Sudha.T
சிறுகதை வரிசை எண்
# 96
வானமே எல்லை
நூருலின் அன்னை தினா மிகவும் கவலையில் இருந்தாள். ஒளிமயமாக மகள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு தினா மிகவும் ஆசையாக நூருல் என்று பெயரிட்டு இருந்தாள். ஆனால் பிறவிலேயே ஏற்பட்ட ஒரு கோளாறினால் நூருலிற்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை, மற்றொரு கண்ணின் பார்வையும் மிகவும் மங்கலாகத்தான் இருந்தது. நூருல் எட்டு மாத குழந்தையாக இருந்த போது தான் இந்த விஷயம் தினாவிற்கு தெரிய வந்தது. ஆனால் தினா நம்பிக்கையை இழக்கவில்லை. தினா என்றாலே நம்பிக்கை தானே. நூருல்லின் திறமைகளை கண்டறிந்து தினா மகளை பலவிதங்களிலும் ஊக்குவித்தாள். நூருல் வளரும்போதே அவளுடன் ஓவியம் வரையும் திறமையும் வளர்ந்தது. தினா கணவன் மற்றும் உறவினரின் ஆட்சேபணையை பொருட்படுத்தாமல் மகளின் ஓவியக் கனவுகளை நனவாக்க முற்பட்டாள். "கண் தெரியாதவள் சித்திரம் தீட்டுகிறாளாம், குருடிக்கு தேவையோ வண்ணக் கனவுகள்?, கண்ணை விற்று ஓவியம் வாங்க நினைத்தாளாம் ஒருத்தி, " போன்ற ஊராரின் ஏச்சுப் பேச்சுக்கள் தினாவையும் நூருலையும் வருத்தப்பட செய்தாலும் அவர்களுடைய அபிலாஷைகளை குலைக்கவில்லை.
ஒரு நாள் தற்செயலாக புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் மெஹமூத் என்பவர் நூருல் படித்துக் கொண்டிருந்த கம்மனூர் கிராம பள்ளிக்கூடத்திற்கு வந்தார். நூருலின் ஒவியத்திறமையை கண்டறிந்த அவர் அவளுக்கு உதவி புரிய திட்டமிட்டார். நூருலின் மன உறுதி மெஹமூதை மிகவும் கவர்ந்தது. நூருலிற்குத் தேவை சிறந்த வழிகாட்டி என்பதை உணர்ந்து கொண்ட மெஹமூத் அவளுக்கு உதவ முனைந்தார். ஆசிரியரிடம் அளவிடற்கரிய மதிப்பும் பக்தியும் கொண்ட நூருல் அவருடைய ஆலோசனைகளை பின்பற்றி தன்னுடைய ஓவியத் திறமையை மெருகேற்றிக் கொண்டாள். மிகக் குறைந்த அளவு பார்வைத் திறன் கொண்ட நூருல் வண்ணங்களையும் இழை நயங்களையும் விரல்களாலேயே உணர்ந்து கொண்டு மிக உயர்ந்த ரகமான ஓவியப்படைப்புகளை தோற்றுவித்தாள்.
நூருல்லின் திறமை பட்டொளி வீசி பறக்க தொடங்கியவுடன் மெஹமூத் அவளை தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்கச் செய்தார்.
நூருலின் திறமையை எப்பொழுதுமே சந்தேகித்த ஊரார் மற்றும் உறவினர் அவளுடைய ஊக்கத்தை தடுத்தனர். ஆனால் நூருல் அசராமல் நின்றாள்.
போட்டி நடக்கும் தினத்தன்று நூருல் ஆசிரியர் மெஹமூத் உடன் போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றாள். அந்தக் கட்டடமே வண்ண ஓவியங்களாலும் அதை வரைந்தவர்களாலும் ஜெகஜ்ஜோதியாக கோலாகலமாக காணப்பட்டது. அந்த சூழ்நிலையில் நூருலின் தன்னம்பிக்கை சற்றே தளர்வடைந்தது. ஆனால் மெஹமூத் அவளை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த போட்டியாளர் ஒருவர் நூருலை மிகவும் இகழ்ச்சியுடன் நோக்கினார். "அரைக்கண் பார்வை கூட இல்லாத உனக்கு இங்கு வருவதற்கு என்ன தைரியம்? யார் உனக்கு அனுமதி தந்தது? எங்களுடன் போட்டி போட உனக்கு என்ன துணிச்சல்? வண்ணங்களின் கலவை பற்றி உனக்கு என்ன தெரியும்? " என்று பலவிதமாக நூருலை சாடினார்.
மனதிற்குள் அடக்க முடியாத கோபமும் வருத்தமும் தோன்றினாலும் நூருல் நீண்ட மூச்சு விட்டு தன் உள்ளத்தை அமைதி கொள்ளச் செய்து அசாத்திய தைரியத்துடன் பதிலளித்தாள். "ஓவியக்கலை என்பது நாம் கண்களால் பார்ப்பதை விட மிகவும் மேலானது. இந்தக் கலையின் மூலம் நம் உள்ளத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மற்றவர்களையும் உணரச் செய்வதே சிறப்பு "
போட்டி தொடங்கியது. நூருல் தூரிகையை வண்ணங்களில் முக்கி தன் இதயத்தையும் ஆன்மாவையும் கேன்வாஸில் ஓவியமாக தீட்டினாள். தளைகளையும் தடைகளையும் உடைத்துக் கொண்டு வரும் ஓர் பெண்மணியின் ஓவியம் அது. துன்பங்களை தாண்டி வரும் ஒரு உறுதியான பெண்மணியை குறிப்பதாக அமைந்திருந்தது அந்த ஓவியம். நீதிபதி மற்றும் பலர் நூருலின் ஓவியத்தை பார்த்து பிரமித்து நின்றனர். மிகவும் தனித்தன்மையுடன் விளங்கிய அந்த ஓவியம் ஒரு உயர்ந்த உறுதியான செய்தியை தருகிறது என்பதை ஓவியங்களை பார்த்து தீர்ப்பளிக்க வந்த நீதிபதி புரிந்து கொண்டார். நூருல் வெற்றி பெற்றாள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? முயற்சி உடையோருக்கு வானமே எல்லை அல்லவா ?
நூருல் வெற்றி பெற்றவுடன் கம்மனூர் கிராம மக்களும் அவளுடைய திறமையை மதிக்க தொடங்கினர். நூருல் தன் உடல் குறையையும் தாண்டி வெற்றி பெற்றது கம்மனூர் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. அவளுடைய மன உறுதியை மெச்சிய மக்கள் அவளை கொண்டாட துவங்கினர்.
நூருல் தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே ஓவியப்பள்ளி ஒன்றை துவங்கினாள். டிராயிங் டீச்சர் என்று அனைவராலும் அறியப்பட்டாள் நூருல். நூருலின் தாய் தினாவும் தந்தை ஹுசைனும் நூருலின் வெற்றியில் அளவில்லாத ஆனந்தம் அடைந்தனர்.
நூருலுக்கு நிக்காஹ் செய்து தன் கடமையை முடிக்க விரும்பினார் ஹுசைன் பாய். நூருலை திருமணம் செய்து கொள்ள பலரும் போட்டியிட்டனர்.
நகரத்தில் கலைப் பொருட்கள் ஷோரூம் வைத்திருந்த முபாரக்கை நூருல் கரம் பிடித்தாள். நூருல் வரையும் ஓவியங்களை விற்று நிறைய பணம் சம்பாதித்து செல்வந்தன் ஆகலாம் என்ற கனவு முபாரக்கிற்கு இருந்தது.
சுயநலமும் பேராசையும் கொண்டவனாக முபாரக் இருந்தாலும் மனைவி நூருல் மீது மிகவும் அன்புடையவனாகவே இருந்தான் .
"நூருல், உன் கரங்கள் வண்ணங்களையும் தூரிகைகளையும் மட்டுமே தொட வேண்டும். சமையல் செய்வது பாத்திரம் கழுவுவது வீடு சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நீ செய்து உன் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. " என்று மனைவிக்கு அன்பு கட்டளை இட்டான். வறுமையில் வளர்ந்த நூருல் வீட்டு வேலைகள் பலவும் செய்து அலுத்துப் போயிருந்தாள். கணவனின் வார்த்தைகள் அவள் காதில் தேனாகப் பாய்ந்தன. கணவனின் அன்பிலும் அக்கறையிலும் அவள் எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவர்களின் இல்லற வாழ்க்கை அமைதியும் ஆனந்தமும் கொண்டதாக இருந்தது. முபாரக்கின் தாய் மட்டும் அவ்வப்போது மருமகளிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து கொண்டு இருந்தாள்.
"அம்சமா நகை நட்டு ஏதாச்சும் போட்டாங்களா உங்க வீட்ல? " என்று அடிக்கடி கேட்டு நூருலின் மனதை காயப்படுத்துவாள். நூருல் புன்முறுவலுடன் பதில் எதுவும் பேசாமல் இருந்து விடுவாள். கணவனிடமும் எதுவும் சொல்ல மாட்டாள். நூருலின் சிந்தனை எல்லாம் ஓவியங்கள் வரைவதில் எப்படி புதுமைகளை புகுத்தலாம் என்பதிலேயே இருந்தது. அவளுடைய கற்பனைகள் தனித்தன்மையுடன் விளங்கின. இல்லற வாழ்க்கை தந்த அனுபவம் அவளுடைய கற்பனைகளை மெருகேற்றியது. நூருலின் ஓவியங்களுக்கு நிறைய கிராக்கி ஏற்பட்டது. அலுவலகங்களிலும் ஹோட்டல்களிலும் உள்ள வரவேற்பறைகளை நூருலின் ஓவியங்கள் அலங்கரித்தன.
அன்று காலையிலிருந்து மிகவும் சோர்வாக உணர்ந்தாள் நூருல். புதிய பாணியில் ஓவியம் ஒன்றை தீட்டிக் கொண்டிருந்த நூருல் அதை அப்படியே வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். "என்ன செய்யுது ? ஏன் படுத்திட்டே? வீட்டு வேலைதான் ஒன்னும் செய்யறது இல்ல என்ன களைப்போ? " என்று அதட்டினாள் சலீமா, முபாரக்கின் தாய். " தெரியலை, அத்தை. ரொம்ப தல சுத்துது வாந்தி வருது. " என்று நூருல் பலவீனமாக பதில் அளித்தாள். சலீமாவின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன. மருமகள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்பதை சலீமா அனுபவத்தினால் உணர்ந்து கொண்டாள். "நல்ல சேதி தான். நீ ரெஸ்ட் எடுத்துக்க நான் உனக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரேன்."
மாமியாரின் திடீர் கரிசனம் நூருலுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. அதற்கு அடுத்தடுத்து வந்த தினங்களில் முபாரக்கும் அவன் தாய் சலீமாவும் நூருலை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டனர். தனக்கு மகன்தான் பிறப்பான் என்று முபாரக் திடமாக நம்பினான். சலீமாவும் பேரனை எதிர்பார்த்து காத்திருந்தாள். முபாரக் சலீமாவின் ஒரே மகனானதால் அவனுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தை ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் நூருல் அழகான பெண் குழந்தைக்கு தாய் ஆனாள். நூருல் வரையும் ஓவியங்களைப் போலவே பெண் குழந்தையும் பேரழகுடன் விளங்கியது. சலீமாவும் முபாரக்கும் அதிருப்தியுடன் விளங்கினர். ஆண் குழந்தையை எதிர்பார்த்த அவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
"வியாபாரத்தை கவனிக்க ஆம்பள பையன் வருவான்னு நினைச்சேன். பொட்ட புள்ளையா பொறந்து இருக்கு" என்று சலித்துக் கொண்டான் முபாரக். ஆனால் நூருலின் கண்களில் கண்ணீரை பார்த்தவுடன் "பாப்பா நல்ல அழகா இருக்கு நூருல், உன்ன மாதிரியே " என்றான் சமாதானமாக.
"பாப்பாவுக்கு கண் பார்வை நல்லா இருக்கா? டாக்டரை கேட்டீங்களா ? "
"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும் நூருல். கவலைப்படாதே." என்று மனைவியிடம் சமாதானமாக கூறினான் முபாரக்.
சலீமாவும் பின்னர் மனதை தேற்றி கொண்டாள். "முத குழந்தை பொண்ணா பொறந்தா என்ன? அடுத்தது ரெண்டு ஆம்பள பொறக்காதா என்ன? " என்று தனக்குத்தானே ஆறுதல் அளித்துக் கொண்டு பேத்தி பிறந்த மகிழ்ச்சியை கறி விருந்துடன் கொண்டாடினாள். எனக்கு கிடைத்த பரிசு இவள் என்று கூறி முபாரக்கும் மகளுக்கு ஹிபா என்று பெயரிட்டான்.
நூருலும் மிகவும் மகிழ்ச்சியாக தன்னை உணர்ந்தாள். மாமியாரின் அன்பும் கணவன் தன் மீது கொண்ட ஆசையும் நூருலுக்கு மிகுந்த திருப்தியையும் மனதெம்பையும் அளித்தது.
காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சலீமா தனக்கு பேரன் வேண்டும் என்ற பல்லவியை பாடிக் கொண்டே இருந்தாள். வருடங்கள் கடந்தன. ஆனால் சலீமாவின் ஆசை நிறைவேறவில்லை. அதற்கடுத்து வந்த ஐந்து வருடங்களில் மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள் நூருல். நான்காவதும் பெண்ணாகப் பிறந்ததால் முபாரக் வாய்விட்டு கதறி அழுதான்.
சலீமா மருமகளையும் குழந்தையையும் பார்க்காமலேயே புறக்கணித்தாள். அடுத்தடுத்து வந்த குழந்தை பேற்றினாலும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளினாலும் நூருல் மிகவும் தளர்ச்சியுற்றிருந்தாள். சிறுமிகளான ஹிபா, அஸ்மா மெஹர் மூவரும் தங்கள் குட்டி தங்கையை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டனர். ஏழு வயதே ஆன ஹிபா அன்னைக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவியாக இருந்தாள்.
நூருலினால் முன்பு போல் ஓவியம் வரைவதில் அதிக அக்கறை காண்பிக்க முடியவில்லை. அவள் மனதும் உடலும் மிகவும் ஓய்ந்து போய் விட்டிருந்தது. முபாரக்கின் ஷோரூம் வியாபாரமும் மிகவும் மந்தமாக ஆகி அவர்களின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்திருந்தது. சலீமாவும் முபாரக்கும் தங்கள் கோபம் ஆத்திரம் எல்லாவற்றையும் நூருல் மீதும் குழந்தைகளின் மீதும் காண்பித்தனர். ஹிபா தான் தங்கைகளை முக்கியமாக குட்டி பாப்பாவை மிகவும் ஆசையுடன் பார்த்துக்கொண்டாள். பள்ளிக்கூட சம்பளம் கட்ட பணம் இல்லை என்று ஹிபாவின் கல்வி நிறுத்தப்பட்டது.
ஹிபா அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் வேலைக்குச் செல்லத் துவங்கினாள். பறவை கூண்டுகளை சுத்தம் செய்வது, பறவைகளுக்கான உணவை தயார் செய்வது, நோய்வாய்ப்படும் அல்லது அடி படும் பறவைகளை மிகச் சிறந்த முறையில் கவனித்துக் கொள்வது போன்ற மிக அதிகமான வேலைகளை சிறுமி ஹிபா சலிக்காமல் அலுத்துக் கொள்ளாமல் செய்தாள். ஆனால் கிடைத்த சம்பளமோ மிகக்குறைவு. முபாரக்கின் கடை வருமானம் மிகவும் நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்ததால் நூருலும் குழந்தைகளும் ஒருவேளை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டனர்.
ஆனால் முபாரக் ஓர் வினோதமான எதிர்பார்ப்பில் இருந்தான். அல்லாஹ்வின் கருணையால் ஒரு மகன் பிறந்தால் அவர்களுடைய கஷ்டங்கள் யாவும் தீர்ந்து விடும் என்று முபாரக் தீர்மானமாக நம்பினான். அதனால் தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் எல்லோரும் "எங்கள் வீட்டிற்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்." என்று இறைவனிடம் தொழுதுவிட்டு உறங்கச் செல்வார்கள். சலீமாவும் தனக்குத் தெரிந்த சமையல் பணியை சில இடங்களில் செய்து சம்பாதிக்க முற்பட்டாள்.
ஹிபா அஸ்மா இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்தனர். அஸ்மாவும் பறவைகள் சரணாலயத்தில் சென்று வேலை பார்க்கத் துவங்கினாள்.
நூருல் ஐந்தாவது முறையாக கருவுற்றாள். "இப்போ ஆம்பள புள்ள பிறக்கலைன்னா உன்னையும் பொண்ணுங்களையும் வீட்டை விட்டு துரத்திடுவேன் " என்று கர்ஜித்தான் முபாரக்.
நூருலின் ஓவியத் திறமைக்காக அவளைக் கைப்பிடித்த முபாரக்கா இவன் ? பேதை நூருலின் மனதில் ஓராயிரம் விடையற்ற கேள்விகள்.
மருத்துவர் நூருல் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறினார். டானிக் மற்றும் சத்து மாத்திரைகளும் எழுதிக் கொடுத்து முபாரக்கிடம் நூருலை கருத்துடன் கவனித்துக் கொள்ளும்படி கூறினார். "இதெல்லாம் வாங்குறதுக்கு என்னிடம் ஏது பணம்? " என்றான் முபாரக் அலட்சியமாக.
நாட்கள் நகர்ந்தன. சலீமா கோபப்பட்டாலும் மருமகள் நூருலை சற்றே அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். தான் சமையல் பணிபுரியும் இடங்களில் இருந்து மீன் சிக்கன் மட்டன் முதலியவைகளை கேட்டு வாங்கி வந்து மருமகளுக்கு அளித்தாள்.
நூருலின் பேறுகாலம் நெருங்கியது. நோஞ்சானாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் நூருல். முபாரக்கின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. மருத்துவர் முபாரக்கிடம் எச்சரித்தார்.
"இனிமேலும் உன் மனைவி புள்ள பெத்தா அவ உயிருக்கே ஆபத்துதான். ஜாக்கிரதையா பாத்துக்க ஆமா. " "சரிங்க சரிங்க" என்று தலையாட்டினான் முபாரக்.
"என் மகன் என்னுடைய அதிர்ஷ்டம் " என்று கருதிய முபாரக் மகனுக்கு இக்பால் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். நாளும் பொழுதும் இக்பாலை கவனித்துக் கொள்வதே அவன் வேலையாக ஆனது. அடிக்கடி நோய்வாய்பட்டது குழந்தை இக்பால். குழந்தையின் மருத்துவ செலவிற்காக முபாரக் கடன் வாங்க நேரிட்டது. மீண்டும் வியாபாரம் செழித்து விடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர்விட்டது. இப்பொழுது கலைப் பொருட்கள் மட்டும் இன்றி பொம்மைகளையும் துணி வகைகளையும் விற்கத் துவங்கி இருந்தான் முபாரக். ஆனால் பெருகிவரும் போட்டியினால் முபாரக்கின் வியாபாரம் டல் அடித்தது. முபாரக்கின் கவனம் முழுவதும் இக்பால் மீது மட்டுமே இருந்தது. பெண் குழந்தைகளை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நூருலும் கணவனின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் கொண்டே இருந்தாள். "கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது? " மௌனமாக முணுமுணுத்தது நூருலின் மனம்.
வெளிநாடு சென்று இருந்த ஓவிய ஆசிரியர் மெஹமூத் நூருலை சந்திக்க வந்தார். நூருலின் நிலைமை அவர் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்தது.
"அம்மா நூருல், உன்னை இந்த நிலையில் பார்க்க என் மனம் பதைக்கிறதே. எனக்குத் தெரிந்த பள்ளியில் ஓவிய ஆசிரியர் தேவைப்படுகிறது. தங்குவதற்கு இடமும் கொடுப்பார்கள் நீ வந்துவிடு. உன் குழந்தைகளையும் அங்கே படிக்க வைக்கலாம்" என்று மெஹமூத் கூறினார்.
"அது அவ்வளவு சுலபம் இல்லை ஐயா. என் கணவரையும் மாமியாரையும் விட்டுவிட்டு என்னால் வர முடியாது. "
"நூருல் உனக்கு எந்த உதவி தேவையாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள். " என்று கனிவாக கூறிவிட்டு சென்றார் மெஹமூத்.
அஸ்மாவும் ஹிபாவும் தாய்க்கு மிகவும் பக்க பலமாக இருந்தனர். பறவைகள் சரணாலயத்தில் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து தம்பியையும் தங்கைகளையும் நன்கு கவனித்துக் கொள்வார்கள். அஸ்மா பறவைகள் சரணாலய வேலையை மிகவும் ரசிப்புடன் செய்வாள். கீச்சு கீச்சு என்ற பறவைகளின் குரலும், அவை தங்கள் அலகால் உணவை கொத்தி தின்னும் அழகையும் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைவாள் அஸ்மா. அவள் தன் சகோதரி ஹிபாவிடம் ஒரு நாள் கூறினாள்.
"இந்தப் பறவைகள் எவ்வளவு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன தெரியுமா? எனக்கு பறவைகளின் மொழி நன்கு புரிகிறது. சில பறவைகள் தாங்கள் ருசித்த புதிய பழங்களைப் பற்றி கூறுகின்றன. அந்த நீண்ட வால் குருவி நேற்று என்ன கூறியது தெரியுமா? உணவுப் பொருட்கள் எந்தெந்த இடங்களில் கிடைக்கும் என்று மற்ற பறவைகளிடம் அது சொல்லிக் கொண்டிருந்தது. "
ஹிபா தன் தங்கையை அச்சத்துடனும் வியப்புடனும் நோக்கினாள். அஸ்மா பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அழகாகவும் இருப்பது போல் தோன்றியது ஹிபாவிற்கு.
"அஸ்மா, நீ வாப்பா கிட்டயும் உம்மா கிட்டயும் இப்படி எல்லாம் பேசினா இதெல்லாம் சொன்னா அவங்க கோச்சிக்குவாங்க. " என்றாள்.
"இல்லை ஹிபா, உனக்கு நான் சொல்லுறது புரியாது. இந்தப் பறவைங்க எவ்வளவு கதைகள் பேசுவது தெரியுமா? ரொம்ப நீண்ட தொலைவில இருக்கிற இடங்களை பற்றி எல்லாம் அது சொல்லுது. சில பறவைங்க ஆயிரக்கணக்கான மைல் பறந்து இங்க வந்திருக்குது. ஏன் தெரியுமா? அந்தப் பறவைகளுக்கு தான் மைக்ரேட்டரி, புலம் பெயர்ந்த பறவைகள் அப்படின்னு பெயர். ஏன் இவ்வளவு தூரம் அதுங்க பறந்து வரணும்? காரணம் இருக்குது. புதிய இடம் புதிய மக்கள பாக்குறதுக்காக. ஆனா நாம, பல வருஷமா ஒரே இடத்துல உட்கார்ந்துகிட்டு ஒரே வேலைய பாத்துக்கிட்டு முன்னேற்றமே இல்லாமல் இருக்கோம் "
"அஸ்மா நீ புதுசு புதுசா என்னென்னவோ பேசுவ. வாப்பா உன்ன ரொம்ப திட்டுவாரு " என்றாள் ஹிபா.
"ஆமாம் எனக்கு தெரியும். பறவைங்க பேசுமா? அப்படின்னு தான் வாப்பா கேட்பாரு. "
முபாரக் மகனுக்கு புதிய பொம்மைகள் வாங்கிக் கொடுப்பதும் நல்ல சட்டைகள் அணிவித்து அழகு பார்ப்பதுமாக இருந்தான். பெண் குழந்தைகள் நால்வரும் தம்பியையே ஏக்கத்துடன் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாட்கள் வேகமாக கழிந்து கொண்டிருந்தன. பெண் குழந்தைகள் நால்வரும் பட்டினி கிடப்பதும் அணிந்து கொள்ள நல்ல ஆடை இன்றி தவிப்பதும் ஆனால் தம்பி இக்பால் மட்டும் பால் சோறும் பட்டாடையுமாக ஜொலித்துக் கொண்டிருந்தான். நூருலுக்கும் இந்த பாரபட்சம் துளிக்கூட பிடிக்கவில்லை.
ஒரு நாள் அஸ்மா தாயின் அருகில் வந்த அமர்ந்தாள். நூருல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். அஸ்மா அன்னையிடம் மெல்ல கூறினாள்.
"உம்மா, பறவைகள் என்னை தங்களுடன் பறந்து வரும் படி கூறுகின்றன. வருடா வருடம் அவை என்னிடம் கேட்கின்றன. ஆனால் நான் தான் பயந்து கொண்டு செல்லவில்லை. பறவைகள் என்னிடம் என்ன சொல்கின்றன தெரியுமா? மேகங்கள் அவைகளுக்கு வழிகாட்டுகின்றன. நிலவு பாட்டுப் பாடி பறவைகளை தூங்கச் செய்கின்றது. பறந்து பறந்து பறவைகளின் இறக்கைகள் தளர்ச்சி அடையும் பொழுது காற்றே அவைகளை தூக்கிச் செல்கின்றன. ரொம்ப இருட்டாகி போய்விட்டால் சூரியன் பறவைகளுக்கு வழிகாட்டுகின்றான். "
நூருல் மகளை இழுத்து அணைத்து முத்தமிட்டாள். மகளின் மெலிந்த தேகம் நூருலுக்கு வேதனையை தந்தாலும் இனம் தெரியாத புத்துணர்ச்சி அவள் உடலில் பரவியது.
நூருலின் உள்ளம் ஆர்ப்பரித்தது. மகளின் வார்த்தைகள் அவளுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. நூருலின் மறந்து போன மறைந்து போன ஓவியத் திறமைகள் மீண்டும் மனதில் கிளர்ந்து எழுந்தது. தூரிகை அவளை வா வா என்று அழைப்பது போல் இருந்தது. அவள் ஓர் தீர்மானத்துடன் பெண் குழந்தைகள் நால்வரையும் அணைத்துக் கொண்டு படுத்தாள்.
மறுநாள் காலை எழுந்தவுடன் மூன்று வயது மகனுடன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவன் அருகில் சென்றாள். மெல்ல கூறினாள்.
"என்னோட ட்ராயிங் டீச்சர் மெஹமூது ஐயா வந்திருந்தாரு. ஊருல பள்ளிக்கூடத்துல டிராயிங் டீச்சர் வேலை காலியா இருக்குதாம். வாங்கி தரேன்னு சொன்னாரு. நம்ம பொண்ணுங்களையும் அங்கேயே படிக்க வைக்கலாம். தங்கறத்துக்கு இடமும் கொடுப்பாங்களாம். பொண்ணுங்க படிப்ப நிறுத்தி மூணு வருஷம் ஆச்சு. எனக்குத்தான் கண்பார்வை சரியா இல்லாததுனால நல்லா நிறைய படிக்க முடியல. இவங்களாவது படிக்கட்டும். நீங்க பையன பார்த்துக்கோங்க. லீவு விடுறப்போ நானும் ஊருக்கு வாரேன். இக்பாலையும் அடுத்த வருஷம் அந்த பள்ளிக்கூடத்துல சேர்த்து விடலாம். " நீளமாக பேசி முடித்துவிட்டு கணவனின் பதிலையோ அனுமதியையோ எதிர்பார்க்காமல் உள்ளே சென்று துணிமணிகளை அடுக்குவதில் முனைந்தாள் நூருல். ஹிபாவும் அஸ்மாவும் அன்னைக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். பெண்களும் மனைவியும் கிளம்பிப் போவதை பார்த்துக்கொண்டே நின்றான் முபாரக். ஏதேதோ சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வெளியில் வராமல் அவனுக்குள்ளேயே உறைந்தன. முபாரக்கின் மனப்பூட்டுக்கள் சாவி இல்லாமலேயே திறந்து கொண்டன.
"ஆண்டவன் உங்களுக்கு எப்பொழுதும் துணை இருப்பான். " மெல்லிய குரலில் கூறி மனைவியின் கையை அழுத்தி விடை கொடுத்தான் முபாரக்.
அஸ்மா கூறினாள். "உம்மா நாம் மேலே மேலே பறப்போம். வானம் தான் எல்லை இல்லயா? "
"ஆமாம் கண்ணே " நான்கு பெண்கள் புடை சூழ கம்பீரமாக நடந்து சென்றாள் நூருல்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்