M. VENANTIUS
சிறுகதை வரிசை எண்
# 139
மனைவியின் மாமியார்
தட்டில் வகை வகையாக உணவுகள் மேஜையில் வைக்கப்பட்டன.
“அப்பா உங்களுக்கு” என்று மகள் கேட்டாள்.
“அப்பாவுக்கு வீட்டில் ஆச்சி சமையல் இருக்கு.”
“அப்படியா, அப்ப நாங்களும் ஆச்சி கையால சாப்பிடுவோமே?”
“அந்த உணவு உங்களுக்கு சரிப்பட்டு வராது.”
“ஏன்பா?”
“சோறு, பால், பழம், சீனி ஆகியவற்றை பிசைந்து தருவார்கள்.”
“ஓகோ! அப்படியா, செய்தி! அதான பார்த்தேன்.”
சரி. சரி. சீக்கிரம் சாப்பிடுங்க, நேரம் ஆகுது.
விடுமுறையில் வந்த ஜான் தன் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் இருவரையும் கடைவீதிக்கு அழைத்துச் சென்றான். பிள்ளைகள் தங்களுக்குரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். அம்மாவும், அப்பாவும் வரவேற்பறையில் அமர்ந்து மகன் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்களை பொறுமையாக சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நிறைய விளையாட்டுகள் விளையாடிய களைப்பில் பிள்ளைகள் வரவே அறுவரும் சாப்பாட்டு பிரிவிற்குச் சென்றனர். ஐவருக்கும் விரும்பிய உணவு வகைகளை வாங்கிக் கொடுத்தான்.
வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகள் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டனர். அப்பா தொலைக்காட்சி செய்திகளில் மூழ்கினார். மனைவி ஆன்லைனில் வேலை பார்க்க ஆரம்பித்தாள். அம்மா சமையலறையிலிருந்து சாப்பாடு தட்டு, உணவு, பால், பழம், சீனி அனைத்தையும் எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். பொறுமையாக அனைத்தையும் ஒன்று சேர்த்து, கட்டியில்லாமல் பிசைந்து உருண்டை பிடித்து மகனிடம் நீட்டினாள். மகனும் ஆர்வத்துடன் வாங்கி உண்ண ஆரம்பித்தான். சத்தம் கேட்டு அருகே வந்த மகள் “அப்பா நல்லாயிருக்கா?”
“ஆமாம், சுவையோ சுவை, எந்த ஐந்து நட்சத்திர விடுதியிலும் கிடைக்காது. சாப்பிட்டுப் பார்க்கிறாயா?”
“எங்கே ஆச்சி, எனக்குக் கொஞ்சம் தாங்க.”
“ச்சே, இவ்வளவுதானா? பால் கஞ்சு மாதிரி இருக்குது.”
இதுதான் நான், அத்தை எல்லாரும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போது ஆச்சி இரவு உணவிற்கு இதைத்தான் தருவார்கள். அதனால்தான் நாங்கள் நோயின்றி திடகாத்திரமாக இருக்கிறோம்.
அப்ப நாங்க சாப்பிடுகிற விடுதி உணவுகள் எல்லாம் வீணா?”
“வீண் என்று சொல்ல முடியாது. ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். எல்லாம் பொடி மயம்.”
“சும்மா சொல்லாதீங்க அப்பா!”
“உண்மையைத்தான் சொல்றேன். அந்தக் காலத்தில் நாங்கள் குழாய் தண்ணீர் குடித்துத்தான் வளர்ந்தோம். இப்ப குடுவைத் தண்ணீர் அல்லவா எங்கும் பிரபலமாக இருக்கிறது!”
“ஆங், அதுக்கு நாங்க என் செய்ய? அப்ப கனிணி இருந்துச்சா? அலைபேசி இருந்துச்சா? எல்லாம் விஞ்ஞான முன்னேற்றம் அப்பா?”
சரி. சரி. நேரமாகுது. போய்த் தூங்குங்க” என்ற ஆச்சியின் குரலைக்கேட்டு பிள்ளைகள் படுக்கையறையை நோக்கிச் சென்றனர் அலைபேசியுடன்.
மனைவியின் அலைபேசி ஒலித்தது.
“சொல்லு ரேவதி.”
“என்ன சுபா சுற்றுலா எப்படி இருக்கிறது?”
“என்ன கிண்டலா? அவருடைய சொந்த ஊருக்குத்தான வந்திருக்கோம்.”
“சும்மாத்தான் கேட்டேன். கோச்சுக்காதே!”
“எப்ப பார்த்தாலும் அவரு சொந்தக்காரங்க வீட்டுக்கே விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறாரே? உங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு உங்களைக் கூட்டிச் செல்லமாட்டாரா?”
“எங்கே போனால் என்ன? பிள்ளைகளுக்குத் தேவை விiயாட்டுகள் நிறைந்த பகுதி. அப்புறம் வகை வகையான விடுதி உணவுகள். இது பேதாதா?”
“அதுவும் சரிதான். கேட்கிறேனு தப்பா நினைச்சுக்காத!”
“உங்க உறவுக்காரங்களே உன் கணவருக்கு ஆகாதா?”
“ஏன் ரேவதி, என் மாமியாரை அவருக்கு ரொம்பப் பிடிக்குமே!. தினசரி அவங்க கையாலதான் உணவு உண்கிறார். எங்களுக்கு விடுதியில் உணவு வகைகள் வாங்கித் தந்து விட்டு அவரு மட்டும் என் மாமியார் சமையலை ஒரு பிடி பிடிக்கிறார். என் மாமியர் எனக்கு உறவுக்காரங்க தானே?”
“நல்லா சமாளிக்கிறாயம்ம சுபா!”
“அவருடைய தங்கை அவளது கணவன் வீட்டில்தான் இருக்கிறார். அவர்க”ளோடுதான் சுற்றுலா செல்கிறாள். அவ்வளவு ஒட்டுதல் அங்கே. அப்படி இருக்கும்போது நான் என் கணவரைச் சார்ந்துதானே குடும்பம் நடத்தனும். அதுதானே முறை!”
“உங்க அம்மா உனக்குச் சொல்லித் தரவில்லையா?”
“என்னது?”
“பொதுவா எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதான். அதாவது மகளை வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் பணியில் இருப்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். மகனுக்கு மட்டும் உள்ளுரிலேயே மருமகளைத் தேடிக் கொள்வார்கள். மகனுக்கு மனைவியுமாச்சு, மாமியாருக்கு வேலைக்காரியுமாச்சு,
“என்ன ரேவதி, இப்படிச் சொல்றே?”
“நான் என்ன இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிப்புட்டேன்! நாட்டில் நடப்பதைத் தானே சொல்றேன்.”
அது சரி. உன்கூட பேசினால், குடும்பத்தில பிரச்சனையை உண்டுபண்ணிவிடுவாய் போல.”
“ஆமா பொல்லாத பிரச்சனையை கண்டுட்ட. உம் புருஷன் உன்ன தாங்கு தாங்குனு தாங்குறாரு. எனக்குத் தெரிந்த தோழிகளின் கணவர்கள் எல்லாம் அவரவர் மனைவியின் உறவினரையே எதற்கெடுத்தாலும் நாடிச் செல்வர். தங்கள் கூடப் பிறந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆண்டுக்கணக்கில் ஆகும். ஏன், திருமணத்திற்கு அப்புறம் அவ்வளவாக செல்வதில்லை. ஏதாவது விஷேசம் என்றால் காலையில் சென்று மாலையில் திரும்பி விடுவார்கள். ஆனால், மனைவியின் உறவுக்காரங்க நிகழ்ச்சிக்கு முந்தின நாளே படையெடுத்துவிட்டு, அடுத்த நாள் பின்னிரவில்தான் தங்கள் இல்லம் வந்து சேர்வார்கள்.”
“நம்மலால எல்லாம் அப்படி முடியாதம்மா.”
“முடிந்தவரை அவரு சொல்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணித்தான் வாழ்க்கையை ஓட்டுகிறேன். அவருடைய பிரின்சிபிள் என்னவென்றால் மகள் வீட்டில் அவளது அப்பா அம்மா தங்கிவிடக் கூடாது. ஊரார் ஒரு மாதிரியா பேசுவாங்க!”
“என்ன மாதிரி?”
“இப்படி மகள் வீட்டில் தங்க வேண்டுமென்றால் மகளை எதற்குக் கலியாணம் செய்து கொடுக்கணும்?. வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்?” என்று.
“அட போம்மா, உங்கிட்ட எல்லாம் பேசிச் ஜெயிக்க முடியாது!”
“சரி விடு ரேவதி. அப்புறம் மகளிர் கூட்டம் என்னவாச்சு” என்று பேச்சை மாற்றினாள் சுபா.
“அதுவா, அது அப்படியேதான் இருக்குது?”
“ஏன் என்னவாயிற்று.”
தலைவி என்றால் நடுநிலையா இருக்கணுமா இல்லையா?”
ஆமாம்.”
“தலைவி தனக்கு வெளிநாட்டு சென்ட் பாட்டில், வெளிநாட்டுப் பொருட்கள் தருகின்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறாள். போதாக்குறைக்கு மகள், மகனுடைய தோழிகள் தோழர்களின் அம்மாமார்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறாள்.”
“அதுக்குத்தான் நான் மகளிர் கூட்டத்திற்கே வருவதில்லை. குழாயடிச் சண்டை போல இருக்கும். ஒரே புறணி பேசுகிற கும்பலாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்த ஒருசில இப்போதுள்ள உறுப்பினர்களே என்னிடம் கூறுவார்கள்.”
அப்படிச் சொல்லிவிட முடியாது. மகளிர் கூட்டத்தில் நிறை நன்மைகள் நடக்கிறது. ஏழை எளிவர்களுக்கு உதவிடும் வகையில் செயல் திட்டங்கள் நடைபெறுகிறது.
“அப்ப அந்த வெளிநாட்டு சென்ட் போன்றவை எல்லாம் பொய்யா?”
“அது ஒரு சில ஆண்கள் தங்கள் மனைவியரைக் குறை கூறுவதற்காக மனைவியின் தோழிகள் இல்லத்திற்குச் செல்லும்போது, வெளிநாட்டில் தாங்கள் வாங்கிவந்த பொருட்களை வாரி வழங்குவர். இது அவருடைய மனைவிக்கும் தெரியாது. அந்த தோழியும் அவருடைய மனைவியிடம் தெரிவிப்பதில்லை. முடிந்தவரை தோழியைப் பற்றிய உண்மைகளை அப்படியே பட்டவர்த்தமனமாகச் சொல்லிவிடுவர். எல்லாம் அந்த வெளிநாட்டுப் பொருட்கள் பெற்ற மயக்கத்தில்.”
“அடப் பாவமே? இப்படியுமா தோழிக்குத் தோழி துரோகம் செய்வார்கள்.”
“அதுதான் சொன்னேன் அல்லவா? அவரும் இதை எதிர்பார்த்துத்தான் அவரது மனைவியின் குறைகளைப் புட்டு புட்டு வைக்கிறார். அதற்கேற்றாற்போல் ஒத்து ஊதுவார்கள் தோழியர். இவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் எதுவும் மனைவிக்குத் தெரியாமல் இருவரும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்துவார்கள். மனைவியின் முன்பாக அவரது தோழி கூறியதாகக் காட்டிக் கொள்ள மாட்டார் கணவர். அதே போல் தோழியின் கணவரிடம் போட்டுக் கொடுத்ததைக் கடுகளவும் தெரிவிக்க மாட்டாள்.”
“ஏன், ரேவதி, எப்பவோ, எங்கேயோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை இப்படி பகிரங்கமாக வெளியிடுவது நியாயமல்ல அல்லவா?”
“யாரு சுபா, இந்த நியாய அநியாயமெல்லாம் பார்க்கிறது?”
“அப்ப சரி என்கிறாயா?”
முன்னயெல்லாம் தெருவுக்குத் தெரு குழாய் தண்ணீர் பிடித்தோம். அங்கே கொஞ்ச நேரம் உரையாடுவது. அப்புறம் வீட்டுக்கு முன்பாக சாலையில் இருபுறமும் மரங்கள் இருக்கும். அதன் நிழலில் மதியம் உணவருந்திவிட்டு பேசுவதுண்டு. மாலையில் அலுவலகம் சென்று வந்த கணவருக்கும், பள்ளிக்குச் சென்று வந்த பிள்ளைகளுக்கு மாலை டிபன் கொடுத்துவிட்டு தெருவில் உள்ள மற்ற பெண்களுடன் உரையாடி வந்தோம்.”
“ஆமாம். அதுக்கென்ன இப்ப?”
அதனால்தான் இப்படி மகளிர் கூட்டம் அது இதுன்னு கருத்துகளைப் பறிமாறிக் கொள்கிறோம். ஆண்களுக்கு அலுவலகத்தில் காலை மாலை தேநீர் நேரம் மதிய உணவு நேரம் போன்றவற்றில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள முடியும். சமையலறையே கதியென்று கிடக்கும் நமக்கு மகளிர் அணிதான் ஆறுதல்.”
“ஓகோ அப்படிச் சொல்ல வருகிறாயா?”
“ஆமாம் சுபா, அதிலும் ஒரு தேடுதல் இருக்கும்போது, மனதிற்கு நிம்மதியாக இருக்குது. நீ சொன்ன மாதிரி எங்கேயோ ஒரு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், தூசியைத் தட்டிவிட்டுச் செல்வது மாதிரி கடந்து சென்றாக வேண்டும். அவள் அப்படிச் சொல்லிவிட்டாளே! இவள் இப்படிச் சொல்லிவிட்டாளே! என்று மனதிற்குள் போட்டுப் புகை மூட்டிக் கொண்டிருந்தால், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தான் விசுவரூபமெடுக்கும்.”
“அதுவும் சரிதான் ரேவதி.”
“ஏதோ உனக்கு நல்ல கணவர் அமைந்த மாதிரி எல்லாருக்குமா அமைந்து விடுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கணவன் மனைவி வீட்டிலேயே ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரச்சனைகள் அதுவாகவே உள்ளுக்குள் ஊஞ்சலாகி விடுகிறது.”
“உன்னைக் கட்டிக்கிறதுக்கு ஒரு எருமை மாட்டைக் கட்டிக்கலாம் என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக் கொண்டு ஓயாமல் சண்டை போடுவதே வாடிக்கையாகிவிட்டது.”
“வாழ்க்கையே இப்படித்தான் என்று நினைத்து வாழ்ந்தால் அப்படித்தான் தோன்றும். எதையும் எதிர்பார்க்காமல் நடப்பது நன்மைக்கே என்று வாழ்ந்தால் பிரச்சனைகள் நம்மை என்ன செய்து விட முடியும் அதுபாட்டுக்கு நம்மை விட்டு அகன்று போய்விடும் ரேவதி?”
“ஏதோ உங்கிட்ட பேச வேண்டுமென்று தோன்றியது. அதனால்தான் என்னுடைய கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டேன். அதுவும் எனக்கு ஆறுதலாகத்தான் இருந்தது சுபா.”
“சரி. சரி. வருத்தப்படாதே. மகளிர் அணிக்கு நீ உழைப்பது வீண்போகாது. நான் குடும்பத்துக்காக முழுவதுமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது? அப்படியே பழகிப்போச்சு. நீ பிறருக்காக அதுவும் ஏழை எளிவர்களுக்காக அவர்களது வாழ்வில் முன்னேற்றம் காண உழைக்கிறாயே! அதற்கே உனக்கு நன்மைகள் பெருகி வரும். தொடர்ந்து மகளிர் அணியில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள் ரேவதி.”
“ஏதோ தோழி ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி என்னை சமாதானப்படுத்த முயலுகிறாய். நன்றி சுபா.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்