சுழல் சத்தியப்பிரியன்
சிறுகதை வரிசை எண்
# 131
எழுத்தும் தெய்வம்
"புள்ளைங்களா.. இங்க பாருங்க.. இது நம்ம எட்டாங்கிளாஸ் முடியப்பனோட கையெழுத்து.. அது.. அவனோட தங்கச்சி நாலாங்கிளாஸ் படிக்கிறாள்ல.. மெர்சி..அவளோட கையெழுத்து.. அந்த புள்ள எப்படி முத்து முத்தா எழுதியிருக்கு..அதையும் பாருங்க.. தோ..இதையும் பாருங்க.. நம்ம சாரோட எழுத்துக்குக் குப்பையக் கிறுக்குற கோழிகூட அழகா கிறுக்கும்.. எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்குறாரு பாருங்க.. மானகிரியிலிருந்து மானாமதுரைக்குப்போகுது எழுத்து .. அழகாதான் எழுதத் தெரியல.. நேரவாவது எழுதுறானா? அதுவுமில்ல.. எழுத்தா இது? படுகேவலமாயிருக்கு.. டேய்.. முடியப்பா.. நீ வீட்டுக்குப்போய் உந்தங்கச்சியப் புடியப்பா.. எப்படி எழுதனும்னு அவகிட்ட கத்துக்கிட்டு அப்புறமா இங்க வந்து படியப்பா.." என்று எட்டாம் வகுப்பு டீச்சர் சொன்னதும் மாணவிகள் ஏதோ உலகமகா நகைச்சுவையைக் கேட்டதுபோல விழுந்து விழுந்து கேலியாகச் சிரித்தார்கள்.. பசங்களும் கூடசேர்ந்துகொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.. நின்றுகொண்டிருந்த முடியப்பன் கூனிக்குறுகி தலைகுனிந்து நின்றான். பொங்கிவந்த அழுகைக்கு உதட்டைக்கடித்து தடைபோட்டான். இது புதிதில்லை..
எட்டு ஆண்டுகளாய் பள்ளியிலும், வீட்டிலும், உறவுகளிடத்திலும் இந்த எழுத்தால் எவ்வளவு அவமானங்கள், தலைக்குனிவுகள், எத்தனைக் கேலிச் சிரிப்புகள்.. அவமானம் ஒரு பக்கம், இத்தனையும் சந்தித்த பிறகும் தன்னால் அழகாக, நேராக எழுத முடியவில்லையே.. என்ற வருத்தம் மறுபக்கம் என மனசைப் புரட்டியெடுத்து பல இரவுகளைப் பகலாக்கியிருக்கிறது.
ஒவ்வொருநாளும் யாராவது ஒருவராவது சுட்டிக்காட்டி, கிண்டலடிக்கும் கேலிப்பொருளாக 'முடியப்பன் கையெழுத்து' ஆகிவிட்டது. தேர்வுகளிலும்கூட எவ்வளவு படித்து பிழைகளில்லாமல் எழுதினாலும் கணிதம் தவிர பிற பாடங்களில் மதிப்பெண் என்னவோ ஐம்பதைத் தாண்டுவதேயில்லை. சுமாராகப் படிப்பவர்களெல்லாம் சூப்பரான கையெழுத்தால் மிகமிக எளிதாக தொன்னூறைத் தொட்டுவிடுகிறார்கள்.. தன்னுடைய மதிப்பையும் குறைத்து மதிப்பெண்ணையும் குறைத்த தன் கையெழுத்தின்மீது வெறுப்பும், அருவருப்பும் கைகோர்த்துக்கொண்டது முடியப்பனிடம்..
ஒருவழியாக எட்டாம் வகுப்பை முடித்து பக்கத்திலிருந்த நாச்சியாபுரம் ஜெ.வி.உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தான் முடியப்பன். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யச் சொல்வார்களேயென்று கையில் வேண்டுமென்றே காயத்தை உண்டாக்கி தன்னால் தற்போது எழுதமுடியாதென்று காரணம்காட்டி தப்பித்துக்கொண்டான். பாவமென்று பரிதாபப்பட்டு ஆசிரியர் ஒருவர்தான் விண்ணப்பத்திலுள்ள விபரங்களைக் கேட்டு அன்று நிரப்பி உதவினார்.
புதிய இடம், புதிய சூழல் ஆனால் பழைய நிலையே நீடித்தது. எழுத்து அழகாய் இருப்பவர்களுக்கே நண்பர்கள் அதிகமாய் இருந்தார்கள்.. 'உண்மையாகவே அப்படியா? இல்லை.. தாழ்வுமனப்பான்மையில் அப்படி நினைக்கிறானா?' என்பதைச் சந்தேகிக்கக்கூட மூளை தயாராக இல்லை.. 'அப்படியாகத்தான் இருக்கும்' என்று அடித்துச் சொன்னது மூளை. விதிவிலக்காய் பாலு, சுரேஸ் இருவரும் அவனை நெருங்கிய நண்பனாக்கிக்கொண்டார்கள்.
'எழுத்துத் தீண்டாமை' அவனை விட்டுவிடாமல் தொடர்ந்துகொண்டேயிருந்த்து.. படிப்பதென்றால் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் சரளமாய்ப் படித்துமுடித்துவிட முடிந்த அவனுக்கு எழுதுவதென்றால் முழுதாக இரண்டு வரிகள் எழுதுவதற்குள் கைகள் நடுங்கும்.. எழுத்துகள் நாட்டியமாடி நக்கலடிக்கும்.கண்கள் இருளும்.. இதயம் படபடக்கும்.. காலடியில் உலகம் உருண்டு நழுவும்.
ஓராண்டு ஒரு யுகமாய்க் கழிந்தது அவனுக்கு.. தட்டுத்தடுமாறி பத்தாம்வகுப்பு வந்துவிட்டான். பத்தாம் வகுப்பிற்கு தமிழ்ப் பாடமெடுத்த தமிழாசிரியர் தேனம்மை முதல் நாளில் வகுப்பிலிருந்த எல்லோரையும் கையெழுத்துப் பயிற்சி ஏட்டில் தினமும் எழுதிவரச் சொன்னார். வீட்டில் முடியப்பன் முதல் பக்கத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேல் எழுதினான்.எவ்வளவுதான் நிறுத்தி எழுதினாலும் அதில் அழகைத் தேடித்தேடிப் பார்க்க வேண்டியிருந்தது.. 'எனக்கே என்னுடைய எழுத்தைப் பார்க்கச் சகிக்கலையே.. தமிழம்மா என்ன சொல்வாங்களோ? எப்படி திட்டுவாங்களோ?' என்று நினைக்க நினைக்க உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அடுக்கிவைத்த ஏடுகளை ஆசிரியை திருத்தம்செய்து மாணவர்தலைவன் வழி வகுப்பிற்குக் கொடுத்தனுப்பினார். அடுக்கிவைக்கும்போது கடைசியில் நுழைத்து வைத்ததால் திருத்திய ஏடுகளை அடுக்கியவரிசையில் முதலிலேயே இவனது ஏடு வந்தது.
'திருத்தி என்ன எழுதிவைத்திருக்கிறார்களோ.. தெரியவில்லையே.. கடவுளே.. 'மோசம்' என்றெழுதியிருந்தால்கூட பரவாயில்லை.. "மிக மிக மோசம்.. பெற்றோரை அழைத்துவந்து சந்திக்கவும்." என்றெழுதியிருந்தால் என்ன செய்வது?' கைகள் நடுங்க வாங்கிய முடியப்பன் யாருக்கும் காட்டாமல் இரகசியமாக மேசைக்குக்கீழே வைத்து மெதுவாய்த் திறந்து குனிந்துபார்த்தான். தன் கண்களை தன்னாலேயே நம்பமுடியவில்லை.. கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தான். எப்போதுமே அவனுக்கு அபாய அறிகுறியாகத் தெரியும் சிவப்பு மை இன்று 'நன்று.. மேலும் முயல்க' என்னும் ஆசிரியரின் கையெழுத்தில் கீழ்வானக் கதிரவனின் இளஞ்சிவப்பு விடியலாய் முகம் காட்டியது. இதுவரை அவமானங்களையே அள்ளித்தந்த தன் கையெழுத்து முதன்முறையாய் 'நன்று' என்னும் வெகுமானத்தைப் பரிசளித்திருக்கிறது. முதன்முதலாய் அழகாய்த் தெரிந்த தன் எழுத்துகளை வருடிவிட்டு முத்தம் கொடுத்தான். பக்கத்திலிருந்த பாலுவும் சுரேஸும் புரியாமல் ஒருவரையொருவர் புருவமுயர்த்திப் பார்த்துக்கொண்டார்கள்.
வீட்டில் அன்றிரவு முடியப்பனுக்கு உறக்கம் வரவேயில்லை. அடிக்கடி எழுந்து லண்டியன் வெளிச்சத்தில் கையெழுத்துப் பயிற்சி ஏட்டைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்த மகனின் நடவடிக்கை அவன் பெற்றோருக்கும் புதிராக இருந்தது.
தமிழம்மாவிடம் 'நன்று' வாங்குவதற்காகவே ஒவ்வொருநாளும் அக்கறையோடும் ஆசையோடும் நிறுத்தி நேராக திருத்தி அழகாக எழுத முயற்சித்தான். கொஞ்சங்கொஞ்சமாய் எழுத்தோடு, அவன் வரலாறும் மாறியது..
மேடை ஏறினாலே கை, கால்கள் நடுங்கியவனுக்கு தமிழாசிரியர் கொடுத்த தன்னம்பிக்கை தட்டிக்கொடுத்து தாங்கிப்பிடித்தது. கலைஇலக்கியப்போட்டிகள் என்றாலே தலைதெறிக்க ஓடியவனை தேனம்மை அம்மாவின் வார்த்தைகள் தேடிப்பிடித்து மேடையேற்றின.. அலங்கோலமாய் அவமானம் தந்த அவனது கையெழுத்து தமிழாசிரியர் தந்த 'நன்று' என்னும் மந்திரச் சொல் ஒன்றால் மாவட்ட அளவில் தமிழ்ப்பாடத்தில் முதலிடம் பெறவைத்தது.. தமிழாசிரியர் தேனம்மை மீதிருந்த தனிப்பெரும் அன்பு தமிழின் மீதான அளப்பரிய பற்றாக கிளைத்து வளர்ந்து முடியப்பனையும் தமிழாசிரியர் ஆக்கியது.
வகுப்பாசிரியராய் நுழைந்த முடியப்பன் கரும்பலகையில்
'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.' என்னும் குறட்பாவை இரு கைகளால் விரைவாக எழுதினார்.
'ஐயா...' என்னும் குரல் பின்னிருந்து அழைக்க குரல் வந்த திசை பக்கம் திரும்பினார். முன்வரிசையில் அமர்ந்திருந்த குட்டிப்பெண் தாரணி கையை உயர்த்தியபடி எழுந்துநின்று "ஐயா.. உங்க கையெழுத்து ரொம்ப அழகா இருக்குதுங்க ஐயா.." என்றாள். தாரணியின் முகம் தேனம்மை அம்மாவைப் பிரதிபலித்தது.. " மகிழ்ச்சி..நன்றிமா.. நம்மை கற்று நிற்கச் சொல்வது தாய்மொழிக் கல்வி; நிற்கக் கற்றுத்தருவதுதான் வாழ்வியல் கல்வி. எடுத்துக்காட்டுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்று கேட்டதும் "ம்ம்.. சொல்லுங்கய்யா.." என்று உற்சாகமாய்க் குரல் வகுப்பறை முழுதும் ஒலித்தது..
முடியப்பன் சொல்லத் தொடங்கினார்..
"புள்ளைங்களா.. இங்க பாருங்க.. இது நம்ம எட்டாங்கிளாஸ் முடியப்பனோட கையெழுத்து......" கதை சொல்லச் சொல்ல தலைகுனிந்திருந்த முடியப்பன்கள் அங்கு தலைநிமிர்த்தத் தொடங்கினார்கள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்