பரிவை சே.குமார்
சிறுகதை வரிசை எண்
# 138
நான்சி
-----------------------------
'நான்சியைக் காணோமுங்க' அப்போதுதான் எழுந்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தவனிடம் ஆஷா சொன்ன போது "விடியக் காத்தால எங்கிட்டுப் போகப் போகுது, வெளியில நசநசன்னு மழை பேஞ்சிக்கிட்டே இருக்குல்ல... குளிருக்கு எங்கிட்டாச்சும் ஒதுங்கி நிக்கும்" என்றேன்.
"அப்படி நின்னா கூப்பிட்டா வருமுல்ல... நானும் கூப்பிட்டுப் பார்த்துட்டேன். பாப்பாவும் நானும் எல்லாப் பக்கமும் தேடிப் பார்த்துட்டோம். எங்கிட்டும் காணோம்"
"காணோமா..? நல்லாப் பாத்தியளா..?" கேள்விகளை அடுக்கியபடி எழுந்தவன், "மழை பெய்யுது அவுத்து விட வேண்டாம்ன்னு சொன்னா கேட்டாத்தானே. ஆத்தாமக்க அதை அவுத்தே விட்டாகணும்ன்னு நிக்கிறீங்க... மழையில எங்கிட்டுப் போச்சோ" கடுப்பாகச் சொன்னபடி வெளியில் வந்தேன்.
வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது.
போர்ட்டிகோவில் நின்று கொண்டு 'நான்சி... நான்சி...' எனக் கூப்பிட்டுப் பார்த்தேன்.
என் ஒற்றைக் குரலுக்கு ஓடி வருபவளை இன்று காணோம். அப்படியானால் அவள் வீட்டுக்குள் இல்லை.
'எங்கே போயிருக்கும்' என யோசித்துக் கொண்டு முகவாயைத் தடவிக் கொண்டு நின்றவனை வர்ஷினி கலைத்தாள்.
"அப்பா நானும் அம்மாவும் எல்லாப் பக்கமும் பாத்துட்டோம். நான்சி நம்ம காம்பவுண்டுக்குள்ள மட்டுமில்ல... நம்ம வீதியிலயும் இல்லை" என்றாள் சோகமாய். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான்சியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் அழுது விடுவாள் என்பதை அவள் முகம் காட்டியது.
அவளை என்னருகில் இழுத்து அணைத்து முதுகில் தடவியபடி "எங்கயும் போயிருக்காது இங்கதான் எங்கயாவது இருக்கும். ராத்திரியெல்லாம் மழை பெஞ்சதுல்ல... அதான் எங்கிட்டாயும் ஒதுங்கி இருக்கும். இதுக்குத்தான் அவுத்து விட வேண்டான்னு சொன்னேன். எங்க கேட்டீங்க... இங்கிட்டுத்தான் இருக்கும். அப்பா பாத்துக் கூட்டிக்கிட்டு வர்றேன்" என்றேன்.
அவள் அமைதியாய் நின்றாள்.
நான்சி-
இதே போன்றொரு மழை நாளில்தான் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
ஆம்... ஊரையே புரட்டிப் போட்ட மூன்று நாள் தொடர் மழை நேரம் அது.
வீதியெங்கும் மழை நீர் நிறைந்து கிடந்தது.
எங்கள் வீதியில் கழிவு நீர்க் கால்வாய் கட்டுகிறோமென ஆறு மாதத்துக்கு முன்னர் வெட்டிப் போட்டது அப்படியே இருக்க, தண்ணீர் எந்தப் பக்கமும் போகமுடியாமல் ரோட்டை மூழ்கடித்திருந்தது. தண்ணீருக்குள் நீந்தித்தான் பயணிக்க வேண்டிய சூழல்.
அன்று காலையில் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாளைக்கு மழை தொடரும் என்று ரமணன் சொல்லியிருந்தார். அவர் சொன்னால் வெயில் போடும் என மகள்கள் இருவரும் பெசிச் சிரித்தாலும் லேசாகத் தூறிக் கொண்டுதான் இருந்தது.
காபி கொடுத்த ஆஷாவிடம் "பின்னால மாமரத்துல மைனா கூடு கட்டியிருந்துச்சு... குஞ்சு வேற பொரிச்சிருஞ்சுச்சு. பாவம் இந்த மழைக்கு அதுக்க என்ன பண்ணுச்சுகளோ" என்றேன் உண்மையிலேயே பரிதாபப்பட்டு.
அவள் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "ஏங்க மைனா மட்டுமில்லங்க... எல்லாக் குருவியும் கூடு கட்டித்தான் வாழும். அதுலதான் குஞ்சு பொரிக்கும். அதுகளப் பத்திரமாவும் பாத்துக்கும். என்னமோ நம்ம வீட்டு மரத்துல இருக்க மைனாவுக்கு மட்டும்தான் வீடு இல்லாம, தெருவுல நிக்கிற மாதிரி சொல்றீங்க" என்றாள் சிரித்தபடி.
"அட அது இல்ல... மூணு நாளா கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. காத்து வேற. பாவம் அதுக, கூட்டுல குஞ்சு இருந்துச்சுல்ல... அதான். பாவமில்லையா..?"
"இங்கேருங்க... நம்ம நாட்டுல நிறைய மக்கள் வீடு இல்லாம தெருவுல படுத்து இருக்காங்க. ஏன் நம்ம ஏரியாவுக்கு திரும்புற இடத்துல இருக்க தண்ணித் தொட்டிக்கிட்ட புள்ளையும் குட்டியுமா எத்தனை பேரு துணிகளை மறைவாக் கட்டி வச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்கள்லாம் என்ன ஆனாங்களோன்னு கவலைப்பட்டா பரவாயில்லை. அதை விட்டுட்டு மைனா, மயிலுன்னு... ரொம்ப யோசிக்காதீங்க. விட்டா பாம்பு, எலிக்கெல்லாம் வருத்தப்படுவீங்க போல"
"மனுசனுக்குச் சிந்திக்கிற அறிவு இருக்குடி. லேசான மழை வரும்போதே அவங்கள்லாம் பக்கத்துல ஏதாவது ஒரு இடத்துல ஒதுங்கியிருப்பாங்க. அப்படியில்லன்னாலும் எத்தனையோ சமூக அமைப்புகள் இருக்குக. அவங்களுக்கு அவங்க உதவி செஞ்சிருவாங்க. ஆனா தெருவுல திரியிற ஆடு, மாடு, இந்த மாதிரிப் பறவைகள்... ஏன் நீ சொன்ன பாம்பு, எலி..." என அடுக்கிக் கொண்டே போனேன்.
"சரித்தான்... ஏய் வர்ஷி உள்ள இருக்க குடையை எடுத்துக்கிட்டு வா..." என்றாள்.
"எதுக்கு இப்போ குடை..? கடை எதுக்கும் போகணுமா..? மாவு இல்லையா..? நான் பொயிட்டு வர்றேன்" என்றபடி எழுந்தேன்.
"இல்லங்க... மைனா பாவங்க. மழையில என்ன பண்ணுதோ, முல்லைக் கொடி படற தேர் கொடுத்தான் பாரின்னு வரலாறு இருக்குல்ல அது மாதிரி நீங்க மரத்துல ஏறி மைனா என்னாச்சு, அதோட குடும்பம் நல்லாயிருக்கான்னு பார்த்துட்டு மழை அதோட கூட்டுல விழுகாம இந்தக் குடையைக கட்டி வச்சிட்டு வாங்க. போங்க. முல்லைக்கு அந்தப் பாரி... மைனாவுக்கு இந்தப் பாரின்னு நாளக்கி வரலாறு பேசுமுல்ல..." அவள் தமிழாசிரியை என்பதால் பாரியை இழுத்து என்னை நக்கல் செய்தாள்.
"என்ன டீச்சர் நக்கலா..?"
"டீச்சருக்கு நக்கலும் இல்ல... விக்கலும் இல்ல... நீங்கதானே இப்ப மைனாவுக்கு வீடு இல்லயேன்னு புலம்புனீங்க. இங்கே பாருங்க கடவுள் ஒவ்வொரு உயிரினத்தைப் படைக்கும் போதும் அதுக மழை வெயில்ல எப்படி பாதுகாப்பா இருக்கணுங்கிற உண்ர்வையும் சேர்த்துத்தான் படைச்சிருப்பான். மழை வெள்ளம், வெயில், புயல்ன்னு எல்லாத்துலயும் மனுசங்க பாதிக்கிற மாதிரி அதுகளும் பாதிக்கத்தான் செய்யுங்க... அதே மாதிரி நாம பாதுகாத்துக்கிற மாதிரி அதுகளும் பாதுகாத்துக்குங்க"
சரிதான்... இன்னைக்கு உலகம் என்ன நடந்தாலும் போன்ல வீடியோ எடுத்துப் போட்டு லைக் வாங்குற உலகமாயிப் போச்சு. உண்மையாவே வருத்தப்பட்டாக் கூட கேலிதான் பேசும். இதுக்கு மேல இதைப் பேசுறதால ஒண்ணும் ஆயிடாது. இப்பக் கேலியும் கிண்டலுமாப் போற பேச்சு, கடைசியில சண்டையில முடியலாம் என நினைத்து அவளின் பதிலுக்குப் பதில் சொல்லித் தொடர வேண்டாமெனத் தவிர்த்து எழுந்து போர்டிகோவில் போய் நின்று தூறலை ரசித்தபடி, நெட்டி முறித்தேன்.
மழை நீரில் நீந்தி வந்த ஏதோ ஒன்று வெளிக் கேட்டுக் கம்பிக்குள் நுழைய முயன்றது. என்னவாக இருக்கும். எதுவும் தேங்காய் நெத்தா இருக்குமோ என நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை.
அது மெல்ல அசைந்தது. ஏதோ ஒரு உயிருள்ள பொருள் என்பதாக உணர முடிந்தது.
மெல்லக் கதவருகே போனேன்.
"இப்ப எதுக்கு மழையில நனைஞ்சிக்கிட்டுப் போறீங்க... அப்பறம் லொக்கு லொக்குன்னு இருமவும் தும்மவும் செய்யிறதுக்கா...?" என்ற ஆஷாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நடந்தேன்.
அது ஒரு நாய்க்குட்டி...
செவலையோ... சாம்பலோ... ஏதோ ஒரு கலர். மழை நீரில் நனைத்து கலர் எதுவென்று அறியாத வண்ணமிருந்தது. பார்க்கப் பாவமாய் தெரிந்தது.
கதவைத் திறந்து அதைத் தூக்கினேன்.
"அய்யே... தெருநாயை எல்லாம் கையில தூக்கிக்கிட்டு... அத அங்கிட்டே விட்டுட்டு வாங்க"
"பாவம்... மழைக்கு ஒதுங்க இடமில்லாம தண்ணிக்குள்ள சிக்கி இங்க வந்திருக்கு. இப்ப அதை வெளியில விட்டா மறுபடியும் தண்ணியிலதானே மாட்டிக்கும்... அப்பறம் ரோட்டுப் பக்கம் கொண்டு போய் விடலாம்" என்றபடி பைப்பைத் திறந்து அதை அதில் கழுவினேன்.
பெண் குட்டி...
ஆடு, மாடு பெண் கன்னுக்குட்டி போட்டால் மகிழும் சமூகம்தான் நாயாக இருந்தால் ஆண் நாய்தான் வேணும் எனச் சொல்லும் இல்லையா..?
"பொட்டையா... அதை மொதல்ல வெளியில விட்டு கதவைச் சாத்துங்க" கத்தினாள் ஆஷா.
"அப்பா நாம வளர்ப்போம்ப்பா" என்றால் வர்ஷினி.
"ம்... நாம வச்சிப்போம்... அழகா இருக்குல்ல" என்றாள் தர்ஷினி.
"வளக்குறாக... நீங்க பார்த்துப் பார்த்து வளர்க்கப் போறீங்க... அதை மொதல்ல வெளிய விட்டுக் கதவைச் சாத்திட்டு வாங்க"
"எதை..?" என்றபடி உள்ளே இருந்து வந்தாள் அம்மா.
"நாய்க்குட்டி ஒண்ணு திக்குத் தெரியாம இங்க வந்திருச்சு... அதை உம்பேத்திக வளப்போமுன்னு சொல்லுதுக. ஆஷா வேணாங்கிறா... மழையில நனைஞ்சி பாவமா இருக்கு"
"நாயா...? எங்கே..?" என என் கையில் இருந்ததை வேகமாக வாங்கிய அம்மா, 'சாம்பலும் செவலயும் கலந்த கலரு போல... நல்லாயிருக்கும். ஆமா எத்தனை நகம்..?" என்றபடி அதன் கால்களை ஆராய்ந்து பதினெட்டு என்றாள்.
இந்த நகக் கணக்கெல்லாம் அம்மாதான் பார்ப்பாள். பதினெட்டு, இருபதுதான் பெரும்பாலும் இருக்கும். எப்பவாச்சும் இருபத்திரெண்டு நகம் இருக்க நாய் கிடைக்கும். எங்க வீட்டில் அப்படிக் கிடைத்தது ராஜா... பேருக்கு ஏற்றார்போல் ராஜாவாய் இருந்த நாய்தான் அது. எவ்வளவு நாய் வளர்த்திருக்கிறோம். வயசனாதும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து அதை அடிக்க ராஜாங்கத்திடம் பிடித்துக் கொடுக்கும் போதெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கோம். அடுத்த ஒரு வாரத்தில் அப்பா வேறோரு குட்டியைக் கொண்டு வந்து கொடுக்க, அதற்கு ஒரு பேரிட்டு பின்னாலயே கூட்டித் திரிவோம்... இறந்து போனதை நாங்களும் இறக்கி வைத்திருப்போம். அப்படித்தான் பால்யத்தில் நாய்களுடன் எங்களின் வாழ்க்கை இருந்தது. ராஜா கூட ஆட்களைக் கடிக்கிறான் என்று சொல்லி, ஊரே அடிக்கச் சொல்லி நின்றதால் ஒரு ஞாயிறு வயிறு முட்டச் சாப்பிட்டவுடன் ராஜாங்கத்தின் கயிறுக்கு இரையானான். அதன்பின் நாய் வளர்க்கப் பிடிக்காமல் போய்விட்டது.
"எத்தனை நகமாயிருந்தா என்னத்தை... நீங்களும் அதை வாங்கிக்கிட்டு இப்பத்தான் எண்ணுறிய... முதல்ல அதைக் கீழ விடுங்கத்தை"
"அட எதுக்கு இப்ப கத்துறே... பதினெட்டு நகம்... யாரையும் கடிக்கப் போகாது. இந்தப் பக்கம் இப்பத்தான் அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா வீடுக வருது. வீட்டுல ஒரு நாய் கிடந்தா பாதுகாப்புத்தானே" என்றாள் அம்மா.
"பாம்ப கையில வச்சிக்கிட்டு இது கடிக்காது... சாதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. கடிக்காத நாய் இருக்கா... இதெல்லாம் சரிவராது"
"அம்மா ப்ளீஸ்..."
"ஆஷா இங்கேரு. இது இங்க இருக்கட்டும். பிள்ளைங்க ஆசை"
"உங்களுக்கு ஆசையின்னு சொல்லுங்க. நகரத்துப் பக்கம் வந்து ஆடு, மாடு, கோழின்னு இன்னமும் பட்டிக்காடாவே கிடங்க"
"ஏத்தா... பொறந்தத, வளந்தத மறந்துட்டு இருக்க முடியுமா..? வீட்டுல நின்ன ஆடு, மாடுக பூராம் இவன் மேல அம்புட்டுப் பாசமா இருக்குங்க தெரியுமா. இவனக் காணுமின்னா மயிலக்காள இரை திங்காது தெரியுமா..?"
"இதெல்லாம் பல தடவை சொல்லிட்டீங்க... மறுபடியுமா..? அவரே வெளிய விட்டுடுவோம்ன்னு நினைச்சாலும் நீங்க விட மாட்டீங்க. இதெல்லாம் எனக்குத்தான் தலைவலி. சரி சரி என்னமோ பண்ணுங்க..." என்றபடி உள்ளே போனாள்.
"ஹைய்யா..." எனக் கத்திய மகள்கள் என்ன பேர் வைக்கலாம் என்ற யோசனைக்குப் போக, அம்மாவோ ராணி என்றாள்.
"போங்க அப்பத்தா... ராணி வாணியின்னு... நாம நல்ல பேரா வைப்போம்" என்ற மூத்தவளிடம் சின்னவள் அக்கா 'நான்சி'ன்னு வைப்போம் என்றாள்.
"அதென்ன நான்சி... ரோஸி வைப்போமா...?" என்றேன் நான்.
"அவ சொன்ன நான்சியே நல்லாயிருக்கு" என்ற மூத்தவள் நான்சி எனக் கூப்பிட்டு அதை உறுதி செய்தாள்.
அதன்பின் நான்சி எங்களுக்கு எல்லாம் பிடித்தவளாகிப் போனாள். போர்டிகோவைத் தாண்டி வீட்டுக்குள் வரவே மாட்டாள். இப்பல்லாம் என்னோட பெட்டுல படுத்தாத்தான் அவன் தூங்குவான். அவனுக்குன்னு பெட் ஆர்டர் போட்டு வாங்குனோம். இது இன்ன சாதி, இம்புட்டுப் பணம் கொடுத்து வாங்கினேன் என்று பலர் பெருமையாக தங்கள் வீட்டு நாய்களைப் பற்றிச் சொல்வதும், சமூக வலைத்தளங்களில் பதிவதுமாய் தங்கள் பெருமையைப் பறை சாற்றுகிறார்கள்.
அதே மாதிரி இப்போ எல்லார் வீட்டிலும் மீன் தொட்டி வைத்திருக்கிறார்கள். அப்படி வைப்பது நல்லதாம் என பிள்ளைகள் அடம்பிடிக்க, சிறிய தொட்டி வைத்து முப்பது ரூபாய் எனச் சில மீன்களை வாங்கி விட்டேன். நண்பனின் வீட்டுக்குப் போனபோது பெரிய மீன் தொட்டியில் ஒரே ஒரு பெரிய மீனை விட்டு வைத்திருந்தான். என்னடா ப்ரை பண்ணுனா குடும்பத்துக்கே போதும் போல... ஆமா எதுக்கு இம்மாம் பெரிய மீன் என்றதும் என்னது பொரிக்கிறியா..? இது எவ்வளவு தெரியுமா... பத்தாயிரம் ரூபாய் என்றான். எதுக்குடா இவ்வளவு பணம் கொடுத்து... செத்தா பத்தாயிரம் போச்சுடா... என்றதற்கு நாய் மீனெல்லாம் நல்ல சாதியா வாங்கி வளக்கிறதுதான்டா இன்னைக்கு டிரண்ட் . அதுதான் நம்ம அந்தஸ்தை உயர்த்திக் காட்டும். வாசல்ல கட்டிக்கிடக்க ரெண்டும் இராஜபாளையம்... ஒவ்வொண்ணும் எட்டாயிரத்துக்கு வாங்கினேன். அதுவும் தெரிஞ்ச ஆளுங்கிறதால இல்லைன்னா பத்துக்கு மேல தெரியுமா...? என்றான் பெருமையாக.
எனக்கு எப்பவும் பெருமைக்கு எருமை மேய்க்கும் எண்ணம் வந்ததேயில்லை. ஆஷாவும் அப்படித்தான். அவள் மத்தவங்க மதிக்கணுமின்னு எந்தச் செயலையும் செய்ய மாட்டாள். அவளுக்குப் பிடித்ததை மட்டுமே செய்வாள். அந்த வகையில் நான் பாக்கியசாலிதான்... இந்த அந்தஸ்து போதுமே அன்பான வாழ்க்கைக்கு.
எங்கள் நான்சிக்கு அப்படியான எதுவும் இல்லை. போர்டிகோவில்தான் படுத்திருப்பாள். வளர வளர போர்டிகோ தூணில் சங்கிலியில் கட்டிப் போட ஆரம்பித்தோம். பகலில் நல்ல தூக்கம்... இரவு அவிழ்த்து விட்டால் இரவெல்லாம் தூங்காமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும்.
நான்சியோட செய்கைகள் அத்தனை நேர்த்தியாக இருக்கும். ஒண்ணுக்குப் போக, வெளிய போகவெல்லாம் சிறு குரலோசை கொடுக்கும். அதைப் புரிந்து அவிழ்த்து விட்டால் வீட்டின் பின்னே இருக்கும் மரங்களின் பக்கம் போய் விட்டு வந்து அதோட இடத்தில் படுத்துக் கொள்ளும்.
மகள்கள் இருவருக்கும் அதன் மீது அத்தனை பிரியம்... என் குரல் கேட்டால் போதும், அத்தனை ஆனந்தம் அதன் முகத்தில் தோணும். குழைவாய் குரல் கொடுத்தபடி கட்டிக்கிடக்கும் இடத்தில் குதிக்கும். அருகில் போகாமல் வீட்டுக்குள் வந்தால் கோபப்படுவது போல் குரல் கொடுக்கும்.
அதன் செய்கைகள் ஆஷாவை மெல்ல மெல்ல மாற்ற, ஆரம்பத்தில் அதன் பக்கமே திரும்பாதவள் நான்சி உண்மையிலேயே எத்தனை அறிவான நாய் எனச் சொல்லி ஒட்டிக் கொண்டாள்.
"அப்பா... நான்சியைப் பாக்கிறேன்னு சொல்லிட்டு என்ன யோசிச்சிக்கிட்டு மழையில நிக்கிறிய"
தர்ஷினி குரல் கேட்டு நினைவில் இருந்து மீண்டவன் மழையில் நனைந்து கொண்டு நிற்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு பக்கமாய் தேடி வந்தேன்.
நான்சியைக் காணோம்.
வாசலைத் திறந்து வடக்கு, தெற்காகப் போய் பார்த்து வந்தேன். எங்கும் இல்லை.
சுவர் ஏறிக் குதிப்பது அதற்குப் புதிதில்லை... வீட்டு வாசலில் எதாவது நின்றால் ஏறிக் குதித்து அங்கிட்டுப் போய் விரட்டி விட்டு மீண்டும் சுவரில் தாவி ஏறி உள்ளே குதிக்கும், இல்லைன்னா வாசலிலேயே படுத்துக் கொள்ளும்.
அப்படி எதுவும் குதித்துப் போச்சா என்ற யோசனையோடு 'நான்சி... நான்சி' எனக் கத்திக் கொண்டிருந்தேன்.
தோட்டத்துப் பக்கம் நின்றால் ஒரு குரலுக்கே எதிர்க்குரல் கொடுக்கும். இப்போது அது என் வீட்டு எல்லைக்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இனிமேல் தேடுவது தேவையில்லாதது. வளர்த்தோம்.. நல்லாப் பாத்துக்கிட்டோம். அம்புட்டுத்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.
வீட்டுக்குள் போனவனிடம் துண்டை நீட்டிய ஆஷா "காணுமில்ல... எங்கிட்டோ போயிருச்சு" என்றாள் வருத்தமாய்.
தலையைத் துவட்டியபடி "அம்மா சொல்லும்... நாய் சாகுற் மாதிரி இருந்தா வளர்த்தவங்க முன்னால, வளர்ந்த வீட்டுல சாகாது. கண்காணாத இடத்துக்குப போய் செத்துப் போகும்ன்னு. அப்படிச் சிலர் வீட்டுல வயசான நாயிங்க காணாமப் போயிருச்சு, எங்கிட்டாச்சும் போயிச் செத்திருக்கும் எனச் சொன்னதையும் கேட்டிருக்கிறேன். நான்சிக்கும் வயசாயிருச்சு... அதுபோக உடம்புக்கு முடியாமக இருந்திருக்கும். அதான் அப்படிக் கண் காணாத இடத்துக்குப் போயிருக்கும் போல" என்றபடி வராண்டாவில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
"அப்படியெல்லாம் இருக்காதுங்க"
"இருக்கும்.மாயமா மறைஞ்சி போக என்ன இருக்கு. ராத்திரி இங்க இருந்துச்சு. இப்ப இந்த ஏரியாவுலயே காணோம் பாரு"
அவள் ஆமோதிப்பதாய் தலையாட்டினாள். கண் கலங்கியிருந்தது.
எனக்கும் மனசு வலித்தது. தலையைத் தூக்கி மேலே பார்த்தேன். அம்மா மாலைக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அருகே வந்த பிள்ளைகள் 'நான்சி' என அழ ஆரம்பித்தார்கள்.
"அப்பா உங்களுக்கு வேற நாய்க்குட்டி கொண்டாந்து தர்றேன்..."
"எனக்கு நான்சிதான் வேணும்" என்றாள் தர்ஷினி.
அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
"நம்மளோட, நம்ம வீட்டுல ஒருத்தியா இருந்திருச்சுங்க... அதைக் காணோமுன்னதும் மனசு ஒரு மாதிரி வலிக்கிதுங்க. இங்கன நிக்கும் அங்கன நிக்கும்... அத்தை இறந்ததுக்கு அப்புறமா அதை பகல்ல கட்டுறது கூட இல்லை. அவுத்து விட்டுட்டுத்தானே போவோம். மழை பெய்யவுந்தான் ரெண்டு மூணு நாளா பகல்ல கட்டிப் போட்டு வச்சேன்."
"ம்..."
"இங்கிட்டு வந்தாலே காலக்காலச் சுத்துமுல்ல. அதுவும் பிள்ளைங்ககிட்ட அத்தனை அன்பு. ஏன் உங்ககிட்ட... வீட்டுக்கு வந்ததும் அதுக்கிட்ட போயிப் பேசாம நேரா உள்ள வந்தா கோபமாக் கத்திக் கூப்பிடுமுல்ல. அதுக்குத்தான் எத்தனை அன்பு ...? பாவம் எங்க போச்சோ...? என்ன ஆச்சோ...?" வருத்தப்பட்டவளின் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
"ஏய் நீ அழுதா அப்பறம் அதுகளும் அழ ஆரம்பிச்சிருங்க" என்றபடி அவளையும் இழுத்து அணைத்துக் கொண்டேன்.
எனக்கும் கண்ணீர் வந்தது.
அன்று முழுவதும் வீட்டில் சோகம் நிரம்பி வழிந்தது.
யாரும் சாப்பிடவில்லை...
இரவு படுத்தாலும் தூக்கமில்லாமல் நான்சியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.
தரிஷினி, வர்ஷினி, ஆஷா என ஒவ்வொருவராய் தூங்க ஆரம்பித்தார்கள். எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை.
ஒரு வாரத்துக்கு நான்சியோட நினைவு இருக்கும். அப்பறம் மெல்ல மெல்ல மறந்துருவோம். அதுவும் வேற ஒரு நாய்க்குட்டி எடுத்தாந்தா புள்ளைங்க அது கூட நெருக்கமாயிருவாங்க நான்சியைத் தேட மாட்டாங்க. நாமெல்லாம் அப்படித்தானே வளர்ந்து வந்திருக்கோம். ஆசைப்பட்டு வளர்த்த சேவலை அறுக்க விடாம அழுதுட்டு, ரசத்தை ஊத்திக் குடிக்கத்தானே செய்வோம். எல்லாத்தையும் நாளும் பொழுதும் மாத்திரும் என நினைத்துக் கொண்டேன்.
நான்சியின் நினைவுகளோடு மெல்ல உறங்கிப் போனேன்.
நள்ளிரவில் வீட்டு வாசலில் நாய் குரைக்கும் குரல் கேட்டது. அது நான்சியின் குரல் போல் இருக்க, அடித்துப் பிடித்து எழுந்தேன்.
நான்சியோட நினைவு கனவாய் மலர்ந்திருக்கும் போல... விடிய விடிய அவளின் குரல் கேட்காத என்ற எண்ணத்துடனேயே படுத்திருந்தேன்.
வெளியில் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்