logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

KAVIJI

சிறுகதை வரிசை எண் # 87


சாம்பல் பூக்கள்- சிறுகதை- கவிஜி  *************************************************** விடிய மறுக்கின்ற அர்த்த ராத்திரி போன்றது அன்பு. நட்சத்திர மயக்கத்தில் மினுங்கி கொண்டே இருக்கத்தான் அது விரும்புகிறது. மற்றபடி வானம் உண்டா இல்லையா என்ற கேள்வி அதற்கு இல்லை. அழுது வீங்கி ஆவி கொதிக்க குத்த வைத்து அமர்ந்திருக்கும் தங்கரை நடுக்கத்தோடு தான் அத்தனை பிணங்களும் பார்த்தன. தங்கர்- க்கு அப்பா மீது அன்பு. அப்பாவுக்கு மட்டும் என்ன. அன்பை விட உயர்ந்த எது ஒன்று இருக்குமோ.... அது. பேரன்பு என்று சொல்லலாமா. அது தான் அவன் மீதும். ரெண்டு தங்கை.. ஒரு அண்ணன்... ரெண்டு அக்கா என்றால்.... கூட்டு குடும்பம் என்பதைத் தாண்டி தனக்கு தானே வைத்துக் கொண்ட எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும் வேட்டு குடும்பம் என்றால் சரி தானே. திரும்பும் பக்கம் எல்லாம் அன்பின் வாசத்தில் தினம் தினம் குமட்டல் தான் தங்கருக்கு. குமட்டலின் வழியே ஒரு பழக்கம் வருமே... அதில் ஒரு சுகம் இருக்கிறது. அது ஒருவரை சார்ந்து ஒருவர் வாழ்வதாக செய்து கொள்ளும் நம்பகமான கற்பனை. அதன் மூலம் ஒரு சுகவாசி நினைப்பை நாமும் பூசி எல்லாருக்கும் பூசி விடுதலில்.... ஒரு மேலோங்கிய சுய கழிவிரக்கம் கிடைக்கும். கிடைக்கிறது அவனுக்கு. தங்கராஜ்... அந்த வீட்டு செவ்வெறும்பு. எல்லாருக்கும் பிடித்த துரு துரு குறும்பன். ஆக... தங்கர் ஆனான். ஒரு கட்டம் போட்ட சட்டையை கழற்றி போடுவது போல இந்த கட்டம் போட்ட வாழ்வை கழற்றி போட அவனுக்கு வழி தெரியவில்லை. உன்னை நம்பறேன்.உனக்காகத்தான் இந்த வாழ்க்கை. நீ தான் இந்த வீட்டுக்கு ஒளி.நீயே இந்த வீட்டுக்கு கடவுள்.நேரத்துக்கு சாப்பிடணும்.பார்த்து போகணும் பார்த்து வரணும்.யார்கிட்டயும் வம்பு வெச்சுக்க கூடாது.வீட்டை பார்த்துக்கணும்.நீ தான் படிச்சவன்.. மத்தவங்க எல்லாரும் தற்குறி. நீ நீ நீ என்று திரும்பும் திசை எல்லாம் அந்த வீட்டில் அன்பின் அட்டூழிய சுவடுகள்.  மூச்சு விட முடியாத அளவு பொதி மூட்டையாகி விட்ட அன்பை... அவன் எப்போதும் சுமக்கும் பேரன்பின் கழுதை.  அன்பு சுமை. அன்பு சிறை. அன்பு இறுக்கம். அன்பு அடிமைத்தனம். அன்பு ஓர் இயலாமை. அதில் கட்டுண்ட கிடப்பதில் ஓர் அரைவேக்காட்டுத்தனம் இருக்கிறது. அது அப்படி இருப்பதைத்தான் சுலபமாக கருதுகிறார்கள். பிறகு அவர்கள் அந்த சுலபமான வழியில் சென்று அதையே பிறருக்கும் போதிக்கிறார்கள். இவையெல்லாம் தங்கருக்கு தெரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் வீடும் வீட்டு ஆட்களும் தான். "ஐயோ எனக்காகவா குடிக்கறேன்... இல்ல தங்கரு.... இந்த வீட்டை கரை சேத்த முடியல தங்கரு... தினம் தினம் மூச்சடைக்குதுடா.. அதான்... சரி குடிச்சா சரியா போயிடுமா... அது தெரியாது. ஆனா குடிச்சா என்னவோ சரி ஆகிடுது அவ்ளோ தான்...."   அப்பாவின் தத்துவம் போதை இறங்க இறங்க ஏறும். அப்பன்காரன் குடி... அதிகமும் இல்லை. அளவில் கம்மியும் இல்லை. ஆனால் குடித்து விட்டு எந்த இரவும் அவர் உண்டதே இல்லை. எல்லா கவலையும்... சேருமிடம்... புற்று நோயோடு போராடும் மனைவி திலோத்தமா மீது கொண்ட அளவுக்கதிகமான பாசம் தான். அன்பு என்ன செய்யும். இப்படி மற்றவர்களுக்காக தன்னையே அழித்துக் கொள்ளும். புத்தர் சிலைகள் விற்று பிழைப்பு நடத்தும் ஒரு ரோட்டோர பீகார் குடும்பத்தில்.... பார்த்ததுமே பிடித்து விடும் ரெட்டை மூக்குத்தி அழகி திலோத்தமா.  எப்போதோ நடந்தது. இப்போது நடப்பது போல இருக்கும் போதெல்லாம் குடி அதிகம் தான் அப்பனுக்கு. ஆழ்மனதில் பொங்கும் பேரன்பை இந்த வயதுக்கு மேல் அழுது காட்ட முடியாது. ஆனால் ஆழ்ந்து குடித்து மதி மயங்கி விழுந்து காட்ட முடியும். முதல் புத்தனுக்கு சிறு புன்னகை. இரண்டாம் புத்தனுக்கு கொஞ்சம் பேச்சு.மூன்றாம் புத்தனுக்கு அறிமுகம்.நாலு ஐந்து ஆறாம் புத்தனுக்கு டிபன் வாங்கி கொடுத்தாயிற்று. பத்து பதினைந்தில் வீட்டுக்கே கூட்டி வந்தாயிற்று.  ஒரு விடுதலைக்கு ஏங்கும் ரோட்டோட பிழைப்பு.. கிடைத்த கூடாரத்தில் தாலி கட்டி ஒண்டிக் கொண்டது. அதன் நீட்சியில்... அழகை வேறெப்படி ஆராதிப்பது. அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தது அப்படித்தான். வரிசையாக வருசத்துக்கு ஒன்று என்று அது ஒரு அர்த்தராத்திரி அசுர வேலை தான் போல. செய்வதை எல்லாம் செய்து விட்டு கடவுள் கொடுத்தது என்று காட்டி கொடுத்த பாசக்காரர்கள் ஆனார்கள் அவர்கள். எத்தனை கோபம் இருந்தாலும்... அப்பாவின் அன்பு சிரிப்பில் எல்லாரும் சுகமே. அவர்களின் சுகங்களை நினைத்து நினைத்து குடித்து குடித்து செத்து போய் விட்ட அப்பாவின் வெற்றிடம் தான் போட்டு தாக்குகிறது. குடித்து சாக முடிவெடுத்த பின் குடும்பத்தோடு இருப்பது குடிகாரனுக்கு அழகல்ல. அவர் சாவதற்கு கொஞ்ச நாள் முன் ஓடிப்போனார். தேடிப் போனார்கள். எங்கோ ஊட்டி மலையில் தொட்டபெட்டா தொட்ட மாதிரி ஒரு எஸ்டேட்டில் ரத்த வாந்தி எடுத்து செத்து கிடந்தார். தூக்கி போட்ட பிறகு வீடு துக்கத்தில் துவண்டது. தங்கர் டீ கடைக்கு எச்சி கோப்பை கழுவ சென்று விட்டான். தினமும் அழுவான். இந்த வீட்டில் யாருக்குமே அறிவு இல்லையே. எப்படி வாழ்வது.. என்ற மூடாக்கு அவனை போட்டு வாட்டும். அவன் திணறி திணறி மூச்சு விடும் ஒரு ராத்திரியில்... ஏங்கி இறங்கிய மூச்சில் அம்மாகாரி அப்பன் போன இடத்துக்கே கிளம்பி விட்டாள். ஐம்பது வயது கூட இருக்காது. சிவப்பு கிளி மாதிரி ஒருத்தியை காதல்ங்கற பேர்ல கூட்டிட்டு வந்து கொன்னே போட்ட அப்பனை நினைத்து சட்டியை உடைத்து அது மீதேறி தன் ஆதங்கத்தை கிழித்து கொண்டு அழுதான். தங்கருக்கு சங்கறுத்துக் கொண்டு சாக அப்போது தான் முதல் விதை விழுந்திருக்க வேண்டும். ஆனால்... அம்மாவின் அன்பு அவனை அழுவதற்கு உயிரோடு இருக்க சொன்னது. வீட்டின் காவலாக தான் தானே இருக்கிறோம் என்ற நினைப்பு அவனை தூங்கவே விடவில்லை. அண்ணன் கஞ்சாவுக்கு அடிமையாகி ஊரை விட்டே ஓடி விட்டான். அவன் மீது ரெண்டு திருட்டு கேசு கூட இருப்பதாக தெரிய வருகையில்... சுவற்றில் மோதி மோதி அழுதான். எல்லாரும் அழுதார்கள். ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டு அழுதார்கள். அன்பின் வெளிப்பாடு அழுகையைத் தவிர வேறென்ன. ஒருவருக்காக வாழும் இன்னொருவர் தனக்காக வாழும் வாழ்க்கையில் கேள்விக்குறியாய் வளைந்து நின்றார்கள். போன் செய்து எப்போது வேண்டுமானாலும் அண்ணன் காசு கேட்பான். அன்பு என்ன செய்யும்... கடன் வாங்கியாவது அவன் அக்கவுண்டில் போட்டு விடும். இரண்டு அக்காளும் அடுத்தடுத்து யாரோடோ ஓடிப் போனார்கள். அவர்கள் அப்படி ஓடிப் போனது தான் தர்மம். அன்பை நடு மண்டையில் வெட்டி போட அது தான் சிறந்த வழி. சிந்தித்துக் கொண்டே.... அப்பாவைத் திட்ட வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அவரின் அன்பும் ஆதரவும் நினைவில் பைத்தியம் பிடித்த பூனையைப் போல பிராண்டும். அப்பா எத்தனை சுமைகளை சுமந்தவர். அன்பு எல்லாவற்றையும் தாங்கும் ஆயுதம். அதை அவன் முழுக்க நடுங்கிக் கொண்டே போர்த்திக் கொள்வான். டீ கடைக்கு விஷயம் வரும் போது... பாட்டி முழுதாக எரிந்து முடித்திருந்தாள்.   செத்து போன மகனையும் மருமகளையும்... ஓடிப்போன பேத்திகளையும் நினைத்துக் கொண்டே.... திறந்த கேஸை மூட மறந்திருக்கிறாள். பற்றிக் கொண்ட நெருப்பு தொற்றிக் கொண்ட கவலையை தீர்த்து போனது. சாம்பலில் சரிந்த தங்கருக்கு அழுகை இல்லை. ஆற்றாமையை வெளிப்படுத்த இயலாத தூரம் அவனுக்கு தேவையாக இருந்தது. அன்பை போல ஒரு அச்சம் இந்த உலகத்தில் இல்லை என்று நம்பினான்.  "எல்லாரும் என்ன ஒன்னாவா பொறந்தோம். ஒன்னாவே சாக. இருக்கறவன் இருப்பான். சாகறவன் சாவான். இதெல்லாம் பிண்டமாய் இருந்தவரை சுலபமா இருந்துச்சு... அதுல மனசுன்னு ஒன்னு புதுசா பரிணாமம் ஆச்சு பாரு.. அப்ப வந்துச்சு வினை...." பிச்சைக்காரன் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக.. அவனோடே போய் விடலாமா என்று தோன்றிய தங்கருக்கு வேற ஒன்றுமே தோன்றவில்லை. பெரிய தங்கச்சி அழுது கொண்டே இருந்தாள். பாட்டி செல்லம்... பாவி என அவளை புலம்ப செய்தது. தான் கூட இருந்திருக்க வேண்டும் என்று குற்ற உணர்ச்சியில் அவளை உழல செய்தது.   அன்பை போதிக்கிறவர்கள் பைத்தியக்காரர்கள். பாசத்தை விளைவிப்பவர்கள் அபாயகரமானவர்கள். சரி தான் போல.. பாட்டி எரிந்து செத்த அதே இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட தங்கை... தங்கர் வீடு போவதற்குள் எரிந்து முடித்திருந்தாள். இல்லை என்றால் தூக்கி போட்டு மிதித்து வெட்டி வீசி விட தான் வேகமாய் சென்றான். வழி இல்லை. பாட்டி இல்லாத உலகில் எப்படி இருப்பேன் என்று அவள் புலம்பிக் கொண்டிருந்தது இப்போதும் எரிச்சலடைய செய்தது. அந்த போராட்டத்தில்...அக்கா மீதிருக்கும் பாசத்தில்.... சின்ன தங்கைக்கும் தீக்காயம் பட்டு... அவளை மருத்துவமனையில் வாழை இலையில் படுக்க வைத்திருக்கிறார்கள். தங்கர் தான் பார்த்துக் கொள்கிறான். வேறு யாருக்கு அறிவு இருக்கிறது அந்த வீட்டில். எல்லாரும் அன்பின் பிள்ளைகள். கூட சேர்ந்து சாக துடிப்பார்கள். அடுத்தடுத்து ஆறு மாதத்தில் நான்கு மரணங்கள். போதாக்குறைக்கு ஐந்தாவது இழுத்துக் கொண்டு கிடக்கிறது. எப்போதும் குத்த வைத்தே அமர்ந்திருக்கிறான். நிமிர்ந்து பார்ப்பதில்லை. அப்படி அமருவதில் ஒரு வசதி இருக்கிறது. தான் கவலைக்குள் இருப்பதை சொல்ல வேண்டியதில்லை. பார்த்தாலே புரிந்துவிடும். யாரிடமும் பேசுவதில்லை. பேசினால் பாசம் காட்டி மோசம் செய்யும் மனிதர்கள் என்று யாரோ அவன் காதில் சொல்லிக் கொண்டே இருப்பதாக ஒரு நம்பிக்கை.    ஒருவரை சார்ந்து... அவர் மீது கொண்ட அன்பின் தத்தளிப்பில் எப்போதும் மூச்சடைத்துக் கொண்டே இருப்பது தான் அன்பின் சுவர்கள் எனில் அதை உடைக்க வேண்டும். குடும்பம்... மானுட சகவாசங்களின் வழியே ஒருவரை ஒருவர் முடக்கித்தான் போடுகிறது. அன்பு அன்புன்னு சொல்லி ஒரு தனி மனித நிம்மதியை பறிக்கும் இந்த கூட்டம் குடும்பமாக இங்கே சுற்றி கொண்டிருக்கிறது.... கவனம் என அவனை எச்சரித்து கொண்டே.... இருப்பதை புரிந்து கொள்ள தான் அவன் போராடுகிறான். ஒரு எழவும் புரிவதில்லை. பதிலாக ஓங்கி ஓங்கி அழுது விட ஆசை கொள்கிறது. அழுது அழுது சிரிக்க ஆரம்பித்து விட்ட அவனை.... அவன் தானா என்று அவனே யோசிக்க முடியவில்லை.  அப்பா செத்து அம்மா செத்து பாட்டி செத்து தங்கச்சி செத்து.... எல்லாரும் செத்து போகற இந்த வாழ்க்கையில என்ன கருமத்துக்கு பாசம் நேசம் எல்லாம். அவன் புத்திக்குள் சாம்பல் உதிர.... மூளைக்குள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. அது ஒரு வகை நிம்மதியைத் தந்தது. "பெரிய பெரிய மசுருகள் என்று நம்புகிறவர்கள் ஒரு நாள் முழுக்க பெரியாஸ்பத்திரிக்குள் சுற்றி வர ஏற்பாடு செய்ய வேண்டும்... பிறகு தெரிந்து விடும்... எது மசுரு ஏன் மசுருன்னு..." வளாகத்தில் தண்ணீர் விற்கும் பெட்டிக்கடை பெரியவர் தானாக பேசுவதைக் கேட்க அத்தனை நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த வாரம் முழுக்க இந்த வளாகத்தில் நடந்து நடந்து கிடந்து தவிக்கும் தங்கரின் அன்பு ஈ மொய்க்கும் துப்பிய எச்சிகளாய் ஆங்காங்கே சாட்சியம் செய்தன.  தீயில் வெந்தவர்கள் அப்போதே செத்து விடுவது உத்தமம். ஆஸ்பத்திரியில் வாழை இலையில் கிடப்பது யுத்தம். வாரம் முழுக்க அவள் முனங்கி சுணங்கி கிடந்த காட்சி தங்கரின் தொண்டைக்குள் கொத்தாய் கையை விட்டு குடலை உருவுவது போலவே. ஒரு வழியாக சின்ன தங்கச்சியும் செத்து போனாள். அப்பாடா என்றிருந்தது. அன்பு தேடும் நிம்மதி எத்தனை கொடியது. தூக்கி கடாசி விட்டார்கள். காலையில் தான் போஸ்ட் மார்ட்டம். மருத்துவ வளாக கடைக்கோடியில் போஸ்ட் மார்ட்ட அறையில்.. சாம்பலும் தேம்பலுமாக கருகிக் கிடந்த சின்ன தங்கை பல்லிளித்துக் கிடக்கிறாள். போன வாரம் பெரிய தங்கை கிடந்த அதே இடம். அய்யா இது எங்க இடம் என்று சொல்லி சிரிக்க தோன்றியது. வாட்ச்மேன் அன்புக்காரன். பார்த்துட்டு வா என்று உள்ள அனுப்பி அன்பை சேகரித்துக் கொண்டான். கருகிய வாசத்தில் தானும் ஒரு பிணம் போல குத்த வைத்து அமைத்திருக்கும் தங்கர்..... பார்த்துக் கொண்டிருக்கிறானா.... பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறானா என்று தெரியவில்லை. இதை செய்யாத... அதை செய்யாத... பத்திரமா இரு.. பார்த்து இரு... நேரத்துக்கு சாப்பிடு..ஒருத்தர் சாப்பிடலனா... இன்னொருத்தர் தன்னையே வருத்திகிட்டு... மற்றவரை மனசுல சுமந்துக்கிட்டே தன்னை ஒரு சுமைதாங்கியா நினைச்சுகிட்டு... அப்பா சாகவும் அம்மாவுக்கு நோய் முத்தி.... அம்மா சாகவும் பாட்டிக்கு பைத்தியம் புடிச்சு.... பாட்டி சாகவும் பாசக்கார பேத்திக்கு புத்தி பேதலிச்சு.. அவ எரிய.. அவ தங்கச்சியும் எரிய.. இது ஒரு கிறுக்குத்தனத்தின் வட்டம் போல தான் இருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும் பாசக்கயிறு ஒரு நோய். அழுது புலம்பி அரற்றி... கட்டிக்கொண்டே கிடக்கும் குடும்ப நோய். தனியாக சிந்திக்க விடாத சிலந்தி வலை. அவன் பக்கத்தில் இருந்த சுவற்று தூணில் தலையை வேக வேகமாய் முட்டினான். முட்டி முட்டி சாவது அவன் நோக்கம் அல்ல. முட்டி முட்டி ஒரு முடிவுக்கு வரலாம் தானே. அவன் அடுத்த முட்டுக்கு தலையை காற்றில் இழுக்க.. தலையைக் கவ்வி பிடித்து தடுத்தது ஒரு கை. திக்கென திரும்பியவனுக்கு தலை காலில் உருள... கால் தலையில் துடித்தது. அங்கே படுத்துக் கிடந்த பிணங்களில் ஒன்று தான் எழுந்து அவனை தடுத்தி நிறுத்திக் கொண்டிருக்கிறது. அவன் மயங்கி சரிய... அவனை தெளிய வைத்து... எதிரே அதுவும் குத்த வைத்து அமர்ந்து கொண்டது.  "அடேய்... பயப்படாதடா.. நான் பேய் இல்லை. ஒரு ராத்திரி முழுக்க பிண அறையில் தங்கணுங்கறது போட்டி. அதான். நானும் உன்னை முதல்ல பேய்னு தான் நினைச்சேன். தலைலருந்து ரத்தம் வரவும் தான்... விட்டா பேய் ஆகிடுவான் போலன்னு எந்திரிச்சிட்டேன்...." என்றான் அந்த போட்டிக்காரன். அவன் முகத்தில் மெல்லிய நகை. தாமரை இலை நீர் துளி போன்ற பேச்சு மொழி. போட்டிக்காரன்  : " உறவுக்காக உன்னையே காயப்படுத்திக்கற பார்த்தியா... ஆயிரம் சொல்லு... அன்பு கவசம் தான். அது தான் இந்த பூமியை சுழல வெச்சுகிட்டுருக்கு...." தங்கர்  : "இல்ல.... அது சிறை கம்பி. அதான் முட்டி முட்டி உடைக்கறேன்...." தங்கர்  : "எல்லாரும் சாகறதுக்கு எதுக்கு உறவு....?" போட்டிக்காரன்  : " ஒருத்தன் செத்தான்ங்கறதுக்காக இன்னொருத்தன் கஷ்டப்படறான் பாரு..... அதுக்கு தான் உறவு..." தங்கர் : "நீ என்ன தெளிய வைக்க பாக்கற" போட்டிக்காரன் :  "ம்ஹும் எனக்கு குழப்பம் தான் புடிக்கும்..."  தங்கர் : " அன்பு எங்க குடும்பத்தையே காவு வாங்கிருச்சு"  போட்டிக்காரன் :  "அதுக்கு தான் நான் வம்பு பேசிட்டே திரியறேன் "     இது எத்தனையாவது நாள் என்று தெரியவில்லை. ஆனால் போட்டிக்காரனை பார்க்காமல் தங்கரால் இருக்க முடியவில்லை. தினம் தினம் வாட்ச்மேனுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து உள்ளே வந்து விடுவான். போட்டிக்காரனுக்கு தினமும் கேம் இருக்கும். முழு இரவு பிண அறையில் இருந்து விட்டுட்டு கிளம்பி விடுவான். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டவனுக்கு வாழ்வது சாவது எல்லாம் ஒன்றுதான்.  விடிய விடிய இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். என்னவெல்லாமோ பேசினார்கள். ஏதேதோ பேசினார்கள். பேசி பேசி... வாழ்வது பற்றியும் சாவது பற்றியும் இல்லாத ஒரு இருப்பை நோக்கி நகர்ந்த தங்கரால்... அவன் பூமியை சுழற்ற முடிந்தது. போட்டிக்காரனுக்கு சுழலாத பூமி தான் விருப்பம். ஓடிப்போன அக்காக்கள் பற்றிய விபரம் இப்போது எதற்கு... எல்லாவற்றுக்கும் பதில் வேண்டுமா என்ன... கேள்வி தான் எதற்கு... அன்பு பாசம் நேசம் விருப்பம்.... இருந்தால் இருக்கட்டும். இல்லை என்றால் இல்லாமல் போகட்டும்...  நீ வா... நான் காத்திருக்கிறேன் என்றான் போட்டிக்காரன். ஒன்றை ஒன்று சாராத பேச்சு. அன்பின் வழியே ஆதிக்கம் கொள்ளும் மானுட பரிணாமமற்ற பேச்சு. பேசட்டும். உலகை விட்டு வெளியேறி யோசிக்கும் போது... எல்லாம் கற்பனை என்று ஆகி விடுவது போல... தங்கரின் தவத்தை கலைக்க விரும்பாத நானும் நீங்களும் இப்போது குறைந்த பட்சம் இங்கிருந்தாவது காணாமல் போய் விடலாம். மற்றபடி அவர்களின் அன்பு பற்றி சொல்ல நமக்கு என்ன இருக்கிறது. கதை முடிக்கும் முன் அல்லது கதவடைக்கும் முன் இன்னொரு வரி தோன்றுகிறது. "போட்டிக்காரன் அனாதை பிணம் என்பதால் அவன் தொடர்ந்து அங்கேயே கிடக்கிறான். இந்த தங்கர் இருக்கிறானா இல்லையா என்பது தான் இப்போது சாம்பல் பூத்த கேள்வி..."  கவிஜி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.