logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

செல்வ ராஜ். இ

சிறுகதை வரிசை எண் # 116


படைப்பு சிறு கதைப்போட்டி-2025 அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி-2025 சிறுகதைப்போட்டியில் கலந்துகொள்ளும சிறுகதை: வேதிகை ராஜாதிராஜன், தேவராஜன் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது.. கருடசேவை காஞ்சித்திருநகரின், விழாக்கோலம், குறிப்பாக வைணவத்தலங்களில் ஒன்றான, 108 திவ்யதேசங்களின் இளவல் பெருமாள் பிரம்மோத்ஸவ் விழா. வேதம்- கருடன். வேதத்தின் பொருள் திருமால். வேதத்தின் மூலம் வேதம் காட்டும் பரம்பொருளை தரிசிப்பதே கருடசேவையின் உட்பொருளாகும். நாமெல்லாம் பாம்பை நினைக்கும்போதெல்லாம் கருடனையும் நினைக்கிறோம். மலைச்சரிவில் மேயும் குட்டி ஆடுகளை தனது கூர்மையான கால் விரல்களில், கூர் அலகுகளில் இரை பிடிக்கும் லாவகத்தை, வெறுக்கத் தயங்கியதில்லை, ஆனால், புராணங்களில் கருடனைப் பார்க்கிற பார்வை வேறு,விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். கருடசேவையின் போது “காக்க நீ வருவாயே.. கருடனேறி” என்று பக்தர்கள் கனிந்துருகப் பாடுவர். கருடசேவையைப் பெரிய திருவடிசேவை என்றும் கூறுவர். அப்பேர்ப்பட்ட வைபவத்தில் காஞ்சிநகரம் களை கட்டியிருந்தது, பக்தர்களுக்கு அன்னதானம், மோர் தானம், பானகம், குடிநீர் தானம், சாலைகளின் இருமருங்கிலும் அமர்க்களப்பட, நமது பழனி மேஸ்திரி குடும்பத்தோடு விடியற்காலை ஜந்து மணிக்கெல்லாம், தேசிகர்கோவில் பகுதிக்கு வந்துவிட்டார். அவரும், அவரது மனைவியும், தீவிர வைணவ பக்தர்கள், அவர்களுக்கு வருடா வருடம் கருடசேவை காணுவது தவறாத ஒன்று. வழக்கமாக உட்காரும், வர்தாபாய் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து சாமிபார்க்கும் வழக்கம், வர்தாபாய் என்பவர் வரதராஜன், மும்பை, அவர் இங்கு வாடகைக்கு விட்டுவிட்டு தாராவியில் செட்டில் ஆனவர். பழமையான வீடு, அதனால்தான் பெரிய இரண்டு திண்னைகளில் உட்கார, படுக்க சௌகர்யமாக இருக்கும். பழனி தனது மனைவி தேவியிடம் “ கூட்டம் கம்மியாகத்தான் இருக்குது என்றார். “போகப்போக ஜாஸ்தியாயிடும்” இது தேவி, எதிர்பாராவிதமாக பழனி வேலைபார்க்கும் பில்டிங் இஞ்சினியர் சிவாவைப் பார்த்து கையசைத்தார். அவரும் தனது குடும்பத்தோடு பெருமாளை தரிசிக்க வந்திருந்தார். “என்ன பழனி வசதியா திண்ணையிலே உட்கார்ந்துட்டே”, “ஆமாம் சார், இது வருடாவருடம் நடக்கிறதுதான். இங்கிருந்துதான் சாமி பார்ப்பேன். “சாமி வர இன்னும் அரைமணி நேரம் ஆவும் சார்” வந்து உக்காருங்க என அழைக்க சிவாவும் தனது மனைவி கமலாவுடன் வந்து அமர்ந்தார். “ உங்க பிள்ளை வரலியா, “ஆர்வமாக மேஸ்திரி விசாரிக்க”, “அவன் தனியாப் போய்ப் பார்த்துக்கிறேனுப் போய்ட்டான் இளசுங்க. சிவா, புன்னைகையுடன் சொல்லிவிட்டு திண்ணையை எதிரில் இருந்த இன்னொரு திண்ணையை பார்வையிட்டார். “ என்ன பார்க்கறீங்க, இஞ்சினியர் சார் இந்த திண்ணைகள் கட்டி எழுபது வருடம் ஆகியிருக்கும் இன்னும் உழைக்குது வந்தாரை வாழவைக்குது”, திண்ணை பற்றி பெருமையாக சொல்ல சிவா அதை மறுத்து, இந்த இடத்தில் ஒரு போர்ஷன் கட்டி வாடகை விட்டிருக்கலாம் என சிவில்படிப்பின் ஞானத்தை அவிழ்த்து விட்டார். “இஞ்சினியர் சார் எனக்கு எழுபது வயது ஆகிறது கிராமத்துல என்வீடு திண்ணைவீடு பிளஸ் நடுமுற்றம் வீடு வந்து பாருங்க, பழங்கால நினைவுச் சின்னமாக வச்சிருக்கேன். உங்களைப் போல் சிவில் படித்த பொறியாளர்கள் திண்ணையையே வெறுத்தீர்கள். முதலில் அதை இடித்துத் தள்ளுங்கள், அது சுண்ணாம்பு பூதம் என்று அதை இடிக்கச் சொல்லி எங்களை பாவம் செய்யத் தூண்டிவிட்டீர்கள்.. திண்ணைகள் ஒவ்வொன்றும் கதைசொல்லிகள் , கால்நீட்டி, வெற்றிலை வாய்களில் கதை சொன்ன களம் திண்ணை, எங்கப்பா சொல்வார் அவர்தமிழ் படித்த பண்டிதர், திண்ணைக்கு வேறு பெயரும் உண்டாம் “வேதிகை” திண்ணைக்கு Paddy என்றுஆங்கிலப் பெயர் வீடு சேர்த்து PaddyHouse என்று அந்தக் காலத்தில் அழைப்பார்களாம். திண்ணை என்பது மரபு வழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்கள் வாயில் கதவுக்கு அருகிலோ அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புகளாகும், “மடமடவென்று மனதில் தோன்றியதைப் பேசிவிட போதும்! நிறுத்துப்பா, என்னவோ நாங்கள்தான் செய்த மாதிரி சொல்றீங்க” என மறுப்பு தெரிவித்தார் எஞ்சினியர் சிவா, மேலும் தொடர்ந்தார் அந்தக் காலத்திலேயே திண்ணைகள் மேடைகள் இடத்தை அடைச்சுக்கிது, எடுத்துடுங்க என்று சொன்ன பில்டிங்காரர்கள் தான் அதிகம், சரிசரி விடுங்க சாமி பார்க்க வந்த இடத்தில் எதுக்கு? என முடிக்க அவருடைய மனைவியும், மேஸ்திரி மனைவியும் ‘குபீர்’ என சிரித்து , போதும்.. போதும்.. உங்கள் வாக்குவாதம், தியேட்டரை ஒழிச்சு மால், மண்டபம் கட்டுனாங்க திண்ணை இல்லாத வீடுகள் தொன்னூறு பர்சன்ட் என்ன பேசி என்ன ஆகப்போகிறது? என்றாள் பழனி மேஸ்திரியின் மனைவி தேவி, இதற்கு மேல் திண்ணையில் உட்கார்ந்தால், இந்த மேஸ்திரி தொண தொணப்பார்.. என முடிவு கட்டிக் கொண்டு தன் மனைவியோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்து நாராயணன் என்ற ஒத்தை ஆளு,,, “ மேஸ்திரி சரியாகச் சொன்னீங்க, திண்ணைகள் பல வகையிலே அந்தக் காலத்திலே இருந்தது. இந்த பாழாய்ப் போன தலைமுறைக்கு அது பற்றி தெரியாமலே கிடக்குது” என்றார். திடீர் என்று ஒருத்தர் தன்னை, தன் வார்த்தையை பாராட்டுவார் என எதிர்பார்க்காத பழனி மேஸ்திரி ஆமாங்க! நீங்க சொல்றதும் உண்மைதான் தூண்களை வைத்து கட்டிய அழகிய திண்னை, திண்டு வைத்த திண்ணை உற்சாக வார்த்தைகளால் அலங்கரித்தார் பழனி மேஸ்திரி. வந்து அமர்ந்து கவனித்து பாராட்டியவரின் பெயர் கேட்க வரதன் என்றார். “ வரதன் சார் சீவக சிந்தாமணி 1126 நெம்பர் குறிப்பு சொல்லுகிறது. திண்ணை வீட்டின் வேதிகை ஆய்மணிப் பவளத்திண்ண “ என்று, அதிலேயே 1822 குறிப்பு கூறுகிறது, மேடு – தேனயாம் பூம்பொழில் திண்ணை- தின்ணைக் குறடு, திண்ணைக் குந்து, குந்த திண்ணை, அப்பப்பா,, எவ்ளோ சொல்லலாம், “முடித்தார் “ மேஸ்திரி நிறையத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க ஒரு முனைவர் பட்டமே வாங்கலாம் போலிருக்கே”. “முனைவர் என்றதும் நினைவுக்கு வருகிறது, எனது தந்தைக்கு வேண்டியவரின் மகன் முதுகலை தமிழ் படித்துவிட்டு முனைவர் படிப்பு பன்றாரு, அவர் அதற்கு எடுத்த, ஆய்வியல் “திண்ணை என்கிற வேதிகை” கேட்கவே மகிழ்சியாக உள்ளது”. “ அப்படியா மேஸ்திரி நல்ல விஷயம், எண்பதுகள் வரை திண்ணைகள் இருந்தது என நினைக்கிறேன். ஒட்டுத்திண்ணை, ஒய்யார எல் வடிவ சாய்வு திண்ணைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு மாலைநேர பொழுது போக்கு பேசி சிரிப்பது எல்லாம் இந்தத் திண்ணைகளிலிருந்து தான் வரதன் கூறக் கூற பழனி மேஸ்திரி வெகுவாகத் தலையாட்டினார். சிறிது தூரத்தில் வேட்டு சப்தமும் குதிரை வண்டிமேளமும், யானை மணி ஓசையும் கேட்டது, “கருடவாகன அத்திவரதன் வந்துகொண்டிருக்கிறான். ராஜநடைபோட்டு புறப்பாடு..பார்க்கணுமே...பல்லக்குத் தூக்கிகள், அதுமாதிரி நடப்பார்கள் தோள்சுமை அழுத்த… ராஜநடைபோடும் பேரருளாளன். ஆஹா! அற்புதம் வரதன் பெருமாளைப் புகழ்ந்தார், திண்ணை பற்றிய பேச்சு நின்று, பெருமாளின் தரிசனம் குறித்த சப்தங்களும், விண்முட்டும் கோவிந்தா கோவிந்தா பரவசக் குரல்களும் அந்த நிமிடங்களில் பரபரத்தது. தீபாராதனை முடித்து பிரசாதமாக நாட்டுசர்க்கரை அனைவரும் வழங்க, அவரவர்கள் பெற்றுக்கொண்டனர். சிறிது நேரம் தேசிகர் கோவிலில் , தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டார் தேவராஜப்பெருமாள், வழக்கமாக தூறலுக்குப்பிறகு மீண்டும் திண்ணை நிரம்பியது. இந்தத் தடவை வரதன் ஒரு இளைஞனோடு வந்தார். பழனி மேஸ்திரியிடம் அறிமுகப்படுத்தினார். “இந்த இளைஞர்தான் பி.எச்,டி பண்றவர் ,இவர் பெயரு திருமால்”. “வணக்கங்க” “வணக்கம், சொன்னாரு.. மகிழ்வாயிருக்கு ஆய்வியல் பாடம் திண்ணையாமே” “ஆமாங்க’ நிறைய குறிப்புகள் எடுத்து வச்சிருக்கேன், தீசிஸ்இன்னும் சப்மிட் பண்ண லீங்க”, “ஓ! தொடர்ந்தார் பழனிமேஸ்திரி, “நான் சிலவற்றைக் சுறுகிறேன் மனதில் வச்சுக்குங்க”, “சொல்லலாம் சொல்லுங்க! ஆர்வமானான் திருமால், “பழைய குருகுல அமைப்புகளில் திண்னைப் பள்ளிக்கூடம்.. அது தொடர்ச்சியாக வந்து மாறிப் போயிற்று, வீட்டுத் திண்ணையில் அமர்த்தி மாணவர்களுக்கு கல்வி கற்பித்த முறை சிறப்பு , வாழ்வின் பெரும்பகுதி தியேட்டர்களில் கழித்த நான் இரவுக் காட்சிகள் போய் வந்து திண்ணையிலேதான் படுப்பேன். பாய்தலையணை முன்பே போட்டுவிட்டு போய்விடுவேன், நீட்டி முடிக்க பேசப்பேச, நமது திருமாலுக்கு செம ஆர்வமாக இருந்தது, இளைய தலைமுறைக்கு இதெல்லாம் புதுசு தொடர்ந்து மேஸ்திரி, “எனது மகன் அன்பு அடிக்கடி வந்தவாசி எனும் ஊருக்குப்போவான். காரணம் கேட்டேன். அங்கே அம்மையப்பட்டு என்னும் ஊரிலே முருகேஷ் என்பவர் திண்ணையில் மாதாமாதம் இலக்கியக்கூட்டம் நிகழ்த்துவாராம். நான் இலக்கியவட்டம் நாராயணன், தரும, ரத்னகுமார், புல்வெளி காமராஜ், ரமேஷ், அமுதகீதன் மோகன், நா,முத்துக்குமார் ஆகியோரேல்லாம் கலந்து கொண்டு சிறப்பிப்போம் என்று கூறுவான். வாழ்வியல் நெறிமுறை, விருந்தோம்பலின் சின்னம் திண்ணைதான், முடித்தார் பழனி, “ ஆமாங்க நான் சேகரித்த தகவலைக் கூறுகிறேன், வரன் பேசி முடிக்க வருபவர்கள் தங்க ஓய்வெடுக்க அப்போதெல்லாம், ஃபேன், ஏசியெல்லாம் கிடையாது, இயற்கை காற்றுதான். நம்ம வீட்டு பெண்கள் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று நாட்கள் திண்ணையோரம் ஜாகை, குறிப்பாக பிராமின் லேடிகள் நார்மடிகட்டிய பெருசுகள், காஞ்சிபுரத்து மண்ணின் திண்ணைக்களுக்கு காதுகள் உண்டு ஆம். நம் நகரத்துத்திண்ணையில் அமர்ந்து பேசிய கதைகள் ஏராளம், பஞ்சாயத்துகள் நடக்கும், அமாவாசை சீட்டுகள், தாயவிளையாட்டுகள், ரம்மி விளையாட்டு வேலை முடித்த கிழவிகள், திண்ணையோரம் கால் நீட்டி உட்கார்ந்து, புது வெற்றிலை- ரசிக்லால் சீவல், நீட்டுப்புகையிலை காம்பொடித்த வெற்றிலையின் சுண்ணம் தடவி சீவலிட்டு வாயில்போட்டு மென்று அந்த எச்சிலினூடே காம்பு நீக்கிய புகையிலை இனுக்கு போட ஒரு தரம் சொர்க்கத்துக்குப் போய் வருவார்கள்”, என்ன நான் சொல்றதுன்னு, மேஸ்திரியின் கைபிடித்து ஆசையாய் தட்டினான் திருமால், “கரெக்டா சொன்னீங்க தம்பி, சிகப்பு உமிழ்நீர் வரும் வேளையில் புகையிலையின் மென்னிலை மடக்கி, இடப்பக்கக் கடவாயில் போட்டு குதப்பி குதப்பலை சிறிதுநேரம் வைத்திருந்து, புளிச் சென்று துப்பும் போது வருமே வாசம்.. அது இன்னைக்கும் என் கன்னத்தில் வருகிறது பாட்டி கொடுத்த வெற்றிலை முத்தத்தில்,” “நினைவுகள் இனிக்குது,” “அட, இது இன்னம் பிரமாதமாக இருக்குதே, பாட்டி தந்த முத்தம் விலாசமிடுகிறதோ, பேரன் மீதான அன்பை” விவரித்தான் திருமால் “ சத்திரங்களும், திண்ணைகளுமாக வாழ்ந்த நம் தமிழர் வாழ்வுமுறையை எது மாற்றியது. இது ஆராய்ச்சிக்குரிய விஷயம் விருத்தினர்கள் வந்து விட்டால் ரூமில் இடம் கிடையாது. விசாலத் திண்ணைகள் தான் , பக்கத்து வீடுகளின் காலித் திண்ணைகள் தான், காலை எழுந்ததும், செங்கல்தூள், அடுப்புக் கரித்தூள், புங்கன் குச்சி, வேப்பங்குச்சி, நாயுருவி வேர், ஆலமரக் குச்சி தேடி, “ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லி பல்துலக்குவார்கள். ஆங்காங்கே..நகராட்சி குடிநீர் குழாய் ,நல்ல பாலாற்றுத் தண்ணீர் ஒரு மிடறு குடித்தாலே இனிக்கும், தாகம் அடக்கும்,”பழனி மேஸ்திரி நிறைய சேகரித்த விஷயங்களைக் கூறக் கூற., நான்-ஸ்டாப்பாக திண்ணை புராணம் போய்க் கொண்டிருந்தது. “ மாட்டுவண்டி, குதிரைவண்டியெல்லாம் நிறுத்தி அதுகளுக்கென்றே கட்டிய குடிநீர்த்தொட்டி (செவ்வக வடிவில் 2 அடி உயரத்தில், எட்டடி அகலத்தில்) கட்டியிருக்கும், ஆடு, மாடுகள், குதிரைகள் குடித்து தாகம் அடக்கும், இது பிரிட்டிஷ்காரன் கட்டிவிட்டது. மறுபக்கம் மக்களுக்காக குழாய் ஒரேகல்லில் இரண்டு மாங்காய். இதற்கான கல்வெட்டும் அந்த தொட்டியில் பதிப்பித்து நான் பார்த்திருக்கிறேன்,” என்று பழனி மேஸ்திரி சொல்ல, “ இது எனக்கு புதுவிஷயம்,” திருமால், “உயரம் குறைந்த திண்ணைகளில், நாய், பூனை, படுப்பதுண்டு, நாம் படுத்து காலையில் எழும்போது அவைகளும் நம்முடன் பாசமாக உறங்குவதுண்டு” தொடர்ந்தார் பழனிமேஸ்திரி “திண்ணையின் பயன்பாட்டில், செய்தித்தாள்களாக தினந்தந்தி, தினமணி, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி மெயில் ஆகியனவைகளும், குமுதம் , ஆனந்தவிகடன், கல்கி, மஞ்சரி, கல்கண்டு, அம்புலிமாமா ஆகியனவைகளும் வந்து திண்ணையில் விழும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், இதை எடுத்துப் படித்து அளவளாவுவர் , பார்ப்பதற்கு வாசகசாலை மாதிரி இருக்கும், கோடைகாலங்களில், பெருசுகள், பனைஓலை விசிறிகள் விசிறிக் கொண்டிருப்பர், இரவுத்தூக்கம் வராமல், புழுக்கத்தில் திண்டாடுவர். அதனால், மாலைப் பொழுதிலேயே குளிர்ந்த நீரை திண்ணையில் ஊற்றி சூட்டை குளிரவைப்பர். பிறகு, இரவில் படுத்துறங்கும் போது தூக்கத்தில் நிம்மதி பிறக்கும்.” “மேஸ்திரி சார் நான் கேள்விப்பட்டிருக்கேன், திண்ணை முழுவதும், சாணம் மெழுகி, மாவும் கோலம் போட்டு திண்ணைகளுக்கு சிறப்பு ஒப்பனையெல்லாம் கூட நடக்குமாமே...” “ஆமாம்” “வெகுநேரம் பேசிவிட்டோம் தம்பி, முடிச்சுக்குவா பேச்சை, எனது மனைவியும், கோயிலுக்கு சென்று தேசிகரை கும்பிட்டு விட்டு வந்து விட்டார்கள், போக வேண்டியது தான்..” என கிளம்ப எத்தனித்த போது” “ஐயா இன்னும் ஒரே ஒரு சங்கதி சொல்லாமே.. என அவர் கைபிடித்து திண்ணையில் அமர்த்தினான் திருமால், “ என்ன சொல்லுங்க” “ உங்க காலத்துலே கூத்துக்கலைகள் தெரு நாடகங்கள், எல்லாம் நடக்குமாமே..” “ஆமாம். காஞ்சிபுரத்தை ஓட்டிய ஊர்களான தூசி, குரங்கனில் முட்டம், புரிசை, வந்தவாசி போன்ற இடங்களில் கூத்துக் கம்பெனி, சமூக நாடக கிளப்புகள் இருந்தன. அதில் புகழ் பெற்றது.கூத்துக் கலையை நசிய விடாமல் காப்பாற்றிய புரிசை கண்ணப்ப சம்பந்தனுடையது தான். அவர் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். பொதுவாகவே, கூத்துகள் நடக்கும்போது திண்ணைகள் நெருக்கடி ஆகிவிடும். இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற திண்ணைகளை நாம் இழந்து விட்டோம்... பேச்சை முடித்து எழுந்து ரெடியானார் பழனி மேஸ்திரி. திருமாலும் அவருக்கு நன்றி கூறி கிளம்பினான். பழம்பெருமை வாய்ந்த அரிய பொக்கிஷம். நம் வாழ்வை செம்மையாக்கி தின வாழ்வின் ஓர் அங்கமாகத் திகழ்ந்த திண்ணைகளின் சரித்திரம், முடிவுக்கு வந்ததை எண்ணி, ஆய்வியல் பாடத்தில் சேர்க்க நினைத்த குறிப்புகளை மனனம் செய்து கொண்டே சென்றான் வருங்கால முனைவர் திருமால். இ.செல்வராஜ். எழுத்தாளர்.. குடியாத்தம்  

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in