logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

பாரதிமணியன்

சிறுகதை வரிசை எண் # 137


மண்ணில் இந்த காதலன்றி ! சிறுகதை : பாரதிமணியன் தேவாவிடம் வந்து யாராவது காதலைப் பற்றி கருத்து சொல்லக் கேட்டால்… அவன் இப்படித்தான் சொல்லுவான் . "காதல் பட்டாம் பூச்சி மாதிரி அழகான விஷயம். காதல்ல விழுந்தவங்க அந்த பட்டாம் பூச்சியை கையில் பிடிக்கற பரபரப்போட இருப்பாங்க . அந்த பட்டாம் பூச்சி கையில் கிடைத்தால் தான் சந்தோசம். இல்லேன்னா அது காதல்ங்கிறது ஒரு கானல் நீராக மாறிடும்." தேவா அப்படிச் சொல்வதற்கு காரணம், அவன் ஆசைப்பட்ட காதல் நிறைவேறவில்லை என்பதே . அவனுடைய காதல், நூலறுந்த பட்டம் காத்துல கரகரவென சுத்தியடிச்சு, கீழே விழுந்த மாதிரி பாதியிலே முடிஞ்சுடுச்சு . ஆனாலும் அந்த காதலை அவன் வெறுக்கவில்லை . அது கால் நூற்றாண்டு கடந்தும், ஏதாவது ஒரு சமயத்தில், அவனுடைய ஞாபக திரையில் இப்போதும் படமாக ஓடும். தனிமையில் வந்து நினைவு படுத்திவிட்டு போகும் . தூக்கத்தில் கனவாகவும் , தூக்கமில்லா இரவுக்களில் தாலாட்டாகவும் இருக்கும் . தேவா அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரிலிருந்து , வெளியே வரும் போது, அவன் மனைவி கொடுத்த லிஸ்ட் படி மளிகை பொருள்களை வாங்கி , ஒரு கை பையில் நிறைத்து தூக்கிக்கொண்டு வந்தான். அவன் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது இப்படி ஒரு கடமையை செய்ய வேண்டும் என்பது அவன் மனைவியின் கட்டளை . அதுவே அவனுக்கு சாசனம். தேவா மளிகை சாமான் பையை எடுத்துக்கொண்டு, டூ வீலர் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்த போது , அங்கே சிவப்பு நிற ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, எதேச்சையாக கவனித்தான். அவள் முகம் மிகவும் லட்சணமாக, அதே சமயத்தில் அவனுக்கு ரொம்ப பரிச்சயமானது போல இருந்தது . 'இந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்தது போல இருக்கே!' என்று யோசித்தான். திரும்ப ஒருமுறை அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்து விட்டது 'அட ...அதே முகம்...சோபியா!' அவன் மனசுக்குள் சொல்லிக்கொண்டு, அதிர்ச்சியோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் . தேவா, அவனுடைய கல்லூரி பருவத்தில் யாரை விரும்பி , மனதில் வைத்து உருகி உருகி காதலித்தானோ, அவளை இந்த பெண் ஞாபகப்படுத்தினாள். இத்தனை வருடங்களுக்கு பிறகு , மீண்டும் அதே அழகோடு , இளமையான தோற்றத்தில்… 'இது சோபியாக இருக்க முடியாது! அப்படியென்றால் இது யார் ?!'என்று கேள்வி மனசுக்குள் வர, "எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் " திரைப்படபாடல் ஒன்று, அவனுக்கு நினைவுக்கு வந்தது . இப்போது அந்த பெண் , அவளுடைய ஸ்கூட்டியில் ஏறி புறப்பட , 'சோபியாவை போல இருக்கும் இவள் யார் ?!' அதை கண்டுபிடிக்கும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் , தேவாவும் அவளைத் தொடர்ந்து போய் பார்த்து விட முடிவு செய்தான் . உடனே அவசரமாக ஓடிப்போய், அவனுடைய ஆக்டிவாவில் மளிகை சாமான்களை வைத்து விட்டு , வண்டியில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து , முடுக்கினான். அந்த பெண் போகும் வழியை பின் தொடர்ந்து ,அவனும் போனான். வயது நாற்பதை தாண்டி ஐம்பதை நெருங்குகிற இந்த காலகட்டத்திலும் , ஒரு பெண்ணை இப்படி தொடர்வது தேவையா?' என்று அவன் மனது உறுத்தினாலும்... ‘இந்த பெண்ணை பற்றி முழுவதுமாக தெரிஞ்சிக்காம விட்டா , இன்றைக்கு தூக்கம் வராம அவன் அவதிப்பட வேண்டி வரும் ’ என்று உள் மனசு சொன்னது . அது ஒரு சாயங்கால வேளை என்பதால், வெளிச்சம் குறைந்து , இரவு மெல்லக் கவிழ ஆரம்பித்தது. மக்கள் தங்கள் வாகனங்களில் , நகர பேருந்துகளில், வீடு திரும்பும் வேகத்தில் இருந்தார்கள். ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோடில் பயணித்து , ஒரு ஹவுசிங் போர்டு பகுதியின் உள்ளே நுழைந்து , அதற்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று வில்லாகளை கட்டி விற்பனை செய்து கொண்டிருக்கும் பகுதிக்குள் அவள் சென்றாள். தேவாவோ , அவளை விடாமல் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தான். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, நெருக்கமாக வீடுகள் அமைந்த ஒரு புறநகர் பகுதியில் நுழைந்தாள். அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஒரு காய்கறி வண்டிக்காரர், நிறைய பெண்கள் சூழ பரபரப்பாக விற்பனை செய்து கொண்டிருந்தார். சாலையோர துரித உணவகம் ஒன்று மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அவள் அந்த சாலையில் மெதுவாக நிதானித்து, அவளுடைய வீட்டை அடைந்தாள். வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தியபடியே, "அம்மா" என்று குரல் கொடுத்தாள். உள்ளே இருந்து யாரும் வெளியே வராததால், வண்டியை நிறுத்தி விட்டு , நடந்து சென்று கதவை தட்டி "அம்மா" என்றாள். அப்போது வீட்டுக்குள் இருந்து , ஒரு முக்காடு போட்டபடி ஒரு பெண் வெளியே வந்தாள். சற்று பூசினார் போல உடம்போடு இருந்த அந்த பெண்மணி , அவளுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என்று தேவா நினைத்தான். தேவா அந்த வீட்டிற்க்கு பக்கவாட்டில் , அவனுடைய ஆகிட்டிவாவை நிறுத்தி விட்டு, அங்கிருந்து அவர்களை உன்னிப்பாக கவனித்தான். "ஏம்மா? ஏன் இவ்வளவு நேரம்.?!” இன்னமும் நீ வரலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆபிசில் வேலை அதிகமோ!" என்ற அம்மாவிடம் "இல்லம்மா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கொஞ்சம் கூட்டம் அதிகம் அதுதான் " என்றாள் "ம்ம்.. சரி..வா " அந்த அம்மா, மகளிடம் இருந்து காய்கறி , மளிகை பொருட்கள் நிறைந்த பையை வாங்கிக்கொண்டு , மீண்டும் வீட்டுக்குள் திரும்பி நடக்கத் துவங்கினாள். தேவா, அவனை யாராவது கவனிக்கிறார்களா? என்ற தயக்கதோடு , சுற்றிலும் பார்த்துக்கொண்டே மெல்ல அந்த வீட்டின் வாசலுக்கு அருகில் வந்தான் . வெளியே சற்று வெளிச்சம் குறைவாக இருந்ததால் , அந்த அம்மாவின் முகத்தை சரியாக அவனால் பார்க்க முடியவில்லை . இப்போது, வாசல் கதவு திறந்திருந்ததால், வீட்டுக்குள் எரிந்த டியூப் லைட் வெளிச்சத்தில், முக்காட்டை விலக்கி இருந்த அந்த அம்மாவின் முகமும், பெண்ணின் முகமும், அவனுக்கு தெளிவாக தெரிந்தது . அம்மாவும் பெண்ணும் பார்க்க அச்சில் வார்த்த மாதிரி ஒரே மாதிரி சாயலில் இருந்தார்கள். தேவாவின் மனசுக்குள் இருந்த குழப்பம் சற்று தெளிய ஆரம்பித்தது . அவனுக்குள் இருந்த சந்தேகம் இப்போது தீர்ந்து விட்டது . தேவாவின் இளமை காலத்தை இனிமையாக்கிய முகம்..... அவனை துக்கப்படுத்தி, தூக்கத்தை கெடுத்த அதே முகம்... ''சோபியா?!' அவள் பெயரை அவன் வாய்விட்டு சொல்லிப்பார்த்து மெல்ல முணுமுணுத்தான். அவனுக்குள் மனதில் ஆழமாக பதிந்து போன சோபியாவின் முகம் மற்றும் உருவ ஒற்றுமை, அவளுடைய மகளுக்கு அமைந்து இருக்கிறது. அவன் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் படிக்கின்ற போதுதான்... காலேஜ் லைப்ரரியில் அவளை பார்த்தான். அவளை முதல் முறை பார்த்த போதே, அவளுடைய அழகு தேவாவை அசத்தியது. அந்த கல்லூரியில் சேர்ந்த மாணவிகளில், அவளை மட்டும் ஏனோ அவனுடைய மனசு ரசித்தது. பார்த்துப் பேச விரும்பியது . அதற்காக அவளுக்கு எதிரே, அவள் கண்ணில் படுவது போல அடிக்கடி போய், அவளை சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு, அவளோடு பேசிப் பழக தொடங்கினான். அவனுக்கு பிடித்த கவிதை, நாவல் , சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து... என்று அனைத்தும் அவளுக்கும் பிடித்திருக்கிறது என்பது தெரிய ஆரம்பித்தவுடன் , தேவாவின் மனது அவளை நேசிக்கத் தொடங்கியது. அவளிடம் சொல்லாமலே, அவளை ரசித்து, ஒரு தலை காதலாக நிறைய கவிதைகள் எழுதினான். "அவள் கூடவே நான் இருக்கணும் போல இருக்கு... அவளை பேச விட்டு பார்த்துக்கொண்டே இருந்தால் பகல் இரவுன்னு ஒண்ணு இருக்கிறதே தெரியல ... பசிக்க கூட மாட்டிங்குது " தேவாவின் ரூம் மேட் மணியிடம் சொல்லி புலம்பினான் .மணி அவனுடைய ஊர்க்காரன். தூரத்து சொந்தம். "தேவா அவள் பார்க்க லட்சணமா அழகா இருக்கா... ஆனா அவளை நீ விரும்புறது உன் வீட்டுக்கு தெரிந்தா அவ்வளவு தான்... உன் வீட்டில உன்னை அடி பின்னி எடுத்துடுவாங்க . காலேஜ் போய் நீ காதலிச்சது போதும் வீட்டில இருன்னு சொல்லிடுவாங்க " மணி தேவாவை பயமுறுத்தினான் . ஆனால் தேவாவுக்கு இருந்த காதலின் வேகம் ... எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்காத காட்டாறு போல இருந்தது .அவனுடைய தீவிரமான காதலை புரிந்து கொண்ட , மணி ... "உனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு ... எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லன்னா !... நீ உன் காதலை அவள் கிட்ட முதல்ல சொல்லு. ஏன்னா ... அவளுக்கும் இதே மாதிரி பிரச்னைகள், அவள் குடும்பத்திலும் இருக்கலாம். அப்ப அதை பத்தி அவளோட பதிலையும் நீ தெரிஞ்சிக்கலாம் . அதை விட்டுட்டு ...இப்படியே ஒரு தலை காதலனாவே நீ இருக்காத ..." மணி சொன்ன பிறகு , தேவாவும் அவன் சொல்வது தான் சரி என்று நினைத்தான். உடனே சோபியாவுக்கு ,காதல் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்க முடிவு செய்தான். அதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். கல்லூரி ஆண்டு விழா சமயத்தில் , கிடைத்த ஒரு வாய்ப்பில் , அவளை தனியாக சந்தித்து பேசினான். "சோபி ...உன்னோட நட்பு கிடைச்ச பிறகு, அது எனக்குள்ள நிறைய மாற்றத்தை கொடுத்து இருக்கு ... நாம நிறைய விஷயங்கள, கதை , கவிதைகளை பத்தி பேசி இருக்கோம். ஆனா இதுவரை என்னை பத்தியும், உன்னை பத்தியும் அவ்வளவா பேசிக்கவே இல்ல. இந்த படிப்ப முடிச்சுட்டு, ஒரு வேலைக்கு போகணும் . கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்துக்கிட்டு குடும்பமா வாழணுங்கிற என்னோட நினைப்பை , நீ தான் மாத்தி இருக்க. எனக்குள்ள நிறைய திறமை இருக்கு. அதன் மூலமா எதிர்காலத்துல நான் பெரிசா சாதிக்கணுங்கிற எண்ணத்தை நீதான் ஏற்படுத்தி இருக்கே ....அதனால , நீ என் கூடவே இருக்கணுமுன்னு என் மனசு சொல்லுது. அதனால என் விருப்பத்தை இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன் . நீ தப்பா நினைக்கலைன்னா... இதை வாங்கி படிச்சுட்டு உன்னோட பதில சொல்லு " அவன் மனசுக்குள்ள இருந்தத படபடப்போடு பேசினான். எங்கே அவன் பேசப்பேச , அவள் குறுக்கே பேசி , அதனால் அவன் சொல்ல வந்ததை சொல்ல மறந்து விடக்கூடாதுன்னு ஒரே மூச்சில் சொல்லி நிறுத்தினான். ஆனால் சோபியா அந்த கடிதத்தை வாங்கவில்லை. அதுக்கு பதிலா, அவள் சொன்ன விஷயங்களை கேட்டதும் ... தேவா அதிர்ந்து போனான். "எங்க குடும்பத்தை பொறுத்த வரை , நான் அவர்களுக்கு ஒரு செல்லப்பிராணி. என் கை , கால்ல சங்கிலியை கட்டி விட்டு, அதோட ஒரு முனையை அவங்க பிடிச்சிக்கிட்டு... 'நீ சுதந்திரமாகதான் இருக்கே'ன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. எனக்கு படிச்சு முடிச்சு கலெக்டராகணுன்னு ஆசை. அவங்களோ என்னை யாராவது ஒருத்தருக்கு காட்டிக்கொடுத்து விடணுன்னு நினைக்கிறாங்க. என் ஆசை என் மனச பொறுத்தது. ஆனா என் குடும்பத்தோட விருப்பம், எங்க மதத்தையும் , சொந்த பந்தங்களையும் சார்ந்தது. கடைசியில் அவங்க விருப்பப்படி ,எனக்கு என் உறவுல ஒரு மாப்பிள்ளையை பிடிச்சு நிச்சயம் பண்ணி வெச்சுட்டாங்க. அவர் வேலை விஷயமாக துபாயில் இருந்ததால, கல்யாணத்த தள்ளி வெச்சிருக்காங்க . இப்ப என் ஆசை படி இந்த படிப்பை படிச்சு முடிக்க அனுமதி குடுத்து இருக்காங்க .... அதனால உங்க கடிதத்தை வாங்கி படிக்கிற நிலைமையில நான் இல்ல! ." அவள் தெளிவா... அமைதியா அவளுடைய நிலைமையை அவனுக்கு எடுத்துச்சொல்லி ,அவனுடைய காதலை மறுத்து விட்டாள் . ஆனால் , அவளுடைய பதிலை கேட்டு, ஏமாற்றத்தில் தேவாவின் காதல்.... அவனுடைய இதயத்திலேயே உறைந்துப் போனது. சோபியா, அவனுடைய வருத்தமான முகத்தைப்பார்த்து விட்டு , "தேவா ...என்னோட சின்ன வயதிலேயே, எங்க குடும்பதில இருந்த வறுமையால, நான் நிறைய சோதனைகளை அனுபவிச்சு இருக்கேன். எதுக்கும் ஆசைப்படக்கூடாது. கிடைச்சத வெச்சு சந்தோசப்பட்டுக்கணும். இது தான் அனுபவ ரீதியா நான் தெரிஞ்சுக்கிட்டது. உன்னை மாதிரி மனசுக்கு பிடிச்ச ஒருத்தரோட சேர்ந்து வாழ , எனக்கு வாய்ப்பு கிடைக்காது. என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரோட மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழ என்னை நான் தயார் படுத்திக்கணும்." அவளுடைய வாழ்க்கையை அதன் போக்கிலேயே,அவள் ஏற்றுக்கொள்ள போவதாக சொன்னதோடு, அவன் காதலை சொல்ல வந்த முறையையும் தவறாக எடுத்துக் கொள்ளாமல், அவனை ஒரு நல்ல நண்பனாகவே இன்னும் நினைப்பதாகவும் சொன்னாள். அவளுடைய பேச்சும் , அவளுடைய அறிவு முதிர்ச்சியும், தேவாவுக்கு வியப்பை தந்தது . ஆனாலும் அவனுடைய காதல் தோல்வியில் முடிந்ததில் தேவாவின் மனம் நொந்து போனது. அதற்கு பிறகு , கல்லூரி படிப்பு முடியும் வரை அவனை சந்திக்கும் போதெல்லாம், அவள் இந்த காதல் விஷயத்தை பற்றி எதுவும் பேசாமல் , எப்போதும் போல கதை கவிதை என்று பேசிக்கொண்டு இருப்பாள். தேவாவுக்குதான் மனசுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து கொண்டே இருக்கும். அவளை பார்க்கும் போதெல்லாம் ,அவன் மனசு கனக்கும். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று ஏக்கத்தோடு பல நாட்கள் சோர்வோடு இருப்பான் . கடைசியாக கல்லூரி படிப்பு முடித்து , அவர்கள் பிரியும் பொழுது , "எனக்கு தெரிந்து இந்த ஊரில இருப்பேனோ அல்லது வெளிநாடு போயிடுவேனோன்னு தெரியல... ஆனா உன்னை நான் மறக்க மாட்டேன். உன்னோட பழகின இந்த நினைவுகள் என் கூடவே இருக்கும் ."ஐ மிஸ் யூ தேவா !" என்று மட்டும் சொல்லி விட்டு போனாள். அவர்கள் மீண்டும் சந்திக்க தேவையான எந்த தகவலையும், அவள் கொடுக்க வில்லை. தேவாவும் அதை கேட்க வில்லை. அதற்கு பிறகு அவளை சந்திக்க, தேவாவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அவளை பார்க்கவும் ,பேசவும் விரும்பி அவன் மனசுக்குள்ளேயே வருந்திக்கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு தனிமையில் இருக்க ஆரம்பித்தான் . அவனுடைய நிலையை பார்த்து, அவனுடைய வீட்டில் ... மனோதத்துவ டாக்டரிடம் காண்பித்து வைத்தியம் பார்த்தார்கள் . பிறகு, அம்மா அப்பா பார்த்து, கல்யாணம் செய்து வைத்த மனைவி, குடும்பம், குழந்தைகள் என்று இது நாள் வரை அவனுடைய காலம் போய்க்கொண்டிருக்கிறது. அவனுடைய மனைவிக்கு தேவாவுடைய காதல் பத்தி தெரியாது. அவனும் சோபியாவை பற்றியோ , அவனுடைய ஒரு தலை காதலை பற்றியோ யாரிடமும் சொல்லாமல் விட்டு விட்டான் . அந்த பழைய நினவுகளோடு ,தேவா அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு இருக்க , அந்த பெண்மணி (சோபியா ) அவனை கவனித்து விட்டாள். அவள் கண்களை சுருக்கி, வீட்டு கதவுக்கு பக்கத்தில் நின்றபடியே , தேவாவை உற்றுப் பார்த்தாள். "யாருங்க சார், என்ன வேணும்!' என்று அவள் கேட்க, தேவா சட்டென்று சுதாரித்துக் கொண்டான். அவனுக்கு நெஞ்செல்லாம் படபடத்தது. இப்போது அவள் முகத்தை, இன்னும் தெளிவாக அவனால் பார்க்க முடிந்தது. அவள் முகம் சற்று வாடியது போல இருந்தாலும், அந்த பொலிவு அப்படியே மாறாமல் இருந்தது. அவள் கொஞ்சம் நடுக்கத்தோடு பேசினாலும் , அவளுடைய குரலும் மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டான். அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தி பேசலாமா? என்று நினைத்தவனை, பேச விடாமல் எதுவோ தடுத்தது. அவனுக்கு இருக்கிற சுகர், பிபி போன்ற பாதிப்புகளால் மெலிந்து விட்ட உருவத்தோடு , வெண்தாடியோடு இருக்கிற தற்போதைய தோற்றத்தில், இப்போது 'அவன் தான் தேவா' என்று அவன் சொன்னாலும், அவள் நம்ப மாட்டாள் என்று அவனுக்குத் தோணியது. ‘அவளிடம் என்ன சொல்வது?! நான் தான் கல்லூரியில் உன்னோடு பழகிய தேவா என்று சொல்வதா ?’ 'தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருப்பவளிடம் போய், பழையதை பற்றி பேசி ... அவள் மனதை குழப்புவது அவனுக்கு சரியாகப் படவில்லை. 'அவள் கடைசியாக சொன்னது போல, அவனோடு பழகிய நினைவுகள் அவளோடு இப்போதும் இருக்கலாம். அதில் அவள் ஒரு அழகான தேவதையாகவும் , அவன் ஒரு அழகான இளைஞனாகவும் , கவிதை, கதைகளை பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் , தேவாவுடைய இப்போதைய அவள் உருவத்தை பார்த்தால் , அது அவளுக்கு கவலையைத் தரலாம். அவளுடைய மனசு கஷ்டப்படலாம். அவனால் அவளுடைய குடும்ப வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. அதனால் பேசாமல் இங்கிருந்து போய் விடலாம்.' என்று நினைத்தான். திரும்ப அவள் தேவாவைப் பார்த்து " யாருங்க அது ! என்ன வேணும் " என்று சற்று சத்தமாக கேட்க , அவன் அவசரமாக , அவளிடம் 'ஒன்றும் இல்லை' என்பது போல தலையை மட்டும் ஆட்டி காண்பித்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து, தன்னுடைய ஆக்டிவாவில் ஏற போனான். அதை பார்த்து விட்டு , அம்மாவும் பொண்ணும் வீட்டின் கதவை சாத்திக்கொண்டார்கள். தேவா , இத்தனை வருடம் கழித்து, அவளை பார்த்த சந்தோசத்தோடு , வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு. கிளம்ப நினைக்கையில், சாத்தப்பட்ட கதவு மீண்டும் திறக்கிற சப்தம், அவன் காதில் விழுந்தது. ‘சோபியாவுக்கும் அவளுடைய உள்ளுணர்வு, அவனை யாரென்று மீண்டும் பார்க்க தூண்டியது. அதனால் அவள், அவனை பார்க்க, வீட்டு வாசலை விட்டு வெளியே வந்து நின்றாள் . தேவாவுக்கும் அவளை திரும்பிப் பார்க்க தோணியது. ஆனால் 'வேண்டாம்' என்று உறுதியாக நினைத்தபடி, "எங்கிருந்தாலும் வாழ்க " என்று மனதுக்குள் சோபியாவை வாழ்த்திவிட்டு , அங்கிருந்து புறப்பட்டு விட்டான். சோபியா அவன் கிளம்பிப் போவதை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள். வானத்தில் நிலவை மேகங்கள் சூழ்ந்து கொண்டு மறைக்க , கூடு திரும்பும் பறவைகள் உயரத்தில் கூட்டமாக போய் கொண்டிருந்தன. ஏனோ அப்போது, அவளுக்கு தேவாவோடு பழகிய நினைவுகள் வந்தது . முற்றும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in