logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

VijYakumaran

சிறுகதை வரிசை எண் # 84


நிலவு அன்று மௌனமானது சற்று குளிரான டிசம்பர் மாதத்தின் முன்னிரவு. மேல் கூரையில்லாத அந்த பேருந்து நிறுத்தத்தின் இருளை பௌர்ணமி நிலவின் வெளிச்சம் விரட்டியிருந்தது. எப்போதும் போல் அங்கு வேறு பயணிகள் யாரும் இல்லை. இரவு எட்டு மணிக்கு கடை வீதியில் பரபரப்பு அடங்க இங்கு பயணிகள் இல்லாது போவார்கள் அதனால் பேருந்துகளும் நிற்பதில்லை. ஒன்பது மணிக்கு மேல் கடைகளில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் பஸ் ஏற வருவதுண்டு. என்னைப் போன்றே தனிமையில் தவித்துக் கொண்டிருந்த நிலாவும் காற்றும் மழையும் எனக்கு நட்பானது. நிலா இரவு முழுவதும் பல கதைகள் சொன்னது. பெருமழையை பழித்துப் பேசிக் கொண்டிருந்த ஒருநாள் காற்றும் இடைப்புகுந்து தன் கருத்தை சொன்னது. “மரங்களை வெட்டி கரிய அமில வாயுவின் அளவை உயர விட்டு நீர்நிலைகளில் குடியிருப்புகளை உருவாக்கி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் மனிதர்களை விட்டுவிட்டு எங்களை தூற்றுவதா?” காற்று புட்டுப்புட்டு வைத்த கருத்துக்கள் என் நெற்றி பொட்டில் அடித்தாற் போலிருந்தது. பொல்லாதபழி சுமந்த மழை அதை ஆமோதிப்பதை போல் அன்று சில துளிகள் கண்ணீர் சிந்தியது. நிலாவுக்கு கவிதைகள் மேல் பிரியம் அதிகம். மனிதன் எப்போதும் எதனோடும் நிலாவை ஒப்பிட்டு கவிதை வடிப்பது போல் நிலா எப்போதும் தன் கவிதையின் பாடுபொருளாக மனிதனையும் மனிதநேயத்தையும் கொண்டிருக்கும். போனமாதம் ஒருநாள் “அம்புலி ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்றேன். பதிலில்லை ஒரு நீண்ட மௌனத்திற்கு பின் நிலா ஒரு கவிதை சொன்னது. குணம் நாடி உயிர் தேடி மருத்துவமனைப்படி ஏறினேன் அது மரணத்தின் தலைவாயிலாக ஐயோ………. முற்றுப் பெறாத கவிதையின் பொருள் புரிய “அம்புலி கற்பனைக்காக கூட இதுபோன்ற கொடூரமான வார்த்தைகளாலான கவிதைகளை புனையாதே என்னால் தாங்க முடியாது” என்றேன். “இது கற்பனை அல்ல நிஜம். சற்றுமுன் காசாவில் உள்ள மருத்துவமனையில் தாக்குதல் நிகழ்ந்தது”. “அதற்கு சாத்தியமே இல்லை அம்புலி. மேம்பட்ட நாகரீக மனித சமுதாயத்தில் போருக்கு இடமில்லை. தவிர்க்கவே இயலாத காரணங்களால் ஒரு போர் நடந்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையுண்டு. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், நிராயுதபாணியான பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மீது தாக்குதல் கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது”. “நீ சொல்வது எல்லாம் காகிதத்தில் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் உண்மை வேறு. வழிபாட்டு தலங்களை காரணமாக வைத்துத்தான் பெரும்பாலான வன்முறைகள் துவங்குகின்றன. அது யுத்தமாக மாறும்போது முதலில் தாக்கப்படுவது பள்ளிகளும் மருத்துவமனைகளுமே. உயிரிழப்பதிலும் குழந்தைகளும் பெண்களுமே அதிகம்”. “ச்சே என்ன இந்த மானிடப்பிறப்பு” நான் அயர்ந்து போனேன். காற்று மூர்ச்சையானது. அன்றும் மழை கண்ணீர் விட்டது. நிலாவுக்கு பூமியில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது. ஆனால் எதையும் முன்கூட்டியே சொல்வதில்லை எல்லாம் நடந்து முடிந்தபின் சொல்லி சிரிக்கும் அல்லது கவலை கொள்ளும். “ஏய் அம்புலி நேத்து நீ இல்லாம நான் எவ்வளவு தவிச்சு போயிட்டேன் தெரியுமா? தனிமை என்னை வாட்டுது”. “ஏன் பொய் சொல்ற? இப்போதெல்லாம் நீ தனியா இல்லையே. எப்போதும் அவனோட நினைவாகவே சுத்திக்கிட்டு இருக்கியே. நேற்றும் அவன் உன்னை பார்க்க வந்திருப்பான் வழக்கமாக தருவதை தந்து இருப்பான்” என்று சொல்லி நிலா சிரித்தது. எல்லாவற்றையும் நிலா பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. அவன் பெயர் சரவணன் சற்று உயரம் மாநிறம். எதிரே உள்ள நகைக்கடையில் தான் வேலை செய்கிறான். எப்போதும் ஒரு விற்பனை பிரதிநிதிக்கான முழு சீருடை அணிந்து கம்பீரமாக காட்சி அளித்தாலும் பரம ஏழைகளுக்கே உரித்தான மெல்லிய சாதுவான பேச்சு, பகட்டிலாத சிரிப்பு அவனை நோக்கி என்னை ஈர்த்தன. முதன்முறை அவனை நெருக்கமாக பார்த்தபோது அவனுடைய பார்வை வெளியே தெரிந்த என் கால்களின் மேல் பதிந்திருப்பதை கண்டவுடன் வேகமாக அதை மறைத்தேன். என் பதட்டத்தை உணர்ந்தவன் அதன்பின் இன்றுவரை என்னை ஊடுருவி பார்ப்பதேயில்லை. “மூத்தது மகள் ப்ரியா பத்தாம் வகுப்பு படிக்கிறா பள்ளியிலேயே அவள் தான் முதல் மதிப்பெண். அடுத்தது பையன் சூர்யா எட்டாவது படிக்கிறான் எப்பவும் விளையாட்டு தான். எங்கப்பாவுக்கு சொந்தமா தீப்பெட்டி தொழிற்சாலை இருந்துச்சு. இப்ப எல்லாம் நொடிஞ்சு போச்சு. குடும்பம் குட்டிய காப்பாத்தணுமே. இதுக இரண்டையும் எப்படியாவது நல்லபடியா கரையேத்திடனும்னு தான் சாத்தூர்ல இருந்து பிழைப்பு தேடி வந்தேன்”. குடும்பத்தின் மேல் அன்பும் அக்கறையும் உள்ள எந்த ஆண் மகனையும் எல்லோரும் விரும்புவார்கள் தானே. அவன் வருகிறானா என என் கண்கள் கடைவாசலை உற்று நோக்கியது. வாசலில் இருந்த பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டன பெரிய கதவுகள் பாதி கீழிறக்கப்பட்டது நான் ஆவலோடு காத்திருந்தேன். அவன் வந்து கடைசி பேருந்தில் ஏறி போகும் வரையுள்ள இடைப்பட்ட நேரம் எவ்வளவு ஆனந்தமானது. அவன் தரும் அதைப் பெற்றுக் கொள்ளும் போது ஏனோ என் கண்கள் நிறைந்து வழிவதை தடுக்க இயலாது. நேரம் போய்க் கொண்டேயிருந்தது கடையிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. இன்று ஏனோ கடைசி பேருந்தும் சீக்கிரமே வந்து நின்று கிளம்பிச் சென்றது. கடையில் காவலாளிகள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததிலிருந்து அங்கு ஏதோ பிரச்சனை என்பது எனக்கு புரிந்தது. நான் கடையை நெருங்கி சென்றேன். வெளியே நின்ற வயதான காவலாளி “ஒரு மோதிரம் காணாமல் போயிடுச்சு” என விவரம் சொன்னார். திறந்திருந்த கண்ணாடி கதவுக்கருகே போய் பார்த்தேன். மற்ற பணியாளர்கள் ஒருபுறமும் சரவணன் மறுபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கடை உரிமையாளர் போலிருந்தவர் சற்று அதட்டலாக சரவணனை விசாரித்துக் கொண்டிருந்தார். ” இன்று மாலை நான்தான் மோதிரம் விற்பனை பிரிவில் இருந்தேன். ஆனா வாடிக்கையாளர்கள் யாரும் வரல மோதிர பெட்டியை நான் வெளியே எடுக்கவில்லை”. “அப்போ பெட்டியில் இருந்த மோதிரம் எங்க போச்சு? யோவ் குமாரு காணாம போன மோதிரம் எத்தனை கிராம்யா?” “2.5 கிராம் சார்” “எல்லாம் சேர்த்தா 10,000 வரும் அவ்வளவு தானே. ஆனா எனக்கு யார் அந்த திருட்டு கம்முனாட்டின்னு தெரியணும். யோவ் காவலாளி எல்லோரையும் முழுமையா பரிசோதனை பண்ணுய்யா”. காவலாளி எல்லோருடைய உடலையும் தடவி உடைகளை பிதுக்கி பார்த்தான். எல்லோருடைய பைகளிலும் இருந்த மதிய உணவு கொண்டு வந்த பாத்திரங்களை திறந்து சோதனை செய்தான். சரவணனின் பாத்திரத்தில் ஏதோ இருப்பதைப் போன்று தோன்றவே அதை திறக்க முயல வேகமாக “வேண்டாங்க” என சரவணன் தடுத்தான். அவன் கையைத் தட்டிவிட்டு காவலாளி டிபன் பாக்ஸை திறந்தான். உள்ளே ஒரு உளுந்தவடை இருந்தது. “சாயங்காலம் தேநீரோடு வாங்கி கொடுத்த வடைய திங்காம உள்ளே வச்சிருக்கான்”. “தூக்கி தூர போடுய்யா” உரிமையாளர் எரிச்சலோடு கத்தினார். காவலாளி வெளியே வந்து அதை தூக்கி எறியும் போது சரவணன் என்னை பார்த்து விட்டான். அவமானத்தில் முகம் சிவந்து தலை குனிந்து நின்றான். “சரவணா நீயா உண்மைய சொல்லி பொருளை திருப்பி கொடுத்துட்டா நல்லது மன்னிச்சிடுறேன். இல்லைன்னா வீணா காவல்துறைய கூப்பிட வேண்டியிருக்கும்”. “சத்தியமா சொல்றேன் ஐயா எனக்கு எதுவும் தெரியாது நான் எடுக்கவும் இல்லை” அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை அவன் சொல்லி முடிப்பதற்குள் அவர் வேகமாக நெருங்கி வந்து அவன் சட்டையை பற்றி இழுத்தார். “திருட்டு நாயே நல்லவிதமா கேட்டா சொல்லமாட்ட இந்த கடை ஆரம்பிச்சு எட்டு வருஷமாச்சு இதுவரை ஒரு குண்டுமணி தங்கம் காணாம போனதில்ல இந்த மோதிரம் மட்டும் எப்படி கால் முளைச்சு நடந்து போயிடுச்சா?”. “ஐயா நான் திருடனில்லங்க” அவமானத்தில் குன்றி போயிருந்த குரல் இன்னும் மெலிதாகி முணுமுணுப்பாக வெளிவந்தது. “யோவ் குமாரு வண்டியை எடுத்துட்டு போய் இவன் வீட்டில இருக்கிறவங்கள கூப்பிட்டுவாய்யா இவனோட யோக்கியதை என்னன்னு அவங்களும் தெரிஞ்சுக்கட்டும்”. உரிமையாளர் சரவணனை உணர்வு பூர்வமாக மிரட்டி பார்க்க முடிவு செய்தார். தன்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுவது ஒருவனுக்கு எவ்வளவு பெரிய நரக வேதனையை தரும் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். “வேண்டாம் ஐயா நான் திருடனில்லைங்க” அவன் கெஞ்சினான். “போடா நாயே போய் அங்கிட்டு ஓரமா நில்லு” உரிமையாளர் சரவணனை தள்ளிக் கொண்டு போய் ஒரு ஓரமாக நிறுத்தினார். “ஐயா நான் திருடன் இல்லைங்க” சரவணன் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அரை மணிநேரத்தில் குமார் சரவணனின் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்து வந்தார். அவர்களின் முன் அவன் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றான். உயிர் உடலை விட்டு வெளியேறி தான் வெறும் சடலமாக நிற்பதை போல் உணர்ந்தான். ஆனால் அவன் வாய் “நான் திருடனில்லைங்க” என்று முணுமுணுப்பதை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த மனைவியும் குழந்தைகளையும் கண்டு கலங்கி போனவன் “ஓ” என பெரும் அலறலுடன் ஓடி வந்து அவர்களின் காலடியில் விழுந்தான். “பார்வதி நான் திருடனில்லை பார்வதி” என்று கத்தினான். அவள் பதறிப் போய் அவனை தூக்கி நிறுத்தி கட்டியணைத்து ஆறுதல் சொல்வாள் என எதிர்பார்த்திருக்க கூடும். ஆனால் அதிர்ச்சி விலகாததாலோ இத்தனை பேர் மத்தியில் எப்படி சமாதானப்படுத்துவது என்பது தெரியாததாலோ அவள் சிலையாக நின்றாள். அவன் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளானான் .மெதுவாக தலை தூக்கி மகளைப் பார்த்தான். “பிரியாக்குட்டி அப்பா திருடன் இல்லடா” மகளிடமிருந்தாவது ஏதாவது பதில் வரும் என எதிர்பார்த்தான் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பரிதவிப்பாக பார்ப்பதை தவிர அந்த சிறு குழந்தைக்கு வேற என்ன தெரியும்?. ஒரு மணிநேரமாக நீடித்த இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர என் மனது துடித்தது. பாதிக்கப்பட்டவனுக்கு இப்போது உன்னோடு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையும் சில ஆறுதல் வார்த்தைகளும் அவசியம் தேவை. அது நடக்காதவர்கள் தான் விபரீதமான முடிவுக்கு போகிறார்கள். அவனுக்கு துணையாக இருக்க நான் முடிவு செய்தேன். மெதுவாக படியேறி உள்ளே போனேன். எல்லோருடைய கண்களும் என் பக்கம் திரும்பியது. “ஐயா சரவணன் ரொம்ப நல்லபையன். கண்டிப்பா தப்பு பண்ணியிருக்க மாட்டான். எதுக்கும் மோதிரம் எங்கேயாவது கைதவறி கீழ விழுந்திருச்சான்னு ஒருமுறை தேடிப் பார்த்திடலாமே” என்றேன். ஒரு நிமிடம் என்னை ஏற இறங்க பார்த்த உரிமையாளர் “பிச்சைக்காரனுக்கு நகை கடைக்குள்ள என்னடா வேலை? டேய் காவலாளி முதல்ல இவன வெளியே தள்ளி கதவை பூட்டுடா” என்று கத்தினார். காவலாளி வெளியே தள்ளிய வேகத்தில் படிக்கட்டு இடறி கீழே விழுந்ததில் வலது கால் முட்டியில் மாட்டியிருந்த செயற்கை கால் தனியாக கழண்டு விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது சற்று தொலைவில் அந்த உளுந்தவடை கிடப்பது தெரிந்தது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு மழைநாள் பிச்சை எடுக்க வெளியில் இறங்க முடியாத சூழலை புரிந்து கொள்ளாத வயிற்றில் கடும் பசி. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் இரவில் பேருந்தில் ஏற வந்த சிலரிடம் கையேந்தினேன். பலர் நகர்ந்து கொள்ள இவன் அருகே வந்தான். பையைத் துலாவி பத்து ரூபாய் வெளியே எடுத்தவன் என்ன நினைத்தானோ கையிலிருந்த பையை என்னருகில் வைத்து விட்டு மழையில் இறங்கி ஓடினான். திரும்பி வந்தவன் கையில் உணவு பொட்டலம் இருந்தது. பேருந்துக்காக வைத்திருந்த பணத்தில் எனக்கு உணவு வாங்கியதால் அன்று மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். அன்றிலிருந்து தினமும் வேலை முடிந்து வருபவன் எதுவும் பேசாமல் என்னிடம் ஒரு உளுந்தவடை கொடுப்பான். எனக்கு தேவையாக இருக்கிறதோ இல்லையோ அவனுக்காக அதை வாங்குவதில் எனக்கு பெருமகிழ்ச்சி. என் நிலை கண்டு நிலா வேகமாக மேகங்களுக்கிடையே மறைந்து கொள்ள முயன்றது. “ஏய் அம்புலி உனக்கு தான் எல்லாம் தெரியுமே அந்த மோதிரம் எங்க இருக்குன்னு வாயை திறந்து சொல்லு” நிலவைப் பார்த்து கத்தினேன். “நான் திருடனில்லைங்க” உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த அவன் குரல் என் இதயத்தை கீறியது. அதை கேட்ட காற்று உடனே மூர்ச்சையாகியது. மழை அன்றும் கண்ணீர் விட்டது. நிலா அன்று மௌனமானது பின் எப்போதும் பேசவே இல்லை..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in