ப. தாணப்பன்
சிறுகதை வரிசை எண்
# 88
நெருப்பின் கனல் .....
ஆறாவது முறையாக அரசு மருத்துவமனைக்கு வருகிறது அந்தக் குழந்தை. குழந்தைக்கு பெயர் கூட இன்னும் வைக்க முடியவில்லை. தொடர்ந்து மருத்துவமனை வாசம். கடந்த நான்கு முறை போல் இம்முறையும் மருத்துவ அவசர ஊர்தியில்.
நல்லவேளை வெவ்வேறு மருத்துவ அவசர ஊர்திகள், இல்லையெனில் ஓட்டுநர் ஒருவேளை எரிச்சலடைந்திருக்க வாய்ப்புண்டு..
செல்பேசி சிணுங்கிற்று.. வழக்கமாக அமைதி நிலையில் இருக்கும் செல்பேசி "அழகெல்லாம் முருகனே" என அழைத்தது. “வணக்கம் சார்.! நான் "மாணிக்கம் பேசுறேன்". "எங்க இருக்கீங்க.? வேலையிலா.? வீட்டிலா.?” ஒப்பந்த கூலித் தொழிலாளியான குழந்தையின் தாய்மாமன் பேசினார். திருப்பியும் உடம்பு சரியில்லாம போச்சுங்க சார் தங்கச்சிப் புள்ளைக்கு. அதான் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டியாந்திருக்கோம் என்றான்.
ஏடிஎம் மெஷின் வொர்க்காகலை சார். அவசரமா கொஞ்சம்பணம் வேணும். இன்னும் சாப்பிடல்லை சார் என்றான். சரிடே.! "இப்ப எங்கே இருக்கே".? பச்சிளங்குழந்தைகள் வார்டு வாசல்ல நிக்கேன் சார் என்றான். அம்மாவும் தங்கச்சியும் கூட இருக்காவ. சார்..! ரொம்ப அவசரம் சார். பணம் வேணும் சாரென மீண்டும் கேட்டான் மாணிக்கம்.
தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால், இங்கிருந்து ஹைகிரவுண்டுக்கு கொண்டு கொடுக்க மலைப்பாக இருந்தது முருகனுக்கு. அவர் திருச்செந்தூர் அருகே இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலைப் பொறியாளர். அருடைய மனைவி இங்கு வேலை பார்ப்பதாலும், குழந்தைகளின் கல்விக்காகவும் தினமும் இங்கிருந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்.
இன்று நைட் டூட்டிக்கு வேறு செல்ல வேண்டும். பையன் ஊரிலிருந்து வந்த இடத்தில் காய்ச்சல் என்பதால் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ஊசி போட்டு வந்தமர்ந்த உடன் மாணிக்கத்திடமிருந்த வந்த போனால் சற்று அயர்ச்சியாகிப் போனார் முருகன். மாணிக்கம், நான் அங்க வந்து தரணுமா? எனக் கேட்கும் போதே அவருடைய இயலாமை அவரது பேச்சில் தெரிந்தது.
அதை உணரவே இல்லை, இங்கு நமக்குத் தெரிந்த இவரிடமிருந்தும் கிடைக்காமல் போனால் என்னாகுமோ என்ற குறும்பய உணர்வோ என்னவோ, "நானே வார்ரேன் சார்! எங்கே வரணும் ?" என்றான் மாணிக்கம். " ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திடுறியா" வசதியா இருக்கும் என்றார் முருகன். சரி சார்..! உடனே கிளம்புதேன் என்றான் மாணிக்கம்.
பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.. முருகனுக்கோ மனசு இருப்பு கொள்ளவில்லை. செல்போனைப் பார்த்துக் கொண்டே அங்குமிங்கும் குட்டிப் போட்ட பூனையாட்டம் அலைந்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி வடிவு இதனைப் பார்த்துக் கொண்டு, "என்ன பிரச்சனை? இப்படி தெளிவில்லாம அங்கேயும் இங்கேயூமா அலையுதேளே " என்றார். என் கூட வேலை பார்க்கும் ஒரு ஒப்பந்த தொழிலாளியின் தங்கை குழந்தையை உடம்பு சரியில்லையென்று ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில வைச்சிருக்காம். அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமென்கிறான் என்றான். ‘ஐயயோ..!! எவ்வளவாம்?’ என்று கேட்டாள் வடிவு.. "ஐந்நூறு வேண்டுமென்கிறான்" என்றேன். திரும்பி வருமா? என்றாள். சொல்ல இயலாது. ஆனா அவசரத் தேவைக்குக்கூட பணம் கொடுக்கல்லன்னா எப்படி.? என புலம்பினான் முருகன். நைட் டூட்டிக்குப் போகணுமே.? .இப்பவே மணி ரெண்டாகப் போகுதே. சாப்பிட்டுட்டு கொஞ்சம் படுத்தாத்தானே நீங்க ராத்திரி கண்ணு முழிக்க முடியும் என்றாள் கரிசனத்தோடு மனைவி வடிவு.
ஆமா.. ! ஒரு பத்து நிமிசந்தானே போய்ட்டு வந்திடுதேன்னு மனைவிடயிடம் சொன்னான் முருகன். மீண்டும் செல்பேசி அழைப்பு மணி ஒலிக்க., ஐயா! ரெயில்வே ஸ்டேஷன் வாசல்ல நிக்கேன், நீங்க வந்திட்டீங்களான்னான் மாணிக்கம். அப்படியே அந்த சாலையில நேரா நடந்து வா. வந்தால் அதே வரிசையில சரவணபவான்னு ஓட்டல் ஒண்ணு இருக்கும், அந்த வாசல்ல வந்து நின்னு... வந்திட்டே இருக்கேன்னார் முருகன்.
ஒரு மூணு நிமிஷ நேரத்துல அங்கே போய் விட்டார் முருகன். காத்திருந்த மாணிக்கத்திடம் ஐந்நூறைத் தந்தவுடன்.. சார்! கொழந்தைக்கு ரொம்ப முடியலன்னு "அந்த” வார்த்தையைச் சொன்னான். அதிர்ந்த முருகன் அதெல்லாம் ஒண்ணுமாகாது. தைரியமாக இருன்னார். நாளைக்கு வேலைக்கு வரும் போது பணத்தைத் தந்திடுதேன்னு சொன்னான். பேருந்து நிலையம் கட்ட இங்க ஒடைச்சு போட்டிருக்காக, வெளியில நிக்கும் பேருந்துலதாம் ஏறணும்.. இங்கன நின்னு நேரத்தை வீணாக்காதே. முன்ன கொஞ்ச தூரம் நடந்து போய் மொத பஸ்ஸில ஏறி சீக்கிரம் போவென்று அவனை உடனே அங்கிருந்து அவசரமாக கிளப்பினான் முருகன்.
நாலு நாளைக்கு முன்னே தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தோம். வீட்டுக்குக் கூட்டிப் போகச் சொன்னாங்க சார்.. "போயிடும்"ன்னு சொல்றாங்க. ரெண்டு நாளா வைச்சுப் பார்த்தோம். இழுத்துட்டு கிடைக்கேயொழிய போகலேங்க சார் மனசு வெறுத்துச் சொன்னான் மாணிக்கம் .அவருடைய அப்பா நாம என்ன பாவம் செஞ்சோசோம்ன்னு மனசொடைஞ்சு போய் போனாக்கூட தேவலைன்னு சொல்லிட்டிருக்கார் என்றான்.
ரொம்ப முடியலைன்னதும் மறுபடியும் 108ஐ வரவழைச்சு இங்க கூட்டியாந்தோம் என்றான்.போறதே போறது ஹாஸ்பிட்டலிலேயே போகட்டுமென அப்பா சொன்னதாக சொன்னான் மாணிக்கம்.
எப்போதுமே இதுபோன்ற சொற்களைக் கேட்டால் மனசொடைஞ்சு போகும் மென் மனசுக்காரன் முருகன். எட்டு மாத காலமாக அப்பாவுடன் மருத்துவமனையில் கூடவே இருந்து இருந்து நன்கு பார்த்துக் கொண்ட பின்பும் அப்பாவைக் காப்பாற்ற இயலாமல் போனதிலிருந்து மருத்துவமனை என்றாலும், இது போன்ற சொற்களை கேட்டாலும் மனசொடஞ்சு மௌனமாகி விடுவான் முருகன். வீட்டிற்கு வந்ததும், மனைவி என்ன முகம் இப்படி வாடியிருக்கு என்றாள். போய் வந்தச் செய்தியைச் சொன்னதும் அவளது முகமும் உடனேயே சுருங்கித்தான் போனது. கூட கொஞ்சம் காசு கொடுக்க வேண்டியதுதானே என்றாள் வடிவு இப்போது.
மாணிக்கத்தின் தங்கை சுமதிக்கு, திருமணமாகி மூன்று வருடங்களுங்குப் பின்பே அக்குழந்தை பிறந்திருக்கிறது. அவளுக்கு ஊட்டச்சத்துக்கு குறைவு இருக்கக்கூடாது என்பதற்காக அரை நாள் லீவு போட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டரும், நர்ஸ்ஸும் வரச்சொன்ன தேதிக்கு தவறாது அழைத்துப் போவார் சுமதியின் கணவர் மணியன். அவருக்கு குழந்தை என்றாலே கொள்ளை ஆசை. சூலின்னதும் சுமதியை எப்படிக் கெடந்து கவனிக்கான் பாரு என்று ஊராரும் வீட்டாரும் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாது அப்படிப் பார்த்துக் கொண்டான் அவன்.
பொறக்கும் போது என்னவோ நல்லாத்தான் இருந்தது. சுமதிக்கு தண்ணீர்ச்சத்து கம்மியா இருக்கிறதென்று அறுவை சிகிச்சை மூலமே குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.. புதுநிறமாக இருந்த அக்குழந்தையைப் பார்க்கும் போது அத்தனை அழகாக இருந்தது. அருகே கிடந்து மெல்லிய குரலில் ‘ஙே.!.ஙே..!’என கீச்சுக் குரலில் அழுவது சுமதிக்கு மட்டும் ஆனந்தமாய் இருந்தது. மாரோடு அணைத்து தாய்ப்பால் ஊட்டி மகிழ்ந்தாள்.
திடீரென்று தாய்ப்பால் காணாதென குண்டை தலையில் தூக்கிப் போட்டு அதுக்கு இணையா புட்டியில வர்ர செயற்கை பால்பவுடரைக் கலக்கிக் கொடுக்கச் சொன்னார் டாக்டர். எழுநூறு ரூவாயாம் அந்த பால்பவுடர் டப்பாவின் விலை. ஏதோ வெளிநாட்டுலிருந்து வருதாம். அச்சு அசலா தாய்ப்பாலுக்கு நிகரா இருக்கும்ன்னு சொன்னார்கள். ஆனா பாருங்க, அதே மருத்துவமனையில்தான் தாய்ப்பாலுக்கு இணை எதுவுமில்லை என்று தாய்ப்பால் வாரத்திற்கான சுவரொட்டியையும் ஒட்ட வைச்சிருக்காக.
அந்த பால்பவுடரை என்னைக்கு மொத மொதலா கொடுக்க ஆரம்பிச்சாகளோ அன்னையிலிருந்து புள்ளைக்கு வாயால, வயத்தால போக ஆரம்பிச்சது. அதுலேயிருந்து மட்டுப்படவே இல்லை. ஒரு கட்டத்துல தனியார் மருத்துவமனை எங்களால ஒண்ணும் செய்ய முடியலைன்னு கைய விரிச்சு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வேணும்ன்னா கூட்டிப் போகச் சொல்லிட்டாகளாம். அங்கேயே ரெண்டு லட்சத்துக்கும் மேல செலவாம்.
அருகிலிருக்கும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்திருக்கிறார்கள் அவர்கள். அங்கு வந்ததும் முருகனுக்கு போன் போட்டான் மாணிக்கம்.
“சார்! இப்படி என் தங்கச்சி கொழந்தைக்கு ரொம்ப முடியல சார். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில வைச்சிருக்கோம். யாரவது உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் இருந்தா கொஞ்சம் நல்லா பாத்துக்கிட சொல்லுங்க சார் என்றான்.
முருகனும் தன்னுடன் பன்னெண்டாம் வகுப்பு படித்த நண்பன், டாக்டருக்கு படிச்சவன் தூத்துக்குடியில் டாக்டரா வேலை செய்பவருக்கு போன் செய்து அவராலான உதவி செய்யக் கோரினான். இதற்கு முன்பும் தன்னுடன் வேலை செய்யும் இரண்டு மூன்று நண்பர்களுக்கு உதவின பெருந்தன்மையால் மீண்டும் அவனிடம் எளிதாக சொல்ல முடிந்தது முருகனுக்கு. பலராமன் என்னும் மருத்துவர் மாணக்கத்தின் தங்கை குழந்தை பற்றிய விவரங்களை நெல்லையில் அவருடன் படித்து பணியாற்றும் மருத்துவருக்கு சொல்லி உதவிட வலியுறுத்தினான். மருத்துவர் பலராமன் சொன்னதற்காக சிறப்பு பயிற்சி மருத்துவர் ஒருவரை அமர்த்தி, நன்கு கவனித்துக் கொண்டார் திருநெல்வேலி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர். அடிக்கடி குழந்தையைப் பார்த்து வர சிறப்பு அனுமதி வேறு குழந்தையின் அம்மாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. போகும் போதும், வரும் போதும் குழந்தைகள் பிரிவில் வரையப்பட்டிருந்த குழந்தை ஓவியம் அவளிடம் பேசுவது போல் மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருந்திருக்கிறதென்பதை அவள் மட்டுமே அறிவாள்.
மறுநாள் மாணிக்கம் முருகனை அழைத்ததும் அவன் அழலானான். “எதற்காக அழுகிறாய்?” எனக் கேட்ட உடன், "ஐயா.! குழந்தை பொழைச்சாலும் புத்திசுவாதீனமா போயிருமாம். சரியா மூளை வளர்ச்சி இல்லைன்னு நர்ஸ் பேசினாங்கன்னு சொல்லி மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதான். அவனைத் தேற்றி, தான் தன் நண்பரிடம் கேட்டுச் சொல்வதாக சொன்னான் முருகன்.
சற்று நேரம் கழித்து மாணிக்கத்தை அழைத்து குழந்தை சற்று ஆபத்தான நிலையில்தான் இருக்கிறது. ஆனால், தம்மாலான சிறப்பு சிகிச்சையினைச் செய்வதாக அம்மருத்துவர் உறுதியளித்தார் என்றும் மேலும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை வேறு.. இக்குழந்தை வேறு என்று தெளிவுபடுத்தினார் என்றும் முருகன், மாணிக்கத்திடம் விளக்கினான்.
பத்து நாட்கள் கழித்து குழந்தை ஓரளவு தேறியதும் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக மருத்துவர் சொன்னதாக பலராமன் முருகனிடம் சொல்லியிருந்தார். மாணிக்கம் பத்து இருபது நாட்களாக வேலைக்கு வராததால் அவனிடமிருந்து தகவல் எதுவும் முருகனுக்கு கிட்டவில்லை..
மீண்டும் குழந்தைக்கு அதேபோல் முடியாமல் போய் இப்போதோ தூத்துக்குடி அரசு மருத்துவமனையினில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இப்போதும் மாணிக்கம் முருகனுக்கு போன் செய்து மருத்துவரிடம் உதவிட மீண்டும் கேட்டிருக்கிறான். முருகனும் பழையன எதனையும் பொருட்படுத்தாது அவனது நண்பனான பலராமனிடம் மீண்டும் உதவிடச் சொன்னான். மீண்டும் ஓரளவு சரியாகி மறுபடியும் வீட்டுக்கு அனுப்பியதையும் முருகனிடம் தெரிவிக்கவில்லை மாணிக்கம் . அவனுக்கென்ன நிலையோ, இயலாத சூழ்நிலையோ, தன்னிலை மறந்து கிடந்தானோ தெரியவில்லை.
இவை எதுவுமே தெரியாமல் வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தான் முருகன். அப்பொழுதுதான் பண உதவி கேட்டு செல்பேசியில் அழைத்திருக்கிறான் மாணிக்கம். இம்முறை மாணிக்கம் எந்த மருத்துவரிடமும் தகவல் சொல்லி உதவிடச் சொல்லுங்கள் எனக் கூறவில்லை. இது வேறு முருகனின் மனதை வருத்தமுறச் செய்தது. மனது கேட்காமல் மீண்டும் மருத்துவர் பலராமின் உதவியை நாடினான் முருகன். வழக்கம் போல் அவனது நண்பர்கள் உதவிடுவதாக பலராமன் சொன்னதைக் கேட்ட உடனேதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் முருகன்.
ஒரு வாரம் கழித்து குழந்தை எப்படி இருக்கிறது என்று தற்செயலாக முருகன், மாணிக்கத்திடம் கேட்க , அதா சார், அது போயி முணு நாளாச்சு.. இனி எப்பவும் மருத்துவமனைக்குத் தூக்கிக்கிட்டே அலைய வேண்டாம் பாருங்க என்றான் மாணிக்கம். அருகே இருந்து இவ்வாறு பேசியதோ என்னவோ அவர்களுக்கு கேட்டிருக்கலாம் போல, நெஞ்சினில் அடித்து ஓலமிடும் சுமதியின் குரலும், தேம்பி தேம்பி அழும் மணியனின் குரலும் மெல்லியதாக செல்பேசியில் கேட்கிறது முருகனுக்கு. மெல்லியதாக கேட்ட அழுகை ஓலத்தில் தன்னையுமறியாமல் முருகனின் கண்களின் ஓரம் கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது.
மாணிக்கத்தின் அப்பா சொன்னதாக சொன்ன "போறது மருத்துவமனையிலேயே போகட்டும்"ன்னு சொன்ன வார்த்தை மீண்டும் மீண்டும் முருகனின் காதினில் நெருப்பின் கனலாய் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
ப. தாணப்பன்
திருநெல்வேலி
மின்னஞ்சல்
thanappankathir@gmail.com
செல்பேசி 9944229479 &
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்