logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

"பட்டாளத்தாஞ் செத்து அந்தா இந்தான்னு ஒரு மாமாங்கமே ஓடிப் போச்சு ஆனா அவன் பொண்டாட்டி சீலக் கட்டும் அவ நடையும் ஒடையும் தோரணையும் என்னத்த சொல்ல, கம்முனாட்டியாயிருந்தாலும் கண்டாரவோலி காக்காசு செலவில்லாம ரெண்டு பொட்ட புள்ளைய கரையேத்திப்புட்டால்ல சீமசமத்தி . ரெண்டு மகளுகளுக்கும் மெட்ராஸ் மாப்பிள்ளையில்ல புடிச்சிருக்கா. எல்லாத்தையும் அந்த நாடியம்மன் பார்த்துக்கிட்டு தானயிருக்கா..." பக்கத்துகடை பார்வதி சாடைமாடையாகவும், நேரடியாகவும் தண்டல் வசூலுக்கு வரும் செல்வத்திடம் மீனாட்சியம்மா பற்றி தினந்தோறும் பேசுவது ஒன்றும் புதிதல்ல . நன்றாக காதில் விழுந்தாலும் எதுவும் கேட்காதது போல் அவள் வியாபாரத்தில் மும்முறமாக ஈடுபட்டிருப்பாள். கணவனையிழந்து தனியாய் பட்டுக்கோட்டை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி சீவனம் செய்யும் மீனாட்சியம்மா. ஐம்பதை கடந்திருந்தாலும் கட்டுக்குலையாத மேனியும் நல்ல எலுமிச்சை நிறமும் அகன்ற கண்களும் கொண்ட ஓங்குசாங்கான ஆள். அவள் கண்ணிசைவிற்காய் அவளை சுற்றிவரும் கூட்டமும் ஏராளம். மீனாட்சியம்மாவோ யாரிடமும் எல்லை தாண்டி பேசியதோ பழகியதோ கிடையாது. "அவள மாதிரியே செகப்பு தோலா பெத்துட்டால்ல அதே காலாகாலத்துல வந்து கொத்திட்டு போய்ட்டாய்ங்க". மீனாட்சிக்கு இரண்டு பெண்பிள்ளைகள் பெரியவள் மாணிக்கவல்லி மாநிறம் சற்று ஒசரமானவள். சின்னவள் கண்ணம்மாவோ ஒடிசலானவள், ஆத்தாளின் நிறத்தோடு சோகையும் கூடிப்போக சற்று தூக்கலான வெளிர் நிறமாகவும், நெல்மணியெடுத்து சின்னதாய் கீறிவிட்டது போல் அகலமில்லாத கண்களும் ஆர்ப்பரிக்காத அமைதியான அழகும் கொண்டவள். இருவரையும் சென்னைக்கு பிழைப்பு தேடி சென்ற மாப்பிள்ளைகளுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிடுமுன் பெரியவளுக்கு ஓரளவிற்கு சீரான வாழ்க்கை அமைந்துவிட ,சின்னவள் கண்ணம்மா மட்டும் கணவனுக்கு சரியான வேலையின்மையால் ஏற்பட்ட வறுமை காரணமாக மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிறந்தகம் வந்து நான்கு வருடங்கள் அனாயாசமாக ஓடியிருந்தது . சிவா,அம்பிகா மற்றும் கடைக்குட்டி கண்ணன் என மூன்று குழந்தைகள். ஒரு நாள் தன் கணவன் ரங்கநாதனிடமிருந்து, தன்னையும் குழந்தைகளையும் சென்னைக்கு வரச்சொல்லி கடிதம் வந்ததும் இதற்காகவே தவமிருந்தவலாய் கிளம்பலானாள்.தன் தாய்க்கு சுமையாகயிருக்கிறோமே என்று வருத்தத்தில் இருந்தவளுக்கு விடிவு காலம் வந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவள் தாயோசற்று தயக்கத்துடன் 'பாத்துக்கிட்டு பைய போகலாம்ல, மூணுபுள்ளைகள வச்சுக்கிட்டு மெட்ராசுல போய் என்ன பண்ணுவ இங்குன இருந்தா ஏதோ ஏங் கையில கெடைக்கிறத வச்சு காப்பாத்திருவேன் ஓசன பண்ணி செய்யுத்தா' என்றாள் மீனாட்சி. ' இல்லத்தா கிளம்புறேன்' என உறுதியான முடிவெடுத்தவளாய் பட்டுக்கோட்டையிலிருந்து சொந்த ஊரான மடத்துப்பட்டி போய் குலசாமியை கும்பிட்டு விட்டு அங்கிருந்து அறந்தாங்கி பேருந்து நிலையம் வந்து இரவு எட்டு மணிக்கு சென்னைக்கு புறப்படும் அரசு பேருந்தில் தன் மூன்று குழந்தைகளுடன் புறப்பட்டாள். நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் வீடு இருக்கும் போக் ரோட்டின் பக்கவாட்டிலுள்ள தாமஸ் ரோட்டில் தான் ரங்கநாதன், வீட்டு வசதி வாரியம் இலவசமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஏழைகளுக்கு வழங்கவிருக்கும் இடத்தில் குடிசை வீடு அமைத்திருந்தார். நான்கு வருடங்களாக மாமியார் வீட்டிலிருக்கும் குடும்பத்தை எவ்வளவு காலம் தான் இப்படியே விடமுடியுமென அழைத்திருந்தாரே தவிர சற்றும் தளராத வறுமையில் பிடியில் தான் அகப்பட்டிருந்தார் ரங்கநாதன்.' குடிசை வீடு தான் உடனேயும் இங்கிருந்து போகமுடியாது வீட்டு வசதி வாரியத்திலிருந்து வந்து இன்னிக்கு நாளைக்கு டோக்கன் குடுத்துருவாங்கன்னு பேசிக்குறாங்க அப்புறம் சர்க்காரு வீடுகட்டி குடுப்பாங்களாம். இப்ப இந்த வீட்டுல கொஞ்சம் பல்ல கடிச்சுக்குட்டு ஓட்டித்தானாகனும்' என்றார் மனைவியிடம். அன்றாட கூலி வேலை அல்லது வடபழனி பாலத்திற்கு கீழுள்ள மார்க்கெட்டில் தேங்காய் யாவாரம் சில நேரங்களில் கொத்தவால்சாவடி மார்க்கெட்டிலிருந்து காய்கறி எடுத்து வந்து பாண்டிபஜார் மார்க்கெட்டில் விற்பனையென ஏதேதோ செய்து பார்த்தும் முன்று குழந்தைகளுக்கான சீவனம் என்பது மிகவும் கடினமாகத்தானிருந்தது. அதனால் கண்ணம்மா அருகிலிருக்கும் வீடுகளில் வீட்டுவேலைக்கு சென்று விடுவாள். அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்திருந்தாலும் சரிவர யாரும் பள்ளிக்கு செல்லமுடியவில்லை. பெரியவன் சிவாவை புகைப்பட கூடத்தில் பிரிண்ட் போடும் வேலையில் சேர்த்தார்கள். பெண் பிள்ளை அம்பிகாவை மட்டும் அதிகாலையிலேயே தன்னோடு வீட்டு வேலைக்கு அழைத்து செல்வாள் எட்டு மணிக்கு பின் அம்பிகாவும் கண்ணனும் பள்ளிக்கு செல்வார்கள். அம்மாவிற்கு உதவி செய்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் அம்பிகா மதிய உணவை முடிந்தவரை இரண்டு மூன்று முறை வாங்கிவந்து வீட்டில் சேமித்துக் கொடுப்பாள் தன் தம்பிக்கு. ஒருநாள் தம்பியைக்காணாது தேடிச்சென்றவள் பக்கத்திலுள்ள ஆலையம்மன் கோயில் வாசலில் கோலி விளையாடுவதைக்கண்டு அதிர்ந்து போனாள். பாதி நாட்கள் பள்ளிக்கு செல்லாது இவ்வாறே விளையாடிய கண்ணனை, சைக்கிள் கடை ஒன்றில் பன்ச்சர் ஒட்டும் வேலைக்கு சேர்த்து விட்டாள் கண்ணம்மா‌. தன் காதிலிருக்கும் கர்ணபூவையும் பிறந்தகத்திலிருந்து கொண்டு வந்து புழங்கும் ஒரு பித்தளை அடுக்குச்சட்டியையும் வறுமையின் பொருட்டு எத்தனை முறை அடுகு வைப்பாள் மீட்பாள் என்பது வறுமைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் அவளுக்கு மட்டுமே வெளிச்சம். குடும்பத்தில் அனைவரும் உழைத்தாலும் திரும்பிய பக்கமெல்லாம் தீ வறுமைத்தீ பசித்தீ உயிர்த்தீயை அணைக்க துடித்துக்கொண்டிருந்தது. ரேசனில் கிடைக்கும் அரிசி கோதுமை சீனியை வாங்கிக்கொண்டு தன்னாலானதை, கோதுமை தோசை கேப்பக்களி கம்பங்களி முருங்கைக்கீரை சேர்த்து கேப்பை அடை ஊரில் அறுவடை காலங்களில் செய்து தரப்படும் மேலொன்றும் கீழொன்றுமான தோசைகளுக்கிடையே வெல்லம் போட்டு செய்யும் களத்து தோசையென வறுமையிலும் அருமை பாராட்டியே வளர்த்து வந்தாள். வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் பசி அபரிமிதமானது. பத்து தோசை இருபது இட்லியென சாப்பிட்டாலும் அடங்கமறுக்கும் பசிக்காலம். 'பசி' சர்வ வல்லமை பொருந்திய சர்வ இயக்கங்களையும் உள்ளடக்கிய இரண்டெழுத்து இயங்கு வார்த்தை. இலக்கியங்களோ வரலாறோ சமூகத்தின் பசியை தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. எத்தனை முறை பதிவிட்டாலும் தீராத பசியைப்போல் எழுதித் தீராதது பசி. தெரிந்தவரோ தெரியாதவரோ முதலில் நாம் கேட்பது 'சாப்டிங்களா 'அழகு தமிழில் பழைய பழகு தமிழில் சொல்லவேண்டுமானால் பசியாறிட்டிங்களா? இன்று நாம் புழக்கத்திலிருந்து இழந்த சொல், வழக்கத்தில் வலம் வந்துகொண்டிருந்த ஆற்றுப்படுத்தும் ஒரு சொல் பசியாறிட்டிங்களா. 'சாப்டிங்களா?' என்று கேட்பதன் மூலம் ஒருவர் வயிறார உண்டு நலமாக இருக்கறாராவென அவரின் நலத்தை உறுபடுத்தும் சொல். ஏன் அப்படி ஒரு பழக்கம் நமக்கு இருக்கிறதென்றால் பெரிய பல தொடர் பஞ்சங்களை பசியை சந்தித்த சமூகம் நம் சமூகம். திரை கடல் ஓடியும் திரவியம் தேட சென்றவர்களெல்லாம் வறுமை விரட்ட தம் சொந்த மண்ணைக்கைவிட்டு குடும்பத்தை காப்பாற்ற குடும்பத்தைப்பிரிந்து வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களே.அதனால் தான் நாம் அவ்வாறு கேட்கிறோம் . அடுத்தவனுக்கு உணவிடும் தருணமே மகத்தான தருணம் எனலாம். வீடு திரும்பும் பொழுது,குழந்தைகளுக்கு சாப்பிட பழங்களோ தின்பண்டங்களோ எதையாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்பது எல்லா பெற்றோரின் பொதுவான எண்ணமாகவிருக்கும். விருந்தாளியாய் ஒரு வீட்டிற்கு செல்லும் போது கூட குழந்தைகள் இருப்பார்கள் போனவுடன் கையைப்பார்ப்பார்கள் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாதென ஏதாவது தின்பண்டங்கள் வாங்கிச் செல்வது நமது பழக்கம்.யாரவது தீடீரென வீட்டிற்கு விருந்தாளி வந்துவிட்டால் இரண்டு பேருக்கான உபரிசோறோடு தன்னுடைய பங்கையும் சேர்த்து எப்படியாவது சமாளித்து விடுவாள் அம்மா. 'சோறு' என்பது ஆகப்பெருங்கனவாக இருந்த அக்காலகட்டத்தில். பக்கத்து வீட்டு பொம்மியம்மா வீட்டில் மட்டும் தினமும் சோறு வேகும் வாசம் இழுக்க எட்டிப்பார்க்கும் அம்பிகாவை "வா, சோறு வோணுமா தட்டு எத்துணுவா போட்டுத்தர்ரேன் ஆனா ஒங்கூட்லர்ந்து ரெண்டு சுள்ளி எடுத்துனு வர்றியா" என ரெண்டு சுள்ளிகளை வாங்கிக்கொண்டு சோறிடுவாள். ஒரு நாள் "பாய் கடையாண்ட போய் ரெண்டு முட்டை வாங்கியார்ரியா ஒரு கொடம் தண்ணி புட்ச்சுனு வர்ரியா பழுப்புல" யென ஏதோ ஒரு வேலை வாங்கிக் கொண்டு சோறிட்டாள். 'இன்னும் ரெண்டு சுள்ளி தர்றேன் என் தம்பிக்கும் சோறு தர்றிங்களா" என கேட்டால்" முடியாது" என அறவே மறுத்து விடுவாள். சத்துணவு சோற்றை தம்பிக்கு வாங்கி வரவே தினமும் தாயுடன் சேர்ந்து வேலைக்கு சென்று பின் பள்ளிக்கு செல்வாள் அம்பிகா. கடைக்குட்டி கண்ணன் தன் நான்கு வயதுவரை தாய்ப்பால் குடித்தவன்.ஆச்சி வீட்டிலிருக்கும் வரை பாலுக்கு பஞ்சமில்லை. பக்கத்து வீட்டு பாலாமணியக்கா நான்கு காராம்பசு வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வந்தது. விற்பனைக்கு செல்லுமுன் கண்ணனுக்கு கொடுத்துவிட்டு தான் விற்பனைக்கு எடுத்து செல்லும். பிறந்ததிலிருந்தே பஞ்சமிருந்தாலும் பாலுக்கு மட்டும், 'விதி' விலக்களித்திருந்தது. மெட்ராஸ் வந்தபின் பசி அவன் கால்சராயில் குலுங்கும் கோலிக்குண்டுகளைப்போல அவனோடே சிணிங்கிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தது. மாலை வேளைகளில் "யம்மா நம்மூருல இருக்கும்போது சுடுவல்ல களத்தோசை அத சுட்டுக் குடும்மா" என நச்சரிப்பான். சிவாமட்டும் தனக்கு கிடைக்கும் அன்றாட சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு பேட்டா காசை மட்டும் ஒரு பாண்ட்ஸ் பவுடர் டப்பாவை நாணயங்கள் செல்லும் அளவு சிறிதாக துளையிட்டு அதில் சேமித்துவைத்திருந்தான். அதை அவ்வப்போது எண்ணிப்பார்ப்பான் .பின்னர் தினமும் வேலை முடிந்து வந்ததும் கொட்டி எண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தான். பரபரப்பான துவாரகா ஹோட்டலின் அருகில் இருக்கும் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணனைப்பார்த்து"எங்கப்பா புட்ச்ச இந்தப்பொடியன நல்லா சுறுசுறுப்பா வேலை பாக்குறானே"என்று வாடிக்கையாளர் சந்தானம் கேட்க "இப்பதான் ஒரு மாசம் ஆச்சுனா, நல்லா தான் வேலை பார்ப்பான் ஆனா பக்கத்துல துவாரகா ஓட்டல் நெய் ரோஸ்ட் வாசத்துல தான் மயங்கி வேலைய லேட் பண்ணிருவான்." என்றார் கடை முதலாளி ஏழுமலை. தினமும் துவாரகா ஓட்டல் சூடான தோசைக்கல்லில் சுள்ளென தெளிக்கப்படும் நீரின்ஓசை கண்ணனின் காய்ந்த வயிற்றில் சுள்ளென பசியைக்கிளப்பி நாவூறச்செய்யும். வாரம் ஒருமுறை முதலாளி கொடுக்கும் கூலியையும் அம்மாவிடம் கொடுத்தாக வேண்டும். எப்படித்தான் தோசையை வாங்கி சாப்பிடுவதென பலவாறக யோசனையிலிருந்தான். இரவும் பகலும் கனவிலும் நினைவிலும் துவரகா ஓட்டல் நெய் ரோஸ்ட் வாசம் அவனைக்கிளர்த்திக்கொண்டேயிருந்தது. "என்னா தம்பி ஒரு தோசை போதுமா?" ஓட்டலில் வேலை செய்யும் பரிசாரகரம்மா கேட்டுக்கொண்டே பரிமாறினாள். "போதும் போதும் கொஞ்சம் சாம்பார் மட்டும் ஊத்துங்க' என்று மூன்று மடங்கு சாம்பாரில் ஊறிய தோசையை சீக்கிரம் தீர்ந்துவிடக்கூடாது என்ற ஏக்கத்துடன் அணுஅணுவாய் பிய்த்து ஆனந்தமாய் ருசித்து ரசித்து உண்டு முடித்தான். உள்ளங்கையில் ஒட்டிக்கொண்ட சாம்பாரின் மணம் அவன் நாசியில் நடனமாடி உடலையும் மனதையும் வருடிக்கொண்டிருந்தது . ஒரு மாதமாய் அவனை உறங்கவிடாமல் செய்த நெய்ரோஸ்ட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினான். அந்தி கறுத்து, பறவைகளின் ஆரவாரம் மழைக்கான சமிக்ஞைகளை அளித்துக் கொண்டிருந்தது. கண்ணனின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையில் கண்ணம்மாவும் நின்று கொண்டிருந்தாள் வரிசையில். ஓடிப்போய் அம்மாவின் முந்தானையைப்பிடித்துக்கொண்டு நின்றவனிடம் "வா வீட்டுக்கு போலாம் டெய்லி களத்தோச களத்தோசன்னு கேட்டல்ல, வெல்லம் வாங்கி வச்சிருக்கேன் வா களத்தோசை. சுட்டுதாரேன் "என அவன் தலையைச்செல்லமாக கோதி சின்ன விரல்களைப்பிடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றாள்‌. ஏற்கனவே வீடு திரும்பியிருந்த சிவா கண்கள் சிவக்க ரௌத்ரகோலத்தில் அமர்ந்திருந்தான். "வாடா, டேய் திருட்டுப்பயலே,என் உண்டியல் காச திருடி அப்புடி ஒனக்கு நெய்ரோஸ்ட் திங்க சொல்லுதா, ஒன்னல்லாம் இப்புடியே விட்டா நாளைக்கு இன்னும் என்னெல்லாம் பண்ணுவியோ, எதுஎதுக்கெல்லாம் திருடுவியோ'' என ஆவேசமாய் பேசத் துவங்கினான் அசம்பாவிதத்தை உணராதவளாய் கண்ணம்மா "விடுடா இதுக்கெல்லாம் போயி கத்திக்கிட்டு ." என்று சொல்லிக்கொண்டே மழை வருகிற மாதிரி இருப்பதால் வெளியில் அடுப்பு எரிக்க வாங்கி வைத்த சவுக்கு சுள்ளிகளை நனைந்து விடாதபடி அடுப்பங்கரையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். திடுமென அந்த சுள்ளியில் ஒன்றை பிடுங்கிய சிவா கண்ணனின் உடலில் மானாவாரியாக விலாசினான். அலரித்துடித்தவனை காலம் கைகட்டி அமைதியாய் வேடிக்கை பார்த்தது. கண்ணம்மாவின் கண்கள் கண்ணீர்க்காடானது. வெல்லம் வாங்குவதற்காக சிவாவின் உண்டியலில் இருந்து எடுத்த ரூபாயை பிறகு சொல்லிக்கலாம் என்றிருந்தவள் இப்போது சொல்லமுடியாமல் நெஞ்சடைத்து நின்றாள். அம்பிகாவும் எவ்வளவு ஆதூரமாய் அணைத்து சமாதானம் செய்தும் கண்ணன் அழுகையைவிடுவதாயில்லை. மறுநாள் வேலைக்கு வராத கண்ணனை தேடி வீட்டிற்கு வந்த ஏழுமலை சிவாவிடம் "ஏண்டா ஒந்தம்பி இன்னிக்கு வேலைக்கு வரல" சதா துவரகா ஓட்டல் தோசைக்கு ஏங்கிப்போறானே சின்னப்புள்ளன்னு ,நேத்து தான் வேல முடிச்சிட்டு வூட்டுக்கு போகும்போது தோசை சாப்பிட்டு போடான்னு காசு கொடுத்தேன். சாப்ட்டுத்தான் வந்தான் இன்னிக்கு இன்னா ஆச்சு ஏன் வேலைக்கு வரல; இதுவரை வேலைக்கு சேந்ததுலருந்து ஒரு நாள் கூட லீவு போட்டதில்லை அதான் ஏன் வரலன்னு ஒரு எட்டு கண்டுக்குனு போலான்னு வந்தேன் என்றார். குழப்பமும் குற்ற உணர்ச்சியுமாய் சிவா சிலையாய் நிற்க... கண்ணனை பார்த்து "இன்னா கண்ணு ஒடம்புக்கு எதுவும் சரியில்லையா என்னா" சரிடா டாக்டராண்ட போய் பாத்துனு நாளிக்கு காலைல வேலைக்கு வந்துடு என்று கூறிக்கொண்டே கண்ணனின் கண்களை நோக்கிய ஏழுமலை அதுவரை அவன் கண்களிலிருந்த குழந்தைமை முற்றிலுமாக விலகியிருந்ததை உற்றுக்கவனித்தார்‌. அதே சமயம் வறுமையின் வலியையும் எதிர்கால பொறுப்பையும் தோளில் கிடத்தியிருந்த அவனுக்கு முன் வாழ்க்கை வானம் போல் பரந்து விரிந்து கிடந்தது அதில் தன் குழந்தைமையற்ற முதல் அடியையெடுத்து வைத்தான். பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.