logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

நடராஜன் பெருமாள்

சிறுகதை வரிசை எண் # 92


மைண்ட் வாய்ஸ் எந்த அலங்காரமும் இல்லாமல் எழுந்தவுடன் நாம் இருப்பது போல் வந்த நிதர்சனமான அந்த நினைவு தினமொருமுறை வந்தாலும் தாங்கி மகிழ்வு கொள்ளும் இந்த மனம் தொடர்ந்து இதேபோல் இருக்குமா என்பது தான் கேள்விக் குறி. விளைவுகள் எதுவாக இருந்தாலும் கருத்தொற்றுமை தோன்றாத பொழுதென்று ஒன்று இருக்க முடியாதது போலவே இதற்கும் அப்படியான ஒரு நிகழ்தகவு இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றுவதற்கு பதில்கள் எதுவும் கிடைப்பதில்லை. இப்படியான சூழலும் யோசனையும் அமைவது கூட புதிதல்ல எனும்போது மறக்க முடியாத நிகழ்வுக்காக மனம் குமைந்து தவிப்பதை தவிர்க்க இயலாது போகிறது. சற்றேனும் இசைந்து கொடுத்திருக்கலாம். எத்தனை முறை சொல்லியிருப்பேன். திருத்திக் கொள்ள அத்தனை வாய்ப்பிருந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறு நிகழும்போது எப்படி பொறுத்துக்கொண்டு போவது?. சரிக்கு சமமாக பேசுறது கூட ஒரு பெரிய பிரச்சனையில்லை. ஆனால் சரி செய்து கொள்ளத் தெரியாத நிலையிலும், தான் செய்வதே சரி என்று சொல்கிற ஒருத்தியோடு எப்படி காலத்தை கழிப்பது. திருந்தவே மாட்டேன் என்கிறாளே. இப்போதெல்லாம் கெட்ட வார்த்தைகள் எல்லாம் சட்டென வந்து விடுகின்றன. நினைவு தெரிந்து சின்ன வயதில் அந்த வார்த்தைகளைப் பேசியதோடு சரி. " என்னங்க சாப்ட்டீங்களா. இட்லிக்கு சாம்பாரும் தேங்காய் சட்னியும் எடுத்து வெச்சிட்டு தானே போனேன். ஏன் இவ்ளோ நேரம் சாப்பிடாம இருக்கீங்க ? ". இந்த கரிசனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பக்கத்தில் இருந்து பாத்துக்க துப்பில்லை இதுல சாப்ட்டீங்களா வேற. கோபம் தலைக்கேறுவதை உணர முடிகிறது. எங்கள் குருஜி சொல்வார். கர்மா என்று எதுவுமில்லை. செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் இருந்தால் சிதறல் இல்லாமல் செயல் நிறைவேறும். அப்போது அது பயனுள்ள செயலாக முடிகிறது. இம்மானுடத்திற்கு உதவும் செயல் எதுவும் கர்மாவாகாது. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் அதுவே கர்மா யோகம். நிச்சயமாக அது பாவங்களின் பக்கம் திரும்பி பார்த்தல் கூட நேராது. இதுவெல்லாம் இவளுக்கு எத்தனை முறை சொல்லியிருப்பேன். செய்யும் ஒவ்வொரு செயலும் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று. அவ்வாறில்லாமல் எல்லாம் முடிந்த பிறகு அழுது புலம்பி என்ன பயன். " மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க தர்க்கத்த. மைன்ட் வாய்ஸ் ன்னு நெனச்சு சத்தமா நீங்க பேசுனதையெல்லாம் கேட்டுகிட்டு தான் இருந்தேன். இது ஒன்னும் புதுசில்ல எனக்கு. அதனால தப்பிச்சீங்க. இல்லையென்றால் நடக்கிற கதையே வேற, ஆங் " " ஆமாமாம். அப்படியே கேட்டு என்ன ப்ரயோஜனம். ஒரு அஞ்சு பைசாவுக்கு மாற்றம் உண்டா இத்தனை வருஷத்துல. இன்னமும் நீ செய்றத தானே செய்ற. நான் சொல்ற மாதிரி நடக்குதா ?. பேச வந்துட்டா பேச்சு " " சும்மா சும்மா பேசினதயே பேசிட்டிருக்காம டிபனை சாப்பிட்டு முடிக்க பாருங்க " " அதானே எப்பப்பாரு என்னை முடிக்கிறதிலயே குறியாக இரு. எதையும் உருப்படியா செய்துடாத " மகன் கேட்டான் அவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது," சாமி தான் இந்த உலகத்தை படைச்சாராமே. நாம் செய்ற எல்லாத்தையும் கவனிச்சிட்டே இருப்பாராமே. அதனால் நாம தப்பு செஞ்சா உடனே தண்டனை கொடுப்பாராமே அப்படியாப்பா ", என்று. நான் சொன்னேன், " இந்த உலகத்துல சாமின்னு தனியா யாரும் கிடையாது. இங்கிருக்கிற ஆசாமிகள் எல்லோரும் தான் சாமி. கஷ்டம் என்று யார் வந்து கேட்டாலும் உன்னால் என்ன உதவி முடியுமோ அதை அவங்களுக்கு செய்யணும். பசி என்று வந்துட்டாங்கன்னா கையில் இருப்பதைக் கூட அவங்களுக்கு கொடுத்து அவங்க பசியைப் போக்கணும். அப்படி யாரெல்லாம் சக மனுஷனை மதிச்சு உதவறாங்களோ அவங்க தான் உண்மையில் இங்கே சாமி. அதனால் எந்த மனுஷன் மனுஷத்தன்மையோட நடந்துக்கிறானோ அவன் தான் சாமி. அதனால இந்த உலகத்துல சாமின்னு யாரும் தனியாக இல்லை. சரியா ? புரிஞ்சுதா ? ", என்று மகனிடத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது. " என்ன அங்கே சத்தம். இன்னும் சாப்பிடலையா ? " " இவ வேற நொய்யி நொய்யின்ட்டு ". பகல் பொழுதும் பனி விலகாத இரவென்றே ஆகிவிட்ட உலகில் குறைந்த ஒளியே இரவென்ற தத்துவம் உறுதிபட்டாலும் உறங்காத நினைவுகளால் பகலாகிப் போகிற இரவுகளால் நிம்மதி இழப்பிற்கு ஒரு குறையும் நேர்வதில்லை. இரவுகளைக் கொய்து கொண்டு போய் அவளின் கூந்தலில் சொருகிவிட்டு வெளிச்சத்தில் உலாவிய பொழுதுகள் மட்டும் இல்லையென்றால் வாழ்வினிதென்பது வெறும் வார்த்தை தேனாகவே இருந்து விட்டிருக்க கூடும். இருந்தாலும் சரி செய்து விடக்கூடிய வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தாத அவளை சதா வைவதில் என் மேல் என்ன தான் தவறு !?. நீங்களே பாருங்கள் இன்று அவள் வரவில்லை போல. எந்த சத்தமும் இல்லை. என்ன அதட்டல் மைன்ட் வாய்ஸ் எல்லாம் வருகிறது என்று சொல்வாளே அதுவும் கேட்கவில்லை. ஒரு காலத்தில் அத்தனை பேரும் உடனிருக்கும் போதும் தனியாக இருந்து சுகம் காண எங்கள் குருஜி கற்றுக் கொடுத்திருந்தார். பல நாட்கள் வீடு வந்த உறவுகளைக் கூட மதிக்காமல் என்னறையை விட்டுக் கூட வெளியே வராமல் தனிமையை ரசித்து கொண்டாடியிருந்திருக்கிறேன். ஒளிவட்டம் தோன்றும் வரை உள்ளத்தில் உணரும் வரை விடாமல் முயற்சி செய்ய குருஜி கட்டளையிட்டிருந்தார். வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக தினந்தோறும் உழைப்பை நோக்கி ஓட வேண்டிய தேவை இருக்கும் போது இப்படி கண்கள் மூடி அமைதியைத் தேடிக் கொண்டிருந்தால் குடும்பத் தேவைகள் எப்படி பூர்த்தியாகும் பிள்ளைகள் எப்படி பசியாறும் மற்ற அவசியங்களுக்கான பணம் எங்கிருந்து கிடைக்கும் என்று நான் நேரடியாக அவரிடம் வினவியதற்கு அவர் சொன்னார், " வெளியும் காலமும் கொண்ட வாழ்விற்கு இவையெல்லாம் மிக அவசியம் தான். அதற்காக நாம் பொருள் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் மனம் கடந்த நிலையை உணர்ந்து கொண்ட பின் இவை எத்தனை அபத்தம் என்று சொல்வதை விட இதற்கான அவசியம் என்பது அல்லது இன்றியமையாத தேவை என்பது மீச்சிறு அளவாகப் போய்விடும். மற்றொன்று ஏதோ ஒரு வகையில் இந்த உடல் அதனைப் பூர்த்தி செய்து கொள்ள இந்த மனமற்ற நிலை உதவும். ஆகவே நீ இதுபோன்ற குழப்பங்களை விடுத்து அந்த எல்லாம் வல்ல ஒளியை நோக்கி நகர்வாயாக ", என்று என்னை ஆசீர்வதித்தார். இப்போது என் கண்களுக்கு எல்லாம் ஒன்றாகவே தெரிகிறது. அது இருளா ஒளியா என்று கூட தெரியவில்லை. இத்தனை களேபரத்திலும் இவள் மட்டும் இன்னும் திருந்தாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. " இப்போல்லாம் பசிக்குதுன்னு கேட்டால் கூட சோறு போட மாட்றா டாக்டர். இவளுக்கு நேரத்துக்கு எனக்கு சோறு போடுங்கன்னு சொல்லிக் கொடுத்துட்டு கூடவே அவளுக்கு நல்லா ஞாபகம் இருப்பதற்கு நாலு நல்ல மாத்திரைகளும் கொடுத்துட்டு போங்க டாக்டர். ஏன்னா நான் பேசப் பேச, நான் உங்க வீட்டுக்காரம்மா இல்லை நான் உங்க பொண்ணு ப்பா ன்னு சொல்லிட்டே இருக்கிறா", என்று சொல்லி நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவள் சிரிக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் வழக்கமாக அவள் பதில் சொல்கிற மைன்ட் வாய்ஸுன்னு பேசுறீங்க என்ற சத்தம் கேட்பதில்லை. - நடராஜன் பெருமாள்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.