குழந்தைகள் நாள் விழா
-முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், மானகிரி
' ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய், அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்' அழைப்பொலியைத் துண்டித்து தன் மனைவியின் அலைபேசியை எடுத்தான் ஜீவா. எதிர்முனையில் யுகேஜி படிக்கும் மகள் யாழினியின் வகுப்பாசிரியை ஜோதி பேசினார்.
"மேடம்.. குட் ஈவினிங்.. நான் யாழினியோட கிளாஸ் மிஸ் பேசுறேன்.."
"சொல்லுங்க மிஸ்.. எனி ப்ராப்ளம்"
எடுத்த எடுப்பிலேயே ஆண்குரல் “எனி பிராப்ளம்” என்று கேட்டதும் பதில் சொல்வதில் மிஸ்க்குப் பிராப்ளமாகிவிட்டது..
"ப்ராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்ல சார்.. யாழினி அமைதியான சமத்தான அறிவான பொண்ணு.. ஆனால்.. சார்.. மேடம் இருக்காங்களா? நான் அவங்ககிட்ட பேசலாமா?" என்று தயங்கினார்.
"அவங்க கோயிலுக்குப்போயிருக்காங்க.. நீங்க என்ன விஷயம்னு தயங்காமல் என்கிட்டயே சொல்லலாம்.."
"சரிங்க சார்.. சில்ட்ரன்ஸ்டேக்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கு.. உங்க பேபி யாழினிக்கு அன்னிக்கு பர்த்டேங்குறதுனாலயும் நீங்க லாஸ்ட் இயரே கேட்டதாலயும்தான் மாறுவேடப்போட்டியில ஜவகர்லால் நேருவா பாப்பா நடிக்கிறதுக்கு பிரின்ஸ்பல் ஓகே சொன்னாங்க.."
"அதான் எனக்குத் தெரியுமே மிஸ்..டிரெஸ் கூட போன வாரம் மதுரைக்குப்போய் 2000 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து கொடுத்தனுப்புச்சேனே.. நேரு தொப்பியும் சேர்த்துதான் வாங்கினேன்.. டிரஸ் எதுவும் அளவு சரியா இல்லையா? போட்டுப்பார்த்துதானே வாங்கினோம்.. சரியாதானே இருந்துச்சு.."
"அதெல்லாம் சரியாதான்சார் இருக்கு.. எவ்ரி இயர் பங்க்ஷன் அன்னைக்கு ஸ்டேஜ் முன்னால ஜவஹர்லால்நேருவா நடிக்கிற பசங்களதான் பேசச் சொல்லுவோம்.. இன்னைக்கு பிரின்சிபால் ரிகர்சல பார்த்துட்டு பாப்பாவுக்கு வேர்டிங்ஸ் கம்மியா இருக்குனு இன்னும் ரெண்டு வரி சேர்க்கச்சொல்லியிருக்காங்க.."
"என்ன மிஸ்..இப்பப்போய் இப்படிச்சொல்றீங்க.. பத்து நாளா பிராக்டிஸ் கொடுத்திருக்கோம்.. திடீர்னு சேர்க்கச்சொன்னா எப்படி?"
"சார்..உங்க நெலம புரியுது..ஆனா பிரின்சிபால் மிஸ் ஸ்டேஜ் ப்ரோக்ராம் எல்லாம் பர்ஸ்ட் கிளாஸா இருக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க.. டி.இ.ஓ,சி.இ.ஓ,எம்எல்ஏ, எம்.பி எல்லாரும் வராங்களாம்.. இப்பவே பாப்பா நல்லா சூப்பரா தான் சொல்றா.. இன்னும் பாப்பா நல்லா சொன்னா அந்த கிரடிட்ஸ் எல்லாம் உங்களுக்குத்தானே சார்.."
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு "ஓகே மிஸ்.டோண்ட் வொர்ரி.. பாப்பாவ நாங்க ரெடி பண்ணிடுறோம்.. தேங்க்யூ" என்று பேசி இணைப்பைத் துண்டித்தான் ஜீவா. பேசி முடித்த பின்னும் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் செல்போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் கோவிலில் இருந்து மகளோடு திரும்பி வந்த மனைவி வித்யாவிடம் விவரம் சொல்லி போராடி சம்மதிக்க வைத்தான்.
'மூன்று வரிகளை மனப்பாடம் செய்ய வைப்பதற்குள் மூச்சு திணறியதே.. இன்னும் இரண்டு வரிகளைச் சேர்ப்பது என்றால்..' நினைக்கும்போதே தலைசுற்றியது வித்யாவிற்கு.. தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரையும் பார்த்து ஒன்றும் புரியாமல் சிரித்தபடியே மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் யாழினி.
அன்று இரவிலிருந்தே பயிற்சி நேரம் கூடியது. அப்பா மாற்றி அம்மா அம்மா மாற்றி அப்பா என்று இருவரும் மாற்றி மாற்றி தொடர்ந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. குழந்தைக்குத்தான் ஓய்வேயில்லை.
எவ்வளவுதான் முட்டிமோதி சொல்லிக் கொடுத்தாலும் முதலில் கற்றுக் கொடுத்ததைத்தான் யாழினி திரும்பத் திரும்ப சொன்னாள். நாள் நெருங்க நெருங்க ஜீவாவிற்கும் வித்யாவிற்கும் மன அழுத்தம் அதிகமாகி அடித்து அடித்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.. இரண்டையும் கலந்து குழப்பிக்கொண்ட குழந்தை அழுதபடியே திட்டும் வாங்கியது.. ஒழுங்காய்ச் சொன்னால்தான் விளையாடலாம்.. கார்ட்டூன் பார்க்கலாம் என்று மிரட்டியதிலும் விரட்டியதிலும் மூன்று நாட்களாய்த் தன் சின்னச் சின்ன சந்தோசங்களைக் கூட முழுமையாகவே பறிகொடுத்துவிட்டாள் யாழினி.
முதல் நாள் தூக்கத்தில் கூட "ஐ அம் ஜவகர்லால் நேரு ..ஐ ஆம் த பர்ஸ்ட் பிரைம் மினிஸ்டர் ஆப் இண்டியா" என்று உளறுவதைக்கேட்டு இருவரும் தங்களது பயிற்சியை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.
நவம்பர்-14
பொழுது விடிந்தது.. யாழினிக்கு பிறந்த நாள் என்பதாலும் மேடையில் எல்லோருக்கும் முன்னால் தன் பிள்ளை பேசப்போவதாலும் இருவருமே அன்றைக்கு விடுப்பு எடுத்திருந்தார்கள்.
வழக்கத்தைவிட சீக்கிரத்திலேயே யாழினியை எழுப்பி பர்த்டே ஏஞ்சல் டிரெஸ் மாட்டி கேக் வெட்டி இருவரும் ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தமிடுவது போலவும் மாறி மாறி கேக் ஊட்டிவிடுவது போலவும் செல்பி எடுத்துக் கொண்டனர்.ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த போட்டோக்களுடன் இதையும் சேர்த்து ஜீவா ‘கண்ணான கண்ணே..’ பாடலுக்கும் வித்யா ‘வா.. வா.. என் தேவதையே..’ பாடலுக்கும் வீடியோவாக உருவாக்கி தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துக்கொண்டார்கள்.
ஆசை ஆசையாய் ஏஞ்சல் டிரெஸ் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்த யாழினியிடமிருந்து வலுக்கட்டாயமாக் கழற்றி நேரு டிரஸ் போட்டுவிட்டு பள்ளிக்குக்கிளம்புவதற்கு முன்பாக ஒரு முறை பேசச்சொல்லி ஒத்திகை பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள் இருவரும்.. சட்டையில் குத்தியிருக்கும் ரோஜாப்பூ பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நிஜப்பூவைக் குத்தியிருக்கலாம் என்று வரும் வழியில் குறைபட்டுக் கொண்டாள் வித்யா.
‘ஒரிஜினல் ரோஜாப் பூ சட்டையில சரியா நிக்காது..இது யூஸ் அன் த்ரோதான். ஒரு வாரத்துலயே சாயம் போய்டும். பரவாயில்ல.. விடு.. இன்னைக்கு ஒருநாள்தானே' என்று சமாதானப்படுத்தினான் ஜீவா.
யாழினியின் நினைப்பெல்லாம் காலையில் போட்டுக்கொண்ட ஏஞ்சல் டிரஸ் மீதுதான் இருந்தது.
நவம்பர் 14 காலை வழக்கத்தைவிட கூடுதல் பரபரப்போடு காட்சியளித்தது அந்த தனியார் பள்ளி. வாசலுக்கு வெளியில் இருந்து மேடை வரைக்கும் வரவேற்பு தட்டிகளும் தோரணங்களும் வரவேற்றுக் கொண்டிருந்தன.
தினந்தோறும் ‘டை' கட்டி ‘ஷூ' போட்டு இறுக்கிக் கட்டிய துணிப்பொட்டலமாய் வரும் குழந்தைகளுக்கு அன்று அவற்றிலிருந்து விடுதலை கிடைத்த ஒரு நாள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.
சில குழந்தைகளோ பெற்றோருக்குப் பிடித்திருந்து தங்களுக்கு அறவே பிடித்திராத உடைகளை வலுக்கட்டாயமாக அணிவித்து அனுப்பிய பெற்றோர் மீதான கோபத்தோடும் தன்னை தவிர மற்ற குழந்தைகள் எல்லோரும் தனக்குப் பிடித்தமான உடைகளை அணிந்து வந்திருப்பதைப் பார்த்த சோகத்தோடும் உம்மென்று இருந்தார்கள்.
இன்னும் சிலர் வீட்டில் மாறுவேடப் போட்டிக்குத் தயார்படுத்திய பெற்றோரின் மல்லுக்கட்டலுக்குகா களைத்துப்போய் போர் முடிந்து திரும்பிய வீரர்களைப் போல் காட்சி அளித்தார்கள். மறுஒப்பனைக்குத் தலையைக் கவிழ்த்தபடி வாய்மூடி உம்மென்று மௌனமாய் நின்றிருந்தவர்களைச் சிரிக்க வைக்கவும் வசனங்களைத் திருப்பிச் சொல்ல வைக்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் பெற்றோர்கள்.
வழக்கம் போலவே சிறப்பு விருந்தினர்கள் வர தாமதமானது. இரண்டு மணி நேரமாய் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் ஒன்று இரண்டு விரல்களைக் காட்டி பொறுக்கமாட்டாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தையை விட்டு விட்டால் மற்ற குழந்தைகளும் வரிசையாய்க் கேட்கும்.. கேட்பவர்களை எல்லாம் விட்டு விட்டால் பிரின்சிபல் வந்து கேட்டால் என்ன பதில் சொன்னாலும் சரமாரியாகத் திட்டுவிழும். சில ஆசிரியைகள் விடாப்பிடியாய் மறுத்து அடக்கினார்கள். சில ஆசிரியைகள் விட்டு விட்டு திட்டு விழக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
சின்னஞ்சிறு குழந்தைகளைப் பார்ப்பதே அழகு. அதுவும் மாறுவேடம் போட்டு வந்திருந்த குழந்தைகளின் அழகை அசைவைக் காணக் கண் கோடி வேண்டும். மாறுவேடப் போட்டிக்கு வந்திருந்த பிள்ளைகள் சிறிய மேசையில் வரிசையாய் நெருக்கி அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
கொஞ்சம் ஒப்பனைக்குத் தாமதமான வீரபாண்டிய கட்டபொம்மன் சங்கிலிகள் கட்டாமலேயே பெற்றோரால் தரதரவென்று இழுத்து வரப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேசத்தலைவர்கள். முதலில் உட்கார்ந்திருந்த காந்தியடிகள் கம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த இராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ஏந்தியபடி பாசத்திற்குரிய பாரதிராஜாவின் கேமராவிற்கு ‘போஸ்' கொடுத்தார். பக்கத்திலிருந்த பாரதியார் முண்டாசைக் கழற்றி வைத்துவிட்டு மன்னனின் கிரீடத்தை அணிந்து சிரித்தார்.
மன்னனோ பிச்சைக்காரனின் தட்டில் கிடந்த சில்லறைகளை எடுத்து வைத்துக் கொண்டு வம்பிழுத்தான். அப்துல்கலாம் ஐயா ஏவுகணையை விவசாயியிடம் கொடுத்துவிட்டு விவசாயியின் ஏர்க்கலப்பையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் தொப்பியைக் காமராசரும் காமராசரின் கதர் துண்டை எம்ஜிஆரும் மாற்றி அணிந்து அழகு பார்த்தார்கள். திருடன் வைத்திருந்த சாக்லேட்டை போலீஸ் பிடுங்கிக் கொள்ள அழுது கொண்டிருந்த திருடனை ஹிட்லரும் அன்னை தெரசாவும் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். வியர்வை வழிந்து கொண்டிருந்த மரத்திற்கு பூமி உருண்டை விசிறி விட்டுக்கொண்டிருந்தது. தண்ணீர் குடித்து விட்டு வருவதற்குள் ஒப்பனைகளை மாற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் கண்டு கோபப்படுவதா சிரிப்பதா என்று தெரியாமல் சிரித்தபடி கோபித்துக் கொண்டார் ஆசிரியை ஜோதி
தாமதமாய் வந்த சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பேசத் தொடங்கியதுமே ஓரத்தில் இருந்த நேரு தூங்கத் தொடங்கிவிட்டார். பக்கத்தில் இருந்த வேலு நாச்சியாரிடம் சைகை காட்டி தட்டி எழுப்பச் சொன்னார் ஜோதி டீச்சர்.
பாதி தூக்கத்திலிருந்து எழுந்த நேரு விழிகளை உருட்டி உருட்டி ஜோதிமிஸ்ஸைப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார்.
எப்போதுதான் தங்கள் பிள்ளைகளின் நடனம், மாறுவேடப்போட்டி, பாடல் வரும் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு சிறப்பு விருந்தினர் பேசி முடித்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது. எடுத்த எடுப்பிலேயே மைக்கேல் யாழினியின் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். கம்பீரமாக நடந்து சென்று மைக்கைப் பிடித்தாள் யாழினி. வித்யாவும் ஜீவாவும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் ‘என் மகள்' ‘என் மகள்' என்று பெருமையாகச் சொல்லி சந்தோசப்பட்டார்கள். மேடையில் “ஐ அம் ஜவஹர்லால் நேரு..ஐ யாம்..” திக்கியதும் இருவரது முகமும் மாறியது. மேடையிலிருந்து இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு அவர்கள் இருவரது உதட்டசைவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பயத்தில் கைகள் நடுங்கின. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிளாஸ்மிஸ் ஜோதி “ஐ யாம் த பர்ஸ்ட் பிரைம்மினிஸ்டர்” என்று எடுத்துக் கொடுத்தார். “ஐயாம் ஜவஹர்லால் நேரு.. ஐயாம் த பர்ஸ்ட்.. ஐயாம் த பர்ஸ்ட்” என்று மீண்டும் தடுமாறினாள்.பயத்தில் கண்கள் கலங்கி அழுது விட்டாள்.ஜீவாவிற்கும் வித்யாவிற்கும் சுற்றியிருக்கும் எல்லோரும் தங்களை ஏளனமாய்ப் பார்ப்பதாகத் தோணியது.அவமானமாய் இருப்பதாக எண்ணிய அவர்கள் இருவரும் மற்றவர்களை நிமிர்ந்து பார்க்கக் கூடவில்லை. சற்று நேரத்தில் எம்எல்ஏவும் எம்பியும் கிளம்பிச் சென்று விட்டார்கள்.
ஒருவழியாக மாறுவேடப் போட்டி தொடங்கியதும் நான்கைந்து பேர் நடித்த பிறகு யாழினிக்கு மறு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த வாய்ப்பில் மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்து கைதட்டல் வாங்கினாள் யாழினி. மேடையிலிருந்து அப்பா அம்மா முகம் பார்த்ததும் குழந்தைக்கு ஏமாற்றமாயிருந்தது. இருவரது முகத்திலும் துளியளவு கூட சிரிப்பு இல்லை. மாறுவேடப்போட்டியில் சிலர் பேசினார்கள். சிலர் நடித்தார்கள். சிலர் மௌனமாக நின்றார்கள். சிலர் வசனம் மறந்து அழுதார்கள். சிலர் களைப்பிலும் சோர்விலும் நின்றபடி தூங்கினார்கள். பிள்ளைகள் மேடையை விட்டு இறங்கியதும் பெற்றோர்கள் சிலர் கட்டியணைத்தார்கள். சிலர் திட்டித் தீர்த்தார்கள். சிலர் தலையில் கொட்டினார்கள். சிலர் “வீட்டுக்கு வா.. கவனிச்சுக்குறேன். மேக்-அப் காசு தண்டமாப்போச்சு” என்று சொல்லி பல்லை நறநறவென்று கடித்தார்கள்.
கண்களில் கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் தளும்பிக் கொட்டிவிடும் நிலையில் உதட்டைக் கடித்துக் கொண்டு விம்மிக் கொண்டிருந்த குழந்தைகளை வரும்போது பேரழகாய் தெரிந்த அதே குழந்தைகளை இப்போது பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருந்தது. வண்டிப் பந்தயத்தில் தார்க்குச்சி குத்தல்களோடு வாயில் நுரை தள்ளத்தள்ள தள்ளாடி ஓடிக் களைத்த வண்டி மாடுகளை ஜெயிக்கவில்லை என்ற காரணத்துக்காக எஜமானர்கள் சவுக்கடியால் விளாசுவதைப் போலவே இருந்தது இந்தக்காட்சியும்..
விழா நாயகர் நேருவைத் தேடினார் ஜோதி டீச்சர். சொல்ல வேண்டிய வசனத்தை மறந்ததற்காய் காலையில் மாறி மாறி முத்தம் வாங்கிய அதே கன்னங்களில் மாறிமாறி திருகல் வாங்கி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார் நேரு. குனிந்தபடி சத்தம்போடாமல் அழுதுகொண்டிருந்த நேருவின் கண்ணீர் காகிதரோஜாப்பூ மீது பட்டு சிவப்பு நிறத்தில் இரத்தக்கண்ணீராய் மண்ணில் கொட்டிக் கொண்டிருந்தது.
உறுதிமொழி
மேற்கண்ட கதை என் சொந்தக் கற்பனை என உறுதியளிக்கிறேன்.
முகவரி:
முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்,
2/294, தமிழ் அகம், முடியரசனார் தெரு,
மானகிரி, மானகிரி (அ),
சிவகங்கை மாவட்டம்- 630307
பேசி: 98425 89571
மின்னஞ்சல்: stephenmickelraj@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்