logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

MATHIYAZAGAN A/L GOVENDASAMY

சிறுகதை வரிசை எண் # 123


கொக்கோய் ( மதியழகன் கோவிந்தசாமி ) மதி மயங்குதல் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் நேரும் ஒரு கட்டாய நிலை. இது நம்மை ஆட்கொள்ளும் தருணமானது, பாதி இருளைக் குடித்த வெளிச்சத்தில் கிணற்றினுள் நீந்தும் நிலவைப் பார்ப்பது போல. அந்நேரம், அந்நிலவு வானத்துக்குச் சொந்தமல்ல; கும்பலாக மிதக்கும் மேகக்கூட்டத்திற்கும் உரிமையானதல்ல; நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்ட மட்டுமே அனுமதிப் பெற்றுள்ள நேரம். பாதி அண்டசராசரத்தை வெளிச்சவலை வீசி தன்வசம் வைத்துக் கொள்ளும் தருணம் தரும் சுகம்தான் அந்தக் கிணற்றுக்கு ஏற்படுவது. மதிமயங்கிய அந்த கிணறு நான்; அமுதா நிலவு. அமுதா! என் திருக்குறள். என் ஆயுளிலிருந்து ஏறக்குறைய 16 மணி நேரத்தைத் தின்ன ஏர்-கனடா ஜடாயு வடிவில் இரப்பர் கால்களில் நின்றுக்கொண்டிருந்தது. சுமார் 11, 996 கிலோமீட்டர் கடந்து மலேசிய மண்ணுக்குச் செல்லும் இயந்திர மின்னலது. 20 வருடங்கள் ஒட்டாவா தலைநகரில் ஒட்டாமல் வாழ்ந்தாலும், ஆங்கில மொழியும், பிரஞ்சு மொழியும் நாக்கில் ஒட்டிவிட்டது. அதனால், விமானக்கதவு என்னை விழுங்கியதும், வணக்கமும் சிறிது நேரத்தில் வந்துவிழுந்த சிலபல அறிவிப்புகளும் என்னை ஆட்கொண்டதாய் தெரியவில்லை. 20 வருடங்களுக்கு கனடாவில் கால்பதித்த நேரம், அவ்வூர் பெண்கள் மீது பெரிதாய் ஈர்ப்பு ஏற்பட்டதாக ஞாபகமில்லை. கறுப்புத் தோலில் களையான முகத்துடன் சுளைப்போல இதழ்கள் அமையப்பெற்ற அமுதா அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஏன் மழுப்ப வேண்டும்? அவளேதான். பாதி தூக்கமும், மீதி துக்கமுமாக அப்பயணம் அமைந்தது. துக்கம் என்பது இழந்ததற்கான அடையாளம் என்றால், அந்த 16 மணி நேரம் எனது தனிமையைச் சொல்ல வருகிறேன். அதுவும், முதுகுத்தொடங்கி பிட்டம்வரை வந்துப்போகுமே அந்த மரக்கும்தன்மை.. அப்பப்பா! எனக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை. இளையராஜாவின் இசை மேகங்களை ஜடாயுவின் உள்ளே, சரியாக என் தலைக்குமேலே மிதக்க விட்டாலும், பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையிலான அந்த இசை சிலநேரம் சில கொட்டாவிகளை வாங்கிக்கொள்கிறது. இந்தப் பயணம் எனக்கானது என்றாலும் இன்னொருவருக்கானதும்கூட. சிலவற்றைக் கொஞ்சநேரம் நான் மறக்க வேண்டும். அவ்வப்போது, மயிலின் நீலவண்ணத்தில் குளித்தெழுந்த ஆடையில் வலம்வந்த பணிப்பெண், ஏதோ ஒன்றை உண்ணக் கொடுத்தாள். வாங்கிக் கொண்டேன். கொஞ்சம் சாக்லட் கலரில் சரியான வடிவத்தில் இல்லாமல், குழந்தைக் கைகளில் மாற்றுத் திறனாளிகள் போல காட்சியளிக்கும் களிமண் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது அந்த பிஸ்கட். கட்டை விரலும் , சுட்டு விரலும் முட்கரண்டியாக மாற, மெல்ல முகர்ந்தேன். பாராட்டிச் சொல்லும்படியாக பிரமிப்பை ஏற்படுத்தவில்லை அதன் மணம். இருந்தாலும் அப்பலகாரத்தின்மேல் முழுவதுமிருந்த மேடுபள்ளங்கள், எங்கள் ஊர் கொக்கோயை ஞாபகப்படுத்திச் சென்றது. ஜடாயுவின் விலாக்கண்ணாடி வழியாக வானத்தை அளந்த அந்நேரம், கலைந்து பிரிந்து பறந்துக் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்களில் அந்தக் கொக்கோய் வந்துப்போனது. நிலவும்.. சரிரிரி.. அமுதாவும்! அமுதா! அவள் பேரை உச்சரித்ததும், மனதிற்குள் தோன்றும் பெருமூச்சுக்கு ம்ம்ம்.. என்ற மூன்று ம்-க்கள் போதாது. ‘அண்ணா, அருள் அண்ணா.. அமுதா அக்கா கொக்கோய் கொடுத்துவிட்டாங்க.’ இப்படி ஒலிக்கும் குரல், நாட்களுக்கு ஏற்ப மாறும். மாறன், லோகன், சிலசமயம் விஜயா, மீண்டும் மாறன் என கொக்கோயைக் ஏந்திவரும் தபால்கைகளுக்கு இந்த ஒரு வரி போதுமானதாக இருந்தது அமுதாவுக்கு. அந்த லம்பாக் தோட்டத்திலேயே பல்கலைக்கழக வாசல்தொட்டு வந்த ஒரே ஒரு ஆண்மகன் என்ற கர்வத்தோடு இருந்தாலும், இன்னும் வேலை எதுவும் அமையாததால், படிச்சபுள்ள என்னும் பட்டத்தை மட்டுமே அப்போது சுமந்து கொண்டிருந்தவனுக்கு, இந்த கொக்கோய் நல்லதொரு வேலையைக் கொடுத்திருந்தது. அமுதாவின் காதலெனும் அன்பில் திளைக்க. ஒரு வெள்ளித்தட்டில் ஏழு எட்டு கொக்கோய்கள் மண்திட்டுகள் போல அங்குமிங்கும் கிடக்கும். தட்டெங்கும் எண்ணெய் பரவிக்கிடக்கும். எங்கள் காதலைப் போல. அண்ணா, கொக்கோய சாப்டாச்சா? எப்படி இருந்துச்சு? பிடிச்சி இருந்துச்சா? இதுவெல்லாம் அந்த ஏழு எட்டு கொக்கோய்களுக்குப் பிறகு, வரும் விசாரனைத்தந்திகள். உனடடி பதில் தந்தாக வேண்டும். தருநர் பெறுநர் இருவருக்கும் உண்டான ஒப்பந்தம் இது. கிணற்றுக்கும் நிலவுக்கும் போல. ஜடாயுவின் சுழற்கால்கள் மலேசிய மண்ணைத் தொட இன்னுமொரு நான்கு ஐந்து மணிநேரம் இருக்கலாம். ஜடாயுவின் அடிவயிற்றின் வெப்பத்தைவிட நான் அமர்ந்திருக்கும் இருக்கை மேலும் வெப்பத்தைத் தருவதாக தோன்றியது. கால்களைக் கொஞ்சமாய் நீட்டி, இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன். கால்நரம்பு இழுத்துக்கொள்ளும் சூழலில்தான் அப்போது இருந்தேன். எழுந்து லாவடோரிக்குச் செல்ல எத்தனித்தேன். நான்காம் இருக்கையைக் கடக்கையில், நடுத்தர வயதுடைய ஒரு பெண். அமுதுவைப்போல. ஆனால், இவள் கூன் போட்டு அமர்ந்திருப்பது அமுதாவின் தன்மையை ஒட்டியதாய் இல்லை. அமுதாவின் நிமிர்ந்து நின்றே பேசும் தன்மை எனக்கு அவளிடம் மிகப்பிடித்தமான ஒன்று. கண்களில் ஒளிரும் வெட்கத்தை அவ்வப்போது மறைக்கவும், கோபத்தைக் காட்டவும் அவளின் இந்த உடல்வாகு மிகவும் ஒத்துழைக்கும் அவளுக்கு. அவள் சுடும் கொக்கோய்களுக்கும் இதே திடத்தன்மை உண்டு. அதாவது, கொக்கோய்களின் மிருதும் உறுதியும் அவளிடமும் உள்ளே வெளியேவென இருக்கும். கொக்கோயின் வெளியே பரவிக்கிடக்கும் வண்ணமானது அவளின் தோல் வண்ணம். உள்ளே வெள்ளை வண்ணமாய் அவளது மனம். கொக்கோய் சுடுவது பிரியாணிக்கான மெனக்கெடல் இல்லை. கொக்கோயைத் தயாரிக்கும் முறையைப் பார்க்கும் முன், இந்த கொக்கோயின் பின்புலத்தைப் பார்க்கவேண்டுமாயின் 1511க்குச் செல்ல வேண்டும். டச்சுக்காரர்கள் மாலைநேர தேநீருடன் உண்ண இந்த கொக்கோய்களைச் தயாரித்திருக்கிறார்கள். அடிப்படையில் கோதுமை, தண்ணீர், உப்பு என மூன்றின் கலவைகளே கொக்கோயை அடையாளப்படுத்தி இருக்கின்றன. ருசிக்காக, வாழைப்பழ கொக்கோய், நெத்திலிக் கொக்கோய், வெங்காயக் கொக்கோய், கருப்புச்சீனிக் கொக்கோய் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையை மாற்றிக்கொள்ளலாம். சில வேளைகளின் வீட்டின் வறுமானத்தைப் பொறுத்தும் வறுமையைப் பொறுத்தும்கூட இந்த சுவை மாறும். செய்முறை சுலபமானது என்றாலும் எண்ணிக்கையானது வீட்டில் வாழ்வோரைப் பொறுத்தது. அதுவும், கொக்கோயைச் சுடும்சமயம் சுடச்சுட எடுத்து தின்ன ஆட்கள் பக்கத்திலேயே இருந்தால், கொக்கோய் சுடுபவரின் பாடு திண்டாட்டம்தான். பலநேரங்களில் கலந்துவைத்த கோதுமையின் அளவும்கூட இன்று இவ்வளவுதான் ஏன கடையைச் சாத்திவிடும். அமுதா சொன்ன இரண்டுப்பேருக்கான செய்முறையைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என்ன கொக்கோய், எத்தனைப் பேர் என முடிவுசெய்த பிறகு, கோதுமையைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காய கொக்கோய் என்றால் வெங்காயமும், நெத்திலி என்றால் நெத்திலியும் எடுத்து எண்ணெய்யில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே கோதுமையில் கொட்டி மெல்ல மெல்லப் பிசைய ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவகை உருவம்பிடிக்கும்வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு எப்போதும்போல தேவையான அளவில் உப்பு. சட்டியில் எண்ணெய் காயும்நேரம், கலந்து வைத்த கலவையை அனைத்து விரல்களாய் குவியல் வடிவில் எடுத்து சட்டியில் ஜப்பான் குண்டு போடுவது போலில்லாமல், கைகளில் கொதிக்கும் எண்ணெய் படாமல் லாவகமாக இட வெண்டும். ஒரு மஞ்சள் சாக்லட் கலந்த வண்ணமெடுக்கும் கொக்கோய்களைச் சட்டியிலிருந்து மீட்கலாம். அவ்வளவுதான். அமுதா சுடும் கொக்கோயில் அன்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது சுவையைக் கூட்டவல்லது. ஒருமுறை சுடச்சுட என்னைக் கொக்கோய்களைத் தின்னச்சொல்லி, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறாள். அதனால் ஏற்பட்ட சூட்டுக் கொப்பளங்களைப் பற்றி அவளிடம் சொன்னேனா என ஞாபகம் இல்லை; சொல்லியிருக்க மாட்டேன். கொஞ்ச நேரம் அசந்து தூங்கியதன் விளைவு, என் தொண்டையில் தூங்கும் புலியைக் குறட்டையாக ஏவி விட்டிருக்கிறேன் போல. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் கனடியப் பெண்ணொருத்தி தலையை அந்தப்பக்கமாக திரும்பிப் படுத்திருந்தாள். வாயிலோரம் கொஞ்சமாய் வழிந்திருந்த எச்சிலைக் காலரில் துடைத்துக் கொண்டேன். இன்னும் சுமார் மூன்று மணி நேரம்.. ‘அமுது.. நான் வெளியூர் போயி வேலை செய்யலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிறே?’ கிணறும் நிலவும் சந்திக்கும் அதே இடத்தில் அதன் பிரதிகளாய் நாங்கள். ஏதேதோ காரணங்கள் என் எண்ணத்திற்கு தடையாய் வைப்பாள் என எதிர்ப்பார்த்த எனக்கு அவள் தந்த பதில் சுகமாக அமைந்தது. ‘என்னையும் கூட்டிட்டுப்போயிருங்க. எதுவானாலும் சேர்ந்தே பாத்துக்கலாம். கொக்கோய் சுட்டுப் பொழச்சுக்கலாம்.’ நான் சிரித்தே விட்டேன். ‘ அங்கேயும் கொக்கோய்தானா?’ ‘ இந்த கொக்கோய்தான் நம்ம சேர்த்து வச்சது. மறந்தாச்சா?’ ‘ சரி அமுது, நல்லா வீடு வாசல்ன்னு வந்ததும், கொக்கோய்க்கு ஒரு சிலை எழுப்பிறலாம், சரியா?’ என நான் நகையாட திருக்குறளாய் சிரித்து வைத்தாள் அமுதா. ‘ஆனா அமுது, நீ என்கூட ஓடிவந்தால்தா இதுவெல்லாம் சாத்தியம். கல்யாணம்னு நாம பேசுனா, பல தலைகள் உருளும்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்ல,’ என இரசிய திருமணத்தைப் பற்றி மெதுவாக பேச ஆரம்பித்தேன். ‘நீங்க என்ன சொல்றீங்களோ, அதைக் கேட்கத் தயாரா இருக்கேன்,’ என, நான் என்பதை நாமாக்கி நின்றாள் அமுதா. நிலவைப் போலவே என் வாழ்வில் வெளிச்சம் தந்து. ‘ங்க.. கூடவே ஒரு ஆசையும் இருக்கு. எங்கப்போனாலும் கடைசிக்காலத்துல இங்கேயே திரும்பிவர சத்தியம் செய்யணும்.’ ‘ஏன்?’ ‘கிணறு; நிலா; கொக்கோய்.’ ‘ம்ம்!’- நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. போட்ட திட்டங்கள் அனைத்துக்கும் கொக்கோய் பாலமானது. கொக்கோய் கொடுக்கும் சாக்கில், காதல்சுதந்திர வழிகள் பேசப்பட்டது. நாளை விடியும்முன் ஏறத்தால நான்கு மணிக்கு, கிணற்றுப்பக்கம், சந்திக்கிறோம். அப்படியே, ராகவன் வீட்டு வரிசையில் நுழைந்தால், வாழைத் தோப்பு வரிசைக் கட்டி நிற்கும். அதனைக் கடந்து, முனியாண்டி கோயில் வரும். அங்கிருந்து நடந்தால், சாலையோரம் வந்துவிடலாம். காலை ஆறு மணிக்கு முதல் பஸ்ஸைப் பிடித்தால், 45 நிமிடங்களில் பட்டணத்தை அடைந்து விடலாம். அங்கிருந்து 8 மணிக்கு கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் பஸ். இப்போதைக்கு அவ்வளவுதான் திட்டம். நெத்திலி கொக்கோய் கொடுத்தனுப்பினால், புறப்படும் நாள் மறுநாள் என ஏற்கனவே ஒப்பந்தம் செய்த பலன், இன்று நெத்திலி கொக்கோய்கள் என்னை வந்து சேர்ந்தன. மறுநாள் விடிந்தது, கிணறு வந்தது, வாழைதோப்பு, முனியாண்டி சாமி, முதன்மை சாலை, 6 மணி பஸ் எல்லாம் வந்தது. ஆனால், அமுதா வரவில்லை. வரவேண்டாம்னு சொன்னது நான்தான். இன்னும் ஒரு மணிநேரத்தில் ஜடாயு தரையிறங்கிவிடும். எனது ஹேன்கேர்ரியை மெதுவாக கீழிறக்கி, அதனுள் உள்ள ஆவணங்களைச் சரிப்பார்த்துக் கொண்டேன். மிக முக்கியமானவை. பக்கத்து இருக்கைப் பெண்மணி இன்னமும் என்பக்கம் திரும்பவில்லை. இதுபோன்ற வசதிகள் சிலசமயம் விமானத்தில் நிம்மதி தரக்கூடியவையே. அனைவரின் தனிமையும் அமைதியும் ஒருவித சோம்பலை உண்டுபண்ணும் விமானப்பயணங்களில். அப்போது புன்புறுவலோடு ஆரம்பித்த பல உரையாடல்கள் போதுமடா சாமி என்றுதான் முடிகிறது. சிலருக்குக் கொட்டாவி விட்டுக் காட்டினாலும் கூட, ‘ ஆமாங்க, இப்படித்தான் நான் கொட்டாவி விட்டப்போ..ன்னு, ‘ அதையும் பேச்சுப்பொருளாக எடுத்துக் கொண்டவர்களைச் சந்தித்துள்ளேன். பக்கத்து இருக்கை கனடியப் பெண்ணுக்கு நன்றி. ‘வந்துட்டீயா, இப்போதான் நிம்மதி. என் கையப் பிடிச்சிக்கோ. இதுக்கு மேல நான்தான் உனக்கு அமுது. தோ, அந்த நிலா, இந்த கிணறு.. இதுமேல சத்தியமா, நான் உன்ன நல்லா பாத்துக்குவேன்,’ என அமுதாவின் கையைப் பிடிக்கிறேன். இடது கையை நீட்டி என் விரல்களைக் கெட்டியாக இருக்கிக் கொள்கிறாள். இரு நிலவும் என்கூட பயணிக்க ஆரம்பிக்கின்றன. அமுது, ஐசி? பொறந்த சூரா? என கேள்விகளுக்கு மத்தியில் நாங்கள் குறிப்பிட்ட கன்னிவெடிகளைக் கடக்கிறோம். இதோ, முடியாண்டி சாமி. எங்கள் ஊர் முடியாண்டி சாமிக்கு ஒரு சிறப்புண்டு. நிலா வெளிச்சத்தை தன் முகம்வாங்கி நிற்பார். அது நம்பிக்கை தரும் ஒளி. நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என பக்தி அறிவிப்பு. ‘ அமுது, வா கும்பிட்டுக்கலாம் என அவளைப் பிடித்து இழுக்கும்தருணம்.. அம்மா!!! தரையைத் தொட்டது ஜடாயு. எனது ஆவனங்களை மீண்டும் சரிப்பார்த்துக் கொள்கிறேன். இதற்குப்பிறகு நிறைய வேலை இருக்கிறது. மற்ற பிரயாணிகளைப்போல நான் உடனே வெளியேற இயலாது. எந்தவொரு தடங்கலும் இல்லாமல், எல்லாக் காரியங்களும் நடக்க வேண்டும். ‘ஷ்ஷ்ஷ்… அமுது..!’ அமுதாவின் முகத்தில் நிலவின் ஒளி பட்டு மறைகிறது. ஏதோ, பழுப்பாக, ஆரஞ்சாக , திட்டுதிட்டாக அவள் முகத்தில் தெரிவதுபோல இருக்கிறது. முனியாண்டி சாமியின் காலில் வைக்கப்பட்டிருக்கும் நெருப்பட்டியை மெதுவாக தடவித் தடவி, ஒரு தீக்குச்சியிலிருந்து வெளிச்சத்தைப் பிறக்க வைக்கிறேன். ‘அமுது! என்ன ஆச்சு??’ முனியாண்டி சாமியின் கீழ் தூங்கிக்கொண்டிருக்கும் அகல்விளக்கு எனக்கு களங்கரை விளக்காக நின்றது. வெளிச்சத்தில் தெளிவாய் அவள். முகம், வலது கை, கால் முட்டிக்குக் கீழ் என தீக்காயங்கள். ‘உங்களுக்குப் பசிச்சா, சாப்ட ஒன்னுமே இருக்காதுன்னு சீனிக்கொக்கோய் சுட்டேன். கொஞ்சம் கூடவே.. யாராச்சும் என்ன எதுக்குன்னுக் கேட்டுபுட்டா என்ன சொல்வேன்னு பயத்துல இருந்தப்போ, எனக்கே தெரியாம சட்டியில கைப்பட்டு அப்படியே தெரிச்சிருச்சி. தோ, பாரேன் என கால்களைக் காட்டும்போது, உயிர் கணநேரம் உறைந்து வந்தது. கொதிக்கும் எண்ணெய்யில் ஒருப்பகுதி கால் குளித்திருந்தது. கொக்கோய் மேலுள்ள வட்ட வட்ட கோதுமை திட்டுக்கள் போலிருந்தது அவளது கால்கள். முன்தொடை ஆரம்பித்து மேல்பாதம் வரை அந்திவான வண்ணம் தெரிந்தது. அந்த இருளிலும். இருவரும் அமைதியை உண்டோம். யோசிக்க நேரமில்லை. ‘நீ.. வீட்டுக்குப் போ அமுது. நா மட்டும் போறேன். ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் உன்ன கொக்கோய் நிறுத்தி வச்சுருக்கு. நா கண்டிப்பா வருவேன். எனக்கு செய்யுற கொக்கோய தோ, இந்த முனியாண்டிக்கு வை.’ கோலாலம்பூர் விமான நிலையம் இயந்திரங்கள் துணையுடன் வரவேற்றது. ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கார்கோவிலிருந்து உங்கள் மனைவி அமுதா அருள்நாதனைக் கொண்டுவர நீங்கள் சுமார் ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டும். ஏற்பாடுகள் எல்லாம்? ம்ம்! காத்திருந்த அழைப்பு வருகிறது. ‘நாங்க வெளியே காத்திருக்கோம்.’ ‘லம்பாக் தோட்ட வழியில, அந்த கேணிப்பக்கம் ஒரு சுத்து சுத்திட்டு அப்புறமா, தாமானுக்குப் போயிடலாம்னு சொன்னேனே, முடியும்தானே?’ ‘கண்டிப்பா.’ அமுது போக நினைத்த அதே கேணிக்குச் சென்றோம். அங்கு கேணி இருந்தது. நிலவில்லை; கொக்கோய் இல்லை. இது எதையுமே அறியாத சவவண்டி தாமானை நோக்கி அமைதியாய்ப் பயணமானது. ( முற்றும் )

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.