Kalyanasundaram
சிறுகதை வரிசை எண்
# 8
அன்பை முறிக்கும்...
இரவு சரியாக உறக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலே சில நிமிடங்கள் தூங்குவதும் பின்பு விழிப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தூக்கம் முற்றுமாக கலைந்து எழுந்தேன். இன்றுசெல்வகுமாரை சந்தித்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தேன். அவன் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாகவே சென்று சந்திக்க வேண்டும். அவனைக் கண்டிப்பாகச் சந்தித்தாக வேண்டும் என்பதற்காக ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை. அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்து விட்டேன்.
கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தேன். வெளியில் உலகம் இருளில் மூழ்கிக் கிடந்தது. பொழுது விடிந்ததற்கான அறிகுறி இல்லை. வழக்கமாக ஐந்து மணிக்கு முன்னதாகவே ஆள் நடமாட்டம் தொடங்கிவிடும். ஆனால் இன்று யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. பகலிடமிருந்து இரவு சிறிது நேரத்தைக் கடன் வாங்கியிருக்க வேண்டும். இன்னும் இருட்டாகவே இருந்தது. ஜன்னலின் அருகே இருந்த மொபைல் ஃபோனில் மணியைப் பார்த்தேன். மூன்று மணி ஐந்து நிமிடங்கள். எனக்காக உலகம் எவ்வாறு முன்னதாகவே விழித்துக் கொள்ளும். நான் தான் அவசரத்தில் எழுந்து விட்டேன். ஐந்து மணிக்கு மேல்தான் வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியும். அதுவரையில் மீண்டும் தூங்குவதற்கான எந்தச் சாத்திய கூறுகளையும் என் உடலும் மனமும் சொல்லவில்லை. ஜன்னலைச் சாத்திவிட்டு மெல்ல நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். ரஞ்சனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு விளக்கில் அறை முழுவதும் பரவிக் கிடந்தது நீல நிற ஒளி. அந்த வெளிச்சத்தில் ரஞ்சனியின் முகம் பளபளப்பாக மின்னியது போல் ஒரு தோற்றம். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவள் அருகில் சென்று அவளது இடது கையைப் பற்றினேன். திருமணம் முடிந்து பதினைந்து வருடங்களில் பெரும்பாலான நாட்கள் எனக்கு முன்னதாகவே எழுந்து விடுவாள். நான் முன்னதாக எழுந்தால் நான் நடக்கும் ஓசையைக் கேட்டு உடனே கண் விழித்து விடுவாள். இன்று நான் தொடுவது கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாள். தூக்க மாத்திரையின் உபயத்தால் உணர்வு இல்லாமல் கிடக்கிறாள். கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது கழுத்து வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். சென்ற வாரத்தில் ஒரு நாள் திடீரென்று கழுத்து வலி அதிகரித்து தாங்க முடியாமல் அலறினாள். மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்ததில் கழுத்தின் அருகே நான்கு சென்டிமீட்டர் அளவிற்கு உருண்டை வடிவிலான ஒரு கட்டி. உடனடியாக அதை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் அது வளர்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் பத்து லட்சம் வரை செலவு ஆகலாம். சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை ஒரு குடும்பத்தையே புரட்டிப் போட்டு விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோலத் தான் எனக்கும் நேர்ந்து விடுமோ என்ற பயம். நடுத்தர குடும்பம். ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை. மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான அளவு சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். சேமிப்பு என்று பெரிதாகக் கிடையாது. முக்கியமாக இதுவரை யாரிடமும் கடனாகப் பணம் வாங்கியது கிடையாது. முதன் முறையாக இவ்வளவு பெரிய செலவு வருவதை எண்ணி திக்குமுக்காடி விட்டேன். இன்சூரன்ஸ் பர்சனல் லோன் என்று கிட்டத்தட்ட எட்டு லட்சம் வரை ஏற்பாடு செய்தாகிவிட்டது. மீதம் இரண்டு லட்சம் தேவை. பணத்திற்கான தேவை வந்தவுடன் என் மனதில் தோன்றிய நபர் செல்வகுமார்.
சிறு வயதில் இருந்தே நானும் செல்வகுமாரும் நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தோம். அன்று நடந்த சம்பவங்கள் இன்றும் மனதில் பசுமையாக எங்களது நட்பை வாழ வைத்துக் கொண்டிருக்கிறன. எங்கள் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அவரைவிட அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பிற்கு தான் அதிக பயம். நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வகுப்பிற்கு அனைவரையும் இந்திய வரைபடம் எடுத்து வரச் சொல்லியிருந்தார். ஆனால் வழக்கம்போல் எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். வரலாற்று வகுப்பு ஆரம்பமானவுடன் மாணவர்கள் அனைவரையும் இந்திய வரைபடத்தை எடுக்கச் சொன்னார் ஆசிரியர். அதைக் கேட்டு என் கைகள் நடுங்கியது. கண்ணீர் வெளிவரத் தயாராக இருந்தபோது செல்வகுமார் கையில் இரண்டு இந்திய வரைபடம் வைத்திருந்ததை பார்த்தேன். அவனிடம் அதிலிருந்து ஒன்றை கேட்டேன். முதன்முதலாக அவனிடம் வாங்கிய கடன். எதைப் பற்றி யோசிக்காமல் அவன் வைத்திருந்த வரைபடத்திலிருந்து ஒன்றை என்னிடம் தந்தான். ஆசிரியரிடமிருந்து அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டதால் நான் அடைந்த ஆனந்தத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை எத்தனையோ முறை
நாங்கள் இருவரும் பேனா பென்சில் பேப்பர் என்று மாற்றி மாற்றிக் கடன் வாங்கியிருக்கிறோம்.
இன்றும் அதேபோல் தான் தொடர்கிறது எங்கள் நட்பு. ஒரு வாரத்துக்கு முன்பு பணம் தேவை என்று அவனுக்கு ஃபோன் செய்து கேட்டவுடன் உடனடியாக 'அதனால என்ன உடனே ரெடி பண்ணி தர்றேன்' என்று சொல்லியிருந்தான். அதைக் கேட்டு என் சுமை பாதி அளவு குறைந்து போனது. பணம் வாங்குவதற்காக மறுநாள் காலையில் அவனது வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் புதிதாக வண்டி ஒன்று இருந்தது. மாடியிலும் புதிதாகக் கட்டிட வேலைகள் நடந்து முடிந்து வீடு பிரகாசமாக இருந்தது. அவன் சொந்தமாகத் தொழில் செய்து வருவதால் நிச்சயமாகப் பணம் வைத்திருப்பான். உடனடியாகக் கிடைத்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் ஓரிரு நாட்களில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லி அன்று என்னை அனுப்பி வைத்தான். நாட்கள் மெல்ல கடந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அவனது நிலைமை என்னவென்று தெரியவில்லை. நேற்று முழுவதும் அவனுக்கு ஃபோன் செய்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவனிடம் ரஞ்சனியின் நிலைமையைப் பற்றிப் பேசியிருந்தால் உடனடியாக எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருப்பான். நான் அவனிடம் பணத் தேவைக்கான காரணத்தைச் சொல்லவில்லை. அது கூட அவன் தாமதப் படுத்துவதற்கான காரணமாக இருக்கலாம். இன்று அவனை அதிகாலையில் வீட்டில் சென்று சந்தித்து ரஞ்சனியின் நிலைமையைப் பற்றிப் பேசிப் பணம் பெற்று விட வேண்டும் என்று புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வெகுநேரம் ஆகி விட்டது. மணி ஐந்தை கடந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டே கடிகாரத்தை பார்த்தேன். மூன்று மணி முப்பது நிமிடங்கள். அறையிலிருந்து வெளியில் வந்து சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தேன். நேரம் செல்லவே இல்லை. நேரம் போதவில்லை என்று சொல்பவர் யாருக்கேனும் எனது நேரத்தைக் கடன் கொடுத்தால் எப்படி இருக்கும். நிச்சயமாக முடியாது. நேரம் தன் இயல்பில் சென்று கொண்டிருக்கிறது. நமது எண்ணங்களும் சிந்தனைகளும் தான் அதை வேகமாகவும் மெதுவாகவும் ஓட்டிக் கொள்கின்றன. ஒரு வழியாக மணி ஐந்தை கடந்தபொழுது வீட்டிலிருந்து புறப்பட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தைச் செலவு செய்தாக வேண்டும். காலையில் அதற்கு ஏதுவான இடம் தேநீர் கடை. கால்கள் என்னை அறியாமலே வேகமாக நடந்தது. எனக்கு இவ்வளவு வேகம் தேவையில்லை. வேகத்தை யாருக்காவது கடன் கொடுத்துவிட்டு மெதுவாக நடக்க வேண்டும். எண்ணங்கள் எதையெதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறது. தலையைச் சுற்றி கடன் என்ற வார்த்தை மட்டும் ஊறிக் கொண்டே இருக்கிறது. கடையை அடைந்தவுடன் தேனீர் சொல்லிவிட்டு நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன். கடன் செய்திகளைத் தவிர கண்ணில் ஒன்றும் படவில்லை. இந்தியா மற்ற நாடுகளுக்கு வழங்கிய கடன். மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த கடனைப் பற்றிய செய்திகள். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் நகை கடன் தருவதாக வங்கியின் விளம்பரம் ஒன்று. அடுத்ததாக இருந்த செய்தி அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவரின் கெடுபிடி தாங்க முடியாமல் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலதிபர். அவரது மனைவி இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி. ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அவர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் இப்படி எல்லாம் செய்வார்களா. செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு தேனீரை அருந்தினேன். தேனிருக்கான பணத்தை கொடுத்துவிட்டு கடையைச் சுற்றி முற்றி பார்த்தேன். நான் எதிர்பார்த்த அந்தப் பலகை இல்லை. நான் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கடைக்காரர் "என்ன பாக்குறீங்க" என்றார்.
"டீக்கடையில எல்லாம் கடன் கிடையாதுன்னு ஒரு போர்டு வச்சிருப்பாங்களே அத காணோமே?"
"நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. முன்னாடியெல்லாம் கடன் வாங்குனா திருப்பிக் கொடுக்கணும்னு எண்ணம் இருக்கும். ஆனா இப்ப எல்லாம் கடனை வாங்கிட்டு ஏமாத்துறவங்க தான் ஜாஸ்தி. அந்த மாதிரி போர்டெல்லாம் வைக்கிறதில்ல. வைச்சா தான் அதைப் பார்த்து இந்தக் கடையில கடன் கொடுப்பாங்கன்னு நிறைய பேர் கடன் சொல்லுவாங்க."
அவர் சொன்னதை கேட்டுச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன்.
இன்னும் நான்கு தெருக்கள் கடந்து சென்றால் செல்வகுமாரின் வீடு. பொழுது விடிந்து சூரியன் மெல்ல உலகத்தை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. செல்வகுமாரிடமிருந்து இன்று நிச்சயம் பணம் கிடைத்துவிடும் என்று ஏதோ ஒருவித நம்பிக்கை என் மனதில். இன்னும் ஒரு வாரத்தில் ரஞ்சனிக்கு அறுவை சிகிச்சை. செல்வகுமாரை நம்பி வேறு யாரிடமும் பணம் கேட்கவும் இல்லை. ஒருவேளை செல்வகுமார் பணம் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. திடீரென்று தோன்றிய சிந்தனை மனதை பதற வைத்தது. என் எண்ணங்கள் எங்கெங்கோ சிதறி பறந்தது. நான் படித்த கதைகள் பார்த்த படங்களிலிருந்து ஒரு காட்சியை என் மனம் கடன் வாங்கியது. ஒருவேளை செல்வகுமார் பணம் இல்லை என்று சொல்லிவிட்டால் அவன் வீட்டிலிருந்து யாரையாவது ஆள் வைத்துக் கடத்தி விட வேண்டும். அவனை மிரட்டிப் பணம் வாங்கி ஆக வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வில்லனின் மனநிலைமைக்கு மாறிவிட்டது என் மனது. என்ன ஒரு கொடூரமான சிந்தனை. பணமென்று வந்தவுடன் மனம் எதையோ யோசிக்கிறது. ஒரு நிமிடம் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டேன். கண்களை மூடி இது போன்ற சிந்தனைகளை இத்துடன் யோசிக்க கூடாது என்று எணணிப் புதைத்துக் கொண்டு கண்களைத் திறந்தேன்.
மெதுவாக நடந்து செல்வகுமார் வீட்டை அடைந்தபொழுது வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான்.
நான் வருவதை அவன் கவனித்து இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் தெரியாதது போல் தொடர்ந்து தன் வேலையைச் செய்துகொண்டிருந்தான். காம்பவுண்ட் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். அப்போதும் அவன் திரும்பவில்லை.
"குமார்... குமார்..."
அவன் திரும்பவில்லை.
மீண்டும் சத்தமாக
"குமார்...."
அவன் திரும்பினான். ஏன் காலையிலே இங்கு வந்து தொல்லை தருகிறாய் என்பது போல் அவனது பார்வை என்மேல் விழுந்தது.
"என்னடா" என்றான்.
"இல்ல குமாரு நேத்து ஃபுல்லா ஃபோன் பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கல. அதான் நேர்ல பாத்துட்டு போகலாம்னு வந்தேன்."
அதற்கு அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.
"சொல்லு என்ன விஷயம்?'
அவன் முக பாவங்கள் சரியாக இல்லை. இருந்தாலும் எனக்கு இப்போது பணம் தேவை.
"இல்லடா பணம் வேண்ம்னு போன வாரம் கேட்டு இருந்தேனே அதான் என்ன ஆச்சு குமாரு?"
"ஒரு வாரம் ஆகும்னு சொன்னேன். கரெக்டா ஒரு வாரம் கழிச்சு வந்துட்ட. என்ன பணம் தராம ஏமாத்திடுவேன்னு நினைச்சயா?"
"அப்படியெல்லாம் இல்ல டா. உன் மேல நம்பிக்கை இல்லாமலா?" கொஞ்சம் அர்ஜென்ட்..."
"சரி நான் ரெடி பண்ணிட்டு உனக்குச் சொல்றேன்."
"ரெண்டு வாரத்துல தர்ரேன்னு சொல்லி ரெண்டு லட்ச ரூபாய் பணம் வாங்குன. ரெண்டு வருஷம் ஆகப்போகுது அதான்..."
அதற்கு மேல் அவனிடம் அழுத்தமாகப் பேசுவதற்கு மனமில்லை.
"என்னடா காசு கொடுத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொல்லிக் காட்டுறியா? நல்ல சம்பாதிக்கிற. மாசம் சம்பளம் வேற. உனக்கு எதுக்கு இப்ப காசு?"
அவனிடம் நான் கடன் வாங்க வந்ததுபோல் இருந்தது அவனுடைய பேச்சு.
"அப்படியெல்லாம் இல்லடா. கொஞ்சம் அவசரம். ரஞ்சனிக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் இருக்கு. அதான் இப்ப பணம் தேவைப்படுது. நீ பணத்தை திருப்பிக் கொடுத்தா எனக்கு உதவியா இருக்கும்"
"ச்சே... என்ன மனுசன் நீ... பணத்துக்காகப் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லுற. கேட்கவே அசிங்கமா இருக்கு. பணமாட முக்கியம். இன்னும் ரெண்டு மாசத்துல நீ கொடுத்த காசை வட்டியோட உன் வீட்டில் வந்து தூக்கி போடுறேன். அதுவரைக்கும் என்னைத் தொந்தரவு பண்ணாத."
சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். 'சடால்' என்று சாத்திய கதவு என் முகத்தில் அடித்தார் போல் இருந்தது.
ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் சிலைபோல நின்றேன். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டதற்கு இந்த நிலைமையா. கடன் அன்பை முறிக்கும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் இன்று முதல் முறையாக அதை உணர்ந்து நிற்கிறேன்...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்