அறம் சூழும்.
கைகளால் அள்ளிய வண்ணங்களை வானில் தெளிக்கிறேன்…
நித்தம் விநோத வானவில்கள்…
அதன் வளைவுகளில் சறுக்கி விளையாடுகிறேன்…
நானே தையலின் சிறு துளி என்று…
கவிதை மனதோடு வானத்தை இரசித்தப்படியே வசுமதி தொடரியில் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் வானத்தில் உள்ள மேகக் கூட்டங்களோடு ஒன்றிருந்தது. மேகங்கள் தம்மைத் தொடர்வதுப் போல உணர்ந்தாள். அவளது எண்ணங்கள் யாவும் அந்த மேகங்கள் மீதே இருந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், மனித எண்ணங்கள் பிற ஊகங்களுக்கு அப்பாற்ப்பட்டதுதானே. திடீரென வசுமதியின் கண்கள் எதிரில் அமர்ந்திருந்த ஆடவர் மீதுப்பட்டது.
அந்த ஆடவர் வசுமதியை ஊற்று நோக்கியப்படியே இருந்ததை அப்போதுதான் அவள் உணர்ந்தாள் போலும் சட்டெனத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டப்படி தன் இருக்கையில் நேர்த்தியாக அமர்ந்தாள். மீண்டும் அந்த ஆடவர் அவளைப் பார்த்தப்படியே இருக்கவும் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது போலும். கொஞ்சம் தன் கண்களில் கனல்களை எரியவிட்டு முகத்தைத் சட்டெனச் சன்னல் ஓரம் திருப்பிக்கொண்டாள்.
அவளது முகம் மட்டுமே திரும்பியதேத் தவிர அவளது உள்ளத்தில் அந்த ஆடவரை தனக்குத் தெரிந்த மொழிகளில் மனதார அர்ச்சனைச் செய்தாள். அவளது மூளைக்குள் ஒரு பக்கம் மட்டும் “இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே”, என்று கூறியவாறு தன் மூளையில் உள்ள தரவுகளை துரிதமாகச் சீர்படுத்திக் கொண்டிருந்தாள். ஒருவாரியாக தனது தரவுகளின் எந்தப் பக்கத்திலும் இந்த முகம் அச்சிடப்படவில்லை என்பதை உணர்ந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டப்படி மீண்டும் அவ்வாடவரின் பக்கம் திரும்பினாள். “அட என்னடா இது இந்த ஆளு இப்படிப் பார்க்கிறார்?” என்று எண்ணியவாரே அவரிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி துணிச்சலுடன் “அவரை நோக்கி என்ன சார்; ஏதும் வேண்டுமா?” என்றப்படி அதிகார தோரணையில் கேட்டாள்.
அதற்கு அந்த ஆடவர் சற்று தடுமாற்றத்துடன் பதிலளித்தார் “ஆ… ஒன்னும் வேண்டாம்ங்க”, என்றவாறே இடது புறம் திரும்பி தன் கை அசைவுகளுடன் கூறினார். வசுமதிக்கு தூக்கி வாரி போட்டது தன்னைத் தானே நொந்து கொண்டவள் தன் தலையை லேசாகத் தட்டினாள் சட்டென எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை பரிதாபம் எனும் சொல் வசுமதியின் கண்களில் இழையோடியது.
சுமார் 20-22 மதிக்கத்தக்க வயதைக் கொண்ட அந்த ஆடவரின் நிலை அவளது கண்களைக் கலங்கச் செய்தது. அந்த ஆடவரின் நிலைக் குறித்து வினவ எண்ணினாள்.
சற்று நிதானமாகவே, “வணக்கம் உங்களது பார்வைக்கு என்ன ஆனது? ஏன் இந்த நிலை?” எனக் கேட்டாள். இப்போது அவர் வசுமதியின் குரல் ஒலித்த திசைக்கு தன் தலையைத் திருப்பினார் பின் சற்றுத் தழுதழுத்த குரளில் “அது ஒரு பெரிய கதையம்மா”, என்றார்.
“வசுமதியோ உங்களுக்கு சொல்ல விருப்பமில்லை எனில் பரவாயில்லை விடுங்கள்”, என்றாள்.
ஒரு நிமிடம் மௌனத்திற்கு பின் அவர் தொடர்ந்தார். குறிப்பிட்டப் பள்ளியின் பெயர் சொல்லி “ நான் படிவம் ஒன்றில் படிக்கும் போது சக மாணவர்களின் கேலிவதைக்கு உள்ளானேன்”.
“அடிக்கடி எனக்கு இவ்வாறு நடைபெறும் போது நான் யாரிடமும் இதைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ள மாட்டேன் ஏனெனில் அவர்கள் வெளியில் சொன்னால் அடிவிழும் என மிரட்டினர்; அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நான் என் குடும்பத்தினருடன் கூட எதுவும் சொல்ல மாட்டேன்”.
“நாளுக்கு நாள் அவர்களது சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே போனது எனது நிறம், உடல் அமைப்பு போன்றவற்றை கேலி செய்வது மட்டுமல்லாமல் எனது பள்ளிப்பாடப் புத்தகங்களையும் கோப்புகளையும் மறைத்து வைத்து என்னைத் தேட வைத்தனர்”. “அன்றாடம் மன உளைச்சலுடன் பள்ளிக்குச் செல்வது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது”.
வசுமதி இடையே குறுக்கிட்டு கேட்டாள் “நீங்கள் வகுப்பு ஆசிரியரிடமோ, கட்டொழுங்குப் பிரிவு ஆசிரியரிடமோ சொல்லியிருக்கலாமே?” என்றாள்.
“ஆம், சொன்னேன் மாறாக எனக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என்று கதை கட்டினார்கள்”. “ஏனெனில் இனப் பாகுபாடு முளையிலேயே வளர்க்கப்பட்டிருக்கும் போலும்”, என்றார் தலையைக் குனிந்தப்படி.
“பிறகு என்னவாயிற்று?” என்றாள் வசுமதி.
“நான் வகுப்பாசிரியரிடம் தெரிவித்ததால் பள்ளி முடிந்து நான் கழிப்பறைக்கு செல்லும்போது சக மாணவர்கள் மூவரால் தாக்கப்பட்டேன்; அவர்கள் என்னை தொடர்ந்து தாக்கியதால் என்னால் எழ முடியவில்லை; உதவிக்கு யாரையும் அழைக்கவும் முடியவில்லை”. என்றார்.
“ஐயோ! அப்புறம்?” என்றாள் வசுமதி.
“சில நாழிகைகள் கழித்து கழிப்பறைக்கு வந்த ஒரு சில மாணவர்களின் உதவியால் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்”.
வசுமதி ஆர்வத்தின் விளிம்பில் இருந்தாள். “பின் என்னவாயிற்று?” என்றாள்.
“மூன்று நாள்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தேன். அதன் பின், பெற்றோரின் உதவியுடன் வீட்டிற்கு வந்தேன்”. “என்னைக் காண பள்ளியின் தலைமை ஆசிரியரும் கட்டொழுங்குப் பிரிவு ஆசிரியரும் வந்தனர்.” “முதலில் அவர்களின் வரவு என் மனதிற்கு மகிழ்வைத் தந்தாலும் அடுத்த கனமே ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுப்’ போல இருந்தது அவர்களது வார்த்தைகள். “ஒரு மாணவனின் உடல்நிலை மற்றும் மனநிலையை விட அவர்களது பள்ளிப் பெயர் பெரிதாக தென்பட்டது அவர்களுக்கு”.
வசுமதி இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள் “அப்படி என்னச் சொன்னார்கள்”, என்றாள் வசுமதி.
“இச்சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்றும் கூறினார்கள்”.
“மருத்துவமனையில் கண்டிப்பாக மருத்துவர்கள் விசாரித்து இருப்பார்களே”, எனக் கேட்டாள் வசுமதி.
“ஆமாம், விசாரித்தார்கள் சக மாணவர்கள் அடித்து விட்டதாகத்தான் கூறினேன் ஆனால் பின்பு தான் தெரியவந்தது.”
“என்னத் தெரியவந்தது?” என்றாள் வசுமதி.
“எனது மருத்துவ அறிக்கையில் நான் கழிப்பறையில் கால் வழுக்கி விழுந்து விட்டதால் தான் காயம் ஏற்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருப்பதாக என் அண்டை வீட்டுக்கார அண்ணன் படித்துக் கூறினார்”.
“ஏன் அண்டை வீட்டுக்கார அண்ணன் உங்களிடம் படித்துக் காட்டினார்; நீங்கள் முதலில் படித்துப் பார்க்கவில்லையா?” என்று தன் விசாரணைக் கேள்வியை தொடங்கினாள் வசுமதி.
அதற்கு அவ்வாடவர் “இல்லை எனக்கு மலாய் படிக்கத் தெரியாது”, என்று தலைக்குனிந்தவாறேக் கூறினார்.
வசுமதி கொஞ்சம் இரக்க குணத்தை கழற்றி தன் பக்கத்து இருக்கையில் வைத்து விட்டு மீண்டும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்க தொடங்கினாள். “சரி உங்கள் பெற்றோர் படித்துக்காட்டி இருக்கலாமே’, என்றாள்.
அதற்கு அவர் “என் பெற்றோர்களுக்கும் மலாய், ஆங்கிலம் மொழிகள் படிக்கத் தெரியாது; அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள்”, என்று கூறினார்.
நிலைமையைப் புரிந்து கொண்ட வசுமதி “சரி அதுக்கும் உங்கள் கண்கள் பார்வை இழந்ததற்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.
அவ்வாடவர் நீண்ட பெருமூச்சுடன் தொடர்ந்தார் “சிகிச்சை முடிந்து குணமாகிய சில மாதங்களில் மெல்ல என் கண் பார்வை குன்றியது என் பெற்றோர்களும் என்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; ஆனாலும் என் கண் பார்வையைச் சரி செய்ய இயலாமல் போனது மருத்துவர்கள் எனக்கு தலையில் அடிபட்ட காரணத்தால் தான் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு உள்ளதாகவும் அதற்கான சிகிச்சைச் செய்ய அதிக செலவாகும் என்றும் கூறினர். வசதியற்ற குடும்பச் சூழல் கொண்ட என் பெற்றோர்களால் எனக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போனது”. என்று தனது ஆற்றாமையைக் கூறினார்.
“அப்படி என்றால் உங்களை கேலிவதைக்கு உள்ளாக்கிய மாணவர்களின் பெற்றோர்கள் கூட உங்களுக்கு உதவ முன் வரவில்லையா?” என்று கேட்டாள் வசுமதி.
“இல்லை, ஏனெனில் பள்ளியில் எனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, மேலும் எனது மருத்துவ அறிக்கையில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனக்கு யாரும் உதவவில்லை”, என்றார்.
“அப்படி என்றால் உங்கள் பள்ளி படிப்பு?” என்று கேட்டாள் வசுமதி. மிகுந்த விரக்தியுடன் சிரித்த அவர் “கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரமா? என் பள்ளி படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்”, என்றார்.
கனத்த இதயத்துடன் கேட்டாள் வசுமதி “தற்போது வேலை செய்கிறீர்களா?” என்றாள்.
“ஆம், என் அண்டை வீட்டுக்கார அண்ணனின் உதவியுடன் சில பொருட்களை விற்று வருகிறேன்,” என்றார்.
“ஆனாலும் உங்களுக்கு படிப்பு இல்லாததால் சிரமமாக இருக்குமே”, என்றாள் வசுமதி.
ஆரம்பக் காலக்கட்டத்தில் எனக்கு சிரமமாகவே இருந்தது. பிறகு என் அண்டை வீட்டு அண்ணனின் உதவியுடன் ‘பிரேய்ல்’ எழுத்துருக்களை கற்றுக் கொண்டேன், தற்போது மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசவும் கற்றுக் கொண்டேன்”, என்றார்.
வசுமதி ஒரு முகமலர்ச்சியுடன் “நல்லது ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு மாடல்ல மற்ற யவை’, என்பதற்கு ஏற்ப கண்பார்வையற்ற நிலையிலும் கல்விக்கான முக்கியத்துவத்தை அறிந்து படித்துள்ளீர்கள், வாழ்த்துகள்”, என்றாள்.
மேலும் தொடர்ந்தாள் “மனம் வருந்தாதீர்கள் ‘எழுநிலை மாடம் கால் சாய்ந்து கழுதை கழுதை மேய்ப்பால் ஆயினும் ஆகும்’, என்று நறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவனுடைய வாழ்க்கை என்றும் நிரந்தரம் ஆனது அல்ல; அவன் எழு அடுக்கு மாளிகையில் மிகவும் சீரும் சிறப்போடு வாழ்ந்தாலும் அந்த மாட மாளிகை சரிந்து விழுந்து; அவன் வாழ்ந்த இடம் பாழ் அடைந்து போய்; கழுதைகள் மேயும் இடமாக மாறினாலும் மாறும், “எனவே அவர்கள் இழைத்தக் கொடுமைகளை மறந்து உங்கள் வாழ்வில் மேலும் முன்னேற வழிவகைகளைக் கண்டறியுங்கள்”, எனக் கூறி தன் நிறுத்தம் வந்தது என்று விடைபெற்றாள்.
மருவாரம், வானொலியில் முதன்மை செய்தியாக குறிப்பிடப்பட்ட பள்ளிப் பெயரை கூறி சட்ட ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டுள்ள மூன்று முன்னாள் மாணவர்களின் பெயரை கேட்டதும் நிமலனுக்கு (அதாவது இரயிலில் வசுமதியுடன் பயணம் செய்த ஆடவருக்கு) அதிர்ச்சித் தாங்க முடியவில்லை.
இந்தச் செய்தியைச் செவிமுற்ற வசுமதி தன் பேனாவுக்கு கிடைத்த மாபெரும் பரிசாகவே எண்ணினாள். இனி கேலிவதை செய்யும்; செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சாட்டை அடியாக அமையும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
தன்னுடன் ஓராண்டு காலத்திற்கும் குறைவாக படித்த நிமலனுக்கு மனதார அனுபவத்தைத் தெரிவித்தாள். முகம் நன்றாக நினைவில் இல்லாவிட்டாலும் அவனுக்கு நிகழ்ந்த சம்பவம் பள்ளிப் படித்த காலக்கட்டத்தில் யாராலும் மறக்க முடியாத சம்பவமாகவே இன்று வரை உள்ளதை நினைத்தாள். அன்று செய்ய முடியாது போன உதவியை இன்று செய்ததில் மனநிறைவு கொண்டாள்.
‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சுழம் சூழ்ந்தவன் கேடு’,
எனும் வள்ளுவப்பெருமான் கூறிய திருக்குறளை மனதில் கூறியவாறே தன் மகிழுந்தை செலுத்தத் தொடங்கினாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்