logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

கயழ்விழி (Kayal)

சிறுகதை வரிசை எண் # 10


சட்டத்தில் ஓட்டை - கயல்விழி "10 வயது சிறுமி நிஷாவை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப் பட்ட சந்தேக நபர் முருகேசன் சற்றுமுன்னர் சிறையில் தற்கொலை. இதுவரை பெண் பொலீஸ் அதிகாரிகள் இருவரின் தற்கொலைக்கு காரணம் தெரியாத நிலையில் சிறைக் கைதி முருகேசனின் தற்கொலை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்ற செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றாள் சிறுமி நிஷாவின் தாய் ராணி. 'ஐயோ இது என்ன கொடுமை ஏன் இப்படி ஆனது' என்று மனதிற்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். அருகில் இருந்த நிஷாவின் பாட்டி "பிஞ்சு குழந்தைய துடி துடிக்க கொன்னுட்டு அவனால நிம்மதியா இருக்க முடியுமா...? மனசாட்சி குத்தி இருக்கும் அது தான் தற்கொலை செய்துகொண்டிருப்பான்" என்றாள். 'பதில் சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை. இவர்கள் அனைவரும் முருகேசன் தான் கொலை செய்திருப்பான் என்று முடிவு செய்துவிட்டார்கள் நாம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்பதை புரிந்துகொண்டு அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். காதுகளில் தனது மகளில் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. "அம்மா நான் கடைக்கு போய்ட்டு 10 நிமிடத்தில் வந்து உனக்கு உதவி செய்கிறேன்" இது தான் நிஷா இறுதியாக ராணியிடம் கூறிச் சென்றது. 10மணி நேரத்தின் பின் கடைக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டாள். கடைக்குச் சென்ற குழந்தையை காணோமே என வெளியே சென்று தேடிய போது முருகேசன் உடன் கடை பக்கம் சென்றதாக எதிர் வீட்டுக்காரர் கூறினார். அப்படியானால் வந்து விடுவாள் என காத்திருந்தாள். முருகேசன் மட்டுமே வந்தான் "நிஷா எங்க அண்ணா" என்று கேட்ட போது "அம்மா நான் குறுக்கு பாதையால ராமசாமி வீட்டுப் பக்கம் போனேன், அவர் வீடு பூட்டி இருந்திச்சு கொஞ்ச நேரம் நின்னு பார்த்திட்டு வந்திட்டேன். நிஷா நேராக கடை பக்கம் போய்டா மா.. இப்ப குழந்தை வந்து இருக்கனுமே 1மணி நேரத்துக்கு மேலாச்சி என்ன பொண்ணு மா நீ" என சொல்லியபடி வந்த வழியே நிஷாவை தேடிச் சென்றார். 10 நிமிட நடையின் பின் கடைக்குச் சென்ற ராணி மற்றும் முருகேசன், "நிஷா கடைக்கு வந்தாளா" என கேட்ட போது உதட்டை பிதுக்கினார் கடைக்காரர். "இல்லையே வரல்லையே..." என்றார். "இல்லையே கடை பக்கம் தானே குழந்தை வந்திச்சு..." என முருகேசன் கூறிய போது "வந்தா நா ஏன் பொய் சொல்ல போறேன். வரவே இல்லை" அடித்து மறுத்தார் கடைக்காரர். CCTV இல்லாத வீதிகள். கடைகாரர் சொல்வதை நம்புவதை தவிர வேறு வழி இல்லை. "ஐயோ என்னாச்சி என் குழந்தைக்கு... எங்கடா கண்ணு போன..." என கதற ஆரம்பித்தாள் பெத்த தாய். ராணியின் கதறல் சத்தம் கேட்டு அவ்விடத்தில் கூடிய கிராம மக்கள் ராணிக்கு ஆறுதல் சொல்லியபடியே நிஷாவை தேட ஆரம்பித்தார்கள். அப்போது அங்கு வந்த ராணியின் எதிர்வீட்டுக் காரர் "உங்களுடன் தானே நிஷா வந்தாள், என்ன செய்தீர்கள் நீங்கள்" என கேட்க அங்கு நின்ற நிஷாவின் உறவினர்கள் முருகேசன் பக்கம் திரும்ப எல்லோரும் சேர்ந்து முருகேசனை மிரட்ட ஆரம்பித்ததுடன் சிலரது முரட்டு கரங்கள் முருகேசன் மீது இடியாய் இறங்கியது. முருகேசன் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அப்போது அங்கு வந்த பாபு, ராஜா, ரூபன் மூவருமே முருகேசனுடன் நிஷா குறுக்கு பாதை வழியாக சென்றதை பார்த்ததாக கூறியதும் ஊர் மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. பொலீஸாருக்கு தகவல் பறந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் ஊர் மக்களுடன் இணைந்து நிஷாவை தேட ஆரம்பித்தனர். பத்து மணி நேர தேடலின் பின் வாயில் துணி வைக்கப் பட்டு கட்டப்பட்ட நிலையில், உடல் முழுவதும் இரத்தத்துடன் உயிரில்லா பிணமாக கிடைத்தாள். மகளை சடலமாக பார்த்த ராணி மயங்கி விழுந்தாள். நிஷாவின் வாய் கட்டப் பட்டிருந்தது முருகேசனின் லுங்கியால் என்பதை அடையாளம் கண்டுகொண்ட உறவினர்கள் அவனது உயிரை எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடனடியாக தலையிட்ட பொலீஸார் முருகேசனை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்றதுடன் நிஷாவின் சடலத்தை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பினார்கள். 'கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்' என்பது சட்டத்தில் எப்போதுமே இல்லை. சாட்சி போதும் என்பது போல் முருகேசன் விசயத்திலும் நடந்தது. சாட்சிகள் முருகேசனுக்கு எதிராக இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். என்ன தான் சட்டம் முருகேசனை குற்றவாளி என கூறினாலும் நிஷா மீது அதிக அன்பு வைத்திருந்த முருகேசன் தன் மகளை கொலை செய்திருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருந்தாள் ராணி. முருகேசன் மனைவிக்கு ஆறுதல் சொல்லச் சென்றாள், " அக்கா அவர் எந்த தப்பும் பண்ணல அக்கா, தப்பு பண்ணலனு நிரூப்பிக்கணும் என்று சொல்லிடே இருந்தார் அக்கா, என்ற முருகேசனின் மனைவி "அவர யாரோ சிறையில கொன்னுட்டாங்க அக்கா" என்றாள். "என்னம்மா சொல்றா.! நீ சொல்றது நிஜம் என்றா கண்டிப்பா என் பொண்ணுக்கும் உன் கணவருக்கும் நீதி கிடைக்கனும் மா" என்றாள். "ஆமாக்கா அவருக்கு தெரிஞ்ச பொலீஸ் பொண்ணு ஒன்னு இருக்காங்க, அவங்க கிட்ட உதவி கேட்கலாம்" என்றாள். இருவரும் நீதிக்கு போராட ஆரம்பித்தனர். வழமை போல எல்லோருக்கும் அந்த இரவு முடிந்து விடியல் வந்த போது மூன்று பேருக்கு மட்டும் விடியவே இல்லை, ஆம் ரூபன், ராஜா, பாபு மூவரின் உடல்களும் அவர் அவர் வீட்டில் சடலமாக கிடைத்தது. வாயில் நுரை தள்ளிய படியே இறந்து கிடந்தார்கள். அவ்வளவு தான் ஊரே அதிர்ந்து போனது. பாபு, ரூபன், ராஜா மூவருமே ஜமீன் வீட்டு வாரிசுகள். பெரியப்பா சித்தப்பா மகன்கள் இதில் பாபுவிற்கு திருமணமாகிவிட்டது. ஏழை குடும்பத்து பெண்ணான பாபுவின் மனைவி சோபா அந்த வீட்டில் வேலைகாரியாக தான் இருக்கிறாள். குடும்பத்துடன் எந்த ஒட்டு உறவும் வைத்திருக்க கூடாது என சோபாவிற்கு கட்டுப்பாடு இருப்பதால் திருமணம் ஆனதுமே அம்மா அப்பாவை மறந்து விட்டாள். ரூபன் மற்றும் ராஜாவிற்கு ஊரில் நல்ல பெயர் கிடையாது. இருப்பினும் பெரிய இடத்து பையன் என்பதால் சில பெண்கள் தானாக சென்று இவர்களிடம் சிக்கிக் கொள்ளாவர்கள். கர்ப்பமானால் கூட காசை கொடுத்து சமாளித்து விடுவார்கள். கிராமத்து பொலீஸ் இவர்களின் கையில் தான், இவர்கள் சொல்வது தான் அங்கு சட்டம். திடீரென இவர்களின் மரணம் ஊரில் பீதியை கிளப்பி இருந்தது. காவல்துறை தன் கடமையை செய்தது. மூன்று சடலங்களும் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, விசம் கலந்த மதுவை அருந்தியதால் மூவருக்கும் மரணம் ஏற்பட்டுள்ளது என வைத்திய அறிக்கை வெளியானது. இதுவும் தற்கொலையாக இருக்கும் என மக்கள் சந்தேகப்பட்டனர், ஆனால் ஜமீன் குடும்பம் இல்லை இது கொலை தான் என கூறி பொலீஸ் நிலையத்தை அடித்து உடைத்து அராஜகம் செய்ததால் பிரச்சனை பெரிதாக வெடித்தது. ஏற்கனவே பொலீஸ் ஸ்டேசனில் இரண்டு பொலீஸ் அதிகாரிகளின் தற்கொலை, கற்பழிப்பு வழக்குகள், தற்போது மூன்று சந்தேக மரணம்... எதற்கும் பொலீஸாரிடம் பதில் இல்லை. ஒரு மாத காலத்திற்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்து ஒப்படைக்க வேண்டும் என நீதி மன்றம் பொலீஸாருக்கு ஆணையிட்டது. "வைஷாலி...." "யெஸ் சார்." "நீ யோசிச்சு தானே முடிவு எடுத்த.?" "யெஸ் சார்..." "ஆல் தீ பெஸ்ட்" என்றார் மேலதிகாரி! "கிராமத்து பொலீஸ் ஸ்டேசனுக்கு மறுபடியும் ஒரு பொண்ணு தான் அதிகாரியா வந்திருக்காம்" "ஆமா ஆம்புளைங்களாலயே எதுவும் பண்ண முடில இவங்க தான் எல்லாம் கண்டு பிடிச்சு கிழிக்க போறாங்க" என ஊர் மக்களின் வழமையான வெட்டி பேச்சுகள் ஆரம்பமானது. பதவியேற்ற முதல் நாளே பைல்களை தூசி தட்ட ஆரம்பித்தாள் வைஷாலி, வைஷாலி, பெயரில் மட்டும் தான் பெண், கட்டுமஸ்த்தான உடம்பு, பெரிய உதடுகள், கூறிய பார்வை, கழுத்து வரை வெட்டப் பட்ட தலைமுடி, பொட்டு இல்லாத நெற்றி, என பெண்ணுக்கான எந்த அறிகுறியும் வைஷாலியிடம் கிடையாது, பதவியேற்றதும் ஏளனமாக பார்த்த சக பொலீஸ் அதிகாரிகள் வைஷாலியின் அதிரடி விசாரணையில் அதிர்ந்து போனார்கள். பெண் பொலீஸாரின் மரணத்தையே முதலில் விசாரிக்க ஆரம்பித்தாள், ஸ்டேசனில் யாரெல்லாம் இருந்தீர்கள்? எப்படி இறந்தார்கள்,? காதலித்தார்களா? ஸ்டேசனுக்கு யாரெல்லாம் அடிக்கடி வருவார்கள் என தொடங்கி விழிகளை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தாள், விசாரணையின் முடிவில் தற்கொலைகளுக்கு காரணமாக சிலரை சந்தேகப்பட ஆரம்பித்தாள். கறுப்பு ஆடுகள் சில காவலர்களாகவும் இருக்கலாம் என தோன்றியது. கற்பழித்து கொலை செய்யப் பட்ட நிஷாவின் தாயார் ராணியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். "மேடம் முருகேசன் அண்ணா என் கொழந்தைய கொலை செய்திருக்க மாட்டார்" என்றாள் ராணி. கண்கள் சிவந்த வைஷாலி "அப்படின்னா ஏன் இதை பொலீஸ்ல சொல்லல?" அதட்டினாள் வைஷாலி. "சொன்னேன் மேடம் நான் சொன்னத பொலீஸ்காரங்க கண்டுக்க கூட இல்ல..." என கண்களை கசக்கினாள். "உங்களுக்கு யார் மேல சந்தேகம்?" "யார் மேலயும் இல்ல மேடம் எப்படியாச்சும் என் பொண்ணு மரணத்திற்கு நீதி வேணும்" என அழ ஆரம்பித்தாள் ராணி. கண்டுகொள்ளாத வைஷாலி "சரி தேவைப்பட்டா மறுபடியும் வருவேன்" என்று கூறிவிட்டு, முருகேசன் மனைவியை சந்திக்க சென்றாள், முருகேசனின் புகைப்படம் தான் வரவேற்றது வைஷாலியை. ஒரு நிமிடம் முருகேசனின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷாலி "உங்க கணவரின் தற்கொலைக்கு என்ன காரணம்? குற்ற உணர்ச்சி தானா? இல்ல வேற ஏதும் காரணம் இருக்கும்னு சந்தேக படுறீங்களா" என மிரட்டும் விழிகளை உருட்டியபடி கேட்டாள். "ஐயோ..அவர் தற்கொலை செய்திருக்கவே மாட்டார் மேடம், அவர் தப்பு பண்ணவே இல்லை மேடம்" என அழ ஆரம்பித்தாள். "ஏம்மா அழுறத நிறுத்து... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு" என்றாள் மிரட்டலாக. ஒவ்வொரு வீட்டிலும் வைஷாலிக்கு ஒவ்வொரு துப்பு கிடைத்தது, தற்கொலைகளுக்கு காரணம் புரிந்தாலும் சட்டத்திற்கு சாட்சியே தேவைப்பட்டது. ஜமீன் வீட்டில் விசாரணை தொடர்ந்தது, "எழவு விழுந்த வீட்ல எதுக்கு பொலீஸ் விசாரணை வெளிய போம்மா" என்ற ஜமீனின் வாய்க்கு "இது எங்க கடமை, கடமைய செய்ய விடாம தடுத்த உங்களை கைது செய்ய எங்களுக்கு அனுமதி இருக்கு" என சொல்லி பூட்டு போட்டாள். எல்லோரிடமும் விசாரணையை முடித்த வைஷாலி சோபாவிடம் விசாரிக்க ஆரம்பித்த போது குறுகிட்டார் ஜமீன், "அவ வீட்டை விட்டு வெளிய போக மாட்டா... கோயிலும் வீடும் தான் அவளுக்கு தெரியும். அவகிட்ட என்ன விசாரணை" என்றார். "விசாரணை இருக்கு..." திமிராக சொல்லிவிட்டு சோபாவிடம் "உங்க கணவரின் மரணத்தில் யார் மீதும் சந்தேகம் இருக்கா" என கேட்ட போது "அதெல்லாம் இல்ல மேடம் அது தற்கொலை தான்..." என்றாள் வெறுப்பாக. அடுத்து ஊர் மக்களிடம் விசாரணை செய்த வைஷாலிக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி காத்திருந்தது. தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண் பொலீஸ் அதிகாரிகளும் கருவை கலைக்க வயதான ஊர் பாட்டி ஒருவரிடம் சென்றது தெரியவந்தது. பாட்டியிடம் சென்று தகவலை உறுதி படுத்திக்கொண்டாள். நிஷாவின் சடலம் உட்பட பெண் பொலீஸாரின் சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் கற்பழிப்பு, கருக் கலைப்பு என அனைத்திற்கும் ஜமீன் வாரிசுகள் காரணமாக இருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே இறந்து விட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. ஆனால், காதலிக்காமல் எப்படி கர்ப்பமானார்கள்? தனது பெரிய உதட்டை கடித்தபடி யோசித்து கொண்டிருந்த வைஷாலி தன் பின்னால் யாரோ வருவதாக தோன்றியது. எதுவுமே கண்டுகொள்ளாமல் யோசித்து கொண்டிருந்தாள். திடீரென எழுந்த வைஷாலி தன்னை தாக்க வந்த கைகளை தடுத்து ஒரே குத்து விட்டாள். மாயாவி கதையில் வரும் "தடால்" சத்தம் தான். நிலை தடுமாறி கீழே விழுந்த சக பெண் பொலீஸ் அதிகாரியை அன்பாக பேசுவது போல் "சொல் என்னை யார் தாக்க சொன்னார்கள்" என வினவினாள். "நா தான்..." என வாய் திறக்கும் முன் அன்பு வம்பானது 'தடால்' அடுத்த அடி விழுந்ததும் இனி உண்மையை மறைக்க முடியாது என நினைத்து அனைத்தையும் உளறினாள். சரி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் நீயும் யாரிடமும் சொல்லாதே என கூறி அனுப்பி வைத்தாள் வைஷாலி. காலையில் எப்போதும் போல் காவல் நிலையம் சென்றவள் குற்றவாளியை கைது செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள். அப்போ 'வைஷாலி வைஷாலி' என கத்தினாள் கான்ஸ்டபிள் ரேணு. ரேணுவிற்கு மட்டும் தன்னை பேர் சொல்லி அழைக்கும் உரிமையை கொடுத்திருந்தாள் வைஷாலி. "என்னாச்சி ஏன் இப்படி கூச்சல் போடுற..." மிரட்டினாள். அப்போ "அங்க வந்து பாரு அடுத்த பெண் பொலீஸ் தற்கொலை" என்றாள். சம்பவ இடத்திற்கு சென்ற வைஷாலி அதிர்ந்து போனாள். ஆம் நேற்று தன்னை தாக்க வந்த அதே பெண் பொலீஸ் தான். இருந்த ஒரே சாட்சியும் போய் விட்டது. மனமுடைந்து போனாள். வேறு வழி இல்லை வேலையை இராஜினாமா செய்ய முடிவு எடுத்தாள். மேலதிகாரியை சந்திக்க சென்றாள். "வா வைஷாலி..." புன் சிரிப்புடன் திரும்பினார் சேகர். "என்னாச்சு ஏதும் கண்டுபிடிச்சியா. இல்ல வழக்கம் போல எல்லாரும் சொல்றது தானா நீயும் சொல்ல போற" தலைகுனிந்து நின்றவள் இராஜினாமா கடிதத்தை நீட்டினாள், "இந்த நா உனக்கு ஒரு கடிதம் தருகிறேன்" என சேகர் ஒரு கவரை வைஷாலிக்கு நீட்டினார். அது வைஷாலிக்கான பதவி உயர்வு கடிதமாக இருந்தது! "நீ இனி அங்கயே வேலை பாரு. உன் அண்ணி குழந்தையையும் பார்த்துக்கோ. அக்காவையும் பார்த்துக்கலாம்..." என்றார். அத்துடன், "இனி அங்கு எந்த ஒரு கற்பழிப்பும் நடக்க கூடாது..." என கண்டிப்பாக கூறி அனுப்பினார்! அடுத்த நாள் நீதிமன்ற விசாரணையில்: நிஷாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது மற்றும் பெண் பொலீஸாரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தது ஜமீன் வாரிசுகளான பாபு, ரூபன், ராஜா என்பதை உறுதி செய்தாள் வைஷாலி. அத்துடன் இந்த மூவரும் பெண் பொலீஸ் அதிகாரிகளை கற்பழித்து வீடியோ எடுப்பதற்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தது மற்றும் சிறையில் முருகேசனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நம்ம வைக்க உதவியதும் இறுதியாக தற்கொலை செய்து கொண்ட பெண் பொலீஸ் அதிகாரியான சுவேதா என்பதையையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தாள். அது மட்டும் இன்றி தன்னை பொலீஸாரிடம் இந்த மூவரும் காட்டிக் கொடுத்துவிடலாம் என்ற பயத்தில் மூவருக்கும் மதுவில் விசம் கலந்து கொடுத்திருக்கலாம் எனவும் இந்த கொலைகளுக்கு சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததால் துப்பக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என வழக்கை முடித்திருந்தாள். பதவி உயர்வு, நீதி கிடைத்த சந்தோசம் இரண்டையும் பகிர்ந்துகொள்ள வைஷாலியின் கால்கள் முருகேசனின் வீட்டை நோக்கி நகர்ந்தது. வைஷாலியை கண்டதும் முருகேசனின் மனைவி கரம் கூப்பி நன்றி சொன்னாள். அண்ணி என வாய் வரை வந்த வார்த்தையை கட்டுப் படுத்திக் கொண்டவள். "இங்க கொஞ்ச நேரம் இருந்திட்டு போகவா" என கேட்க "மேடம் .... இருங்க மேடம் இது உங்க வீடு மாதிரி நினைச்சுகோங்க மேடம்" என்றாள் முருகேசனின் மனைவி. "நீங்க இருங்க நா சாப்பாடு செய்கிறேன்" என சமையல் அறைக்குள் சென்றாள்! கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்த வைஷாலியின் கண்முன் நடந்தவை அனைத்தும் வந்து போனது. சிறிய கிராமத்தில் அம்மா அப்பா அண்ணா,அக்கா, என வளர்ந்தவள் வைஷாலி. ஊரில் அழகி என்றால் வைஷாலியின் அக்கா சோபா தான். டாக்டர் ஆக கனவு கண்டவள். கல்லூரிக்கு சென்றவளை கடத்திச் சென்றான் பாபு. கற்பை இழந்த பின் வேறு வழி இல்லை, சோபா அழகு என்பதால் பெற்றோரின் அனுமதி இன்றி கல்யாணமும் செய்துகொண்டான். சோபாவின் குடும்பம் அவளை தேடி வந்தால் சோபாவை கொலை செய்துவிடுவதாக அடி ஆட்களை வைத்து மிரட்டி இருந்தான். அத்துடன் சோபாவின் அம்மாவை தவிர ஜமீன் குடும்பத்திற்கு யாரையுமே தெரியாது. வைஷாலியின் அண்ணன் முருகேசன் தங்கையின் மீதான பாசத்தால் தான் யார் என்று சொல்லாமல் அதே ஊரில் திருமணம் முடித்து குடி வந்தான். பொலீஸ் கனவு கண்ட வைஷாலி அதில் வெற்றியும் பெற்றாள்.! எந்த Case கொடுத்தாலும் அதிரடி காட்டும் வைஷாலியை தன் தங்கையின் தற்கொலைக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க அனுப்பலாம் என நினைத்த போது தான் வைஷாலியாக வந்து மாற்றலாகி போக அனுமதி கேட்டிருந்தாள். வைஷாலி விசாரணையை ஆரம்பித்த போதே கறுப்பு ஆடு இருப்பதை அறிந்திருந்தாள். யார் என தெரியாமல் இருந்த போது தான் தன்னை தாக்க வந்த சுவேதா என தெரிய வந்தது. பாபு, ரூபன், மற்றும் ராஜாவின் மரணத்தில் மேலதிகாரி மற்றும் சோபா சம்மந்தப்படிருப்பது தெரிய வந்த போது அதிர்ந்து போனாள். இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் விசாரித்த போது தான் பல உண்மைகள் தெரிய வந்தது. சேகர், சோபா இருவரும் பள்ளிகால நண்பர்கள். தனது கணவன் மற்றும் அவரது சகோதர்கள் தான் இங்கு நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் காரணம் என்பதையும், இவை அனைத்திற்கும் உதவி செய்வது காவலர் சுவேதா என்பதையும் கடிதம் மூலம் சேகருக்கு அறியப்படுத்துகிறாள் சோபா. இதனை அறிந்த சேகர், சட்ட ரீதியாக முடிவு எடுத்தாலும் இறுதியில் பணம் தான் வெற்றி பெறும் என்பதை உணர்ந்து சுவேதாவை மிரட்ட ஆரம்பிக்கிறார். பதறிப் போகும் சுவேதா இவை வெளியே தெரிந்தால் வேலையும் போய்விடும் என்பதால் சேகரின் கட்டுப்பாட்டில் வருகிறார். சேகர் கூறியபடி விசம் கலந்த மது போத்தல்களை சோபாவிடம் கொடுக்க, வீட்டில் கணவர் மற்றும் அவரது சகோதர்கள் அருந்தும் மது போத்தல்களை மாற்றி வைக்கிறாள் சோபா. அதிரடி விசாரணைகளை மேற்கொண்டுவரும் வைஷாலி உண்மையை கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் சுவேதா வைஷாலியை தாக்க வந்த போது சிக்கிக் கொண்டதுடன் உண்மைகளை உளறினாள். அனைத்தையும் தெரிந்துகொள்ளும் வைஷாலி, "வீட்டுக்கு போ யாருக்கும் தெரியாமல் பேசி முடிக்கலாம்" என சுவேதாவை அவளது வீட்டுக்கு அனுப்பிய வைஷாலி சிறிது நேரத்தில் சுவேதாவை சந்திக்க சென்றாள். அவளிடம் "ஒரு பெண்ணாக இருந்தும் நீ பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்து இருக்கிறாய். காவல் துறையில் இருந்து கொண்டு கயவர்களுக்கு உதவி இருக்கிறாய். உன்னை போல் பெண்கள் பூமியில் இனி பிறக்க கூடாது" என சீறினாள், "மன்னிச்சிடுங்க மேடம்" என சுவேதா கெஞ்சினாள். "இந்த கிராமத்தில் இனி எந்த தற்கொலையும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் உன் தற்கொலை முக்கியமானது" சுவேதாவின் துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்தாள். சத்தமே இல்லாமல் துப்பாக்கியை அழுத்தினாள். கொட்டும் இரத்தத்துடன் விழுந்த சுவேதாவின் கையில் துப்பாக்கியை வைத்துவிட்டு இதுவும் தற்கொலை தான் என நம்ப வைத்துவிட்டாள்! "மேடம்..." நினைவில் இருந்து மீண்ட வைஷாலி சிறிது மெளனத்தின் பின், "நீங்க என் பெயர் சொல்லியே கூப்பிடுங்க... நான் முருகேசனின் தோழி. இனி உங்களுக்கும் தோழி தான்" என்றாள் சிறு புன்னகையுடன். வைஷாலியின் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது எமக்கு மட்டுமே தெரியும். முற்றும். குறிப்பு: கற்பழிப்புகளுக்கு சட்டம் மட்டுமே தண்டனை கொடுக்க வேண்டும் என காத்திருக்க வேண்டாம். சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளது. காமூகர்களை பெற்ற தாய், தங்கை, மனைவி, மகள், என யாராவது ஒருவர் தண்டனை கொடுங்கள். கயவர்களை அழிப்போம், கர்ப்பினை காப்போம்!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in