logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

பு. அன்துவானத் சுஜாதா

சிறுகதை வரிசை எண் # 99


அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி தலைப்பு : வலி அன்று ஒரு புதன்கிழமை. காலை இடைவேளை முடிந்து பண்ணிரெண்டாம் வகுப்பு 'இ' பிரிவிற்குள் நுழைந்தேன். சட்டென்று ஒரு சலசலப்பு அடங்கியது போல் இருந்தது. மாணவர்கள் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு இறுக்கம் தெரிந்தது. நான் வழக்கம் போல் முகத்தில் புன்னகையோடு 'குட்மார்னிங் சில்ரன்' என்று மாணவர்களைப் பார்த்து சொன்னேன். பதிலுக்கு அவர்களிடம் இருந்து வந்த 'குட்மார்னிங் மிஸ்ஸில்' ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. அந்த வகுப்பின் வழக்கத்திற்கு மாறான அமைதி, ஏதோ விபரீதம் நடந்து முடிந்திருக்கிறது என்பதை எனக்கு சொல்லாமல் சொல்லியது. வகுப்பு தலைவனை அழைத்து "என்ன நடந்தது தீபக்" என்று கேட்டேன். "ஒன்றமில்லை மிஸ்" என்று மழுப்பினான். ஆனால் அவன் சொன்ன "ஒன்றமில்லை மிஸ்" என்பதில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறதென்று எனக்குத் தெளிவாக தெரிந்தது. எல்லா வகுப்பிலும் ஆர்வக்கோளாறாக சில மாணவர்கள் இருப்பார்கள். அப்படி இந்த வகுப்பின் ஆர்வக்கோளாறு தான் மணிகண்டன். அவனை என் கண்கள் தேடின. அவனை அழைத்துக் கேட்டதுமே நான் எதிர்ப்பார்த்ததுப் போல கண்கள் விரித்து “ஆர்வத்துடன் தலையை ஆட்டி ஆட்டி நடந்த எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டான். "மிஸ் செம சண்டை. அரவிந்தனும் பாண்டியனும் மாறி மாறி அடிச்சிக்கிட்டானுங்க. அரவிந்தன் பாண்டியனுடை கன்னத்தில் அறைந்து விட்டான். பதிலுக்கு பாண்டியன் அரவிந்தன் முகத்தில் குத்தி விட்டான். அவனுக்கு வாயில் இரத்தம் வந்து விட்டது” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான். நான் பேச வாய் திறக்கும் முன்பே இருவரும் எழுந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றார்கள். பாண்டியன் தலை கலைந்திருந்தது. இருவருடைய சீருடையும் கசங்கிப் போய் இருந்தது. அரவிந்தனுடைய உதடு, முகம் எல்லாம் வீங்கி இருந்தது. கண்கள் அழுது சிவந்திருந்தன. நான் கோபமாக “உங்களுக்குள் என்னடா பிரச்சனை? ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க?” அப்படின்னு கேட்டேன். இருவரும் பதில் ஏதும் பேசாமல் மௌனமாய் நின்றார்கள். திரும்பத் திரும்ப கேட்டும் பதில் வராததால் அரவிந்தனை வகுப்பு தலைவனோடு முதல் உதவி அறைக்கு அனுப்பிவிட்டு, மாணவர்களை அமைதிபடுத்திவிட்டு வகுப்பைத் தொடங்கினேன். பாண்டியன் கொஞ்சம் முரடன்தான். அடாவடித்தனம் ஏதாவது செய்து அடிக்கடி மாட்டிக் கொள்வான். மற்ற மாணவர்களையும் கேலி செய்வான். மற்ற பிள்ளைகள் கொண்டுவரும் உணவை வலுக்கட்டாயமாக பிடுங்கி உண்பது போன்ற அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடுவான். நல்ல பையன் தான். கொஞ்சம் குறும்புக்காரன். ஆனால் அரவிந்தன் அப்படிப்பட்ட பையன் இல்லை. எப்போதும் அமைதியாக இருப்பான். நன்றாக படிப்பான். ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட மாட்டான். மிகவும் பொறுமைசாலி பையன். ரொம்பவும் நல்லவன். இவன் ஏன் இப்படி ஒரு அடிதடி சண்டையில் ஈடுபட்டான் என்ற கேள்வி என் மனதை குடைந்துக் கொண்டே இருந்தது. அரவிந்தன் வந்த பிறகு இருவரையும் மதிய உணவு இடைவேளையில் என்னை வந்து சந்திக்கும்படி கூறிவிட்டு அடுத்த வகுப்பிற்கு சென்றேன். ஆனால் மனதில் இதே சிந்தனை தான் ஒடிக்கொண்டிருந்தது. ஏன் இந்த வளரிளம் மாணவர்கள் மனதில் ஏற்படும் திடீர் மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் நம்மால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை? அரவிந்தனையும் பாண்டியனை அழைத்து பொறுமையாக பேசி புரிய வைக்கவேண்டும். நான் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டே பாடத்தை முடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். மதிய உணவு இடைவேளையின் போது பாண்டியன் மட்டும் வந்தான். "என்னடா உங்களுக்குள் பிரச்சனை?” என்று கேட்டதும் அவன் “சாரி மிஸ் நான் எப்பவும் போலத்தான் அவனைக் கேலிப் பண்ணேன். எப்பவுமே சிரிச்சிக்கிட்டு அமைதியா போய்விடுவான். ஆனா இன்னைக்கு திடீரென்று கோபப்பட்டு என் கன்னத்தில் அறைந்து விட்டான். அவனுக்கு என்னாச்சின்னு தெரியல மிஸ். நானும் பதிலுக்கு கோபப்பட்டு அவன் முகத்தில் குத்தி விட்டேன். அவன் உதடு பல்லில்பட்டு இரத்தம் வர ஆரம்பித்து விட்டது. சாரி மிஸ். நான் பண்ணது தப்பு தான், இனிமேல் நான் அப்படி பண்ண மாட்டேன்” என்றான். நிச்சயமாய் அவன் செயலுக்கு வருத்தப்பட்டது தெரிந்தது. நானும் அவனிடம் "பாண்டியா எப்போதும் மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க பழகிக் கொள். மற்றவரை நீ கேலி செய்யும் போது அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்று நீ உணர்வதே இல்லை. எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி மனநிலையோடு இருக்க மாட்டார்கள். கோபம் எப்போதும் வன்முறையைத்தான் தூண்டும். நமக்கு நேரம் சரியில்லை என்றால் விளையாட்டு கூட விபரீதத்தில் போய் முடிந்து விடக்கூடும். எல்லோருடனும் நட்புடன் பழகக் கற்றுக்கொள்" என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தேன். நான் மாணவர்களிடம் நட்புடன் பழகுவதால் என்னிடம் மனம் விட்டு பேசுவார்கள். என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். நான் அன்புடன் அறிவுரை கூறினால் பொறுமையாக கேட்பார்கள். ஆனால் மதியம் அரவிந்தன் வரவேயில்லை. அதனால் ஒரு மாணவனை அனுப்பி அவனை அழைத்துவரச் சொன்னேன். வந்தவன் எது கேட்டாலும் மௌனமாகவே நின்றுக் கொண்டிருந்தான். கண்கள் மட்டும் கலங்கி இருந்தது. வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என யோசித்தேன். வீங்கிய உதட்டையும் முகத்தையும் பார்த்தால் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. அப்போது மதிய பாடவேளை மணி அடித்தது. அரவிந்தனிடம் பேசுவதற்கு நேரமில்லாததால் "மாலை வகுப்பு முடித்து விட்டு என்னை வந்து பார்” என்ற சொல்லி அனுப்பிவிட்டு அடுத்த வகுப்பிற்கு சென்றேன். மாலையில் நான் அரவிந்தனை வரச் சொன்னதை சுத்தமா மறந்து போய்விட்டேன். சுமார் 4.30 மணி அளவில் வீட்டிற்கு செல்ல முதல் மாடியில் இருந்து கீழே இறங்கினேன். அரவிந்தன் என்னைப் பார்ப்பதற்காக படிக்கட்டில் மேலே ஏறி வந்துக் கொண்டிருந்தான். சரியென்று அவனை அழைத்துக் கொண்டு மீண்டும் முதல் மாடியில் இருக்கும் ஆசிரியர்கள் அறைக்கு வந்தேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகும் வரை அரவிந்தன் அமைதியாக நின்று கொண்டு இருந்தான். அவனிடம் ஏதோ அனைவரும் சென்றதும் ஒரு தயக்கம் இருந்தது. ஆசிரியர்கள் அவனை அருகே இருந்த இருக்கையில் அமரச்சொல்லி பின் மெதுவாக பேச ஆரம்பித்தேன். "அரவிந்தா நீ எவ்வளவு நல்ல பையன். படிப்பில் கெட்டிக்காரன். இதுவரை நீ இந்த மாதிரி அடிதடி சண்டையில் ஈடுபட்டு நான் பார்த்ததே இல்லை. ஏன் இன்று அப்படி நடந்துக் கொண்டாய்? என்ன ஆயிற்று உனக்கு? என்று கேட்டதும் உடனே தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான். அது அவனது அடி மனதில் இருந்து வருகின்ற அழுகை என்பது மட்டும் எனக்குத் தெளிவாக புரிந்தது. அதனால் அமைதியாக இருந்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ந்து அழுதுவிட்டு இரண்டு கைகளாலும் கண்களைத் துடைத்துக் கொண்டு மெதுவாக சொல்ல ஆரம்பித்தான். "மிஸ் பாண்டியன் என் காலனியில் தான் இருக்கிறான். என் தெருவில் தான் அவன் வீடும் இருக்கிறது. என் வீட்டில் நடக்கின்ற எல்லா பிரச்சனையும் அவனுக்கு நல்லாத்தெரியும். வகுப்பில் மற்ற பசங்க முன்னாடி எங்கள் வீட்டு பிரச்சனையை பற்றி பேசி கேலிப் பண்ணினான். எனக்கு அவமானமாக இருந்தது. அதனால் தான் நான் கோபப்பட்டு அவன் கன்னத்தில் அடிச்சிட்டேன். தப்பு தான். ரொம்ப சாரி மிஸ்" என்றான். நானும் விடாமல் "அதுசரி அப்படி என்ன உனக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை? என்னிடம் சொல்ல கூடாதுன்னா சொல்ல வேண்டாம், சொல்லனும்னு தோணிச்சின்னா மட்டும் சொல்லு" என்றேன். ஒரு சில மணித்துளிகள் மௌனமாய் இருந்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான். "மிஸ், எனக்கு என் அப்பான்னா ரொம்ப பிடிக்கும். என் கூட நிறைய விளையாடுவார். நான் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார். என் மீது ரொம்ப பாசமா இருந்தார். ஆனா திடீரென்று ஒரு நாள் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மாவையும் எங்களையும் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டார். பாட்டி சொன்னாங்க "அம்மாவை விவாகரத்து பண்ணிட்டார். திரும்ப வர மாட்டார்னு”. அப்பா அதற்கு பிறகு என்னை பார்க்க வரவேயில்லை. அம்மா வேலைக்குப் போய் என்னையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துகிட்டாங்க. இதுவரை ஒரு குறையுமில்லாம எங்களை பாசமா தான் பார்த்து பார்த்து வளர்த்தாங்க. ஆனா போன வாரம் தீடீரென்று ஆபிஸில் கூட வேலை செய்யுற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாங்க. கேட்டா "பாதுக்காப்புக்காக" அப்படின்னு காரணம் சொல்றாங்க. அத என்னால தாங்கவே முடியல. எனக்கு அவமானமா இருக்கு. அந்த ஆள பார்த்தாலே எனக்கு புடிக்கல. அம்மா அவரை அப்பான்னு கூப்பிட சொல்லி ரொம்ப வற்புறுத்துறாங்க. எனக்கு அம்மாகிட்ட பேசவே புடிக்கல. வீட்டுக்கு போகவும் புடிக்கல, வெறுப்பா இருக்கு மிஸ். இதுல பாண்டியன் வேற "என்னடா உன் புது அப்பா எப்படி இருக்கார்னு” மத்த பசங்க முன்னாடி கேட்டப்போ ரொம்ப அவமானமா போயிடுச்சி. அதான் கோவப்பட்டு அடிச்சிட்டேன். மிஸ்". "எனக்கு வாழவே புடிக்கல. செத்துப் போயிடலாம் போல இருக்கு". சொல்லி விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தான். அவன் அதுவரை பேசியதை பொறுமையாக கேட்ட எனக்கு "செத்துப் போயிடலாம் போல இருக்கு”ன்னு அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் தூக்கி வாரி போட வைத்தது. சாவைப் பற்றி யோசிக்கிற வயசா இது? ஐயோ கடவுளே இந்த பிஞ்சு மனசுல தான் எவ்வளவு வேதனை? என் கண்கள் கலங்கி விட்டன. எனக்கு அவன் கோபத்தில் நியாயம் இருப்பது புரிந்தது. அது எப்படி ஒரு பதினேழு வயது பையன் திடீரென்று இதுவரை அறிமுகமில்லாத ஒருத்தரை அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஏன் ஒரு சில பெற்றோர்களுக்கு இந்த விஷயங்கள் புரிவதேயில்லை. கணவன் மனைவியாக இருந்து விவாகரத்து செய்துக் கொண்டால் அது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை. அப்பா அம்மா ஆன பிறகு பிள்ளைகளைப் பற்றி யோசித்து தானே முடிவெடுக்க வேண்டும். பெற்றோர்கள் எடுக்கும் எந்த ஒரு தவறான முடிவும் குழந்தைகள் மன நிலையை எவ்வாறு பாதிக்கிறது என்று ஏன் இவர்கள் யோசிப்பதே இல்லை? என்று நினைத்தபோது கோபம் கோபமாக வந்ததது. அரவிந்தனை பார்க்க மனசு வேதனையாக இருந்தது. அதை மறைத்துக் கொண்டு அவன் முதுகில் தட்டிக் கொடுத்து. அமைதியான குரலில் சொன்னேன் "அரவிந்தா கோபப்படுவதால் நாம் எதையும் மாற்ற முடியாது. பொறுமையாக இரு. நான் உன் அம்மாவை அழைத்து இந்த தேர்வு நேரத்தில் உன்னை தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லுகிறேன். பாண்டியனையும் கூப்பிட்டு இனி அப்படி பேசக்கூடாதென்று கண்டிக்கின்றேன். நீ பொதுத் தேர்வுக்கு தயாராகும் இந்த நேரத்தில் வேறு எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. உன் அம்மா அவரது வாழ்கையைப் பற்றி எடுத்த முடிவு உன் வாழ்கையை பாதிக்கக் கூடாது. உனக்கு கிடைத்த அழகான வாழ்கையை நீ சந்தோசமாக வாழ வேண்டாமா? மனதை போட்டு வீணாகக் குழம்பிக் கொள்ளாதே. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கௌன்சலிங்ல அப்ளை பண்ணி வெளியூர்ல ஏதாவது ஒரு காலேஜ் செலக்ட் பண்ணி அங்க போய் படி. நீ நல்ல மதிப்பெண் வாங்கக் கூடிய பையன். கண்டிப்பாக நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் இருந்து நீ கொஞ்சம் விலகி இருக்க வாய்ப்பும் கிடைக்கும். கொஞ்ச நாட்களில் உனக்கே ஒரு மனப்பக்குவம் வந்துவிடும். நீயே எல்லா பிரச்சனைகளையும் சந்திக்க தயாராகி விடுவாய். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருப்பா. உலகில் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை. ஏதாவது ஒரு பிரச்சனை ஒவ்வொருவர் வாழ்கையிலும் சூறாவளிப் போல் வந்து வாழ்க்கையையே புரட்டிப் போடும். பின், தானே கடந்துப் போய் விடும். புரிந்ததா அரவிந்த்?. இனி ஒருநாளும் "செத்துப்போகலாம்” என்ற எண்ணம் மட்டும் உன் மனதில் வரவே கூடாது. சரியா? கோபத்தினால் எடுக்கும் எந்த முடிவும் வாழ்கையையே அழித்துவிடும் கண்ணா. கொஞ்ச நாள் பொறுமையாக இரு. எல்லாம் தானே மாறிவிடும். நீ சந்தோஷமாக உன் வாழ்க்கையை வாழணும். சரியாப்பா" என்றதும், "சரி மிஸ். இனிமே செத்துப் போறேன்னு சொல்ல மாட்டேன். சாரி மிஸ்" என்றான். ஆனால் எனக்கு அவன் மீது இன்னும் நம்பிக்கை விரவில்லை. மீண்டும் உறுதி செய்துக் கொள்ள நினைத்து "சத்தியமா இனி அப்படி யோசிக்க மாட்ட தானே, அரவிந்த்?" என்று கேட்டேன். "பிராமிஸா அப்படி யோசிக்க மாட்டேன் மிஸ். பை மிஸ். தாங்யு" என்று சொல்லிவிட்டு மெல்ல நகர்ந்த அந்த குழந்தையின் வலி என் நெஞ்சை பிசைந்தது. ஆனா ஏன் இவன் பெற்றோருக்கு இந்த பிள்ளையின் வலி புரியவேயில்லை? பிள்ளைகளுக்காக வாழ்வது தானே வாழ்க்கை?! அவர்கள் மனதைக் கொன்று விட்டு எப்படி இந்த பெற்றோரால் நிம்மதியாக வாழமுடிகிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அரவிந்தனை போல அன்புக்காக ஏங்கும் குழந்தைகள் அது கிடைக்காமல் தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்தால்? அய்யோ நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வளவு மனப் பாரத்தோடு இருக்கின்ற அரவிந்தன் எப்படிபண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதப் போகிறானோ என்ற கவலையோடு நான் வீட்டிற்கு கிளம்பினேன். கண்டிப்பாக நாளை அரவிந்தனை மீண்டும் அழைத்து அவனோடு பேசி ஆற்றுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனுக்காக பிரார்த்தனை செய்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் வலி என் நெஞ்சிலும் வந்தமர்ந்து கொண்டது. அவனை முற்றும். பெயர்: பு. அன்துவானேத் சுஜாதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.