உ.அனார்கலி
சிறுகதை வரிசை எண்
# 78
கூடு
- உ.அனார்கலி,
1/104, சண்முகா நகர்,
அழகர் கோயில் சாலை,
மதுரை – 625 007.
தொலைபேசி : 9842423391
மின்னஞ்சல் முகவரி: anarkali.apc@gmail.com
எங்கேம்மா... உங்க அம்மா? வீட்டுக்குள் நுழைந்த கார்மேகம் மகளைப் பார்த்துக் கேட்டார். கண்கள்... வீட்டைச் சுற்றிப் பார்த்தது. பத்மா வீட்டிற்குள் இல்லை என்பது தெரிந்தது.
“மாடிக்குப் போயிருக்காங்கப்பா... காயப்போட்ட துணிகளை எடுக்க...”
‘ம்... ம்...’ என்ற ஒலி வந்தாலும் ‘மனுஷன் வர்ற நேரம் பாத்து எங்காவது போயிடுவா ...’ மனசு சொல்லிக் கொண்டது. மனைவி பத்மாவுடன் அத்தனை நெருக்கமா என்றால் ஆமா என்று அவரால் சொல்லத் தெரியாது. ஆனால், வீட்டிலிருக்கும்போது பத்மா அவர் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
துணிகளைச் சிறு குன்றுக் குவியலாகத் தூக்கிக் கொண்டு வந்த பத்மா கணவனைப் பார்த்து, மெலிதாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்...
“டிரெஸெல்லாம் மாத்திட்டு வாங்க... சூடா.... காபி குடிக்கலாம்... பத்மாவின் வார்த்தைகள் செவியில் பட்டு உள்நுழைந்தாலும் கார்மேகம் எந்தப் பதிலும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தார்.
பத்மாவின் முகத்தில் அவரிடமிருந்து எந்தச் சமிக்ஞையையும் எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது...
கால் கை கழுவி... கைலியும் பனியனும் அணிந்து கொண்டு கார்மேகம் ஹாலுக்கு வருவதற்குள், அவர் பூசியிருந்த பவுடரின் மணம் ஹாலை வந்தடைந்தது.
அவர் முன் இருந்த டீபாயில் டம்ளரை வைத்துவிட்டு, மகள் அதிதி பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்தாள் பத்மா... தனக்கான காபி டம்ளருடன்...
அதிதி ஏற்கனவே காபி குடித்து விட்டிருந்தாள்...
பத்மா தயாரித்த காபி இதமாக கார்மேகத்தின் தொண்டையில் இறங்கியது... ‘அப்... ப்... பா... என்ன மணம், ருசி....’ நெஞ்சு நினைத்தாலும் .... வார்த்தைகளை வெளியே துப்ப... அவரின் ஈகோ தயாராயில்லை...
“மதியம் சாப்பாடு... நல்லா இருந்ததாங்க... தயிரின் புளிப்பு சரியா இருந்துச்சுதானே...”
பத்மாவின் கேள்வி... கார்மேகத்தின் செவியில் நுழைந்து... மனதுக்குள் வந்தது...
நிறைய குழம்பும்... அதற்குள் முட்டை முட்டையாகப் பருப்புருண்டையும் பார்க்கவே அழகாயிருந்தது.
டப்பாவைத் திறந்தவுடன் குழம்பின் மணம் சாப்பாட்டு அறையை நிறைத்துக் கொண்டது.
“சார் இன்னைக்கு உங்க வீட்ல என்ன சாப்பாடு....?” வழக்கமான கேள்விகளுடன் பாத்திரம் காலியானது.
கார்மேகம் பெருமையாக எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்...
பத்மா மீண்டும் சாப்பாடு பற்றிக் கேட்டாள்...
“பிரியாணியும் சுக்கா வறுவலும் வச்சுவிட்ட.... பத்துத்தடவ கேட்டுட்ட....” என்றார் சலிப்புடன் கார்மேகம்...
மகள் அதிதி.... அம்மாவின் முகம் பார்த்தாள். அதில் அவளால் எதையும் வாசிக்க முடியவில்லை....
அலுவலக வேலையாகக் கோவையிலிருந்து மதுரைக்கு வந்திருந்தாள் அதிதி.
வேலை நேற்று மாலையே முடிந்துவிட்டது...
தொடர்ந்து சனி, ஞாயிறு வந்ததால் அம்மாவுடன் இருந்து விட்டுப் போகலாம் என்று தங்கிவிட்டாள்.
மகன் தீரஜை அவளின் கணவன் சுந்தரும் மாமியாரும் கவனித்துக் கொள்வார்கள்.
“அதிதி... நைட்டுக்கு உனக்கு என்ன வேணும்...” என்று கேட்டாள் பத்மா.
“நீ இரும்மா... இன்னைக்கு நான் டிபன் செய்றேன்.
“சப்பாத்தியும் பனீர் கிரேவியும் செய்றேன்” என்ற போது அடுத்த தெருவில் இருக்கும் ஸ்வாதி, ‘சார்’ என்றபடி வந்தாள்.
ஸ்வாதிக்கு, அதிதி வயதுதான் இருக்கும்... கார்மேகத்தின் அலுவலகத்தில் தான் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கிறாள்.
காபி உபசரிப்புக்குப் பின் ஸ்வாதிதான் பேச்சை ஆரம்பித்தாள். “சார் ஆபிஸ்ல நீங்க கேட்டதுக்கு என்னால பதில் சொல்ல முடியல... அதுதான் இப்ப வீட்டுக்கு வந்துருக்கேன்”
“என்ன ஸ்வாதி... என்னாச்சு... வழக்கம் போலத் தானா?”
“ஆமா சார்... எதுக்கெடுத்தாலும் சண்டை சச்சரவு... நான் அடிமைங்கிற எண்ணம் சார் அவருக்கு...
இன்னைக்குப் பாருங்க... பேச்சு பேச்சா இருக்கிறப்போவே... அடிக்கக் கையை ஓங்கிட்டு வர்றாரு...
நான் விட்டுருவனா... நானும் ஓங்கிட்டேன்... அப்புறமாதான் அடங்கினாரு”
வீராவேசமா... ஏதோ சாதனை செய்ததுபோல் பேசினாள் ஸ்வாதி. முகத்தில் அத்தனை பெருமிதம்...
அம்மா... விக்கித்து உட்கார்ந்திருந்தாள்... ஒரு வேளை தன்னை ஸ்வாதி இடத்தில் வைத்துப் பாத்திருப்பாளோ என்னமோ...?
“அதுக்குத்தான் ஸ்வாதி அப்பவே சொன்னேன்... நீங்க தான் கேட்கல...
காலுக்குப் பொருந்தாத செருப்பைக் கழட்டி எறியனும்மா... அட்ஜஸ்ட் பண்ணி நடந்தோம்னா... நாம தான் கீழ விழுவோம்... அப்புறம் கை போச்சு... கால் போச்சுங்கிற கதைதான்... செய்ய வேண்டியதை காலாகாலத்திலே செஞ்சுடனும் ஸ்வாதி... நீங்க என்ன சாதாரண ஆளா?
அரசு அலுவலர்... ஒன்னாந்தேதி ஆச்சுன்னா... உங்க அக்கவுண்ட்ல ஐம்பதாயிரம் விழுந்துரும்... நீங்க எதுக்கும்... எதுக்காகவும்... யாருக்காகவும் பயப்பட வேண்டாம்.
உங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ், சுயமரியாதை இருக்குங்க ஸ்வாதி... அத மறந்துடாதீங்க...”
“புரியுது சார்...” என்றாள் ஸ்வாதி... ஆனால் குரல் சற்று தணிந்திருந்தது.
“ஸ்வாதி, நீங்க படிச்சவங்க... உலகம் தெரிஞ்சவங்க... உங்க இனம்... அதான் பெண்கள்... செவ்வாய் கிரகத்துக்குப் போயாச்சு... நீங்க என்னடான்னா... இன்னும் அடுக்களையே சொர்க்கம்... வீட்டுக்காரர்தான் சாமின்னு... கிணத்துத் தவளையா இருக்கீங்க...”
“அதுக்கில்ல சார் நாளப் பின்ன...” ஸ்வாதியின் நெஞ்சுக்குள் ஏதோ விவாதம்... வார்த்தைகள் துண்டு துண்டாய் வந்தன... சற்று யோசித்துத் திணறினாள்... பின்,
“சரிங்க சார்... உங்க லாயர் ப்ரண்டோட நம்பர் குடுங்க... அவரோட பேசிட வேண்டியதுதான்... தினம் தினம் அவதிப்பட வேண்டாம்...”
“ம்... இப்பத்தான் ஸ்வாதி... தெளிவா யோசிக்கிறீங்க...” என்றபடி... செல்போனைப் பார்த்து எண்களைச் சொன்னார்...
“என் பேரைச் சொல்லுங்க... நல்லா பண்ணிடுவார்...” என்று கார்மேகம் கூற, ஸ்வாதி “போயிட்டு வர்றேங்க” என்று பத்மாவையும் அதிதியையும் பார்த்துச் சொன்னாள்...
“ஸ்வாதி ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் உட்காருங்க... கொஞ்சம் உங்களோடு பேசணும்...” என்றாள் அதிதி.
ஸ்வாதி புரியாமல் பார்த்தாள்...
“எனக்குப் பேச உரிமையில்லைதான்... ஆனாலும் பேசணும்னு தோணுது. உங்களோட எனக்கு நெருக்கம் இல்லதான் ஆனாலும் பேசணும்னு நினைக்கிறேன்... எங்கப்பவோட பேச்சிலிருந்து... உங்க பிரச்சினை என்னன்னு என்னால ஓரளவு புரிஞ்சுக்க முடியுது...
உங்களுக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் இடையே... ஏதோ சிக்கல்ன்னு தெரியுது ஸ்வாதி...
அதுக்கு எங்கப்பாவை ஏன் தேடி வந்தீங்கன்னு புரியலை...”
“சார்தான் எனக்குஆதரவா... அன்பா பேசுவார்.... என்னைப் புரிஞ்சவர்...”
“ஓகே. ஓகே... உங்க பிரச்சினைகளுக்கான தீர்வு பிரிவு தான்னு... எங்கப்பா... சொன்னது உங்களுக்கு நல்லதாப்படுது... இல்லையா...”
‘இதென்னடா... இந்தப் பொண்ணு’ என்ற தோரணையில் பார்த்தாள் ஸ்வாதி...
“எங்கப்பா உங்களைப் புரிஞ்ச அளவுக்கு உங்க ஹஸ்பண்ட் உங்களப் புரிஞ்சுக்கல இல்லையா... ஸ்வாதி...
சரி... ஸ்வாதி... உங்க வீட்டுக்காரர் அப்படிச் செய்றார்... இப்படிச் செய்றார்ன்னு எங்கப்பாகிட்ட சொல்ற நீங்க...
என்னைக்காவது உங்க கணவரைப் புண்படுத்துற மாதிரி நீங்க செஞ்சதைப் பத்தி எங்கப்பா கிட்ட சொன்னதுண்டா...”
சில விநாடிகள் யோசித்த ஸ்வாதி... தட்டுத் தடுமாறி ஏதோ சொல்ல வந்தாள்...
“வேண்டாம் ஸ்வாதி... நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்... ஒன்னே ஒன்னு எனக்காக... எங்கப்பாகிட்டே கேட்டுச் சொல்லுங்க...
என் வீட்டுக்காரர் என்னை மதிக்கிறதில்லைன்னு அவரைப் பிரியப் போறேன். மாசம் பிறந்தா கணிசமான சம்பளம் என் கைக்கு வருது... நான் எதுக்கு அடிமையா இருக்கணும்னு சொல்லிட்டு... எங்க வீட்டுக்கு வந்தால், எங்கப்பா ஏத்துக்குவாரான்னு கேட்டுச் சொல்லுங்க... ஸ்வாதி...”
துணுக்குற்ற கார்மேகம், “நீ பாட்டுக்கு என்னன்னமோ சொல்ற... ஸ்வாதி... பிரச்சினையே வேற... உனக்கு... அப்படி என்ன வந்துச்சு...”
“பாத்தீங்களா ஸ்வாதி... எங்கப்பாவோட ரியாக்ஸனை... உங்களை உக்காரவச்சு தீர்வு சொன்னவருக்கு அதே தீர்வு தன் பொண்ணுக்குப் பொருந்தாதுன்னு எப்படித் துடிக்கிறார் பாருங்க...” என்ற அதிதி மென்மையாக ஸ்வாதியைப் பார்த்தாள்.
“சில உண்மைகளை நாம புரிஞ்சுக்கணும் ஸ்வாதி... எங்கம்மாவ, எங்கப்பாவுக்காக அவங்க பாத்துப் பாத்து செய்ற சமையல, எங்கப்பாவ கவனிச்சுக்கிற விஷயத்தை எங்கப்பா ஒரு நாளும் அங்கீகரிச்சது இல்ல... அடையாளப்படுத்தியதும் இல்ல... அலட்சியப்படுத்த வேணா செய்வாரு... ஆனா அதுக்காக எங்கம்மா... போய்யான்னுட்டு கிளம்பல... உன் தகுதி இவ்வளவுதான்னு இருந்துருவாங்க...
ஒரு நாளும் தன்னை அடிமைன்னு நினைச்சுக்கிட்டது இல்ல. ஆனா எங்கப்பாவுக்கு ஒரு குறையும் வச்சதில்ல. எல்லாத்தையும் இன்னைக்கு வரைக்கும் பாத்துப் பாத்துச் செய்றாங்க... நான் கூட நினைச்சதுண்டு. உதாசீனப்படுத்துற இவருக்கு அம்மா ஏன் இவ்வளவு பணிவிடை செய்றாங்கன்னு...
ஒருநாள் அம்மாகிட்ட கேட்கவும் செஞ்சேன்...
“உங்கப்பாகிட்டே ஈகோ ரொம்ப இருக்கு அதிதி... கல்யாணம் ஆகி வந்தவுடனேயே எனக்கு அது புரிஞ்சுபோச்சு... தான் ஆம்பிளை... தனக்குத்தான் எல்லா அதிகாரமும்... அப்படிங்கிற நினைப்பு அவருகிட்டே நிறைஞ்சு கிடந்துச்சு...
அதுக்கு உன் பாட்டியும் அதுதான் என் மாமியாரும் காரணம்... ஆம்பிளைன்னா இரண்டு கொம்பு இருக்கும்னு சின்ன வயசுலேருந்து சொல்லி வளர்த்திருக்காங்க...
கல்யாணமாகி வந்தவுடனேயே அவரை மாத்த நினைச்சு செயல்ல இறங்கினேன்...
அஞ்சு இஞ்ச் இறங்கி வந்தார்னா அடுத்த நாள் ஆறு அடி மேல ஏறுவார்...
அவரு விஷயத்தில நான் தோத்துப் போயிட்டேன்னு தான் சொல்வேன்...”
“இப்படி ஒருத்தர்கூட வாழணும்மாங்கிற சோர்வு உங்களுக்கு வரலையான்னு கேட்ருக்கேன்...”
அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?
“அதிதி நீ சின்னப்பொண்ணு... புரியுமா புரியாதான்னு எனக்குப் புரியலை...
உங்கப்பாவுக்கு இன்னொரு முகமும் இருக்கு... எம் மேல அவருக்கு ரொம்பப் பிரியமும் இருக்கு... அதை அவரு வெளிக்காட்டுறதில்ல...
நான் சொல்லாமலேயே எனக்குத் தேவையானதை... அது புடவை, நகை... ஏன் கிச்சன் சாமான்களாகக் கூட இருக்கும் வாங்கி வந்துருவாரு...
சுகமில்லன்னா... டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிட்டு, மருந்தெல்லாம் எடுத்துக் கொடுப்பாரு...
ஆனா அதைக் கனிவா கொடுக்க மாட்டாரு...
சரிதான்னு நான் விட்டுருவேன்...
ஒரு பக்கம் இருட்டுன்னா இன்னொரு பக்கம் வெளிச்சம் இருக்குதானேன்னு சொன்னாங்க...
மனசால எங்கம்மா தெளிவா இருக்காங்க... அதனாலதான் எங்கப்பா நிம்மதியா இருக்காரு...”
இன்னைக்கும் எங்கப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே அவர் கண்கள் எங்கம்மாவைத்தான் தேடுது... எனக்குத் தெரியும். அவர் தன் கூட்டைப் பத்திரமா வச்சுக்கிடுறார். ஆனா உங்களை உடைச்சுக்கிட்டு வெளியே வரச் சொல்றாரு...”
“ஸ்வாதி... உங்க வாழ்க்கை... நீங்கதான் முடிவெடுக்கணும் நீங்க எப்படி முடிவெடுத்தாலும் அது முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது...
ஆனாலும் இன்னைக்கு இரவு முழுவதும்... நீங்க... உங்க கணவரின் செய்கையை நல்லது... கெட்டது... எல்லாத்தையும் அலசி ஆராயுங்க...
அதே நேரம் உங்க செயலையும்...
கடைசியில உங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்ன்னு நம்புறேன்...
மூர்க்கன்... குடிகாரன்... தீவிர பிடிவாதக்காரன்... வன்முறையாளன்... கொடூர பழக்கவழக்கம் உடையவன்... இதுல எதுவா உங்க கணவர் இருந்தாலும் நீங்க தொலைச்சுத் தலை முழுகிடணும்...
மத்தது... உங்க இஷ்டம் போய் வாங்க ஸ்வாதி...” நீளமா சொல்லி முடித்த அதிதியை சிந்தனையுடன் பார்த்தாள் ஸ்வாதி.
அவள் மனதில் என்ன ஓடியதோ தெரியாது... கார்மேகத்தின் மனதில் கரடுமுரடான நிலத்தில் ஓடும் டிராக்டர் போல ஏதேதோ சிந்தனைகள் புரண்டு கொண்டிருந்தன.
பத்மா என்ற பிம்பம்... அழகிய ஓவியமாய் மனத்திரையில் தெரிந்தது அவருக்கு. அதைவிட அதிதியின் அழகான வார்த்தைகள், அப்பாவின் மனதில் இனிய சங்கீதத்தை ஹம் செய்தது...
...............................
அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த அதிதியிடம், “மாலையில் சீக்கிரம் வந்து அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகமுடியுமா அதிதி” என்றான் சுந்தர்.
“எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு... எப்ப முடியும்னு தெரியலை... அதனாலதான் உன்கிட்ட சொல்றேன்” என்றான்.
“நான் கூட்டிட்டுப் போறேங்க... காலை 7 மணிக்கெல்லாம் டோக்கன் போட்டுட்டேன்... நீங்க உங்க வேலையப் பாருங்க” என்றாள் அதிதி.
“நானே போயிருவேன் அதிதி... நீ எதுக்கு?. பக்கத்துத் தெருவில இருக்கிற டாக்டரைப் பார்க்கத் துணைக்கு நீ எதுக்கும்மா?” என்றார் மாமியார்.
“நானும் வர்றேன் அத்தை... எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல...” என்று அதிதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே... வானம் திடீரென்று மூடியது... இரண்டு நிமிடத்தில் சடசடவென்று பெரிய துளிகளாய் மழை விழுந்தது... மழைத்துளி விழுந்த வேகத்தில் தரையிலிருந்து குப்பென்ன மண்வாசம்... கூடவே அனலாய் வெப்பம் தகித்தது...
“இதென்ன புதுசா இருக்கு காலையிலே திடீர்னு மழை... எந்த அறிகுறியும் இல்லாம... மாசி மாசத்துல” என்றாள் அத்தை.
“மழைக்கு ஏதும்மா... கால நேரம் எல்லாம்...
மழை பெஞ்சா நல்லது தானே...”
“அப்படி இல்லீங்க... அந்தந்த காலத்துல மழை, வெயில், காற்று, பனின்னு இருக்கனும்...
அத விட்டுட்டு இப்படி நேரங்கெட்ட நேரத்திலே பெஞ்சா... நல்லதில்லங்க...”
“வான சாஸ்திரம் சொல்லுறா அதிதி” கிண்டலாகக் கேட்டான் சுந்தர்.
“விஞ்ஞானிகள் சொன்னாங்க...” என்று வெடுக்கென்று சொன்ன அதிதி... வான சாஸ்திரமும் ஒரு சயின்ஸ்ன்னு உங்களுக்குத் தெரியுமா...? விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றம் அப்படிங்கிறாங்க... சோதிடர்கள் அதையே வேற பேரில சொல்றாங்க...” என்று இயல்பான குரலில் சொன்னாள்.
“அதிதி... உன் தோழி ஹரிணியின் குழந்தைக்கு ஏதோ கோளாறுன்னு சொன்னியே... இப்ப எப்படி இருக்கு... ” என்று கேட்டார் மாமியார்.
காலை எட்டு மணிக்குள் மாமியார், மருமகள், கணவன் மூவரும் சேர்ந்து சமையல், வீட்டு வேலைகளை முடித்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தீரஜைப் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள்...
அதன்பின் சிறிதுநேரம் எல்லோரும் உட்கார்ந்து எதையாவது பேசிவிட்டு நிதானமாய் அதிதியும் சுந்தரும் அலுவலகம் கிளம்பிப் போவார்கள்...
“என்ன சொல்றது அத்தை... ஹரிணி ரொம்ப கவலைப்படுறா...”
“அப்படி என்னதான் செய்யுது குழந்தைக்கு...” என்றான் சுந்தர்...
‘ஆட்டிசம்’ன்னு சொல்றார் டாக்டர்...
‘ஆட்டிசமா...’ அதிர்ந்து போய் கேட்டார் அத்தை.
சற்று இடைவெளிவிட்டு, “விஞ்ஞானம், மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கு... ஆனா ஒரு சில விஷயங்களுக்கு ஒன்னும் செய்ய முடியலையே...”
“அதிதி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கவலைப்பட்டியே காலநிலை மாற்றம் பத்தி...
அதுவும் பல நோய்களுக்குக் காரணம்...”
“அதெப்படிம்மா... நீங்க பாட்டுக்கு எதையாவது...” என்ற சுந்தரை, இடைமறித்த அம்மா... சுந்தர் அப்படி நினைக்காதே...
2012இல் ஒரு பயங்கர புயல் அடிச்சுச்சே... அதுக்கு உலகம் சாண்டிப் புயல்ன்னு பேர் வச்சுச்சு... உனக்கு நினைவு இருக்கான்னு தெரியலை...
அந்தப் புயலுக்கும் ஹரிணி குழந்தையின் ஆட்டிசத்துக்கும் என்னம்மா... தொடர்பு...” சுந்தரின் குரலில் கிண்டல் தெரிந்தது...
அந்தப் புயல் மக்கள் மனசுல பெரிய பாதிப்பை உண்டாக்குச்சாம் நான் சொல்லல... ஒரு மருத்துவ ஆய்வுக்கட்டுரை சொல்லுது” என்றார் பேராசிரியராய் இருந்த அம்மா...
வியப்புடன் அம்மாவின் முகம் பார்க்க அம்மா தொடர்ந்தார்...
“சாண்டிப் புயல் வீசிய சமயத்தில், மனப்பதற்றம், அழுத்தம், மனப்பிறழ்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் மனிதருக்கு...
குறிப்பா கர்ப்பம் உண்டாயிருந்த பெண்களோட குழந்தைகளும் இதனால ரொம்பப் பாதிச்சிருக்கு...
அவங்களுக்கு மனசும் உடம்பும் சேர்ந்தே பாதிச்சுருக்குப்பா...
இப்படியே போய்க்கிட்டு இருந்தா மனிதஇனம், மனமும் உடம்பும் குறைபட்டுப் போயிரும்...
அப்புறம் செவ்வாய்க்கிரகம், சந்திரமண்டலம் போய் என்ன செய்ய...”
“விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் எவ்வளவோ வளர்ந்திருச்சும்மா... எல்லாம் சரி பண்ணிரலாம்மா...”
“எவ்வளவு வளர்ந்து, முன்னேறி என்னப்பா பிரயோஜனம்... இன்னும் நம்ம மனசு முன்னேறலையே...
அன்பையும் அகிம்சையையும் போதிக்கிற இந்த உலகத்துலதான் போரும்... போரோட அழிவும் நிகழ்ந்துகிட்டே இருக்கு...”
“நீங்க சொல்றது சரிதான் அத்தை...
பேராசையும் ஆணவமும் நீ பெரியவன், நான் பெரியவன்கிற முனைப்பும் மனித மனத்திலே மண்டிக் கிடக்கிறதாலதான்... நம்மளோட எல்லா ஆக்கங்களும் பேரழிவைத் தந்துக்கிட்டு இருக்கு...
மனித மனம் மட்டுமல்ல... வான், காற்று, பூமி, நீர்ன்னு எல்லாம் மாசு அப்பிக் கிடக்குது...”
“சுந்தர்... குழந்தைகளப் பத்திய நம்ம பேச்சு எங்கேயோ போயிருச்சே...”
“ஆமாம்மா... ஹரிணி குழந்தை சீக்கிரம் நல்லபடியா ஆகணும்மா...”
“ஆகும்ப்பா... ஆனா கொஞ்சம் காலம் தேவைப்படும்... கூடவே குடும்பத்தாரோட ஒத்துழைப்பும்... பொறுமையும்...
இப்ப வளர்ற பிள்ளைகளுக்கே பொறுமையில்லை... அப்புறம் பெரியவங்களுக்கு எப்படிப் பொறுமை வரும்...
அதுக்கும் இந்த உலகம்தான் காரணம் அதிதி... அதாவது வளர்ப்பு முறை...
எல்லாக் குடும்பத்திலும் ஒற்றைக் குழந்தை... அவங்களுக்கு ‘இல்லை’ கூடாது... என்ற சொற்களே தெரியாது, சற்றே அதட்டலான வார்த்தைகளோ பார்வையோ அறியாமல் தெரியாமல் இன்றைய குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.
கூடி வாழ்தல் மிகக் குறைவு... விட்டுக்கொடுத்தல் அவர்கள் அறியாதது... கிடைக்காதது அவர்களைப் பொறுத்த அளவில் எதுவுமேயில்ல...”
“ஆமாம்மா... நீங்க சொல்றது சரிதான்... நாங்க சின்னப் பிள்ளையா இருக்கும்போது, விடுமுறை நாள்களில் நாங்க அத்தை, சித்தப்பா வீடுன்னு போயிருவோம்... இல்லை அவங்க இங்க வருவாங்க...
எவ்வளவு ஜாலியா இருக்கும் என்னம்மா...”
“ஆமா சுந்தர்... இன்னைக்கு நம்ம குழந்தைகள நினைச்சுப்பாரு...
என்னமோப்பா... எங்க காலம் நிறைவடையப் போகுது... நீங்களும் எப்படியோ தட்டுத் தடுமாறி வந்துருவீங்க... ஆனா இன்றைய சிறுவர் சிறுமியர் பாடு....?
நினைச்சாலே பயமாருக்குப்பா...”
“ஆமாம்மா... நீங்க அடிக்கடி சொல்வீங்களே... வீடு... அது கூடு... கூண்டு இல்ல... குடும்பம் அது கோவில்ன்னு... அது வெறும் வார்த்தையில்ல அத்தை... மந்திரச் சொற்கள்... அது சுத்தம் சார்ந்தது... புறச்சுத்தம் மட்டுமில்ல... அன்பு.... கருணை... பொறுமை... விட்டுக்கொடுத்தலால் ஆனது...
ஹரிணிக்கும் அவளோட கணவனுக்கும்கூட இடையில் பெரிதாகப் புரிதல் இருக்கும்னு தெரியல... அதோட விளைவுதான்... இந்தக் குழந்தையோன்னு நினைக்கத் தோணுது அத்தை...”
“இருக்கலாம் அதிதி... அதனாலதான்... குழந்தை உண்டான பெண்ணை அவ்வளவு கண்ணும் கருத்துமா... நம்ம சமூகம் பாதுகாத்துச்சு...
ஆனா... இன்னைக்கு... பெரியவங்க ஆதரவு அரவணைப்பு எதுவும் தேவையில்லன்னு இளவயதுகாரவுங்க நினைக்கிறாங்க... எல்லாம் எங்களால முடியும் அப்படிங்கிற அசட்டுத் துணிச்சல் வேற...”
“சரி விடுங்க அத்தை... ஆனா எனக்கு ஒன்னுமட்டும் புரியுது...
கல்வி, பணி, அரசியல், அதிகாரம்ன்னு பெண்கள் எவ்வளவு உச்சத்தில் பறந்தாலும் குடும்பத்தில் ஒரு கண் இருந்தால் போதும் அத்தை... வீடு கூடாகும்... நாடு நல்லதாகும்...” என்று சொல்லி முடிக்கும்போது...
அதிதி... மணி எட்டரை... கிளம்பு... சுந்தர் நீயுந்தான்...
அலுவலகத்திற்கு நேரமாச்சு என்றாள் அத்தை...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்