எஸ்.ராமன் (S.Raman)
சிறுகதை வரிசை எண்
# 89
எஸ்.ராமன் 18/33, Bagirathi ammal street, Flat No.F3, Sri Padhmam, T.Nagar,
Chennai 600 017 (Ph:9940655208) Mail id: ramauditss@gmail.com
2.4.24
உறுதி மொழி: இந்த சிறுகதை என் சொந்த கற்பனையில் உருவாகி எழுதப்பட்டது என்று உறுதி அளிக்கிறேன்.
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டி (2024)
உள்ளத்தில் நல்ல உள்ளம்..!
முழு விழிப்புக்கும், தூக்க கலக்கத்திற்கும் இடைப்பட்ட இரவு 9 மணி. மலைப் பாம்பு போல், பயணிகளை விழுங்கிய ரயில் பெட்டிகள், இன்ஜினின் அழைப்பிற்கு இசைந்து கொடுத்து, பிரிந்து சென்ற ரயில் பாதையில், முன்னோக்கி நகர ஆரம்பித்தன.
அப்பொழுது, பயணிகளில் சிலர் சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்தனர். சிலர், கொட்டாவி விட்டுக் கொண்டு, படுக்கையை விரிக்க முயற்சித்தனர். மற்றும் சிலர், டிக்கெட் பரிசோதகர் வருகைக்காக, நம்பிக்கையுடன், வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். அவர்களுடன், லோயர் பர்த் எனும் பொக்கிஷத்தை தாங்கிய டிக்கெட்டுடன் நானும் காத்திருந்தேன்.
நான் காத்திருந்ததற்கான காரணம், எனக்கிருந்த விநோதமான வியாதிதான்.
அந்த வியாதியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, என் ரயில் பயண அனுபங்களை பற்றி சொல்லியாக வேண்டும்.
சில பயணங்களின் போது, சக பயணிகள் நீண்ட நாள் பழகியது போல், சிரித்து பேசி நட்பு பாராட்டுவார்கள். சில பயணங்களில், சொல்லி வைத்தாற்போல், பக்கத்தில் இருப்பவரை ஏறிட்டும் பார்க்காமல் அனைவரும், உம்மனா மூஞ்சியாக இருப்பார்கள். பயணங்களில், அனுபவங்கள், இனிமையும், கசப்பும் கலந்தவையாக இருக்கும்.
இந்த பயணம் இரண்டாம் வகையை சேர்ந்தது போல் தோன்றியது.
யாரும் ஒரு வார்த்தை கூட பேசுவதாக தெரியவில்லை.
யாருடனாவது நேரில் பேசினால்தான், எனக்கு தூக்கம் வரும் என்பதுதான் ‘நெர்கோலெப்ஸி’ என்கிற என் வியாதி. அதற்கு சக பயணிகள் யாராவது உதவ வேண்டும் என்று மூளை செய்தி அனுப்பியது.
‘காத்திரு, விழித்திரு, காதை தீட்டு’ என்று மீண்டும் மூளை கட்டளையிட்டதற்கு அடி பணிந்து, காதை தீட்டிக் கொண்டேன்.
பலரின் தூக்கத்தை தூண்டிய அந்த இளம் வெளிச்சத்தில் நிலவிய அமைதி, எனக்கு சாதகமாக இல்லை என்று தோன்றியது. யாராவது வாயை திறந்து பேசமாட்டார்களா என்ற ஆவலோடு காத்திருந்தேன்.
அப்பொழுது, என் எதிரில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண்ணின் மொபைல் சிணுங்கி, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’ என்ற பாடல் ஒலிபரப்பாகி அடங்கியது.
அனைவரிடம் உறக்கம் பரவியிருந்த தருணத்தில் ஒலித்த அந்த பாட்டு, சூழ்நிலையோடு ஒட்டாதது போல் எனக்கு தோன்றியது.
வலது கையை வாய்க்கு அணையாக வைத்துக் கொண்டு, அந்த பெண் பேசியது ஒன்றும் காதில் விழவில்லையென்றாலும், ‘குழந்தைகளை விட்டு பிரிஞ்சு இருந்த இரண்டு நாட்கள், இரண்டு வருஷம் மாதிரி தெரிஞ்சுது. என் செல்லங்களை பார்க்க நாளைக்கு வந்துடுவேன்…” என்ற உணர்ச்சி வயப்பட்ட கடைசி வார்த்தை அலைகள், அணையை உடைத்துக் கொண்டு வெளியேறி, என் காதுகளில் வந்து மோதின.
“இந்த பெண் பேசுவது தன் குழந்தைகளை பற்றியா…இல்லை வேறு ஒருவருடைய குழந்தைகளை பற்றியா…” என்ற கேள்வி என்னுள் பிறந்து, வளர ஆரம்பித்தது. …”
வேறு யாரும் பேசாத நிலையில், விழித்திருந்த அந்த பெண்ணிடம் பேச்சு கொடுக்கலாம் என்று தோன்றியது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தேன்.
மொபைலை தன் கைப்பைக்குள் வைத்த அந்த பெண், என்னை பார்த்தாள்.
“என்ன சார் ஒட்டுக் கேட்கிற பழக்கம் உண்டா…?” என்று என்னை பார்த்து கேட்டது போலவும் இருந்தது…கேட்காதது போலவும் இருந்தது. பயத்தில் தலையை குனிந்து கொண்டேன்.
டிக்கெட் பரிசோதகர், ஒவ்வொருவரிடம் வந்து, டிக்கெட்டை வாங்கி, அதில் பேனாவால் கிறுக்கும் சடங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
“அனைத்து லோயர் பர்த்துகளும் ஃபுல். லோயர் பர்த் வேணும்னு யாரும் என் பின்னாலேயே வந்து கடுப்பு அடிக்காதீங்க. இல்லாத ஒண்ணை கொடுன்னா நான் எங்கே போவேன்…” அவர் அசைவுகள் மீது கண் வைத்து காத்திருந்தவர்களிடம், முன்னெச்சரிக்கையாக சொல்லிக் கொண்டே நகர்ந்த பரிசோதகரை தலை நிமிர்ந்து பார்த்தேன்.
பரிசோதகர் உதிர்த்த வார்த்தைகளை கேட்ட அந்த பெண், என்னை பார்த்தாள்.
அதையே ஒரு சாக்காக வைத்து, அந்த பெண்ணிடம் பேச்சு கொடுக்க முயற்சித்தேன்.
“அவர் சொல்வது நியாயம்தானே மேடம்…?” என்றேன்.
“நியாயத்தை சொல்வதிலும் ஒரு மென்மை வேணும் இல்லையா..?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
“அவருக்கு இருக்கும் வொர்க் பிரஷரில், மென்மையையெல்லாம் எதிர் பார்ப்பது நம்ம தவறு மேடம்…”
“செய்யும் பணியை நேசித்தால், அது பிரஷராவே தெரியாது. கொதி நிலையிலும், சமையலுக்கு உதவி செய்த திருப்தியில், பிரஷர் குக்கர் எவ்வளவு சந்தோஷமா விசிலடிக்குது பாருங்க..!”
“அதெல்லாம், சொல்றதுக்கும், கேட்கறதுக்கும் நல்லாதான் இருக்கு. ஆனால், பயணிகளுக்கும் ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணும் இல்லையா…?”
“எந்த மாதிரி ரெஸ்பான்ஸிபிலிட்டி..?”
“இந்த லோயர் பர்த் கிடைக்க, ரெண்டு மாதம் முன்னாடியே ரிசர்வ் செய்தேன். நீங்களும் அப்படித்தான்னு நினைக்கிறேன். முன் கூட்டியே டிக்கெட் ரிசர்வ் செய்யணுங்கற ரெஸ்பான்ஸிபிலிட்டி, நம்மை போல் மற்ற பயணிகளுக்கும் இருக்கணும். தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிற கதையா, ரயில் ஏறிய பிறகு, மத்தவங்களிடம் ‘சீட்டை விட்டுக் கொடுங்க’ன்னு கேட்டு, சங்கட படுத்தக்கூடாதுல்ல? அரை மணி நேரத்துக்குள்ள, நாலுபேர், அப்பர் பர்த்துக்கு , என்னுடைய லோயர் பர்த்தை எக்சேன்ஜ் செய்துக்கமுடியுமான்னு கெஞ்சிட்டு போறாங்க. முன்கூட்டியே திட்டமிட்டதால் நமக்கு கிடைத்த ஒன்றை விட்டுக் கொடுக்க யாருக்கு மனசு வரும் சொல்லுங்க பார்க்கலாம். அப்படி செய்தால், அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றுமில்லை…”
“எல்லோருமே முன் கூட்டியே திட்டமிட முடியாது இல்லையா..? அப்படி முன்கூட்டியே பதிவு செய்தாலும், லோயர் பர்த்துங்கறது ஒரு லாட்டரி மாதிரிதான்.
“அதற்காக, நமக்கு அந்த லாட்டரியில் கிடைத்த பரிசை விட்டுக் கொடுத்துட முடியுமா என்ன. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவங்க இந்த வண்டியில் யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படி யாராவது செய்தால், அவங்களுக்கு ‘இரயில் தியாகி’ங்கற பட்டத்தை நானே கொடுப்பேன். அதுக்கு யாரும் வாய்ப்பு தரமாட்டங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும். கிடைச்சதை இழக்காமல் அனுபவிக்கறதுதான் புத்திசாலித்தனத்தின் அடையாளம்னு நினைக்கிறேன் …” என்னுடைய பரப்புரையில் பிறந்த தூக்கத்தை அடையாளம் காட்டிய கொட்டாவியை, விரல்களை சொடுக்கி வரவேற்றேன்.
“நமக்கு கிடைத்த ஒன்றை, நம்மை விட அதிகம் தேவைப்படுபவர்களுக்கு விட்டுக் கொடுப்பதுதான், மனித நேயத்தின் அடையாளம்னு நினைக்கிறேன்…” அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எனக்கு தூக்கம் கண்களை சுழற்றியது.
படுக்கையை விரித்ததும், தூக்கம் என்னை ஆக்கிரமித்தது.
தூங்க ஆரம்பித்தால், இடி விழுந்தால் கூட, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், நீண்ட நேரம் எழுந்திருக்கவே மாட்டேன். தூங்கி எழுந்தவுடன், என்னை சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ள, கொஞ்சம் ஓவராக ஆர்வம் காட்டுவேன். இந்த பழக்கம், என் மெயின் வியாதியின் துணை வியாதி என்று சொல்லலாம்.
ஆழ்ந்த நித்திரையின் இறுதி கட்டம்.
அப்பொழுதுதான் அந்த குரல் கேட்டது.
“உங்களுக்கு வயசு, நாற்பதுதான் இருக்கும். தென்னை மரத்தில் எளிதாக ஏர்ற வயசு. எனக்கு எழுபது. என்னுடைய அப்பர் பர்த்துக்கு பதிலா, உங்க லோயர் பர்த்தை கொடுத்து உதவக் கூடாதா சார்…?”
“அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க. என் பர்த் எனக்கு மட்டும்தான்….” என் நாக்கு குளறியதை உணர முடிந்தது.
“என்னம்மோ இந்த பர்த்தோடு பொறந்தவர் மாதிரி பேசறீங்களே…உங்களுக்கும் எழுபது வயசுன்னு ஒண்ணு நிச்சயம் வருமில்ல…”
“யோவ் பெரிசு. கொடுக்க முடியாதுன்னா முடியாதுதான். உனக்கு சொந்தமில்லாத ஒண்ணை கேட்டுக்கிட்டு, என் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு நிக்கறே…”
கோபத்தில் கத்தியவாறே, எதிரில் நின்றவரை விரட்ட கைகளை அசைத்த போது வெற்றிடம் அரை குறையாக தெரிந்ததால், அந்த சம்பாஷணை கனவு என்பது புரிந்ததும், திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.
“என்ன சார்…’சொந்தமில்லாத ஒண்ணை கேட்டுக்கிட்டு’ ன்னு கோபமா கத்தினீங்க. யாரை பார்த்து கத்தினீங்க… கனவா…? என்ற குரல், எதிர் திசையிலிருந்து கேட்டதும், கண்ணை கசக்கிக் கொண்டு, பேசியது யார் என்று பார்க்காமல், வெட்கத்தில் தலையை கவிழ்த்து, ‘என்ன ஸ்டேஷன்? என்றேன்.
“அரை மணி நேரத்தில் திருச்சி வரப்போவுது…” முழுவதும் விழித்துக் கொண்ட யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.
அது நான் இறங்க வேண்டிய இடம் என்பதால், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவன், எதிர் திசையை பார்த்தேன்.
“உள்ளத்தில், நல்ல உள்ளம்’ பெண்மணி, ஒரு சிறுவனை மடியில் உட்கார வைத்துக் கொண்டு, அவர்கள் இருவருக்கும் மட்டும் புரிந்த பாஷையில் அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இரவு தூங்க போவதற்கு முன்பு, நான் அந்த சிறுவனையும், குழுமியிருந்த வேறு சிலரையும் பார்த்ததாக ஞாபகம் இல்லை. அந்த பையனுக்கு சுமார் ஐந்து வயதிருக்கும்.
அவன் வாயிலிருந்து ஒழுகிய எச்சிலை, கைக்குட்டையால் துடைத்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணியிடம், அந்த சிறுவன் மிகவும் ஒட்டுதலாக இருந்தது போல் தோன்றியது. அந்த சிறுவனை அணைத்தபடி, அந்த பெண்மணி இருக்கையில் சாய்ந்து, கண்களை கைக்குட்டையால் மூடிக் கொள்வதை கவனித்தேன்.
முகம் கழுவிக் கொண்டு திரும்ப வந்து இருக்கையில் உட்கார்ந்தேன்.
என் ஆழ்ந்த உறக்கத்தில், கனவைத் தவிர, என்னை சுற்றிலும் சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தோன்றியதால், அவற்றை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.
“நல்லா தூங்கினீங்களா மேடம்”…அந்த பெண்மணி விழித்துக் கொண்டிருப்பதாக எண்ணி பேச்சு கொடுக்க முயற்சித்தேன்.
“சார்…அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…ராத்திரியெல்லாம் தூங்காம இருந்தததால், இப்பதான் தூங்க ஆரம்பிச்சிருக்காங்க. உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன்…” என்ற மற்றொரு பெண்மணி தொடர்ந்தார்.
“இந்த வண்டியின் டிரைவர் கூட கொஞ்சம் கண் அசந்திருப்பார். ஆனால், அவுங்க ஒரு நொடி கூட கண்ணை மூடலை…”
“அவங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா மேடம்?”
“எனக்கு தாங்க உடம்பு சரியில்லை. அதை ஓரளவு சரிபடுத்தியது அவங்கதான். என் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு. நான் அவனை அணைச்சு படுத்தாதான் தூங்குவான். வைத்தியத்துக்காக சென்னை வந்து மூணு மாசமாச்சு. சரியான தூக்கம் இல்லை. நாளைக்கு டியூட்டியில் ஜாயின் பண்ணலைன்னா, டெர்மினேஷன் ஆர்டர் கொடுத்துடுவாங்க. போன வாரம் புக் பண்ணதால், அப்பர் பர்த்துதான் கிடைச்சுது. இன்னைக்கு ராத்திரி சரியா தூங்கினாத்தான், நாளைக்கு வேலையில் ஜாயின் பண்ண முடியும். அந்த சம்பாத்தியத்தில்தான் என் மகனை காப்பாற்ற முடியும். எனக்கு பதிலா, தன் தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, இவுங்கதான் இரவு முழுவதும் கண் விழித்து, என் மகனை பார்த்துக்கிட்டாங்க…” கண்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அந்த பெண்மணி.
“அவுங்க உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சவங்களா மேடம்..?” ஆர்வத்தை அடக்க முடியாமல் அந்த கேள்வியை கேட்டேன்.
“சொன்னா நம்ப மாட்டீங்க. இப்பதான் முதல் தடவையா அவங்களை பார்க்கிறேன். யாரிடமும், லோயர் பர்த் கேட்டு பெறுவதற்கு வெட்கமாக இருந்தது. ஆகையினால், குழந்தைக்கு வேடிக்கை காட்ட, தோளில் சுமந்து, பக்கத்து கம்பார்ட்மெண்டிலிருந்து இங்கே வந்து, கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போதுதான், தன் சீட்டிலிருந்து இவங்க என்னை பார்த்து கூப்பிட்டாங்க. நான் எதுவும் கேட்காமலேயே, என்னுடைய நிலைமையை புரிஞ்சுக்கிட்டு, தன்னால் முடிந்த உதவியை செய்ய காத்திருப்பதாக சொன்னாங்க. கேட்டாலும் உதவி செய்யாதவங்க இருக்கிற இந்த உலகத்தில், தேவையான தருணத்தில், கேட்காமலேயே உதவி செய்யறவங்கதான் தெய்வம். என்னை தூங்க சொல்லிட்டு, தான் தூங்காமல், குழந்தைக்கு புரிகிறாமாதிரி பேசி, தன் மடியில் படுக்க வச்சு, அவனை தூங்க வச்சுருக்காங்க. தூங்கி எழுந்தவுடன், என்னை தேடாமல், அவன் கண்கள், அவங்களை தேடியதை பார்த்தேன். அவங்களிடம், அவ்வளவு ஜெல் ஆயிட்டான். அவங்களிடம் பேசிய பிறகுதான், எனக்கு அதற்கான காரணம் தெரிஞ்சுது..!”
“அது என்ன காரணம் மேடம்..?”
“ஆட்டிசம் குழந்தைகளுக்காக ஸ்கூல் நடத்தறாங்க. அந்த வேலையையும், ஆட்டிசம் குழந்தைகளையும் அவுங்க எந்த அளவு நேசிக்கிறாங்கங்கறதை, குறுகிய நேரத்தில், என் மகனை, தன் வயப்படுத்தியது மூலம், சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டேன். சிங்கிள் மதரான எனக்கு, இந்த ரயில் பயணத்தில், அவங்களுடைய வாழ்நாள் நட்பு கிடைச்சதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு ஹர்…”
இந்த ரயில் பயணத்தில், சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே நிகழவில்லை என்று நினைத்திருந்த போது, மனதை வருடும் நிகழ்வை கேட்டதும், என்னையும் அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் கரை கட்டி நின்றது.
மனதில் புரையோடிப் போயிருந்த சுய நல எண்ணங்களினால், சாதாரண லோயர் பர்த்தை விட்டுக் கொடுக்க மனமில்லாத நான், தன் பிறப்பையே, ஆட்டிசம் குழந்தைகளுக்காக அர்ப்பணித்திருக்கும் இந்த பெண்மணி முன் தூசுக்கு சமம்…” என்று தோன்றியது.
என் காதால் கேட்டுக் கொண்டிருந்த சம்பவம், இன்னொருவருக்கு நாம் செய்யும் சிறிய உதவி, கூட, அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்ததாக அமையலாம் என்பதை இந்த மர மண்டைக்கு புரிய வைத்தது.
தூங்குவதற்கு முன்பு, நான் பேசிய பேச்சிற்காக, அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்க, கீழே குனிந்து, அவரின் பாதங்களை தொட முயற்சித்தேன். செயற்கை கால்கள் என்பதை உணர்ந்ததும், அவை கடவுளின் பாதங்களாக என் கண்களுக்கு தெரிந்தன.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ … என் காதுகளில் மீண்டும் ரீங்காரமிட்ட பாட்டு, சூழ்நிலையோடு ஒத்துப் போவதை உணர்ந்து நெகிழ்ந்தேன்!
***********************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்