BHARATHIRAJA B
சிறுகதை வரிசை எண்
# 117
கதையின் தலைப்பு: புழுதி
கதை எழுதியவர்: பா.பாரதிராஜா
சுற்றுவட்டார கிராமங்களுக்கெல்லாம் சந்தை நகரமாகத் திகழும் அந்தப் பேரூராட்சியின் பேருந்து நிலையத்தில் இருக்கும் மணிக்கூண்டுக் கடிகாரத்தில் நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அந்தப் பேரூராட்சிக்குள் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் வீட்டுக்குச் செல்லவேண்டிய கடைசி மணி அடித்துவிடும். பள்ளி மாணவர்கள் அங்கே வருவதற்குள் மொத்த இடத்தையும் சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கினார்கள் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள்.
ஆளுக்கொரு பரப்பை அவர்களே பிரித்துக்கொண்டு பரபரப்பானார்கள்.
கருமேகங்கள் மழைக்குத் திரண்ட வேளையிலும் தள்ளுவண்டிக் காரர் விற்கும் அவித்த கடலையில் ஆவி பறந்தது கானலாய் தெரிந்தது.
பஞ்சு மிட்டாய் கொடியை ஒரு குச்சியில் தூக்கிப் பிடித்தபடி வடநாட்டு இளைஞன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் பக்கத்திலேயே வெள்ளரிக்காய் விற்பவளும் உச்சகட்ட களைப்போடு வந்தாள். அவள் கூடையில் சில வெள்ளரிகள் வதங்கியிருந்தன.
முன்னொரு நாள் பேருந்து விபத்தில் ஒரு கையின் பாதியை இழந்த அரசு ஓட்டுனர் அங்கே அடுத்தடுத்து வரும் பேருந்துகளின் வழித்தடங்களைக் கூவியபடி பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தார்.
பயணிகள் இருக்கைக்கும் நிற்கும் பேருந்துக்கும் இடையிலிருக்கும் காரிடாரில் ஒப்பனைப் பொருட்களை கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்மணிகள். இருக்கைகளில் அமர்ந்தவர்கள் போக இன்னும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களின் ஊடே ஒரு திருநங்கையின் கைதட்டும் சத்தம் விட்டு விட்டு ஒளித்துக் கொண்டிருந்தது. சத்தம் கேட்காத சமயங்களில் காசை வாங்குவதும் ஆசியை வழங்குவதுமாய் இருந்தாள்.
தான் ஓட்டி வந்த டவுன் பஸ்ஸை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய ஓட்டுநர் பக்கவாட்டில் நிறுத்தியிருந்த பைக் காரர்களைக் கேட்டு கத்திக் கொண்டிருந்தார். கிடைத்தவர்களிடம் அனைத்தையும் அப்புறப்படுத்துமாறு அதிகாரம் காட்டினார். காரணம் கேட்ட ஒருவரிடம் பள்ளிக் குழந்தைகள் முன்டியடித்துக்கொண்டு படியில் ஏறும்போது இடறிவிடக்கூடாதென விளக்கம் கொடுத்தபடி டயர்களை தட்டிக்கொண்டு நகர்ந்தார்.
தேநீர்க்கடையின் பஜ்ஜி மாஸ்டர் வாழைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் என வகைகளை நறுக்கிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடப் பிள்ளைகள் வந்துவிடப்போகும் பதட்டம் அவர் கண்ணில் தெளிவாகத் தெரிந்தது.
பஞ்சுமிட்டாயும் வெள்ளரிக்காயும் வேகவைத்த வேர்க்கடலையும் முன்பே வந்து காத்திருப்பதும் அந்தப் பிள்ளைகளுக்காகத்தான். இதோ ஜூஸ் கடைக்காரர் புதிதாகக் கலக்கிய புரூட்மிக்சரை ஃப்ரீஸர் பெட்டிக்குள் இருக்கும் சில்வர் வாளியில் ஊற்றுவதும் அவர்களுக்காகத்தான்.
ரிப்பன்கள், ஹேர்பின்கள், ஸ்டிக்கர் பொட்டுகள், சேஃப்டி பின்கள் போன்ற மாணவிகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை முன்னிலைப்படுத்தி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அந்தப் பழங்குடியினப் பெண்ணிடம் எதையோ கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள் அவளின் எட்டு வயது மகள். மகளின் கையில் ஊக்குகள் அடங்கிய பெரிய வளையம் தொங்கிக் கொண்டிருந்தது. கலைந்த தலையோடு இருந்தவளின் கன்னங்களில் அழுத சோகம் அப்பியிருந்தது. சற்றே கிழிந்த உடையின் வழியே அம்மாவிற்குத் தெரியாமல் எடுத்து வைத்திருந்த கண்மை பென்சில் எட்டிப் பார்த்தது.
அம்மாவிடம் தங்களின் வாக்ரி போலி மொழியில் வசை வாங்கிய பிறகு ஓரமாய் சென்று ஒரு திண்டில் அமர்ந்து கொண்டு கீழே கிழிந்து கிடந்த போஸ்டர் காகிதத்தை எடுத்து தான் வைத்திருந்த கண்மை பென்சிலால் கிறுக்க ஆரம்பித்தாள். அவளை போகும் போதும் வரும்போதும் எதார்த்தமாய்ப் பார்த்துச் சென்ற திருநங்கை அச்செய்கைக்குப் பிறகு அவளை கவனிக்கத் தொடங்கினாள்.
தனக்கென்று ஒதுக்கிக்கொண்ட பயணிகள் இருக்கைகள் இருக்கும் பக்கம் கூட்டிப் பெருக்க வந்தாள் கொஞ்சம் வயதான தூய்மைப் பணியாளர். அவளைக் கண்டதும் நின்று கொண்டிருந்தவர்கள் ஒரு புறமாய் ஒதுங்கி நின்றனர். அமர்ந்திருந்தவர்கள் அசையாது அப்படியே இருந்தனர். சுத்தம் செய்ய வந்தவள் பயணிகள் நிற்கும் திசையை பார்த்துத் தள்ளினால் தூசி அவர்கள் மீதே பறக்கும் என்பதால் குப்பைகளை பக்கவாட்டில் தள்ளிவிட நினைத்து அதற்கேற்றாற்போல் பெருக்கினாள்.
பக்கவாட்டில் தான் அந்த பழங்குடியினப் பெண்ணின் கடை விரிக்கப்பட்டிருந்ததால் தூசி அவளை நோக்கி பறக்கத் தொடங்கியது.
பதின் வயது பள்ளிக் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பேருந்து நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்ததைக் கவனித்தபடியே பெருக்கினாள்.
தூசி வருவதை உணர்ந்த பழங்குடியினப் பெண், பெருக்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் வேறு பக்கம் தள்ளச் சொல்லி சத்தம் போட, அவள் வேறு வழியில்லை என்பதை எடுத்துரைக்க இருவருக்கும் இடையே அலம்பல் இல்லாத சிறு வாக்குவாதம் துவங்கியது. நின்று கொண்டிருந்த பயணிகளும் அமர்ந்திருந்தவர்களும் நகராது அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் களைப்போடு வெள்ளரி விற்றுக் கொண்டிருந்த பெண்ணுக்கு தலைசுற்றுவது போல் வர, மயங்கி விழுவதற்குள் தலையிலிருந்த கூடையை பொத்தென்று கீழே இறக்கி வைத்து அப்படியே அருகிலிருந்த திண்டில் அமர்ந்தாள். அந்தத் திண்டில் அமர்ந்துதான் அந்த எட்டு வயதுக் குழந்தை கிறுக்கிக் கொண்டிருந்தாள்.
பழங்குடியினப் பெண்ணோடு சத்தம் போட்டபடியே, நின்று கொண்டிருந்த பயணிகளை கொஞ்சம் விலகிக்கொள்ளச் சொல்லி விட்டு இருக்கைகளுக்கு கீழிருந்த குப்பைகளை அகற்ற கீழே குனிந்தாள் அந்தப் பெண். அப்போதும் அமர்ந்திருந்தவர்கள் பெயருக்குத் தங்கள் கால்களை சற்று நகர்த்திதான் வைத்தார்கள். எழுந்துகொள்ளாதவர்களை முனுமுனுத்தபடி மிகவும் சிரமப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் கிடக்கும் குப்பைகளை ஒருபக்கமாகத் திரட்டினாள். அந்த முயற்சியில் அவளது இடுப்பில் சுளுக்கு பிடித்துக்கொள்ள தனது முனுமுனப்பை நிறுத்திவிட்டு வலியோடு போராடத் தொடங்கித் திரும்பியவளின் எதிரே பள்ளிப் பிள்ளைகளின் கூட்டம் அவளை நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்தப் பக்கம் மயங்குவதைப் போல் வந்தமர்ந்த வெள்ளரிக்காய் பெண்ணைப் பார்த்த சிறுமி அவளின் நிலையறிந்து தன் அம்மாவின் பின்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அப்பெண்ணிடம் கொடுக்கத் திரும்பினாள். அதற்குள் அவள் மயங்கி விழப் போக, யாரும் எதிர்பாராத விதமாக சட்டென்று மிதமான அழுத்தத்தோடு அப்பகுதியில் காற்று வீசியது. அந்தக் காற்றை தென்றல் என்று மெதுவாகச் சொல்ல முடியாது. புயல் என்று வேகமாகவும் சொல்ல முடியாது. சீரான வேகம் கூடவே குளுமையும் அடங்கி அந்த மயங்கப் போனவளின் முகத்தில் முழுதாய் வீச புத்துணர்வு பெற்றதாய் உணர்ந்து செருகிய விழிகளில் தெளிவை உணர்ந்தாள்.
அந்தப் பெயரிட முடியாத காற்று அவளைக் கடந்து தூய்மைப் பணியாளர் திரட்டி வைத்திருந்த குப்பைகளோடு சேர்ந்து புழுதியாகி அத்தனைக் குப்பைகளையும் அங்கே நின்றிருந்தவர்கள் மீதும் அமர்ந்திருந்தவர்கள் மீதும் வாரி வீசியது. அப்படி வீசி எறிந்த காற்றின் வேகம் சற்று கூடியிருந்தது. அதனை எதிர்பாராத பயணிகள் அனைவரும் புழுதியில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள சட்டென எழுந்து வேறு பக்கம் ஓடினர். அவர்களை விடாமல் துரத்தியவாறே பின்தொடர்ந்து பின் அவர்களைக் கடந்துசென்று சில நொடிகளில் காணாமல் போனது புழுதிக்காற்று.
அதுவரை கத்திக் கொண்டிருந்த பழங்குடியினப் பெண் தூசி அடங்கியதும் அமைதியானதோடு எழுந்து சென்று இடுப்பு வலியால் துடித்தவளைத் தூக்கி ஓர் இருக்கையில் அமர வைத்து தன்னிடம் இருந்த தைலத்தைக் கொண்டு தேய்த்து விட்டாள். மீதமிருந்த இருக்கைகளில் அதுவரை நின்று கொண்டிருந்த பயணிகள் அமர்ந்து கொண்டனர்.
காற்று தீண்ட கொஞ்சம் தெளிவு பெற்றவள் சிறுமி நீட்டிய தண்ணீரை பரிவோடு வாங்கிப் பருகினாள். பார்வையாலே நன்றி சொன்னவள் தன்னிடம் இருந்த வெள்ளரிப் பிஞ்சு ஒன்றை எடுத்து சிறுமியிடம் நீட்ட அவள் வேறு எங்கோ பார்த்தாள். அவள் பார்வையின் முடிவில் பஞ்சு மிட்டாய் விற்பவன் நின்று கொண்டிருந்தான். ஏதோ உணர்ந்தவள் அவனை அழைத்து சிறுமியிடம் ஒன்றை கொடுக்குமாறு கேட்க, சிறுமி அதனை மறுத்துவிட்டாள். இன்னும் அவள் பார்வை அப்படியே இருக்க, வேறு எதைப் பார்க்கிறாள் என்றபடி மீண்டும் திரும்பினாள். அங்கே கடலை விற்பவர் தள்ளுவண்டியை திருப்பிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து கைநீட்டி கேட்க, அதையும் மறுத்துவிட்டாள். வேறு என்ன வேண்டும் என்பதுபோல அவளைப் பார்க்க, அந்தச் சிறுமிக்கு என்ன வேண்டும் என்பது தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த திருநங்கைக்குப் புரிந்து அவள் நகர்ந்து சென்றாள்.
இடுப்பு வலிக்கு மருந்து கொடுத்துவிட்டு தனது கடை நோக்கி வந்தவள் மகளிடம் கோபமாகப் பேசியதை மறந்து அவளை அன்பு பாராட்டலாம் என அழைத்தாள். அப்போதும் மகளிடம் அசைவில்லை. எங்கிருந்தோ வந்த குளிர்க்காற்று நொடிப்பொழுதில் அனைவரையும் சாந்தப்படுத்திச் சென்றிருந்தது. மயங்கி விழப்போனவள் எழுந்து கொண்டாள். சோகத்தில் இருந்த சிறுமி உதவிக்கரம் நீட்டினாள். தூசிக்காக தொடங்கிய சண்டை முடிவுக்கு வந்தது. இடுப்பு நோக வேலை செய்தவள் சற்றே இளைப்பாறினாள். நெடுநேரம் நின்றிருந்தவர்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. பள்ளிக் குழந்தைகள் அடர்வதற்குள் இடம் சுத்தமாகியது.
தாயின் அழைப்பிற்கு பதில் அளிக்காத மகள் எங்கோ பார்ப்பதை அறிந்து வெள்ளரிக்காய் விற்பவளோடு சேர்ந்து அவளும் மகள் நோக்கிய திசையை நோக்கினாள். அங்கே பள்ளி மாணவிகள் தங்களின் புத்தகப்பைகளோடு பவனி வரும் அழகை ஏக்கமாய்ப் பார்த்ததை, புரிந்தும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மத்தியில், சிறுமியின் முன்பாக சிரித்த முகத்துடன் வந்து நின்றாள் திருநங்கை. சிறுமியின் உயரத்திற்கு திருநங்கையின் கையிலிருந்த பொருளே கண்ணுக்குத் தெரிய, அதனைக் கண்டதும் அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்து அவளை அன்னார்ந்து பார்த்தன.
கைதட்டி ஆசி வழங்கி மக்களிடம் வாங்கிய பணத்தில் இருந்து சிறுமிக்காக அவள் ஆசைப்பட்டு அம்மாவிடம் கேட்டு அழுத நோட்டுப் புத்தகத்தையும் பேனா பென்சிலையும் வாங்கி வந்திருந்தாள். எனக்கா என்பதுபோல் குழந்தை ஆச்சரியத்தோடு பார்க்க, ஆமாம் என்பது போல் ஆனந்தமாய் தலையை ஆட்டி புன்னகையோடு அவளிடம் பொருட்களை நீட்ட, ஒரு நொடி தன் அம்மாவைப் பார்த்தாள். சிரித்த முகத்துடன் அம்மாவும் தலையசைத்த பிறகு ஆர்வமாய் வாங்கிக் கொண்டாள் சிறுமி.
அந்தத் தாயின் முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு அவளின் நெற்றிக்குங்குமம் நிரம்பிய தலையில் தன் உள்ளங்கை பதித்து ஆசி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் திருநங்கை.
சிறுமி கண்மை பென்சிலால் கிறுக்கிய காகிதத் துண்டினை வேறொரு பயணிகள் இருக்கையின் மீது கொண்டுபோய் சேர்த்திருந்தது வீசிய புழுதிக்காற்று. அந்தக் காகிதத்தில் தனது பெயரையும் தனது பெற்றோர் பெயரையும் அழகாக எழுதியிருந்தாள் அந்தச் சிறுமி.
(நன்றிகள்!)
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்