logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Revathy Balu

சிறுகதை வரிசை எண் # 77


"இப்படை தோற்கின்......" பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சொந்த வேலையாக பாரிமுனை வரை வந்த கல்பனா வீடு திரும்ப பஸ்ஸில் ஏறினாள். முன்வழியாக ஏறிய கல்பனா பின் வாசல் அருகே உள்ள இரட்டை இருக்கையில் உட்காருவதற்காக போனபோது பின்னால் இருக்கும் ஏழு பேர் அமரும் இருக்கையில் தங்கள் பள்ளி சீருடை அணிந்து ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவளருகே நெருக்கமாக பக்கத்து ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் சீருடை அணிந்த ஒரு கருவலான ஒடிசலான பையன். கல்பனா அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்து அவள் பத்தாவது 'சி' பிரிவில் படிக்கும் பெண் என்று கண்டு பிடித்தாள். இந்த நேரத்தில் பள்ளியில் இல்லாமல் இவள் எங்கே இந்த பஸ்ஸில்? அவள் முகத்தில் பயம் வேறு அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாக கல்பனா பின் சீட்டருகே இறங்கும் வழியிலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டாள். வலது கையால் தன் ஃபோனை எடுத்து ஏதோ எண்ணைப் போட்டாள். சில நொடிகளில், "ஹலோ! போலீஸ் கமிஷனர் ஆபீசா? சார் இருக்காங்களா?" என்றாள் ஓரக்கண்ணால் பின் சீட்டு மாணவர்களைப் பார்த்துக் கொண்டே. உடனே அந்தப் பையனிடம் ரீஆக்ஷன் தெரிந்தது. சட்டென்று பதற்றமாக அந்தப் பெண்ணை விட்டு தள்ளி அமர்ந்தான். இப்போது கல்பனா, "சார்! குட் மார்னிங்! நான் பல்லாவரம் அரசு உயர்நிலைப் பள்ளி டீச்சர் கல்பனா பேசறேன் சார்! நான் தாம்பரம் போற 21நி பஸ்ஸில ஏறியிருக்கேன் சார்! இங்க ஒரு பையன்.." மேலே கல்பனா ஏதும் பேசுவதற்குள், பஸ் ஒரு வளைவில் திரும்ப அந்தப் பையன் சட்டென்று எழுந்து கீழே குதித்தான். குதித்தவன் அப்படியே பஸ் வந்த வழியே தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். அவன் இறங்கியதும் யாருக்கும் ஃபோன் பண்ணாமல் சும்மா பேசிக்கொண்டிருந்த கல்பனா, சட்டென்று ஃபோனை மூடி கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள் கல்பனா. அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றதும் கல்பனா அந்தப் பெண்ணைப் பார்த்து, "உம்! கீழே இறங்கு!" என்றாள் கடுமையான முகபாவத்துடன். அந்தப் பெண் முகத்தைப் பொத்தியபடியே கீழே இறங்கினாள். அவர்கள் இறங்கிய இடத்திற்கருகே ஒரு ஹோட்டல் இருந்தது. கல்பனா அந்தப் பெண்ணை அந்த ஹோட்டலுக்குள் தள்ளி கொண்டு போனாள். தோசையும் காப்பியும் ஆர்டர் செய்து விட்டு அவள் பக்கம் திரும்பி, "உம்! இப்போ சொல்! என்ன நடக்குது இங்கே? ஸ்கூல் நேரத்தில எப்படி வெளியே வந்தே?" ஏன்றாள். அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள். சிறிது நேரத்திற்குப் பின் கேவலுக்கும் விசும்பலுக்கும் இடையே அவள் பேசியதில் கல்பனா புரிந்து கொண்டது, அவளுடைய பெயர் அல்லி. அவளுடைய பாய் ப்ரெண்ட் அந்தப் பையன். அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு ரெண்டு கட்டிடங்கள் தள்ளி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. அவள் தோழி ரோஜா தான் தனக்கு ஒரு பாய் ப்ரெண்ட் இருக்கிறான் என்று இவளையும் தூண்டி இந்தப் பையனை பாய் ப்ரெண்ட் ஆக அல்லிக்கு சிபாரிசு செய்திருக்கிறாள். ஒரு வாரமாகத் தான் பழக்கமாம். இன்று தான் அந்தப் பையன் அல்லியை தன்னுடன் தனியாக வரும்படி அழைக்க, அல்லியும் வயிற்று வலி என்று பள்ளியில் சொல்லி அரைநாள் லீவு கேட்டு வந்திருக்கிறாள். ஆனால் அவளைத் தொட்டுப் பேசியது, எங்கோ தனியாக அழைத்துப் போக திட்டமிட்டது எல்லாம் அவளுக்கு மிகவும் பயமாக இருந்ததாம். பேச்சுக்கிடையே தன் வாட்டர் பாட்டிலை அவள் சூடிதாருக்குள் மறைக்க முயல்வதை பார்த்த கல்பனா அவளிடமிருந்து அந்த பாட்டிலைப் புடுங்கி அதைத் திறந்து பார்த்தாள். விஸ்கி வாடை அந்த பாட்டிலிலிருந்து வந்ததைப் பார்த்து கல்பனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அவன் தான் மிஸ் வாட்டர் பாட்டில்ல விஸ்கியை கலந்து இதைக் குடிச்சுப் பார்னு வற்புறுத்தி குடிக்க வைத்தான்" என்றாள் அல்லி திரும்ப பொங்கி வந்த அழுகையினூடே. "அப்பா இல்ல. அம்மா தான் கஷ்டப்பட்டு டைலரிங் வேலை செஞ்சு ஒன்னை படிக்க வைக்கிறாங்கன்னு சொல்றே! அப்படியிருக்க இதையெல்லாம் செய்ய ஒனக்கு எப்படி மனசு வந்தது? இது உன்னை நம்புகிற அம்மாவுக்கு நீ செய்கிற துரோகம் இல்லையா?" என்றாள் கல்பனா. "இன்னொரு முறை நான் உன்னை இது போல பார்க்கக் கூடாது. இது தான் கடைசி. காதல், பாய் ப்ரெண்ட் என்று எல்லா உணர்ச்சிகளும் ததும்பி வழியும் பருவந்தான் இது. ஆனால் அதிலெல்லாம் இறங்க இன்னும் சில வருடங்கள் போகணும். அதற்குள் நீ நல்லா படித்து டிகிரி வாங்கி ஒரு நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆகணும். அதுக்கு முன்னால ஏதாவது அவன் கலந்து குடுப்பதைக் குடிச்சு தனியான இடத்துக்கு அவனோட போயி கெட்டு சீரழிஞ்சா, மொதல்ல உங்கம்மா தான் தூக்குல தொங்குவாங்கன்னு நெனைப்பில வச்சுக்க!" என்றாள் திரும்பவும் கடுமையான குரலில். பயத்திலும் துக்கத்திலும் அல்லியின் உடல் நடுங்கியது. திரும்ப பஸ்ஸைப் பிடித்து பல்லாவரத்தில் இறங்கினார்கள் இருவரும். அல்லி வீடு பள்ளிக்கருகேயே இருக்கும் குடிசை மாற்று கட்டிடத்தில் இருக்கிறது என்று தெரிந்ததும் கல்பனா தானும் கூட வருவதாகச் சொல்லி விட்டு பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு துணிக்கடையில் நுழைந்து ஒரு மீட்டர் மெரூன் கலர் ரவிக்கைத் துணி வாங்கினாள். கல்பனா முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு லேசாகப் புன்னகைத்தவாறே, "அம்மா! நல்லா இருக்கீங்களா? நான் அல்லியோட ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்!" அல்லியின் அம்மா முகத்தில் ஒரு பயமும் பதட்டமும் தெரிந்தது. "நீங்க டைலரிங் செய்யறீங்கன்னு இன்னிக்கு தான் அல்லியிடமிருந்து கேள்விப்பட்டேன். நன்றாக அளவெடுத்துத் தைக்க ஒரு லேடி டெய்லரை தான் நான் தேடிக் கிட்டிருந்தேன். அல்லி சொன்னதும் உடனே உங்களைப் பார்த்து ஒரு ப்ளவுஸ் உங்க கிட்ட தைக்கக் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றாள். அல்லியின் அம்மா ஆசுவாசமாவது தெரிந்தது. அல்லி வாயே திறக்காமல் நின்று கொண்டிருந்தாள். கல்பனா விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள். அடுத்த நாள் பத்தாவது 'சி' பிரிவுக்கு சரித்திரம் வகுப்பெடுக்க கல்பனா சென்றபோது அல்லி வழக்கமாக உட்காரும் பின் பெஞ்சில் உட்காராமல், இரண்டாவது வரிசையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவள் தோழி ரோஜா கடைசி பெஞ்சில் தான் உட்கார்ந்திருந்தாள். இரண்டாம் உலகப்போரைப் பற்றிய பாடத்தை நடத்தி எல்லோரையும் படிக்கச் சொல்லி விட்டு கல்பனா வகுப்புக்குள்ளேயே உலாத்த ஆரம்பித்தாள். ரோஜா இருக்கையருகே இவள் வந்ததும் அவள் சட்டென்று தன் வாட்டர் பாட்டிலை மறைத்து வைப்பதை கவனித்தும் கவனிக்காதது போல குறுக்கும் நெடுக்கும் ஏதோ யோசனையில் நடந்தாள். அது அன்றைய கடைசி வகுப்பு. வகுப்பு முடிந்ததும் ரோஜாவைக் கூப்பிட்டு, "இங்கே வா ரோஜா! இந்த விடைத்தாள்களை வகுப்பில எல்லோருக்கும் விநியோகிச்சிட்டு வாம்மா!" என்றாள் அன்பாக. பிறகு வகுப்பிலுள்ள மாணவிகளைப் பார்த்து, "உங்க விடைத்தாள் கைக்கு வந்ததும் நீங்க கௌம்பலாம்!" என்றாள். பெயரைப் பார்த்து ரோஜா ஒவ்வொருவருக்காகக் கொடுக்க வகுப்பு மெதுவாக கலைய ஆரம்பித்தது. கடைசியில் ரோஜா மட்டுமே எஞ்சியிருந்தாள். "இங்கே வா, ரோஜா! ரொம்ப தாகமா இருக்கு. உன் வாட்டர் பாட்டிலைக் கொடேன். கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டுக் கௌம்பறேன்." என்றவாறே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயராக கல்பனா எழுந்து கொண்டாள். ரோஜா நடுங்கியவாறே, "அது வேணாம் மிஸ்! அழுக்கா இருக்கு!" என்று சமாளிக்கப் பார்த்தாள். "வகுப்பில நீ குடிச்சிக்கிட்டே இருக்கிறதைப் பார்த்தேனே! எனக்கு மட்டும் என்ன ஆயிடப் போகுது?" என்றவாறே கல்பனா அந்த பாட்டிலைத் திறந்து முகர்ந்தபோது விஸ்கி வாடை முகத்தை சுளிக்க வைத்தது. ரோஜா உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் தோளில் கைவைத்து அன்போடு அவளை அணைத்துக் கொண்ட கல்பனா, "இதெல்லாம் வேணாம்மா. நீ டீவியில, செய்தித் தாள்ல எல்லாம் பார்க்கிறதில்லையா? பசங்க, பொண்ணுங்களை எப்படி ஏதோ கலந்து கொடுத்து குடிக்க வைத்து சீரழிக்கிறாங்கன்னு. நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுன்னு அல்லி சொன்னா. உனக்கு உன் அம்மா அப்பா மேல பிரியம் உண்டு தானே?" என்றாள். தேம்பித் தேம்பி அழுதுகொண்டே ரோஜா "ஆமாம்!" என்று தலையாட்டினாள். "உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அவுங்க ரெண்டு பேரும் தூக்கில தொங்கிடுவாங்களே, அதை நெனச்சுப் பார்த்தியா?" "ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க மிஸ்! வேணாம்! எனக்கு என் அம்மா அப்பா வேணும்!" ரோஜாவுக்கு உடம்பெல்லாம் பதறியது. "நீ ரொம்ப நல்லா படிக்குற பொண்ணு. உன் க்ளாஸ் டீச்சர் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருப்பாங்க, இந்தப் பொண் முதல் மார்க் எடுக்கும், நம்ப பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கிக் குடுக்கும்னு. அதையெல்லாம் விட, அன்பான உங்கப்பா, அம்மாவை விட இந்த பாய் ப்ரெண்ட் இந்த வயசில உனக்கு முக்கியமா? யோசிச்சு பாரு!" ரோஜா அடக்க முடியாமல் தேம்பிக் கொண்டிருந்தாள். கல்பனா அவளை மெல்ல தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினாள். பள்ளியில் அல்லி, ரோஜா இருவரிடமும் படிப்படியாக நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அன்று காலை பள்ளி அசெம்பிளியில் உரையாற்றுவது கல்பனா டீச்சரின் முறை. வரப்போகும் முழுபரீட்சையில் மாணவிகள் கவனமாக அக்கறையாக படித்து பெற்றோருக்கு, பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை பொதுவாக சொன்னாள். அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினாள். பிறகு தான் எப்போது உரையாற்றினாலும் சொல்லும் எழுச்சி வாசகமான "இப்படை தோற்கின்..." என்பதை உரக்கக் கூற, அதை விட உரக்க "எப்படை வெல்லும்?" என்று மாணவிகள் உற்சாகமாக முழக்கமிட்டார்கள். அல்லி, ரோஜாவின் குரல்களும் அதில் சேர்ந்து கம்பீரமாக ஒலித்ததை பெருமிதமாகப் பார்த்தாள் கல்பனா. எழுதியவர்: ரேவதி பாலு ஓம் சாந்தி அபார்ட்மெண்ட்ஸ், முதல் மாடி, 24, இரண்டாவது பிரதான சாலை கண்ணப்பா நகர், சென்னை - 600041. தொ.பே: 98410 19464.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.