logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ஈஸ்வரி குருநாதன்

சிறுகதை வரிசை எண் # 93


மனதில் வாழும் காதல் *************************** செல்வம் விடியற்காலையிலேயே எழுந்து விட்டான், அவனுக்கு இன்று ஏனோ உறக்கம் பிடிக்கவில்லை , 3 மணி வாக்கிலேயே உறக்கம் கலைந்து விட்டது. விடியட்டும் என்று உட்கார்ந்திருந்தான் பொழுது விடிந்ததும் எழுந்து எப்போதும் செல்லும் அந்த டீக்கடைக்கு சென்று , 'அண்ணே ஒரு டீ ண்ணே' என்றான் 'என்னப்பா செல்வம் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்திருக்க' ஆமாம் ணே, தூக்கம் வரல சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் கை பேசி ஒலித்தது, துரைசாமி அண்ணா தான் அழைத்திருந்தார் சொல்லுங் ணே செல்வா இன்னைக்கு காட்டுக்கு வந்திருப்பா, இன்னைக்கு ஒன்னு வருதாம், இப்ப தான் எனக்கு போன் வந்திச்சு , சாப்பிட்டுட்டு மெதுவாவே வாப்பா , மத்தியானம் மேல தான் வரும் போல சரிண்ணே, என்றான் துரைசாமி அண்ணன் ஒல்லியான உடம்பு, ஆறடி உயரம் ஐம்பது வயதை தாண்டியவர், இரக்க குணமும் உதவும் மனசும் இருப்பவர். செல்வத்திற்கும் துரைசாமி அண்ணாவுக்கும் இடையில் இருப்பது , நட்பா, உடன் பிறவாத சகோதரத்துவமா என்று இனம் புரியாத அன்பு இருக்கும். செல்வம் எப்போதும் துரைசாமி அண்ணாவுக்கு மனதில் நன்றியை சொல்லிக் கொள்வான். அவன் யாருமற்றவனாக சென்னையில் சைதாப்பேட்டையில் வந்து இறங்கிய போது, இனி என்ன செய்யப் போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்று யோசிக்கும் மனநிலையில் கூட இல்லை. அவன் மனமும் நினைவும் முழுக்க கற்பகமே நிறைந்திருந்தாள். அவன் உணவு, உடை என்று எதைப் பற்றியும் தோன்றாமல் அங்கிருந்த கடை வீதி தெருக்களில் சுற்றித் திரிந்தான். இரவில் பூட்டிய கடை வாசல்களில் படுத்துக் கொண்டான். இரண்டு நாட்கள் சரியா ஒன்றும் சாப்பிடாததால் ஒரு நாள் மாலை ஒரு கடை வாசலில் மயங்கி விழுந்து விட்டான். அங்கிருந்தவர்கள் முகத்தில் நீர் தெளித்து கூல் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தார்கள் . அப்போது அங்கு துரைசாமி அண்ணனும் இருந்தார். 'என்ன தம்பி இப்ப பரவாயில்லையா ' என்று கேட்டார். பரவாயில்லண்ணே என்று தலையாட்டினான் என்ன ஒன்னும் சாப்பிடலையா, அதான் மயங்கி விழுந்துட்டியா , சாப்ட ஏதாவது வாங்கியாரட்டுமா செல்வத்திற்கு பசித்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் இருப்பா என்றவர் சற்று தள்ளி இருந்த தள்ளு வண்டி கடையிலிருந்து இரண்டு தட்டுகளில் வாழை இலை வைத்து சூடான இட்லிகளையும், ஒரு பாட்டில் தண்ணீரையும் வாங்கிக் கொண்டு வந்தார். தம்பி இத சாப்டுப் பா இரண்டு நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததால் செல்வம் அதை வாங்கி வேக வேகமாக சாப்பிட்டான். பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த துரைசாமி அண்ணன், வெளியூராப்பா, எந்த ஊரு, எதுக்கு வந்தே, ஏ இப்பிடி ரோட்ல படுத்துக் கெடக்கற செல்வம் ஒரு முறை துரைசாமி அண்ணாவை பார்த்து விட்டு தலை குனிந்து மெளனமானான். அவன் மனதில் பல விசயங்கள் ஓடியது, அவன் உயிருக்குயிராய் காதலித்த கற்பகத்தையும் அவனையும் வேறு வேறு சாதி என்று பிரித்து அவனை அடித்து ஊர்க்காரர்கள் கற்பகத்தை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு கற்பகத்தை மறக்க முடியாமல் , சில வருடங்கள் பைத்தியக்காரனாக திரிந்து அங்கே இருந்தால் அவளின் நினைவாகவே இருக்கிறது என்று சென்னைக்கு பஸ் ஏறி வந்து விட்டான். என்னப்பா எதுவுமே சொல்லாம என்னவோ யோசிச்சுக் கிட்டே இருக்க எங்க தங்க போற தெரியலண்ணே, நான் சென்னைக்கு புதுசு, எனக்கு இங்க யாரையும் தெரியாது ஏதாவது வேல செஞ்சி பொழைக்கலாம்னு வந்தேண்ணே கொஞ்சம் நேரம் அவனை பார்த்த துரைசாமி அண்ணன் தம்பி, நானும் பெருசா ஒன்னும் சம்பாதிக்கறவனில்ல சுடுகாட்டுல வேல செய்றேன், அன்னன்னைக்கு என்ன கெடைக்குதோ அது தான் வருமானம். சரி இன்னைக்கு என் கூட வந்து என் குடிசைல தங்கிக்கோ நாளைக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். சரிண்ணே அப்படி அன்று துரைசாமி அண்ணனோடு சேர்ந்தவன் தான் அன்று முதல் கடந்த மூன்று வருடங்களாக அவரோடு மயான வேலைக்கு சென்று கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இந்த வேலை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், துரைசாமி அண்ணனை விட்டு பிரிய மனமில்லாமல் அவருடனேயே இருந்து விட்டான், மயான வேலைக்கு போன போது , மனிதர்கள் இருக்கும் வரை சாதி, பணம், பதவி என்று என்ன ஆட்டம் போடுகிறார்கள், கடைசியில் இந்த ஆறடி நிலமோ ஒரு சொம்பு சாம்பலோ தான், அதற்குள் இத்தனை ஆட்டம் என்று நினைத்து , வெளியில் இருக்கும் பொய் முகங்களை சந்திப்பதை விட இந்த மயானத்திற்கு வரும் உடல்கள் அடக்கம் செய்யும் இந்த வேலை ஒரு விதத்தில் சேவை என்று தோன்றியது . இதற்கிடையில் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று ஊருக்கு போன போது அவனுடைய பள்ளித் தோழன் மாதவனை பார்த்தான், அப்போது அவன் செல்வம் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நெனச்சேன், மனசு கேக்கல அதான் சொல்றேன் போன மாசம் கற்பகம் ஊருக்கு வந்திருந்துச்சு டா , அவ புருசன் எதோ உடம்பு சரியில்லாம இருந்து இறந்து போயிட்டாராம் பாக்கவே கஷ்டமா இருந்துச்சு ,செல்வம் எப்படி இருக்காரு, எங்க இருக்காருண்ணு உன்ன பத்திக் கேட்டுச்சு , நீ எங்க இருக்குன்னு தெரியலன்னு சொன்னேன், அப்புறம் அவங்க அப்பா அம்மா கூட ஊர விட்டு போய்டுச்சு அவள் எங்கேயோ நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்து இருந்தவனுக்கு இது பேரிடியாக இருந்தது, செல்வம் சுய நினைவுக்கு வந்தவனாக சரி போய் வேலையைப் பார்ப்போம் என்று கிளம்பினான். செல்வம் இன்னும் கொஞ்சம் ஆழமாக வெட்டு பா.. என்றார் துரைசாமி செல்வம் குழிக்குள் இறங்கி வெட்டி மண்ணை அள்ளி அள்ளி வெளியில் கொட்டிக் கொண்டிருந்தான். வேலையை செய்து கொண்டிருந்தாலும் அவன் மனம் இன்று ஏனோ ஒரு வித கலக்கத்திலேயே இருந்தது காரணம் என்னவென்று தெரியவில்லை, ஏதோ ஒரு பாரம் அவன் நெஞ்சை அழுத்துவதாகவும் அவன் உணர்ந்து கொண்டிருந்தான். பொம்பள பொணமாம், அஞ்சு மணி வாக்குல வருமாம், அவங்க வீட்டு முறைப்படி பொதைப்பாங்களாம் எரிக்க மாட்டங்களாம், அவங்க வீட்டு ஆளுங்க வந்து சொல்லிட்டு இப்ப தான் அடவான்ஸ் குடுத்துட்டு போனாங்க. நீ குழிய ரெடி பண்ணு நான் வேணுங்கற சாமான்கள வாங்கிட்டு வந்துடறேன்.. என்று சொல்லிவிட்டு துரைசாமி அண்ணன் கிளம்பி போனார். செல்வம் குழியை ரெடி செய்து விட்டு அங்கு வேலி ஓரத்தில் இருந்த ஒரு மரத்தடி நிழலில் வந்து அமர்ந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான் . கொஞ்ச நேரத்தில் அந்த மரத்தில் சாய்ந்து கண்ணயர்ந்து விட்டான். என்ன செல்வம் வேல முடிஞ்சிடுச்சா, நானும் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திட்டேன், துரைசாமி அண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் பறையோசையும், பட்டாசு சத்தமும் கேட்டது. வந்துடுச்சி போல இருக்கு வா செல்வம் , அரிச்சந்திர கல்லுக் கிட்ட போயிடுவோம். செல்வம் எழுந்து அவருடன் சென்றான் தூரத்தில் அவர்கள் சுமந்து வரும் உடலை பார்த்தவுடன் செல்வத்திற்குள் ஏதோ ஒரு நடுக்கம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை எத்தனையோ உடல்களை அவன் அடக்கம் செய்திருக்கிறான், ஆரம்பத்தில் இந்த வேலை அவனுக்கு ஒரு வித அச்சத்தையும், ஒவ்வாமையையும் தந்தது என்றாலும் போகப் போக பழகி விட்டான். அதன் பிறகு எந்த உடல் வந்தாலும் அவன் அவனுடைய வேலைகளை செய்ய பழகி இருந்தான். ஆனால் இன்று இப்போது தூரத்தில் அவர்கள் சுமந்து வரும் அந்த உடலை பார்த்து ஏன் அவன் மனம் இன்று இத்தனை கலக்கமுறுகிறது, பதட்டமடைகிறது என்று அவனுக்கு தெரியவில்லை. அந்த உடல் பக்கத்தில் வர வர அவனுக்குள் ஒரு நடுக்கமும், அதிர்வும் வந்தது. அவன் கண்களும், மூளையும் சொல்வதற்கு முன் அவன் மனம் சொல்லி விட்டது. ஆம் அது கற்பகத்தின் உடல் தான். அவன் தூரத்தில் பார்த்த போதே அது கற்பகத்தின் சாயலாக தெரிந்தது போல் இருந்தது தான் செல்வத்தின் நடுக்கத்திற்கும், கலக்கதிற்கும் காரணம். அது கற்பகத்தின் உடல் தான் என்று தெரிந்த அந்த நொடி, செல்வத்தின் மூச்சு ஒரு கணம் அடைத்து, கனத்து நின்றது. கற்பகம்ம்ம்... என்று கத்தி, வாயை இரு கைகளால் பொத்திக் கொண்டு ஓடினான் . பூமி பிளந்து அவன் உள்ளே செல்வது போலிருந்தது. கால்கள் நடுங்கி, உடம்பு அதிர்ந்து, கண்களில் நீர் பெருகி நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழுந்தான். அருகில் நின்றிருந்த துரைசாமி அண்ணா பதறி ஓடி வந்தார், என்ன, என்னாச்சு செல்வம் என்றவாறே தூக்கினார். அவன் பேசத் திராணியற்று அவன் நெஞ்சில் பச்சை குத்தியிருந்த கற்பகம் என்ற பெயரைக் காட்டினான். துரைசாமி அண்ணாவுக்கு எல்லாம் புரிந்து போனது. முன்பொரு நாள் அவன் கற்பகத்தை விரும்பியதையும், அவன் ஒரு சாதியும், கற்பகம் அவனை விட உயர்ந்த சாதி பெண் என்பதானலேயும், அவளின் பெற்றோரும், ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து, செல்வத்தை அடித்து, பிறகு கற்பகத்தை இரவோடு இரவாக வேறு ஊருக்கு அழைத்து சென்று அங்கு அவளின் உறவினர் ஒருவருக்கு அவளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதைக் கேட்டு செல்வம் புத்தி பேதலித்து ஒரு வருடம் பித்துப் பிடித்தவன் போல் சுற்றி திரிந்தான். பிறகு அந்த ஊரில் இருந்தால் அவள் ஞாபகமாகவே இருப்பதால் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து விட்டான். இப்போதும் தான் உயிருக்குயிராய் நேசித்த கற்பகத்தை மறக்க முடியாததால் அவன் வேறு திருமணத்தைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று தன் மொத்த கதையையும் துரைசாமி அண்ணாவிடம் சொல்லி இருந்தான். இப்போது அவன் மார்பில் பச்சை குத்தியிருந்த கற்பகம் என்ற பெயரை செல்வம் காட்டியவுடன் அவருக்கு எல்லாம் புரிந்து போனது. அங்கு வந்திருப்பது கற்பகத்தின் உடல் என்று துரைசாமி அண்ணாவுக்கும் ஒரு கணம் நெஞ்சு அடைத்தது. அவர் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்த பெண்ணின் முகத்தை பார்த்தார், அத்தனை லட்சணமாக இருந்தது. செல்வத்தையும், கற்பகத்தின் முகத்தையும் மாறி மாறி பார்த்தார். அவருக்கு செல்வத்திற்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் அங்கு சுற்றி இருந்த உறவினர்கள், ஏங்க என்ன என்ன செய்யணும்னு சொல்லுங்க என்று துரைசாமி அண்ணாவிடம் சொன்னார்கள். சொல்றேன் sir என்று சொல்லி விட்டு தள்ளி நின்றிருந்த செல்வத்திடம் வந்து, செல்வம் நீ இங்கேயே இரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன். அவங்க சொந்தக்காரங்க எல்லாம் போனதுக்கு அப்புறம் சொல்றேன், நீ வந்து பாரு என்று கொஞ்சம் தள்ளி நிற்க வைத்துவிட்டு சென்றார். செல்வத்திற்கு நெஞ்சடைத்து கண்ணீர் ஆறாய் பெருகியது, சுற்றி நின்ற அவளின் உறவினர்களுக்கு முன்னால் அவனால் எதுவும் காட்டிக் கொள்ள முடியவில்லை, அப்படியே கற்பகத்தின் நினைவுகள் மனதில் ஓட ஆரம்பித்தது. கற்பகம் மிக அழகான வட்ட வடிவமான,சிவந்த முகத்துடன் அவ்வளவு அழகான பெண், அதுவும் கல் வைத்த மூக்குத்தியுடன் அவளை பார்க்கும் போது ஒரு சிலையை பார்ப்பது போல் இருக்கும். பள்ளியிலும், ஊரிலும் அவளை விரும்பாதவர்களே இல்லை , குணத்திலும் , திறமையிலும் சிறந்தவள். பள்ளியில் அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெறுவாள். அத்தனை பேரும் அவளை விரும்ப அவளோ செல்வத்தை விரும்பினாள் . செல்வம் +2 படிக்கும் போதே கல்லூரியில் படிக்கும் தோற்றமுடையவனைப் போல அவ்வளவு அழகான இளஞ்சனாக இருப்பான்,நண்பர்கள் அழகான ஜோடி என்பார்கள் ஆனால் காலம் சில நேரம் காதலை சேர்ப்பதை விட பிரித்து, வேறு வேறு திசையில் பயணிக்க வைத்து விடுகிறது என்பதும் உண்மை அப்படித்தான் காலம் கற்பகத்தையும், செல்வத்தையும் பிரித்து விட்டது. கற்பகமும்,செல்வமும் எப்போதும் சந்திக்கும் அந்த புளிய மரத்துக்கு அடியில் வந்து அமர்ந்தார்கள். செல்வம் சொல்லு கற்பகம் நாம ரெண்டு பேரும் ஒன்னு சேருவமா, கல்யாணம் கட்டுவமா, எங்க அப்பா அம்மாவும் ஒத்துக்க மாட்டாங்க , இந்த ஊரும் அந்த சாதி இந்த சாதின்னு கெடக்கு, எல்லோரும் நம்மள சேர வுடாம பிரிச்சிடுவாங்கலோன்னு பயமா இருக்கு . பெட்டிக் கடையில இருந்து வாங்கிட்டு வந்த தேன் மிட்டாயையும், தேங்காய் பர்பியையும் கற்பகத்திடம் கொடுத்தான் சாப்பிடு கற்பகம் நீ சொல்ற பயம் எனக்கும் தான் இருக்கு, ஆனா சம்மதிக்க வைக்க முயற்சி செய்வோம், எந்த சூழ்நிலையிலும் நான் உன்ன விட்டு பிரிய மாட்டேன் கற்பகம். மேல படிக்க காலேஜ் இக்கு வேற ஊருக்கு எங்க அப்பா அனுப்பிடுவாரு போல இருக்கு மேல படிச்சா நல்லது தானே , படிப்ப முடிச்சுட்டு அப்புறம் தானே கல்யாணம் கட்டப் போறோம். உன்னையும்,என்னையும் பிரிச்சிட்டா நான் செத்துப் போவேன் செல்வம் ஏய் என்ன நீ , அப்படியெல்லாம் பேசாத, யாரும் என்கிட்ட இருந்து உன்ன பிரிக்க முடியாது செல்வம் எனக்கொரு ஆசை சொல்லட்டுமா சொல்லு கற்பகம் உனக்கே தெரியும் எனக்கு கண்ணாடி வளையல்களும், கொலுசும் போட்டுக்கறதுக்கு ரொம்ப பிடிக்கும்னு, அதெல்லாம் நீ வாங்கி குடுத்து நான் போட்டுக்கணும்னு ஆசையா இருக்கு செல்வம், அப்படியே நிறைய மல்லிகப் பூவும் நீ வாங்கித் தரணும் செல்வம் கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிந்து மென்மையாக சிரித்துக் கொண்டே கற்பகத்தை பார்த்து கண்டிப்பா கற்பகம், அடுத்த முற நாம சந்திக்கும் போது, நா உனக்கு கண்ணாடி வளையல், கொலுசு , பூ எல்லாம் வாங்கிட்டு வர்றேன். அப்போது செல்வத்திற்கும், கற்பகத்திற்கும் தெரியாது இது தான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்று அதன் பிறகு கற்பகத்தின் பெற்றோர், அவளை அடித்து, வேறு ஊருக்கு அழைத்து சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அவன் கற்பகத்தின் நினைவலைகளில் இருந்த போது தான் யாரோ தன்னை உலுக்குவதை போல் உணர்ந்தான், துரைசாமி அண்ணா தான் செல்வம் எல்லோரும் போயிட்டாங்க , வாப்பா நீ வந்து பாரு இல்ல அண்ணனே என் கற்பகத்தை என்னால இப்படி பார்க்க முடியாதண்ணே , கதறினான் அவர் அவனை இழுத்துக் கொண்டு குழியின் அருகில் அழைத்துச் சென்றார். அவன் கால்கள் தள்ளாட அருகில் சென்றான். குழியில் வைக்கப்பட்டிருந்த கற்பகத்தின் முகத்தைப் பார்த்து, கற்பகம்ம்ம் என்று கத்தினான், அவன் சட்டையை இரு கைகளாலும் இரண்டு பக்கத்திலும் பிய்த்து கிழித்தான், பொத்தான்கள் தெறித்து விழுந்தன, இரு கைகளாலும் தன் தலை முடியை இரண்டு பக்கங்களிலும் பிடித்து இழுத்துக் கொண்டு அழுதான். மண்ணை தலையில் வாரிக் கொட்டினான். அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை, அவன் வாய் மட்டும், அய்யோ.,. கற்பகம் நான் உன்ன இப்படியா பாக்கணும், எங்கேயோ நீ வாழ்ந்துகிட்டு இருக்கிற நிம்மதி போதும்னு நெனச்சனே, இப்ப இப்படி பார்க்கறனே என்று கதறி அழுதான். கண்களை துடைத்துக் கொண்டு, கற்பகத்தின் முகத்தைப் பார்த்தான், முகம் முழுவதும் மஞ்சள் பூசி, விபூதி பட்டையிட்டு, தூங்குவது போல் இருந்தது அவள் முகம் செல்வம் எனக்கொரு ஆசை, நீ எனக்கு கண்ணாடி வளையல், கொலுசு, மல்லிகப் பூ எல்லாம் வாங்கித் தரணும் அதையெல்லாம் நான் போட்டுக்கணும் செல்வம் கடைசியாக கற்பகம் கேட்டது .. குழியில் இருந்து மேலே வந்தான் அண்ணே கொஞ்ச நேரம் இருங்க குழிய மூடாதீங்க, வந்திடறேன் என்று வேகமாக வண்டியை எடுத்து சென்றான். துரைசாமி அண்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன செய்கிறான் செல்வம், ஏன் இப்படி நடந்து கொள்கிறான்.இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தார். செல்வம் கடைத் தெருவுக்கு வந்தான். கண்ணாடி வளையல்கள் விற்கும் கடை முன் நின்றான் செல்வம் , சிகப்பு பச்சை மேல தங்கம் பூசின மாதிரி கல்யாண வளையல் ... கற்பகத்தின் குரல் காதுகளில் ஒலித்தது அந்த செகப்பு , பச்சை மேல தங்க கலருல இருக்குறதுல ரெண்டு டசன் குடுங்க .. வாங்கிக் கொண்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு கிளம்பினான். அவனிடம் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான், வெள்ளி கொலுசு வாங்கும் அளவு இல்லை . பக்கத்தில இருந்த ஃபேன்ஸி ஸ்டோர் க்குள் நுழைந்தான் கொலுசு இருக்கா தங்க முலாம் பூசின அழகான கொலுசுகளை வாங்கினான், கண்களில் வந்த நீரை துடைத்துக் கொண்டான். கடைத் தெருவுக்கு வந்தான், மல்லிகை பூவை வாங்கினான் வேகமாக வண்டியை மிதித்தான். மயானத்திற்கு வந்து ஓட்டமும், நடையுமாக குழியை நோக்கி ஓடினான். வாங்கிக் கொண்டு வந்த பொருட்களோடு கற்பகத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த குழிக்குள் இறங்கினான். அவர்கள் இருவரும் விரும்பிய நாட்களில் ஒரு முறை கூட தொட்டுக் கொண்டு கைகள் கோர்த்துக் கொண்டு பேசியதில்லை , அந்த வயதின் கூச்சமும், பயமும் அவர்களை தொட்டுக் கொண்டு பேச அனுமதிக்கவில்லை. இன்று கற்பகத்தின் கைகளை தொடுவதற்கு, செல்வத்தின் கைகள் நடுங்கியது . அந்த கவரில் இருந்த கண்ணாடி வளையல்களை எடுத்தான், வலது கையில் சிகப்பு வளையல்களையும், இடது கையில் பச்சை வளையல்களையும் போட்டு விட்டான், கால்களில் கொலுசுகளை மாட்டினான் . அவள் முகத்தின் அருகில் சென்று தலையின் மேலே அந்த மல்லிகை பூவை வைத்தான். பிறகு கற்பகத்தின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த துரைசாமி அண்ணாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ' 'ஒரு மனிதனின் மனதில் இருக்கும் காதல் எப்போதும் செத்துப் போவதில்லை .' என்பது மட்டும் செல்வத்தின் செயலிலிருந்து அவருக்கு புரிந்தது. கற்பகம் நீ கேட்ட கண்ணாடி வளையல் , கொலுசு எல்லாம் போட்டு விட்டுருக்கேன் . புடிச்சிருக்கா சொல்லு கற்பகம் , சொல்லு கற்பகம் .. என்று கத்திக் கொண்டே அழுதான். துரைசாமி அண்ணன் செல்வத்தை குழிலிருந்து மேலே வரும் படி அழைத்து தூக்கி மேலே நிற்க வைத்து அமைதி படுத்த முயற்சி செய்தார், அதற்குள் அவர்களுடன் வேலை செய்யும் வேலுவும் அங்கு வந்து சேர்ந்தான். வேலு நீ செல்வத்த கூட்டிட்டு போ, நான் மண்ண தள்ளிட்டு வர்றேன் என்று இருவரும் செல்வத்தை கொஞ்ச தூரம் அழைத்து வந்து உட்கார வைத்து விட்டு துரைசாமி குழியை மூடப் போனார். துரைசாமி அண்ணன் பக்கத்தில் வந்து சரி நேரமாயிடுச்சி கெளம்பு செல்வம் , நாளைக்கு வந்து பாக்கலாம் என்றார். இல்லண்ணே நான் இங்க கொஞ்ச நேரம் இருந்திட்டு வர்றேன் ண்ணே என்றான் செல்வம் இல்ல வேண்டாம் பா, சொன்னாக் கேளு உன்ன தனியா விட்டுட்டு போக முடியாது வா போகலாம் பயப்படாதீங்க நான் ஒன்னும் செஞ்சிக்க மாட்டேன் , கொஞ்ச நேரம் இருந்திட்டு வந்திடறேன், நீங்க போங்க துரைசாமி அண்ணாவும் வேறு வழியில்லாமல் சரி உட்கார்ந்திருக்கட்டும் கொஞ்ச நேரம் கழித்து வந்து கூட்டிட்டு போகலாம் என்று கிளம்பி போனார். அவர்கள் சென்ற பிறகு செல்வம் மீண்டும் மண் மூடிய கற்பகத்தின் சமாதியின் பக்கத்தில் சென்று இரண்டு கால்களையும் மடக்கி முட்டிகளில் இரண்டு கைகளையும் கோர்த்த படி உட்கார்ந்து கற்பகத்தின் சமாதியையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது . மழை சிறு தூறாலாக ஆரம்பித்து கொட்டத் தொடங்கியது . அப்போதும் செல்வம் அப்படியே உட்கார்ந்திருந்தான். கற்பகம் செல்வத்தின் காதலை பார்த்து வானமும் அழுதது . காதல் எப்போதும் மரிப்பதில்லை, எத்தனையோ செல்வங்களின் மனதில் காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது .. * ஈஸ்வரி குருநாதன் *

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.