இரா. தங்கப்பாண்டியன்
சிறுகதை வரிசை எண்
# 120
வேஷக்காரர்கள்…
-இரா. தங்கப்பாண்டியன்
ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிஷமே தங்கையாவுக்கு தெரிந்து விட்டது. அது அழகாபுரி கோமாளி என்று. கூட்டத்தை விலக்கி விட்டு பக்கத்தில் போய் பார்க்கிறார். அல்லி நகரம் பாலு ராஜபார்ட் வேஷமும், அவங்க தம்பிக சின்னனும், சுந்தரமும் பெண் வேஷமும் போட்டிருந்தார்கள்.
“வெநாயகனே வெண தீப்பவனே…. ன்னு பாலு மொதப்பாட்டு சாமி பாட்டுப் பாடி முடிச்சார். கோமாளி மைக் முன்னால நின்று “பெரியோர்களே இன்னிக்கி நம்ம ஊர்ல பேரோடயும், பொகழோடயும் வாழ்ந்த, நம்ம அய்யா தா்ம பிரபு, யாரு வந்து கேட்டாலும் இல்லன்னு சொல்லாத எளகிய மனசுக்காரு எங்க அப்பன் சின்ன வெள்ளையத் தேவரு சிவலோகப் பதவி அடஞ்சுட்டாரு. மண்ணுலகம் விட்டுட்டு பொன்னுலகம் போயிட்டாரு. அதனால எங்க அப்பன் அவர்கள வழியனுப்ப அல்லி நகரம் கிராமியக் கலைஞர்கள் சார்பா ராஜா-ராணி வேஷமும், சிண்ணான்டியோட நையாண்டி மேளமும் இங்க வந்திருக்கோம். ஆடுற ஆட்டக்காரன்களுக்கு அமதி காத்துத் தரனுமுன்னு கேட்டுக்கிட்டு…..”
கோமாளி பேசிக்கிட்டு இருக்கும் போதே “ராஜபார்டு” பாலு முகத்தில் இருந்த வேர்வையை “மேக்கப்” கலையாமல் மெல்ல மெல்ல “கர்சிப்”ல் ஒத்தி எடுத்தார். “பொம்பளைக” ரெண்டு பேரும் கொண்டையவும், கால்மணிகளையும் சரி செஞ்சிட்டு இருந்தாங்க. கொஞ்சம் தண்ணிய குடிச்சுட்டு மீண்டும் கோமாளியே பேசினார். “இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம அப்பனுக்கு ஊா் சனங்க கோடி கொண்டாரப் போறாங்க அதுக்கு முன்னாடி நாங்க “மாரடிப்பாட்டு” “பாடப்போறோம்”னு சொல்லி விட்டு மூவரையும் பார்த்தான். நாலுபேரும் வட்டமாய் நின்று மார்ல பொய்யா அடிச்சிக்கிட்டே சுத்தி சுத்தி வந்தார்கள் “பொம்பள” வேஷங்கட்டியிருந்த சுந்தரம் மாரடிப்பாட்டுல முதல் அடியைப் பாட ஆரம்பிச்சார்.
“அம்மாடியோ…. ஆத்தாடியோ…
அப்பனோட சாவப்பாரு….
இழுக்கவில்லை பரிக்கவில்லை
படுக்க மேல கெடக்கவில்லை
தூங்கும்போது ஆவிபோன
அப்பன்சாவு நல்ல சாவு
அம்மாடியோ ஆத்தாடியே…..”
சுந்தரம் பாடப்பாட மூணுபேரும் பின்பாட்டுப் பாடிவைக்க சின்ன வெள்ளத் தேவரோட அருமை பெருமையெல்லாம் கூட்டியும் குறைத்தும் இட்டுக்கட்டி மாரடிப்பாட்டு நீண்டு கொண்டே போனது…. எளவுக்கு வந்த கெழடு கட்டக கண்ணுல எல்லாம் மால மாலையா கண்ணீா் பொறப்பட்டு வடிஞ்சிட்டு இருந்திச்சு.
தேவரு எப்பிடிச் செத்தாருன்னு காலையில வேஷங்கட்டுறதுக்கு முன்னாடி சுந்தரத்துக்கு தெரியும். எழுவது வயசுக் கெழவன் இழுக்காம பறிக்காம பொட்டுன்னு போறது நல்ல சாவு. இப்படிச் சாகுறதுக்கு புண்ணியம் செஞ்சு இருக்கணும். தேவரு என்ன புண்ணியம் செஞ்சாருன்ணு தெரியாட்டியும் ஊரு ஒலகத்துல இருக்குற சனங்க என்ன செய்யுறாங்களோ அத விட கொஞ்சம் அதிகமா கூட்டிக் கொறச்சு பாடியாகனும்ங்கற விதி மாரடிப் பாட்டுல இருக்கும்.
மாரடிப்பாட்டு முடிஞ்சு போச்சு. “ராஜபார்ட்” பாலு மைக் முன்னால நின்னு “ஏன்டி பிச்சையம்மா, எங்க நம்ம மூக்காயி கெழவிய இன்னும் காணோம்“ ன்னு சொன்னான்.
“நானும் அதத்தேன் மாமா நெனச்சே, இந்த கெழட்டு முண்ட எங்க போயித் தொலைஞ்சாளோ…”
“ஏன்டி புஷ்பம் நீயாவது சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பாறே….”
ஏ……. மூக்காயீ….. ஏ….. யக்கா…….” சத்தம் எதிரொலித்து நின்றது.
“ராஜபார்ட்” பாலு மைக்முன் நின்னு பாட்டு பாடினார்
“கருமேகக் கூந்தலுக்கும் கால் கொலுசு சத்தத்திற்கும்
வடிவான வடிவழகே ஆச மூக்காயி – ஒன்ன
வச்சு வாழக் கூடலையே நேச மூக்காயி……. மூக்காயி.”
பாலு பாடி முடிக்கும் முன்னாடியே கூட்டத்துல இருந்து எதிர்பாட்டு வந்திச்சு.
“மனப்பாற மாடு பூட்டி, கோயில்பட்டி வண்டி கட்டி
கோயில்பட்டி வண்டி கட்டி…..
வீதியில நீங்க வந்தா ஆச மச்சானே
வெடலப் பிள்ளைக வாசலில் நிக்கும் நேசமச்சானே
மச்சானே நேச மச்சானே…….”
பாடிக்கிட்டே கூட்டத்துக்குள்ள இருந்து “மளுச்சின்னு ஒரு தவ்வு தவ்வி ஆட்டக்களம் வந்து கோமாளி பாட ஆரம்பிச்சார். சின்ன வெள்ளத் தேவா் மேல மூக்காயி கெழவி வச்ச பாசம், அவரு கூட வண்டியில போனது…… சேல வாங்குனது இப்பிடி பொய் பொய்யா கெழவி பாட்டுக்க பாடுது.
மூக்காயி கெழவி பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கும்போது “கிராமக் கமிட்டியின் சார்பாக இன்னும் கொஞ்சம் நேரத்தில் கோடி, மாலை கொண்டு வர இருப்பதால் கிராம முக்கியஸ்தர்கள் பிள்ளையார் கோயில் முன் வருமாறு அழைக்கப்படுகிறார்கள்” ன்னு தடுமாறியபடியே ஒரு தண்ணி வண்டி பேசிட்டுப் போச்சு.
மேளகாரங்களை ரெண்டாப் பிரிச்சு ஒரு “குரூப்” ஆட்டக்காரங்களுக்கு அடிக்கவும் இன்னொரு குரூப் கோடி மாலை கொண்டு வரவும் அனுப்பி விட்டாங்க.
மூக்காயி கெழவி இப்ப ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா….. ஒப்பாரிக்குத் தோதுவா உறுமியத் தூக்கி தோள்ல மாட்டிக்கிட்டு முக்காடு போட்டுக்கிட்டு மைக்முன்னாடி நின்னா.
“இன்னிக்கி நெல்லு நடவு நட்டு……. நெல்லு நடவு நட்டு….
நெல்லு வளந்து கருதாச்சு…. என்னப் பெத்த ராசா
நீங்க நெலசாஞ்சு போனீகளே……..ஆ…..”
“சீரகம் பாத்தி கட்டி செடிக்குச் செடி குஞ்சங்கட்டி…… குஞ்சங்கட்டி ….
சீமானார் ஆண்ட தேசம் இன்னக்கி
சிரழஞ்சு நிக்குதடி…… ஆ…..ஆ…..”
இப்பிடி ஒவ்வொரு ஒப்பாரி சொல்லிச் சொல்லி மூக்காயி கெழவி ஒப்பு வச்சுக்கிட்டு இருந்தா அந்த நேரம் பாத்து “ரெண்டு பொண்டாட்டி” ரெங்கு நாயக்கர் உள்ள வந்து மூக்காயி கெழவிக்கு பத்து ரூவா “குத்திட்டு” போனாரு. மத்த ரெண்டு பேரும் குத்துனாங்க.
கிராம கமிட்டி சார்பா கோடி, மாலை கொண்டு வந்து போட்டாங்க. இடையில ஒரு சின்ன “பிரேக்” கெடச்சது. ஆடுற ஆட்டக்காரங்களுக்கு டீ சப்ளை நடந்துச்சு. “இன்னும் நெறைய ஆட்டம் இருக்கு. பெரியவரை சாயங்காலம் நாலு மணிக்கு மேல தான் நல்லடக்கம் செய்யணும். அப்பதான் நல்ல நேரம். அதுவரைக்கும் அமைதி காக்கணும்” ன்னு கெழவி மைக்குல கேட்டுக்கிருச்சு.
ஒதுங்கியிருந்த மாராப்பப் பாத்து ஒரு ”தண்ணி” வண்டி விசில் அடிச்சிச்சு. கெழவி மாராப்ப சரி செஞ்சிட்டு தண்ணி வண்டியப் பாத்து கண் அடிச்சிச்சு. தண்ணி வண்டிக்கு சந்தோசம் தாங்க முடியல இந்திர லோகத்து ரம்பை வந்து கூட “படுக்க” கூப்புட்ட மாதிரி தவ்வித் தவ்வி ஆட ஆரம்பிச்சிருச்சு. ஒரு வழியா ஒரு “அப்பு” அப்பி தண்ணி வண்டிய சமாதானம் செஞ்சாங்க.
இப்ப நல்ல தங்காள் கதையை நடத்தப் போறாங்க. கெழவி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்த நேரத்துல “பொம்பள” வேஷம் கட்டியிருந்த சுந்தரம் வெளிய போயிட்டார். போயி நல்ல தங்காள் கதைக்காக குடுகுடுப்பக்கார பொம்பளயா மாறி கையில தட்டு, கம்போடு குடுகுடுப்பகார பொம்பள வந்தாள். அதுக்கு முன்னால கோமாளி “மைக்” முன்னால நின்னு.
“சாமி இப்ப நல்லதங்கா கதைய சொல்லப்போறோம். அதுக்கு குடுகுடுப்பக்கார பொம்பளயா வந்துதான் சொல்லணும். இந்த ஊருல கம்பளத்து நாயக்கமாரு இருக்காக. ஏதாவது சொல் குத்தம், பொருள் குத்தம் இருந்தா பெத்த புள்ளைக மாதிரி எங்களை மன்னிக்கணும்….”. என்று சொல்லி விழுந்து கும்பிட்டார். இப்ப நல்ல தங்காள் கதைய “ராஜபார்ட்” ஆரம்பிச்சார்.
தன்னனே னானேனானே….. தானன னானே னானே…..
அண்ணமாரே தம்பிமாரே….. அருமையான அக்காமாரே….
நல்ல தங்காள் கதைய கொஞ்சம்… சொல்லி வாரோம் ஒங்களுக்கு….”
ராஜபார்ட் பாடப்பாட நல்லதங்காள் பதில் பாட்டு பாடிக்கிட்டே உள்ள வந்திருச்சு. இப்ப நல்ல தங்காள் கதையை குடுகுடுப்பகார அம்மா பாடுது
“எம்பேரு நல்ல தங்கா…. அண்ணன் பேரு நல்லதம்பி
அம்மா பேரு இந்துராணி…. அப்பாபேரு ராமலிங்கம்
கொடிக்குளம் கூமாப்பட்டி நாபொறந்த தேசமுங்க
அர்ச்சனாபுரம் ஆண்ட காசி மகாராஜ தாங்க
மாலையிட்ட மன்னவரு மனசுக்கேத்த நல்லவரு….”
பாடப்பட்ட இடைப்பட்ட எடத்துல எல்லாம் ராஜபார்ட்டும் கெழவி வேஷம் போட்ட கோமாளியும் “தன்னானே” போட்டாங்க நல்ல தங்காளோட பெறப்பு, வளா்ப்பு, பிள்ளைப் பெத்ததுன்னு கதை நீளுது. குடுகுடுப்ப பொம்பள பாடப்பாட கிழவியாக இருக்கிற அழகாபுரி கோமாளி அந்த பாட்டுக்கெல்லாம் விளக்கம் சொல்லுது. இடையிடையே “ராஜபார்ட்” மைக் முன்னால வந்து கதையில விட்டுப்போனத எடுத்துத் தந்திட்டு இருந்தார். தேவா் செத்த துக்கத்துக்காக அழுதார்களோ இல்லையோ….. நல்ல தங்காளோட கஷ்டத்தை நெனச்சு நல்ல தங்காள் நாட்டுலப் பஞ்சம் வந்து சனங்க பசியால் செத்து மடிந்து, கொழந்த குட்டிகளோடு அண்ணன் வீட்டுக்கு வந்து அங்க மதினி கொடும தாங்காம புள்ள குட்டிகளோட ஒவ்வொரு புள்ளையா கெணத்துல போடப்போட கூட்டத்துல இருக்குறவங்க ஏதோ தங்களோட பிள்ளைய கெணத்துல போட்ட மாதிரியான துக்கமும், இப்பிடி ஒரு பஞ்சம் நம்ம எதிரிக்கும் வரக் கூடாதுன்னு ஒரு வேண்டுதலுமாய் இருந்திச்சு.
”நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும்
ஊரு செழிக்க வேணும்…. ஒத்த மழை பெய்ய வேணும்
காடு செழிக்க வேணும்…. ஆறுகரை நெறைய வேணும்
நஞ்ச புஞ்ச வெளைய வேணும், நாளும் பஞ்சம் ஒழிய வேணும்”
ராஜபார்ட் பாடி முடிச்சிட்டு “மைக்” முன்னால நின்னு
“பெரியோர்களே……. நல்ல தங்காள் கதையைச் சொன்னா ஒலகமே கண்ணீா் விடும். அப்பிடியொரு பஞ்சம் நம்ம எதிரிநாட்டுக்கு கூட வரக் கூடாது. ” ன்னு முடிச்சார். இப்போது நீா்மாலை எடுக்கப் போனாங்க. கெழவி பழைய படிக்கும் ஒப்பாரி வைச்சு அழுகுது.
நீா்மாலை முடிந்த தேவரை குளிப்பாட்டிட்டாங்க. “பட்டம்” கட்டப் போயிட்டு வந்து இப்ப “சீதேவி” எறக்குறாங்க.“சீதேவி போயி மூதேவி வா….” ன்னு மூணு தடவ சொல்லிய பின் தேவரைத் தூக்கி தேரில் வைத்தனா்.
அதிர் வேட்டு முழுங்க ஆட்டக்காரா்கள் ஆட ரதப்பயனம் தெப்பமாய் தெரண்ட சனங்களுக்கு மத்தியில் தேவரின் இறுதி ஊர்வலம் போனது. ஆத்தங்கரையில தேவரை எறக்கி வச்சிட்டு எரு அடுக்கப்பட்ட “சிதை” மேல் தேவரை படுக்க வைத்தார்கள். வாய்கரிசி போடுறவங்களெல்லாம் போட்டு முடிச்சாங்க.தேவரோட கடைசி மகன் கொள்ளி வைக்கணும். எல்லோரும் ஆத்து மணல்ல கூடினாங்க.
கூட்டத்த விட்டு வெலகி தனியா வேஷக்காரங்க உக்காந்து இருந்தாங்க. தங்கையா நேராப் போயி அழகாபுரி கோமாளி கையப் புடிச்சு “என்னத் தெரியுதா கோமாளி….” ன்னு கேட்டாரு. ஆடுன களைப்பு வயசான அசதியும், கண் பார்வை மங்கள் எல்லாம் மறந்து தங்கையாவ கட்டிப் புடிச்சிக்கிட்டு “ஒங்கள மறக்கமுடியுமா …..” ன்னு கோமாளி தழுதழுத்துப் போனார்.
இந்தூரு பொங்கலுக்கு மொத மொத வந்தப்ப நாட்டாமை தங்கையா வீட்டுலதான் எல்லாருக்கும் கஞ்சி. திருவிழா நாள்ல கறி புளின்னு வந்தவங்களை திக்கு முக்காட வைச்சிருவாங்க. அழகாபுரி கோமாளிக்கு அந்த வருசம் வேட்டி சட்டை எடுத்துக் குடுத்து மரியாத செஞ்சாரு தங்கையா.
அன்னக்கிருந்து சுத்துப்பட்டிக்கு திருவிழாவுக்கு ஆட வந்தா மூக்காயி வேசம் கட்டுறப்பல்லாம் மறக்காம “நாட்டாமை தங்கையா வீட்டுல பொண்ணு கேட்டாக” ன்னு கோமாளி தங்கையாவ மறக்காம சொல்லுவார்.
“ரொம்ப வருசமா இந்தப் பக்கமே காணமே…… இப்ப நீ ஆடுறது இல்லையா…… பிள்ளைக எல்லாம் என்ன செய்யிறாக” தங்கையா தான் மௌனத்தை கலைத்தார்.
“பிள்ளைக வேல வெட்டிக்கு வரவும் ஆட்டத்த கொறைச்சுட்டோம். எல்லாரும் கல்யாணம் முடிஞ்சு தனித்தனியா போயிட்டாங்க. நானும் சம்சாரமும் சின்னவங்கூட ஒண்ணா இருந்தோம். அவன் பொண்டாட்டி சிடு சிடுன்னு பேசுறா. எம் பொண்டாட்டிக்கும் அவளுக்கும் ஒத்து வரல. அதனாலதே பேசாம அல்லி நகரத்துல குடியேறிட்டேன்”.
“தொழில் நல்லா போகுதா…..”
“எங்க சாமி போகுது……முந்தி மாதிரி இப்பெல்லாம் ஊர் ஊருக்கு திருவிழா கும்புடுறது இல்லை. பூராம் சாதி சாதியா பிரிஞ்சு கெடக்காக. தப்பித் தவறி யாரச்சும் சாமி கும்புட்டாலும் பாட்டுக் கச்சேரி, ஆடல் பாடலுன்னு தான் கூப்புடுறாங்க. இப்பிடி ஏதாவது பெரிய எழவு விழுந்தாத்தான் எங்களுக்கு தொழில் செஞ்சமாதிரி இருக்கும்…” கோமாளி சொல்லும் போதே “ஸ்திரிபார்ட்“ சுந்தரம் இடைமறிச்சு ” எங்க சாமி தொடா்ந்து தொழில் நடக்குது. இன்னயோட 38 நாள் தொழிலே நடக்கல இன்னக்கித்தே வந்திருக்கோம் ஆளுக்கு ஐநூறோ ஆயிரமோ கிடைக்கும். இத வச்சு எப்பிடி சாமி டவுன்ல காலம் தள்ளறது. வேற வேல வெட்டிக்குப் போகலாமுன்னாலும் தலையில இருக்குற இந்த குடும்பியப் பாத்திட்டு ஒரு மாதிரி நெனச்சு இடுப்பக் கிள்ளுறாங்க. “பின்னால” தட்டுறாங்க…..” சொல்ல முடியாமல் சுந்தரம் கண்ணீா் வடித்தான்.
வேஷக்காரங்களுக்கு பணம் குடுக்க “ராஜபார்ட்”டை கூப்பிட்டாங்க. ஆட்டக்காரங்களுக்கான தொகையை ராஜபார்ட் கையில் கொடுத்தார்கள். பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ” ஐயா… பணம் கொறையுது…. அஞ்சுபேரு வந்திருக்கோம்…. இன்னும் ஆயிரம் சேர்த்துக் குடுங்க….” என்றார். “எழவு வீட்டுல குடுக்குறதை வாங்கணும். திருவிழாவுக்குத்தான் ரேட்டுப் பேசணும்னு நம்மளுக்கு ஒரு வளமை இருக்குறதை மறந்துட்டு பேசுறயே… ஞாயமா…? ” என்று கிராமத்தாரர் சார்பாக ஒருவர் கேட்டார்…. “திருவிழாவுக்கு கூப்பிடலையே… நம்ம ஊர் திருவிழாவுக்கு நாங்க வந்து ஆடி பதினைஞ்சு வருசமாச்சு… எங்களை ஏன் கூப்பிட.லை?” என்று கேள்வி கேட்டார் ராஜபார்ட்.. இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது என்பதில் நீண்ட மௌனம் நிலவியது. “அவங்க கேட்குறதும் ஞாயம் தானே… ”ஆயிரத்தைக் குடுங்க.” என்றார் தங்கையா. “அய்யா தங்கையா உன் வாயைப் பொத்தய்யா.. எதை எப்பிடிச் செய்யிரதுன்னு எங்களுக்குத் தெரியும்” என்று முகத்தில் அடித்தது மாதிரி ஒருவர் பேசினார். எல்லோரும் அமைதியானார்கள்.
”சரி. ஒரு முடிவுக்கு வரலாம். ஆயிரம் தரமுடியாது.. இருநூறு வாங்கிக்கோ…” என்று என். எஸ். கே. போஸ் முடிவு சொன்னார். “ஐநூறுயாவது குடுங்கய்யா..” என்று ராஜபார்ட் முறையிட்டார். இப்புட்டத்தே முடியும் என்றார்கள். விடாமல் “ராஜபார்ட்” நின்றார். இழுத்துப் பிடிச்சு நூறு ரூபாய் சேர்த்து முன்னூறு கொடுத்து “டீ குடிச்சுக்கோங்கடா”. என்றார்கள்.
ஊர் சனம் முன்னால நடக்க சோர்ந்து போயி வேஷக்காரங்க நடந்தாங்க. தங்கையா வேஷக்காரர்களின் பக்கத்தில் வந்தார். “கலைஞன மதிக்கத்தெரியாத சனங்க பாலு….. எல்லாம் சல்லிப்பசங்க… மனசுல ஒன்னும் வச்சுக்கிறாதீக” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய உள்பாக்கெட்டிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து …“இதையும் கணக்குல சேர்த்துக்கோ” என்றார்.
பாலுக்கு தர்ம சங்கடம். வாங்குவதா… வேண்டாமா….. வாங்கினாலும் கஷ்டம். வாங்காவிட்டால் தங்கையா கோபித்துக் கொள்வார். யோசித்துக் கொண்டே நடந்தார்.
”அய்யா தப்பா எடுத்துக்கக் கூடாது… நாங்க ஆடுன ஆட்டத்துக்குத்தான் கூலி கேட்டோம்…… ஆட வந்தது வேற வீட்டுக்கு…. அவங்கதான் பணம் தரணும். ஒங்க அன்புக்கு நன்றி”ன்னு சொல்லிக் கொண்டே ராஜபார்ட் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கி தங்கையாவின் பாக்கெட்டில் திணித்தார் அழகாபுரி கோமாளி. யாரும் எதையும் பேசிக் கொள்ளாமல் நடந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு முன் வேடிக்கை பார்த்த சனங்கள் எல்லாம் இப்போது அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்