logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Fathima

சிறுகதை வரிசை எண் # 98


மாற்றம் ஒன்றே மாறாதது ........................................................................... "பெரியவன் 'கலுபோவில' ஹாஸ்பிடல் ல ட்ரைனி டாக்டரா ஜாயின் பண்ணி இருக்கான்" நீண்ட நாட்களின் பின் வீடு தேடி வந்த தன் பால்ய சிநேகிதன் கண்ணனிடம், பெருமிதத்துடன் கூறிக் கொண்டிருந்தார் மனோகரன். "கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோ, சின்னவன் என்ன பண்றான்?" நண்பனின் ஆவலான கேள்வியால் ஸ்தம்பித்து நின்றது மனோகரன் மட்டுமல்ல, அப்பொழுதுதான் தேநீர் கோப்பைகளை ஏந்திக் கொண்டு வாசலுக்கு வந்த உமாவும் தான். "அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்து இருக்கீங்க..! எங்களை எல்லாம் சுத்தமா மறந்துட்டீங்களே..! வீட்டில எல்லோரும் சுகமா ண்ணா?" கணவனின் சங்கடத்தை சமாளிக்க வந்தவரைக் கேள்வி கேட்கத் தொடங்கினாள் உமா. கண்ணன் அந்த நாள் ஞாபகங்களில் மூழ்கிப் பழைய நிகழ்வுகளைப் பேசத் தொடங்கினார். "அப்பாடா" உமாவின் வாய் தான் சொல்லவில்லையே தவிர, அவளிடமிருந்து வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சு அதைத்தான் உணர்த்தியது. "எப்படியும் இன்றைக்குக் கணவனிடம் செமத்தியாக வசவை வாங்கிக் கட்ட வேண்டி இருக்கும்" என்று நினைத்தபோது அவளுக்குள் ஒரு இனம் புரியா வலியும், சோகமும் பரவியது. மனோகர் நல்ல கணவர், நல்ல அப்பாவும் கூட. குடும்பத்தைத் தாண்டி எதற்கும் அவரிடம் முன்னுரிமையில்லை. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாய்த் தினமும் வீடு அல்லோல கல்லோலப்படுகிறது. காரணம் அவர்களின் இளைய புத்திரன் 'ஆதித்யன்' தான். உமா, மனோகரன் தம்பதியினருக்கு தர்ஷன், ஆதித்யன் என இரண்டு ஆண் பிள்ளைகள். எல்லாத் தந்தைகளையும் போல மகன்களை டாக்டராக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் மனோகரன். ஆசைப்பட்டதில் தப்பில்லை, அதையே அவரின் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஆதித்யன் மீது திணித்ததுதான் இத்தனை பிரச்சினைக்கும் அடிநாதம். சிறிய ஒரு மளிகைக் கடையில் முதலாளியாகவும், தொழிலாளியாகவும் அரக்கப் பறக்க முழுநாளும் குடும்பத்துக்காக உழைத்தவர் மனோகரன். தர்ஷன் மருத்துவத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியதை அக்கம், பக்கம், உற்றார், உறவினர் எல்லோரிடமும் கூறிக் கூறி மகிழ்ச்சியில் திளைத்துத்தான் போனார் மனுசன். அவரின் அத்தனை சந்தோஷத்திற்கும் ஆதித்யன் பெரிதாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டான். டாக்டராகும் கனவு தர்ஷன் மனதிலும் ஆழமாகப் பதிந்ததாலோ அல்லது பதிக்கப்பட்டதாலோ என்னவோ...! படிப்பு, ஒழுங்கு, மேனரிசம் அத்தனையும் தர்ஷனிடம் சிறுவயதிலேயே குடிகொண்டு விட்டன. ஆதித்யனோ, அப்படியே தர்ஷனுக்கு எதிரும் புதிருமாய் இருந்தான். அவனுக்குப் படிப்பில் ஆர்வமில்லை, விளையாட்டும், குறும்பும் கொண்ட சுட்டிப் பையன். "அண்ணாவைப் பார்..!" "அண்ணாவைப் போல் படி" "அண்ணாவைப் போல் நல்ல மார்க் வாங்கணும்" "அண்ணனைப் போல ஏன் உனக்கு ஒழுங்கா இருக்கத் தெரியாது?" அப்பாவின் வசவுகளுக்கு அம்மாவிடம் அங்கலாய்த்தான் ஆதித்யன். "அப்பாவுக்கு எப்பவுமே அண்ணா தான்" "அம்மாவுக்கு எப்பவுமே ஆதித்யன் தான் ன்னு, உன் அண்ணா சொல்றான்.. பெத்தவங்களுக்கு எல்லா பிள்ளைகளுமே ஒன்னுதான் டா... அப்பா உன் நலவுக்குத் தானே சொல்றாரு..." அம்மாவின் அன்பான நாலு வார்த்தைகளால் அவன் திருப்தி அடைந்து கொள்வான், அதற்காகத் திருந்தவோ, படிக்கவோ மாட்டான். "என்னங்க எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, அவனைத் திட்டிட்டே இருக்காதீங்க... நீங்க அன்பா சொன்னா கேட்டுப்பான், இந்த வயசுல பசங்க துருதுரு ன்னு தானே இருப்பாங்க.." இத்தனை ஆண்டுகளில், எத்தனை ஆயிரந்தடவை அதே வாக்கியங்களைத் திரும்பத் திரும்பக் கூறியிருப்பாளோ? எதற்கும் அசைந்து கொடுக்காத இரண்டு முரட்டு ஜீவன்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு தத்தளித்த உமாவின் நிலையை என்னென்று சொல்வது? மகனிடமும், கணவனிடமும் மாறி மாறி அலைந்து சமாதானம் செய்த நாட்கள் எத்தனையோ? 'சாதாரண தரப்பரீட்சை'யில் சாதாரணமாகவே சித்தி அடைந்தவனை, உயர்கல்வியை 'உயிரியல்' பிரிவில் கற்குமாறு நிர்ப்பந்தித்தார் மனோகரன். முதலில் மறுத்த ஆதித்யன் தாயின் கெஞ்சல், கொஞ்சல்களுக்கு அடங்கி அப்பிரிவிலேயே இணைந்து கொண்டான். ஒரு மாதம் கடந்தது இரு மாதங்கள் கடந்தன "அம்மா எதுவுமே புரியல மா... எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன்.. அப்பாகிட்ட சொல்லுங்கம்மா.. நான் வேற ஏதாவது படிக்கிறேனே" கணவன் நல்ல மனநிலையில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு, மூன்று தடவை சொல்லிப் பார்த்தாள். மனோகரின் நல்ல மனநிலையைக் கெடுத்த கோபமும் சேர்த்து இரட்டிப்பாய் உமா பக்கம் திரும்பியது. ஆறு மாதங்கள் கடந்தன.. இனி அம்மாவிடம் சொல்லிப் பயனில்லை என்ற முடிவுடன், ஆதித்யன் உமாவைத் தூதனுப்பாமல் தானே முன்வந்து "அப்பா... .. என்னால படிக்க முடியாது" பட்டுனு போட்டு உடைக்க உமாவுக்குத் தான் 'பக்' கென்று இருந்தது. ஆதித்யனின் பேச்சு மனோகரின் தன்மானத்தை உரசி விட்டது போலும், திட்டித் தீர்த்து விட்டார். தந்தையின் திட்டல்களை எதிர்பார்த்தே இருந்தபோதும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்ட ஆதித்யன் "அப்பா... உங்களுக்கு நான் சொல்றது புரியுதா? இல்லையா? என்னால முடியாதுன்னா முடியாதுப்பா... உங்க ஆசையெல்லாம் என் மேல திணிக்காதீங்க, அதுக்குத்தான் உங்க பெரிய பையன் இருக்கானே.. என்ன விட்டுடுங்க" கத்தினான். "எனக்கு கஷ்டம்பா, நீங்க சம்பாதிக்கிற காசும் வீணாப் போகுதுப்பா" மீண்டும் தாழ்ந்த குரலில் மன்றாடினான். தந்தைக்கு விளங்கப்படுத்தத்தான் முயற்சித்தான்... ஆனால் அவருக்கு விளங்கியதோ வேறு விதமாக... "எனக்குப் புரியாது ன்னு சொல்றியா? நான் படிக்காதவன் ன்னு சொல்றியா? உங்களப் படிக்க வைக்கிற அளவுக்கு எனக்கு சம்பாதிக்கத் துப்பில்ல ன்னு சொல்றியா?" கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார் மனோகரன். கைகளாலும் ,கைகளில் கிடைத்தவைகளாலும் அவனை விலாசித் தள்ளினார். "ஐயோ ப்பா ... நான் என்ன சொல்றது? நீங்க என்ன சொல்றது? "என்னங்க அவன் அப்படி சொல்லல" யாருடைய சமாதானத்தையும் மனோகரன் கேட்கத் தயாராக இல்லை. தான் அடித்தது அவனுக்கு வலிக்கவில்லையோ என்று மனதில் லேசாக உதித்த கணத்தில் மொத்த கோபமும் மனைவி பக்கம் திரும்பியது. "எல்லாம் உன்னால தான்..." திட்டிக்கொண்டே, உமாவை அடிக்க மனோகரன் கையோங்க, அம்மாவை அடிக்க விடாமல் தடுக்க நினைத்த ஆதித்யன் அப்பாவைத் தள்ள... அவ்வளவுதான்.... ஆதித்யன் தள்ளிய வேகத்தில் மனோகரன் 'பொத்' தெனக் கீழே விழுந்து விட்டார். "டேய்.. நாயே.. என்னையே அடிப்பியா? போடா வெளிய..! இனி என் கண்ணு முன்னாடி வராதே, போ......! எங்கேயோ போய் செத்துத் தொல... இந்த வீட்டுக்குள்ள நீ காலடி வைக்க கூடாது" ஆதித்யன் அவரைத் தூக்குவதற்கு முயன்ற கைகளையும் உதறிக் கொண்டு எழுந்தவர் சினிமாப் படத் தோரணையில் அவனை வெளியே தள்ளிக் கதவை அடைத்து விட்டார். "சாரிப்பா... நான் வேண்டுமென்னு தள்ளலப்பா...." ஆதித்யனின் கண்ணீருக்கும், கெஞ்சல்களுக்கும் மனோகர் சிறிதும் இரங்கவில்லை.. அவை காற்றோடு கலந்து மறைந்தன. இருவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்ட உமாவுக்குத்தான் தான் காலங்கள் கண்ணீரோடு கரைந்தன. மகன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து வீட்டில் இணைந்து கொள்வானா? கணவன் மனமிரங்கி மகனைக் கூட்டி வருவாரா? என்ற உமாவின் ஏக்கங்கள் இரண்டு ஆண்டுகளாய்க் கனவாக மட்டுமே இருக்கின்றன. சடுதியாய் நிகழ் காலத்துக்கு வந்தவளாய், "அண்ணா ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து இருக்கீங்க, மத்தியானம் சாப்பிட்டுத் தான் போகணும்" வாஞ்சையோடு வந்தவரை வேண்டிக் கொண்டாள் உமா. ஆனால், அங்கேயும் வம்பு அவள் கேட்காமலேயே வந்தது. "இல்ல ம்மா, இன்னைக்கு எங்க மச்சான் வீட்டில சமைக்கிறதா சொல்லி வர சொன்னாங்க, நான் போகணும் சின்னவன் வந்தால் பார்த்துட்டு போகலாம் ன்னு நெனச்சேன்" கையைத் திருப்பி ஒரு கணம் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டார். "ஐயோ..! மீண்டும் முதலில் இருந்தா? உமாவின் மனம் பதறியது. "அவன் இன்னைக்கு வரமாட்டான் ன்னு சொன்னானே...." கைகளைப் பிசைந்து கொண்டு மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டாள். "சார்... சார்...." யாரோ புதியவரின் குரல் கேட்டு "யாரது.." என்று கேட்டுக்கொண்டே அவ்விடத்தில் இருந்து மெல்ல நழுவினார் மனோகரன். முற்றத்தில் ஒரு போலீஸ் ஜீப் நின்றது. "சார் இந்த போட்டோல இருக்கிறது...." காக்கி சீருடையைக் கண்டதும், பதற்றத்தில் நடுங்கும் கைகளோடு, போலீஸ்காரர் காட்டிய கையடக்க தொலைபேசியை வாங்கிப் பார்த்தார். புகைப்படத்தில் இருந்ததென்னவோ ஆதித்யனின் 'ஆள் அடையாள அட்டை'. "என் பையன் தான் சார்.. என்னாச்சு? " அதற்குள் பதறி ஓடி வந்தனர் உமாவும், கண்ணனும்.... "என்னாச்சு சார்" உமாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியாகும் முன் கண்கள் கண்ணீரை சிந்தின. ஒரு கணம் தயங்கி நின்றவர் மறுக்கணம் கடமையைச் செய்யும் கட்டாயத்தில் தொப்பியைக் கழற்றி தலையைச் சொரிந்து கொண்டே "ஆக்ஸிடென்ட் மா.. பையன் 'ஸ்பொட்'லயே அவுட்" என்றார் உணர்வுகளைத் துடைத்த குரலில். "ஐயோ....." எனக் கதறிக்கொண்டே கீழே விழுந்து விம்மி விம்மி அழத் தொடங்கினாள் உமா. "என்ன சொல்றீங்க.. ஐயோ... ஐயோ.. என்னால தான் என்னால் தான் இனி நான் என்னதான் செய்வேன்" எதை எதையோ சொல்லிக் கொண்டு கதறிக் கதறி அழுதார் மனோகரன். "இங்கு என்னதான் நடக்கிறது?" என்று புரிந்துகொள்ளவே கண்ணனுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. "இந்த 'ஐடென்டி'ல இருக்கிற பையன் ஆக்சிடென்ட் ஆகி இறந்துட்டான். அவனோட உடம்ப அடையாளங்கண்டு எடுத்து வர்ரதுக்கு பேமிலி போக வேணும், அவங்களுக்கு எடுத்து சொல்லுங்க" போலீஸ் கண்ணனிடம் வேண்டிக் கொண்டனர். ஆக்சிடென்ட் பற்றி அனுராதபுர மாவட்டத்தின் குறிப்பிட்ட ஒரு போலீஸ் பிரிவிலிருந்து தகவல் அனுப்பப்பட்டிருக்க, விரைந்து அவ்விடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி மனோகரையும், உமாவையும், பாதி வழியில் தர்ஷனையும் ஏற்றுக்கொண்டு அனுராதபுர நோக்கிக் காரை அதி வேகமாகச் செலுத்தினார் கண்ணன். "என்னால தான்... எல்லாம் என்னால தான்... அவன வீட்ட விட்டு துரத்திட்டேன்... அவனுக்கு என்ன வேணும்? என்ன படிக்கணும் னு கேட்டிருக்கக் கூடாதா? அப்படி என்ன குற்றம் செஞ்சிட்டான் என் பையன்? ஐயோ இந்த குத்த உணர்வோடு என்ன வாழ வச்சிட்டு போயிட்டானே என்னால தாங்க முடியலையே இனி உமா என்ன கொலைகாரன போல பாப்பாளே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே" வழிநெடுகத் தலையிலும் மாரிலும் அடித்துக்கொண்டு கதறினார் மனோகர். உமாவின் இதயமே உடைந்து நொறுங்கியது போல வலித்தது... இவ்வளவு நாள் மகனைக் காண ஏங்கிக் காத்து சேர்த்து வைத்திருந்த கனவு கோட்டைகளெல்லாம் ஒரு நொடியில் சுக்கு நூறாகிப்போன வலியை விவரிக்க வார்த்தைகள் தான் உண்டோ? கண்களில் மட்டும் இடைவிடாது கண்ணீர் பொழிய என்ன நடக்கிறது? எங்கே செல்கிறோம்? என்ற பிரக்ஞையே இல்லாமல் சென்று கொண்டிருந்தாள். "எந்த ஹாஸ்பிடல்?" என்று விசாரிக்க அனுராதபுரத்தில் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட கண்ணனுக்கு "சாரி சார், இங்க பர்ஸ தொலைச்ச பையன் கம்பளைண்ட் கொடுக்க வந்திருக்கார், ஆக்சிடென்ட் ஆனதில இறந்தவர்ட உருவமே அடையாளம் தெரியல, அதனாலதான் பர்ச வச்சு உங்களுக்கு இன்பார்ம் பண்ணினோம்.... பிற்பாக்கெட்கேஸ் போல தான் இருக்கு விசாரிச்சிட்டு இருக்கோம்" என்று போலீஸிடம் இருந்து பதில் வந்தது. எப்போவாவது போன உயிர் திரும்பி வந்த கதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு அப்படித்தான் இருந்தது. இனி ஒரு கணம் கூட மகனைப் பிரிந்து வாழ முடியாது என்பதைப் போல "போலீஸ் ஸ்டேஷன் போடா " கண்ணீரோடும், பதற்றத்தோடும் வார்த்தைகள் குளறப் பேசும் மனோகர் கண்ணனுக்கே புதியவன் தான். ஆதித்யன் போலீஸ் நிலையத்தின் முன் காத்திருந்தான், மெலிந்து, கறுத்து உருவமே மாறிப் போய்...... "என்ன மன்னிச்சிடுயா... மன்னிச்சிடுயா.." கத்திக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கி, ஓடி மகனை இறுகத் தழுவி கொண்டார் மனோகர். ஓடி வந்த ஆதித்யனும், "என்ன மன்னிச்சிடுப்பா.. நீ கோவமா இருப்பேன்னு நெனச்சேன் பா.. நான் வேணும்னு பண்ணல பா... நான் படிக்கிறது கஷ்டமா இருக்குது ன்றத தான் சொல்ல வந்தேன்பா.." அவனாலும் பேச முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதான். "தெரியும் டா..தெரியும்.. நீ படிக்க முடியாதுன்னு சொன்ன கோவத்துல ஏதேதோ பண்ணிட்டேன்.. உமாவும் ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். முத்தமழை பொழிந்தாள். அழுதாள். திட்டினாள். மீண்டும் முத்தமிட்டாள். மீண்டும் அணைத்துக் கொண்டாள்.. அது அக்குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் உணர்ச்சிகரமான ஒரு தருணமாய் மாறியது. நீண்ட மௌனங்களுக்கு பின், "இங்க என்னடா பண்ற...." அந்த சோக சூழ்நிலையை மாற்ற தர்ஷன் தான் கேட்டான். "அப்பா... நான் இங்க ஒரு டெக்னிக்கல் காலேஜ்ல 'கார் மக்கேனிக் கோர்ஸ்ல' சேர்ந்து இருக்கேன் பா... ஒரு 'கரேஜ்' ல 'பார்ட் டைம்' வேலையும் செய்றன், ஒரு சின்ன சம்பளமும் கிடைக்குது, அடுத்த மாதத்தோடு கோர்ஸ், ட்ரைனிங் எல்லாம் முடியுது... வெளிநாட்டுக்கு போகலாம் என்று ட்ரை பண்ணிட்டு இருந்தேன் பா..." பதில் கூறியது என்னவோ அப்பாவிடம் தான். "ஐயோ வெளிநாட்டுக்கெல்லாம் போக வேணாம். ஊருக்கு வந்து உனக்கு வேண்டியது பண்ணுடா..." இனியும் அவன் பிரிவை தாங்க அவருக்கு சக்தி இல்லை போலும். "என்னமா இது??" தர்ஷன் உமாவின் காதில் கிசுகிசுத்தான். அவளுக்கு கண்ணீருடன் சிரிப்பும் வந்தது "அப்பா நான் தான் உங்க பையன், டாக்டர் பையன் பா..." தந்தையை சீண்டினான் தர்ஷன். "என்ன வேலை செஞ்சா என்னப்பா.. எல்லோரும் டாக்டரா இருந்தா, மத்த மத்த வேலையெல்லாம் யார் பார்க்கிறது?" ஒரேயடியாக மனோகரன் கட்சி மாற, அவர்களின் சிரிப்பு காற்றோடு எங்கும் கலந்தது. மகிழ்ச்சியில் உள்ளங்கள் நிறைந்தன. எல்லாக் கோபங்களுக்குப் பின்னும் வெறுப்பும், குரோதமும் இருப்பதில்லை... சில கோபங்கள் இப்படியும் தான்.... அது என்னமோ பாசத்தால் விளைவது....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.