logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

சாரோன்

சிறுகதை வரிசை எண் # 126


மறத்தீ -சாரோன் அலைகளால் அடித்து வரப்பட்ட கடல் சிற்பத்தைப் போல் பழையத் துறைமுகத்தின் கரும்பாறை படியில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள் உமா. மூக்கில் மினுங்கும் இரண்டு புதிய மூக்குத்திகள். கைகளில் இரண்டிரண்டு கண்ணாடி வளையல்கள். பழைய பருத்தி சேலையில் நெடுநேரமாக படிகட்டுகளில் தான் வடிவமைத்த பாதங்களைக் கைகள் கூப்பி வணங்கியபடியே இருந்தாள். கீழ்ப்படியில் ஆண் பெண் இருவரின் வலது கால் பாதங்கள் மேல் படியில் இடது கால் பாதங்கள் என அவள் காணாத தாத்தா பாட்டி இணையரின் நான்கு பாதங்களையும் பூக்களால் உருவாக்கியிருந்தாள். அவற்றில் பெண்ணின் கால் பாதங்கள் மட்டும் எப்போதும் போல் மிக நேர்த்தியாக வந்திருந்தன. விதவிதமான கார்களில் வந்திறங்கிய மக்கள் உமா அமர்ந்திருந்த படிக்கட்டைச் சுற்றி பரந்து கிடந்த சமவெளியில் அவரவர் விரும்பிய இடங்களில் மலர்கொத்துகளை வைத்து தொட்டு கும்பிட்டார்கள். சிலர் தரையில் விழுந்து வணங்கி தரையை முத்தமிட்டு எழுந்து கடலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். ஆரவாரம் ஏதுமின்றி கடலும் அவர்களைப் போலவே விசும்பிக் கிடந்தது. “செங்கண்ணா – முனியம்மா”, “வெங்கட கிருஷ்ணன் – கோவிந்தம்மா”, “கிருஷ்ணசாமி – முருகாயி”, “முனியன் – ருக்கு” என தாங்கள் பார்க்காத மூதாதையர்களின் பெயர்களை மலர் வளையங்களிலும் மலர் கொத்துக்களின் மீதும் கிரியோல் எழுத்துக்களில் பெரிது பெரிதாக பதித்திருந்தார்கள். வலது பக்கத்தில் ஒருவர் குப்பன் – வேலா என்று பெயரை தரையில் எழுதி அதின் மீது பெரிய பெரிய மெழுகு வத்திகளை நட்டு ஒளியேற்றிக்கொண்டிருந்தார். அந்தப் பழைய துறைமுகம் திறந்தவெளி கல்லறைத் தோட்டமாக மாறிக்கொண்டிருந்தது. பூக்களுக்கு நடுவில் மெழுகு வத்திகளும் கற்பூரங்களும் பூத்து சிரித்தன. நூற்று முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் துறைமுகத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கப்பலேறி வந்தவர்கள். பல மாத பயணத்தில் வழியிலேயே செத்தவர்கள் கடலோடு போக பிழைத்தவர்களின் பாதங்கள் முதன்முதலில் தொட்ட தரை இதுதான். கப்பல் பயண பாதிப்பினால் பலர் காய்ச்சல் வாந்திபேதி சொறிசிரங்கு மனப்பேதலிப்பு… என்று நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அதனால் நோய்ப்பட்ட ஆட்டு மந்தையை நெடுந்தூர காட்டில் கிடைப்போட்டு அடைப்பது போல் அத்தனை ஆயிரம் பேர்களையும் இந்த வெட்ட வெளியில் நாற்பது நாட்களாக அடைத்து தனிமைப்படுதினார்கள். தினந்தோறும் பத்து பதினைந்து பிணங்கள் விழுந்தன. ஒரே அழுகையும் கூக்குரலுமாக இருந்தது. வேறு வழித் தெரியாமல் கப்பலில் இருப்பதாகவே நினைத்து செத்தவர்களின் உடல்களை கடலில் வீசினார்கள். அநாதரவாக நின்ற அவர்களது உறவுகளும் துக்கம் தாளாமல் கடலில் குதித்து மாய்ந்தார்கள். நாற்பது நாட்கள் முடிவில் மீதியாக பிழைத்திருந்தவர்கள் இந்த இடத்தைத் தாண்டி கரும்பாறைகளும் கரும்புத் தோட்டங்களும் மட்டுமேயான மொரீசியஸ் தீவுக்குள் குடியேறியவர்கள். அப்போது அவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. முகமறியாத அந்த மூதாதையர்களுக்கு மரியாதையும் அஞ்சலியும் செலுத்திக்கொண்டிருக்கும் அவர்களின் வாரிசுகள் தமிழ்மொழித் தெரியாத தமிழர்கள். அங்கு ஒளிர்ந்த தீபங்கள் நாக்குகளாய் அசைந்து காற்றிடம் பேசிக் கிடந்தன. கடலின் கவுச்சி மாறி பூக்களாலும் கற்பூரங்களாலும் மணந்து கமழ்ந்தது காற்று. ஒவ்வொரு ஆண்டும் உமா இந்த நாளுக்காக காத்திருப்பாள். சாமிகளைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்குவதுப் போல விளக்குகளால்… தானியங்களால்… கடல் சிப்பிகளால்… என ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் குலசாமிகளின் பாதங்களை இந்த வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். கடந்த ஆண்டு விளக்குகளால் உமா உருவாக்கியிருந்த ஒளிப்பாதங்களின் சிமிழ்கள் ஒவ்வொன்றும் அவளின் உணர்வுகளை உள்வாங்கி உருகும் விழிகளாய் தெரிந்தன. அவற்றின் அடியில் அமர்ந்து அவைகளையே பார்த்திருந்தாள். முகத்தை நனைத்து வழியும் அந்த ஒளியில் அவளின் மூக்குத்திகள் மினுங்க ஒரு வன தேவதைப் போல் தெரிந்தாள். அவளுக்கு தெரியாமலேயே இந்தக் காட்சியைப் படமெடுத்து “லெ’எக்ஸ்பிரஸ்” “லெ மொரிசியன்” இரண்டு பிரஞ்ச் செய்தித்தாள்களும் மறுநாள் முதல் பக்கத்தில் அதை வெளியிட்டிருந்தன. அந்தப் படங்களில்தான் அந்த ஒளிப் பாதங்களின் அடியில் ஒரு பழைய இரும்பு அரிவாள் வைக்கப்பட்டிருந்ததைச் சிலர் கண்டுக்கொண்டார்கள். அதற்கு பிறகான நாட்களில் உமாவை அடையாளம் கண்டவர்கள் அந்த அரிவாள் குறித்து அதிகமாக விசாரித்தார்கள். கடந்த ஆண்டு இங்கிருந்து கிளம்பும்போதே அடுத்த ஆண்டு பூக்களால் இந்தக் கால் பாதங்களை உருவாக்குவதென்று தீர்மானித்தாள் உமா. அதற்காக தன் வீட்டின் தோட்டத்தில் வளர்ந்து செழித்திருந்த ஐந்து லிச்சி மரங்களில் மூன்றினை வெட்டி இடம் உண்டாக்கி அந்த இடங்களிலும் பலவகையான புதிய புதிய பூச்செடிகளை நட்டு வளர்த்தாள். மூன்றே மாதங்களில் பேரழகு மலர்வனமாய் பூத்து செழித்தது அவளின் வீட்டுத்தோட்டம். கொஞ்ச நாளில் மிச்சமாய் வியாபித்து நின்ற இரண்டு லிச்சி மர கிளைகளில் ஐந்தாறு பெருந்தேன் கூடுகள் வளரந்து தொங்கின. ஒரு வாரமாக எந்தச் செடியிலும் பறிக்காமல் விட்டு வைத்திருந்த பூக்களை நேற்று பின்னிரவில் பறித்து ஓர் அழகான நீண்ட மாலை ஒன்றைத் தொடுத்தாள். உதிரிகளாக மூன்று பைகளில் நிரப்பி கொண்டு வந்திருந்த பூக்களைக் கொண்டுதான் பாட்டி – தாத்தாவின் பாதங்களை உருவாக்கினாள். இதில் தாத்தா தங்களுக்கு குலசாமி, பாட்டி இங்குள்ள எல்லா பெண்களுக்குமான குலசாமி என்பது அவளின் நம்பிக்கை. கூப்பிடும் தொலைவிலிருந்த அந்தச் சிலை அலங்கார விளக்குகளால் ஒளிர்ந்தது. பின்னாலிருந்த மைதானத்தில் விழா ஏற்பாடுகள் களைக்கட்ட தொடங்கியிருந்தன. காரின் பின் கதவைத் திறந்து மாலையை எடுத்துக்கொண்டு நடந்தாள். நேற்றைய முன் தினம் FOLK MUSIUM OF INDIAN IMMIGRATION மொரிஷியசிலிருக்கும் இந்தியர்களுக்கான புகழ்ப் பெற்ற அருங்காட்சியகத்திற்கு போயிருந்தாள் உமா. இதுவரை அதற்குள் பலமுறை போயிருக்கிறாள். இரண்டாம் மாடியில் 1835 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை மதராஸிலிருந்து மொரிசியசுக்கு கப்பல்களில் வந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நூற்றுகணக்கான கோப்புகள் பிரமாண்டமாக அடுக்கப்பட்டிருந்தன. சிவப்பு பச்சை நிறங்களில் அட்டைகள் போட்ட ஒவ்வொரு கோப்பும் அரையாள் உயரத்தில் மிரட்சியைத் தந்தன. மூன்றாவது மாடியில் முறையே மும்பாய் கொல்கொத்தா துறைமுகங்களிலிருந்து வந்தவர்களின் விவரங்கள் இருந்தன. கோப்பினுள் வலது பக்க ஓரத்தில் மிகத் தெளிவான கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். இடது பக்கத்திலிருந்து வரிசை எண் – பெயர் – வயது - தந்தையின் பெயர் – வந்த தேதி மாதம் ஆண்டு - சொந்த ஊர் – மாவட்டம் - சாதி – செய்த வேலை .. போன்ற அவரவரின் விவரங்கள் அவர்களது படத்தை நோக்கி குறிக்கப்பட்டிருந்தன. இடையிடையே வேலையின் போதே இறந்தவர்களைப் பற்றிய குறிப்பை அவர்களின் பெயர் விவரங்களுக்கு நேராக சிவப்பு மையில், muniyammal W/O Chinnappan ………………… Died of snake bite on 24th July 1879 Maari W/O Gengen ………………………………… Died bitten by a cobra on 9th Agust 1881 Rakkayee W/o Perumal ……………………………. Died on 23 Julay 1879 by attacked lion in jungle என்று பதிந்திருந்தார்கள். இதுநாள் வரை உமா பார்த்த எல்லா பதிவேடுகளிலும் பெண்களின் மரணங்களுக்கு மட்டும் இப்படியான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் ஆண்களின் பெயர்களுக்கு நேராக இறந்த தேதியை மட்டுமே குறிக்கப்பட்டிருந்தது. காரணங்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. இது குறித்து விசாரித்த உமாவுக்கு யாரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை. அப்பாவின் எண்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாட்டியின் கடைசி நாள் நினைவுகளை பகிர்ந்தவர் முதன்முதலாக உடைந்து அழுதார். அந்த இரவு உமாவின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான இரவாகிப்போனது. தொடக்க நாட்களில் பெண்கள் குடிசைகளிலிருக்க ஆண்கள் மட்டுமே வேலைகளுக்கு போனார்கள். உழைப்பும் கூலியுமாய் அமைதலாகதான் கடந்தன. அப்போதுதான் ஊரிலிருந்து ஏற்றி வந்த தர்மக்கப்பலுக்கும் பயணத்தில் தரப்பட்ட உணவுக்கும் மருந்துகளுக்கும் விலைகள் போட்டு அவர்களை பெரும் கடனாளிகளாக அறிவிக்க எல்லாரும் இடி இறங்கிய மரங்களானார்கள். பிறகான நாட்களில் இடுப்பில் கோணிப்பையும் தலையில் வைக்கோல் தொப்பியும் போட்டுக்கொண்டு ஆண்கள் கரும்பாலைகளிலும் புடவைகளின் மீது கோணிப்பைகளில் தைத்த கவுன் போன்ற உடுப்பை போட்டுக்கொண்டு பெண்கள் கரும்புத் தோட்டங்களிலும் வேலைகள் செய்தார்கள். கரும்புத் தோட்டமும் கரும்பு ஆலையும் அருகருகில் இருந்தாலும் யாரும் யாரையும் பார்த்துக்கொள்ள முடியாது. யாருக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. சோகை அறுப்புகளால் மங்கிப்போன பார்வையும் கைகளில் பட்ட அரிவாள் வெட்டுகள் மிஷினில் பறிப்போன விரல்கள்... என எல்லாமே வேலை முடிந்து இரவு குடிசைகளுக்கு திரும்பிய பிறகே கணவன் மனைவிக்கு தெரியும். அதிகாலை இருட்டோடு சங்கு ஊதும் நேரம் முதல் மாலை இருட்ட தொடங்குகையில் ஊதும் சங்கு வரை ஆண் பெண் எல்லாரையும் வேலைகளால் பிழிந்தார்கள். கரும்புத் தோட்டங்களுக்கு நடுவில் அங்கங்கே அதிகாரிகளுக்கு ஓய்வறைகள் இருந்தன. வெள்ளைக்கார கங்காணிகள் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லி பெண்களை அதிகாரிகளிருக்கும் ஓய்வறைகளுக்கு அழைத்துப் போவார்கள். அங்கிருந்து கேட்கும் பெண்களின் அலறல்களால் வேலையிலிருக்கும் எல்லா பெண்களும் நடுங்கித் துடிப்பார்கள். அன்றாட நிகழ்வாகிப்போன இந்தக் கொடுமைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் பெண்கள் அன்றாடம் செத்துசெத்து பிழைத்தார்கள். கடந்த காலங்களில் நடந்தவற்றை அப்பா சொல்ல சொல்லதான் உமாவிற்கு பதிவேடுகளில் பெண்களின் மரணங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் உடைப்பட தொடங்கின. ஆண்களே எதிர்க்க துணியாத அதிகாரிகளுக்கு இரையாகிடாமல் கரும்புத் தோட்டங்களுக்குள் ஓடும் பெண்கள் தப்பிக முடியாது எனும் நிலையில் கைகளிலிருக்கும் கூர்மையான அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டும் விஷத்தளைகளை மென்று முழுங்கியும் உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள். அவர்களை கரும்பு பிப்பிகளால் செய்த சாக்குகளில் மூட்டையாக கட்டி கரடி, சிங்கம், புலி என ஏதோ ஒன்று தாக்கிக் கொன்றதாகவும் விஷம் குடித்தவர்களைப் பாம்புகள் கடித்து இறந்ததாகவும் நம்ப வைத்தார்கள். அதுவேதான் ஆவணப் பதிவேடுகளில் இருப்பதை உணர்ந்தாள் உமா. பாட்டியின் இறுதிநாள் நினைவுகளை அப்பா சொன்னதைக் கேட்டு நடுங்கியவள் நெடு நேரமாக அப்படியே உறைந்துக் கிடந்தாள். அதற்கு பிறகான நாட்களில்தான் Anjalaiyammal W/O kooppen என்பவாரின் மரணத்திற்கு பதியபட்டிருக்கும் காரணத்தைத் தேடுவதில் தீவிரமானாள். பல்லாயிரக்கணக்கான மக்களின் விவரங்களை ஏந்திய நூற்றுக்கணக்கான ராட்சத கோப்புகள் எல்லாமே ஒன்று போலவே இருந்தன. அதில் எழுதப்பட்டிருக்கும் கையெழுத்தும் அச்சடித்தது போல் ஒரேமாதிரி எழுதப்படிருந்தன. முக்கியமாக நிறைய “அஞ்சலை” “அஞ்சலா” “அஞ்சலையம்மா”க்கள் இருந்தார்கள். பலரின் கணவர் பெயரும் தந்தையார் பெயரும் “குப்பன்” “குப்புசாமி” யாக இருந்தன. ஆனாலும் கண்டுப்பிடித்து விடுவோம் என்கிற நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் பதினோறு ஆண்டுகளாக தேடியபடியே இருக்கிறாள். ஆவணக்காப்பகத்திற்கு வரும்போதெல்லாம் அழுது வீங்கிய முகத்தோடுதான் வெளியே வருவாள். நிறுவனத்தில் மூத்த அதிகாரிகளையும் தவறு செய்யும் எவரையும் துணிவோடு எதிர்க்கும்போதெல்லாம் உமாவுக்குள் அஞ்சலையம்மாள் உயிர்த்துக்கொள்ளுவாள். அவரின் உணர்வுதான் தனக்குள் இப்படியான துணிவைத் தந்திருப்பதாக உறுதியாக நம்பினாள். உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களிடையே மொரிஷியசின் தமிழ் அடையாளமாக மதிக்கப்படும் பேராசிரியர் உமாவிற்குள் இருக்கும் ஒரே பெருமிதமே தான் அஞ்சலையின் பேத்தி என்பதுதான். அந்தச் சாலையின் அடையாளமாக நிற்கும் அஞ்சலை கூப்பன் சிலை அருகில் வந்தாள். கழுத்தில் மாலைகளும் காலடியில் மலர் கொத்துகள் குவிந்திருந்தன. சிலர் மிக அழகும் நேர்த்தியுமான மலர் வளையாங்களை உருவாக்கிக் கொண்டுவந்து வைத்திருந்தார்கள். எங்கிருந்தோ எப்படியோ மோப்பம் பிடித்து வந்த தேனீக்கள் பூக்களை மொய்த்து கிடந்தன. அதுவும் ஒருவிதத்தில் அஞ்சலிதான் என்று எண்ணினாள் உமா. அங்கு மொய்த்திருக்கும் தேனீக்களும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தும் தமிழர்களைப் போல அந்தக் கரும்புத் தோட்டத்தில் பெண்களுக்கும் அஞ்சலிக்கும் நேர்ந்தக் கொடுமைகளைக் கண்டுணர்ந்த தேனீக்களின் வழித் தோன்றல்களாக இருக்கலாம் என்று எண்ணினாள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்த ஈக்கள் எங்கெங்கோ இருக்கும் பூக்களிலிருந்து தேனை உறிந்து வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் பூக்களுக்குள் அந்தத் தேனை அஞ்சலியாக செலுத்துக்கின்றனவோ என்றெல்லாம் அங்கலாய்த்தது அவளின் மனம். வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த நாளிலாகிலும் கரும்புத் தோட்டங்கள் இல்லாத சாலை வழியில் போர்ட்லூயிக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் அவள் நினைப்பாள். மொரிஷியசில் அப்படி ஒரு பாதை எங்குமே இல்லை. வெளிநாடுகளிலிருந்து மொரிஷியசுக்கு வந்திறங்கும் எவருக்கும் ஆகாய விமானத்தில் தெரியும் முதல் அடையாளமே இந்தக் கரும்புத் தோட்டங்கள்தான். அதற்கு பிறகே மலைகள் தெரியும். அப்பா சொன்னதற்கு பிறகு எப்போது கரும்புத் தோட்டங்களைக் கடந்தாலும் காற்றில் அசையும் கரும்பு சோகைகளின் ஓசைகள் அவளுக்கு பெண்களின் கதறலாகவும் கூக்குரலாகவுமேவே கேட்கும். அது பாட்டியின் நினைவுகளை கிளறிவிட்டு அலைக்கழிக்கும். நிமிர்ந்து சிலையைப் பார்த்த உமாவுக்கு முதன்முறையாக பார்ப்பது போலிருந்தது. ஒடிந்த தேகம் கணுக்காலுக்கு மேல் கட்டப்பட்ட சேலை. முழங்கை வரையிருந்த ரவிக்கை முன்னும் பின்னுமாக வீசிய வெறுங்கை இடது புற தோளில் தளர்வாக போடப்பட்ட முந்தானையின் மீது முனை குத்தியதுப்போல் மாட்டப்பட்டிருந்த அரிவாள். கழுத்தின் குழிக்கு கீழ் பட்டையாய் ஏதோ ஒரு டாலரை பிணைத்த சரடு. காதுகளில் இலை கம்மல்கள், இடது மூக்கில் கண்ணின் வெண்விழி எதிரொலிக்கும் சிறிய மூக்குத்தி…. கருத்து தெரிந்த நாள் தொடங்கி உமா பார்க்கும் பழுப்பு நிற உருவம் இதுதான். இந்தச் சிலையைப் பார்த்துதான் உமா மூக்கு குத்திக் கொண்டாள். அதன் மூலம் மொரிஷியஸில் இந்தத் தலைமுறையில் மூக்கு குத்தியிருக்கும் மிகச் சொற்பமான பெண்களில் உமாவும் ஒருத்தியானாள். அப்படியே குறுத்தெலும்புகளை உடைத்து வலிக்க வலிக்க ஒவ்வொரு காதிலும் நான்கு ஓட்டைகளைப் போட்டு கொண்டாள் எல்லாம் இந்த சிலையைப் பார்த்துதான். தன்னையறியாமலே உமா தன்னை அஞ்சலையாக மாற்றிக்கொள்ள போராடினாள். பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களிலும் அருங்காட்சியகத்திலும் பார்த்து ஆபரணங்கள் செய்வது அவளின் தேடல்களில் பிரதானமாக இருந்தது. தமிழ்நாட்டில் சென்னை ராணிமேரி கல்லூரியில் எம் ஏ தமிழ் இலக்கியம் படிக்க போகையில் அஞ்சலை பூட்டியின் இந்த சிலையையும் ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால அபரணங்களையும் படமெடுத்து கொண்டுப்போயிருந்தாள். படிப்பது ஒரு பக்கமென்றாலும் இது போன்று நகைகள் ஆடைகள் கூந்தல் பராமறிப்பு மருதாணி பச்சை குட்த நகைகள் செய்யும் ஊரை மனிதர்களைக் கண்டுப் பிடிப்பதில் அவளின் முழு கவனமும் இருந்தது. அதன் மூலம் தனது பூர்வீக வேர்க்கால்களைக் கண்டுப் பிடித்து விடலாம் எனும் நப்பாசை உமாவுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. உடன் பயிலும் தமிழ்நாட்டு நணபர்களின் ஆலோசனையின்படி மதுரை தஞ்சாவூர், காஞ்சிபுரம். நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காயல்பட்டிணம் … போன்ற ஊர்களுக்கு போய் தன்னிடமிருந்த படங்களைக் காண்பித்து அவற்றில் இருப்பது போலவே பாரம்பரிய மாடல் நகைகள் செய்யும் ஆட்களைக் குறித்து விசாரித்தாள் உமா. “அந்தக் காலமெல்லாம் மலை ஏறிப் போயிடுச்சி. இப்படியான நகைகள் செய்யும் ஆட்கள் யாரும் இப்போ உயிரோடில்லை” சொல்லி வைத்தது போல் போகும் ஊரிலெல்லாம் இந்த பதில்தான் கிடைத்தது. மனசு விடாமல் தொடர்ந்து விசாரித்தவளுக்கு இரண்டாமாண்டின் தொடக்கத்தில் திண்டிவனம் ராஜாங்குளத்தை ஒட்டி வடமேற்கிலுள்ள ஒப்பனக்காரர் வீதியில் நொடிந்துப் போன ஒரு பாரம்பரிய கொல்லர் குடும்பத்தைக் கண்டுப்பிடித்தாள். எப்போதோ தூர்க்கப்பட்டு சமதளமாகிப்போன கிணற்றை தோண்டி ஊற்றுக்கண்ணை உயிர்ப்பித்தது போல் நீண்ட காலத்திற்கு பிறகு அந்தப் பாரம்பரிய கொல்லன் வீட்டு முற்றத்தில் உமாவால் நெருப்பு மூண்டது. அவள் காட்டிய புகைப்படத்திலிருந்த அஞ்சலையம்மாள் சிலையை மனதில் நிறுத்திய அந்த இளங்கொல்லன் வெவ்வேறு நாட்களில் ஒத்தக்கல்லு மூக்குத்தி, மூனு கல்லு மூக்குத்தி, மயிலு வாயி மூக்குத்தி, பச்சக்கல்லு மூக்குத்தி, முத்து வெச்ச மூக்குத்தி, காளான் மூக்குத்தி, வளையம் வச்ச மூக்குத்தி, புலாக்கு …. என்று பலவிதமான மூக்குத்திகளைச் செய்து கொடுத்தான். மூக்குத்திகள் ஒவ்வொன்றையும் அணிந்து அந்த முற்றத்தில் துருப்பிடித்து தொங்கிய ரசம் எகிறிப்போன பழைய கண்ணாடியில் பார்க்கையில் பாட்டி நினைவில் வர உடைந்து அழுதாள் உமா. அதைப் பார்த்த இளம் கொல்லனுக்குள் அவனது மூதாதையர்களின் நினைவுகள் உயிர்த்தெழ அவனும் அழுதான். இப்படிதான் மொரிஷியஸில் யாரும் அறியாத யாருக்கும் கிடைக்காத அந்த மூக்குத்திகள் உமாவைத் தனித்து அடையாளம் காட்டின. சிலையாக நின்றிருந்த பாட்டியின் உடலை மலர்மாலைகள் மூடி மறைந்திருந்தன. அதைப் பார்க்கவே உமாவுக்கு மூச்சு வாங்குவது போலிருந்தது. உயிருள்ள உடலாக இருந்திருந்தால் இவ்வளவு மாலைகளுக்கு குறுக்கு உடைந்து சாய்ந்தே போயிருக்கும் என்று தோன்றும்போதே ஒருவேளை பாட்டியின் உடல் தாங்கியிருக்கும் என்று நினைத்தாள். சிலையினருகில் இடுப்பளவு உயரத்தில் நின்ற பளிங்கு கல்வெட்டைச் சுற்றிலும் மலர் வளையங்கள் படைக்கப்பட்டிருந்தன. ஒருமுறை அந்த கல்வெட்டிலிருக்கும் பெயர்களைப் படித்தாள். Commemoration of the 60th Death Anniversary of Anjalay COOPEN கீழே சில ஆண்களின் பெயர்களும் போட்டிருந்தார்கள். அப்பா சொன்னதற்கு பிறகு பட்டியின் பெயருக்கு கீழ் கூலி உயர்வுக் கேட்டு போராடி செத்துப் போனதாக இருக்கும் அந்தக் குறிப்பை உமாவால் படிக்க முடிந்ததில்லை. நைஜீரியா் இந்தியா கம்போடியா தென்னாப்பிரிக்கா மடகாஸ்கர் என பல நாட்டு அடிமைகாளின் கொடூர உழைப்பால் உருவான மொரிசியஸில் எங்கு திரும்பினாலும் பிரஞ்ச் – டச்சு - பிரிட்டீஷ் அதிகாரிகளுக்குதான் சிலைகள் இருந்தன. எல்லாமே ஆண்டவர்களின் சிலைகள். இந்தத் தீவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு அடிமையின் சிலை இந்த அஞ்சலை குப்பன் சிலைதான். இந்தக் கல்வெட்டிலிருக்கும் பாட்டியின் பெயரை படிக்கும் ஒவ்வொரு முறையும் அவளின் உடலில் எழும் சிலிர்ப்பு அடங்க வெகு நேரமாகும். தான் தொடுத்து வைத்திருந்த மாலையை கையில் பிடித்தபடியே சிலையைக் கட்டித் தழுவிக்கொண்டாள். மெல்ல அவளின் வலது கை சிலையின் வயிற்றுப் பகுதியை வருடியது. அவளையறியாமலேயே உமா உடைந்து குலுங்கி அழுதாள். அருகிலிருந்தவர்கள் அவளை வினோதமாக வேடிக்கைப் பார்த்தார்கள். எட்டு மாத கர்பிணியான அஞ்சலை அவசரமாய் கணவனைப் பார்க்க ரோஸ்பெல் சர்க்கரை ஆலையை நோக்கி நடந்தாள். ஒன்பது வயது மகனும் ஐந்து வயதாகும் மகளும் இரண்டு பக்கமும் அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் நடந்தார்கள். ஜீப்புகளும் லாரிகளும் போகும் பாதைகளில் தொழிலாளிகளுக்கு நடக்க அனுமதி இல்லாததால் ஆளுயர கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்து நடந்தார்கள். பிள்ளிகள் தோட்டத்திற்குள்ளிருந்து கேட்ட பறவைகளின் குரலில் குதூகலமடைந்தார்கள். கரும்பு சோகைகள் பிள்ளைகளின் கைகளை அறுத்து விடாமல் பாதுகாத்தப்படியே மேடுப்பள்ளங்களில் மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க மூச்சிறைக்க அங்கங்கே நின்றார்கள். பிள்ளைகள் கேட்டதால் அந்தக் கப்பலேறி வந்தக் கதையை சொல்லியபடியே வந்தாள். அவர்களுக்கு மிக அருகில் மேற்கு திசையிலிருந்து பெண் யாரோ அலறி மன்றாடும் சத்தம் கேட்டு அதிர்ந்த அஞ்சலை பிள்ளைகளின் கைகளை உதறிவிட்டு வயிற்றை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு கரும்புப் பயிர்களைக் கிழித்துக்கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி பொலிந்த காட்டு விலங்கைப் போல் ஓடினாள். உடைந்து சாயும் கரும்பு பயிர்களின் அசைவைக் கண்டு “அம்மா… அம்மா….” என்று கதறிய பிள்ளைகள் வழித் தெரியாமல் ஆளுக்கு ஒரு மூலைகளில் சிதறினார்கள். சில விநாடிகளில் “டேய்ய்ய்” என்று ஓங்காரமாய் கர்ஜித்த அஞ்சலை வலது கையில் வயிற்றை ஏந்திக்கொண்டு அவளுக்கு வாட்டமான இடது கையால் நிழற்குடை பந்தலில் சொறுகியிருந்த அரிவாளை உருவினாள். “ஆஆஆ” என்று அலறி துடித்த வெள்ளைக்காரனின் இடது கை ரெட்டையில் ஆழமாய் இறங்கிய அரிவாள் எலும்பை நொறுக்கியது. ரத்த வெள்ளத்தில் சாயப்போனவன் சுதாரித்து பூட்ஸ் காலால் ஓங்கி அஞ்சலையின் வயிற்றில் உதைத்தான். “ஐயோ” என்று அலறி மல்லாந்து சாய்வதற்குள் அந்தப் பக்க மறைவிலிருந்து இன்னொருவன் ஓடி வந்தான். “டமார்” என்ற வெடிச்சத்தம் பூமியை நடுங்க வைத்தது. தோட்டத்தில் அடங்கியிருந்த பறவைகள் சிதறிப் பறந்தன. காட்டுப் பன்றிகளும் கரடிகளும் தெறித்து ஓடின. துப்பாக்கி வெடிச் சத்தம் வந்த திசையை நோக்கி கத்தியபடியே ஓடி வந்தார்கள் மக்கள். மல்லாந்து சாய்ந்து கிடந்த அஞ்சலையம்மாளின் இடது மார்பிலிருந்து கொப்பளித்த ரத்தம் கழுத்து வழியே தலையை நனைத்து படர்ந்தது. அவள் வயிற்றில் வெடித்து சிதறிய பனிக்குடம் ரத்தமும் திசுக்களும் தண்ணீருமாய் தொடைகளின் வழியே சொட்டிக் கிடந்தன. வெட்டுண்ட கையோடு ரத்தம் வெள்ளத்தில் ஒருவன் சாய்ந்து கிடந்தான். துப்பாக்கியால் சுட்டுவிட்டு பங்களா நோக்கி ஓடியவனை மடக்கிய மக்களுக்கு எங்கிருந்து வந்ததோ அவ்வளவு ஆவேசம். லாரிகள் ஓடும் சாலையில் குற்றுயிராய் கிடந்தவனின் கையிலிருந்த துப்பாக்கி தூள்தூளாக சிதறிக் கிடந்தது. அஞ்சலையின் இடது கை ரத்தம் தோய்ந்த அரிவாளை இறுக்கமாக பிடித்திருந்தது. தலைவிரி கோலமாய் இரண்டுப் பெண்கள் அஞ்சலையின் மீது விழுந்து கதறிக்கொண்டிருந்தார்கள். யாரையோ தேடி விரிந்து உறைந்து போயிருந்த கண்களின் இமைகள் அவரது மகனின் கைகள் தொட்டதும் மூடிக்கொண்டன. இதைச் சொல்லும்போது உமாவின் அப்பா தன் கையை முத்தமிட்டு நடுங்கினார். முதன்முறையாக மொரிசியசில் பெண்களே கூடி பெண்களே சுமந்து பெண்களே அஞ்சலைக்கு இறுதி சடங்குகளைச் செய்தார்கள். மொரிஷியசை உலுக்கிய அந்த நாளின் அதிர்வு அடங்க வெகு காலமானது. கரும்புத் தோட்டங்களில் அத்துமீறும் அதிகாரிகளை பெண்கள் எதிர்ப்பதும் தாக்குவதும் போராட்டங்களும் பரவலானது. கரும்புத்தோட்டங்களில் அதிகாரிகளாக வெள்ளைக்கார பெண்கள் நியாமிக்கப்பட்டார்கள். இரண்டாம் ஆண்டில் மொரிஷியஸில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடம் வந்தது… சிலையை இறுக்கமாக பற்றியவள் மறத்தீ என்று கத்தினாள் உமா. விழா தொடங்கியிருந்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.