logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

பிரவீணா பிரகி

சிறுகதை வரிசை எண் # 129


*** பேரன்பின் ஆட்டம் *** காரக்கோட்டை முத்துமணி, கிள்ளுக்கோட்டை ரவியின் குறவன் குறத்தி ஆட்டமென்று விளம்பர பாதாகையை பார்த்ததும், மூச்சுவிட மறந்து நின்ற கட்டமணியை, மருதப்பன்தான் நினைவுக்கு கொண்டுவந்தான் "ஏலே கட்டமணி... கண்டிப்பா ஆட்டம் பாக்க போகணும்டா ". அதுவரைக்கும் குறத்தி முத்துமணியின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் கட்டமணி. முத்துமணியின் ஆட்டம் பற்றி சுற்று வட்டாரத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. முத்துமணியை இதுவரை பார்த்திடாதவர்கள் கூட, அவள் ஆட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு அள்ளிவிட்ட ஏராளக் கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் கட்டமணி. இப்போது பக்கத்து ஊரிலே ஆட வரும் முத்துமணியை கண்டிப்பா பார்த்திடணும் என்று மனம் சொக்கி நின்றவனை மருதப்பன்தான் "போதும் வாடா... உட்டா போஸ்ட்ரையே தின்னுருவான் போல" என்று கூட்டிப் போனான். ஆனாலும், கட்டமணியின் நினைவுகளில் முத்துமணி ததும்பி நின்றது மாதிரி, விடலை மாறாத பல இளைஞர்களின் மனதில் பெரும் வசீகர கனவாகி நிறைந்து வழிந்த மோக ரதி முத்துமணி. விடலைகளின் மனதில் மட்டுமல்ல, வயது வந்தவர்கள் மட்டுமல்ல, வயதும் வாலிபமும் கடந்தவர்கள்கூட முத்துமணி பற்றி பேசும் போது வெகு இயல்பாக இளமைக்குள் திரும்பி அவளுடைய ஆட்டம் தொடர்பான அவர்களின் நினைவலைகளுக்குள் புதைந்து விடுவார்கள். அவள் ஆட சென்ற ஊரிலெல்லாம் அவளுக்கு எண்ணிக்கையில் அடங்கா காதலர்களும் அவர்களின் மாளாக் காதலும் நிரம்ப இந்ததது. ஆனால், முத்துமணிக்குள் ஒரு தீராக் காதல் இருந்தது. அது மேளக்காரன் ராசு மாமா. அவளின் பதின் வயதிலிருந்து அவளுக்கு ஆட்டம் சொல்லிக் கொடுத்தவர். முத்துமணிக்கு அழகும், நளினமும் இருந்தாலும்கூட அடவுகளும், மேளத்துக்கு இசைந்த ஆட்டமும் ஆட வேண்டும். அதை அடி மாறாமல் கற்றுக்கொடுத்தது ராசு மாமாதான். இதோ இப்போது அவள் கால்களில் கட்டி ஆடுகிற சலங்கை பின்னால் வந்தது. அவள் முதன் முதலில் கட்டி ஆடியது நத்தைக் குடுவைகளைத்தான். கறி சூண்டுவிட்ட நத்தைக் குடுவைகளை கோர்த்து அவளுக்கு சலங்கை கட்டிவிட்டவர் ராசு மாமா. தட்டுத் தாளம், கைத்தாளம் என்று மெல்ல மெல்ல வளர்ந்து முத்துமணி மேள தாளத்திற்கு  இசைந்து ஆட  இரண்டு வருடங்கள் ஆனது. தொழிலுக்குப் போன நேரம் தவிர, ஓய்வு நேரம் முழுவதும் முத்துமணிக்கு ஆட்டம் சொல்லிக்கொடுப்பதிலே பொழுதைக் கழித்தார் ராசு. வயது வந்தும் கல்யாணம் கட்டிக்கொள்ளாத ராசு மாமாவின் மனசுக்குள்ளும் முத்துமணி ஒரு காதல் ஆட்டம் போட்டுக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும், அதை அவர் ஒருநாளும் வெளிக் காட்டிக் கொண்டதில்லை. அவருக்கு முத்துமணி மேல் தனி பிரியம் இருந்தது. எத்தனையோ கலைஞர்களோடு வாசிக்க தொழிலுக்கு போய் வந்தவர் ராசு மாமா. யார் மீதும் அப்படி ஒரு நினைப்பென்று அவருக்கு வந்ததில்லை. யாரோடும் நெருங்கி சவகாசம் வைத்துக் கொண்டவரில்லை. தன் தொழிலில் அத்தனை சுத்தமாக இருக்கும் வாதியக்காரன் ராசு. அதனால் ராசுவை எல்லோருக்கும் பிடித்திருக்க, ராசுவுக்கு பிடித்தவள் முத்துமணிதான். முத்துமணி ஆட்டம் கத்துக்கொண்டப் பிறகு, அவளை முதல் ஆட்டத்துக்கு அமர்த்தியதும் அழைத்துப் போனவரும் ராசு மாமாதான். மருங்கூர் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவின் ஆட்ட மைதானத்தில் முத்துமணி இறங்கியதும் அப்படியொரு விசில் சத்தம். கூத்துக்காரர்களுக்கு ஆகச்சிறந்த விருதும் பாராட்டும் ரசிகர்களின் கைத்தட்டல்கள்தானே. அது ஒரு விதமான போதைகூட. ரசிகனற்ற கலைகள் உயிரற்றவைகள்தான். முத்துமணி அழகிலும் நளினத்திலும் மைதானத்தை திணறடித்தாள். அதுவும் ராசு மாமா வாசிப்புக்கு பழகியிருந்தவள் ஒவ்வொரு விதமாக அவர் வாசிக்க வாசிக்க, அடிக்கு ஏத்த ஆட்டத்தில் மைதானம்  மகுடி சர்ப்பமென மயங்கிக் கிடந்தது. ஒரே இரவில், புகழ் பெற்ற ஆட்டக்காரிக்கு இணையாக உயர்ந்த முத்துமணிக்கு அதிக மவுசு ஏற்படத் தொடங்கிவிட்டது. ஆட்டம் திகைய வருபவர்களெல்லாம் `முத்துமணி கண்டிப்பா வரணும்' என்று பேர் சொல்லி கேட்கத் தொடங்கினார்கள். காலம் சட்டென்று முத்துமணியின் ஆட்டத்தை உச்சிக்கு கொண்டுவந்தது. அதற்கு அவளும் தகுதியோடும் திறமையோடும் வளர்ந்த ஆட்டக்காரிதான். அதத்தனை ஆட்ட சாகசங்களையும் தெரிந்து ஆடக்கூடியவள்.  முத்துமணி ஆட்டதுக்கு தேதி கிடைக்காமல், திருவிழா தேதியை மாற்றி வைத்தக் கதைகளும் உண்டு. ஆனால், காலச் சுழல் எல்லாவற்றையும் அதன் போக்கிலே விட்டு விடுவதுமில்லை. பேரோடும் புகழேடும் வளர்ந்த முத்துமணிக்கு அவள் விரும்பிய ராசு மாமனை கட்டிவைக்கவில்லை அவளது குடும்பம். அவளைப் போலவே அசலூரில் பேர் பெற்றிருந்த  பெரிய ஆட்டக்காரன் ஒருவனுக்கு கட்டிவைத்துவிட்டார்கள். பெத்தவங்க பேச்சுக்கு கட்டுப்பட்டவள் வேறு வழியின்றி கட்டிக்கொண்டு அசலூருக்குப் போய்விட்டாள். அதற்குப் பிறகு, ராசு மாமா தனிக்கைட்டை தான். கூடவே இருந்தவர்கள் எவ்வளவோ சொன்னார்கள். அவர் கல்யாணம் வேண்டாம் என்றுவிட்டார். முத்துமணி கல்யாணத்துக்குப் பிறகு ராசு மாமா கச்சேரிக்கோ,ஆட்டத்துக்கோ அவ்வளவாக வாசிக்கப் போவதில்லை. முக்கியமான, பெரிய விழாக்கள் என்றால் போவதோடு நிறுத்திகொண்டார். அவர் மனதில் முத்துமணி நினைவுகள் நிலைத்திருந்தது. காலங்கள் கடந்தோட, பிறகு தன் மனதை மாற்றிக்கொண்டு கிடைக்கிற எல்லா இடங்களுக்கும் மறுக்காமல் போகத் தொடங்கினார். அது அவர் விரும்பியோ வெறுத்தோ அல்ல. வயிற்றுப் பாட்டிற்கும் வாழ்க்கை பாட்டிற்கும்  தேவையாகியிருந்தது. என்றாலும் ராசு மாமாவின் வாசிப்புக் கலை மொத்தமும் உயிரற்றுப்போய் வெறும் சடங்காகவே மாறிவிட்டது. தொழிலுக்குப் போனோம், காசு வாங்கினோம் வந்தோம் என்றவரின் வாழ்வில் எதிர்பாராது நடந்தது. ஒரு வெள்ளிக்கிழமை காலை, கல்யாண சாவுக்கு வாசிக்க,மேள தாளத்துக்கு ஆள் கேட்டு வந்தார்கள். பெரிய வீட்டு சாவு என்பதால் நிறைய வாதியாக்காரர்களோடு ராசுவும் போனார். அங்கு ஏற்கனவே, ராசு குழுவைப் போலவே நிறைய வாத்தியக்காரர்களும் வந்திருந்தார்கள். அங்குதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு முத்துமணியை ராசு மாமா பார்த்தார். புகழ் பெற்ற ஆட்டக்காரி முத்துமணியின் மவுசு குறைந்துவிட, சாவு வீட்டுக்கு ஆட வந்ததைப் பார்த்த ராசு மாமா அன்றிலிருந்து மேளத்தையும் விட்டுவிட்ட்டார். அன்றிரவு முழுவதும் முத்துமணியின் நினைவுகள் அவரின் மார்க்குத்திக் கிடக்க அந்த விடியற் காலை ராசு மாமாவுக்கு விடியவே இல்லை. ராசு மாமாவின் சாவு செய்திக் கேட்டு எங்கிருந்தோ காகமாய் பறந்து வந்த முத்துமணி, ராசு மாமன் முதன் முதலில் கோர்த்துக் குடுத்த நத்தை குடுவைகளைக் கட்டிக்கொண்டு அவருக்கு முன் ஆடத் தொடங்கினாள். முத்துமணி சாவு வீட்டில் ஆடும் செய்திக் கேட்டு அக்கம் பக்கத்து ஊரார்களும் ஒன்று திரண்டு கூடிவிட்டார்கள்.  தன் கால்களில் கட்டிய நத்தைக் குடுவைகள் உடைந்து நொறுங்க நொறுங்க, ஊர் கண்கள் அத்தனையும் பார்த்து பரிதவிக்கும்படி ஆடும் முத்துமணியை வெறித்துப் பார்த்தபடி நின்ற கட்டமணியின் கண்களில் ஏனோ நீர் திரண்டு தளும்பி நின்றது. அதுதான் முத்துமணியின் கடைசி ஆட்டம் என்று, பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஊர்வாசிகளுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரவீணா பிரகி 9087533275

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.