம்பித்தான். நாட்கள் நகர்ந்தன.
”அவனது ஏக்கம், அவனது தவிப்பு, அவனது ஆசை அவனது பாசம் அவனுடைய எதிர்பார்ப்பு எல்லாமே என்றாவது ஒருநாள் நடக்கும் என்று நம்பிக்கையில் இந்த ஒற்றையடிப்பாதையில் தினமும் நடந்தான்.
அந்த நாள்
இன்று அப்படித்தான் வழக்கத்துக்கு மாறாய் சூரியன் மறைவதற்கு முன்னால் சரியாக மூன்று மணிக்கு ஏரிக்கரை மதகின் அருகில் ரவி உட்கார்ந்திருக்க.பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த காட்சிகள் மலரும் நினைவுகளாக இன்றும் அவன் மனக்கண்முன் படமாய் ஓடிக்கொண்டிருந்தது. நாற்றங்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில். கவனச்சிதறல் இல்லாமல் தனது இரு கைகளால் நாற்றை லாவகமாக அறுபடாமல் வேகமாக எடுத்துக் கொண்டிருந்த கள்ளப்பாவின் உருவம் மனதுக்குள் நிழல் போல வந்து நின்றது.
அந்த இனிமையான நினைவு அலைகளுக்குள் ரவி மூழ்கி இருந்த நேரத்தில் , குழந்தை சிரித்துக்கொண்டு ஓடி வரும் சத்தம் காதுக்கு கேட்டது. ரவி திரும்பிப் பார்த்தான்.
”ஏய் நில்லுடி. ஓடாதே. நில்லு. விழுந்திடப் போறே” என்ற குரல் பின்னாலே கேட்டது.
அதே குரல்.
குழந்தையையும், எல்லம்மாளையும் பார்த்த அடுத்த நிமிடத்தில் ரவியின் மனம் வேறு ஒரு நினைவுகளுக்குள் சிக்கி தவித்தது. அவனால் எதுவும் பேச முடியவில்லை.
அவள் ஓடி வந்தாள், குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு வாரி தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
”ஏன் ஓடுற? ஓடக்கூடாது . விழுந்துட்டா அடிபடும்”. என்று குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருந்தாள்
” யாரோட குழந்தை”? என்றான் ரவி.
” என்னோட குழந்தைதான்” என்றாள் எல்லம்மாள்.
”பேரு”
”பொற்சுவை”
”அழகான பெயர்”
”எப்ப வந்த”?
”நேத்துதான் ”
சுருக்கமாய் எல்லாவற்றிற்கும் சுவையாய் பதில் தந்தவள், தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த வழியே அவள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
அவளை பின் தொடர வேண்டும் போல் ரவியின் மனது சொல்லியது. கொஞ்சம் இடைவெளி விட்டு, உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு இறங்கி அவளை பின் தொடர.
குழந்தையை விளையாடச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
சற்று நேரத்திலெல்லாம் எல்லம்மாவின் வீட்டுக்கு ரவி செல்ல .
ரவியை பார்த்த எல்லம்மாளின் அம்மா முத்தம்மாள்” வாப்பா உட்காருங்க”என்று சொன்னாள்
”எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க.” என்றான் ரவி.
”நல்லா இருக்கேன்பா. நீ எப்படி இருக்க?” என்று ரவியை பதிலுக்குக் கேட்டாள்.
” நல்லா இருக்குமா” என்று சொல்ல.
சொல்லி முடிப்பதற்குள் அவள் மனதுக்குள் இருந்த பாரம் அத்தனையையும் வார்த்தைகளாக அவனுக்கு முன்னால் கொட்டிக் கொண்டே இருந்தாள்.
”காலம் வேகமாக போகுது. கால ஓட்டத்தில சிக்கித் தவிச்சு, தப்பிப் பிழச்சு இங்க வந்து நிற்கிறோம். இதுக்கு அப்புறம் என்ன நடக்கப்போகுதுன்னு எனக்கு தெரியல. நான் நிறைய கஷ்டங்களை, வலி, வேதனைய அனுபவிச்சுட்டேன்., நிம்மதி இல்லை. ஏதோ வாழ்ந்து ஆகனுமுன்னு இந்த இடத்தை நோக்கி வந்திருக்கும். ” என சொல்லிவிட்டு ஏதாவது சாப்பிடறியாப்பா என்று கேட்டாள்.
”வேண்டாமா” என்றான் ரவி.
அப்போது குழந்தை ரவி அருகில் நின்று மிரட்சியோடு அவனைப் பார்த்தது. சற்றுநேரத்தில் பின் நகர்ந்து சென்றது. சின்னதாய் உதட்டோரம் சிரிப்பை வெளிப்படுத்தியது.
“ வா ” என்று இரு கையை நீட்டி அழைத்தான் ரவி.
” போமா” என்று அவள் பாட்டி முத்தம்மாள் சொன்னாள்.
உள்ளிருந்து எல்லம்மாள் வெளியே வந்து நின்று ”போ… போ…. போ..” என்றாள் தன் குழந்தையிடம்.
குழந்தை மிரட்சியுடன், தயக்கத்தோடு முன்னாடி நகராமலும் , பின்னாடி நகராமலும் அதே இடத்தில் நின்றது. நின்ற குழந்தை தனது மழலை சொல்லால் ”பாட்டி…. இது யாரு…” என கேட்டது.
பாட்டி சொன்னாள். “இது உன்னோட கள்ளப்பா”.
”போ, கள்ளப்பாகிட்ட போ” எனச் சொன்னால் பாட்டி. மீண்டும் மீண்டும்.
”கள்ளபாகிட்ட போ” என்று சொன்னவுடன் முத்தம்மாவின் கண்களில் கண்ணீர் துளிகள் கொட்டின.
உட்கார்ந்திருந்த ரவி எழுந்தான். குழந்தை அருகில் சென்றான். அள்ளி எடுத்து வாரி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்.
எல்லம்மாள் கண்னில் கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. கண்ணீர் துளிகளை ஒற்றை விரல் கொண்டு துடைத்தெறிந்து, சின்னதாய் சிரித்தாள்.
இப்பொழுது கேட்டேன் ’கள்ளப்பான்னா என்ன”ன்னு ரவி
முத்தம்மாள் சொன்னாள் ’அன்பும் ஆதரவும் கிடைக்காதவங்களுக்கு, நல்லவங்க துணையா இருப்பாங்க என்கிற நம்பிக்கையில, நாங்க வைக்கிற பேரு ’கள்ளப்பா”. கொஞ்சம் அமைதி
”இந்த குழந்தைக்கு நீங்க கள்ளப்பாவா, என் மகளுக்கு நல்ல துணையாய் இருங்க.” என்று கண்ணீரோடு முத்தம்மாள் பேசினாள்.
’கள்ளப்பாங்கிறது நான் கேட்ட பேர். என் மகள் கூப்பிட்ட பேரு. என் பேத்தி கூப்பிடப் போற பேரு. அனாதையா இந்த உலகத்துல, யருடைய ஆதரவு இல்லாம இருக்கிற பொம்பள பசங்களுக்கும், பொம்பளைங்களுக்கும் குலதெய்வமா, குலசாமியா, எல்லதெய்வமா நின்னு, எங்க மக்கள காக்கற பேரு.”என்றாள் முத்தம்மாள்.
“எனக்கு சாமியா, என் மகளுக்கு துணையா, என் பேத்திக்கு நல்ல கள்ளப்பாவா இருங்க.” என்று இரு கைகூப்பி கும்பிட்டாள்.
மெல்ல நடந்து எல்லம்மாள் ரவியின் அருகில் நின்றாள். அவள் தலையை ரவியின் நெஞ்சோடு சாய்த்து பாசமாய் குழந்தையின் முதுகில் கை வைத்து வருடினாள். இன்னொரு கை ரவியின் முதுகின் மறுபுறம் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. இந்த ஆனந்தத்தை பார்த்த முத்தம்மாள் பேசாமல் மௌனமாய் அமைதியாய் இருந்தாள்.
எல்லம்மாள் தனது மகளின் கண்ணத்தில் செல்லமாய் தட்டிக்கொடுத்து
”நீ இனிமே கள்ளப்பான்னு கூப்பிடு.”
சொல்லு, கள்ளப்பா “ன்னு சொல்லு .” ன்னு சின்னதாய் சிரித்தாள்.
சின்ன சிரிப்பில் செல்லமாய் சொன்னாள் பொற்சுவை “கள்ளப்பா”ன்னு
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்