S.Mohamad Arshath
சிறுகதை வரிசை எண்
# 97
அதுவே காரணம்
இன்னும் சிறிது நேரத்தில் சாக விழைகிறேன். சாவதற்குத் துணிவில்லை. ஆனால் வாழ்வதற்கும் மனமில்லை.
"ஸ்டூலில் கால்கள் பயத்தின் பாட்டிற்கு நடனம் ஆடுகின்றன. கைகள் கழுத்தில் மாட்டியிருக்கும் அம்மாவின் புடவையைத் தொட்டு அணைத்துக் கொண்டிருக்கின்றன. வியர்வையும், கண்ணீர் துளியும், ஒரே நேரத்தில் தரையை அடைகின்றன. நாக்கில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது."
தண்ணீர் குடித்துவிட்டு இறக்கலாமா என்று கூட தோணுகிறது. ஆனால் இன்னும் சில வினாடிகளில் சாகப் போகிறேன். இதற்கு காரணம் என்ன?
ஒரு மாதத்திற்கு முன்பு மழலைச் சிரிப்பு மாறாமல் ஓடித் திரிந்து விளையாடிவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்து அம்மாவின் ஒரு கிள்ளுக்கு கதறித் துடித்தாலும் அடுத்த கணமே டிவியில் பவர் ரேஞ்சர் பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்கிய நான், இன்றைக்கு இம்முடிவுக்கு வர அதுவே காரணம்...
அதனைக் காணும் போதெல்லாம் பரவசம் கலந்த ஒரு படபடப்பு உண்டாகும்.மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்லி மூளை முழு மூச்சாக செயல்படும்.
அது என்னைப் பிடித்த சாத்தானாகவும் எனக்குப் பிடித்த சாக்லேட் போல மகிழ்ச்சியாகவும் தோன்றியது.
கந்தசாமி மாமா வீட்டு திண்ணையில் தான் முதன் முதலாக அதை பார்த்தேன்.
பாட்ஷா அண்ணாவும் என் நண்பர்கள் சிலரும் திண்ணையில் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நான் போனால் பாட்ஷா அண்ணாவிடம் கொட்டு வாங்கி ஓட வேண்டி இருக்கும் என்று போகாமல் இருந்தேன்.
ஆனால் ஒரு தடவை பாட்ஷா அண்ணா என்னைக் கொட்ட வரும்போது அவர் செல்போன் கீழே விழுந்தது. அதிலிருந்த படத்தையும் ஓரத்தில் இருந்த எக்ஸ் என்ற வார்த்தையும் என் கண்ணில் பதிந்தது.
வீட்டிற்குச் சென்றதும் அதை தெரிந்து கொள்ளும் ஆவல் பல மடங்காக பெருகியது.
தினமும் நான், வீட்டுப்பாடம் முடித்த பின் அம்மாவின் செல்லில் கேம் விளையாடுவது வழக்கம். அன்று வீட்டுப்பாடம் தரவில்லை என்று சொல்லி மொட்டை மாடியின் பூஞ்செடி பின்னால் அமர்ந்துக்கொண்டு வேகமாக எக்ஸ் என்று டைப் செய்தேன்.
சில படங்கள் மங்கலாகவும் சில படங்கள் முழுவதாகவும் காணப்பட்டது. சில வீடியோக்களும் வரிசையாக என் கண்ணில் சுழன்றன. சத்தம் கேட்டு விடுமோ என்று வால்யுமை முழுமையாக குறைத்தேன். அவற்றை காணும் போது ஏதோ புதுவிதமான கிளர்ச்சி உண்டானது. அதைப் பார்க்கும்போது பறப்பது போன்ற மகிழ்ச்சி வெளிப்பட்டது.
பார்த்துக்கொண்டே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. என் அம்மா என்னைத் தேடி சிங்கத்தைப் போல் கர்ஜிக்கும் சத்தம் கேட்டது.
சட்டென்று, பார்த்த அனைத்தையும் ஹிஸ்டரியிலிருந்து நீக்கிவிட்டு படபடவென வீட்டுக்குள் சென்றேன்.
இப்போதும் அம்மா சுளீர் என்ற ஒரு கிள்ளின் மூலம் என்னைக் கதற வைத்தாள்.
ஆனால் இப்போது பவர் ரேஞ்சர் பார்ப்பதற்கு மனமில்லை. ஒன்றரை இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை என அழுது அடம் பிடித்து தூக்கம் வருகிறது என்று படுக்கை அறைக்குச் சென்றேன்.
ட்ரவுசரில் லேசாக ஈரம் பட்டிருப்பது இப்போதுதான் உணர்ந்தேன். அம்மா பார்க்காத வண்ணம் வேறொரு ட்ரவுசரை மாற்றினேன்.
ஓரமாக இருந்த பாயைத் தூக்கிக் கொண்டு விரித்து, தலையணையும் எடுத்து வந்து படுத்தேன்.
இதுவரை, பாயும், தலையணையும், ஏற்கனவே விரித்து என்னை தூங்க செய்வதற்குள் அம்மாவுக்கு ஒரு போராட்டமாகவே இருக்கும்.
நான் செய்யும் செயலைப் பார்த்து அம்மா சற்று அதிர்ச்சி அடைந்து இருப்பாள் என்று நினைக்கின்றேன்.
படுக்கும் போதும் அதே காட்சிகள் கண்ணில் சுழன்றன.
ஒரு அக்கா வேலைச் செய்துக்கொண்டு இருக்கின்றாள். வீட்டு முதலாளி அவளை இழுத்து கட்டிப்பிடித்து, அவளின் உதட்டிலும், கழுத்திலும் முத்தமிடும் காட்சி மீண்டும் மீண்டும் என்னைத் துரத்தியது.
இவ்வாறு இது போன்ற காட்சிகளை தினமும் அதிகமாக பார்க்கத் தொடங்கினேன்.
அதைப் பார்த்தால் பசி எடுக்காது. பாடம் பிடிக்காது. நண்பர்களுடன் விளையாட பிடிக்காது. அம்மாவிடம் பேசவும் பிடிக்காது.
அது என்னைத் தனி ஒரு உலகத்திற்கு கூட்டிச் செல்லும். நான் எப்போதும் செல்லில் மூழ்கி இருப்பதை பார்த்த அம்மா என்னை கடிந்து கொள்வாள்.
நான் செல்லில் இம்போர்ட்டண்ட் கொஸ்டின் பார்ப்பதாகச் சொல்லி செல்லைப் பிடுங்கிக் கொண்டு ரூமிற்குள் செல்வேன்.
நான் என்ன பார்க்கிறேன் என்று அவ்வப்போது என் அம்மா நோட்டமிடுவதும் உண்டு. அவள் அருகில் வருவதை எதிரில் உள்ள கண்ணாடியில் அறிந்து, படிப்பது போல பாசாங்குச் செய்வேன்.அவளும் படிப்பதாக எண்ணி பாலில் ஹார்லிக்ஸ் போட்டு எடுத்து வருவாள்.
ஒரு நாள், எப்போதுமே படித்துக்கொண்டே இருக்கக் கூடாது எனச் சொல்லி என்னை வெளியில் சென்று விளையாடுமாறு கட்டாயப்படுத்தினாள்.
வேறு வழியின்றி நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட சென்றேன்.
வாசன் கண்ணை மூடி நூறு எண்ணுவதாகக் கூறி அறுபதின் மிச்சத்தைத் தொடுவதற்கு முன்பே "ரெடி சொல்லி வருகிறேன்" என்று கூச்சலிட்டுக்கொண்டே வந்தான்.
எனக்கு எங்கு ஒளிவது என்று தெரியவில்லை. மஞ்சுளா மாமியின் வீட்டிற்குள் ஓடிச் சென்று அங்கு இருந்த சோபாவின் பின் மறைந்து அமர்ந்திருந்தேன்.
எங்கள் தெருவின் பெரிய மூக்குத் தாத்தா இறந்த வீட்டிற்குச் சென்று வந்த மஞ்சுளா மாமி, வீட்டிற்குள் நுழைந்ததும் சட்டென்று கதவைச் சாத்தி வேகமாக சேலை, ஜாக்கெட், என அனைத்தையும் அவுத்து கொடியில் எறிந்தவளாக குளிக்கப் போனாள்.
அவள் செய்யும் அனைத்துக் காட்சியையும் மூச்சுக் கூட வெளியே கேட்காத வண்ணம் சோபாவின் கீழ் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவள் பாத்ரூமுக்குச் சென்றதும், வேகமாக கதவைத் திறந்துக் கொண்டு ஓட முயற்சித்தேன்.
துண்டை எடுக்க வந்தவள், என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். இப்பொழுதும் அவள் மேலாடை எதுவும் இன்றியே காணப்பட்டாள்.
சட்டென்று குமார் மாமாவின் கைலியை எடுத்து தன் மார்பகத்தை மறைத்து
" இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன்" என்று அவளின் ஆக்ரோச குரல் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்துக் கொண்டு ஓடி , சிமெண்ட் ரோட்டில் விழுந்து, சிராய்ப்புடன் வீட்டிற்குச் சென்றேன்.
எப்போதும் போல சுளீர் என்று கிள்ளி, அடிபட்ட இடங்களுக்கு அம்மா மருந்து தடவினாள்.
"இரு உங்க அம்மா கிட்ட சொல்லுறேன்" என்று மஞ்சுளா மாமி கூறியது என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
வேகமாக ரூமில் ஃபேன் சுவிட்சைப் போட்டுக்கொண்டு கட்டிலில் அமந்தேன்.
கரண்ட் இல்லை.
அழுகையும் படபடப்பும் என்னை ஆட்கொண்டன. என்ன செய்வதென்று தெரியாமல் சினிமாவில் கண்டது போல் பேனில் அம்மாவின் புடவையை இழுத்துக் கட்டினேன்.
அது மட்டும் என்னை ஆட்கொண்டிருக்காவிட்டால் மஞ்சுளா மாமி வீட்டிற்குள் வந்த உடனேயே வெளியில் ஓடி இருப்பேன். என்னின் இந்நிலைமைக்கு அதுவே காரணம்.
"கால்கள் பயத்தின் பாட்டுக்கு நடனம் ஆடின. கைகள் கழுத்தில் மாட்டி இருக்கும் அம்மாவின் புடவையைத் தொட்டு அணைத்துக் கொண்டு இருக்கின்றன. வியர்வையும் கண்ணீர் துளியும் ஒரே நேரத்தில் தரையை அடைகின்றன. நாக்கு வறண்டு காணப்படுகிறது".
ஸ்டூலில் இருந்து குதித்தேன்...
ஸ்டூல் கீழே விழுந்து சுழன்றது...
கால் மேலே மிதந்தது....
கரண்டும் வந்தது.....
- தமிழினியவன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்