ஜெயா நவி
சிறுகதை வரிசை எண்
# 94
பின்னலாடை
. -------------------------
இருள் விலகாத அதிகாலை நான்கு மணி. பற்கள் தந்தியடிக்க விரல்கள் தாளம் போட ஒரு இசைக் கச்சேரி நடத்தும் அளவிற்கு குளிர் உடம்பை விறைத்துப் போகச் செய்து கொண்டிருந்தது மார்கழி மாதத்துப் பனி. மெல்லிய குளிர்காற்று மேனி தழுவி சில்லிட வைத்தது.
திருப்பூர் நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் பஞ்சாலை அது. கிராமங்களிலிருந்தும், சிறு நகர்புறங்களில் இருந்தும் தங்கள் வீட்டின் வயது வந்த பெண்களை மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் ஆலைக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
தங்கும் இடம், மூன்று வேளை சாப்பாடு, மாதச் சம்பளம், மூன்று வருட முடிவில் திருமண உதவித் தொகையாக ரொக்கப் பணம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
அந்த ஆலையின் பெண்கள் தங்கும் விடுதி அது. அந்த விடிகாலை நேரத்திலும் பரபரப்பாக இருந்தது. ஆறு மணி முதல் ஷிப்ட்டிற்கு செல்பவர்கள் எழுந்து ஆலைக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர். இருக்கும் ஐந்து குளியலறை கழிவறைகளின் முன்பு முண்டியடித்துக் கொண்டிருந்தனர். வரிசையில் நிற்குமாறு ஒருத்தி மிரட்டிக் கொண்டிருந்தாள்.
"ஏய் தண்ணி நின்னுடுச்சு டி
வாச்மேன் ஐயாவை மோட்டார் போட்டு விடச் சொல்லுங்கடி யாராவது"? என்று பாத்ரூமிற்குள் இருந்தவாறு கத்தினாள் ஒருத்தி.
வரிசையில் நின்றிருந்தவர்களில் ஒருவள் வேகமாக போய் "ஐயா மோட்டார் போட்டு விடுங்க" என்று சொல்லிவிட்டு வந்தாள்.
வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலோர் பதினைந்து வயதில் இருந்து இருபது வயதிற்குள் இருந்தனர்.
அடித்துப் பிடித்து குளித்துவிட்டு வந்த மல்லிகா இன்னும் எழும்பாமல் படுக்கையில் இருக்கும் ஆனந்தியை பார்த்து "இன்னுமா டி தூங்குற எந்திருச்சி போயி குளிச்சிட்டு வாடி " என்றாள். எதுவும் பேசாமல் போர்வையை மட்டும் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
" ஏய் டைம் ஆச்சிடி லேட்டா போனா அந்த சூப்பர்வைசர் வேற மூஞ்சியக் காட்டுவான். ஒழுங்கா எந்திரி" என்று மல்லிகா படபடத்தாள் .
போர்வைக்குள் உடம்பு குலுங்குவதைப் பார்த்து பதறியவாறு "அழுகுறியாடி" என்றாள்.
எந்த சத்தமும் வராமல் இருக்கவும் பலவந்தமாய் இந்த பக்கம் திருப்பினாள்.
அழுது வீங்கிய கண்களோடு எழுந்த அமர்ந்தாள் ஆனந்தி.
"என்னாச்சு டி வீட்டு ஞாபகம் வந்துருச்சா" எனக் கேட்டாள்.
ஆமாம் எனத் தலையாட்டினாள் ஆனந்தி.
ஆனந்தி அந்த மில்லிற்கு வேலைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. தன் வீட்டின் வறுமைச்சூழல் தெரிந்ததால் தன் அம்மாவின் முடிவிற்கு கட்டுப்பட்டு இங்கு வேலைக்கு வந்திருந்தாள்.
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் வறண்ட கரிசல் மண் கிராமத்தில் ஒரு தங்கை ஒரு தம்பியுடன் பிறந்தவள் ஆனந்தி. அம்மாவும் அப்பாவும் விவசாயக் கூலிகள்.
தன் மூன்று பிள்ளைகளையும் ஊரில் உள்ள ஆரம்ப பாடசாலையில் படிக்க அனுப்பி இருந்தார்கள். ஆனந்தியின் அப்பா கிணறு வெட்டும் வேலைக்குச் சென்ற போது மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி இறந்துவிட்டார்.
நிலைதடுமாறிய ஆனந்தியின் குடும்பத்திற்கு ஆபத்பாந்தவனாக வந்தார் திருப்பூரில் இருக்கும் ஒரு பாஞ்சாலையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துவிடும் ஏஜெண்ட் மாணிக்கம்.
ஆனந்தியின் அம்மா ஈஸ்வரியிடம் பேசினார்.
"தங்கச்சி மச்சான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுற. நா திருப்பூர் மில்லுலதான் இருக்கேன். நா கூட்டிட்டுப் போய் மருமவள வேலைக்குச் சேத்துவுடுறேன். நல்ல சம்பளம், சாப்பாடு, தங்குறதுக்கு இடம், மூனு வருஷம் முடிஞ்சதும் கையில ஐம்பதாயிரம் ரூபா சுளையா கிடைக்கும். அத வச்சி கையில காதில ஏதாவது போட்டு நல்ல பையனா பாத்து கட்டிக் குடுத்திடலாம். உன் பாரம் கொஞ்சம் இறங்குமுல்ல தாயீ. நீ காட்டு வேலைக்கு போயி சோத்துக்குப் பாப்பயா இல்ல இதுகள கரையேத்துவயா? அண்ணன நம்பி அனுப்பு தாயீ. நா பத்தரமா பாத்துக்குறேன் புள்ளய. இந்தா இந்த ஐயாயிரத்த அட்வான்சா வச்சிக்கோ. புள்ளைங்களுக்கு எதாவது நல்லது பொல்லது செஞ்சி குடுத்து நல்ல துணிமணி எடுத்துக் குடு" என்று பணத்தை ஈஸ்வரியின் கையில் திணித்தான் மாணிக்கம்.
மாணிக்கத்தின் பேச்சில் கரைந்தாள் ஈஸ்வரி. அவன் கூறுவதும் சரியாகத்தான் தெரிந்தது அவளுக்கு. ஆனந்தியை மில்லுக்கு வேலைக்கு அனுப்ப சம்மதித்தாள்.
பத்தாம் வகுப்பு முழு ஆண்டு பரிட்சை எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தாள் ஆனந்தி. மாணிக்கம் சொன்னதை அம்மா சொல்லவும் முதலில் போக மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
"உங்கப்பன் உங்களைப் பெத்துப் போட்டுட்டு போய் சேந்துட்டான். நாங்கிடந்து அல்லாடிட்டு கிடக்கிறேன் இங்கன.
தனியா பொம்பள நா எதுக்குன்னு பாக்குறது என்று அழுது மூக்கைச் சீந்தினாள்.
"அம்மா நா படிச்சி வேலைக்குப் போயி உன்னையையும், தம்பி தங்கச்சிகளையும் நல்லா பாத்துக்கிறேன்ம்மா"
"ஆமாண்டி நீயும் நாளைக்குத்தான் வேலைக்குப் போயிறப்போற. சோத்துக்கே வழியில்லங்கிறேன். உன்னப் படிக்க வைக்க காசுக்கு நா எங்க போக? பேசுறா பேச்சு வெட்டித்தனமா.
"அம்மா நா படிச்சி டீச்சராகனும்மா"
"எனக்கும் உங்கள நல்லா படிக்க வைச்சி நல்ல வேலைக்கு அனுப்பனும்ன்னுதான் ஆசை. ஆனா என்ன பன்றது "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கன்னுல"
நம்ம நிலமை இருக்கு. நீ இந்த வேலைக்கு போனா சம்பளமும் கிடைக்கும். உனக்கு நல்ல சாப்பாடும் கிடைக்கும் . மூணு வருஷம் முடிஞ்சா வர்ற பணத்துல உன்னைய கட்டிக் குடுத்திடுவேன். வர்ற சம்பளத்தில உன் தம்பி தங்கச்சிகளை படிக்க வைக்கலாம். வீட்டுக்கு தலப்புள்ள நீதான தாயீ அவங்கள கரையேத்தனும்".
அம்மாவின் அழுகை மனதை கரைத்தது.
"சரிம்மா நா வேலைக்குப் போறேன்" என அரை மனதாக சம்மதித்து வேலைக்கு வந்திருந்தாள்.
" ஏன்டி நீ வந்தே ஒரு வாரம் தான ஆச்சி அதுக்குள்ள என்ன. கொஞ்சம் பொறு. ஒன்னாந்தேதி வாக்குல சம்பளம் வாங்குறதுக்காக அம்மா வருவாங்கல்ல அப்பப் பாத்துக்கலாம். இப்ப எந்திச்சி கிளம்புற வழியப் பாரு" என்றாள் மல்லிகா.
அவளும் ஆனந்தியின் பக்கத்து கிராமம்தான். மல்லிகாவும் ஆனந்தியும் ஒரே நாளில்தான் வேலைக்குச் சேர்ந்தார்கள். மல்லிகாவின் அம்மாவும் அப்பாவும் மனம் ஒத்துப் போகாததால் பிரிந்து வாழ்பவர்கள்.
மல்லிகாவும் அவள் தங்கையையும் மனைவியிடம் விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மல்லிகாவின் அப்பா.
மாணிக்கம் மூலமாகத்தான் மல்லிகாவும் பஞ்சாலைக்கு வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
மல்லிகாவும், ஆனந்தியும் கிளம்பி சாப்பாட்டு அறைக்கு வந்தனர். இட்லி என்ற பெயரில் கல்லு போன்றிருந்த மூன்று எண்ணங்களையும், கடலை மாவை தண்ணியாய் கரைத்துவிட்டு காய்கறிகளே கண்ணில் தென்படாத சாம்பாரையும் வேக வேகமாக அள்ளி முழுங்கிக் கொண்டார்கள். கையைக் கழுவிய வேளையில் ஆலையின் சங்கு சரியாக ஒலித்தது. தொண்டையில் விக்கி நின்ற இட்லிகளை கட கடவென தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினார்கள்.
சாப்பாட்டு அறையில் இருந்து வேகமாக மில்லிற்குள் ஓடி அங்கு இருந்த பதிவேட்டில் கையெழுத்து இட்டு விட்டு அவரவர் இடத்தில் போய் நின்று கொண்டனர்.
"நாளைக்கும் லேட்டா வரத பாத்தேன், அர நாள் சம்பளத்த கழிச்சிடுவேன் பாத்துக்கோங்க" என மிரட்டி விட்டுச் சென்றார் சூபர்வைசர் ராஜன்.
"அண்ணே நாங்க எங்க லேட்டா வந்தோம் சங்கு இப்பதான ஊதுச்சி உடனே ஓடியாந்துட்டம்ல" என்றாள் மல்லிகா.
ஆனந்தி எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவன் ஆனந்தியைப் பார்ப்பதற்காக வந்துவிட்டுதான் இப்படி சொல்லிவிட்டு பக்கத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
மல்லிகாவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்து " சரி சரி வேலையப் பாரு எப்பப் பாரு எதாவது பேசிட்டு" என்று கூறிவிட்டு விலக மனமில்லாமல் விலகினான்.
ஆனந்திக்கும் இது புரிந்துதான் இருந்தது. ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டாள். இயந்திரங்களின் சத்தம் தலைக்குள் போய் என்னவோ செய்தது. காதுகளின் சவ்வு கிழிந்திவிடும் போல் இருந்தது.
வேலைக்குப் புதிது ஆனதால் தடுமாற்றமாக இருந்தது. நேரம் ஆக ஆக நின்று கொண்டே இருந்ததில் கால் முட்டுகள் வலி எடுத்தன. எங்காவது சென்று சிறிது நேரம் உக்காரலாம் என்று நினைத்து கழிவறைப் பக்கம் சென்றாள் ஆனந்தி. அங்கு சென்று அருகே இருந்த திண்டில் அமர்ந்தபோது அக்கடா என இருந்தது. முழு உடலும் ஆசுவாசமடைந்தது.
"எவ்வளவு நேரம் இங்க உக்காந்திட்டு இருப்ப போ போ போய் வேலையைப் பாரு. நம்ம உயிரை வாங்குறதுக்கின்னே வந்துர்றாளுக கிளம்பி ஊர்ல இருந்து" என முனங்கிக் கொண்டே அங்கு அமர்ந்திருந்த பெண்களை விரட்டிக் கொண்டிருந்தாள் மேற்பார்வையிடும் பெண்ணொருத்தி.
சட்டென்று கண்களில் நீர் தளும்ப விருட்டென எழுந்து உள்ளே போகிறாள் ஆனந்தி.
வந்த இரண்டு மாதத்தில் வேலையை நன்கு கற்றுக் கொள்கிறாள். இப்போதெல்லாம்
நின்று நின்று பழகிக் கொண்டாள்.
யாரிடம் எப்படி பேசுவது என கற்றுக் கொண்டாள். வேலை செய்யும் போது சில நேரங்களில் கைகளில் அடிபட்டுவிடும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருப்பதால் பயிற்சியாளர்களாகத்தான் கருதப்படுவார்கள்.
நிரந்தர பணியாளர்களுக்கான எந்த சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அடிப்பட்டாலோ காய்ச்சலோ அங்கு ஒரு நர்ஸ் இருப்பார். அவரிடம் சென்று மாத்திரைகள் வாங்கிப் போட்டுக் கொண்டு வேலைக்குச் சென்றுவிட வேண்டும். விடுமுறையெல்லாம் கிடையாது. காயங்களும் இயந்திரங்களின் ஒலியும், அங்கிருக்கும் சாப்பாடும் சில ஆண்களின் கோணப்பார்வைகளும் பழகிவிட்டது. மல்லிகாவின் அன்பும் அரவணைப்பும் அவளை ஆறுதல் படுத்தியது.
மூன்று வருடங்கள் முடிய இன்னும் ஆறுமாதங்களே இருந்தன. ஆறுமாதம் கழித்து ஊருக்குச் சென்று அம்மாவுடைய கையால் சோறு சாப்பிடலாம். தங்கச்சியோடும் தம்பியோடும் சண்டை போடலாம். விளையாடலாம். இந்த நினைப்பு வந்ததும் மனம் லேசாகிவிடும் அப்படியே தூங்கிவிடுவாள்.
ஓர் மழைக்கால இரவு. இப்போதெல்லாம் அடிக்கடி இருமல் வந்து கொண்டே இருக்கிறது. தாங்கவே முடியாமல் அடிவயிற்றிலிருந்து புகைந்து வருகிறது. நர்ஸிடம் போய் காண்பித்தால் அவள் எல்லாவற்றிற்கும் ஒரே மாத்திரையைத்தான் கொடுப்பாள்.
இருமி இருமி தொண்டை புண்ணாகி விட்டது போலும். இருமினால் தொண்டை எரிகிறது.
நடு இரவில் கண்களில் நீர் வர இருமிக் கொண்டிருந்த ஆனந்தியைப் பார்த்து "இந்தா தண்ணீ குடிடீ" என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மல்லிகா.
வாங்கிய ஆனந்தி குடித்துக் கொண்டு இருக்கும்போதே மறுபடியும் இருமல் வந்தது.
"போதும்"
" வெந்நீ இருந்தா நல்லாருக்கும். இந்நேரத்துக்கு வெந்நீக்கு எங்க போக. சரி கொஞ்சம் தலகாணிய ஏந்தலா வச்சிப் படு காலைல ஒரு ஊசி போட்டுட்டு வந்துறலாம்" என்றபடி அருகில் படுத்துக் கொண்டாள்.
இப்படியாக ஆறு மாதங்களும் கழிந்து மூன்று வருட ஒப்பந்தம் முடிந்தது. நாளை அம்மா வருவாள் நாம் ஊருக்குப் போய் விடலாம் என்ற நினைக்கும்போதே மனம் வானில் பறந்தது ஆனந்திக்கு.
தன் துணிமணிகளை தன் பொருட்களைகளை எல்லாம் ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டாள்.
கேண்ட்டீனில் போய் சாப்பிட்டாள். அதே கல்லு போன்ற இட்லிதான். ஆனால் இவளுக்கு பஞ்சு போல தெரிந்தது. காய்கறி இல்லா சாம்பாரும் நாவிற்கு ருசித்தது. எப்போதும் எரிச்சல் மூட்டும் சூபர்வைசர் ராஜனின் பார்வை கூட ரசிக்கும்படியாக இருந்தது. இயந்திரத்தின் ஒலியும் இளையராஜாவின் இன்னிசையாக ஒலித்தது இவளுக்கு. பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி உற்சாகமாக இருந்தாள் ஆனந்தி.
அம்மா வந்திருந்தாள். மூச்சிரைக்க ஓடோடி சென்றாள். கூடவே ஏஜெண்ட் மாணிக்கமும் இருந்தார். அவரைப் பார்த்ததும் சட்டென்று நின்று விடுகிறாள். இவர் ஏன் வந்திருக்கிறார் என்ற குழப்பம் ஆனந்திக்கு.
ஆனந்திய பார்த்ததும் "வா தாயீ வந்து இந்த பாரத்துல கையெழுத்துப் போடு" என்கிறார் மாணிக்கம். தன்னை அழைத்துப் போகத்தான் கையெழுத்து கேட்கிறார் என்று நினைத்து போடுகிறாள் ஆனந்தி.
நேராக மானேஜர் அறைக்கு அழைத்துச் செல்கிறார் மாணிக்கம். அங்கும் சில பல கையெழுத்துகள் வாங்கப்பட்டன. விட்டால் போதும் என்று நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துகள் போடப்பட்டன. மானேஜரிடம் இருந்து மொத்தப்பணமும், அந்த மாத சம்பளப் பணமும் பெறப்பட்டு ஆனந்தியின் அம்மா கையில் கொடுத்தார் மாணிக்கம்.
மூவரும் வெளியே வந்தனர்.
இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து மாணிக்கத்தின் கையில் திணித்தாள் ஈஸ்வரி. வாயெல்லாம் பல்லாக பணத்தைப் பெற்றுக் கொண்டு பைக்குள் வைத்துக் கொண்டான்.
ஆனந்தியின் பக்கம் திரும்பி
"தாயி இப்பதான் ஒந்தங்கச்சிக்கு நல்ல வரனா ஒன்னு வந்திருக்கு. இந்தப் பணத்த வைச்சி அவ கல்யாணத்த முடிச்சிட்டேன்னா அடுத்ததா உங் கல்யாணத்த முடிச்சிடலாம். கண்ண மூடிட்டு இன்னும் ஒரு மூனு வருசம் இருந்திட்டன்னா போதும். உன் தம்பியும் அதுக்குள்ள படிச்சி முடிச்சிடுவான். பிறகு உனக்கும் கல்யாணம் பண்ணிட்டன்னா நா நிம்மதியா இருப்பேன்" .
"தங்கச்சிக்கு அதுக்குள்ள கல்யாணமா. ஏம்மா என்ன அவசரம் அவ கல்யாணத்துக்கு?
"ஊர்ல ஒரு பையனோட பழகித் தொலச்சிட்டா. பையனோட வீட்லயும் சம்மதிச்சிட்டாங்க. அதான் வெரசா முடிச்சிடுவோம்ன்னு நினைக்கிறேன்".
"என்கிட்ட எதுவுமே சொல்லயேம்மா" என கேட்டபோது வார்த்தைகள் வெளியே வராமல் அடம்பிடிக்க மெதுவான குரலில் கேட்டாள்.
" அத விடு தாயீ. அவ கல்யாணத்துக்காகதான் மறுபடியும் மாணிக்க அண்ணன் வேலைக்குக் கேக்கும் போது சரின்னு சொல்லிட்டேன். உனக்கும் வேல பழகிருச்சி. மூணு வேள சாப்பாடு, தங்குற இடம் ,நல்ல சம்பளம் யாரு தருவா இந்தக் காலத்தில. ஊருக்கு வந்து அந்தக் கரிசக்காட்டுல என்ன பண்ணப் போற நீயி. மழ தண்ணி இல்லாம எல்லாம் வெட்டவெளியா கிடக்கு. வேல எதுவும் இல்ல. கால் வயித்துக்கும் அர வயித்துக்கும் வம்பாடு பட வேண்டிருக்கு. நீ இங்கன நிம்மதியா சாப்ட்டுட்டு நிழல்ல இரு. நீ இருந்திகிடுவ ஆத்தா. இந்தா இத செலவுக்கு வச்சிக்கோ. தங்கச்சி கல்யாணத்துக்கு வந்து கூப்டுறேன் வந்து ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம். இப்ப அம்மா கிளம்பட்டுமா தாயீ" கேட்டவள் பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள்.
எதுவும் பேசத் தோன்றாமல் விக்கித்து நின்றாள் ஆனந்தி.
ஜெயா நவி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்