தமிழ்ச்செல்வன்
சிறுகதை வரிசை எண்
# 75
அன்பு என்கிற அமிர்தம்
நாங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் முதன்முறையாக மோகன் அறிமுகம் ஆனான். சிவப்பான தேகம் உடையவன். அவன் கன்னத்தில் இருந்த தீக்காயம் அவனை உற்றுப்பார்க்க வைத்தது.
கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் மைதானத்தில் எப்போதும் பல சிறுவர்கள் குழுவாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள். நாங்களும் 5 பேர் கொண்ட 2 அணிகளாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தோம்.
மோகன் " எனக்கு ஒரு ஓவர் போடுங்க. சும்மா ஆடிட்டு போறேன்"என்று எங்களிடம் கேட்டான்.
எங்களை விட கொஞ்சம் உயரமாக இருந்தான். அழுக்கான உடையில் இருந்தான். அவன் உடலில் மெலிதான பெட்ரோல் வாசம் வந்தது.
"2 வருஷம் முன்னாடி நானும் உங்க ஸ்கூல்ல தான் படிச்சேன். இப்போ படிப்பை நிறுத்திட்டு பைக் மெக்கானிக் கடைல வேலைக்கு சேர்ந்துட்டேன். ஞாயித்துக்கிழமை பாதி நாள் தான் வேலை. நீங்க ஏழாவது படிக்கறீங்களா ? நான் ரெண்டு வருஷம் முன்னாடி ஏழாவது படிச்சேன். கோபி சார் கிட்ட எத்தனை அடி பட்டக்ஸ்லையே வாங்கி இருக்கேன் தெரியுமா ? " என்று பின் பக்கத்தை தேய்த்துக் காட்டினான். நாங்கள் சிரித்தோம். அவன் பேச்சால் எங்களை நிறைய சிரிக்க வைத்தான். அடுத்த வாரங்களில் எங்கள் விளையாட்டில் தவறாமல் சேர்ந்து கொண்டான்.
எங்கள் குழுவில் இருந்த ஹரி அவன் வீட்டுப்பக்கம் என்பதால் அவனுக்கு முன்பே தெரியும்.
எங்கள் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தனியாக விதிமுறைகள் இருந்தன. டென்னிஸ் பந்தில் தான் விளையாடுவோம் . ஒன் பிச் கேட்ச் உண்டு. சிக்ஸர் கிடையாது. பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றால் பந்தை அடித்தவன் தான் வெளியில் சென்று எடுத்து வரவேண்டும். இந்த விதிகளை கேட்டு மோகன் முறைத்தான்.
"சிக்ஸர் அடிக்காம என்னடா கிரிக்கெட். கையைக் கட்டிப்போட்டு விளையாட சொன்ன மாதிரி இருக்கு இதுக்கு பேசாம உக்காந்து ராஜா ராணி விளையாடலாம் "
"எங்க கிட்ட இருக்கறதே ஒரு பந்து . அதுவும் தொலைஞ்சா , ராஜா ராணி ,கண்ணாமூச்சி ஏதாவது விளையாடிட்டு தான் இருப்போம்" என்றோம்.
நாங்கள் அவனை மரியாதையாக "அண்ணா " என்று கூப்பிட்டதை வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
"அண்ணா சொல்ல வேண்டாம், ஒரே டீம்ல விளையாடும் போது அண்ணா சொன்னா பிரெண்ட்ஷிப் வராது மரியாதை மனசுல இருந்தா போதும் . அதுக்காக "வாடா ,போடா எல்லாம் சொல்லாதீங்க. " உங்கள விட பெரியவன்ல. வா மோகன், போ மோகன்னு சொல்லுங்க" என்றான்.
எதற்காக படிப்பை நிறுத்தினான் .எப்படி அவன் கன்னத்தில் தீக்காயம் வந்தது போன்ற கேள்விகளை கேட்டபோது " இன்னொரு நாள் சொல்றேன் " என்று தவிர்த்து விடுவான்.
ஒரு நாள் அதிகாலை 7 மணிக்கு என் அப்பா சீக்கிரம் கிளம்ப வேண்டிய நேரத்தில் அவருடைய இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. அன்று முக்கிய வேலை என்பதால் அப்பாவின் முகத்தில் கவலையும் பதற்றமும் பார்த்தேன்.
"மெக்கானிக் கடை திறக்க 9 மணி ஆயிடுமே. நான் போக வேண்டிய இடத்துக்கு பஸ், ஆட்டோ கூட இருக்காதே. நல்ல நேரத்துல கழுத்து அறுக்குதே " என்று புலம்பினார்.
மோகன் பற்றி சொல்லி அவனை அழைத்து வர என் சைக்கிளில் கிளம்பினேன். முன்பு ஹரி சொன்ன அடையாளங்கள் வைத்து அவன் வீட்டைக் கண்டுபிடித்தேன். மோகனின் அம்மா சமையல் செய்து கொண்டு இருக்க எல்கெஜி பையன் போல் இருந்த அவன் தம்பியை மோகன் குளிக்க வைத்துக் கொண்டு இருந்தான். விஷயம் சொன்னேன்.
என் சைக்கிளில் என்னை வைத்து ஓட்டிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தான்.
ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் முகபாவத்துடன் வண்டியை பார்த்தான். வண்டியின் சில பாகங்களைக் கழட்டி மாட்டினான். கொஞ்சம் பெட்ரோலை தரையில் ஊற்றிப் பின்பு டியூபை சரியாக மாட்டினான். மூன்று நிமிடங்கள் தான் எடுத்துக்கொண்டான். அவன் மிதித்ததும் வண்டி ஸ்டார்ட் ஆனது.
"சரி ஆயிடுச்சு சார். இனிமேல் பிரச்சனை வராது. நிம்மதியா போயிட்டு வாங்க சார் " என்று அப்பாவிடம் சொன்னான்.
"அங்கிள்னே சொல்லு எதுக்கு சார் சொல்ற. இவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை அங்கிள் தான் சொல்லுவாங்க " என்றார்
"அய்யயோ வேணவே வேணாம் சார் . " என்று கை கூப்பி வணங்கினான். "வேலைக்கு சேந்த புதுசுல இப்படி தான் அங்கிள் ஆன்ட்டி னு கஸ்டமரை சொல்லிட்டு இருப்பேன். எங்க ஓனர் என்னைத் திட்டிட்டே இருப்பார். இந்த வேலை செய்யற பசங்க அப்படி சொல்ல கூடாது. சார் மேடம்னு சொல்லு, இல்ல அண்ணா அக்கானு சொல்லுனு என்கிட்டே சொல்லிட்டே இருப்பாரு.
எனக்கு அங்கிள் ஆன்ட்டி தான் முதல்ல வாயில வரும். ஒரு நாள் 21,23 ஸ்பானேரால என் மண்டைல பொளுக்குனு ஒன்னு போட்டார் . ரத்தமே வந்துடுச்சு. வலி உயிர் போயிடுச்சு. அந்த இடம் இப்பவும் சொட்டையா இருக்கும் பாருங்க" என்று தலையை என் அப்பாவிடம் காட்டினான்.
" உங்க அப்பா என்ன பன்றாரு "
"ஒரு துணிக்கடைல வேலை செஞ்சாரு. உடம்பு சரி இல்லாம இறந்துட்டாரு. நான் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு வந்துட்டேன்"
"அம்மா வேலைக்கு போகலையா."
"அம்மா வீட்ல இருந்து துணி எல்லாம் தைப்பாங்க. வீட்ல மிஷின் இருக்கு. அந்த காசு பத்தாது. அதான் நானும் வேலைக்கு போறேன். எப்படியாது தம்பியை படிக்க வச்சிடனும் சார்."
"உங்க அம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி எங்காவது வேலைக்கு போன ,அந்த காசுல நீயும் படிக்கலாமே மோகன் "
"இல்ல சார். அம்மாவுக்கும் உடம்பு முடியாது.அப்பா சாகும் போது நான் பக்கத்துல இருந்தேன் சார். அம்மாவையும் தம்பியையும் நீதான் பாத்துக்கணும் மோகன்னு சொல்லிட்டு உயிரை விட்டுட்டார் சார்"
அப்பா அவனிடம் 100 ருபாய் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டான்.
"வேணாம் சார் . ப்ரெண்ட்ஷிப்காக வந்தேன். காசு வாங்கினா முதலாளிக்கு துரோகம் செய்ற மாதிரி சார். அவர் கடைல வேலை செஞ்சு போட்டிக்கு தொழில் செய்றமாதிரி ஆயிடும் சார் "
"உன் முதலாளிக்கு தெரியாது. யாரும் சொல்ல மாட்டாங்க .சும்மா வாங்கிக்க"
"வேணாம் சார். என் மனசாட்சி ஒத்துக்காது. நான் போயிட்டு வரேன் சார், தம்பியை ஸ்கூல்ல விட்டுட்டு வேலைக்கு கிளம்பனும் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
அப்பா அந்த நூறு ரூபாயை என்னிடம் கொடுத்தார். "அவனுக்கு ஏதாவது பொருளா வாங்கி கொடுத்துடு" என்றார்.
பள்ளியில் ஹரியை சந்தித்த போது மோகன் செய்த உதவி பற்றி சொன்னேன்.
" மோகன் பாவம்டா. அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான்ல. அம்மாவும் தம்பியும் மேல ரொம்ப பாசமா இருக்கான்" என்றேன்.
"உனக்கு ஒன்னு தெரியுமா. அவங்க வீட்டில இருக்கறது அவன் நிஜ அம்மா இல்ல. அவனோட சித்தி. அவன் கன்னத்துல ஒரு தீக்காயம் இருக்குல்ல அது அவங்க சூடு வச்ச தழும்பு தான். நீ இதை பத்தி அவன் கிட்ட பேசிக்காதே. அவன் சந்தோசமா இருக்கிறதே நம்ம கூட கிரிக்கெட் விளையாடும்போது மட்டும் தான்" என்றான் ஹரி.
ஞாயிற்றுக்கிழமை மைதானத்திற்கு செல்லும் போது 100 ரூபாய்க்கு 10 பந்துகள் வாங்கிச்சென்றேன்.
"மோகன், இன்னைக்கு நாம சிக்ஸர் அடிச்சு கிரிக்கெட் விளையாட போறோம். பீல்டிங் பண்றவங்க தான் வெளிய போற பால் எடுத்துட்டு வரணும். கிடைக்கலெனா அடுத்த பால்ல விளையாடலாம், அதன் நம்ம கிட்ட 10 பால் இருக்கே " என்றேன்.
மோகன் அன்று நிறைய சிக்ஸர்கள் அடித்தான். " இன்னைக்கு சிறகு முளைச்ச மாதிரி இருக்கு " என்றான்.
அன்று விளையாடி முடித்தபிறகு அவனிடம் தனியாக பேசினேன்.
" அவங்க உன்னோட சித்தியா ? எதுக்கு உனக்கு சூடு வச்சாங்க ?"
" ஆமாம். சித்தி தான். அது ரொம்ப நாள் முன்னாடி வச்ச சூடு. நான் கிரிக்கெட் விளையாட போகணும்னு சொன்னதுக்கு கோபத்துல சூடு வச்சுட்டாங்க".
"உங்க அம்மாக்கு என்ன ஆச்சு"
"நான் பொறந்த அன்னிக்கே இறந்துட்டாங்க. அதனால அப்பாக்கும் என் மேல கோபம். பாட்டி ஊர்ல கொஞ்ச நாள் இருந்தேன்.பாட்டியும் இறந்த பிறகு வேற வழி இல்லாம அப்பா கூட வந்துட்டேன்.
அப்பறம் தான் அப்பாக்கு இன்னொரு கல்யாணம் ஆச்சு. தம்பி பொறந்தான். எனக்கு கிரிக்கெட் விளையாடறதுனா ரொம்ப பிடிக்கும். எந்த வேலை சொன்னாலும் கேக்காம கிரவுண்ட்லேயே கிடப்பேன். அம்மா கோபத்துல சூடு வச்சுட்டாங்க.
கொஞ்ச நாள் அப்பறம் அப்பா உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க .
எங்க அப்பா சாகும்போது சொன்ன வார்த்தைக்காக நான் படிப்பை நிறுத்திட்டு அம்மாவையும் தம்பியையும் பாத்துக்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன் "
"உன்னை ரொம்ப கொடுமைபடுத்தின சித்தி மேல உனக்கு கோபம் இல்லையா. நீ அவங்களை அம்மானு தான் சொல்லுவியா ?"
"முதல்ல எல்லாம் சித்தி தான் கூப்பிடுவேன். அப்போ எல்லாம் என்கிட்ட கொஞ்சம் கோபப்படுவாங்க. ஒரு விஷயம் நடந்தது அதுக்கு அப்பறம் மாறிட்டாங்க "
"என்ன விஷயம் "
"அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு நாள் எங்க அப்பா வெளியூர் போய்ட்டாங்க .அன்னைக்கு முதல் நாள் தான் எனக்கு கன்னத்துல சூடு வச்சாங்க .ராத்திரி தூங்கிட்டு இருந்தோம்.சித்தி, நான்,தம்பி மூனு பேரும் வீட்ல இருந்தோம் . தம்பி அப்போ குட்டிப்பாப்பா. தொட்டில்ல படுத்து தூங்கிட்டு இருந்தான்.
சித்தி என்னை எழுப்பினாங்க. சித்திக்கு நெஞ்சு வலிக்குதுன்னு பக்கத்து வீட்டு ஆயாவை கூட்டிட்டு வர சொன்னாங்க. ஆனா அவங்க வீடு பூட்டி இருந்துச்சு. சித்தி வலியில அழுதுட்டு இருந்தாங்க. என்னை அடுப்பில சுடுதண்ணி வைக்க சொன்னாங்க.
அப்பறம் அவங்களே அவங்க நெஞ்சுல ஒத்தடம் கொடுத்துக்கிட்டாங்க. தம்பியும் பசில அழுதான். அவங்க நெஞ்சுல பால் கட்டிடுச்சு. தம்பி சின்ன குழந்தைங்கறதால இழுத்துக் குடிக்க முடியல.
நீ நல்ல போர்ஸ்ஸா உறிஞ்சி பால் குடிச்சுட்டு துப்பிடு மோகன். அதுக்கு அப்பறம் சரி ஆயிடும் தம்பியால பால் குடிக்க முடியும்னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி நான் அவங்க நெஞ்சுல கொஞ்சம் பால் குடிச்சு அவங்க வலி சரி ஆனதுக்கு அப்பறம் தம்பி பால் குடிக்க முடிஞ்சுது.
அடுத்த நாள் காலைல எனக்கு சூடு வச்ச இடத்துல மருந்து வாங்கி போட்டு விட்டாங்க. நீ என்னை அம்மானே கூப்பிடு . நீ கிரிக்கெட் விளையாடப்போனாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் . அடிக்கவும் மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு புது அம்மா கிடைச்சுட்டாங்க.இனிமேல் என்னோட வாழ்க்கைல சந்தோசம் மட்டும் தான்னு நினைச்சுட்டு இருந்தேன். மூனு மாசத்தில அப்பா இறந்துட்டாரு. என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு"
"உனக்கு அவங்க மேல கோபமே இல்லையா? எப்படி அவங்க மேல இவ்வளவு பாசமா இருக்கே? "
"அன்னிக்கு என்கிட்டே கொஞ்சமா பால் உறிஞ்சு துப்பிடுன்னு சொன்னாங்கலா"
சிறிது மௌனம் ஆனான்.
நான் " ஆமாம். சொன்னாங்க " என்றேன்.
"நான் பால் உறிஞ்சி துப்பவே இல்லை. அப்படியே முழுங்கிட்டேன்" என்றான்.
[ முற்றும் ]
:- தமிழ்ச்செல்வன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்