logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

Rajalakshmi N

சிறுகதை வரிசை எண் # 122


தடுமாறும் மனவோடம் ... "வீடு மாறனும்னு கேட்டல்ல வா அந்த கடைக்கு பின்னால தெருவில ஒரு வீடு இருக்காம்" என அழைத்தார் தனம் அக்கா "வேற ஏரியா போகலையேக்கா. ஸ்கூல் மட்டும் மாத்திக்கிடலாம்னு இருக்கோம்" என்றாள் பத்மா. "அதான் ஹவுஸ் ஓனர் ஒரே கடச்சல் குடுக்குதுன்னு சொன்னியே.. அது லீஸ் தானாம் 2 லட்சம் பேசாம அத பிடிச்சா வீடு கட்ற வரைக்கும் தொல்லை இல்லாம இருந்துக்கிடலாம்ல" "ஆமாம் கா நீங்க சொல்லுறதும் சரி தான். இருங்க வாரேன்" என்றவள் கதவைப் பூட்டிவிட்டு அவளோடு கிளம்பினாள். அடுத்த தெரு தானே என அவளோடு பேசிக் கொண்டே நடந்தாள். நடக்க நடக்க அந்தத் தெருவின் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. "எக்கா இங்கன எப்ப கோர்ட் வந்தது?" எனக் கேட்டாள். "அதானம்மா நானும் இப்பத்தான் பாக்கேன்" என வியந்து கொண்டே உடன் வந்தாள் தனம். "இந்த வீடு தான்" என சொல்லி வீட்டு உரிமையாளரை அழைத்து கதவைத் திறந்து பார்த்தார்கள். வீடு நன்றாகத் தான் இருந்தது. புதிது போல, பளபளவென்று. இரண்டு படுக்கையறைகள், சமையலறை என எல்லாம் பார்த்து முடித்து வீட்டில் இருந்து வெளியே வந்தார்கள். தெரு இப்போது ஒரு புதிய முகம் காட்டியது. நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஜன சந்தடி மிகுந்த நகரத்தின் மைய வணிகத் தெருவில் நிற்பது போல இருந்தது. சுற்றிலும் மனிதர்கள், அவர்களது பேச்சு, சிரிப்பு, தூசு. அப்போது மெதுவாக ஒரு பேருந்து வந்து அவர்கள் அருகில் நின்றது. "ஏ வா, பஸ் வந்துடுச்சி" என சொல்லி பத்மாவை பேருந்தில் ஏற்றினாள் தனம். 'நம்ம வீட்டில் இருந்து நடந்து தான வந்தோம், அடுத்த தெரு தான? இப்படி போய் அப்படி திரும்பினா வீடு' என யோசித்தாள் பத்மா. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேருந்தில் ஏறிக் கொண்டாள். பேருந்து நகர நகரவே "எக்கா இந்த திருப்பத்தில திரும்பினா நம்ம தெரு தான" என்றாள். "ஆமா வா இறங்குவோம்" என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே நாம் வேறு எங்கோ எதிலோ பயணப்படுகிறோம் என புரிந்தது போல இருந்தது. "அடுத்து நம்ம செண்பகவல்லி அம்மன் கோவில் தான் அங்கன கரெக்ட்டா எறங்கி பஸ் மாறி போய்டனும்" என்றாள் பத்மா. "சரி சரி இரு போன் வருது" என தன் தோழியோடு அழைபேசியில் பேச ஆரம்பித்தாள் தனம். பேருந்து ரொம்ப நேரம் ஓடிக் கொண்டே இருந்தது போல இருந்தது. பெரிய கோவில் கோபுரம் கண்ணிற்கு தெரிந்தது. "வா வா நம்ம கோவில்" என்றாள் தனம். இருவரும் இறங்கினர். பார்த்தால், அது மலை. மேலே செல்ல படிகள். "எக்கா இது என்ன எடம்" என்று சுற்றிமுற்றி பார்த்தாள் பத்மா. "அதான நம்ம கோவில்ல மலை இல்லையே" என தானும் ஆச்சர்யமாகக் கேட்டாள் தனம். "முருகா முருகா" என கத்திக் கொண்டே படியேறினாள் பத்மா. "அடியே அங்க பாரு, கோவில்பட்டி பஸ் வருது. வா பஸ்ல ஏறி வீட்டுக்கு போவோம்" பிடித்து இழுத்தாள் தனம். "இவ்வளவு தொலைவு வந்துட்டு, என் முருகன் பக்கத்துல வந்துட்டு அவன பாக்காம போகவா? அவந்தான் இங்க வர வச்சிருக்கான்" என சொல்லி விறுவிறுவென படியேற ஆரம்பித்தாள் பத்மா. வேறு வழியின்றி தானும் அவளோடு படியேறிக் கொண்டே, 'முருகனுக்கு அரோகரா அரோகரா' என கைகூப்பியபடி படியேறினார்கள் இருவரும். மலையிலிருந்து இறங்கும் போது பத்மா மட்டுமே இருந்தாள். ஆங்காங்கே கடைகள் வைத்திருந்தவர்கள் தவிர யாருமில்லை. ஏதோ ஒரு அசாதாரண உணர்வு மேலிட்டது. தூரத்தில் மாடுகள் மேய்வதைப் பார்த்தாள் பத்மா. அவற்றைப் பார்த்ததும் கொஞ்சம் ஆசுவாசமானாள். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்க வில்லை. திடீரென மாடுகள் கத்தும் சப்தம் கேட்டது. பலதும் கலைந்து ஓடியது. "அங்க பாருங்க அங்க" எனக் கத்தினாள் பத்மா. மக்கள் அனைவரும் சிதறி ஓட தானும் மலையில் ஏறி தப்பிக்க எண்ணி ஓடினாள். அங்கே மலை இல்லை. ஒரு பெரிய வீடு இருந்தது. அனைத்து அறைகளும் பயத்தில் பூட்டப்பட்டிருந்தன. மாடிக்குச் செல்லும் படி மட்டும் காலியாக இருந்தது. அதில் ஏறி மேல்மாடிக்குச் சென்றாள். அங்கே வரிசையாக கழிவறைகள் மட்டுமே இருந்தன. நாற்றம் குடலைப் பிரட்டியது. எல்லாம் கீழே சிமெண்ட் வைத்து கட்டப்பட்டு மேல் பகுதியில் கம்பி வைத்து ஜன்னல் போல அடைக்கப்பட்டிருந்தன. புலிகள், கருஞ்சிறுத்தைகள், ஓநாய்கள் எல்லாம் அந்த வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டன. சில எருமைகளைத் தாக்கி கொடூரமாக கொன்றன. கண்களில் பெரும் வெறியோடு அவை அந்த வீட்டின் ஒவ்வொரு கதவையும் ஜன்னலையும் திறக்க முயன்றன. மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்த பத்மாவிற்கு வேறு வழியில்லை. படிகளில் இறங்கி எதாவது அறையைத் திறக்கச் சொல்லி கேட்கலாமா என நினைத்தாள். அது ஒரு தற்கொலை முயற்சி தான். அதனால் குடலைப் பிரட்டிய வாடையைத் தாங்கிக் கொண்டு ஒரு கழிவறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். மெதுவாக எட்டி கீழே நிலவரம் அறிய முற்பட்டபோது இரண்டு ஓநாய்கள் மேல்மாடிக்கே வந்து மோப்பம் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு குறுகி அமர்ந்தாள். ஓநாய்கள் திடீரென எதனாலோ பயந்தவை போல ஓடின. நீண்ட நேரம் அந்த இடத்திலேயே கிடந்தாள். பின் மெதுவாக வெளியேறி கீழே எட்டிப் பார்த்தாள். எதுவும் இல்லாதது போல இருந்தது. மெதுவாக கீழே இறங்கி வந்தாள். ஒவ்வொரு கதவையாக மெதுவாகத் தட்டினாள். "யாராவது கதவ திறங்க. என்ன காப்பாத்துங்க" என கேட்டு ஒரு கதவிற்கும் மற்றொரு கதவிற்குமாக ஓடினாள். வீட்டைச் சுற்றிலும் அடர்ந்த புதர்களின் பின்புறமிருந்து ஒரு கருஞ்சிறுத்தை அவளை நோக்கிப் பாய்ந்தது. அதைப் பார்த்து பயத்தில் அலறினாள். ஏதாவது கதவு திறக்குமா?என்ற நப்பாசை மறைந்து உயிரைத் துறக்க மனதை தயார் செய்து கொண்டாள். கருஞ்சிறுத்தை பாய்ந்து வந்து அவளது பிட்டத்தைப் பிடித்த அதே நிமிடத்தில் கதவு திறக்கப்பட்டு அவளை உள்ளே பிடித்திழுத்தது ஒரு கரம். கதவுகள் உடனே மூடப்பட்டன. அய்யோ அம்மா வலிக்குதே என அலறிக் கொண்டே திரும்பினாள். அவளது அம்மா தான் அவளைக் காப்பாற்றியது. தாயைக் கண்டதும் பட்ட துயரங்கள் மறைந்தது போன்ற அமைதியில் விழி மூடிச் சரிந்தாள் பத்மா. "பத்மா பத்மா என்னைப் பாரு. கண்ண திறந்து பாரு. இந்த தண்ணிய குடி" என்ற குரல் கேட்டு கண் விழித்துப் பார்த்தாள். அருகில் அவளது கணவனும் பயந்த முகத்தோடு பிள்ளைகளும் நின்றார்கள். கனவு கண்டு அலறி பிள்ளைகளை பயமுறுத்தி இருக்கிறோமே என வெட்கமாக இருந்தது. ஒன்னுமில்ல தூங்கு என முதுகில் வருடினார் கணவர். பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டார். சீரான மூச்சோடு மீண்டும் நித்திரைக்குள் விழுந்தாள். இப்போது சிறுத்தையோ புலியோ அவளை நெருங்கவில்லை.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.