Geetha M
சிறுகதை வரிசை எண்
# 109
புயலின் மடியில்
நீண்ட நேரமாக மழையில் நனைந்த கால்கள் வெளுத்து உறைந்து போவது போலிருந்தன.மழைநீர் கால்களில் வரிகளை வரைந்திருந்தது. கைகளும் குளிரில் விறைத்துவிடும் போலிருந்தது . பேரூந்து சன்னலின் வழியே வீசிய காற்று, இந்த உலகை முழுவதுமாக விழுங்கும் ஆவேசத்தோடு வீசியது.
இனியா அமர்ந்திருந்த பேரூந்து காற்றின் வேகத்தில் மதுவருந்தியவனைப் போலத் தள்ளாடியது. பேரூந்தில் மொத்தமே பத்து பேர் தான் . அவள் மட்டும் தான் பெண். மற்ற ஆண்கள் அனைவரும் மழையின் தீவிரத்தை, வெள்ளத்தை தங்கள் வாழ்வில் கண்ட அனுபவங்களோடு கதைத்துக் கொண்டிருந்தனர். கருகருவென மேகம் திரண்டு பகலை உறிஞ்சி இரவாக்கியது. நெட்டைத் தென்னை மரங்கள் திருவிழாக்களில் சாமியாடுபவர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தன.
எப்போது பேரூந்தில் சென்றாலும் சன்னலோர இருக்கையில் அமர்வது தான் அவளுக்குப் பிடிக்கும் , சன்னலின் வழியே அவள் தனக்கான உலகைக் கண்டாள். சிறிய குழந்தைகளைப் பேரூந்து கடக்கும் போது டாட்டா காட்டி மகிழ்வாள்.அவளுக்கு மிகவும் பிடித்தவைகளாக குழந்தைகள், புத்தகங்கள், செடிகள் மூன்றும் தான். புற உலகையே மறக்க வைத்துவிடும் அவைகள்.
செடிகளோடு பேசிக் கொண்டு இருப்பாள். கிறுக்கு மாதிரி பண்ணாதே என அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் நிறுத்தமாட்டாள். ஏன் பாத்திரங்களோடு கூட அவளால் பேச முடியும். இன்று சன்னலோரம் அமர்ந்த போது கண்ட காட்சி பரிதவிக்க வைத்தது. சாலையோரத்தில் வரிசைக்கட்டி நின்று பச்சை பசேலென மனதைக் கொள்ளைக் கொள்ளும் புளியமரங்கள், இன்று புயலின் கோரத் தாண்டவத்தால் தரைத் தொட்டு எழுந்தன. வேர்கள், தனது பாதியைக் காற்றுப் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் மண்ணை இறுகப் பற்றத் துவங்கின. கூரைகளை இழந்த மாட்டுக் கொட்டகைகளில் ஆடு, மாடுகளின் ஓயாத ஓலம் மனதைக் கவ்வியது.
காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே வீட்டில், பள்ளியிலிருந்து அரியலூரிலுள்ள அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று கணவனிடம் கூறிவிட்டுக் கிளம்பி வந்தாள். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாத காரணத்தால், கலை பிறந்ததிலிருந்து அம்மாதான் வளர்க்கிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் குழந்தையோடு இருக்கக் கிளம்பி விடுவாள் . கலைக்குட்டி பிறந்த உடனே கொழுகொழுவென இருந்தாள். அவளது அம்மாவிற்கு வலியே தராமல் நார்மலான பிரசவத்தில் பிறந்தாள் என்றால் யாருமே நம்ப மறுப்பார்கள்.
இனியா ஐந்து மாத கர்ப்பமாக இருந்தபோது, அம்மா வீட்டில் கரண்ட் இல்லையென , தம்பி தற்காலிகமாக வராண்டா லைட் மூலம் இணைப்புக் கொடுத்து இருந்தான். மின்சார வாரியத்தில் இருந்து ஆள் வந்தவுடன் அந்த இணைப்பை எடுத்து விடலாமென பிளக்கைப் பிடுங்கி கரண்ட் வந்து கொண்டிருந்த ஒயரை கைகளில் சுற்றிக் கொண்டு இருந்தாள். இணைப்பு கொடுத்த பிளக்கை எடுக்க மறந்து விட்டாள். கரண்ட் வந்து கொண்டு இருந்ததால் அவள் கையில் இருந்த பிளக்கை உள்ளங்கைப் பகுதியில் ஓட்டைப் போடத் துவங்கியது. கை பொசுங்கும் நாற்றம் உணர்ந்த பிறகே அய்யோ என் குழந்தை எனக் கத்திக்கொண்டு ஒயரைப் பிடுங்கி எறிந்தாள். கடவுளிடம் என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகக்கூடாது என கண்ணீர் மல்க வேண்டினாள்.
பிரசவத்தின் போது கொஞ்சம் பயமும் இருந்தது. குழங்தைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென. மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மருத்துவர் அவளிடம் மூச்சை இழுத்து பிடித்து ஒத்துழைக்கவில்லையெனில் ஆயுதம் போட்டுத் தான் குழந்தையை எடுக்க வேண்டி வரும் என்றார். நர்ஸ் அவள் மீது ஏறி உட்கார்ந்து குழந்தையைத் தள்ளி வெளியே எடுக்க உதவ குழந்தைப் பிறந்தது.
அம்மாவின் கைகளில் ரோஜாப்பூவென சிரித்தாள். குழந்தையின் வலது கால் பாதம் நேராக இல்லாமல் சற்று வளைந்து இருந்தது. மருத்துவர் பிறவிதான் ஒண்ணும் செய்ய முடியாது என்று கூற, குடும்பமே கலங்கி நின்றது. அதன் பிறகு குழந்தையைக் குளிப்பாட்ட வரும் பாட்டி காலில் போட்டுக் குளிப்பாட்டும் போது குழந்தையின் காலில் எண்ணையைத் தடவி கால்களில் கொதிக்கின்ற சுடுதண்ணீரை ஊற்றி அடித்துத் தட்டித் தட்டி நீவி நீவி வளைந்த பாதம் நேரான அதிசயமும் நடந்தது. அவளைக்கொஞ்சும் போதெல்லாம் அவளது அம்மா, போதும் கொஞ்சியது . நீ கொஞ்சிட்டு ஊருக்குப் போயிடுவ, அப்றம் குழந்தை உன்னைக் கேட்டு அழுதா என்ன பண்றது எனத் திட்டு வாங்கியதும் உண்டு. அவளுடன் இருக்கும் நேரங்களில் எல்லாம் மகிழ்வின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவாள். இரண்டு வயது தான் ஆகிறது படுசுட்டி.
’அம்மா வர்றாங்க’ என ஆத்தா சொல்லிவிட்டால் வாசலிலேயே நின்று கொண்டிருப்பாள். அம்மாவைப் பார்த்து விட்டால் போதும் அவளுக்கு அம்மாதான் எல்லாம் செய்யவேண்டும் . ஆத்தா, தாத்தா பக்கம் திரும்பக்கூட மாட்டாள். ஒருமுறை வீசிங் வந்து மூச்சு விட சிரமப்பட்டதைப் பார்த்துத் துடித்துவிட்டாள் குழந்தை.
வீட்டுக்கு போகும் போது அவளுக்குப் பிடித்த மாதுளம் பழத்தை வாங்கிப்போக வேண்டும் என நினைத்தாள். ஒவ்வொரு பிறந்த நாளையும் மிகச் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. அடுத்த வாரம் அவளுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. குட்டிம்மாவிற்கு பிடித்த ஆடை, பொம்மை எல்லாம் இந்த வாரம் வாங்கிவிட வேண்டும். சென்ற ஆண்டு பிங்க் கலரில் அனைத்தும் வாங்கிய நினைவு வந்தது. இந்த ஆண்டு சிகப்புக் கலரில் டிரஸ், பொம்மை வாங்கிடனும்னு முடிவு செய்தாள். பொம்மையைப் பார்த்தவுடன் மகளின் முகம் எப்படி பிரகாசமாகும் என்று நினைத்தவுடன் மனம் பூரிப்பால் நிறைந்தது. சந்தோஷத்தில் குழந்தை அம்மாவைக் கட்டிக்கொண்டு முத்தமழை பொழியும் காட்சியை எண்ணியதும் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
சிறுவயது முதல் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளை எல்லாம் வளர்த்தவளுக்கு தனது குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று வேதனை அடிமனதில் உறைபனியாய்.
இன்று காலையில் புயல் வரும் என்று தெரிந்தாலும் பள்ளிக்குச் சென்றுவிட்டு அப்படியே அம்மா வீட்டிற்கு விரைவில் போய்க் குட்டிம்மாவைக் கொஞ்சலாம் என்ற ஆர்வத்தில் மழையையும் கூட பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டாள்.. கல்லக்குடியிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் மேலப்பழூவூரில் அவள் பணிபுரியும் பள்ளி இருந்தது. கொட்டுகின்ற மழையில் குடையைக் காற்று பிடித்திழுக்க ஒரு வழியாக பள்ளியில் நுழைந்தாள். வானம் இடிந்து விழுந்து விடுவது போல மழையைக் கொட்டியது. .பள்ளிமைதானம் மழை நீரால் மூழ்கத்துவங்கியது. வகுப்பிற்குள் நுழைந்து விடுமோவென ஆசிரியர்கள் குளிரில் நடுங்கியபடி வராண்டாவில் கவலையோடு நின்று கொண்டிருந்தனர்.
நல்லவேளை மாணவர்கள் யாரும் வரவில்லை. கசியும் கட்டிடங்கள் அச்சத்தைத் தந்தது. வேறுவழியின்றி பள்ளிக்கு இன்று விடுமுறை விட்டுடலாமென தலைமை ஆசிரியர் கூறினார். முப்பது வருடங்களுக்கு முன்னால் அலைபேசியில்லாத காலமது. அனைவரும் கிளம்பி வெள்ளத்தில் நீந்துவது போல பேரூந்து நிலையம் வந்தோம்.
சாலை எது? சாக்கடை எது? எனத் தெரியாத படி மழை நீர் குதியாட்டம் போட்டபடி ஓடியது.
அரியலூர் செல்லும் அரசுப் பேரூந்து வர ஓடி வந்து ஏறினாள். பேரூந்தின் மேலே உள்ள ஓட்டை வழியாக மழை உள்ளேயும் பெய்து கொண்டிருக்க முழுமையாக நனைந்தவள் தண்ணீர் சொட்டாத இருக்கைத் தேடி அமர்ந்தாள். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பேருந்து படகெனத் தண்ணீரில் தவழ்ந்தது.
மெல்ல கீழப்பழுவூர் வந்தது. கீழே நின்றிருந்த பயணி ஒருவர்,
‘பஸ் அரியலூர் போவாது.. பெரிய மரம் ஒண்ணு சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கு’ என்றார்.
அதைக்கேட்டதும் இனியாவிற்கு பக்கென்றிருந்தது. அவள் வருவதை வீட்டிலிருந்த லேண்ட்லைன் மூலம் அம்மாவிடம் கூட சொல்லவில்லை.
ஓட்டுநர் வேறுவழியின்றி ஜெயங்கொண்டம் செல்லும் பாதை வழியாகச் சென்று , அங்கிருந்து வீனா கைகாட்டி பாதை மூலம் அரியலூர் செல்லலாமென வண்டியைத் திருப்பினார். கீழப்பழுவூரிலிருந்து அரியலூர் சென்றாலும், ஜெயங்கொண்டம் சென்றாலும் பாதையின் இருபக்கமும் புளியமரங்கள் அடர்ந்து உயர்ந்து, வெய்யிலே தெரியாதபடி பசுமையாக இருக்கும். இன்று அவைகளை வேரோடு பெயர்த்து எடுக்கும் முயற்சியில் புயல் தீவிரமாக இருந்தது.
காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை புயலின் தாக்கம் இருக்குமென வானொலியில் கேட்டது நினைவிற்கு வந்தது. இதுவரை புயலைப் பார்த்ததில்லை அதனால் இந்த மழையில் கிளம்பி வந்தது அசட்டுத் துணிச்சலோவெனக் கவலைப்பட்டாள். புயல் வருவதற்குள் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற இனியாவின் எண்ணத்தில் மண் விழுந்து விடும் போல. இப்போதே மணி 10.30 ஆச்சு.புயல் என்ற வார்த்தையை மட்டும் அறிந்தவளுக்கு, தான் யாரெனக் காட்ட புயல் விரும்பி வந்திருக்கும் போல. 23 ஆவது வயதில் புயலை நேரிடையாகச் சந்திக்கப் போகிறாள்.
பொய்யூர் வந்துவிட்டது. பேரூந்து மெதுவாக நகர, என்னவென்று பார்த்த போது சாலையின் குறுக்கே விழுந்திருந்த சிறிய மரத்தை அவ்வூர் இளைஞர்கள் வெட்டிக்கொண்டு இருந்தனர். ஓட்டுநர் “இனி போக முடியாது மரத்தை எடுத்தால் தான் போகலாம்” என்றார். காற்றின் வேகம் சிறிதுசிறிதாக அதிகரித்தது. பேய்க்காற்று இடது பக்கமிருந்த புளியமரத்தைப் பெயர்த்து எடுக்கத் துவங்கியது. பேரூந்தின் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் ,டிரைவர் பேரூந்தை தள்ளி நிறுத்தினார். இரு பக்கமும் இருந்த பெரிய குளங்களின் கரை உடைந்ததால் ஒரே வெள்ளக்காடு கண்முன்னே.
பேரூந்திற்குள் இருந்தவர்கள் மழையின் தீவிரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க , இவள் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தாள். மழையில் நனையப் பிடிக்கும் என்றாலும் இப்படி பெரும்மழையை எதிர்பார்க்கவில்லை.. அவளுக்கு இத்தனை நாட்களாக குறைந்து இருந்த ஆஸ்துமாவை அதிகமாக்கி விடுமோ என்ற பயம் வந்தது..
அப்போது அங்கே ஒருவர் வேகமாக ஓடிவந்து
’மருதையாற்றில் வெள்ளம் வந்துவிட்டது. ஆடுமாடுகள் அடித்துக்கொண்டு செல்கிறது’ என அச்சத்துடன் கூறிக்கொண்டிருந்தார்.
இனி ஜெயங்கொண்டம் பாதையிலும் போக முடியாது என்பதால் எங்களை மறுபடி கீழப்பழூவூரிலேயே இறக்கி விட்டுவிடுங்கள் என பயணிகள் கெஞ்சத் துவங்கினர். ஓட்டுநர், நடத்துநரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அவர்களும் தான் என்ன செய்வார்கள். கீழப்பழுவூரில் தூரத்து சொந்தமான அத்தை வீடு இருந்தது. ஆனால் அதிகமாக அங்குச் சென்றதில்லை. இன்று வேறு வழியில்லை. அத்தை வீட்டுக்குத் தான் போக வேண்டும் போல. யாருக்கும் தகவலும் தெரிவிக்க முடியாது. மணி 12
புயலோ உச்சத்தில் சுழன்றடித்தது. அதைக் கண்டவளின் முகம் இருண்டது. பேரூந்தை புரட்டிப்போடும் ஆவேசம் கொண்ட மதயானையைப் போல புயல் தாண்டவமாடியது. பேரூந்தின் மேலே உள்ள ஓட்டையிலிருந்து மழை அதிகமாகக் கொட்டியது. யாரும் பேசவில்லை அனைவரும் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.
பறக்கும் குடிசைகளின் கூரைகளை, ஆரவாரத்துடன் வீழும் மரங்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஆடுமாடுகளை, பீரோ , கட்டில் என மிதந்து சென்ற பொருட்களை பார்த்த போது ஊழித் தாண்டவம் என்பது இதுதானோ எனத் தோன்றியது. புயல் காற்றுக் கரங்களால் சன்னல் வழியே அவளது முகத்தில் அறைந்தது. அவளுக்கு மூச்சுவிட சிரமமாக இருந்தது. குழந்தையின் நினைவு வேறு மனதைப் பிசைந்தது.
‘உனக்கு ஒண்ணும் ஆகாது’ என தனக்குத் தானே கூறிக்கொண்டாள்.
ஒருமுறை குழந்தை மழையில் நனைந்ததால் காய்ச்சல் வந்து , எங்கும் செல்லவிடாமல் கையைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே தூங்கியது நினைவிற்கு வந்தது. அதிலிருந்து மழையில் குழந்தையை விடவே மாட்டாள். இந்த மழையில் குழந்தை எப்படி இருப்பாளோவென கவலையில் மனம் மூழ்கியது. பாவம் குழந்தை அம்மாவைத் தேடிக் கொண்டு இருப்பாள். எப்படியாவது வீட்டுக்கு போய்விடனும். பேரூந்து தடுமாறிக் கொண்டு மெதுவாகச் சென்றது.
கீழப்பழுவூர் இரண்டு கிலோமீட்டர் இருக்கும் போயிடலாம் என்று நம்பிக்கை வந்தது. ஆனால் சாலையின் குறுக்கே மிகப்பெரிய புளியமரம் விழுந்து கிடந்தது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் டிரைவர் இனி பேரூந்து செல்லாது, எல்லோரும் இறங்கி நடந்து போயிடுங்க என்றார். கால்கள் தண்ணீரில் நனைந்து நனைந்து மரத்துப் போயிருந்தன. அனைவரும் இறங்கத் துவங்கினர். மெதுவாக இறங்கி கண்முன் வீழ்ந்து கிடந்த மரத்தை பார்த்து வருந்தினாள்.
‘எத்தனை பெரிய மரம்?’ எத்தனை ஆண்டுகள் காய்த்து பலன் கொடுத்திருக்கும் ’.
காயும் பிஞ்சுமாக சாய்ந்து கிடந்த மரத்தின் வலியை உணர்ந்தாள். மூன்று தலைமுறைக் கண்ட பரம்பரையின் மூத்த முதுகிழவி படுத்துக் கிடந்தது போல இருந்தது. அனைவரும் மரத்தின் மீது ஏறி தாண்டத் துவங்கினர். இவளும் தட்டுத்தடுமாறி ஒரு கிளையில் காலை வைத்து ஏற செருப்பு பட்டென அறுந்தது. இதுவேறயா என ஆயாசத்துடன் உதறினாள்..
பெருகி ஓடும் மழை நீரில் காலை கீழே வைத்த போது ’நம்மை யாராவது தேடுவார்களா?’ என்ற எண்ணம் வந்தது. வீட்டில் இருப்பேன்னு அம்மாவும், அம்மாவீட்டில் இருப்பேன்னு கணவரும் நினைத்துக் கொண்டிருப்பதால் யாருமே தேட மாட்டார்கள் என்ற நினைவு வேறு .அவளுக்கு அழுகை வரக் காரணமாயிற்று. வருகிறேன் என்று லேண்ட் லைன் போனிலாவது தகவல் கூறி இருக்கலாம் என்று தனக்குள் புலம்பினாள்.
சாலையே தெரியாதபடி கரைபுரண்டு வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவியைக் காண ஓடி வருவது போலிருந்தது. போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்த ஆரவாரத்துடன் ஓடும் வீர்ர்களை ஒத்திருந்தது. இந்த நிலையிலும் உனக்கு இது தேவையா என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் போதும் பேரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அத்தை வீட்டை அடைந்து விடலாம்.
சாலையே தெரியாத வெள்ளத்தில் கால்களைத் தடவித் தடவி வைத்து நடந்தாள். முள்ளோ ஆணியோ எது இருந்தாலும் தெரியாத வெள்ளத்தில், பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து எழுந்தாள். வழக்கமாக வரும் வீசிங் சற்று அதிகமாக வந்து மூச்சுவிடும் போது விசில் சத்தம் வந்தது. கையில் இன்ஹேலர் வேறு இல்லையே என்ற கவலை வந்தது. அந்த நினைவே வீசிங்கை அதிகமாக்கியது. நேற்று வாங்க வேண்டும் என்று நினைத்தவள் மழையில் மறந்து விட்டாள். இந்தப் புயலில் எந்த மருந்துக் கடையும் திறந்திருக்காது. என்ன செய்வது இனி நடப்பது நடக்கட்டும் வேறுவழியில்லை.
ஊர் பகலிலேயே இருளில் மூழ்கி இருந்தது. அத்தையை அழைத்துக் கொண்டே வீட்டைக்குள் நுழைய, அத்தை ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு “ஏங்கண்ணு இந்த மழையிலும் வேலைக்கு போகனுமா? வா வா..” என பரிதவித்து துண்டை எடுத்து துவட்டிய போது... கண்கள் கலங்கினாள். அதெல்லாம் வேணாம் அத்தை எனக்கு தூங்கனும் போலருக்கு படுத்துக்கவா என்றாள். சரித்தா.. இந்தா இந்தப் புடவைய மாத்திக்கிட்டு ரூம்ல படுத்துக்க என்றாள். வறுமையான சூழலிலும் அத்தையின் அன்பு மனதை நிறைத்தது.
வீட்டின் ஓடுகள் உடைந்த ஓட்டையின் வழியே மழை ஒழுகிக் கொண்டிருக்க அறையே ஈரத்துடன் தான் இருந்தது. அத்தை தந்த பாயும் ஈரத்துடன் இருக்க வேறுவழியின்றி மூலையில் விரித்து சுருண்டு படுத்தாள். அத்தை, சாப்பிடும்மா என்று கூறியபோதும் வேண்டாமென மறுத்து படுத்தாள். அத்தை மெதுவாக அறைக்கதவை சாத்திவிட்டு அடுப்பங்கரையில் படுத்தாள். பகல் இரவைப் புணர்ந்து மேலும் இருளானது. காலையில் இருந்து சாப்பிடாதது வேறு பசி உடலைத் தின்றது. அத்தையின் ஏழ்மை நிலை புரிந்ததால் உணவு வேண்டாம் என்று கூறினாள். கால்களைச் சுருட்டி பசித்த வயிற்றுக்கு அணைக் கட்டினாள். அவ்வவ்போது கால்களை உரசிச் சூடேற்றிக்கொண்டாள்.
ஒவ்வாமையினால் மூச்சுத்திணறல் அதிகரிக்கத் துவங்கியது. சிமெண்ட் ஆலை தந்த பரிசு இந்த நோய். முதலில் தாங்கக் கூடிய அளவில் தான் இருந்தது. அரியலூரில் இருக்கும் வரை அவளுக்கு எந்த நோயும் வந்தது இல்லை. திருமணமாகி கல்லக்குடிக்குச் சென்ற பிறகுதான் இந்நிலை.
வீட்டிற்கு எதிரே இருந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் புகை அந்த குவார்ட்டர்சில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ளே புகுந்து பாத்திரங்கள் , எல்லாப் பொருட்களிலும் படிந்து இருக்கும். தூங்கும் போது கூட சிமெண்ட் மூச்சுக்குழாய் வழியாக உள்ளே செல்வதை உணரலாம். அங்கு எல்லோரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். முதன்முதலாக அப்போதுதான் அவளுக்கு மூச்சுவிட முடியாமல் போனது. மருத்துவரை பார்க்கச் சென்ற போது அவர் ,சாதாரணமாக இங்கு இதெல்லாம் சகஜம். எல்லாருக்கும் வரும் மருந்து சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று இயல்பாக கூறியது உறுத்தலாக இருந்தது.
அதன்பிறகு அவளுக்கு அடிக்கடி வீசிங் வரத் துவங்கியது. அவளது கைப்பையில் எப்போது இன்ஹேலரை வைத்துக்கொள்ளும் அளவிற்கு நோயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. பள்ளியில் வகுப்பிற்கு எதிரே அடிக்கும் எதிர்வெய்யில் வேறு இவளுக்கு மேலும் ஆஸ்த்துமாவைத் தூண்டி மிகத் தீவிரமாகத் தாக்கும் போதெல்லாம், கூட பணிபுரியும் மீனாட்சி ஆசிரியர் பள்ளியில் இருந்து நேரடியாக அரியலூரில் உள்ள குடும்ப மருத்துவரான வானொலி டாக்டரின் மருத்துவமனையில் சேர்த்து விட்டு குளுக்கோஸ் மூலம் மருந்தை நரம்பில் ஏற்றிய பிறகுதான் அவளது அம்மாவிற்கே கூறுவார்கள்.
அரியலூரிலும் உள்ள சிமெண்ட் ஆலையால் அங்குள்ள மக்களும் ஆஸ்த்துமாவால் பாதிப்பிற்குள்ளாகினர். இப்போது பத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் அரியலூரைச் சுற்றி உள்ளது. அன்று ஒரே ஒரு மருத்துவமனை இருந்தது. இன்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஏகப்பட்ட மருத்துவமனைகள்.
மாவட்டத்தின் வளர்ச்சி மக்களுக்கு முன்னேற்றத்தைத் தருகிறதோ இல்லையோ மக்களை நோயில் தள்ளி விடுகிறது. ஓவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஆலைகள் இப்படியான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டு மாவட்டம் வளர்கிறது என்று அரசு கூறுவதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவளும் ஆஸ்த்துமா குணமாக அலோபதி மருத்துவம் கேட்காமல் ,ஒவ்வாமைக்கான டெஸ்ட் எடுத்து ஹோமியோபதி மருத்துவம், சித்தா மருத்துவம், ஆயுர்வேத மருத்துவரிடமெல்லாம் காட்டிச் சரியாகாமல் மீண்டும் அலோபதி மருத்துவரிடமே தொடர்ந்து மருந்து எடுத்து வருகிறாள். மாத்திரை போட்டு தீராத போது கைகளில் ஊசி போட வேண்டிய நிலை தாண்டி இனி நரம்பு ஊசி போட்டால் தான் மூச்சுவிட முடியும் என்ற நிலைக்கு வந்தாச்சு என்றார்.
‘இனி உங்களுக்கு மருந்தே கிடையாது. முதலில் இந்த ஊரை விட்டு எங்கேயாவது வேலையை மாற்றிக்கொண்டு போங்க’
என வேறுவழியின்றி மருத்துவரும் கூறிவிட்டார்.
திருச்சிக்கு பணிமாறுதல் வாங்கிச் சென்று விடலாம் என முடிவு செய்து இரண்டு வருடமாக விண்ணப்பித்தப் போதும் மாறுதல் கிடைக்கவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே தீவிரத்தோடு மூச்சுவிடச் சிரமப்படுவதை உணர்ந்தாள். மீனாட்சி அருகிலிருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. இந்தப் புயலில் எந்த மருத்துவரும் இருக்க மாட்டார்களே என்ற நினைவே வீசிங்கை மேலும் அதிகமாக்கியது.
கண்கள் செருகத்துவங்கியது. வாயால் மூச்சுவிடத் துவங்கினாள். கைகள் எதையாவது பற்றிக்கொண்டு உயிரை மீட்க போராடியது. அத்தை வந்து ஏதாவது செய்து காப்பாற்ற மாட்டார்களா எனத் தவித்தாள். தூங்க முடியாது எழுந்து அமர்ந்து,, தலையணையில் தலை வைத்து மூச்சுவிட முயற்சி செய்தாள். அவளது குழந்தையை எண்ணிக் கலங்கினாள்.. எப்படியும் மீண்டு விடுவோம் என்று நம்பினாள்.
. அவளது முனகல்கள் அத்தைக்கு எட்டவே இல்லை. அத்தை எழுந்து வந்து விட மாட்டார்களா எனத் தவித்து எழுந்தவள், தடுமாறி விழுந்தாள். ஒவ்வொரு நொடியும் அவளது துயரம் அதிகமானது. புயல் தனது கோரக்கரங்களால் அவளது மூச்சை நிறுத்தத் துவங்கியது. தரையை இறுகப்பற்றியிருந்த அவளது கரங்கள் துவண்டு வீழ்ந்தன. கண்கள் செருக கடைசி மூச்சை விட்டவளின் கண்களில் குழந்தையின் முகமே நிறைந்தது. புயல் வந்த வேலை முடிந்ததென அமைதியானது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்