logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

நிஷாந்தன்

சிறுகதை வரிசை எண் # 74


சுடர் - நிஷாந்தன் ‘மேதகு கே.ஜானகிராமன் அவர்களே வருக வருக’ என்று வரவேற்ற அலங்கார வளைவை வியப்புடன் பார்த்தவாறே கல்லூரிக்குள் காரைச் செலுத்தினார் ஜானகிராமன். ‘தான் படித்த கல்லூரிக்குள் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நுழைகிறோம்’ என்ற எண்ணமே அவருக்குள் சிலிர்ப்பை உருவாக்கியது. கல்லூரி வளாகம் அடையாளமே தெரியாத அளவுக்கு நிறைய மாறிப்போயிருந்தது. ஏராளமான புதிய கட்டிடங்கள். புதிது புதிதாக துறைகள். மரங்களெல்லாம் பெரிது பெரிதாய்… காரிலிருந்து இறங்கிய ஜானகிராமனையும், மனைவி, மகளையும் கல்லூரி முதல்வர் வரவேற்றுத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார். விசாலமான அந்த அறை மிகுந்த நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. சமுதாய உயர்வுக்குப் பாடுபட்ட தலைவர்கள் சுவரில் அழகுபடப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கல்லூரியில் படித்து பல்கலைக் கழக அளவில் ரேங்க் வாங்கிய மாணவர்களின் பெயர்கள் சுவரின் ஒரு பகுதியில் பொறிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெயரும் அந்த வரிசையில் இருப்பதை அவர் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. தங்கள் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் பெரிய அரசுத் துறை அதிகாரியாக வாழ்க்கையில் உயர்ந்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகப் பரவசத்துடன் தெரிவித்தார் முதல்வர். அவர் எந்தெந்த நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார் என்பதையெல்லாம் ஆர்வத்துடன் விசாரித்தார். அந்த அனுபவங்களையெல்லாம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று ஜானகிராமனைக் கேட்டுக் கொண்டார். ஜானகிராமனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். தான் படித்த அந்தக்காலப் பேராசிரியர்களைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தார் ஜானகிராமன். பேராசிரியர் சித்தீக் அலி காலமாகி விட்ட செய்தியைச் சொன்னார் முதல்வர். மிகவும் வருத்தமாக இருந்தது. பேராசிரியர் அரவாண்டி சார் பக்கத்தில் அண்ணா நகரில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவருடைய தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டார். “நிகழ்ச்சி நாலு மணிக்குத் துவங்கும். இப்போ மணி மூணு தான் ஆகுது. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறீங்களா சார்?” பணிவுடன் கேட்டார் முதல்வர். “ரெஸ்ட் ஒன்னும் வேணாம்… முடிஞ்சா மாணவர்கள சந்திக்கலாமே” “ஓ.. எஸ்..” என்று பரபரப்பான முதல்வர் “எம்.ஏ. சோஷியல் ஒர்க் வகுப்புக்குப் போகலாம்… வாங்க” என்று அழைத்துச் சென்றார். ‘தனக்குப் பிடித்தமான துறையை அறிந்து சொல்கிறாரே’ என்று முதல்வரை மனதிற்குள் மெச்சிக் கொண்டார் ஜானகிராமன். என்.எஸ்.எஸ் தொண்டராகத் தான் கல்லூரியில் சேவை செய்த நாட்களெல்லாம் அவருடைய மனதில் வலம் வந்தன. கல்லூரி வளாகத்துள் ஆங்காங்கே தனது படத்துடன் கூடிய ‘முன்னாள் மாணவர்- சாதனையாளர் இந்தியத் தூதர் (ஓய்வு) என்றிருந்த பதாகைகளைப் பெருமிதத்துடன் பார்த்தார். காண்டீனை ஒட்டியுள்ள பெரிய அரச மரத்தடியில் தான் அமர்ந்து ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்த நாட்கள் இன்னும் மனதுள் பசுமையாய் இருப்பதை உணர்ந்தார். இப்போது அதே மரத்தில் தன்னை வரவேற்கும் பதாகை கட்டப்பட்டிருப்பதை எண்ணிப் பார்த்தார். `கல்விதான் மனிதனுக்கு எத்தனை விதமான உயர்வுகளைக் கொடுக்கிறது ? ‘ என்று மனதுக்குள் வியந்தார். முதுகலை இறுதியாண்டு வகுப்பு அறைக்குள் நுழைந்தனர். அறை துப்புரவாக இருந்தது. முப்பது மாணாக்கர்கள் இருக்கலாம். எல்லோரும் ஒரு சேர எழுந்து நின்று ‘ வெல்கம் அம்பாசிடர் சார்’ என்று உரத்த குரலில் வரவேற்றனர். பதிலுக்கு வணக்கம் செலுத்திய ஜானகிராமன் , முதல் வரிசையில் எழுந்து நின்ற மாணவியைப் பார்த்ததும் துல்லியமாக அதிர்ந்தார்.. ராஜலட்சுமி ! அதே கல்லூரியில் ஜானகிராமனுடன் படித்த கல்லூரித் தோழிதான் ராஜலட்சுமி. ஜானகிராமன் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படிக்கும்போது ராஜலட்சுமி பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். என்.எஸ்.எஸ் முகாமில் சக தொண்டர்களாகத் தொடங்கிய நட்பு ஆங்கில இலக்கிய ஆய்வுகளில் செழிப்பாக வளர்ந்து சுலபமாக அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது. ‘பட பட’வென்ற பேச்சும் ‘துரு துரு’வென்ற பார்வையுமாக உலா வந்த ராஜலட்சுமியை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு சுகமான மாலை வேளையில் தனது காதலை இதமாகத் தெரிவித்தார். புன்னகை பூத்த முகத்துடன் ராஜலட்சுமி தலை கவிழ்ந்ததைக் கண்டதும் ஜானகிராமனின் நெஞ்சுக்குள் ஆயிரம் மத்தாப்புகள் பூச்செறிந்தன. எவருமே அறியாதபடி கண்களால் காதலையும், சொற்களால் கவிதைகளையும் பரிமாறிக் கொண்டனர். ஜானகிராமன் படிப்பை முடித்த கையோடு அயலுறவுத் துறையில் வேலை கிடைத்து டெல்லி சென்றுவிட்டார். இவர்களின் காதலுக்கு ராஜலட்சுமி வீட்டில் பலத்த எதிர்ப்பு. அவளுக்கு அவசரம் அவசரமாக வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும் துடித்துப் போனாள். ட்ரங்க் கால் புக் செய்து ஜானகிராமனிடம் தொலைபேசியில் தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லிக் கதறிய ராஜலட்சுமியால் அதற்கு மேல் எதுவுமே செய்ய முடியவில்லை..மிகவும் சிரமப்பட்டு விடுமுறை வாங்கிக் கொண்டு ஜானகிராமன் ஊருக்குத் வருவதற்குள் எல்லாமே கை மீறிப் போயிருந்தது. ராஜலட்சுமியின் குடும்பம் ஊரை விட்டே சென்று விட்டிருந்தது. கும்பகோணத்திற்குப் பக்கத்தில் எங்கோ குடியிருப்பதாகக் கேள்விப்பட்டு பஸ்ஸேறிப் போய்த் தேடினார். ஆலயங்கள் நிரம்பிய அந்த அழகான நகரத்துள் ராஜலட்சுமியின் வீட்டைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மிகுந்த சோர்வுடன் ஊர் திரும்பிய ஜானகிராமன் வகுப்புத் தோழன் நவமணியைப் பார்த்து விசாரித்தார். ராஜலட்சுமியை பம்பாயில் வங்கியில் வேலை பார்த்த அவளுடைய உறவுக்காரப் பையனுக்குத் திருமணம் செய்து கொடுத்து அவளுடைய பெற்றோர் அனுப்பி விட்டதாக நவமணி தெரிவித்தான். உள்ளமும் உடலும் நைந்து போனவராக, எதுவும் செய்ய இயலாமல் டெல்லிக்குத் திரும்பினார் ஜானகிராமன். அதற்குப் பிறகு நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருந்த ஜானகிராமனால் ராஜலட்சுமியைச் சந்திக்க முடியவேயில்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு . அச்சு அசலாக ராஜலட்சுமியை ஒரு கல்லூரி வகுப்பறையில் பார்த்ததும் விதிர் விதிர்த்துப் போனார். ‘இதெப்படி சாத்தியம்?’ ஜானகிராமனின் முகத்தில் குழப்ப ரேகைகளைக் கண்ட முதல்வர் சொன்னார் ‘இவங்கதான் சார் க்ளாஸ் லீடர். நல்லாப் படிக்கிறாங்க. ஆனாலும் படிப்பை விட சமூக சேவைதான் இவங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம். . இருபத்து நாலு மணிநேரமும் சேவைதான். அதனால இந்தப் பொண்ண நாங்க செல்லமா ‘சேவைச் சுடர்’னு தான் கூப்பிடுவோம்..’ என்று பெருமை பொங்கச் சொன்னவர் “என்னம்மா சுடர் , நான் சொல்றது சரிதானே ?’ என்று கேட்டார். முகத்தில் நாணம் படரப் புன்னகைத்தாள் சுடர். ஜானகிராமனின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன. “இந்தப் பொண்ணோட நாங்க கொஞ்சம் பேசலாமா?” மெதுவாக முதல்வரிடம் கேட்டார். வியப்புடன் ஏறிட்ட முதல்வர், “தாராளமாக சார்…” என்று சொல்லிப் பக்கத்து அறைக்கு அழைத்துப் போனார் . “நீ எந்த ஊர்மா சுடர்?” “சொந்த ஊர் இதே சோலையூர்தான் சார்… ஆனா ஸ்கூலிங் எல்லாம் மும்பை.” “பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?” சற்றே தயங்கினாள் சுடர். “அது..வந்து… அம்மா, அப்பா ரெண்டு பேருமே காலமாயிட்டாங்க சார்.” “என்னது?” என்று அதிர்ந்த ஜானகிராமன் “ என்னாச்சும்மா ?” என்று விசாரித்தார். “நான் பொறந்த மூணு வருசத்துலேயே அப்பா மும்பைல ஒரு கார் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு. அம்மாவுக்கு அப்பாவோட பாங்க்லேயே வேலை கெடச்சுது. அம்மா பாங்க் போன நாளை விட சமூக சேவைக்கு அலைஞ்ச நாள்தான் அதிகம். புயல், வெள்ளம், நெருப்பு, தொற்று நோய்னு எது நடந்தாலும் அங்க போய் நிப்பாங்க. ராத்திரி பகலா உழைப்பாங்க. நகையெல்லாம் வித்து செலவு பண்ணியிருக்காங்க.” “அவங்க எப்படிமா இறந்தாங்க?” “அந்தச் சமயத்துல தாராவி பகுதியில கொரோனா பாதிப்பு கடுமையா இருந்தது. அம்மா அங்கதான் போய் நின்னு ராத்திரி பகலா உழைச்சாங்க. திடீர்னு அவங்களுக்கும் கோவிட் பாதிப்பு வந்திருச்சு. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சேர்த்து வைத்தியம் பார்த்திருக்காங்க. …ப்ச்… பிரயோஜனமில்லை… போய்ச் சேர்ந்துட்டாங்க. நான் அவங்க முகத்தக் கூடப் பார்க்க முடியாமப் போச்சு.” முகத்தை மூடிக் கொண்டு சற்றே விசும்பி பிறகு சுதாரித்தாள். “மும்பைல இருந்த நீ இந்தக் காலேஜுக்கு எப்படிம்மா வந்தே?” லேசாகப் புன்னகைத்தாள். “எங்கம்மா படிச்ச காலேஜ்ல படிக்கணும்னு எனக்கு ஆசை... அம்மா மாதிரியே சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்… அதான்.” “உங்கம்மா பேர் என்னம்மா?” தனது `லப் டப்’ ஓசை எகிறுவதை உணர்ந்தவராகக் கேட்டார் ஜானகிராமன். குரலை உயர்த்திக் கம்பீரமாகச் சொன்னாள் சுடர் “ராஜலட்சுமி” திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜானகிராமன். மனைவியும் மகளும் ஒருவரையொருவர் பொருள் பொதிந்து பார்த்துக் கொண்டனர். “இப்போ மும்பைல யாரெல்லாம் இருக்காங்கம்மா ?” “எங்கம்மா அப்பாவுக்கு நான் ஒரே குழந்தைதான் . இப்போ அங்கே நெருங்கின சொந்தம்னு எனக்கு யாருமில்லே சார்…” . சோகம் ததும்பும் குரலில் பதில் சொன்னாள் சுடர். “இந்த வருசம் படிப்பு முடிஞ்சதும் எங்கம்மா போவ..?” சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். “மும்பைல எதாவது ஹாஸ்டல் பாக்கணும் சார்” . அவசரமாகக் குறுக்கிட்ட முதல்வர் “எங்க காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கச் சொல்றோம் சார். இங்கேயே லெக்சரர் வேலை தர்றதுக்கு நிர்வாகம் தயாரா இருக்குது. இந்தப் பொண்ணு கேக்கறதாவே இல்லை.” என்றார். ஒரு நிமிடம் மௌனமாக யோசித்த ஜானகிராமன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட மனைவி கண்களால் சம்மதம் தெரிவித்தார். மகளைப் பார்த்தார். புன்னகையால் ஒப்புதலைத் தெரிவித்தாள் மகள். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார் ஜானகிராமன். “இங்க பாரும்மா… ஆங்..சுடர்.. நாங்க மும்பைலதான் இருக்கோம். நான் கடைசியா துபாய்ல வேலை பார்த்து ரிடையர் ஆனதுக்கு அப்புறம் மாடுங்காவுல அபார்ட்மெண்ட் வாங்கினேன். நாங்க மூணு பேர் மட்டும்தான். நீ எங்களோட வந்து இருக்குறதுல எங்களுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லே.. என்ன சொல்றே? உனக்கு மும்பை பிடிக்கும்தானே? “ “நிறையவே பிடிக்குங்க சார்.. தாராவியில எங்க அம்மா விட்ட பணிய நான் தொடரணும் ” உறுதியான குரலில் சொன்னாள் சுடர். “அப்படின்னா யோசிக்காதேம்மா.. இந்த சுடர் எங்க வீட்ல ஒளிரணும். சம்மதம் சொல்லு.” சுடரின் முகத்தில் ஆயிரமாயிரம் குழப்ப மின்னல்கள் கோடுகளாக அலைபாய்ந்தன. “தயங்காதம்மா” மீண்டும் வற்புறுத்தினார் ஜானகிராமன். “இல்லே.. முன்பின் தெரியாத உங்களோட நான் எப்படி... ” வார்த்தைகளைத் தேடிக் குழம்பினாள் சுடர். “முன் பின் தெரியாதவங்களா ? நீ எங்க குடும்பத்துல ஒருத்திம்மா” திடமான குரலில் பதில் சொன்னார் . மனைவியும் மகளும் புன்னகையால் ஆமோதித்தனர். “சரிங்க சார்” என்றாள் சுடர். நா தழு தழுக்க, கண்களில் நீர் மல்கியது.. அவளையுமறியாமல் அவள் கரங்கள் ஜானகிராமனை நோக்கி வணங்கின. ஜானகிராமனின் மகள் சுடரின் அருகில் சென்று அவளுடைய தோளை ஆதுரத்துடன் பற்றினாள். “அது சரிம்மா… ரொம்ப நேரமா உன்னை சுடர்னே கூப்பிடறோமே, உன்னோட சொந்தப் பேர்தான் என்னம்மா?” “ஜானகி” என்றாள் தெளிவாக. மனைவி சுதாவும், மகள் ராஜலட்சுமியும் லேசான புன்னகையுடன் ஜானகிராமனை ஏறிட்டனர். திறந்திருந்த சன்னல் வழியாக சரேலென்று புகுந்த தென்றல் காற்று அவர்களை இதமாகத் தழுவிச் சென்றது. *****

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Doss Avatar
    Doss - 1 year ago
    என்னையும் தான். கதையின் கடைசி வரியை படிக்கவும்.