Madhumitha
சிறுகதை வரிசை எண்
# 135
வணக்கம்.
படைப்புக் குழுமம் நடத்தும், "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி 2025"க்கு,
*வலை – மதுமிதா*
“ஹைய்யா. அம்மா நிஜமாவே இனிமே இந்த கொசுத் தொல்லை இருக்காதாம்மா,” என்றாள் சிந்து, கையில் இருக்கும் மொபைலில் மெசேஜ் செய்தபடி.
”இருக்காதும்மா. இன்னிக்கு நிம்மதியா தூங்கு சிந்து. இப்போ தூங்குனாதான் காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருக்கலாம். அடுத்த மாசம் முழுப்பரீட்சை ஆரம்பிக்குதே. இப்போ இருந்து படிச்சாதான பரீட்சையில் எழுத கொஞ்சம் ஈஸியா இருக்கும். ப்ரீதி படிக்கணும்னு சொன்னாளே. அந்த போனைத் தூக்கி அந்தப் பக்கமா வெச்சு…” என்ற சியாமளாவை பேச விடாமல்,
“அம்ம்ம்ம்ம்மா. எப்போ பார்த்தாலும் படி… படி… தானாம்மா… கொஞ்சம் ப்ரீயாவிடேன்.” என்று மொபைலில் ஆழ்ந்தாள் சிந்து.
“சிந்து. சொன்னாகேளு. என்னை கத்தவைக்காதே, இன்னிக்கு தொண்டை வேறு சரியா இல்ல.” என்றவள் ஐந்தாறு முறை இருமி விட்டு, “இன்னிக்கு ஒருநாள்தான். நாளையிலிருந்து டைம்டேபிள் போட்டுட்டு படிக்கணும். ப்ரீதி கம்பைண்ட் ஸ்டடி செய்யலாம்னு சொன்னான்னு சித்ரா சொன்னாளே. சரின்னு சொல்லு. இல்லைன்னா…” என்று கண்டிக்கும் குரலில் கூறிவிட்டு, சிந்துவின் முகம் மாறியதும், மெல்ல சிரித்தபடி கண்களைப் பெரிதாக்கி உருட்டி, கையால் மொபைலைப் பிடுங்கி விடுவேன் என்பது போல பாவனை செய்தாள்.
சிந்து எழுந்து ஓடி வந்தாள். அம்மாவை இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தமிட வந்தாள். சியாமளா முகத்தைத் திருப்பியதும், ஒரு கையைப் பிடித்து, இன்னொரு கையால் தலையில் கை வைத்து முகத்தைத் திருப்பினாள்.
“தலையில கைய வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். தலவலிக்குது” என்று சியாமளா சொன்னதும், சிந்துவின் முகம் வாடிவிட்டது.
“என்னம்மா…” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள்.
இன்றைக்கு சுந்தரைப்பற்றி அம்மாவிடம் சொல்லவந்தும் சொல்ல முடியவில்லை. அம்மாவோ என்ன விஷயமாக இருந்தாலும், தன்னிடம் மனம் விட்டு வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். இவளுக்கோ இப்போது அம்மாவிடம் இதைச் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
மெதுவாக ஹாலிலிருந்து அடுத்த அறைக்குப் போய்விட்டாள்.
முன்னால் திண்ணை போல சிறு அறை, அடுத்து ஆறடிக்குஆறடி வரவேற்பறை, சிறிய ரேழியும், அடுப்பங்கரையும். வலது பக்கத்தில் கழிப்பறையும் குளியலறையும் இணைந்திருந்தது. அந்தத் தண்ணீர் எல்லாம் ஒரு பக்கமிருந்த எலுமிச்சைமரம், முருங்கைமரம், பப்பாளிமரம், கருவேப்பிலைசெடிக்கும் மீதி தெரு கால்வாய்க்கும் போகும். தெரு கால்வாயில் செல்லும் கழிவுநீர் பாதை கசடுகள் நிறைந்து, இன்னும் பாதாள சாக்கடையில் இணைக்கப்படவில்லை.
வெயில்காலம் வந்துவிட்டால் என்னதான் சுத்தமாக வீடு துடைத்த பிறகும் ஈக்கள் வந்து விடும். வெயில் காலம் முடிந்து, மழையென்று ஒரே ஒரு சாரல் போதும். கொசுக்கள் தொல்லை ஆரம்பித்து விடும். ஆழ்ந்து படிக்கவோ, நிம்மதியாகத் தூங்கவோ முடியாது.
சியாமளாவும், சித்ராவும் தோழிகள். ஒரே தெருவில் நான்கு வீடுகள் தள்ளி இருவர் வீடும் இருந்தன. சிந்துவும் ப்ரீத்தியும் ஒரே வகுப்பில் படிக்கும் தோழிகள். ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பில் இருக்கிறார்கள். இருவருக்கும் +1 அறிவியல் பிரிவு எடுக்க வேண்டும் என்று விருப்பம். சிந்து வானவியல் படிக்க விரும்பினாள். ப்ரீத்திக்கு மருத்தவராகும் விருப்பம். இருவரும் இணைந்து படிப்பதும் உண்டு.
இந்தக் கொரோனா விடுமுறை வந்ததிலிருந்து, அதுவும் பள்ளிப் பாடம் மொபைலில் நடத்த ஆரம்பத்ததிலிருந்தே, இந்தக் குழந்தைகள் மொபைலைவிட்டு விலக முடியாமல், கர்ணனின் கவசமும் குண்டலமும் உடலில் இணைந்ததுபோலவே மொபைலை வைத்துக்கொண்டு திரிந்தார்கள். இவர்களும் விதிவிலக்கில்லை.
பள்ளியில் பரீட்சை எழுத உட்கார வைக்கும்போது, இடம் மாற்றி உட்கார வைப்பார்கள். ஒரு முறை வகுப்பில் குழுவாகப் பிரித்து அவர்களுக்குள் விவாதம் செய்து கேள்வி கேட்டு பதில் அளித்து படிக்கும்போது அவர்களின் வாசிப்பும், புரியாத கேள்விகளுக்கான பதில்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொடுத்தும் நண்பர்களாகி விட்டார்கள்.
ஒரு கட்டுரைப் போட்டி வந்த போது, கட்டுரை அளிக்கச் சொல்லி இருந்தார்கள். அப்படி ஒருமுறை ப்ரீதியும் சிந்துவும் சுந்தரும் விக்ரமும் ஒரு குழுவில் இருந்து மிகச்சிறந்த கட்டுரையை அளித்து வகுப்பில் அவர்கள் குழு முதல் பரிசு பெற்றனர். அந்தக் கட்டுரையை பேசி பேச்சுப்போட்டியில் சுந்தர், அவர்களின் பள்ளிக்கு சுழற்கோப்பை பரிசு பெற்று வந்தான்.
அப்போது இவளுக்கு நண்பர்களாக இருந்த ப்ரீதி, சுந்தர், விக்ரம் மூவரும் பேசி வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு படித்தார்கள். எப்படியும் நால்வரும் வெற்றி பெறுவோம் என்று இருந்தபோது, இந்த இரண்டு வாரங்களாக சுந்தர் அவளுக்கு மெசேஜ் செய்கிறான். எப்போதும் அவர்கள் குறுஞ்செய்தியில் பேசுவது வழக்கம்தான் என்றாலும், அவர்கள் படிப்பு குரூப் ஸ்டடி என்று மட்டுமே பேசி இருக்கின்றனர். இரண்டு நாட்களாக இதில் வித்தியாசம் இருக்கிறது. நட்பைக் கடந்த வேறுபாடு துல்லியமாகத் தெரிந்தது. ஆனாலும் அது அவளுக்கு குழப்பமாக இருந்தது. நேரடியாகப் பேசி விடலாமென்றால் அவன் பள்ளிக்கு வரவில்லை. எதற்கு லீவில் இருக்கிறான் என்று தெரியவில்லை.
‘உன் பெயர் சிந்து, என் பெயர் சுந்தர். எவ்வளவு ஒற்றுமை பாரேன்,’ என்று ஆரம்பித்த குறுஞ்செய்தி, இந்த இரண்டு நாட்களாக படிப்பை, பாடங்களைத் தவிர்த்து வேறுவிதமாக மாறி தீவிரமாகியது.
முந்தையதினம், ‘நீ இல்லைன்னா என் உயிர் போய்விடும்,’ என்ற செய்தி வந்ததிலிருந்து கொஞ்சம் படபடப்பாக இருந்தது.
‘என்னடா. ரொம்ப சினிமா பார்க்கிறயா? படி,’ என்று பதில் அனுப்பி விட்டாள். ஆனாலும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
ப்ரீதி, விக்ரமிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று நினைத்தவள், வேண்டாம் அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று வந்தாள்.
இன்று அம்மா வேலை முடித்துவிட்டு வந்ததும், கதவில் கொசுவலை அடிக்க இரண்டு பேர் வந்துவிட்டார்கள். கதவில் வலைபதிக்கும் வேலை நடக்கும்போதே, காலையில் வைத்த சாம்பாரை சூடுசெய்து, சிந்துவுக்கு தோசை ஊற்றி, மிளகாய்பொடி தொட்டு சாப்பிடக்கொடுத்தாள்.
முன் கதவில் வேலை முடிந்ததும், பின்பக்கக் கதவிலும் கொசுவலை வேலை முடிந்தது. கதவின் வழியாக அந்தப் பக்கம் பார்க்க முடிந்தது. சின்ன இடுக்குகள் வழியாக வெளிச்சம், காற்று எதற்கும் தடை இல்லை.
எல்லாமே நன்றாக இருப்பதாகத் தெரிந்ததும், ‘கதவைத் திறந்து மூடும் போது ஒன்றிரண்டு கொசுக்கள் வந்தா, ‘கொசுபேட்’டால அடிச்சுக்க வேண்டியதுதான்,’ என்று சொன்னவன்,
‘கதவைத் தெறந்து மூடிப்பாருங்கம்மா, நாங்க இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போகணும்,’ என்றதும், கதவைத் திறந்து உடனே மூடினாள். கதவு தானாகப்போய் சிக்கென்று ஒட்டிக்கொண்டது. காந்தம்போல அது சிறு ஒலியுடன் ஒட்டிக்கொண்டதைப் பார்த்து, இன்னும் இரண்டு மூன்று முறை திறந்து மூடிப்பார்த்துவிட்டு, ‘நல்லாருக்கே,’ என்றாள்.
கதவின் அடிப்பக்கத்தரை இடைவெளி வழியாக கொசு உள்ளே வருவதைப் பார்த்து அதற்கும் அடைப்பு வைத்தனர்.
“கொசுவலைக்கும் கதவு பிட் செஞ்சதுக்கும் பணம் நாளைக்கு அய்யாட்ட வாங்கிக்கிறோம்மா,” என்று சொல்லிச்சென்றதும், வேலைகளை முடித்துவிட்டு சியாமளா சாப்பிட வந்தாள்.
‘நான் தோசை சுடவாம்மா?’ என்றாள் சிந்து.
‘இன்னிக்கு உனக்கு என்ன காரியம் ஆகணும் சிந்து. ம். சொல்லு…,’ என்ற சியாமளா, சிந்துவின் முக சோர்வினைப் பார்த்து,
‘என்ன சிந்து சிரிப்பையே காணோம். நானே செஞ்சுக்கிறேன். போ நீ போயி ஹோம்ஒர்க் முடிச்சுட்டு படும்மா,’ என்றாள்.
அரைப்பரீட்சை விடுமுறை முடிந்த பிறகு, இனி முழு ஆண்டுத்தேர்வு வரையில் படிக்க வேண்டியிருக்கும் என்பதால், பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா அழைத்துப் போயிருந்தார்கள். போன இடத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்கள்.
வந்ததும் வீட்டில் சண்டை போடாத குறை. என்ன என்றால், சிந்து சொன்னது:
“அம்மா ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கைகழுவப் போறப்போ சாப்பிட்ட தட்டைக் கையோடு கழுவ பேசினுக்கு கொண்டுபோயிட்டேன்மா. அப்புறம் மறுபடியும் போயி டேபிள்ல வெச்சுட்டு வந்தேன். எல்லாம் உங்களாலதான்,” என்றாள்.
சியாமளா சட்டென சிரித்து விட்டாள்.
“சிரிங்க. சாப்பிட்ட தட்டை கையோடு கழுவி வைக்கணும்னு நீங்க சொல்லிச் சொல்லி வீட்டுல செய்யறதுபோல அங்கயும் செஞ்சுட்டேன்.”
“வேறு யாராவது அப்படி செஞ்சாங்களா..?”
“இல்லம்மா. நான் பிளேட்டை டேபிளில் வெக்கிறதப் பாத்துட்டு சுந்தரும் சிரிச்சுட்டான்மா.”
“இப்ப என்ன. இனிமே ஹோட்டல்ல தட்டை எடுக்காதே. அதுக்கு ஏன் இவ்ளோ உர்ருன்னு இருக்கு முகம். நீ சிரிச்சாதான் அழகு. சிந்து என் செல்லமுல்ல சிரி கண்ணு,” என்றதும் இருவரும் சிரித்தார்கள்.
இந்த மூன்று மாதங்களாக ஒரு முறை வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டே, எந்த வேலையையும் செய்தாள்.
சித்ராவும், சியாமளாவிடம்,
“சியாமளா நாங்க எல்லாம் குழந்தைங்க படிச்சா போதும். வேலை செய்ய வேண்டாம்னு இருக்கோம். நீ ஏன் அவள வேலை செய்யச் சொல்றே? ப்ரீதிட்ட சிந்து எவ்வளவு அழகா தோசை சுடுகிறா பாரேன்னு சொல்லி அவளை வேலை செய்யச் சொன்னா, என்னம்மா கம்பேர் செஞ்சு பேசறீங்க. நீங்க என்ன சிந்து அம்மாபோல வேலைக்கு போறீங்களான்னு, நான் உங்களைக் கேட்டேனா? இப்ப நான் படிக்கணும்ன்னு சொல்லிட்டா,” என்றாள்.
“நல்லா படிக்கிறாளே ப்ரீதி. நீ ஏன் சிந்துவோடு கம்பேர் செய்யறே. அவ சொன்னது சரிதானே? அப்புறம், எப்பவும் படிச்சுட்டே இருந்தா, அவங்களுக்கு சோர்வா இருக்கும். நடுவுல சின்னதா ஏதாவது வேலை செஞ்சா, வேலையும் இப்பவே பழக்கமாகி, வேலை செய்றோங்கிற நினைப்பு இல்லாம இயல்பா செய்வாங்க. அவங்களுக்கு உடலுக்கும் பயிற்சியா இருக்கும்; எப்பவும் படிச்சுட்டே இருக்கிறோம்னு இல்லாம கொஞ்சம் மனசும் சரியாகும். சமையல், மத்த வீட்டு வேலைகள் எல்லாமே கத்துக்கிட்டா, முடிஞ்சா, நேரம் இருந்தா செய்யறாங்க. யாருமே அவங்களுக்கு உதவிக்கு ஆள் இல்லைன்னா, எதுவும் செய்யத் தெரியாம, திகைச்சுப் போயிறக்கூடாதுல்ல. தேவைன்னு இருக்கிறப்போ சுயமா செய்யத் தெரியணும்ல. அதான் செய்யச் சொல்றேன்,” என்றாள்.
“ப்ரீத்து அப்பா அவளைப் படிக்க விட்டுரு. ஏன் வேலை செய்யச் சொல்றேன்னு கேப்பாரு. சிந்து அப்பா இதுக்கு ஒண்ணும் சொல்லமாட்டாரா?”
“நான் சொல்றதை சிந்து கேக்கலைன்னா, சிந்து அப்பாட்ட சொல்லி அவளை செய்யச் சொல்வேன். அவர் பேச்சை எப்பவும் அவள் கேட்காம இருந்ததே இல்ல. அப்படி அவர் சொல்லிதான், விளையாடறது போல வீடு துடைக்க கத்துக்கிட்டா,” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
என்ன பிரச்சினை என்று சிந்துவிடம் கேட்கவேண்டும் என்று யோசனையுடன் படுக்கை அறைக்கு வந்தாள்.
‘‘சிந்து ஏதாவது என்ட்ட பேசணுமாம்மா? எதுவா இருந்தாலும் சொல்லு. ஏன் முகம் இன்னிக்கு வாடி இருக்கு?”
“ஒண்ணுமில்லம்மா.”
“சரி சிந்து. இங்க பாரேன். எத்தனை கொசுங்க இந்த கொசுவலையில இருக்கு பாரேன். கதவைத்தெறக்குறப்போ இதெல்லாம் உள்ள வந்துடும். உள்ளே வந்துடாம பார்த்து கதவைத் தெறந்து மூடு. அப்படி உள்ளே வந்துட்டா, உள்ளே வந்ததை மட்டும் கொசு பேட்டால அடிச்சுக்கலாம்.”
“ம்மா. காப்பி கேட். எங்கள் ஆங்கில ஆசிரியை கொசுவலை அடிக்க வந்தவர்கள் சொன்னதை அப்படியே எம்மிடம் ஒப்புவிக்கிறார்கள்… போதும்மா. அவங்க சொன்னதை நானும் கேட்டேன்,” என்றாள்.
“அப்போ ஹோம்ஒர்க் செய்யாம படிக்காம நாங்க பேசிட்டு இருந்ததைக் கேட்டிருக்கே.”
“இல்லம்மா. தண்ணி குடிக்க வந்தேன்ல. அப்போ கேட்டேன்மா. சரிம்மா எதுலயும் நல்லது இருக்குன்னு சொல்லுவீங்களே. இதுல என்ன நல்லது இருக்குன்னு சொல்லுங்க.”
“கொசு தான் உள்ளே வராதுல்ல. அது நல்லதுதானே.”
“ஏன் மா கடிஜோக்கா. உங்க ஸ்டூடண்ட்ஸ் பாவம்மா… சரி இப்போது தங்கள் தத்துவமழை பொழியட்டும் தேவி,” என்று நாக்கை நீட்டி கண்களை உருட்டி பழிப்பு காட்டினாள்.
சிரித்த சியாமளா,“சரி இதுல இருக்கிற தத்துவம் என்னன்னா, நம்மைத் துன்புறுத்த வரும் விஷயங்களை நம்மால தடுக்க முடியும். கதவுல பதியப்பட்ட கொசுவலை கொசுவை உள்ளே விடல இல்லியா. தானாவே காந்தம் இழுக்குறதுபோல கதவு மூடிக்குது இல்லியா… அதுபோல நம்ம மனசுங்கிற காந்தத்தில் தைரியங்கிற கதவில் தன்னம்பிக்கைங்கிற கொசுவலையை கச்சிதமா பொருத்தணும். அப்போ இந்த கொசுத்தொல்லைகள் இருக்காது…”
“அம்மா போதும்மா. ஒன்ஸ் அகெய்ன் உங்க ஸ்டூடண்ட்ஸ் பாவம்மா. தூக்கம் வருதும்மா,” என்றாள்.
இருவருமே நாளைக்குப் பேசலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
தாயும் மகளும் இன்றைக்குதான் இரவில் நிம்மதியாக உறங்கப் போகிறோம் என்று வந்து படுத்தனர்.
சமையலறையைக் கடந்த பின் சின்ன படுக்கையறை. அதை அடுத்து பின் பக்க வாசலில் கிரில் கேட் இருந்ததால், அதற்கு அடுத்த கதவைத் திறந்து வைத்து படுத்தார்கள்.
இரவில் எப்போதும் மூடி இருக்கும் கதவு, அதைச் சேர்ந்த கதவில் கொசுவலை மாட்டி இருந்ததால், இனி கொசுத்தொல்லை இருக்காது என்று கதவைத் திறந்து வைக்க, காற்று சிலு சிலு வென்று உள்ளே வந்து இதமாக இருந்தது.
இருவரும் உறங்கி விட்டனர்.
இரவில், ‘ஏண்டா டேய்… த்தா… த்தா… என்னை விட்டுட்டு அவன் பின்னாடி போறே?’ என்று கேட்கும் குரல், அதோடு தொப் தொப்பென்று அடிக்கும் சத்தமும் கேட்டது. இதென்ன கனவா இல்லை நிஜமாக நடக்கிறதா என்று விழித்துப் பார்க்கும் போது எந்த சத்தமும் இல்லை.
உறக்கம் கண்களைச் சுழற்ற, மீண்டும் கண்களை மூடிய போது, ’மடார் தடார்,’ என்று அடிக்கும் சத்தம்… யாரோ யாரையோ அடிக்கிறார்கள்.
இப்போது என்ன செய்ய வேண்டும். இரண்டு பெண்கள் மட்டும் இருக்கிறோம். சிந்துவின் அப்பா, வேலை விஷயமாக வெளியூருக்குப் போனவர் நாளைதான் வருகிறார். இப்போது என்ன செய்யலாம் என்று நினைத்து, மெதுவாக திறந்த கதவுக்கு அருகில் போய், தான் இருப்பது வெளியில் தெரியாமல், மெல்ல வெளியில் பார்த்தாள்.
இந்தக் கதவைத் திறந்தால் இரண்டு படிகள் இருக்கும், அதில் சின்ன மூன்றுக்கு மூன்று அடியில் செப்டிக் டேங்குக்கு மேல் கட்டப்பட்ட இடத்தில் இறங்கினால், கிரில் கேட் இருக்கும். அதில் திரைச்சீலை போட்டு தெரு நேரடியாகத் தெரியாமல் மறைத்திருந்தாள். அதிலிருந்து தெருவில் இறங்க நான்கு படிகள் இருக்கும். அதைச் சேர்ந்து தெரு விளக்கு.
தெரு விளக்கின் வெளிச்சத்தில், இரு இளைஞர்கள் இருப்பது தெரிந்தது.
இவள் விளக்கில்லாமல் உள்ளே இருப்பது அவர்களுக்குத் தெரியாது.
லேசாக ஏதோ குடித்த துர்நாற்றமும், வேறு ஏதோ நாற்றமும் சேர்ந்து வயிற்றைப் பிரட்டியது. இவள் உள்ளே வந்து படுத்துக் கொண்டாள்.
‘ஏண்டா என்னை விட அவன் உனக்கு முக்கியமா போயிட்டானா… எத்தனை செஞ்சேன் உனக்கு. என்னல்லாம் வாங்கிக் குடுத்தேன்? என்ன விட்டுட்டு அவன் பின்னாடி போவியா…?’
‘இல்லடா. அவன் சொன்னான். நான் உன்னை விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டேன்.’
இது உள்ளே வரை கேட்டது.
கனவு போல உறக்க மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
காலையில் எழும்போதே, எப்போதும் போல் வேலைகள் அனுமார் வால் போல் நீள, சிந்துவுக்கு மதிய உணவு டிபன்பாக்ஸில் வைத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
கதவைப் பூட்டிவிட்டு வெளியில் வரும்போது, தெருவில் இரு புறமும் சாக்கடையிலிருந்து, குப்பை, மணல், பிளாஸ்டிக்கவர், இடுக்குகளில் வளர்ந்த களைச்செடி எல்லாம் வாரி எடுத்து கருங்குன்று போல ஆங்காங்கே நிரப்பி இருந்தார்கள்.
இதை எப்போது வாரி எடுத்துப்போவார்களோ தெரியலயே என்று நினைத்தபடி வந்தவள், முனிசிபல் துப்புறவுத் தொழிலாளி ஒருவரை அங்கே பார்த்ததும் கேட்டே விட்டாள்.
அவர், ’அம்மா சாக்கடை க்ளீன் செஞ்சதை எடுக்க நாளைக்கு வண்டி கொண்டு வந்துடுவோம்மா,’ என்றார்.
சுற்று முற்றும் பார்த்தவர் மெதுவாக ரகசியம் பேசுவது போல, ’அம்மா,’ என்று அழைத்தார். இவள் திரும்பிப் பார்த்ததும் அருகில் வந்து, ‘அம்மா இங்கே உங்க வாசல்ல உக்காந்துக்கிட்டு ரெண்டு பேரு கஞ்சா அடிக்கிறாங்கம்மா,’ என்றதும் திடுக்கிட்டுப்போனாள்.
“என்ன?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவளை, “ஆமாம்மா ரெண்டு மூணு நாளு இங்கே பார்த்தேன். இன்னிக்கு தான் உங்களைப் பார்த்ததால சொல்றேன்,” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
யோசனையுடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். அவள் அந்த அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தாள். அற்புதமான குழந்தைகள். ஆனால் பதின்பருவ வயதின் சிக்கல்கள் மாணவர்களின் படிப்பில் சின்ன தேக்கத்தை ஏற்படுத்துவதை சரி செய்ய அனைவரும் இணைந்து போராடிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு கேட்ட இந்த கஞ்சா செய்தி அவளுக்குள் பெரும் குமுறலை ஏற்படுத்தியிருந்தது. இருக்கும் பிரச்சினைகள் போதாது என்று இது வேறா?
பள்ளியில் அடுத்தடுத்த தொடர் வேலைகள் அவளை உள்ளிழுத்துக்கொண்டது. மீண்டும் வீட்டுக்குத் திரும்பும்போது இந்த நினைவு வந்தது.
நேற்று இரவு… நள்ளிரவில் அங்கே அந்த இருவர் பேசும்போது வந்த நாற்றம் கஞ்சா நாற்றமா? நம் வீட்டு வாசல் வரை கஞ்சா வந்து விட்டதா?
யோசனையுடன் வந்தவளை பூட்டிய வீடு வரவேற்றது.
‘ஏன் இன்னும் சிந்து வரவில்லை,’ யோசனையுடன் கதவைத் திறந்தாள். கிரில் கதவைத் திறந்து, கொசுவலைக் கதவையும் திறந்தாள். அவள் உள்ளே வந்ததும் கதவு சக்கென மூடிக்கொண்டது. இரண்டு மூன்று முறை திறந்து முக்கால்வாசி மூடும்போது கையைவிட்டால், கதவு தானகப் போய் மூடிக்கொண்டதைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள்.
களைப்பாக இருந்தது. பத்து நிமிடம் படுத்துவிட்டு எழுந்து வேலை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்போலிருந்தது. பின்வாசல் கதவைத் திறந்தாள். கொசுவலைக் கதவு பார்த்ததும், அப்பாடா மூச்சு முட்டாது என்று வந்து படுத்தாள். காற்று மெல்ல அவளை வந்து தழுவிக்கொண்டது.
இன்று சிந்து அப்பா வந்து விடுவார். அவரிடம் இதைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்தவள். சிந்துவுக்கு போன் செய்தாள்.‘ஸ்விட்ச்டு ஆப்,’ என்று வந்தது.
மனம் சற்றே துணுக்குற, அப்படியே எழுந்து, ப்ரீதி வீட்டுக்குப் போனாள். வீட்டில் ப்ரீதி இருந்ததும், படபடப்புடன், ‘சிந்து உன்னோட வரலையா? சிந்து எங்கே? போன் செஞ்சா ஸ்விட்ச்ட் ஆப்ன்னு வருது,’ என்று கேட்டாள்.
சித்ராவும் ப்ரீதியும், ‘என்ன சிந்து இன்னும் வரலையா? நான் இன்னிக்கு லீவ் ஆண்ட்டி,’ என்று ஒன்றுபோல பேயறைந்த முகத்துடன் கேட்டதும் நடுங்கிப் போனாள்.
‘‘ப்ரீதி உள்ளே போ. கொஞ்சம் தண்ணி கொண்டு வா,” என்று சொல்லிவிட்டு சித்ரா சியாமளாவை உட்காரச் சொன்னாள்.
“சியாமளா நிதானமா நான் சொல்றதைக் கேளு. சிந்து எதாவது போன் வந்ததுன்னு உன்கிட்ட சொன்னாளா? எப்பவும் போல இல்லாம அவ முகம் மாறி இருந்ததா?“
“என்ன சித்ரா. எதாவது பிரச்சினையா? என்னது புதிர் போடறது போல பேசுறே?”
சித்ரா யாருக்கோ போனில் பேசினாள்.
அதற்குள் ப்ரீதி தண்ணீர் கொண்டு வந்தாள். அதை வாங்கி, ’இந்தா முதல்ல இதைக் குடி,’ என்று கொடுத்தவளைத் தடுத்து, “என்னன்னு முதல்ல சொல்லு,” என்றாள்.
‘‘இப்போ கெளம்பு நாம வெளியில் போகணும்,” என்றாள்.
“என்ன எங்கே போறோம்?”
“சியாமளா. பயப்படாதே. தைரியமா இரு. ப்ரீதி அப்பாட்ட சொல்லியிருக்கேன். ஆட்டோ அனுப்பறேன்னு சொன்னார். நாம இவங்க ஸ்கூலுக்குப் போறோம்,” என்றாள்.
எதுவும் புரியாமல் எழுந்தவள், ஆட்டோவில் ஏறிப் போகலாம் என்று வெளியே வந்து காத்திருக்க, சியாமளா வீட்டின் முன்னால் சிந்துவைப்போல் தெரிய, வேகமாக அங்கே ஓடினாள்.
சிந்துவேதான். கதவைத் திறந்துகொண்டிருந்தாள். அவள் கதவைத் திறந்து உள்ளே போகும்போது சியாமளா, ப்ரீதி, சித்ரா மூவரும் உள்ளே வந்துவிட்டனர்.
சிந்துவின் முகம் சோர்வுடனும் ஆனால் தெளிவுடனும் இருந்தது.
“சிந்து… சிந்து… என்னம்மா. ஏதும் பிரச்சினையா? எதுவா இருந்தாலும் சொல்லு… நேத்திக்கே கேட்டேனே…? நீ ஒண்ணும் சொல்லல…”
“அம்மா அமைதியா இருங்க. நான் சொல்றத கேளுங்க. பயப்பட ஒண்ணும் இல்லம்மா… நம்ம சுந்தர் போன்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துட்டிருந்துது. அதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். அவன் அப்படி தப்பா அவன் எப்பவும் மெசேஜ் அனுப்ப மாட்டான். அதனால யாருக்கும் சொல்லல. இன்னிக்கு ஸ்கூல்ல அவன்ட்ட, “ஏண்டா இப்பிடி மெசேஜ் செஞ்சே,”ன்னு கேட்டேன். ”மெசேஜா என்ன மெசேஜ். என் மொபைலை ரிப்பேருக்கு குடுத்திருக்கிறேன்,”னு சொன்னான். அதுக்குள்ள, ‘இன்னிக்கு மதியம் 2 மணிக்கு பார்க்கணும் டேட்டிங் போகணும்,’னு மெசேஜ் வந்ததை அவன்கிட்டயே காட்டினேன்.
‘‘பாரு உன் பக்கத்துல இருந்துகிட்டு உனக்கே மெசேஜ் அனுப்புறேனா?”ன்னு கேட்டான்.”
“எனக்கும் அந்த மெசேஜ் வந்துச்சு…,” என்று மெல்ல ப்ரீதி சொல்ல,
“ஆமா பாபநாசம் படம் பாத்தோமே, அப்பிடி இன்னும் என்னவெல்லாமோ இருக்கு.”
அதிர்ந்துபோய்,“ஆனா சிந்து இவன் யாரு?”
‘‘சுந்தரும் நானும் அந்த செல் ரிப்பேர் கடைக்குப் போனோம். அங்க கஞ்சாவும் விக்கிறாங்கன்னு கண்டுபுடிச்சுட்டு போலீசில் சொன்னோம்.”
அவள் சொல்வதை யாரும் குறிக்கிடாமல் கேட்டுக்கொண்டனர்.
‘‘அம்மா… நம்ம ஊருலயும் ஹோமோசெக்சுவல் பரவி இருக்கும்மா… அவங்க இதைச்செய்யல... கஞ்சான்னும்… பொண்ணுங்கள ஏமாத்துறதுங்கிற கும்பலைப்பத்தி போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்த உடனே போலீஸ் அவங்கள்ளாம் யாருன்னு தேடிக்கண்டுபுடிச்சுட்டாங்க. ஆச்சர்யமா இருக்கா? நிஜமாவே நல்ல போலீஸ்மா. உன் பொண்ணுக்கும் உன்னைப்போல கொஞ்சூண்டு விபரம் தெரியும். புத்திசாலிம்மா. எண்ணம்ங்கிற காந்தத்துல தைரியங்கிற கதவுல தன்னம்பிக்கையோட போலீஸ் வலையைவிரிக்க கச்சிதமா எடுத்துச்சொல்லியாச்சு. கஞ்சா கொசுக்களுக்கு ஆப்பு வெச்சாச்சு… புடிச்சுக் குடுத்தாச்சு… தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாண்டை மிஞ்சுற அளவுல ரொம்பப் பெரிய வலைம்மா. இண்டு இடுக்கு விடாம புடிச்சுடும்…,”
வியப்புடன் அனைவரும் சிந்துவைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பயப்படக்கூடாதென்று சுருக்கமாக சொன்னதை காட்சிகள் கண்களில் தெரியும்படி, சிந்து தங்களின் போலீஸாரின் சாகஸங்களை, இன்னும் விரிவாக எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அன்புடன்
மதுமிதா
03.04.2025
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்