அ. வேளாங்கண்ணி
சிறுகதை வரிசை எண்
# 11
“அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி"
===========================================================
சிறுகதை தலைப்பு: "கோபம் வலி.. அன்பே வழி"
"ஒங்க சொந்தக்காரங்க நம்ம கிட்ட கடன் வாங்கி ரெண்டு வருஷமாச்சு.. இன்னும் என்ன ஏதுனு கேக்க மாட்டேங்கறீங்க? உங்க மனசுல என்னதான் நெனச்சுட்டு இருக்கீங்க! கடையேழு வள்ளல்கள்ல ஒருத்தரா உங்கள கற்பனை பண்ணிட்டு இருக்கீங்களா! இல்ல கேட்டதும் கொடுக்கும் கர்ண பரம்பரை நாம, கொடுக்க மட்டும் தான் தெரியும். திரும்ப வாங்கவெல்லாம் மாட்டோம்னு சொல்றீங்களா! அவங்களுக்குத்தான் புத்தியில்ல, இவ்ளோ நாளாச்சே, திருப்பி கொடுக்கனுமேனு ஒரு சங்கடம் இல்ல, ஒன்னுமே சொல்லாம கம்முனு இருக்காங்க, நீங்களாவது கேட்கலாம்ல! உங்களுக்கும் புத்தி கித்தி கெட்டுப்போயிடுச்சா என்ன?"
கோவக்காரி கத்த ஆரம்பித்து விட்டாள். ஜீரோ டெசிபலில் ஆரம்பித்த கோபச்சத்தம், உயர்ந்து கொண்டே போய்.. காதை அடைக்கும் அளவு டெசிபலில் முடிந்தது.
விடுமுறை நாள். வெளியூரில் படிக்கும் பிள்ளைகள். வீடு கொஞ்சம் அமைதியாக இருக்கவே, வழக்கம் போல ஆரம்பித்திருந்தாள் தர்மபத்தினி. அமைதிக்கு எதிரி, சத்தத்தின் சகோதரி, பேச ஒன்று கிடைத்துவிட்டால் சரித்திரத்தையே வம்புக்கிழுக்கும் வம்புக்காரி, ஆனாலும் மிகுந்த அன்புக்காரி.
காதில் விழாதது மாதிரியே கொஞ்சம் திரும்பி உட்கார்ந்தேன்.
"கதவுக்கிட்ட ரெண்டு ஐநூறு ரூபாய் கெடந்துச்சு.. அது உங்க பாக்கெட்டுல இருந்து விழுந்ததான்னு பாருங்க"
டக்கென நிமிர்ந்தேன். என்னுடையதாகத்தான் இருக்கும் என்பது போல செய்கையால் நிரூபிக்க முயன்றேன்.
"அப்போ காது நல்லா கேக்குது தானே! இல்ல தேவையான நேரத்துல மட்டும் கேக்கற மாதிரி எதாவது புரோகிராம் செஞ்சு செட் பண்ணி வச்சிருக்கீங்களா! ஒருத்தி இங்க காட்டு கத்து கத்தறேன். எப்படீங்க எதுவுமே கேக்காதது மாதிரி மூஞ்சிய திருப்பிக்கறீங்க?"
'என்ன தேவையான நேரத்துல கேக்கற மாதிரி கூட காத செட் பண்ண முடியுமா என்ன! இது எனக்கு தெரியாமப் போச்சே'
'இனியும் அப்படி உட்கார்ந்தால் பேச்சு கொஞ்சம் விவகாரமாக போகும் என்பதால், அவளை கொஞ்சமாக முறைத்தபடியே திரும்பி உட்கார்ந்தேன். இவ்வளவு தான் நம்மால் முடியும். கவனிக்கவும் கொஞ்சமாக முறைத்தல்.. அதிகமாக முறைச்சா அதுக்கும் சேர்த்து வெளுத்துக்கட்டுவா. ஒல்லிப்பிச்சான் உடம்பு தாங்காதுங்கோ..'
"அந்த ஆயிரம் ரூபாய்!"
"அதப்பத்தி அப்பறம் பேசலாம். மொதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதிலச் சொல்லுங்க"
"ஒனக்கு இப்ப என்னாச்சு? இது எலெக்சன் நேரம். பேசறதுக்கு நாட்டு நடப்பு எவ்வளவோ இருக்கு, கேக்கறதுக்கு செய்தியும் எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு.."
"இவரு பெரிய அரசியல்வாதி! பொண்டாட்டிக்கிட்ட நாட்டு நடப்ப பேச வந்திட்டாரு. மொதல்ல வீட்டு நடப்பப் பேசுங்க, தெளிவான பதிலச் சொல்லுங்க, இங்கேயே ஒன்னும் இல்லையாம், நாட்டு நடப்ப பேசி நீங்க என்ன எம்பி ஆகப்போறீங்களா? இல்ல மினிஸ்டரா? வந்துட்டாரு நாட்டைக்காக்கும் நல்லவர், நாட்டுக்காக குலைக்கும் வல்லவர்.. சாரி உழைக்கும்.."
"சரி.. சரி.. ரொம்ப கலாய்க்காத, நீ கேட்ட விஷயத்துக்கு வரேன். அவங்க நம்பக்கிட்ட கடன் வாங்கும் போதே.. ரொம்ப கஷ்டத்துல தான் இருந்தாங்க. இப்பவும் அப்படித்தான். இல்ல அதுக்கு கீழேனும் சொல்லலாம். அவங்க கிட்ட போய் எப்படி கேக்கறது? அவங்க கஷ்டம் போச்சுனா அவங்களா திருப்பி தரப்போறாங்க.. நாமளும் ஒன்னும் கஷ்டத்துல இல்லையே! நல்லாதானே இருக்கோம். எதுக்கு அவங்ககிட்ட கேட்டு அவங்கள இன்னும் கஷ்டப்படுத்திக்கிட்டு! நான் என்ன சொல்ல வரேனு உனக்குப் புரியுதில்ல!"
"ஓகோ.. அப்படியா சங்கதி! புரியுது புரியுது நல்லா புரியுது.. நாம கொடுத்த காச திருப்பி கேட்கனும்னா, நாமளும் கஷ்டப்பட்டாத்தானா!? இது என்னங்க புதுசா இருக்கு! அப்ப எப்பவுமே திரும்ப வாங்கற ஐடியா இல்ல போலயே உங்களுக்கு! எட்டாவது வள்ளல்னு சொல்லி உங்களுக்கு சிலை செஞ்சு மெரீனா பீச்சுல வச்சுட்டாப் போச்சு"
"எதுக்கெடுத்தாலும் இப்படி வித்தியாசமா யோசிச்சுப் பேசாதடி! நான் எப்ப கேக்க மாட்டேனு சொன்னேன்? அவங்க கொஞ்சம் நல்லா ஆகட்டும். அடுத்த நொடியே கேட்டுற மாட்டேனா!?", என்று சத்தமாக இல்லை இல்லை எனக்கே கேட்காதவாறு கத்திவிட்டு இயர்போனை காதில் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தேன். ஆனாலும் காலையில் இருந்தே வேறு விதமான பாட்டு கேட்டுட்டுத்தானே இருக்கேன்.
பண்பலையில் என்னை வெறுப்பேத்தவோ, இல்லை என் நிலை அறிந்தோ "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" பாடலை தவழ விட்டிருந்தனர்.
இனியும் வீட்டிலே உட்கார்ந்திருந்தால் அடுத்து எதாவது புதுப்பிரச்சனை வரும் என்று எண்ணியதால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன். டீக்கடையில் டீ சாப்பிட்டு மனதை சந்தோசமாக்கத் திட்டம். அடிக்கும் வெயிலில் சூடான டீக்கடை டீ எவ்வளவு இதமாக இருக்கும் என்பதை குடிக்கும் என்னைப் போன்றோர் நன்கறிவர், அதாவது டீக்குடிக்கும் என்னைப் போன்றோர்.. தப்பா படிச்சிடாதிங்க! எப்படியும் இன்றைய மதியச் சாப்பாட்டில் உப்பு கம்மியாக இருக்கும் என்பது திண்ணம்.
அரைமணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பி வந்தேன். ஹாலில் பக்கத்து வீட்டுக் கோமதியும், தர்மபத்தினியும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். எனது வரவைக் கண்டதும் இரண்டு நாக்குகளும் அமைதியாயின. லேசாக புன்னகைத்தனர் இருவரும். அது புன்னகையா, மொறைப்பா என புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. இருந்தாலும் அது புன்னகையே என்றெண்ணி நானும் புன்னகைத்தபடியே அறைக்குச் சென்றேன். ஆனால் மனசுக்குள் 'திக் திக்' என்ற சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது.
பக்கத்து வீட்டுக் கோமதி, எங்க வீட்டுக்கு எப்ப வந்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய கிளப்பி விட்டு போயிறும். இதுவரைக்கும் வந்த பத்து பதினஞ்சு வாட்டியும் அது தான் நடந்திருக்கு. என்னோட திக் திக்குக்கு அதுதான் காரணம். இதெல்லாம் ஒரு பிரச்சனையானு நாம நெனைக்கறதெல்லாம், இதவிட வேற எதுவுமே பிரச்சனை இல்லேங்கற அளவுக்கு ஆக்கிவிட்டுறும். இப்ப எத கெளப்ப வந்திருக்கோ! லீவு நாள்ல காலைலயே ஒரு பிரச்சனை இங்க ஆரம்பமாயிருச்சு. அதுவே இன்னும் அமைதியாகிருச்சா இல்லையானு தெரியல. இப்ப அடுத்து ஒன்னு ரெடி ஆகிட்டு இருக்கு.. ச்ச.. ஆபிஸுக்கெல்லாம் ஏன் தான் லீவு விடறாங்களோ கடவுளே!"
'வீட்டுல ஓடற பிரச்சனை ஆம்பிளைங்கள எப்படி எப்படியெல்லாம் யோசிக்க வைக்குது பார்த்தீங்களா?'
கோமதி கிளம்புவது போல சத்தம் கேட்டது. மெதுவாக அறையிலிருந்து வெளியே வந்து தர்மபத்தினி முன்பு உட்கார்ந்தேன்.
'என்ன, உனக்கு இவ்வளவு தைரியமா?னு என் மனசு எங்கிட்ட மெதுவா கேட்டது உங்களுக்கு கேட்டிருச்சா?'
"எதாவது நான் கேட்க ஆரம்பிச்சாலே, சட்டைய போட்டுட்டு வெளிய போயிட்றீங்களே! அப்படி எங்கத்தான் போவீங்க? இது நானா கேக்கல, என் வாய்.. தானா கேக்குது.. ம்"
'ம்.. பதில் சொல்லுங்க என்பது போல முறைப்பாக உட்கார்ந்திருந்தாள். இதுக்கு 'நான் பதில் சொல்லலாமா வேண்டாமா என யோசிப்பது போல' அமைதியாக உட்கார்ந்திருந்தேன்'
அதே நேரம் தர்மபத்தினியின் போன் அலறியது.
"ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருமே! ஓ.. ஒரு தெய்வம் படிதாண்டி வருமே!"
'ஐயோ! இது தென்றல் இல்லய்யா, முன்னாடியே புயல்னு நான் சொன்னா யாரு கேப்பா?'
"அண்ணா, சொல்லுங்க அண்ணா", என பேச்சு ஆரம்பமாக நான் என் காதை வேறு திசையில் திருப்பிக் கொண்டேன். எப்படியும் அரை மணி நேரம் ஆகும்.
இருபது நிமிடங்கள் பேசிவிட்டு கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள் தர்மபத்தினி.
'என்ன தான் அவள் புயலென்றாலும் தர்மபத்தினி அல்லவா!? கலங்கிய கண்களைப் பார்த்தும் என்ன ஏதுவென்று கேட்காமல் இருக்க முடியுமா? நான் இரண்டொரு விநாடிகள் என்னைத் தயார் படுத்திக்கொள்ள நேரமெடுக்க, அதற்குள் கலங்கில கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது. தரையையும் தொட்டு விட்டது'
"அச்சச்சோ, என்னாச்சுமா?", என்று ஆறுதலாக கேட்க, பொலம்பித் தீர்த்துவிட்டாள்.
"எங்க அண்ணனோட கம்பெனி நஷ்டத்துல இருந்ததால, அவர ரெண்டு மாசத்துக்கு முந்தியே வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்களாம். அப்ப இருந்து இன்னிக்கு வரைக்கும் தேடியும், எந்த வேலையும் கெடைக்கலயாம். அப்ப கெடச்ச கொஞ்ச நஞ்ச காசும் கொஞ்சம் கொஞ்சமா செலவாகி, இப்போ எதுவுமே இல்லாத நெலமைக்கு போயிட்டாங்களாம். எதாவது உதவி பண்ண முடியுமானு அவ்வளவு சோகமா கேக்கறாரு. அப்படியே ஒடைஞ்சிட்டேங்க. நிச்சயமா உதவி செய்யறேன்னு சொல்லிட்டேங்க. என்னங்க? உதவி செய்யலாம் தானே!"
"நிச்சயமா செய்யலாம். ஒங்க அண்ணனாச்சே! உதவாம இருக்க முடியுமா? ஆனா ஒரே ஒரு கண்டிஷனோட, அதுக்கு நீ ஓகேனு சொன்னா, நான் உதவ ரெடி"
"எது கண்டிஷனா? எனக்கேவா? உங்க சொந்தக்காரங்களுக்கு உதவி பண்ணும் போது இப்படி ஒரு கண்டிஷன் பத்தியெல்லாம் நீங்க பேசவேயில்லையே! இப்ப என்னங்க புதுசா? அப்பவே கோமதி சொன்னா! புருஷன்காரங்க இருக்காங்களே, அவங்க குடும்பத்துக்கு ஒன்னுனா மட்டும் ரகசியமா கூட உதவி செய்வாங்க, ஆனா நம்ம குடும்பத்துல யாராவது உதவி கேட்டுட்டா மட்டும், 'நமக்கே ஒன்னும் இல்ல, நாம எப்படி உதவறது?' அப்படி இப்படீனு ஓவரா பிகு பண்ணுவானுங்கன்னு.. அவ சொன்னது சரியாப் போச்சு. உங்க குடும்பத்துக்கு உதவும் போது, உதவி பண்ணிட்டுத்தான் எங்கிட்டேயே சொன்னீங்க, ஆனா இப்போ கண்டிஷனெல்லாம் போடறேனு சொல்றீங்க"
'தேவையில்லாதத சம்பந்தேமே இல்லாத எடத்துல பேசி, பிரச்சனைய கெளப்பறதே கோமதிக்கு வேலையாப் போச்சு. இன்னைக்கு எதுக்கு அவ இதப்பத்தி பேசிட்டுப் போனா?'
"மொதல்ல என் கண்டிஷன் என்னானு கேளு. அப்பறமா பேசு"
"போங்க போங்க, போயும் போயும் உங்ககிட்ட வந்து உதவி கேட்டேன் பாருங்க, என்னச் சொல்லனும். எங்க அண்ணனுக்கு அவங்க மச்சானப் பத்தி ஒன்னும் தெரியாது போல, இங்க போயி போன் பண்ணி, வேலை மெனக்கெட்டு பேசினாலும் கடைசில ஒன்னுமே கெடைக்காதுனு அவருக்குத் தெரியல.. சரி விடுங்க.. நீங்க இவ்ளோதான்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. அவரு உதவியெல்லாம் பண்ணமாட்டாருண்ணா, சும்மா வெத்துவேட்டு அவருன்னு அண்ணங்கிட்ட சொல்லிட்றேன்.."
"அப்போ என் கண்டிஷன கேக்கமாட்ட?"
"அதான் கண்டிஷன்னு சொல்லிட்டீங்களே, அப்பறம் கேட்டு என்ன கேக்காட்டி என்ன?", எனச்சொல்லி ஓவென அழுக ஆரம்பித்தாள்.
"இப்படி நான் பேசறத கேக்கமாட்டேனு அடம்பிடிச்சிட்டு அழுக ஆரம்பிச்சா எப்படி? என்னானு தான் ஒரு வாட்டி கேளேன்"
"சரி.. சரி.. சொல்லித் தொலைங்க"
'இப்படியெல்லாம் பேசுவாள் என்று தெரியும் தான். ஆனாலும் இப்பொழுது இப்படி பேசக் கேட்டதும் எனக்கே என்னவோ போல் ஆகிவிட்டது'
'கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றேன். அவளுக்கும் அது புரிந்து விட்டது போல..'
"சரி.. சாரிங்க.. நீங்க சொல்ல வந்த கண்டிஷன சொல்லுங்க. கேக்கறேன்"
"ம்.. உங்க அண்ணனுக்கு உதவி பண்ண நான் ரெடி. ஆனா அவருகிட்ட நான் பணத்த திருப்பி கேட்க மாட்டேன். அவரா எப்ப கொடுக்கறாரோ அப்ப கொடுக்கட்டும். இதுதான் என் கண்டிஷன்.. கண்டிஷன் ஓகேவா?", என கண்ணடித்தவாறே கேட்டேன்.
"என்ன.........?", எனக் கத்தியே விட்டாள் தர்மபத்தினி..
"இதுதான் கண்டிஷனா? அச்சச்சோ இது தெரியாம உங்கள என்னென்னவோ பேசிட்டேனே..! சாரிங்க சாரிங்க.."
"உங்க சொந்தக்காரங்களுக்கும் இது பொருந்துங்க, அவங்களையும் நீங்க எதுவும் கேக்காதிங்க, அவங்களா கொடுக்கறப்ப கொடுக்கட்டும். காலைல நான் பேசினதையெல்லாம் மறந்திடுங்க.. சரியா.. என் அன்புக்கணவா"
'கனவா இல்லை நினைவா' வானத்தில் ரெக்கை முளைத்து பறந்து கொண்டிருந்தேன் நான்.
கோபம் அன்பாக மாறுவதைக் கண் முன்னே கண்டேன்.
இனி என் விடுமுறைப் பொழுதுகள் இனிதாக கழியும் என்று நம்புகிறேன்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எனக்காக ஜூஸ் போடக் கிளம்பினாள் தர்மபத்தினி.
இந்த நேரத்தில் பண்பலையின் சத்தத்தை நான் அதிகரிக்க, "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
(முற்றும்)
அ.வேளாங்கண்ணி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்