logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

மைதிலி ராமையா

சிறுகதை வரிசை எண் # 118


தாளம் தப்பியதேன் “அம்மா! என்னதான் நடந்திச்சு வாயைத் திறந்து சொன்னாத்தானே தெரியும் இப்படி அழுது குமிச்சிட்டு இருந்தா நான் என்னான்னு நினைக்கறது” என்று கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க பாறையாக இறுகிக் கிடந்த புனிதவள்ளியை தோள் தொட்டு உலுக்கிக் கொண்டிருந்தான் அவள் இளைய மகன் வீரா “அண்ணன் ஏன்மா அப்படிச் சொல்லுச்சு என்னால நம்பவே முடியலை சொல்லும்மா” என்று மீண்டும் மீண்டும் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,பதறிப்போன அவள் கணவன் மாரி, அவசரமாக, எதுவும் சொல்லாதே என்று கண்களாலும் கைகளாலும் விதவிதமாக சமிக்ஞை செய்து தடுத்துப் பார்த்தார். கட்டுப்பாட்டை இழந்து விட்ட புனிதம் அதை கண்டு கொள்ளும் நிலையிலேயே இல்லை. குமுறிக் கொட்டிவிட்டாள் இளைய மகனிடம். நிலைமை கை மீறிப் போகவே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார் மாரி. அவளைக் குறை சொல்லவும் முடியாது. அவளின் ஆசையும், லட்சியமும் அவர் அறியாததா. பிள்ளைகள் பிறந்த நாளாக கண்டும் கேட்டும் வருபவராயிற்றே. “புள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சி பண்றதுக்குள்ள நெலக்கதவு வச்சு செங்கல்லு வூடு அதுவும் ரெண்டு ரூம்பு போட்டு கட்டியே ஆவனும் ஆமா சொல்லிப்புட்டேன் மனசில நல்லா வச்சுக்கய்யா” என்று புனிதம் மாரியிடம் சொல்லிச் சொல்லி அவனுக்குள் ஆழப் பதிந்த விஷயம் அது. பிள்ளைகள் வேணுவும், வீராவும் கூட “என்னம்மா அப்படி ஒரு சபதம் உனக்கு”ன்னு கேட்டிருக்காங்க. பிள்ளைகள் சிறியவர்களாக இருந்த வரை எதுவுமே சொன்னதில்லை அவளும். பிறகு தோளுக்கு மேல வளர்ந்து நிற்கும் பிள்ளைகளிடம்தான் மனதில் உள்ளதை திறந்து கொட்டினாள் புனிதம். “நான் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தப்ப உங்க ஆயா எங்களை வீட்டுக்குள்ள படுக்கச் சொல்லிட்டு வெளில இருக்கற இந்த ஆளோடியிலதான் படுத்துக்கும். பனி, மழை எதுனா வீசுனா அப்படியே குறுக்கிக் கிட்டு கெடக்கும். உள்ளாற வான்னு சொன்னாலும் கேக்காது. உள்ளே படுத்து இருக்கிற எனக்கு அப்பல்லாம் நெருப்பு மேல கெடக்கற மாதிரி இருக்கும். வயசான சீவன் வாசல்ல விரைச்சுக் கெடக்குதேங்கற தவிப்பில உங்கப்பாரோட சந்தோசமா சிரிச்சிப் பேசக்கூட கூசிப்போய்க் கெடப்பேன். என் மருமகளுக்கும் அப்படி ஒரு சங்கடம் வரக்கூடாதுன்னு அன்னிக்கே வைராக்கியம் வச்சேன்” என்றவளிடம், “ஆயா ஒண்ணும் உன்னைக் கொண்டாடலையேம்மா. அப்பா கிட்டயும் அக்கம் பக்கத்திலேயும் உன்னைப் பத்தி கொறை பேசிக்கிட்டுதான திரியும் அதும்பேர்ல உனக்கு இம்புட்டு பாசமா” என்றனர் பிள்ளைகள். “அது எப்பிடி இருந்தா என்ன நான் அதை பெத்த தாயாத்தான் பார்த்தேன் வுடுங்கடா நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நான் என் மருமகப் பொண்ணுங்களுக்கு எப்பவுமே தாயாத்தான் இருப்பேன். உங்களுக்குள்ளார சண்டை மூட்டி வுடவே மாட்டன்டா. என் மவன் எனக்குதான் சொந்தம்னு அவுளுககிட்ட மல்லுக்கும் நிக்க மாட்டேன்” என்பாள். நினைத்தது போல வீட்டைக்கட்டி மூத்த மகனுக்கு கல்யாணமும் பண்ணி விட்டாள். வாயைக்கட்டி வயித்தக்கட்டி பணம் சேர்த்தது மட்டுமில்லாமல், அவளும் மாரியும் ஒரே ஒரு மேஸ்திரியை வைத்துக்கொண்டு கல்லுத்தூக்கி, கலவை தூக்கி நாலு ஆள் வேலையை செய்து வீட்டைக் கட்டி முடித்தனர். பெரியவனுக்கு உள்ளூரில் இருக்கும் இண்டஸ்டரியலிஸ்ட் ஆர். வி.எஸ் ன் பேப்பர் மில்லிலேயே வேலை கிடைத்துவிட்டது.வேலை கொஞ்சம் கடுமை என்றாலும் நல்ல சம்பளம் கிடைத்தது. சின்னவன் அசலூரில் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு வருடம் போனால் அவனும் படிப்பு முடிந்து வேலைக்குப் போய்விடுவான். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த போது, திடீரென்று மாரிக்கு கை கால் மூட்டு எலும்புகள் தேய்ந்து போனதில் நடமாட்டமும் செயல்பாடும் குறைந்து போய்விட்டது. அவருக்கு இழந்த காலும் கையுமாக மாறிப்போனாள் புனிதம். புது மருமகள் வந்து ஒருமாதம் போல் நாட்கள் ஓடிவிட்டன. மில்லுக்கு போயிருந்த மூத்தமகன் வேணுவிடமிருந்து ஃபோன் வந்தது புனிதத்திற்கு. அப்பா முடியாதவராக இருப்பதால் அவசர ஆத்திரத்துக்கு தகவல் பரிமாற்றத்திற்காக என்று வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அம்மா அப்பா உபயோகத்திற்காக ஒரு ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தான் வேணு. ஒரு நாளும் இல்லாத திருநாளாக புள்ளை எதுக்கு ஃபோன் அடிக்குது. இப்பத்தானே கிளம்பிப் போச்சு என்ற படபடப்புடன் ஃபோனை எடுத்தவளிடம், “அம்மா பதட்டப்படாத உன் மருமவளுக்கு இன்னிக்குப் பொறந்தநாளு நான் வாரதுக்கு நேரமாயிடும் வேலை கொள்ளையாக் கெடக்கு. நீ என்னா பண்ற அவளை கோவிலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்திடு. நான் வரும்போது எதுனா வாங்கியாரேன்” என்று சொல்லி வைத்துவிட்டான். அச்சச்சோ தெரியாமப் பூடுச்சே என அங்கலாயித்தவள் தெருத் தெருவாய் அலைந்து பூக்கார அம்மாவைப் பிடித்து “ரெண்டு முழம் சாதிமல்லி நெருக்கக் கட்டி குடு தாயி காசு கூட வேணாலும் தாரேன் உதுராம கட்டிக்கொடு” என்று கேட்டு வாங்கி வந்து மருமகளுக்கு வைத்து கோவிலுக்கு அழைத்துப் போய் வந்தாள். மனசு கொள்ளாத சந்தோஷம் அவளுக்கு.வரவழியில இருந்த சேட்டுக்கடைக்குப் போயி அல்வாவும் காராசேவும் வாங்கிவந்து மருமகளிடம் கொடுத்து மனசார வாழ்த்தினாள். மருமகள் பெரிதாக சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லையே என்று ஒரு நொடி யோசித்தவள் போனவருசத்து பொறந்தநாளு நியாபகம் வந்திருக்கும் அம்மா வீட்டில கொண்டாடின நினைப்பு வந்தா மனசுக்கு கொஞ்சம் கலக்கமாத்தான இருக்கும் என்று நினைத்து இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவளிடம் பரிவு காட்டினாள். “எம்மாடி இன்னிக்கு உனக்கு புடுச்சது இன்னாவோ சொல்லுடா ஆக்கித்தாரேன். இல்லியா கிளப்புக்கடையிலேருந்து வாங்கியாரேன்” எனறெல்லாம் புதுப்பெண்ணின் மனவாட்டம் போக்க என்னென்னவோ மனசுக்குப் பட்டதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். பாவம் மருமகளுக்கு மாமியார் காட்டும் நெருக்கம்தான் பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை அதற்கான சந்தர்ப்பம் வரும்வரை.அதுவும் வந்த பெண்ணே வாய்விட்டுச் சொல்லும் வரை. ஆமாம் வெகு சீக்கிரமே அந்த வலி புனிதத்தை இடியாக வந்து தாக்கியது. இன்னி பொழுது நல்ல பொழுதா இருக்கனும் கருப்பூர் ஐயா என்றுகூறி உள்ளங்கையில் கண்ணைத் திறந்து பார்த்தபடி எழுந்து வந்த புனிதத்திடம், “அம்மா உன் மருமவ உண்டாயிருக்கும்மா ரெண்டு மாசமா குளிக்கலையாம்” என்ற தித்திக்கும் வார்த்தைகளை வேணு சொன்னபோது உலகமே உள்ளங்கைக்குள் வந்தது போல் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியில் மிதந்தாள். “கருப்பூர் ஐயாவை வேண்டிக்கிட்டு கண்ணு முழிக்கிறேன் நீ இப்படி ஒரு சேதியைச் சொல்லி என் வயித்தில பாலை வார்த்திட்டய்யா” என்று முகங்கொள்ளாப் பூரிப்புடன் அவள் பேசிக் கொண்டிருக்க, மாரியும் அந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி நிற்க, “அம்மா இன்னிக்கு குடோன் இன்சார்ஜா இருக்கறவரு லீவும்மா நான்தான் முழுப்பொறுப்பும் எடுத்துக்கனும். நீ மல்லியை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போயி என்னா ஏதுன்னு வெவரம் கேட்டுட்டு டானிக் மருந்து மாத்திரை சொன்னாங்கன்னா வாங்கிட்டு வந்திரும்மா” என்று சொல்லி பணத்தையும் கொடுத்துவிட்டான் வேணு. அவ்வளவுதான் மளமளன்னு வேலையை முடிச்சிட்டு, “மல்லி கிளம்பு தாயி நான் போயி நம்ப ஆறுமுகத்தை ஆட்டோ கொண்டாறச் சொல்லிட்டு வாரேன். அவன்தான் பாத்துப் பதனமா ஓட்டிட்டு வருவான்” என்றபோதுதான், அவள் அந்த வார்த்தைகளைக் கொட்டினாள். “இதுக்கும் நீங்கதான் வரியளா இப்படி முன்ன முன்ன வந்து நின்னா அவருக்கு எப்புடி பொறுப்பு வருமாம். மாசமா இருக்கிற பொண்டாட்டியை வுட ஒசத்தியாப் போச்சா வேலை” என்று படபடவென்று பொரிந்து தள்ளியவள், முணகலாக அதே நேரம் மாமியாரின் காதில் விழவேண்டும் என்ற அளவில் “தனக்குத் தனக்காத் தெரியனும் இதெல்லாம் கூட சொல்லி சொல்லியா புரியவைக்க முடியும்” என்றாள். துடித்துப் போய்விட்டாள் புனிதம். எனக்கு ஏன் இந்த அறிவு இல்லை. பாவம் சிறுசுதானே புருசன் கூட வெளியில வாசல்ல போவத்தானே ஆசைப்படும். மூடம் மூடம் நான் சரியான மூடம் என தன் தலையில் தட்டிக் கொண்டவள் அன்றே ஸ்திரமாக ஒரு முடிவெடுத்தாள். அன்று மருமகளை அழைத்துப் போனதோடு சரி அதன்பிறகு மகன் எங்காவது அழைத்துப் போகச் சொன்னாலோ ஏதாவது வாங்கிக் கொடுக்கச் சொன்னாலோ சாதுரியமாக நழுவிக் கொண்டாள். “என்னால முன்னமாதிரி அலைய முடியலைய்யா. உங்கப்பாருக்கும் சகலமும் நான்தான் செய்ய வேண்டியது இருக்கு. மல்லிக்கும் மசக்கை படுத்துது அதுக்கும் பக்குவமா செஞ்சு கொடுக்கனும் வெளியில வாசல்ல அழைச்சுட்டுப் போறதெல்லாம் நீயே பார்த்துக்கப்பா” என்று. மருமக சொன்னது சரிதான் நம்ப ஒதுங்கினப்பறம் இந்தப் புள்ளையும் ஓடி ஓடி வந்து நிக்ககறானே நல்லவேளை இப்பவாச்சும் இந்தப் பொண்ணு மனசைப் புரிஞ்சுக்கிட்டமே என்று மறுபடியும் தப்புக்கணக்குப் போட்டுவிட்டாள் புனிதம். மருமக விஷயத்தில தலையிடறதுதான் பிடிக்கலைன்னு நினைச்சாலே ஒழிய, தான் அங்க தங்கியிருக்கிறதே அவளுக்குப் பிடிக்கலைன்னு கண்டுபிடிக்கவே இல்லை அந்த அப்பாவி. சின்னச் சின்னதாய் தன் அதிருப்திகளைக் காட்டிக் கொண்டுதான் இருந்தாள் மல்லி. அதை முழுவதுமாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் தான் இல்லாமல் போய்விட்டது புனிதத்திற்கு. நாம்தான் அவ மனசைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கிட்டோமே,அதைப்பற்றி மவன்கிட்டேயும் மூச்சுக் காட்டலையே. தவிர பார்த்துப் பார்த்து பணிவிடை பண்ணிக்கிட்டு, வாய்க்கு வக்கணையா ஆக்கிக் கொடுத்துக் கிட்டுதானே இருக்கோம். நம்மளை எப்படிப் புடிக்காமப் போகும்ங்கற நினைப்பில மருமகளோட செயல்பாடுகள்ல உள்ள உள் அர்த்தத்தை கண்டுக்காமல் போய்விட்டாள். “உங்கம்மா எதுக்குக் கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாங்க நீங்க வேலை வேலைன்னு ஓடறீங்க நான் நாதியற்ற மாதிரி கெடக்கனுமா”ன்னு ஒருநாள் வேணுகிட்ட அவ கேக்கப்போய், “சும்மாவா ஓடுறேன் எம்புட்டு செலவு ஆவுது வூட்ல சம்பாரிச்சுக் கொட்ட வேண்டாமா”ன்னு இவனும் பதிலுக்குக் கத்த, “அதுக்குத்தான் நானும் ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்குப் போறேன்னு கேட்டேன் நீதான வேண்டான்னேன் உங்க அப்பா அம்மாவை பார்த்துக்கற ஆயா வேலைக்குத்தான என்னைக் கட்டிக்கிட்டு வந்த” என்று உணர்ச்சி வசப்பட்டு மல்லி கத்திய கத்தலில்தான் தான் உடன் இருப்பதே மருமகளுக்குப் பிடிக்கலை என்ற விஷயமே புனிதத்திற்கு உரைத்தது. என்ன செய்ய முடியும். சின்ன புள்ளைக்கு வேலை கெடச்ச பெறகாவது வேற வீடு பார்த்து போகலாம் இப்ப இந்த முடியாத மனுஷனைக் கூட்டிக் கிட்டு எங்கே போய் எப்படி.. என்ற குழப்பத்தில் உழன்று கொண்டு, காதில் விழுந்த எந்த விஷயம் பற்றியும் யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போலவே நடமாடி வந்தாள். மருமகளைப் பார்க்கும் போதெல்லாம் பொங்கிய வாஞ்சையில் இப்போது ஒரு பயமும் கலந்து கொண்டது. மாரிக்கு கொஞ்சம் குழைவா இருந்தாத்தான் சோறு சாப்பிட முடிஞ்சது. அவனுக்கு மதியம் ஒருமணிக்கு பசியும் வந்துவிடும். வயசான குடலுக்கு சோறும் பழைய முறத்துக்கு சாணமும் அடிக்கடி போடனும்னு சொல்றது சும்மா இல்லை. அந்த மனுசன் பசி பொறுக்காம சொல்லிக்கவும் முடியாம வயித்தை அமுக்கிக்கிட்டு சுருண்டு கெடக்கறதைப் பார்க்கத் தாங்க முடியாம, அடிசாதமா ஒரு கரண்டி எடுத்து சூட்டோடு போட்டு மத்தில மசிச்சு குழம்பை ஊத்திக் கொடுத்திட்டாள்னு, மல்லி பேசின பேச்சில இப்பல்லாம் அந்த மனுசன் பசியைக் காட்டிக்கறதே இல்லை. சோத்தை இப்படி எடுத்திட்டா ஆறி அவலந்து போவாதா ஆக்குறவ எப்புடி அதைத் திம்பான்னு ஒரு ரோசனை வேண்டாமா. அப்புடி என்னதான் பொறுமை இல்லாத்தனமோ”ன்னு போகிற போக்கில வழக்கம் போல வீசிவிட்டுப் போய் விட்டாள். அவரவர் காதில விழுந்ததை அவரவர் விழுங்கிக் கிட்டு ஒருத்தருக்கொருத்தர் அதைப் பெரிசுபண்ணி பேசிக்கக் கூட இல்லை மாரியும் புனிதமும். அன்னிக்கு இவங்களோட விதி புரண்ட தினம் போலும். உடம்பு ஏதோ அசௌகர்யமா இருக்குன்னு வேணுவுக்கு ஃபோன் போட்டிருக்கா மல்லி. “அம்மாவைக் கூட்டிக்கிட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு போ மல்லி நான் சூப்பர்வைசர் வந்ததும் ஒப்படைச்சுட்டு சாவியைக் கொடுத்திட்டு வந்திடறேன்”னு சொல்லி இருக்கான் அவன். “உங்கம்மாதான் எனக்கு எதுவும் செய்யறதில்லைன்னு வச்சிருக்காங்களே தெரியாத மாதிரி பேசறன்னு சொல்லி முடிஞ்சப்ப வந்து கூட்டிட்டுப்போ”ன்னு கோவமா சொல்லி கட் பண்ணியிருக்கா. பரக்க பரக்க ஓடிவந்தவன் “ஏன்தான் இப்படி அழிச்சாட்டியம் பண்றியோ உடம்பு முடியாம இருக்கறவளை கூட்டிட்டு போனா என்னா குறஞ்சா போயிடுவ” என்று கேட்டுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு பரபரவென்று புறப்பட்டபோது ஏதும் புரியாமல் குழம்பிப் போய் கண்கலங்கி நின்றாள் புனிதம். புரண்டு படுத்த விதி எழ முடியாத பள்ளத்தில் தள்ளிவிட்டு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. கொடி சுத்திக் கிடந்ததாகவும் தாமதமாக வந்ததால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் முன்னாடியே வந்திருந்தா ஆபரேஷன் பண்ணி எடுத்து இன்குபேட்டர்ல வச்சுக் காப்பாத்தி இருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூற விதி ஈஸியாக கொள்ளி கொளுத்திப் போட்டுவிட்டது. “உங்கம்மா அப்பாரு தம்பின்னு உன் குடும்பமே ஒனக்குப் போதும் என்னை வுட்டுடுன்னு” சொல்லி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கே வராமல் தன் அம்மாவீட்டிற்குப் போய்விட்டாள் மல்லி. தகவல் அறிந்து ஓடி வந்த வீரா இரவெல்லாம் அண்ணனை சமாதானம் செய்து கொண்டிருந்தான். “அண்ணி வந்திடுவாங்கண்ணே. குழந்தை போயிடுச்சேங்கற வெறுப்பில, வேதனையில பேசுனதுக்கு எல்லாம் ஒண்ணும் அர்த்தம் பண்ணிகிட்டு சோர்ந்து போவாதே. கொஞ்ச நாள் போவட்டும் மனசு ரணம் ஆறியதும் போய் கூப்பிட்டு வந்திடலாம்” என்று. “இல்லைடா அவ வரமாட்டா அவ மனசு ரொம்ப நொந்து போயிட்டாடா. அம்மா கொஞ்சம் அணுசரணையா இருந்திருந்தா என் புள்ளையும் பொழச்சிருக்கும் மல்லியும் போயிருக்க மாட்டா.இப்ப என் வாழ்க்கையே இருண்டு போச்சுடா”ன்னு சொல்லி அழுதிருக்கான். “சே, சே என்னண்ணே அம்மாவைப் பத்தி தப்பாப் புரிஞ்சிட்டுப் பேசறே” என்று வீரா சொன்ன எதுவும் அவன் காதில் ஏறவில்லை. சரி விட்டுத்தான் பிடிக்க வேண்டும் அண்ணனின் மனமும் ரணப்பட்டுக் கெடக்கு கொஞ்சம் ஆறட்டும்னு நினச்சு இவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டு விட்டான். காலையில பார்த்தா ‘என்னை யாரும் தேடாதீங்க எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலைன்னு’ எழுதி வச்சிட்டு வேணு எங்கேயோ போயிருந்தான். இதைத்தான் அம்மாவிடம் சொல்லி என்ன நடந்தது ஏன் அண்ணன் அப்படிச் சொன்னுதுன்னு வீரா கேள்விகளால் துளைத்து எடுத்தான். மூத்தமகன் நெஞ்சில் கொட்டிய நெருப்பில் வெந்து மடிந்த புனிதம், மாரி தடுக்கத் தடுக்க சகலத்தையும் சின்ன மகனிடம் குமுறிக் கொட்டிவிட்டாள். “நான் என்னா தப்புடா பண்ணுனேன் சத்தியமா புரியலை எனக்கு. மருமக மனசு புரிஞ்சு ஒதுங்கினது தப்பா, அதை மவன் கிட்ட சொன்னா ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை சச்சரவு கசப்புன்னு வந்திடுமேன்னு மனசுக்குள்ளேயே போட்டு முழுங்கிக் கிட்டேனே அது தப்பா, நானும் ஒங்கப்பாரும் இங்க இருக்கறதே புடிக்காம சாடை சாடையா பேசினாளே உங்க அண்ணி அதையெல்லாம் கண்டும் காணாம ரோசம் இல்லாத கணக்கா அவளுக்கு உபசாரம் பண்ணிகிட்டுக் கெடந்தேனே அது தப்பா சொல்லுய்யா எது தப்பு” என்று நெஞ்சில் அறைந்து கொண்டு அழுத தாயை ஆரத்தழுவிக் கொண்ட இளையமகன், “அழுவாதம்மா உன்னை எனக்கு நல்லாத் தெரியும்மா அண்ணனும் கோவம் தீந்ததும் புரிஞ்சிக்கிட்டு வந்திடும்மா” என்றவன் “நான் கல்யாணமே கட்டப் போறதில்லைம்மா வரப்போறவ எப்படியாப் பட்டவளோ வேசம் கட்டறவளான்னு அவளை வேவு பார்த்துக் கிட்டே கால முச்சூடும் வாழ முடியுமா” என்ற பெரிய குண்டைத் தூக்கித் தலையில் போட, “இதுக்குத்தான் சொல்லாத சொல்லாதன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் கேட்டியா” என்று மாரியும் சொன்னபோது, “ரெண்டு புள்ளை வாழ்க்கையும் கெடுத்த பாவி ஆயிட்டேனே”ன்னு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள் புனிதம். அவள் அழுகையை நிறுத்த வழி புரியாது மாரியும் வீராவும் கலங்கி நின்றபோதுதான் வீராவின் ஃபோனுக்கு அந்த இடித் தகவல் வந்தது. வேணு ஆக்ஸிடென்ட் ஆகி உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பதாக ஹாஸ்பிட்டலில் இருந்து. மூவரும் பறந்தடித்து ஓடினர் மருத்துவமனைக்கு ஹாஸ்பிட்டல் வாசற்படியில் கால் வைத்த புனிதம் கால் தடுக்கி நெடுமரமாய் தரையில் சாய தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் பெருகி ஓடியது. அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கவனிக்கப்பட்டும் மூளையில் ரத்தக்கசிவு உள்ளதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் வேணுவும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாரி வீராவின் சம்மதத்துடன் புனிதத்தின் இதயம் வேணுவுக்குப் பொருத்தப்பட்டு துடிக்கத் தொடங்கியது. மல்லி கணவன் முகத்தைப் பார்க்கவே கூசினாள். உடன் இருப்பதையே பிடிக்காமல் விரட்டப் படாதபாடு பட்ட ஜீவன் இன்று விரட்ட முடியாத இடத்தில் தன் உடமையானவனின் உள்ளுக்குள்ளேயே நின்று துடிப்பதை எண்ணி வெட்கினாள் இதயமில்லாத தாய்க்கு எரியூட்டிக் கொண்டிருந்தான் வீரா. தாயின் இதயத்தால் வாழ்பவன் அவளின் முன் நின்று மன்னிப்புக் கேட்க முடியாமல் உள்ளுக்குள் ஊமையாய் அழுதபடி ஓயாமல் மன்னிப்பை யாசித்து நிற்கிறான்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.