பத்மா
பத்மாவை எனக்கு நன்றாகத் தெரியும். இருள் வாரி இறைத்த நட்சத்திரங்களை வானம் மாட்டிக்கொண்டப் பிந்தைய இரவு. அய்யோ! அய்யோ! பத்மாவின் அலறல் இருட்டைக் கிழித்து அருகில் விழுந்தது. எனக்கு நன்றாகத் தெரியும். சத்தியமாக அவருடைய குரல் உடல் முழுவதும் வலியால் கொதித்து வெளியேறுகிறது. மருதைவீரன் கோவிலிலிருந்து நேராக அவள் அலறல் மண்டைக்கு நுழைவது போல் இருந்தது. தேம்பி மூச்சு வாங்கிய இடைவெளியைத் தவிர அய்யோ! அய்யோ! அலறி இடைவிடாது காதில் விழுந்தாள். பயந்து போனேன்.
பத்மாவின் அலறல் தூக்கத்திலிருந்து என்னை யாரோ ஓங்கி கண்ணத்தில் அறைந்து எழுப்பதியதுபோல் இருந்தது. அதே நேரம் தெருநாய்கள் ஒன்றாக ஊளையிட்டன. ஒன்று எங்கள் வீட்டுக் கதவுக்கு நேராக திடீரென கண்விழித்து ஏய்! அட கடவுளே ஏய்! ச்சு ச்சு வாசல் நேரா ஊளையிடுதே நக்கிவூட்டு நாயி ஏய்! ச்சு உள்ளிருந்தபடியே வெறுங்கையைக் காற்றில் வேகமாக வீசி அதட்டினாள் ஜெயம்மா. அவளுக்கு நாய் ஊளை கெட்ட சகுனம் எனப் பதிறிப் போகும் மனசு. நான் கண்விழித்தேக் கிடந்தேன். பத்மாவின் பாதி அலறலை வாங்கி அலறி ஓய்ந்த அம்மாவையும் பார்த்தேன்.
கசங்கிய கருப்புக் காகிதம்போல் நுழைந்து, ஒரு ஊசி போல் கோரையில் சொருகிய வௌவால் மங்களாகத் தெரிந்தது. புரண்டுப் படுத்தேன். நேராக, பின்பு முகத்தில் வைத்து தலையணையை ஆறுதலுக்கு அணைத்துப் புரண்டேன். வெகுநேரம் எடுத்தது. முருகேசன் வீட்டில் வயதான செவளைச் சேவல் கூவியதும் விடிந்தது. எந்த சிந்தனையும் இல்லை, பத்மாவுக்கு என்ன ஆனது?
‘காலில் சுடுதண்ணி பட்டதுபோல் பதட்டமாக ஓடினியே! என்ன ஆச்சு அன்று?’ என அக்கா பின்பு ஒருநாள் கேட்டாள். கோவில் அடைந்தேன். மூச்சு வாங்கியது. முன்புறக் கோவில் சுவர் செங்கல் தெரியும் அளவிற்கு உதிர்திருந்தது. கிழக்கு பார்த்து, நான்கு நீண்ட தூண்களைப் பிடித்துப் பெரிதாக நிண்டிக்கொண்டிருந்த குதிரை மேல்,கம்பீரமாகக் கையில் ஆளுயர அருவாளோடு விழிப்பிதுங்க கண்களை அகண்டு விழித்துப் பார்த்தான் மதுரைவீரன். கீழே யாரோ வேண்டுதலுக்குக் கொடுத்த எலுமிச்சை சிகப்புப் பூசிக் கிடந்தது. அருகில் தென்னங்கீற்று இரண்டு மூன்று பரவிகிடந்தது. அதன் மேல் அழுக்கு துணி இரண்டு கலைந்து கல்போல் கிடந்தது. கோவிலுக்கு தனி நுழைவாயில் கிடையாது. அருகில் வீடுகளற்ற இடம்; சின்ன அறைபோல் கோவில்; கோபுரம் என ஒரேயொரு சிலை நின்றது. தரைத்தளம் சிமெண்ட் இல்லை மண் தரை. சிறுசிறு குழிகள் அவ்வவ்போது புதிதாக முளைத்திருக்கும். தாய் நாய் டஜன் குட்டிகளோடு படுக்கை. ஒரு குழியில் முள் வெட்டி போடப்பட்டிருந்தது. சற்றுத் தொலைவில் முதிர்ந்த வேப்பமரம் சிகப்பு துணி கட்டி நாமமிட்டிருந்து. சூடம் எரிந்த கருப்போடு ஒரு கல் அருகில் கிடந்தது. அலைந்துத் தேட சௌகரியமற்ற இடம். விழா எடுத்து பல வருடங்கள் இருக்கும். கடைசியாக செல்லயன் பூசாரி இறப்பதற்கு முன் கொண்டாடியது. பிறகு ஒரு முறை முயற்சி செய்யப்பட்டதாம், நீ பெரியவனா? நான் பெரியவனா? மோதல் முட்ட கைவிடப்பட்டதாம். கோவில் ஒற்றை மின்விளக்கு இன்னும் அணைக்கப்படவில்லை. ஐந்தாறு முறை கண்களை அலையவிட்டுப் பார்த்தேன். பத்மாவைக் காணவில்லை. அது அவளாக இருந்திருக்க மாட்டாள். ஆனால், எப்படி யோசித்தாலும் நான் கேட்டது அவள் குரல்தான்.
பூக்காரி பத்மா, இன்னும் சொல்லப்போனல் எங்கள் தெருவில் பூ விற்பவள். சந்துப்பல் ஈறு தெரிய சிரிப்பாள். வற்றிப்போன மார்பை அடிக்கடி சேலை இழுத்து மூடி வைப்பாள். பூவு... பூவே... மல்லிப்பூவே... என பாட்டிற்கு இசைக்கு மெட்டுப்போல கூவுவாள். அவள் குரலில் விடிந்த பொழுதுகள் அதிகம். அவள் குரல் அவ்வளவு பறிச்சயம் எனக்கு. எப்போது வந்தாலும், என் வீடு தாண்டிதான் அடுத்தத் தெருவில் நுழைவாள். இட்லி வேலம்மாளும், இவளும் முன்னப்பின்ன தெருவில் நுழைவர். குதிரைவால் சடையைச் சிகப்பு ரிப்பனில் தொங்கவிட்டிருப்பாள். மூங்கில் கூடை நிறைந்து வழியும் அளிவிற்கு பூக்கட்டி இடுப்பில் சொருகி, அரைவட்டமாக உடலை வளைத்து அசைந்து வருவாள். என்ன பத்மா, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என யாராவது சொல்லிவிட்டாள் போதும், வெக்கம் கலந்த புன்னகையோடு அங்கயே வெகுநேரம் தேங்கி நிற்பாள். ஏண்டி, இப்படி இழுச்சுகிட்டு இருந்தா வியாபாரத்தை எப்படிடி பார்க்கிறது, போய் பொழப்பைப் பாருடி திருட்டு முண்ட! என பல் கடித்து தங்கவேல் மாமா அதட்டி அனுப்பி வைக்க வேண்டும்.
என்னடா அவளுக்கு வந்த கிராய்க்கி, பத்மா குரலயே காணாம், சின்னவனே அவள் வீட்டிற்கு போய் அரை முழம் பூ வாங்கி வா, காசு அப்புறம் தரேன் சொல்லு. ஒருகிறிஸ்துமஸ் நாளில் அம்மா அனுப்பினாள். நான் புது டவுசர் சட்டை கிறிஸ்துமஸ் சட்டை அணிந்துகொண்டுச் சென்றேன்.
அடுப்பில் உலையிட்டிருந்தாள், புகைக் கூரையில் பட்டு மேகங்களாக ஊர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தது. கட்டாத பூ மொட்டுகளை ஈரத் துணியில் மூடியிருந்தாள். வெளியே வந்து என்னைப் பார்த்ததும், அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். நொடியில் கட்டித்தருவதாக உள்ளே சென்றாள். புது டவுசர் அழுக்காக்கிவிடக் கூடாது என திண்ணையில் அமராமல் நின்றுக்கொண்டேன்.
அவள் விரலில் பூ மொட்டுகள் வரிசைக் கட்டி நின்றன. பத்து கைகள் கொண்டது போல் நொடியில் கட்டி முடித்தாள். சிறிய மாலை போல் பூ வளைத்து குழந்தை ஏசுவிற்கு போடு என்று சொல்லிக்கொடுத்தாள். நான் தலையாட்டிவிட்டு வாங்கி வந்தேன். கடைசியாக அவளுக்கு கல்யாண பேச்சு தெருவில் அடிப்பட்டது. அவளும், கலையாகச் சுட்டிக்கொண்டிருந்தாள். திடீரென அவள் அம்மாவின் மறைவிற்கு பிறகு பேச்சு முற்றிலும் நின்று போனது. பூ விற்பதை நிறுத்தி வெகுநாட்கள் ஆகியிருந்தது. முன்பு போல் அவளைப் பார்ப்பது அரிதாகிப் போனது. அவள் புன்னகை முகத்தைத் தொலைத்து, குட்டியாணை வண்டியில் ஒலிப்பெருக்கியில் கூவும் நவீன வியபார முகங்களை மாட்டிக்கொண்டது தெரு.
‘பத்மாவிற்கு வந்த வாழ்வை பார்த்தியாடி பாலக்கட்டு ஐயர் வீட்டிலே அம்புட்டு வசதியாக வைச்சிருக்கிறா, பல வருடம் கழித்து பிரகாசம் யாரிடமோ பேசக் கேட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை கோவிலுருந்து வீடு திரும்பும்போது பட்டுப்புடவைக் கட்டி, நகை நட்டோடு பஸ்ஸிலிருந்து இறங்கி போனா பாரு பத்மா, அடிச்சக்க…’ குழந்தைப்புள்ளைக் கிழவி சொன்ன போது கடந்து சென்றவன் நான்தான்.
பாலக்கட்டு ஐயர், சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுபதுக்க நிகழ்வுக்கு ஐயர் கொடுக்கும் தேதில மாற்றம் இல்லை. வெள்ளை வேஷ்டி சட்டைப் போலவே மனசு. மஞ்சப்பை இடது கையில் மாட்டியிருப்பார். நடுத்தர உயரம், ராசிக்காரர். அவள் நிம்மதி பெரிதாக நீடிக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்து பாலக்காட்டு ஐயர் இறந்துவிட்டதாகச் சேதி கேட்டு, துக்கம் அடைத்து நின்றேன்.
பகலில் ஒருநாள் மருதைவீரன் கோவில் செல்ல நேர்ந்தது. அய்யோ! அய்யோ! இந்த முறை கபடி விளையாடும் சிறுவன் ஒருவன்; நான்கு அறும்பு மீசைக்காரர்கள். புதிதாக பழகிய துண்டு பீடிப் புகையை உள்வாங்கிக்கொண்டு நடந்தேன். நடுவில் சிறு விளையாட்டு மைதானம், புல் செதுக்கி கோடிட்டபட்டிருந்தது. அங்கே பத்மா பற்றி விசாரித்தேன்.பொதுவாகப் பார்த்தால், இளைஞர்கள் சிலர் அவ்வபோது வந்து போகக் கூடும். பகலில் அந்த அக்காவைப் பாப்பது அரிது’ எல்லாம் அவர்கள் சொன்னதுதான்.
அன்று இருள் முழுமையாகக் கொட்டி மூடவில்லை. அய்யோ! அய்யோ! தொண்டை வீங்க பத்மாவின் அலறல். அருகாமையில் இருந்ததால் இரண்டாவது குரலுக்கே கோவில் அடைந்தேன். கோவில் முகப்பு விளக்கில் சன்னமாகத் தெரிந்ததால். ஒருவன் அவள் உதிர முடியாதபடி கால்களைப் பிடித்து அழுத்தினான். பாவாடையை அவள் புட்டம் தெரியவரை விளக்கி அம்மனமாக ஆக்கினான். நடுவில் நின்றவன் அவன் புட்டத்தில், காலில் பெருவிரல் மடக்கி தொப் என குத்தினான். பார்த்ததும், அய்யோ என அறியாமலேயே அலறிவிட்டேன்.
‘யாருடா, நீங்க வெறிபிடிச்ச நாய்களா, கோவில்ல பாவமா கிடக்கிறாள், அவளைப் போய்... கடவுளே பாவம்டா, என்னடா நாசம் பன்றீங்க, உங்களை போலிசில புடிச்சி கொடுக்கிறேன்..’ தீயாய்ச் சீறினேன். ஒருவன் தலைத்திருப்பி என்னைப் பார்த்ததும், மூவரும் இருளில் பதுங்கி ஒழிந்துக்கொண்டனர். அதில் ஒருவன் வீசிச் சென்ற சிகரெட்டில் புகை நெழிந்து இருட்டில் மறைந்தது.
அவள் அருகில் சென்றேன். அக்கா, பத்மா அக்கா குரல் கொடுத்தேன். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. மனநலம் பாதித்து எலும்பாக கிடந்தாள். என்ன நினைத்தாளோ, ஒரு விலங்கைப்போல மணல் கைத்தடவி கல்தேடி என் மீது வீசினாள். தடுக்க முயன்ற போது அந்த கல் கிளித்த காயம் கடு கடு என வழி தந்தது. அய்யோ! அய்யோ! என உடைகளை கிழித்துக்கொண்டாள். கை மடக்கி மார்பில் குத்தினாள். அவள் கால்விரலில் கீரல் ரத்தம் கசிந்தது. என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல், அவளையே திரும்பத் திரும்பப் பார்த்தேன். அய்யோ..! என நீண்டக் குரலில் கத்தி உடல் உப்ப மூச்சு வாங்கி தரையில் சாய்ந்தாள்.
வாழ்வின் மீதான உச்ச வெறுப்பில் கிடந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ரத்த சொந்தம், இறந்து போன அவள் அம்மா. இருவரும் பிழைப்பிற்காக எங்கள் கிராமம் வந்தவர்கள். கடைசி மூன்று வருடம் பெரியசாமி அண்ணன் வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் கிடையாது. எங்கோ சீரழியப்பட்டிருக்கிறாள். நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டிருக்கிறாள். சின்னத் தாத்தா சொல்வது போல், இந்த இருட்டும், இந்தத் தனிமையும் அவளைக் கொன்று இருக்கலாம். யாரிம் கேட்பது? கோபத்துடன் முன்னே நின்ற மருதைவீரனை முறைத்துப் பார்த்தேன். கண் கலங்கியது. அவள் எதிர்திசையில் திரும்பி நின்றுக்கொண்டேன்.
இருட்டில் முகங்கள் முளைத்து மேல் சட்டையில்லாத இருவர் வந்தனர். நிற்பது நான் என அறிந்ததும், இந்த நேரத்தில இங்க என்னப்பா நீங்க என்றான் வந்தவரில் ஒருவன். தேம்பித் தேம்பி கலைத்துப்போளாள், ஒரு வெப்ப பிசின் போல், உதட்டில் வழிந்த எச்சை வழித்து அருகில் இருந்த கல்லில் தடவி, லேசாக இரும்பியபடி.. இந்த பத்மா அக்கா என வாய் எடுப்பதற்குள், ‘இவ கிடக்கிறா பைத்தியக்காரி ஊர் இடமே கிடக்காதுன்னு நம்ம உசுர வாங்க இங்க நடிச்சுட்டு கிடக்கிற தேவடியா முண்ட’ தடிமமானக் குச்சை அவள் மீது வீசியதுதான் மிச்சம். தரையில் பட்டு எகிறி குதித்தது. காலுக்கு இடையில் தலையை புதைத்துக்கொண்டாள். அழுகையை அடக்க முயற்சித்தாள். ஆனால், முதுகு விட்டு விட்டு அதிர்ந்தது. எதிர்பாராத அத்தனை அவதூறான தாக்கதல்களுக்கும் நன்கு பழகியிருந்தாள் பத்மா. ‘
அவளை விடுங்க படிப்பெல்லாம் முடிஞ்சதா, இப்ப எங்க நீங்க வேலை பார்க்கிறீங்க?’ பேச்சில் சற்று தூரம் என்னை நகர்த்தி சென்றான். நானோ பத்மா அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். சற்று அழுது ஓய்ந்து பழைய துணி எடுத்து தலையணைக்குச் சுற்றினாள். ‘என்னவா, இன்னைக்கு உயிர் போற மாறி கத்திறா, செத்து ஒழிய மாட்டிங்கிறா, இவளாள பெரிய தொந்தரவு மாப்ள, எதாவது முடிவு எடுத்தா பராவல்ல’ கடிந்து கொண்டே நகர்ந்தான் இருவரில் ஒருவன்.
கிடந்த தென்னங்கீற்றில் மண்ணில்லாமல் உதறி எடுத்தாள். சுருட்டி மூலையில் கிடந்த வெள்ளைச் சாக்கில் கைவிட்டு நீளமான துணி எடுத்தாள், கால்களை உள்ளே நுழைத்து போத்தினாள். கோவில் மாயான அமைதிக்கொண்டது. வந்த இருவருமே சென்றிருந்தனர். வேதனை அடைந்து அவளோடு நான் மட்டும் தேங்கி நின்றேன். என் இயலாமையால், வெக்கமும் அவமானமும், அழுகையாகப் பீறிட்டது. கண்களைப் பெரிதாக உருட்டியும், சுருக்கியும் கண்ணீரைத் தேக்கிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் கழித்து கண்ணைத் துடைத்து தலைதூக்கினாள். கடினப்பட்டு உடல் நடுக்கத்தைக் குறைத்து இரு கைகளையும் கூப்பி மருதைவீரனை பார்த்து கும்பிட்டாள். அகண்ட கண்கள் இருந்தும் குருடனாய், அவள் முன்னே, கூனிக் குறுகிய பிணம் போல மருதையான் நின்றான். உடல் சிலிர்த்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு நானும் அங்கு இல்லை; நகர்ந்துவிட்டேன். ஆம், நகர்ந்துவிட்டேன். எல்லோரையும் போலவே நானும் நகர்ந்துவிட்டேன்.
பத்மாவின் அய்யோ! அய்யோ! அலறல் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
செந்தாரப்பட்டி இரா.செல்வக்குமார்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்