ஸ்.அ.யாழினி
சிறுகதை வரிசை எண்
# 133
எண்ணுவது உயர்வு
ஒரு அடர்த்தியான காட்டில் மூன்று மரங்கள் நண்பர்களாக இருந்தன.அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கனவு இருந்தது. எப்படியாவது அந்த கனவை நனவாக்கிட வேண்டுமென்று அவை உறுதியாக இருந்தன.
முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, "நான் அலாவுதீன் குகையிலிருப்பதுபோல ஒரு மாணிக்கப் பேழையாக மாறவேண்டும், என்னுள் உலகிலேயே விலையுயர்ந்த, யாராலும் விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்..” என்றது.
இரண்டாவது மரம் தன் கனவைச் சொல்ல ஆரம்பித்தது, ” நான் டைட்டானிக் கப்பலைப் போல ஒரு மிகப் பெரிய கப்பல் ஆக வேண்டும், எல்லோரும் என் பிரம்மாண்ட அழகைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும். நான் உலகப் பெரும் பணக்காரர்களை சுமக்க வேண்டும், பலத்த புயல், மழை எதுவாக இருந்தாலும், அவர்கள் என்மேல் பத்திரமாகப் பயணம் செய்ய வேண்டும்..”என்றது.
மூன்றாவது மரம் சொன்னது “நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிகப் பெரிய மரமாவேன், அப்போது என்னைக் காணும் மக்கள் எல்லாம் வானையும் கடவுளையும் தொடும் அளவிற்கு உயர்வேன். எக்காலமும் நானே உலகின் உயர்ந்தமரம் என்று எல்லோரும் சொல்லி என்னை வணங்கவேண்டும்..” என்று கூறியது…
முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், அலாவுதீன் குகையில் பொன்,மாணிக்கப் பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிப்போனதை நினைத்து அது வருந்தியது..
டைட்டானிக் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யப்பட்டது.
மூன்றாவது மரம் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஒரு இருட்டறையில் இடப்பட்டது. மூன்று மரங்களும் தங்கள் ஆசை நிறைவேறாமல் போனதை நினைத்து நினைத்து வருத்தப்பட்டு கடவுளிடம் உருக்கமாக வேண்டி அழுதன.
காலம் பல கடந்தது.ஒரு மார்கழி மாதக் கடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு வந்தனர், அப்பெண்மணி ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்தக் குழந்தையை முதல் மரத்தில் இருந்து செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர்,அக்குழந்தையைப் பார்க்க கீழ்த்திசை ஞானிகள் பல நாட்களாய்ப் பயணம் செய்து வந்து கண்டுமுழந்தாளிட்டு வணங்கினர்.வைக்கோல்பெட்டியை முத்தமிட்டு வணங்கினர்.
அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது.. தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கிப் பாதுகாத்திருப்பதை..
சில ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடிப் படகில் எறினர். படகு நடுக் கடலில் செல்லும்போது, பெரும் புயல் வீசத் துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றிக் கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர். அவர் எழுந்து “இரையாதே..அமைதியாயிரு..” என்றதட்டியதும் புயல் அடங்கியது. அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், புயலையும் மழையையும் தன் வார்த்தையால் அடக்கிவிடும்அளவிற்கு அரசர்களின் அரசரை சுமந்ததைக் குறித்து மகிழ்ந்தது.
கடைசியாக, வானை எட்டித் தொடுமளவிற்கு உயர வேண்டுமென்ற ஆசைப்பட்ட அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லப்பட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதைச் சுமந்தவரை பழித்தனர்.அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். உடன் அழுதபடி வந்த பெண்களும், அவரது சிஷ்யர்களும் அந்த மரத்தை வணங்கி நின்றனர்.
வைக்கோல்பெட்டியில் கிடத்தப்பட்டு, படகில் பயணம் செய்து, சிலுவையில் அறையப்பட்டு மூன்று மரங்களும் சுமந்த அந்த மனிதர்தான் இயேசு.
நாம் எண்ணுகின்ற உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வொருநாளும் நம் சிந்தனையில் ஆழப்படும்போது அது ஆள வைக்கும், நம்மை மகிழ்வோடு வாழ வைக்கும்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்