காதலெனும் நதி
அவள் காதல் போல் பிரம்மாண்டமாய் விரிந்து பரந்து வீரியமாய் ஓடிக்கொண்டிருந்தது கோதாவரி. பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் கடல் போல் காட்சி அளிப்பதாய் பேசிக் கொண்டார்கள். சரியாக அதிகாலை 3:20 க்கு ராஜமுந்திரிக்குள் நுழைந்திருந்தது கோரமண்டல் எக்ஸ்பிரஸ். அந்தக் கடல் போன்ற கோதாவரியில் விழுந்து விடலாமா என்று ஒரு மனம் தூண்டியது.
வாழ்வெனும் புத்தகத்தை நாமாக மூடக்கூடாது மிக அடுத்த பக்கத்திலேயே உனக்கான திருப்பம் இருந்துவிடலாம் உனக்கான சுவாரஸ்யம் இருந்துவிடலாம் நீ நினைக்கும் வாழ்வு அமைந்துவிடலாம் என்று ஒரு மனது தொடர்ந்து தேற்றிக்கொண்டே வந்தது. மொத்தமாய் இருள் பூசிய ஊரில் ஆங்காங்கே மின்விளக்குகள் இருளின் மேல் ஒளி புள்ளிகளை தூவி நட்சத்திர தீபங்களாக ஜொலித்து அந்நகரமே பேரழகாய் காட்சியளித்தது.
ஊருக்கு செல்லும் அறிகுறியேதுமின்றி கையில் எந்த ஒரு பையும் இல்லாமல் நீண்ட தூர பயணத்தில் ரயிலில் வருவதை கண்ட மற்ற பயணிகள் அவளை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். தனக்கு இவ்வளவு பொய் சொல்ல வருமா? என்று யோசித்துக் கொண்டே எதிர்வரும் யார் எதைக் கேட்டாலும் நம்பும்படியான பொய்களை அடுக்கிக் கொண்டே வந்தாள் .
அன்று பிரதோஷம். தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகத்துக்கு, வீட்டில் பசு மாட்டிலிருந்து எடுத்த பாலை தூக்கு சட்டியில் ஊற்றிக் கொண்டு கோவிலுக்கு புறப்பட்டவள் வழியில் தமிழ்நாடு எல்லை கடந்து ஆந்திரா செல்லும் ஒரு பஸ்ஸில் ஏறினாள் ரங்கநாயகி.
மனம் முழுக்க சஞ்சலம் .பொதுவெளியில் அதுவும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் அழமுடியாத கண்ணீர் அவள் குரல்வளையை கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.அந்தியில் அரும்பி இருளை உடுத்திக்கொண்ட இரவு யாருமறியாமல் சன்னமாய் தன்னை மலர்த்திக் கொண்டிருந்தது. அதே பேருந்தில்,பயணித்த இரண்டு இளைஞர்கள் இவளையே கூர்ந்து கவனித்து வந்தனர். பல நிறுத்தங்களைக் கடந்து பேருந்து போய்க் கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள் மெதுவாக பேச்சு கொடுக்கத் தொடங்கினர்"நுவ்வு எக்கடக்கி எள்த்தாவு" என்று கேட்டனர். அவர்களுக்கு அவ்வளவாக தமிழ் தெரியாததால் இவள் கூறும் கதைகளை முழுவதுமாக அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ பொய் சொல்கிறாள் என்று மட்டும் அவள் கண்களின் மருட்சியை வைத்து சந்தேகமாகவே பார்த்தனர்.
பஸ் தடா வரை சென்றது. அனைவரும் இறங்கினர். வெகு நேரமாக அமைதியாக இருந்த ரங்கநாயகியிடம் மறுபடியும் பேச்சுக் கொடுத்தனர் அந்த இளைஞர்கள். சற்று நேரத்தில் கிளம்பிய குண்ட்டூர் செல்லும் பேருந்தில் அந்த இளைஞர்கள் ஏறினர். பின் அவளும் ஏறினாள்.
ரங்கநாயகி மனம் பலவாறாக கலங்கியது. பெற்றோருடனான மன வருத்தத்தில் திடுமென முடிவெடுத்து தாம் வீட்டை விட்டு எங்கோ தூரமாய் போய்க் கொண்டிருக்கிறோம் திரும்பி வருவோமா.... என நினைத்துக்கொண்டிருக்கையில்..
இரவு உணவுக்காக பேருந்து ஒரு இடத்தில் நின்றது அங்கே முற்றிலும் கையேந்தி பவன்களாக காணப்பட்டன. இவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இளைஞர்கள். நா பேரு கொண்டய்யா என்றும் மற்றொருவன் நா பேரு பங்காரு என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
ஒரு தள்ளுவண்டி கடைக்குச்சென்று மூன்று பேருக்கும் உண்பதற்கு தோசை வாங்கினர். ஒரு பிளேட்டை அவளிடம் நீட்டினர்.உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெளி காட்டாமல் அவர்கள் கொடுத்த உணவை வாங்கிக்கொண்டாள். நேரம் செல்லச் செல்ல பேருந்தில் கூட்டமும் வேகமும் அதிகரித்தது. புழுக்கம் ஒரு புறம், மறுபுறம் இந்நேரம் என்னை தேட ஆரம்பித்து இருப்பார்கள். அங்கு இந்நேரம் என்னவெல்லாம் நடக்குமோ ? என மனக்கண்ணில் திரை மொழியாய் பார்த்து கலங்கிக் கொண்டிருந்தாள்.
பஸ் சரியாக 12 மணிக்கு குண்டூர் சென்றடைந்தது. இவளுக்கு தெலுங்கு தெரியாது என்று உறுதி செய்து கொண்ட பின் அந்த இளைஞர்கள் அவர்களுக்குத் தெரிந்த தமிழ் கலந்த தெலுங்கில் பேசத்துவங்கினர்.
நீங்க எந்த ஊருக்கு போகணும் என்று விசாரிக்க தொடங்கினர்.
நான் ராஜமுந்திரி போகனும் என்றாள்
ராஜமுந்திரிக்கு இந்த ராத்திரில எல்லாம் ரயில் கிடையாது. நாங்க ரெண்டு பேரும் வேலை பாக்குற முதலாளியை குண்டூர்ல பாக்குறதுக்காக வந்திருக்கோம். காலையில அவர்கிட்ட சம்பளம் வாங்கிட்டு உங்களை ராஜமுந்திரி ட்ரெயின்ல ஏத்தி விடுகிறோம் இப்ப ஒரு ரூம் பாக்குறோம், இன்னிக்கு நைட் எங்களோட தங்குங்க என்று அழைத்து சென்றனர்.
வேறு வழியின்றி அவர்களோடு சென்றாள்.
ரூம் நம்பர் 101. இரு இளைஞர்கள் ஒரு யுவதி இந்த உலகம் என்ன நினைக்கும்
என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என மனம் சொல்லியது.
அந்த இரவு விடியும் வரை மூன்று பேருமே உறங்கவில்லை. இளையராஜாவின் பாடல்களை அவர்கள் தெலுங்கில் பாடிக் கொண்டே போக உங்க தமிழில் பாடுங்க என கேட்க அன்னக்கிளியில் ஆரம்பித்து ஆகாயத்தாமரை அருகில் வந்ததே வரை தெலுங்கிலும் தமிழிலும் பாட ,சற்று நேரத்தில் விடிந்து விட்டது.
சரட்டு சரட்டு என்று ஒரு முதிய பெண்மணி லாட்ஜின் வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து கோலமிட்டாள். மேலே வந்து டீ வேண்டுமா என்று கேட்டு மூவருக்கும் டீ வழங்கினாள்.
"சரி வாங்க கிளம்பலாம் , நீங்க ரூம்ல இருக்க வேணாம் நாங்க இப்ப முதலாளி வீட்டுக்கு போறோம்,,"என ரூமை காலி செய்துவிட்டு வரும் வழியில் ஒரு எஸ்டிடி பூத்தை பார்த்தவுடன் அவர்களிடம் சில ஒரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக்கொண்டு பக்கத்து வீட்டு பிரியா அக்கா வீட்டிற்கு டயல் செய்தாள்.
"அக்கா நான் ரங்கநாயகி பேசுறேன்"
" மா...எங்கடா போன இங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு "
"அந்தப் பையனை கொண்டு போய் உன் அப்பாவும் அம்மாவும் நேத்து சாயந்திரமே போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுட்டாங்க அவனப் போட்டு உரி உரின்னு உரிக்கிறாங்க.
அண்ணே நைட் ஸ்டேஷன் போயிட்டு தான் வந்தார் உங்க அப்பா அந்த பையனை கேட்காத கேள்வி இல்லையாம்"
"இப்ப நீ எங்க இருக்க? "
"அக்கா நான் எல்லாமே ராஜா கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பினேன் , வீட்ல நாளைக்கு யாரோ என்னை பொன்னு பார்க்க வர்றதா பேசிக்கிட்டாங்க ,திடீர்னு கல்யாணம் முடிச்சு வச்சாலும் வச்சிருவாங்க அக்கா, அந்த பயத்துல...
அதனால தான் அவங்க யாருமே எதிர்பார்க்காத இடத்துக்கு எங்க அப்பத்தா இருக்குற ராஜமுந்திரிக்கு போய்கிட்டு இருக்கேன். ராஜா எப்படியாவது இங்க வந்துருவாரு. நாங்க இங்கேயே கல்யாணம் பண்ணிட்டு தான்க்கா அங்க வருவோம்."
தொலைதொடர்பு வசதி பெரிதாக இல்லாத காலகட்டமது. இவர்களின் திட்டம் ' வெற்றி தோல்வி இரண்டுக்குமான சாத்தியக்கூறுகளை கொண்டிருந்தது.சூழ்நிலையும் காலமும் தீவிர ஆலோசனையிலிருந்தன
"சரி சரி எல்லாம் நல்லபடியா நடந்தா சரி
நீ பத்திரமா இரு"
"சரிக்கா, மறுபடி எப்ப முடியுதோ அப்ப போன் பண்றேன்க்கா" என்று
போனை துண்டித்த போது ஒருவாராக அந்த இளைஞர்கள் இவள் ஏதோ காதல் சமாச்சாரமாகத்தான் வீட்டை விட்டு வந்திருக்கிறாள் என புரிந்து கொண்டனர்.
யாருக்காகவும் பரிதாபப்படாத நீதியரசன் காலம். அதன் சமரசமில்லா நகர்வின் அடையாளமாய் வெயில் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் அவர்கள் முதலாளியுடன் செம்மரங்கள் வெட்டிய கூலிக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர், நெடு நேரம் நிற்க முடியாமல் அவளாகவே அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கூலி கிடைத்தவுடன் குண்ட்டூர் பேருந்து நிலையத்திலேயே ஒரு ஹோட்டலுக்கு சென்று மூவரும் சாப்பிட்டனர்.
பங்காரு மட்டும் சென்று ராஜமுந்திரிக்கு ஒரு ரயில் டிக்கெட் வாங்கி வந்தான்.
"நீங்க எதுவுமே எங்ககிட்ட சொல்லலனாலும். எங்களுக்கு எல்லாமே புரியுது நீங்க முதல்ல கைல ஒரு பையுமே இல்லாம இருக்கிறதே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க" என்று.
கொண்டையா போய் ஒரு கட்டைப்பை வாங்கி வந்தான்.
இந்தாங்க இதுல ரெண்டு துண்டு ரெண்டு தண்ணி பாட்டில் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வச்சிருக்கேன். இந்தாங்க இதுல முன்னூறு ரூபா பணமிருக்கு செலவுக்கு வச்சுக்கோங்க கையில முதல்ல பைய பிடிங்க ."என்றனர்.
கண்ணீர் பெருக்கெடுக்க கையெடுத்து கும்பிட்டாள்." இனிமே உங்கள என் வாழ்க்கையில பாப்பேனான்னு கூட தெரியாது நீங்க செஞ்ச உதவிக்கு நான் எந்த ஜென்மத்தில் நன்றி செலுத்தப் போறேன்னு தெரியல "என்று கலங்கினாள். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தை கள் ஸ்தம்பிக்க, அவள் கண்ணீர் அடர்ந்த பிசுபிசுக்கும் நன்றியை உதிர்த்தது.
ரயிலில் ஏற்றிவிட்டு இருவரும் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
அது மேற்கு வங்கம் ஹவுரா செல்லும் தொடர்வண்டி. இரவு மூன்றரை மணிக்கு இராஜ முந்திரியில் நின்றது. அப்பொழுதும் பரபரப்பாக இருந்தது ரயில் நிலையம்.
இப்போது ஸ்டேஷனை விட்டு வெளியில் போனா ஆட்டோ எப்படி கிடைக்கும். இந்த இருட்டுல வெளியே போனா பாதுகாப்பும் இல்லை சரி நம்ம வெயிட்டிங் ரூம்ல இருக்கலாம் என்று விடியும் வரை வெயிட்டிங் ரூமிலிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி காத்திருந்தாள்.
சரியாக ஐந்தரை மணிக்கு பொழுது புலரத் தொடங்கியது. இருள் விலகத் தொடங்கியதும் வெயிட்டிங் ரூமில் இருந்து வெளியே வந்தாள். ஒரு ஐம்பது வயதை கடந்த ஸ்டேஷன் மாஸ்டர் அருகில் வந்து வசீகரமாய் பேசத் துவங்கினார்.
"அழகா இருக்கிறியே,தனியாவா வந்திருக்க எங்க போனும் "?
என் வீடு காக்கிநாடா தான், என் கூட வரியா" என்று கேட்டார்.பார்த்தா தமிழ் மாதிரி இருக்க, எந்த ஊரு நீ "
"நான் ராஜமுந்திரில எங்க அப்பத்தா வீட்டுக்கு பல முறை தனியாவே வந்திரு க்கேன். எனக்கு போகத்தெரியும் " என்று எப்படியோ பேசி சமாளித்து, வேகமாக நடந்து ஸ்டேசனுக்கு வெளியே வந்தாள்.
கையில் அந்த இளைஞர்கள் கொடுத்த முன்னூறு ரூபாய் தான் உள்ளது.
முன்பொரு காலத்தில் அப்பத்தா எழுதிய கடுதாசியிலிருக்கும் முகவரியை வைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.
அப்பத்தா பெயர் அன்னபூர்ணம்
கதவிலக்கம் 55.ராஜா ராமன்னா தெரு
கிழக்கு கோதாவரி மாவட்டம்.ராஜமுந்திரி.
காலை ஐந்தரை மணிக்கு ஏறிய ஆட்டோ மதியம் மணி பன்னிரெண்டு தாண்டியிருந்தது
அந்த ஆட்டோக்காரன் சுற்றாத இடமில்லை 10 - 12 இடங்களுக்கு மேல் தேடியாச்சு. நெருங்கிப்போய் அன்னபூர்ணா என்ற விசாரிக்கையில் "அப்படி யாரும் இங்கே இல்லை" என்று சொல்லிவிடுவார்கள். சிறியதொரு கோவில் சுற்றிலும் அழகான பூந்தோட்டம் கடைசியாய் அங்கு சென்று விசாரிக்கையில், ஒரு வயதான மூதாட்டி தள்ளாடியபடி வெளியே வந்தாள்.
எப்படியோ, என் அப்பத்தாவை பார்த்துவிட்டேனென நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அவளும் இல்லை என மறுத்து விட்டாள். அவளின் வாடிய முகத்தைக் கண்டு அவளுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் தம்ளரில் குடிக்க கேழ்வரகு கூழ் எடுத்து வந்தாள்.
அதிகாலையில் இருந்து ஆட்டோக்காரர் அவள் கொண்டு வந்த முகவரியோடும் ரங்கநாயகி அவன் பேசும் தெலுங்கோடும் போராடிக் கொண்டிருந்தார்கள். நூறு தடவையாவது சொல்லியிருப்பான் ."நுவ்வு தெலுகு நெருச்சுகோமா என்றபடியே வந்தார்.
கடைசியாக லாலா செர்வா என்னுமிடத்தில் பர்மாவில் இருந்து திரும்பிய தமிழர்களும் தமிழகத்திலிருந்து வந்த தமிழர்களும் பல காலமாக ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்தப் பகுதியில் போய் விசாரித்தால் கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம் என்று சிலர் கூற . ஆட்டோ அங்கே பறந்தது.
அங்கே ஒரு குடும்பத் தலைவர் அவரே ஊர் தலைவரும் போல அருகில் வந்து விவரத்தை தெரிந்து கொண்டதும்
"நீ வாம்மா, இங்க இல்ல உங்க அப்பத்தா ஆனா எப்படியும் நம்ம கண்டுபிடிச்சிடலாம்மா தமிழ் சங்கத்தில் சொல்லி" என்றவுடன்
ஆட்டோ டிரைவர் இவர்களிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதியோடு கிளம்ப ,
கையில இருந்த அந்த இளைஞர்கள் கொடுத்த 300 ரூபாயை எடுத்து நீட்டினாள் கண்களில் நன்றி ததும்ப. எவ்வளவு வற்புறுத்தியும் வாங்க மறுத்து கையெடுத்து கும்பிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆட்டோ டிரைவர்.
சற்று நேரத்தில் அந்த ஊர் தலைவரின் மனைவி அவளை மெல்ல அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
"எங்கருந்து மா வர்ர" என்றவுடன்
"நான் மெட்ராஸ்லருந்து தாம்மா வரேன் என் அம்மா அப்பாவோட மனஸ்தாபம் அதனால என் அப்பத்தாவ பார்க்கலாம்னு வந்தேன் அதுக்கு மேல எதுவும் என்னை கேட்காதீங்கம்மா" என்றாள்.
"சரி நான் எதுவுமே கேட்கல நீ குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு, எப்படியும் கண்டுபிடிச்சிடுவாங்க. பயப்படாத தைரியமா இரு" என்று சொல்லிவிட்டு
மருமகள் ஜானகியை கூப்பிட்டு குளிப்பதற்கு துணி எடுத்து வருமாறு கூறி விட்டு குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்
மாமியார் மாமனார் மகன் மருமகள் பேரன் பேத்திகள் என அழகாய் வாழும் ஓர் கூட்டுக்குடும்பம்.
அவளை ,சற்று நேரத்தில் அந்தக் குடும்பமே அப்படி விழுந்து விழுந்து கவனித்தது.
"குளிச்சிட்டியாம்மா வாம்மா"
அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் விருந்தாளி ஆகிப் போவாள் என அவர்களோ அவளோ நினைத்திருக்க மாட்டார்கள்.சூடாக இட்லி தேங்காய் சட்னி பரிமாறி உண்டவுடன் ஓய்வெடுக்க தலையணை எடுத்து கொடுத்து
"நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா நான் போய் சமையல கவனிக்கிறேன் ஏதாவது வேணும்னா கூப்பிடுமா "என கூறிவிட்டு கதவை ஒருக்களித்து சாய்த்து விட்டு சென்றாள் ஜானகி.
குழந்தைகளின் விளையாட்டு சத்தம் சுற்றிலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
இடது கை ஆள்காட்டி விரலில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட மைத்தடத்தை தடவியபடி மீண்டும் தன் வாழ்வை அசைபோடத் தொடங்கினாள்.
அவள் அய்யாவும் அப்பத்தாவும் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது. சிறுவயதில் அவர்கள் கிராமத்தில் ஒரு திருவிழாவில் "இவள்தான் உன் அப்பத்தா" என ஐயா கைகாட்டியது ஞாபக புள்ளியில் முகம் மட்டும் மறையாமல் இருக்கிறது.
அவள் கையில் வைத்திருக்கும் கடிதம் கூட பத்து வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு அப்பத்தா எழுதியது. அப்பத்தாவின் எந்த கடிதத்திற்கும் அப்பா பதில் எழுதியதில்லை . ஆனால் எல்லாக்கடிதங்களையும் ரங்கநாயகி பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
அப்பத்தாவின் முகம் இப்பொழுது எப்படி இருக்கும் அப்பத்தா இப்பொழுது உயிரோடு இருப்பாளா, என பல கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் ஏதேதோ நினைவில் மூழ்கி போனாள். இந்நேரம் அங்கு என்னவெல்லாம் நடக்கிறதோ என்று.
சிந்தனைகளின் போராட்டம் கண்ணயரவிடவில்லை.
"ஏம்மா இன்னும் முழிச்சிட்டு தான் இருக்கியா , சரி வாமா சாப்பிட மணி நாலு ஆச்சு"
"இல்லம்மா இப்ப தானே சாப்பிட்டேன் எனக்கு பசிக்கலமா"
"மா நீ எதையும் போட்டு மனசுல கொழப்பிக்காத சாப்பிட வா, நாங்க இருக்கோம்ல தமிழ் சங்கத்திலிருந்து எப்படியும் செய்தி வந்துரும் நீ சாப்பிட்டு ரெடியா இருந்தீனா உங்க அப்பத்தாவ பார்க்க போலாம்". நூறு சதவீத நம்பிக்கையுடன் சொன்னார் அந்த வீட்டு பெரியவர்.
முருங்கை காய் கத்திரிக்காய் போட்டு சாம்பார் வாழைக்காய் வறுத்து ரசம் வைத்து அப்பளம் பொரித்திருந்தனர்.
வாழையிலையில் சூடாக பரிமாற அவள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே
அவர்கள் சொன்னது போலவே தமிழ் சங்கத்திலிருந்து அவள் அப்பத்தாவை கண்டுபிடித்துவிட்டதாக செய்தி வந்தது.
*******
சிறுவயதில் ஞாபகப் புள்ளியில் இருக்கும் மையெழுதிய அழகான கண்களை உடைய அப்பத்தா அல்ல. இப்பொழுது உடல் சுருங்கி ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு அந்தக் குடிசையிலிருந்து வெளியே வந்தாள்.
ஏதும் புரியாதவலாய் என்னைப் பார்த்தாள்.
"அப்பத்தா, நான் ரங்கநாயகி "என்றதும் பெயரைக் கேட்டதும் கட்டி தழுவி கண்ணீர் மல்கினாள்.
"உங்க ஐயா எப்புடி இருக்காக", "அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் எப்புடி இருக்காக "என்றாள்.
"என் பெரியப்பா மவன் சிவா தான் என்னை பார்த்துக்கிறான், எனக்கு இப்ப எந்த வேலையும் செய்ய முடியல. ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் அப்பாவோ உன் ஐயாவோ என்ன வந்து பார்ப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா காலம் ஓடிப் போயிடுச்சு இனிமேலா வரப்போறாங்க ஆனா நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நீ வந்து என்னை பாப்பேன்னு" என்றாள் அப்பத்தா
அவளின் கஷ்ட ஜீவனத்தின் சாட்சியாய் இருந்தது அவளது உருவம்.
"அப்பத்தா நான் ரெண்டு வருஷமா ஒருத்தர காதலிக்கிறேன். அம்மாவும் அப்பாவும் ஏத்துக்கல , திடீர்னு மாப்பிள்ளை வேற பாத்துட்டாங்க. உங்க
ஆசிர்வாதத்தோட இங்க வந்து அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சேன். அவர் மேல, போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்தனால வர முடியாம மாட்டிக்கிட்டாரு.
இங்க உங்க நிலைமையும் சரியில்ல ஏதோ ஒரு வேகத்துல கிளம்பி வந்துட்டேன் . நான் நாளைக்கே மெட்ராஸ் கிளம்புறேன் அப்பத்தா என்றாள்.
இரவு முழுவதும் அவள் ஐயாவும் அப்பத்தாவும் பிரிய நேர்ந்த கதைகளை அத்தியாயம் அத்தியாயமாக சொல்லிக் கொண்டிருந்தாள் அப்பத்தா.
காலை விடிந்ததும், சாப்பிட ஆப்பமும் தேங்காய் பாலும் வாங்கிக்கொடுத்தாள். மதியத்திற்கு தட்டுத்தடுமாறி ஒரு சாம்பார் வைத்து உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிட வைத்தாள்.
ராஜமுந்திரியிலிருந்து மாலை 4மணிக்கு சென்னையை நோக்கிய ரயில் கிளம்பியது.
அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் ஒரே சூனியமாய் இருந்தது.
காலை ஏழரை மணிக்கு சென்ட்ரல் வந்தடைந்தது ரயில்.
"ஆட்டோ மயிலாப்பூர் கச்சேரி ரோடு வரீங்களா"?
"வரும்மா நூறு ரூபா குடு"
அவள் பேரம் ஏதும் பேசும் மனநிலையில் இல்லை. அப்பத்தாவும் கொஞ்சம் கைச்செலவுக்கு பணம் கொடுத்திருந்தாள்.
கச்சேரி ரோட்டிலுள்ள கல்லூரியில் உடன்படிக்கும் கவிதாவின் வீட்டிற்கு வந்தாள் ரங்கநாயகி.
"ரங்கு எப்படிடி இருக்க?. உங்க அப்பா அம்மா இங்க வந்தாங்க. என்னென்னமோ கேட்டாங்க நான் எதுக்கும் பதில் சொல்லல. அவ எங்க போய்ருக்கான்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன்."
"சரிடி நான் இதுக்கு மேல எங்க வீட்டுக்கு போக முடியாது. நான் இனிமேல் படிக்கல ஏதாவது வேலைக்கு போய்க்கிறேன், ஃபர்ஸ்ட் ஒரு லேடிஸ் ஹாஸ்டல் பாப்போம்"
"அவசரப்படாதடி முதல்ல உங்க மாமாக்கு போன் பண்ணு, அங்க என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்க, அதுக்கப்புறம் ஒரு முடிவு பண்ணுவோம்."
அதுவும் சரிதான் என அவள் மாமாவிற்கு போன் செய்தாள்.
"மாமா நான் ரங்கநாயகி பேசறேன்"
அம்மாவின் கூடப்பிறந்த அண்ணன்.
ரங்கநாயகியின் தாய்மாமன். திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லாததால் மொத்த பாசத்தையும் இவள் மேல் வைத்திருந்தார்கள்
*எங்கடா இருக்க இந்த மாதிரி பண்ணிட்டு போயிட்டியேடா, மாமாட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா நான் அப்பா அம்மா கிட்ட பேசி இருப்பேன்ல. இப்ப நீ எங்க இருக்க சொல்லு "
"நான் மயிலாப்பூரில் கச்சேரி ரோட்ல ஃப்ரெண்ட் வீட்டுல இருக்கேன் மாமா"
போனை துண்டித்த அரை மணி நேரத்தில் வந்தார் . தன் மாமாவின் இரு கரங்களையும் பற்றி ஓ வென பெருங்குரலெடுத்து அழுதவளை சமாதானம் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார் மாமா கார்த்திகேயன்.
அத்தையும் மாமாவும் ஆதரவாக இருந்தனர்.
"இவ்வளோ தொலைவு தனியா போயி நல்லபடியா திரும்பி வந்ததெல்லாம் யாரு செஞ்ச புண்ணியமோ நம்ம கும்புடுற சாமி நம்மள காப்பாத்திருச்சு". என்று ரங்கநாயகியை அனைத்து கொண்டாள் அத்தை.
" உனக்கேத்த சோடி தான் அந்த பையன் நல்ல படிப்பு, வேலை, பார்க்கவும் நல்லாதான் இருக்கான் மதிணி ஏன் ஒத்துக்கமாட்டேங்குது தெரிலியே.எப்பவும் ஒரு வரட்டு புடிவாதம் அவுகளுக்கு
"விடு அவ பிடிவாதம் தெருஞ்ச கத தான்" என்றார் மாமா
மூவருக்கும் தேநீரும் ரஸ்க்கும் எடுத்து வந்தாள் அத்தை
" நேத்து நைட்டு தாம்மா அந்த பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நானும் அத்தையும் பேசுனோம்.இன்னிக்கு காலையில தான் அவன் ஊருக்கு புறப்பட்டு போய் இருக்கான் அவன் அப்பா அம்மாவோட சம்மதத்தோட வந்து கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கான். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்மா. நீ இங்கேயே நம்ம வீட்லயே இரு. இங்கருந்தே காலேஜுக்கு போ. படிப்ப நிறுத்த வேணாம் இந்த வருசத்தோட முடியுதுல்ல". என்று சமாதானப்படுத்தினர் மாமாவும் அத்தையும்.
நாட்கள் ஒன்று இரண்டு என கடந்து முழுதாக ஒரு மாதம் முடிந்திருந்தது.
அவன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு போன் செய்தாள்.
ராஜா சார் இருக்காங்களா? எப்பொழுதும் போல் இரண்டு நிமிடம் காத்திருப்பதற்குப் பின் "அவர் இன்னும் ஊரிலிருந்து வரலமான்னு" என்று சொல்லிவிட்டார்கள்.
அவன் நண்பன் அச்சுதனுக்கு போன் செய்தாள்.
"நான் ரங்கநாயகி பேசுறேண்ணா
வீட்ல ஒரே பிரச்சினை ணா
இப்ப எங்கமாமா வீட்ல தான்ணா இருக்கேன் அவர் ஊருக்கு போய் ஒரு மாசம் ஆச்சு. ஆபீஸ்க்கு போன் பண்ணா ,இன்னும் வரலைன்னு சொல்றாங்கன்னா. உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமாண்ணா"
"தெரியலையே மா, நான் போன் பண்ணாலும் அவன் எடுக்கல எனக்கு ஏதாவது விவரம் தெரிஞ்சா உனக்கு கட்டாயம் சொல்றேன்மா "என அழைப்பை துண்டித்தார்.
முனைவர்.பாண்டிச்செல்வி விஸ்வநாதன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்