logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Kannan. C

சிறுகதை வரிசை எண் # 76


புஞ்சைய வித்து, விதை போட்டேன் சி. கண்ணன். அம்மா, 'அந்தக் கனிக் குடும்பன் புஞ்சையை வித்துக் குடும்மா' என்றாள் போனில் பராசக்தி. என்ன சொல்வதென மனதுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தாள், லெட்சுமியம்மா. நீண்ட மௌனம்... மீண்டும் சக்தியே, 'நீ கார்மேகம் மாமா கடையில காபி வாங்கி குடி, நான், சமைச்சுட்டு கூப்பிடுறேன்' என்று போனை துண்டித்தாள். தன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு வேண்டும் என்று, இந்த இரண்டு மாதத்தில் பல முறை கேட்டுவிட்டாள். சரி என்ற பதில் சொல்ல முடியவில்லை லெட்சுமியம்மாவாள். லெட்சுமியம்மாவிற்கு இரண்டு பிள்ளைகள் தான். மூத்தவன் செல்வராசு, சக்தி இளையவள். லெட்சுமியம்மாவின் கணவர் ஓராண்டுக்கு முன்புதான் இறந்தார். செல்வராசு சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். செல்வராசுக்கு இரண்டு பிள்ளைகள். அவரது மனைவியும், வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். ஊருக்கு மேற்க, கிழவிபட்டிக்கு கிழக்க, விளாத்திகுளம் போற ரோட்டு பக்கத்துல் இருக்குற இரண்டு ஏக்கர் புஞ்சை தான் விக்கிறதுக்கு சக்தி சொல்ற நிலம். லெட்சுமியம்மாவின் மாமனார் கனிக்குடும்பன் கிட்ட இருந்து வாங்கினதால, இதைக் கனிக் குடும்பன் புஞ்சைன்னு லெட்சுமியம்மா வீட்டில் சொல்வார்கள். செல்வராசு பொறந்த வருசம், இந்தப் புஞ்சையில் விளைந்த குண்டு மிளகாயும், மல்லியையும் வண்டி வண்டியா, விளாத்திகுளம் கமிசன் கடைக்கு ஏற்றிப் போனதா லெட்சுமியம்மா, பெருமையா பேசுவாள். வரப்போராமா பீர்க்கன் காய், சுரைக்காய் கொடிகளும், ஊடுபயிராக வெங்காயம் என வீட்டுக்குத் தேவையான காய்கறி பயிறுவகைகளை வகை வகையாக பயிரிட்டதை, சக்தி கூட தன் மகளிடம் கூறியுள்ளாள். தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்கும் போது, செல்வராசுங்ற பெயர் காரணப் பெயர், செல்வம் பொங்கிய வருடம் பிறந்ததால், அம்மாச்சி அப்படி பெயர் வைத்தார் என விளக்கியதெல்லாம் சக்தியின் தனித் திறமையாகும். பத்துப் பதினைஞ்சு வருசமா, கிழவிபட்டி, கீழத் தெருக்காரங்க இரண்டு பேருக்கு, ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை கட்டுக்குத்தகைக்கு, விட்டு காசு வாங்கிக் கொள்கிறார்கள். நாலஞ்சு வருசமா நிலத்துப் பக்கமா யாரும் போனதில்லை. சக்தி, பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவி, கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தவள். 12ம் வகுப்பு படிக்கும் போது, சென்னையில் ஜீஸ் கடை வைத்திருக்கும் ஆறுமுகத்திற்கு பெண் கேட்டனர். சக்தி 'நான் படிக்கனும்' என்ற பேச்சு சபை ஏற வில்லை. தன்னை விட பத்து பன்னிரெண்டு வயது மூத்த ஆறுமுகத்துடன் மணமேடை ஏறினாள் கண்கள் வீங்க அழுதுகொண்டே. ஆறுமுகம் தன் உடன் பிறந்த தங்கைகளின் திருமணத்தை முடித்து, தனது கடமைகளை நிறைவேற்றிவிட்டு, பெண் தேட முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கடை வேலைக்குச் சென்னை சென்றார். தொழிலைக் கற்றுக்கொண்டு, வாடகைக்கு இடம் பிடித்து, சொந்தமாக கடை வைத்து, சம்பாதித்து, கடனை அடைத்து காரியம் அத்தனையும் தந்தையின் இடத்தில் இருந்து செய்தார். எல்லாவற்றையும் இத்தனை காலத்தில் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. 'நல்ல பையன், நல்லா சம்பாதிக்கிறான், உம்மக ராணியாட்டம் இருப்பா' என்றே சக்தியின் பெற்றோரிடம் கூற, நன்கு விசாரித்தே மணமுடித்து வைத்தனர். திருமணத்திற்குப் பின்னர், சென்னையில் சக்திக்கு வாழ்க்கை இனிதே தொடங்கியது. திருமண நாளை தன் மகளோடு கொண்டாடினர் தம்பதியினர். ஊரில் ஆறுமுகத்திற்குரிய பங்கு நிலத்தை விற்று, தனது சேமிப்பை போட்டு, கடன் வாங்கி சென்னையில் சின்னதாய் வீடு கட்டினார். தொழில் சுமார போக, தங்கைகளுக்கு மொய் செய்வதற்கு கடன் வாங்க, கொஞ்சம் பெரிய கடன்காரானார் ஆறுமுகம். 'எனக்கு பிரசவ நேரத்துல, கடன் வாங்கி பெரிய மொய் செய்ய வேண்டாம்' என்ற சக்தியின் பேச்சு எடுபடவில்லை. என்ன செய்ய, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தாள் சக்தி. இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்டது. அது அப்படியே அவர்களுக்குள் பிளவையும் ஏற்படுத்தியது. மூன்று பிள்ளைகளோடு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். காலம் உருண்டோடியது. சக்தி ”வேம்பு” தன்னார்வ நிறுவனத்தில் மாலை நேர ஆசிரியராக பணியாற்றினாள். அம்மா, அப்பா உதவியோடு, பிள்ளைகளை விளாத்திகுளத்தில் படிக்க வைத்தாள். பிள்ளைகள் மூவரும் நன்கு படித்தனர். சக்தியின் பெற்றோருக்கு தன் மகள், தன் வீட்டோடு இருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. பேரப்பிள்ளைகள், தன் மகளைப் போலவே பள்ளியில் முதல் மாணவிகளாக வருகின்றனர். போட்டி போட்டுக்கொன்று ஒருவரை யொருவர் மிஞ்சும் வகையில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இருந்தாலும்...! சக்தியின் தந்தை விளாத்திகுளம் பேரூராட்சியில் குடிநீர் எடுத்தும் விடும் பணியில் இருந்தமையால், பேத்திகளை, தந்தை பார்க்க வராத குறையைப் போக்கும் வகையில் பார்த்துக்கொண்டார். பிள்ளைகளும், தந்தை தங்களைப் பார்க்க வராத குறையை பெரிதாக பேசுவதும் இல்லை. சொந்த பந்தமெல்லாம், ஆறுமுகத்தைப் பார்க்கும் போது, 'பெத்த பிள்ளை, கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு அப்படி என்னப்பா பொழப்பு' என புத்தி சொல்லி ஒருவழியாக மாமியார் வீடு வந்து, ”மன்னிச்சுடுங்க” இனி எல்லாம் சரியாயிடும், வாங்க என அழைத்தார். சக்தி யோசித்தாள். லெட்சுமியம்மாதான், 'தனியா இருந்தா நல்லா இருக்காது, மூனு பிள்ளைக' என தூங்கும் போதும் எந்திரிக்கும் போது விடாம பேசலானாள். ஒரு வழியாக, பிள்ளைகளுக்கு பரிட்சை முடிஞ்சதும், சென்னைக்கு போவது முடிவானது. தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சென்று, எல்லோரிடமும் அன்பு பாராட்டி விடைபெற்ற சக்தியை, ஆறுமுகம் கவனித்துக் கொண்டிருந்தார். 17 வயதில் திருமணமான சக்திக்கு இப்போது 33 வயதாகியிருந்தது. ஆனாலும், அவளது மேனி மினுமினுப்பாகத்தான் இருந்தது. இதில் கொடுமை யாதெனில், ஆறுமுகம் ரொம்ப வயதானவாராகத் தெரிவார். ஆரம்பத்திலிருந்து தன்னை தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு இப்போ, இன்னும் கூடுதலாக உள்ளுக்குள் வெறுப்பாக இருந்தது. மூத்தவள் 12ம் வகுப்பில் சேர வேண்டும், இளையவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பில் சேர வேண்டும். அதனால், சென்னையில் பள்ளியில் சேர்க்க பெரும் சிரமப்பட்டாள் சக்தி. மூவரும் தந்தையோடு நன்கு நெருக்கமானார்கள். சக்திக்கு மகிழ்ச்சி. ஆனால், இரவுதான் சங்கடத்தை கொடுத்தது. ஒரு படுக்கையறை உள்ள வீட்டில் ஆறுமுகத்தின் ஆசையை நிறைவேற்றுவதில் சக்திக்கு சிரமம். பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்கள், முழித்துக்கொள்வார்கள் என்றால், கோபித்துக்கொள்கிறார். பிள்ளைகள், பள்ளிக்கச் சென்ற பின்னர், படுக்கையை பகலில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனையைச் சொன்னால் கேட்பதில்லை. ஒரு நாள் ஆறுமுகம் 'அந்த கட்டையன் கருவாப்பயல நினைச்சுகிட்டுதான' என மனதுக்குள் உறுத்திக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டார். சட்டையப் பிடித்தவள், சத்தம் போடாமல் இருந்துவிட்டாள். பிள்ளைகள் எழுந்துவிட்டாள் என்ன செய்வது, தண்ணீரைக் குடித்து எல்லாவற்றையும் தணித்துக்கொண்டாள். வீட்டுச் செலவை சமாளிக்க, அவரது கடைக்கு மேலே இருக்கிற ஆடிட்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தாள் சக்தி. ஆறுமுகமும் நம் கண்பார்வையில் இருக்கட்டும் என நினைத்துக்கொண்டார். பெரிய சத்தமில்லாத சண்டையோடு குடும்பம் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்று சுற்றியிருக்கிற எல்லோரும் சொன்னாலும் எள்ளின் நுனியளவு கூட முன்னேற்றமில்லை. 'பார்த்துமே ஒழுக விடுறவன கட்டிக்கிட்டு, பேசமா பெத்தவ வீட்டிலேயே சந்தோசமா இருந்திருக்கலாம்' இப்படி சந்தேகப்படுறவன் கூட, என்ன பொழப்பு. சக்தி மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் காலம் கடத்தினாள். இந்நிலையில் மூத்தவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தாள். டாக்டர் கனவோடு இருந்தவளுக்கு, நீட் எழுதி தேர்வாகததால், செவிலியருக்கு படிக்க விரும்பினாள். அவரது தந்தையும் மகளின் ஆசையை நிறைவேற்ற, தெரிந்தவர்களிடம் விசாரித்து ராமச்சந்திராவில் நான்கு வருட செவிலியர் படிப்பில் சேர்த்துவிட்டார். இருவரின் வருமானத்தால் தாக்குப்பிடித்து ஓடியது. கொரொனா கட்டுப்பாடுகள் வர கடை வருமானம் படுத்தது. சக்திக்கு வேலை இருந்தமையால் தப்பித்தார்கள். கட்டுப்பாட்டு காலத்திலும் இணைய வழியில் வேலை செய்து கொண்டிருந்தாள். அம்மா வீட்டிலிருந்து பண உதவியும் பொருளுதவியும், சக்திக்கு பேருதவியாக இருந்தது. அருகில் இருக்கிற அண்ணன், எப்போதாவது பேசுவான், பெரிய உதவி அவனிடத்திலிருந்து இல்லை. பிள்ளைகள் பெரிய மனுசியான போதே ஒன்றும் செய்யாத அண்ணன், இனி என்ன செய்யப்போறான், அதனால், அண்ணனிடமிருந்து, எதிர்பார்க்கவும் மாட்டாள் சக்தி. கொரொனா கட்டுப்பாடுகள் தளர்ந்த பிறகும் கடை முன்பு போல் ஓடவில்லை. நட்டம் அதிகரித்தமையால், ஆறுமுகம் கடையை மூடி, தெரிந்தவரின் ஓட்டல் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆறுமுகத்திற்கு வேலைக்குப் போனால், நாள் ஒன்றுக்கு ரூபாய். 500 சம்பளம். சக்திக்கு மாதச் சம்பளம் ரூபாய். 15000. இந்நிலையில் இரட்டையர்கள் இருவரும் 12ம் வகுப்பை முடித்தார்கள். அக்காவைப் போல தாங்களும் படிக்க விரும்பினர். அக்காவின் கல்விச் செலவிற்கு விழி பிதுங்கும் சக்தியம்மாவிற்கு, மேலும் இருவர் சேர்வது என்னென்னவோ செய்தது. மூத்தவளின் மூன்றாவது பருவத்திற்கு தன்னிடமிருந்து கொஞ்ச நஞ்ச நகையெல்லாம் வித்தாச்சு. காதும், கழுத்தும் கவரிங்கில் மின்னுது. இனி விக்க ஒன்னும் இல்லை சக்தியிடம். செலவு குறைவாக ஏதாவது படிப்பிருந்தால் படிக்க வைப்போம் என்றார் ஆறுமுகம். இரட்டையரில் இளையவள், கோயமுத்தூர் சென்று இந்தப் படிப்புதான் படிப்பேன். அக்காவையெல்லாம் ராமச்சந்திராவில் படிக்க வைக்கிறீங்க, என கண்ணீர் விட்டாள். சக்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டாள். சொன்னபடி, அங்க இங்க கடன் வாங்கி இருவரையும், அவர்கள் விரும்பிய கல்லூரியில் சேர்த்துவிட்டாள். மூன்று பிள்ளைகளுக்கும், வங்கியில் கல்விக் கடன் பெற முயற்சி செய்தும், வெவ்வேறு காரணங்களுக்காக கல்விக் கடன் கிடைக்கவில்லை. தன்னை, தன் பெற்றோர்கள் படிக்க வைத்திருந்தா, தனது நிலைமை வேறு மாதிரியிருந்திருக்கும். தன் பெற்றோர்கள் செய்த தவறை தான் செய்யமால், அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தாள் சக்தி. கடன் அதிகரிக்க, அதிகரிக்க, ஆறுமுகம் வீட்டிலிருந்து மெல்ல மெல்ல விலகலானார். 'அகலக்கால் வைக்கிற, பேச்சை கேட்க மாட்டிங்ற' என மனைவியை திட்டிக் கொண்டே வேலைக்குப் போவதை நிறுத்தினார். பிள்ளைகளிடம் வெறுப்பை விற்றார். வீட்டில் இருக்க முடியவில்லை, வெளியூர் சென்று கடைபோடுகிறேன் என்று திருவள்ளூர் சென்று, கடனை வாங்கி கடை போட்டார். விருந்தாளியைப் போல் மாதம் ஒரு முறை வந்து பேசிவிட்டு, என் கடனையெல்லாம் அடைத்து விட்டு அப்புறம் பேசிக்கொள்கிறேன் என்ற வியாக்கியானத்தை பேசிவிட்டு சென்றுவிடுவார். பட்ட காலிலேயே படும் என்பது, சக்திக்கு சரியாகப் பொருந்தும். சக்கரை நோய் இருக்கும் தந்தைக்கு, காலில் புண் பெரிதாக, விளாத்திகுளத்திலிருந்து சென்னைக்கு அழைத்துவந்தாள். அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தாள். அண்ணன் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு போனான். பொருளுதவியெல்லாம் உனக்குத்தான் செய்கிறார்கள். நீ தான் பார்க்க வேண்டும் என்பதை, அவன் முகம் சொல்லியது. அலுவலகத்தில் அனுமதி கேட்டு, அங்கும் இங்கும் ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருந்தாள். மருத்துவர்கள் வேறு வழியில்லை, உயிர் வாழ வேண்டுமென்றாள், கெண்டக்காலிற்கு மேல் துண்டாக எடுக்க வேண்டும் என்றார்கள். அண்ணன் வந்தான், அறுவை சிகிச்சைக்கு கையொப்பம் இட்டான். அம்மாவிடம் பேசினான், வீட்டை எழுதித் தர உறுதி வாங்கினான். ஊணமானலும் தந்தை குணமாகி வந்தால் போதும் என்று வெங்கடசாலபதியை வேண்டினாள். வேண்டுதல் வீணாகி, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சக்தியின் தந்தை தன் மகளுக்கு என்ன நினைத்து பராசக்தி என வைத்தாரோ, என்ன ஒரு வைராக்கியம், சக்தி. எத்தனை மணிக்கு எழுந்திருப்பாள், எத்தனை மணிக்கு தூங்குவாள், எப்ப அலுவலக வேலை பார்ப்பாள், எப்ப வீட்டு வேலைகளை பார்ப்பாள், யாருப் பார்த்திட முடியாது, அத்தனையையும் அசால்ட்டாக செய்து முடித்தாள். பாலாற்றைப் போல் கண்களில் கண்ணீர் வற்றிப் போயிருந்தது. எப்போதும் தனக்குதவும் தந்தையை இழந்த சக்திக்கு, சக்தி குறைந்துதான் போனது. முன்பே பேசியபடி, முப்பது நாள் முடிந்த பின்னர், ஊரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டான் சக்தியின் அண்ணன் செல்வராசு. ”அப்பா பென்சன் வர்ற வரைக்கும், அம்மாவுக்கு மாசம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடு மருமகனே” என அன்போடு கோரிக்கை வைத்தார் காபி கடை கார்மேகம். ம்..ம்… என தலையாட்டிக் கொண்டு நான் செய்யாம, யார் செய்யிறது. எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னவன், அதுக்கப்புறம் விளாத்திகுளம் பக்கமா தலைவச்சு கூட படுக்கலை. சக்தியின் மூத்த மகள் மூன்றாவது ஆண்டு படிப்பை முடித்தாள், இளையவர்கள் இருவரும் முதலாமாண்டு படிப்பை முடித்தார்கள். அம்மா, இனி ஒரு வருசத்தை சமாளிச்சிட்டா, அடுத்த வருசம் நான் வேலைக்குப் போய் சம்பாரிச்சிருவேன், தங்கச்சிக படிப்பை பார்த்துக்குருவேன் என்று மூத்தவள் சக்திக்கு தைரியமூட்டினாள். வரக்கூடிய வருசத்தை எப்படி கடப்பது, யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி. தான் வேலை பார்க்கும் இடத்தில் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. தினசரி பேசிக் கொண்டிருந்த தோழி இன்பா, இப்போது பேசுவதில்லை. எப்போதாவது பேசிக் கொண்டிருந்த சாந்தியும் பேசுவதில்லை. ஆடி, அம்மாவாசைக்கெல்லாம் வாழ்த்தும் போடும் கருவாப்பயலும், நிறுத்திக்கிட்டான். இந்த உலகம், காசு கேட்டிருவேன்னு முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டாள் சக்தி. நீ கேட்கமலேயே என் தலைமுடியை காணிக்கையா கொடுத்திருக்கிறேன் வெங்கடேசா, எனக்கு வழிகாட்டு, ஒவ்வொரு நாள் விடியலிலும் வேண்டிக்கொள்வாள் சக்தி. விடியல் தினமும் வந்தது. சக்தியின் வாழ்வில் வெளிச்சம் வந்தபாடில்லை. இந்த இரண்டு மாதமா, அம்மாவிடம், காட்டை வித்துக் கொடு, மூனு பேர் படிப்புக்கும் இந்த வருசத்துக்கு சரியா வந்துரும். அப்புறம் எம் பிள்ளைக நம்ம எல்லாத்தையும் பார்த்துக்குருவாங்க ஒரே பல்லவியை பாடுகிறாள் சக்தி. மகளே, 'நான் கொடுத்தனுப்புன ஒன்னு கூட ஓம் வீட்டுல இல்லை, உன்னத் தவிர' இதையும் வித்து செலவலிச்சிட்டா, என்ன செய்யுறதுன்னு லெட்சுமியம்மா அழுவாள். இது தினமும் காலையும் மாலையும் போய் வருகிற டவுன் பஸ் மாதிரி, கொஞ்சம் முன்னப் பின்ன நடக்கும். நாற்பது நிமிசத்துல வந்துடலாம், ஆனா, ஆறுமுகம் வந்து நாலு வாரமாச்சு. அந்த ஒரு நாள் பதினொரு மணிக்கு வந்தாரு, மூத்த மகள் முழித்திருந்தா, அம்மாவும் அப்பாவும் ஒரு வருசமா பேசிக்கொள்வதில்லை என்பதை அறிவாள். தன் தந்தையிடம், படிப்புச் செலவுக்கு பயந்து பயந்து பேசினாள். பாவி மகன் பட்டுன்னு கெட்ட வார்த்தை பேசிட்டான், எந்த அப்பனும் மகளை கேட்காத வார்த்தையை கேட்டுட்டான், கேடு கெட்டவன். அன்றைய இரவு முழுவதும் மூத்தவள் யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். காலையில் வீங்கிய கண்ணோடு இருந்த அக்காவைப் பார்த்து, இளைவள் என்னக்கா எனக் கேட்க, 'கிழட்டு குளவி கொட்டிருச்சு' ன்னு கண்ணில் கை வைத்தாள். விவரம் தெரியாமல் பாட்டி போல் வைத்தியம் சொல்லிக் கொண்டு திரும்பி பார்த்தால், அம்மாவிற்கும் கண் வீங்கியிருந்தது. இளையவளில் இன்னொருத்தி போனில் லெட்சுமி அம்மாச்சியோடு பேசிக் கொண்டே அம்மாவிடம் கொடுத்தாள். நேத்து சாமத்துல உங்க அப்பா கனவுல வந்து அந்த புஞ்சைய வித்து பேத்திக படிப்புச் செலவுக்கு கொடுக்கச் சொல்லிட்டார். அண்ணகிட்ட பேசிட்டேன். காலையில காபி வாங்க போனப்ப கார்மேகம் தம்பி கிட்ட சொன்னேன், அப்பா ஆஸ்பத்திரியில இருந்தப்பவே, கனிக் குடும்பன் பேரன் நல்ல விலை கொடுக்கிறேன் சொன்னதாகச் சொன்னாரு, செவ்வாக்கிழமை வா, வித்துடலாம். கிழட்டு குளவி எங்கோ கொட்டியதில் லெட்சுமியம்மாவிற்கும் கண்கள் வீங்கியிருந்தது. அம்மா, அம்மான்னு நா தளர்ந்த குரலில் சக்தி பேச, விடு சக்தி, கனியன் கனவு பலிக்கட்டும். அவன் பேரன் விதைச்சு, அறுவடை செஞ்சு, சந்தோசப்படட்டும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in