ஜே.பிரோஸ்கான்
சிறுகதை வரிசை எண்
# 121
வாமீட்
இப்படி என்னை கஷ்டப்படுத்தக்கூடாது நானும் ஒரு மனுஷிதான், எத்தனை வேலையை செய்றது. விடிஞ்சதிலிருந்து நானும் நிற்க கூட நேரமில்லாமல் வேலை வேலை என்று செய்திட்டுதானே இருக்கேன். உங்க கண்ணால பார்த்துட்டு தானே இருக்கிங்க. எல்லா வேலையையும் ஒன்னாப் போட்டு ஒரு மனுஷியா செய்திட்டுத்தானே குளிச்சி ரெடியானேன். இப்போ போய் இந்த அசிங்கத்தை என்னை சுத்தம் செய்யச் சொல்லுறிங்களே… மனச்சாட்சியே இல்லையா உங்களுக்கு.
ஏய்! இப்ப என்னாடி உனக்கு, ஏலாட்டி விடுடி நான் பார்த்துக்கிறேன்.
ஓ… நான் உங்களுக்கு என்ன சொன்னாலும் கோபம் பொத்துக்கிட்டு வந்துடும். மற்றவன் படுற கஷ்டத்ததை, வலியை கொஞ்சமாவது உணரனும். ஒழுங்கான ஆளுன்டா நீங்க என்ன செய்திருக்கனும், குளிக்க போக முன் இந்த ஆட்டோவை திறந்து பார்த்து சுத்தம் செய்திருக்கனும். ஏற்கனவே ஒரு தடவையும் இப்படித்தான் அந்த பூனை மலம் கழிச்சி வச்சிட்டு போனது. அப்போவே நான் சொன்னேன் இந்த ஆட்டோவை ஒரு நல்ல படங்கு ஒன்றை வைத்து மூடுங்க என்டு. அதை செய்றத விட்டுடு இப்போ என்னோட முறைச்சிக் கொண்டு வாறீங்க.
இங்கப்பாரு.. நீ போய் உன் வேலையைப்பாரு, நானே கிளீன் பண்றேன் என்டு சொல்லிட்டேனதானே. அப்புற் எதுக்கு திரும்பத்திரும்ப கடுப்பேத்திக்கிட்டு இருக்கா நீ… என்று முனீஸ் மனைவியை நொந்து கொண்டான்.
நேற்று இரவிலிருந்து வழமைக்கு மாற்றமாக மேகம் கும்மிருட்டாக இருந்தது. கடுமையான மழை பெய்யப் போகிறதென்று மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே நேற்று இரவிலிருந்து சரியான மழை. விடியற்காலையில்தான் மழை விட்டது. பெய்த மழைக்கு வாசலில் தேங்கியிருந்த தண்ணி இப்போதுதான் னொஞ்சமாக குறைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்கின்ற போது வழமையாக ஆட்டோவை படங்கினால் மூடி விட்டுத் தூங்குவதுதான் வழமை. நேற்றும் அப்படித்தான். ஆனால், காலையில் முழுமையாக விடிவதற்கு முன்பு சொந்தக்காரர் ஒருவரின் வீட்டிலிருந்து மரண செய்தி. மனைவியின் நெருக்கமான உறவினர். அவர்களுடைய வீடு எமது வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது.
அவர்களின் வீடு தூரம் என்பதால் நானும் மனைவியும்,மகளும் மய்யத்தை மையவாடிக்கு கொண்ட செல்ல முன்னர் போய் பார்த்து விட வேண்டுமென்பதற்காக இருக்கின்ற சில வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு இருக்கின்ற வேலைகளை முடித்து விட்டு அவசர அவசரமாக கிளம்பினோம். ஆட்டோவை வெளியே எடுப்போம் என்று ஆட்டோவின் படங்குகளை திறந்தால் பூனை ஆட்டோவின் முன் சீட்டில் மலம் கழித்திருந்தது. இப்படியான நிகழ்வு ஆட்டோவில் இடம் பெறுவது இது முதற்தடவை அல்ல. பூனை மலத்தின் நாற்றம் தாங்க முடியவில்லை. கு;ட்டிக் கொண்டு வந்தது. மகள் மூக்கை பொத்திக் கொண்டாள், மனைவியோ பத்தடிக்கு அப்பால் நின்றாள். இதனை சுத்தம் செய்ய வேண்டுமென மனைவியிடம் சொன்னதால்தான் ஆயிரத்தொரு விதண்டாவாதங்கள் பூதாகரம் கண்டு கொண்டிருக்கிறது. அந்தப் பூனையை மட்டும் இப்போ இறைவன் என்ட கண்ணுள காட்டினான் என்றால் நடக்குறதே வேறு. எனக்கு வாற ஆத்திரத்துக்கு என்ன செய்வேன் என்றே தெரியாது.
சும்மா புலம்பாமல் கெதியாக அதை சுத்தம் தான் செய்யுங்களேன், மைய்யத்தை அடக்க கொண்டு போய்டுவாங்க. நோய்ல படுத்துக் கிடக்கும் போதும் பார்க்க போக கிடைக்கல. கடைசியா அடக்கம் செய்றதுக்கு முன்னால முகத்தையாவது போய் பார்ப்போம்.
ஏய்! வாய மூடு. நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். காலங்காத்தால இங்க இப்படியொரு பிரச்சினை என்று பார்த்தால் உன்ட பாடு பெரும் பாடாயக் கெடக்கு. என்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
இப்போ என்னா… இப்படியே சண்டையா பிடிச்சிட்டு இருக்கப் போறிங்க அவசரமா சுத்தம் செய்தால்தானே நேரத்துக்கு போக முடியும்.
'இப்போ நான் என்ன செய்திட்டு இருக்கேன். அதைத்தானே செய்கிறேன். நாற்றம் தாங்க முடியலடி. ஒன்னும் சாப்பிடவும் இல்லை. இதுல இந்த நாத்தம் வயிற்றை அப்படியே புரட்டிக் கொண்டு வருது.
இந்தாங்க இந்த துண்டை மூக்கில் கட்டுங்க. எனக்கு அந்த வாசம் ஒத்துக் கொள்ளுதில்ல. நீங்களே அதை துப்பரவு செய்ஙக. 'நான் போய் தண்ணியும் சவர்க்காரத் தூளையும் எடுத்துட்டு வாறேன்'
'அதை செய் முதல்ல', இப்படி காலையில் மிகவும் சிரமமான அந்த நிகழ்வை ரொம்ப வருத்தத்துடன் செய்து முடிச்சிடு மரண வீட்டுக்குச் சென்று வீடு திரும்பினோம், ஆனால், போய்ச் சேருவதற்குள் மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்து விட்டார்கள். எத்தனை கிலோ மீற்றர் ஓடி வந்த போதும் இப்படி நடந்து விட்டதே. கடைசி வரை மரணித்தவரின் முகத்தை பார்க்கவே முடியாமல் போய் விட்டது.
அங்கிருந்து வீடு வரும் வரை மனைவி என்னை முந்திரிக் கொட்டை போல வருத்தெடுத்துக் கொண்டே இதுருந்தாள். அடிக்கடி திட்டிக் கொண்டே வந்தாள். அந்த வலியோடுதான் இப்போது இரவு உணவை சாப்பிடும் போது அந்தப் பூனையை எப்படியாவது பிடித்து எங்காவது தூரக் கொண்டு போய் விட வேண்டும் என்று மனம் பொங்கிக் கொண்டிருந்தது.
அந்த பூனையை எப்படியாவது பிடித்து விட வேண்டுமென்பதற்காக திட்டங்கள், போர்க்கால தந்திரங்கள்,வேட்டை தந்திரங்களென, அத்தனையையும் கரைச்சி குடித்தவனைப் போல பூனையை பிடிப்பதற்காக திட்டங்கள் தீட்டியிருந்தேன. நிச்சயமாக இன்று இரவுதான் மன நிம்மதியாக உறங்கப் போகிறேன். விடியும் போது பூனையை பிடித்து விட்டேன் என்ற சந்தேசத்தில்தான் விழிப்பேன், என்ற நம்பிக்கையோடு உறங்கி காலையில் எழுந்து வந்து பார்க்கிறேன்.
ஆஹா..ஆ...ஆஹாஹா பூனையார் வசமாக கிக்ககிட்டார். இனிமேதால்தான் சம்பவம் இருக்கு. பூனையை உற்றுப் பார்க்காமலேயே தெரிந்தது. அது ஒரு பெண் பூனையென்று.
ஐய்யோ...ஐய்யய்யோ..
'என்னை எதுவும் செய்திடாதிங்க என் வயிற்றில் குட்டிகள் இருக்கு. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன், என்று அழத் தொடங்கியது அந்த பெண் பூனை.
'இங்கப்பாரு உன்னை என்னால இப்போ சத்தியமா மன்னிக்க முடியாது.'
ஏன்? இப்படி இரக்கமே இல்லாமல்.பேசுரிங்க,
ஓ... எனக்கு இரக்கமில்லையா?
அப்படித்தானே. அப்படியென்றால் ஏன் ஒரு நிறைமாத கர்ப்பிணியென்றும் பார்க்காமல் இப்படி குரோதமாக பேசுரிங்க.
ஏய்! என்னா செய்ரதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்னை ஈரமில்லை இரக்கமில்லையென்று சீன் போடுகிறாய்.
ஐயோ.. அப்படியில்லை.
அப்போ எப்படி..?
'என்னை முதல்ல இந்த வலையில் இருந்து காப்பாற்றுங்க பேசி தீர்த்துக்கெல்லாம்'
உன்னை எப்படி நம்புற..?
நம்பிக்கைதானே வாழ்க்கை ப்ரோ.
ஏய்… இங்கப்பாரு நான் ரொம்ப கோபக்காரன். என்னை கடுப்பேத்துனா...
"ஐயோ...இவனை நமக்கு தெரியாததது போல கதைக்கிறான் ,இவனே ஒரு டம்மி பீஸ்ஸு. என்னா முறைக்கிறான்"
ஏய் ! பூனையே என்னா மைன்ட் பாய்ஸ்ண்று சத்தமா பேசிட்டு இருக்கா.?
ஆஆஆ... ஆஆ.
ஐயோ அவ்வளவு சத்தமாவா பேசிட்டேன் பாஸ்.?
இப்போ உன்னை கைமா பண்ணப்போறேன் பாரு.
எசமானே..
அப்படி மட்டும் பண்ணிடாதே எசமானே.
ஆமா இப்போ என்னா நினைச்சா.?
நானா..?
நீயேதான்.
நீங்க ரெம்ப பெரிய மனுசரு நல்லவரு வல்லவருருரு...
என்னா?
ருருரு..
அடச் சீ
சொல்லு.
எதைப்பா சொல்ல.?
நான் ஒரு டம்மி பீஸ் என்றியே..
ஐயோ அதுவா ஒரு குழப்பத்திலே
வாய்ல வந்துட்டு பாஸ், நீங்க ஒரு வீரனாச்சே..
ஏய் நீ என்ன ரெம்ப சூடாக்குறா
நான் சூடானேன்...
எசமான் கோபம் வேணாம். நான் தான் உங்க மனைவி தார எச்ச சொச்சையெல்லாம் சாப்பிடுட்டுடு இங்கேயேதானே பாஸ் இருக்கேன், எனக்கு தெரியாதா பாஸ். ஆனால், ஒன்று மட்டும் சொல்லனும் பாஸ் உங்க மனைவி உங்களைவிட ரெம்ப சூப்பர் பாஸ் என்று எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது.
என்னா... என்னாது...
ரொம்ப நல்லவங்க என்று சொல்ல வந்தேன்.
ஓ… அவளே உனக்கு சாப்பாட்டை போட்டு வளர்த்து விட்டுட்டு நீ வாந்தியெடுத்த அசிங்கத்துக்காக என்னை தீட்டி தீக்கிறாளா? அவளுக்கு இன்னைக்கு இருக்கு. அவளை அப்புறமா வச்சிக்கிறேன்.
ஐயோ உண்மையை கூட சொல்ல முடியலயே.. இனி எச்சி சாப்பாடு கூட எனக்கு கிடைக்காதே… இந்த கடங்காரனாலே..
டேய் கடங்காரா...
என்னா பூனம்மா மறுபடியும் மைன்ட் பாய்ஸ்சா.
ம்ம்..ம்ம். இப்போ கேட்டு இருக்காதே நான் நினைச்சது.
'உனக்கு ரெம்ப கொழுப்புதான்'
ஐயோ வயிறு வலிக்குது
எசமானே என்னை அவுத்து விடுங்க."கக்கா" போய்ற்று வந்து நம்ம ஆறுதலா பேசிக்கலாம்.
ஆஆஆஆ...ஆஆஆஆஆ.
உன்னை...உன்னை.
பாஸ்...பாஸ்...சத்தம் சத்தம் வேணாம் பாஸ், பயமா இருக்கு.
இப்போ நான் உன்னை கொல்லப் போறேன்.
வேணா...வேணாம்
அந்த முடிவு மட்டும் எடுக்காதிங்க பாஸ்.
'இப்போ நான் என்ன பண்ணனும் சொல்லுங்க பாஸ் நான் உங்க ஆட்டோவுலே வாந்தி எடுத்தது தப்புதான பாஸ். அதுவும் நீங்க கஷ்டப்பட்டு போட்டே தடையெல்லாம் மீறிப்போய் படுத்து அப்புறம் வாந்தி எடுத்ததும் தப்புதான் பாஸ். அப்படி நான் செய்திருக்க கூடாதான். என்ன செய்ரது… அன்று நிலைமை அப்படி பாஸ்'
என்ன நிலைமை அது.?
புதுசா ஏதோ யோசிச்சிட்டா போல.
சத்தியமா அப்படி ஒன்னுமில்லை பாஸ்.
அப்போ.!
அதுவா.. பாஸ்,
ஏய்..!
'இல்லை பாஸ் வலையை கிழிக்கல அரிப்பு அதுதான் சொறிஞ்சேன்'
நீ சொறிஞ்சது போதும் நிலைமையை சொல்? உன்னாலே நான் அன்றைக்கு முழுதுமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.?அந்த ராட்சசி பற்றி உனக்குதெரிஞ்சி இருந்தும் இப்படி என்னை அவள்ட மாட்டி விட்டுட்டியே.
ஐயோ..அப்படியில்லை பாஸ்.
உண்மையிலேயே அன்றைக்கு என்ன நடந்திச்சின்னா.
ஆமா ஏன் இவ்வளவு சோகம்?
ம்ம்.. நீங்க என்னாலே பட்ட கஷ்டமெல்லாம் என் மனக் கண்ணுக்கு முன்னாலே வந்து போச்சு அதுதான் இந்த சோகம்.
ஏய் உனக்கு ரெம்ப குசும்பு நீ உருட்னது போதும் அந்த நிலைமையை சொல்லி தொலை
ம்ம்.. சொல்றேன்...சொல்றேன்
கொஞ்சம் லைட்டா இந்த வலையை எடுத்திடுங்க பாஸ்.
இங்கப்பாரு இப்போ நீ
சும்மா என் நேரத்தை வீணடிக்கிறா,
நான் இருந்த கோபத்துக்கு உன்னை கொன்றுட்டுதான் வேற வேலை பார்த்திருக்கனும்.
இல்லை எசமான் நான் சொல்லிடுறேன்
எசமான் எனக்கு ஒரு டவுட்.
ஐயோ கடவுளே...
ஐயோ பாவம் அவரே கண்பீயுஸ் ஆகிட்டார்.
ஏய்...
நோ...நோ... கூல் கூல்
எசமான் என்னன்றா அந்த மூன்றாவது தெருல நாளாவது வீட்டுக்காரன் இருக்கானே
ஆமா கபூர் பொலிஸ் ஓய்வு பெற்றவர்தானே.?
ஆமா..ஆமா..பாஸ்
அங்கே அவர்ட மகன் ஆட்டோ ஓட்டுவாரே..
ஆமா அஜாத் ..
ஆ..ஆ..அவர்தான்.
என்னா அவர்ட ஆட்டோவுலயும் அசிங்கம் பண்ணிட்டு செமயா
வாங்கி கட்டினியா..?
ஐயோ பாஸ் உங்களுக்கு இப்படியொரு ஆசை இருக்கும்டு நினைச்சிக்கூட பார்க்கல.
அப்போ என்னா அவர்ட வீட்ல.
என்ன பாஸ் ஊருக்கே தெரியும் பணக்கார வீட்டு பெண்ணொன்றை அவன் திருமணம் முடிச்சி அன்று சரியான தடால் புடால் சாப்பாடு போட்டது.
ஆமா அதுக்கு என்னப்போ.
அங்கேதான் பாஸ் செம்மையா சாப்பிட்டு விட்டு வாரன். போறேவனெல்லாம் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு கழிவை நிறையே விட்டுட்டானோல். ஒரு மலை போல சாப்பாடு குவிந்து கிடந்தது.
என்ன பாஸ்! உங்க ஆட்கள் இப்படி கல்யாணம் என்ற பேர்ல உணவை மோசமாக வீணடிக்கிறாங்க..அவங்க வீணடிச்ச சாப்பாட்டேதான் நானும் என் கணவரும் செமயா சாப்பிட்டோம் பாஸ், என் கணவர் கடுவன் பூனை அப்பவே சொன்னது இங்கப்பாரு செல்லம்மா கண்டபடி சாப்பிடாதே அப்புறம் பின் விளைவு ஆபத்தா இருக்கும்டு.அதை அவர் சொன்னதற்கு கோபிச்சிட்டுதான் உங்க ஆட்டோவுல வந்து படுத்தேன் பாஸ், அதனாலதான் அந்த சம்பவம் நடந்துச்சு பாஸ். ஆட்டோவே விட்டு கீழே இறங்குறதுக்குள்ளேயே வாந்தி நீர் வீழ்ச்சியாய் அப்படியே சொட்டிட்டு பாஸ். அதனாலே அன்றிரவு நான் சாரியாகவும் தூங்கல பாஸ்..
ஏய்...ஏய்... உன்னை நான் கொல்லாம விடமாட்டேன்.
ஐயோ..ஐயோ...காப்பாத்துங்க.
டேய் உன்னை வெட்டாமல் விடமாட்டேன்டா...
என்னங்க..என்னங்க.. என்னாச்சு இந்த மனுஷனுக்கு யோவ் என்னையா இந்த காட்டு கத்து கத்துறா?
இங்கே பாருடி இங்கே பாருடி அந்த பூனையை ஒரு போடுல போட்டேகசைழன். அடப்பாவி மனுஷா… இந்த நடு ராத்திரியிலே என் தூக்கத்தை இப்படி கலைச்சிட்டியே. பேசாமல் தூங்கு.
-ஜே. பிரோஸ்கான்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்