பா.மஹிழினி
சிறுகதை வரிசை எண்
# 134
விடாமுயற்சி
எந்த ஒரு வேலையானாலும் அதைச் செம்மையாகவும் செழுமையாகவும் செய்து முடிக்க அதிலேயே முழுக்கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டோடும் முயற்சியோடும் செய்து முடிக்க வேண்டும்.
வெற்றி என்ற கோட்டை நோக்கி ஓடிய பாலுவின் ஓட்டத்தை முடக்குவதற்கு முளைத்தெழுந்த தடைக்கற்கள் கொஞ்சநஞ்சமில்லை..
படித்தது முதல் வேலைக்குச் செல்லும்வரை எத்தனை எத்தனை தடைகள்.. அத்தனையையும் தகர்த்து 33 ஆம் வயதில் அரசுப் பணியில் சேர்ந்தார் பாலு.
சொந்தபந்தமும் சுற்றமும் பாலுவின் வளர்ச்சியை விரும்பாமல் முட்டுக்கட்டை போட்டு தடைகளாய் நின்றாலும் குதிரைக்குக் கடிவாளம் கட்டியதுபோல் மனசிற்குக் கடிவாளம் கட்டிக் கொண்டார் பாலு.
'போற்றுவார் போற்றட்டும் .. புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்..' என்ற கொள்கையுடைய பாலு தன்னுடைய தளராத விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் கல்லூரிப் படிப்பை முடிந்து வெளிநாடு சென்றார்.
"இனி நம் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.." என்று நம்பிக்கொண்டிருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலையை விட்டுவிட்டு ஊர் திரும்ப வேண்டிய சூழல்.
சறுக்கலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சுற்றம் ஆறுதல் சொல்லாமல் கேலி செய்து சிரித்தது..
'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்' என்று எப்போதோ தேர்விற்காகப் படித்த குறள் தன்னம்பிக்கைக் குரலாக மனதிற்குள் ஓங்கி ஒலித்தது.
தன் தோல்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தன் முன்னேற்றத்தைத் தடுக்க நினைத்த, பொறாமையும் வஞ்சகமும் நிறைந்த எதிரிகளை எதிர்த்து வெல்ல கல்வி ஒன்றே ஆயுதம் என்பதை உறுதியாக நம்பிய பாலு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்தார். பொறியியல் கல்வி படித்தாலும் பள்ளிப் பாடப் புத்தகங்கள், தமிழறிவு என ஆழ்ந்து படித்தார். கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் படிப்படியாக தேர்வு பெற்று இன்று தன் மனைவி சுகன்யாவின் தொடர் உற்சாக ஊக்கமூட்டலில் கூட்டுறவு சார்பதிவாளராக உயர்ந்துள்ளார். அவரை விட்டு விலகிய உறவுகள், புகழ், பணம், மதிப்பு, மரியாதை எல்லாம் இன்று அவரைத் தேடி, கூடி வருகின்றன..
அவர் வேறு யாருமில்லை.. என் அப்பா கரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான்..
எங்களுக்கானவராக மட்டுமல்லாமல் எல்லோருக்குமான வழிகாட்டியாக அவர் சுட்டிக்காட்டப்படுவதற்கு அவர் செய்த மொய்ம்புறத் தவமே காரணம்.
இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் தன் விடாமுயற்சியால், கடின உழைப்பால், மன உறுதியால் வெற்றி கொண்டு இலட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு என் அப்பா ஓர் எடுத்துக்காட்டு.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்