logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Manjula

சிறுகதை வரிசை எண் # 95


மரக்கட்டை “என்னடா சதீஷ் இது கழுத்தெல்லாம் சிவப்பா இருக்கு? ஏதாவது சருமப் பிரச்சனையா?” என்றான் ராஜு. “சீ… நேத்து ராத்திரி பூஜாவோட ஒரே மஜா… எல்லாம் எச்ச தழும்பு!” “மச்சக்காரன் டா நீ! நாங்க எல்லாம் ஒரே பொண்டாட்டி, குடும்பம், குழந்தைகள்னு மாட்டிட்டு இருக்கோம்… நீ தினம் ஒரு பொண்டாட்டின்னு ஜாலியா இருக்க …” “என்ன செந்தில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று செந்திலைப் பார்த்து வினவினான் சதீஷ். “ ஃபிஷ் ஃப்ரை,” என்று டப்பாவை திறந்து வைத்தான் செந்தில். “ ஆஹா! நான் எங்க மச்சக்காரன், செந்தில் தான் அது! இப்படி ருசியா தினமும் சமைச்சு தர பொண்டாட்டி இருந்தா… அதுவும் ஆபீஸ்ல போய் கை நிறைய சம்பாதிக்கறாங்க வேற… இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா நானும் கல்யாணம் பண்ணிக்க தயார்!” என்று சொல்லி சிரித்தான் சதீஷ். இவ்வாறு கல்லூரி மாணவர்கள் மாதிரி ஆபீஸில் வேலை பார்க்கும் நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களிடத்தில் தனது அந்தரங்கத்தை பகிர செந்திலுக்கு மனம் இல்லை. “விஜய் நாளைக்கு ஸ்கூல்ல டிரிப் போறான். பூரி மசாலா தான் வேணுமாம். அதுவும் ஒரு பத்து பேர் சாப்பிடற அளவுக்கு வேணுமாம். காலையில் 4 மணிக்கு எழுந்தால் தான் சரியா இருக்கும்,” என்று பெருமூச்சு விட்டபடி படுக்கையில் அமர்ந்தாள் சீதா. செந்திலும் பெருமூச்சு தான் விட்டுக் கொண்டிருந்தான், இணையத்தில் கதாநாயகிகளின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து. “லைட்டை ஆஃப் பண்ணட்டுமா செந்தில்?” சரி என்பது போல தலையை அசைத்த செந்தில், மடிக்கணினியை மூடி பையில் வைத்தான். “உங்க நாள் எப்படி போச்சு? ஃபிஷ் ஃப்ரை நல்லா இருந்துச்சா?” “ஃபிஷ் ஃப்ரை பத்தி பேசுற நேரமா இது?” என்றபடி சீதாவை அணைத்தான் செந்தில். “சாரி செந்தில்! காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்… நிறைய வேலை இருக்கு… இன்னைக்கு வேண்டாம் ப்ளீஸ்!” என்று அவன் பிடியிலிருந்து விடுபட்டு கண்ணை அயர்ந்தாள் சீதா. செந்திலுக்கு தூக்கம் வரவில்லை. தூங்கச் செல்லும் மனைவியை கட்டாயப்படுத்தும் அளவிற்கு செந்தில் மூர்க்கனும் அல்ல, அதே சமயம் சீதா பல ஆண்டுகளாக அவனை ஏதோ காரணம் காட்டி நெருங்க விடாமல் இருப்பதை புரிந்து கொள்ளாத அளவிற்கு முட்டாளும் அல்ல. நாற்பது வயதை கூட எட்டாத செந்தில், மனைவியின் நெருக்கத்திற்காக ஏங்கினான். இதைப்பற்றி வெளியில் பேசுவதற்கும் செந்திலுக்கு தயக்கமாக இருந்தது. இதுபோன்ற அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. மற்றவர் கண்களுக்கு சீதாவும், செந்திலும், இனிதே இல்லறம் நடத்துவது போலத்தான் தெரியும், இன்னும் சொல்லப்போனால் சீதா, செந்தில் மற்றும் அவர்களது மகனிடம் மிகவும் அன்பாக இருந்தாள். செந்திலின் சொந்தக்காரர்கள், இவ்வளவு ஏன்? செந்திலின் அப்பா அம்மாவிற்கு கூட சீதாவிடம் எந்த குறையும் இருக்கவில்லை. இந்த காரணங்களால் செந்தில் சிறுகச் சிறுக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான். தன்னைச் சுற்றி உயர்ந்த சுவர்களை எழுப்பிக் கொண்டு தனது எண்ணங்களை, தாபங்களை, ஏமாற்றங்களை, வெளியில் தெரியாதபடி மறைத்துக் கொண்டான். சீதா, செந்திலிடம் சில மாற்றங்களை கவனித்தாலும், அதனைப் பெரிதுபடுத்தாமல் இருந்தாள். ஏனெனில், அவளது அந்தரங்கத்தை பாதுகாப்பது அவசியம் என்று அவள் நினைத்தாள். சீதா எதையும் திட்டம் போட்டு செய்யக்கூடியவள். பொதுவாக பெண்கள் அடுத்த நாளிற்கு சமைக்க வேண்டியதையும், உடுத்த வேண்டியதையும் திட்டமிட்டால், சீதா ஒரு வாரத்திற்கு திட்டமிடுவாள். அவளது வாழ்க்கையை ஒரு அட்டவணை போட்டு திட்டமிட்டு வாழ்பவள். வீடு சுத்தம் செய்வதிலிருந்து, வார இறுதியில் துணி துவைப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, என்று எல்லாம் திட்டத்தினுள் வந்து விடும். அவர்கள் வீட்டில் புகைப்பட சட்டம் துவங்கி, சமையலறை வரை எதிலும் ஒரு பிசகு இருக்காது. சீதாவின் இந்த குணம் கூட செந்திலுக்கு எரிச்சல் ஊட்டும். எல்லாவற்றிலும் அட்டவணை போட்டு, தன்னையே வருத்திக்கொண்டு, வாழவே மறந்துவிடும் சீதாவை செந்திலால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அவளிடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று மட்டும் செந்தில் சந்தேகித்தான். ஒரு நாள் வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு, சீதாவின் அலமாரியை தேட ஆரம்பித்தான். சீதாவின் அலமாரி என்பதால் தேடுவதற்கு அதில் சிரமம் இருக்கவில்லை செந்திலுக்கு. எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கீழ் செல்ஃபில் ஒரு ஷூ டப்பா ஒன்று இருந்தது, அதனை எடுத்துப் பார்த்தான். சீதாவின் கல்லூரி நாட்களின் நினைவலைகளாக சிறு சிறு பொக்கிஷங்கள் அதில் இருந்தன. ஒரு போட்டோ ஆல்பமும் அந்த டப்பாவில் அடக்கம். அதில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்தான் செந்தில். “சீதா முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்! அதில் பாதி… இல்லை இப்போது இருக்கும் சீதாவிற்கும் அந்த சீதாவிற்கும் சம்பந்தமே இல்லை,” என்று தோன்றியது அவனுக்கு. “என்னோட வாழ பிடிக்கலையா உனக்கு?” என்று ஒரு எண்ணம் அவன் மனதில் துளிர்விட்டது. “என்னடா விஜய் ஹோம் ஒர்க் முடிச்சிட்டியா?” என்று அலுவலகத்திலிருந்து வந்த சீதா மகனை விசாரித்தாள். “ முடிச்சுட்டேன் மா, கீழ போய் விளையாட போறேன். அப்பாவுக்கு ஜுரம் போல, தூங்கிட்டே இருக்காரு… எவ்வளவோ எழுப்பிட்டேன்,” என்றபடி விஜய் கால்பந்தை எடுத்துக்கொண்டு விளையாட விரைந்தான். “ செந்தில்! மணி ஏழாகுது… இப்ப என்ன தூக்கம்… எழுந்திரிங்க!” செந்தில் எந்த அசைவும் இல்லாமல் இருக்க, அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். சில்லிட்டு இருந்தது. கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் அவளது காலேஜ் ஆல்பம் . “ஒரு வேளை நானும் சுந்தரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்துட்டாரா?” என்ற எண்ணம் வந்த உடனேயே, மாத்திரை டப்பாவை தேட ஆரம்பித்தாள் சீதா. சில மாதங்களாக தூக்கமின்மை காரணமாக செந்தில் தூக்க மாத்திரை வாங்கி போடுவதை கவனித்து இருந்தாள். அவன் வழக்கமாக வைக்கும் இடத்தில் மாத்திரை இல்லை. குப்பைத் தொட்டியை தேடினாள், அதில் ஒரு காலி ஸ்ட்ரிப்பை கண்டவுடன் ஆம்புலன்ஸை அழைத்தாள். தனது குடியிருப்பில் அவளது நெருங்கிய தோழியிடம் விஜய்யை பார்த்துக் கொள்ளும்படி கூறி மருத்துவமனைக்கு சென்றாள். நல்ல வேளையாக மாத்திரை ஸ்டிரிப்பில் நான்கு மாத்திரைகளுக்கு மேல் இல்லாததால் பெரிய பாதிப்பு எதுவும் இன்றி சில மணி நேரத்தில் கண் திறந்தான் செந்தில். தற்கொலை முயற்சி என்பதால் மனோதத்துவ மருத்துவர் சுஜாதா செந்திலை சந்தித்தார். “ஹலோ செந்தில், எப்படி இருக்கீங்க? நாம கொஞ்சம் பேசலாமா?” என்று செந்தில் அருகே பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார் சுஜாதா. பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தான் செந்தில். “செந்தில், டாக்டர் கிட்ட கூட பேச மாட்டீங்களா? அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சனை? 10 வயசுல ஒரு பையனை வச்சுக்கிட்டு… நினைக்கவே பைத்தியக்காரத்தனமா இருக்கு உங்க செயல்! என் காலேஜ் ஆல்பத்துல சுந்தரோட என்னை பார்த்து தானே இந்த முடிவு? என்கிட்ட கேட்டா நான் சொல்ல போறேன். அவன் என்னோட ஸ்டடி பார்ட்னர். சேர்ந்து ஒரு செமினார் பிரசன்ட் பண்ணினோம், அப்ப எடுத்த படம் அது.” என்று சரமாரியாக கொட்டித் தீர்த்தாள் சீதா. இருவரின் முகத்தையும் பார்த்த சுஜாதா, “ மேடம், நீங்க கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க . நான் பேசிட்டு உங்கள கூப்பிடறேன்.” என்றார். “போக முடியாது! அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை? மனசுக்குள்ளேயே பொத்தி… பொத்தி… எங்க கல்யாணத்தை பத்தி வெளியில எல்லாரும் எவ்வளவு உயர்வா பேசுறாங்க தெரியுமா? இவரு என்னடான்னா…” செந்தில், சீதாவின் ஆர்பாட்டத்திற்கு செவி சாய்க்காமல் ஜன்னல் வழியாக சாலைப் போக்குவரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். “ரிலாக்ஸ் மேடம்! முக்கால்வாசி திருமணங்களில் பிரச்சனைகள் வெளியில தெரிவதில்ல. இவருக்கும் திருமணம் தான் பிரச்சனையான்னு கூட இன்னும் தெரியல… நீங்க போய் ஒரு டிபன் சாப்பிட்டு, லாங் வாக் ஒண்ணு போயிட்டு வாங்க! உங்ககிட்ட அப்புறமா நான் கண்டிப்பா பேசுறேன்,” என்று கூறி சீதாவை அனுப்பி வைத்தார் சுஜாதா. சுஜாதாவின் கனிவான முகம், குரல் , உடல் மொழி, மற்றும் பக்குவம், செந்திலை ஈர்த்தது. முதல் முறையாக தன்னை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனையை பகிர்ந்தான் செந்தில். “செந்தில், பொதுவா பெண்களுக்கு உடலுறவு மேல அதிகமா ஈடுபாடு இல்லாததற்கு அவங்க ஹார்மோன்ஸ் காரணமாக இருக்கலாம். இல்ல அவங்கள உடலுறவு குறித்த ஏதோ ஒரு அனுபவம் பாதிச்சு இருக்கலாம், அதனால, அவங்க தயங்கலாம். அவங்ககிட்டயும் பேசி, உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து கவுன்சிலிங் கொடுத்தா என்ன பிரச்சனைன்னு புரிஞ்சுக்க முடியும், தீர்வும் காண முடியும். ஆனா, முதல்ல நீங்க வெளிப்படையா உங்க விருப்பங்கள, உணர்வுகள, சீதா கிட்ட பகிர ஆரம்பிக்கணும். மன நோய்க்கு ஆலோசனை என்பது ஓரிரு நாட்கள்ல முடியுற விஷயம் இல்ல. அது ஒரு நீண்ட பயணம். பொறுமை மற்றும் நம்பிக்கை மிகவும் முக்கியம்.” என்றார் சுஜாதா. *** “சீதா, நீங்க கடைசியா செந்திலோட உடலுறவு வெச்சுகிட்டு எவ்வளவு காலம் ஆச்சு?” “டாக்டர்… இது என்ன கேள்வி… இது எங்க பர்சனல் விஷயம். அதை பத்தி உங்ககிட்ட எப்படி பகிர்ந்துக்க முடியும்?” “ நா சொல்லட்டுமா? செப்டம்பர் 2015 ல, உங்க திருமணநாள் அன்னைக்கு, எட்டு வருடங்களுக்கு முன்னால… அப்பவும் நீங்க மரக்கட்டை போல எந்த உணர்ச்சியும் இல்லாம இருந்ததா செந்தில் சொல்றாரு.” “வாட்! செந்திலுக்கு இதுதான் பிரச்சினையா? என்னால நம்பவே முடியல… நானே கேட்கிறேன் செந்தில் கிட்ட!” “அமைதியா இருங்க சீதா, செந்திலுக்கு மட்டும் இல்ல… இது மாதிரி யாருக்கு நடந்திருந்தாலும் இதைவிட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பாங்க!” “ஆனால் டாக்டர், எங்களுக்கு தான் ஒரு பையன் இருக்கானே… அவன் போறாதா எங்க உறவுக்கு சாட்சியா?” “படிச்ச பொண்ணு நீங்க சீதா, உங்களுக்கு தெரியாதது இல்ல, குழந்தையை தாண்டி தாம்பத்தியம் மிகப் பெரியது. அன்பு, பாசம், காதல், அரவணைப்பு, அன்னியோன்யம், என்று அதுக்கு நிறைய கிளைகள் இருக்கு . உங்களுடைய நடவடிக்கை இயல்பானது இல்ல. எதனால் உங்களுக்கு உடலுறவுல இவ்வளவு தயக்கம் என்பதற்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். அத நீங்க மனசுக்குள்ளேயே வச்சு புதைச்சுக்கிட்டா… ஐ அம் சாரி! உங்க பிரச்சனைக்கு சுமூகமா தீர்வு காண முடியாது.” “ எனக்கு... எனக்கு… எந்த காரணமும் இருப்பதா நினைவுல இல்ல டாக்டர்…” “நான் நம்ப மாட்டேன்… உங்க ஆழ் மனசுல அந்த எண்ணங்கள் கண்டிப்பா புதைந்து இருக்கும். நல்லா யோசிச்சு பாருங்க… உங்களுக்காக இல்லை என்றாலும் உங்க குடும்பத்துக்காக நீங்க அந்த நினைவுகளை திரும்ப ஞாபகப்படுத்திக்கணும். எல்லாருக்கும் ஒரு மறக்க வேண்டிய சம்பவம் வாழ்க்கையில இருக்க தான் செய்யுது. ஆனா அந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பை அவங்களே ஏத்துக்கணும்னு அவசியம் இல்ல. அந்த காலக்கட்டத்துல, சூழ்நிலை காரணமா, அவங்க அறியாமை காரணமா அவங்களுடைய செயலுக்கு அவங்க தன்னைத் தானே இப்போ தண்டிச்சுக்கணும்னு அவசியம் இல்ல . நான் உங்கள கண்டிப்பா எடை போட மாட்டேன்… யோசிச்சு சொல்லுங்க…” சீதா மெளனம் காத்தாள்… “ அதை பகிர நான் இன்னும் தயாரா இல்ல டாக்டர்… என் கடந்த காலம் என்னோட வாழ்கையில இந்த அளவுக்கு குறுக்கிடும்னு நான் எதிர்பார்க்கல… ஐ நீட் சம் டைம்.” *** “சீதா என்ன இவ்வளவு லேட்டு ஆபீஸ்ல இருந்து வர?” என்று அதட்டலாக வரவேற்று அவளை இறுக்க அணைத்தார் சீதாவின் மாமா கண்ணன். சீதா வியப்புடன் தனது அம்மாவின் முகத்தை பார்த்தாள். “கண்ணன் காலையில கால் பண்ணினான். சென்னையில, சீதா வீட்டுல தான் இருக்கேன் என்று சொன்ன உடனே கிளம்பி வந்துட்டான்.” சீதா அமைதியாக சமையலறையில் தஞ்சம் புகுந்தாள். வெளியில் தான் அமைதி, அவளது மனதில் ஒரு எரிமலையை புகைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகள் எல்லாம் வெள்ளம் போல கட்டுக்கடங்காமல் பாய்ந்தது அவள் மனதில். மாமா கிளம்பியவுடன், “ அம்மா! எதுக்கு அந்த ஆளை கூப்பிட்ட? உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா?” என்று அம்மாவிடம முறையிட்டாள் சீதா. “என்னடி வாய் நீளுது? அவன் என் தம்பி… என்ன பார்க்க வந்தான். உனக்காக ரெண்டு மாசமா சென்னையில உன் வீட்டுல வந்து உக்கார்ந்துகிட்டு இருக்கேன், நன்றி இருக்கா ஒனக்கு? ஒன் புருஷனும் நீயும் ஓயாத ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வறீங்க? எனக்கு என்ன ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா… மாப்பிள்ளைக்கு ஒண்ணும் அப்பெண்டிக்ஸ் இல்ல, உனக்கு தான் சித்த பிரமை… முன்ன வந்தா மாதிரி… கண்டத பேசிட்டு, பார்க்கற ஆளுங்கள எல்லாம் குத்தம் சொல்லிட்டு…பைத்தியக்காரி!” என்று அதட்டினாள் சீதாவின் அம்மா. சீதா கோபத்தின் மிகுதியில் பேச முடியாமல் நிலைகுலைந்தாள். அன்று இரவு, செந்தில் அருகே வந்து அமர்ந்த சீதா செந்திலைப் பார்த்து, “செந்தில் உங்களோடு இருக்கும் போது தான் நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்… தயவு செய்து இன்னொரு முறை மட்டும் என்ன விட்டுட்டு போக முயற்சி செய்யாதீங்க…” என்று பதறினாள். பல ஆண்டுகள் கழித்து தனது பலவீனத்தை வெளிக்காட்டிய சீதாவைக் கண்டு வியப்பாக இருந்தது செந்திலுக்கு. “சீதா, நான் செஞ்ச காரியத்த நினைச்சு எனக்கு பெருமையா இல்ல, ஆனா… ஆனா… அதுக்கு உன்னுடைய நடவடிக்கையும் ஒரு காரணம். ஆமா, நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு இனியாவது நிம்மதியா வாழனும்முன்னா , நீ உன் மனசுல உருத்துற விஷயத்த பேசி தான் ஆகணும். என் கிட்ட கூட வேணாம், சுஜாதா மேடம் கிட்ட சொல்லு. அவங்க உன்ன கைடு பண்ணுவாங்க.” என்றான் செந்தில். ஒரு வாரம் கழித்து சீதா மீண்டும் சுஜாதவை சந்தித்தாள். இம்முறை செந்திலையும் அழைத்துச் சென்றாள். “செந்தில், நான் சொல்லப்போற விஷயங்கள கேட்டு நீங்க என்ன வெறுக்கக் கூடாது… போனவாரம் மாமா வந்திருந்தாரு வீட்டுக்கு… அவர் வருகை இத்தனை நாளா நான் மறக்க முயன்ற எண்ணங்கள, பயத்த, கோபத்த, எல்லாத்தயும் மீண்டும் வெளிக்கொண்டு வந்தது. நான் சின்ன வயசுல இருந்த போது எங்க அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையா இருந்தார். அம்மா அப்பாவோட உறவு சரி கிடையாது. தினமும் சண்டை… சத்தம்… எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்காது. எனக்கு அப்பாவோட அன்பு எப்படி இருக்கும்னே தெரியாது. இந்த நிலையில மாமா கொஞ்ச வருஷம் எங்க வீட்ல தங்கி வேலை பார்த்துட்டு இருந்தாரு. அந்த சமயம் எங்க வீட்ல நிறைய மாற்றங்கள்… அப்பாவ போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்துல சேர்த்து விட்டாரு மாமா. எங்களுக்கும் பணரீதியா அவர் நிறைய உதவினாரு. அம்மா கூட ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. என் மேலயும் அன்பா தான் இருந்தாரு… முதல்ல எனக்கு அது ரொம்ப பிடிச்சு இருந்தது. அப்பா பாசத்துக்கு ஏங்கின எனக்கு அவரைப் போல வேறு ஒரு ஆணோட அரவணைப்பு சந்தோஷத்தை கொடுத்தது. நாளடைவில் அந்த அரவணைப்பு பாலியல் சீண்டல்களா மாறிடுச்சு. எனக்கு அம்மா கிட்ட இத பத்தி பேச பயமா இருந்தது. வீட்டுக்கே போகாம கோவில்ல, ஃப்ரெண்ட்ஸ் வீட்ல பல நாள் இருந்திருக்கேன். அந்த நாட்கள் எல்லாம் … நினைச்சுப் பார்க்கவே…” என்று பேச முடியாமல் திணறினாள்…. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தாள், “ஒரு நாள், என் பயத்தை மீறி, அம்மா கிட்ட மாமாவை பத்தி சொன்ன போது… அவங்க சிரிச்சாங்க. நான் சொன்னதை அவங்க நம்பல. எனக்கு பயங்கர கோபம். ஆனா, அதுக்குள்ள அப்பா வந்துட்டாரு, மாமாவுக்கும் வேற இடத்துக்கு மாத்தல் ஆயிடுச்சு. அம்மா எல்லாத்தையும் மறந்துட்டாங்க. ஆனா, எனக்கு அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் போகல. என்னையே நான் வெறுக்கறேன் செந்தில். எங்க அம்மாவ இன்னுமே வெறுக்கறேன்… என்ன செய்ய ? அம்மாவா போயிட்டாங்க… முழுசா மன்னிக்கவும் முடியல… அவங்க என்ன பாதுகாக்க தவறினத ஏற்கவும் முடியல… அவங்க இன்னும் மாமாவோட உறவுல இருப்பதை ஜீரணிக்கவே முடியல… இந்த கோவம் மற்றும் இயலாமை என்னை எல்லா உறவுகள் கிட்ட இருந்தும் பிரிச்சிடுச்சு. செந்தில் என்னோட பிரச்சனையினால நிறைய பாதிக்கப்பட்டது நீங்க தான். இந்தத் திருமணம் எனக்கு பாதுகாப்பை கொடுத்தது… அத தக்க வச்சிக்க என்னையே நான் வருத்திக்கிட்டேன்… ஆனா, சாரி செந்தில், என்னால செக்ஸில் ஈடுபாடோட இருக்க முடியுமான்னு தெரியல. காதல், காமம், அன்பு எனக்கு சரியா விளங்கவே மாட்டேங்குது. யாரையும் நெருங்க விட பயமா இருக்கு. நீங்க நினைக்குற மாதிரி நான் மரக்கட்டையாவே மாறிட்டேன்னு நினைக்கிறேன்,” என்று கூறி பல வருடங்களாக தேக்கி வைத்திருந்த கண்ணீரை வடித்தாள் சீதா. *** “செந்தில்… எப்படி இருக்கீங்க?” “சுஜாதா மேடம்… வாட் ஏ பிளசண்ட் சர்ப்ரைஸ். நான் ரொம்ப நல்லா இருக்கேன் டாக்டர்.” “என் பொண்ணு கல்யாணம், அதான் நகை எடுக்க வந்தேன்.” “மனோதத்துவ டாக்டருன்னா சும்மாவா? நான் எதுக்கு நகை கடைக்கு வந்து இருக்கேன்னு கேட்காம கேட்கறீங்களே…” “ஹா.. ஹா.. ஹா.. செந்தில் நீங்க ரொம்ப தேறிட்டீங்க. சீதாவோட வாக்குமூலத்துக்கு அப்புறமா உங்க ரெண்டு பேரையும் ஆளையே காணோம். ஒரு மனோதத்துவ டாக்டரா, இல்ல ஒரு சாதாரண மனுஷியா கூட எனக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் இருக்காதா என்ன?” “எங்க 15வது திருமண நாள் நாளைக்கு வருது. அதான் சீதாவுக்கு ஒரு நெக்லஸ் வாங்கலாம்னு வந்தேன்.” “வெரி குட்! வெரி குட் சரி! சொல்லுங்க சீதாவை பற்றி… உங்களோட ரிலேஷன்ஷிப் இப்போ எப்படி இருக்கு?” “அன்னிக்கு சீதாவோட பதில் என்ன ரொம்ப பாதிச்சுது. பல கேள்விகள், யோசனைகள், என் மனசுக்குள்ள… அவளுக்கும் தான்… நாங்க எப்படி ஒரு தம்பதியா இனி எங்க வாழ்க்கையை அணுகுவது என்று ரொம்ப தடுமாறினோம். யோகா போனோம், தியானம் பண்ணினோம், சேர்ந்து சுற்றுலா போனோம், எதை தின்னா பித்தம் தெளியும் என்று எல்லாமே முயற்சி பண்ணினோம். இன்னும் சொல்லப்போனா.. விவாகரத்து கூட ஒரு தேர்வா இருந்தது எங்களுக்கு. ஆனா, சீதாவையும் எங்க மகனையும் நான் இப்ப விட்டுட்டு போனா, சீதாவோட பெற்றோருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? இந்த எண்ணம் தான் என்ன விவாகரத்து பண்ணாம தடுத்துச்சு. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா என்ன மாத்திக்கிட்டு ஒரு பஞ்சு மாதிரி சீதாவோட மன அதிர்வுகள, அவளோட பயங்கள, எல்லாத்தையும் உள்வாங்கிக்கிட்டேன். அவ மேல நிறைய அன்பு காட்டினேன். அவ வாழ்வின் எல்லா சுகங்களுக்கும், வசதிகளுக்கும் தகுதியானவ என்று நம்ப வச்சேன். நடந்த சம்பவத்துக்கு அவ எந்த விதத்துலையும் பொறுப்பு இல்லன்னு புரிய வெச்சேன். இன்னிக்கு நாங்க பழசை மறந்து, இல்ல அதை கடந்து நிம்மதியா, சந்தோஷமா, இருக்கோம்… அன்பை விட சிறந்த மருந்து இருக்கா டாக்டர்?”

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.